கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 8,379 
 

நான் அரங்கத்தின் ‘பார்க்கிங்’கில் என் ‘டூ வீலரை’ நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த போது வெள்ளைச் சீருடை அணிந்த அந்த இயக்கத்தின் அங்கத்தினர் புன்னகை மின்னும் முகத்துடன் வரவேற்று வழிகாட்டி உள்ளே செலுத்தினர். அரங்கம் மிகப் பிரம்மாண்டமானதுதான். அதில் அரையளவு தான் நிரம்பி இருந்தது.

மேடையில் ஐந்து அழகான பெண்கள் அதே போல் வெள்ளை உடையில் இனிமையாக பஜன்களை இந்தியில் பாடிக் கொண்டிருந்தனர். உலகெங்கிலும் சென்று வேதாந்த, தத்துவ விசாரணை சொற்பொழிவுகளை நிகழ்த்தி வரும் அந்த பிரபலமான பிரசாகரின் சொற்பொழிவை வெகு நாட்காளாகவே கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அது இன்றுதான் நிறைவேறியது.

ஐந்து நாள் நிகழ்ச்சியில் இன்று நான்காவது நாள்; நான் இன்றுதான் முதன் முறையாக வருகிறேன். பரவாயில்லை. அதனால் என்ன? தத்துவ விளக்கங்களை எங்கு, எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் கேட்டு உணரலாம் என்பது என் தத்துவம்.

திடீரென்று உள்ளே வரும் மக்களின் எண்ணிக்கை பெருகியது. எல்லோருமே பள பள வென்று பகட்டாக இருந்தனர். பல இளைஞர்கள் ஜீன்ஸ் பாண்ட், முதுகுப்பையுடனும் நுழைந்தனர். பல நடு வயதான வைரத்தோடு, மூக்குத்தி ஜ்வலிக்கும் பட்டுப்புடவை மாமி- மாமாக்கள் இருந்தனர். தலையை விரித்துப் போட்டுக்கொண்டு இறுக்கமான ஜீன்ஸ் அணிந்த கவர்ச்சி வனிதையர்களைக் கூடக் காண முடிந்தது. இவர்களை எல்லாம் பார்க்கையில் ‘இந்திய ஓர் அபூர்வமான நாடு’ என்பதை என்னால் மறுக்க முடியவில்லை.

நான் தனியாக ஓரமாக, குறிப்பாக ‘சட்’ என்று எவருக்கும் தொந்திரவு தராமல் எழுந்து செல்லக் கூடிய இருக்கைக்காகப் பார்வையைச் சுழற்றினேன். நான் நின்ற இடத்தின் பக்கவாட்டில் இருந்த நடு வரிசையிலிருந்து ஓர் முகம் என்னைப் பார்த்து சிரித்தபடி கை அசைத்தது. அட! கணேஷ்…தொழில் ரீதியாக எனது போட்டியாளன். ஆனால், மிகுந்த புத்திசாலி. பணம் சம்பாதிப்பதில் வல்லவன். அவன் வேலை செய்யும் நிறுவனம் அவனால் பல பலன்களை பெற்றிருக்கிறது. ஆனால், அவனருகே இடமில்லை; அந்த வரிசை முழுவதும் நிரம்பி இருக்கிறது.

இரண்டடி முன்னே சென்றேன். என்னை எவரோ சன்னமாகப் பெயர் சொல்லி அழைப்பது கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினேன். என் மாமன் மகன் ரவி. எனக்கு அவனையும் அவன் மனைவியையும் ஜோடியாக அங்கு கண்டத்தில் ஆச்சரியம் தாங்கவில்லை. ஏனெனில், ரவியையும் அவன் மனைவியும் போன்ற யதார்த்தவாதி களையும் பணத்தை ஆராதிக்கும் மனிதர்களையும் பார்க்க முடியாது. ‘நீ எப்படி இங்க? நீ இதையெல்லாம் கேட்க வருவியா என்ன?’ என்றான் ரவி என்னைப் பார்த்து. அவர்கள் கருத்தில் நான் ஓர் நாத்திகவாதி.; எதையும் எளிதில் ஒப்புக் கொள்ளாதவன். நான் புன்னகை செய்தபடி ‘நான் உன்னை அந்தக் கேள்வியைக் கேட்குமுன் நீ முந்திக் கொண்டு விட்டாய்’ என்று பதிலளித்து விட்டு பின்னோக்கி நகர்ந்து சென்றேன்.

கடைசி வரிசையின் இறுதியில் அமர்ந்திருந்த என் அலுவலக நண்பரைக் கண்டு திடுக்கிட்டேன். அவர் என்னை பார்த்து புன்னகையுடன் கை அசைத்தார். ‘இவன் வேறா?’ என்று தோன்றியது. ஹிந்தியில் ‘காம்சோர் ‘ என்பார்கள்; அதாவது எந்த வேலை கொடுத்தாலும் செய்யாமல் அதை அப்படியே பிறரிடம் தள்ளுவதிலோ, அல்லது அதை ஒன்றுமில்லாமல் செய்வதிலோ வல்லவர்.

பதிலுக்கு கை அசைத்து விட்டு, அதே கடைசி வரிசையில் கதவுக்கு அருகே ஓர் இருக்கை காலியாக இருந்தது. அதில் போய் அமர்ந்தேன் எனக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒருவர் தனது அடிக்குரலில் அந்த பஜனைப் பாடல்களை உடன் பாடிக் கொண்டிருப்பது என் செவிகளில் விழுந்தது..

‘ஹலோ சார், ஹவ் ஆர் யு? என்னைத் தெரிகிறதா?’ என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். என் அடுத்த இருக்கைக்கு அருகில் நிற்பது என் காலேஜ் ஜூனியர் சசி. ஐந்து வருஷங்களுக்கு முன் சந்தித்தது. என்னை நினைவு வைத்துப் பேசியதே அதிசயமாக இருந்தது. மாணவனாக இருந்த போதே காரில் தானே ஓட்டிக் கொண்டு வருவான். சிவப்பாக, அழகாகப் பார்த்தாலே பணக்கார வீட்டுப் பிள்ளை என்று தெரியும். மிகவும் நாகரீகமானவன். இப்போது கூட கதீட்ரல் சாலையில் உள்ள நவீன பல அடுக்கு மாடிக் கட்டிடத்தின் சொந்தக்காரன் அவன்தான் என்று கேள்வி.

உடன் வந்துள்ள தன் மனைவியையும், மகளையும் எனக்கு அறிமுகம் செய்தான்.

‘நீ இது போன்ற லெக்சருக்கெல்லாம் வருவாயா என்ன?’ என்று கேட்டேன் வியப்புடன். சசி சிரித்தான்.

‘ஓ…இவரை எனக்கு நன்றாகத் தெரியும். வெளி நாடுகளில் இவர் மற்றும் இவரது மகள் இவர்களது லெக்சர்களை நாங்கள்தான் ‘ஸ்பான்ஸர்’ செய்கிறோம். வாழ்க்கையின், மிகச் சிறந்த தத்துவங்களையும், கருத்துக்களையும் பிரபலப் படுத்துகிறார் இல்லையா?’ என்றான்.

நான் புன்னகையுடன் தலையசைத்தேன்.

வாழ்க்கையின் தத்துவத்தையா, அபத்தத்தையா இல்லை, இவை எல்லாவற்றையும் தாண்டிச் சென்று புரிந்து கொள்ள வேண்டிய மர்மத்தையா, எதை என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால், வெவ்வேறு குணங்கள் கொண்ட நான்கு வித்தியாசமான மனிதர்கள் இங்கு ஒன்றாக ஒருவரின் பேச்சைக் கேட்க இணைந்திருக்கிறோம். தத்துவமும், யதார்த்தமும், இறை நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று தனித்தனியாகப் பிரிக்க இயலாதபடி சிக்கலாகச் சிறையிடப் பட்டுள்ள சமூகம் நம் நாடு. ‘பகவத் கீதை’யும், திருக்குறளும் எல்லாவிதமான சமூகத்தில் உள்ள மனிதர்கள் தலைக்கும் பொருந்தும் குல்லாய்’ என்று ஓர் பிரபல தமிழ் எழுத்தாளர் கூறியிருக்கிறார்.

ஆகவே, பல்வேறு கோணங்களில் வாழ்க்கையை நோக்கும் நாங்களும் இங்கு இணைந்திருப்பது வியப்பிற்குரிய விஷயம் இல்லையோ?

கிட்டத்தட்ட முழு அரங்கும் நிறைந்து விட்டது. பஜனைப் பாடல் நின்று விட்டது.

ஒரு நிமிடம் பரிபூர்ண அமைதி அவையில் நிலவியது. அப்போது, கறுப்பான கேசமும், வெள்ளை வெளேர் என்று மின்னும் ஜிப்பாவும், வேஷ்டியும் அணிந்த தங்க பிரேம் போட்ட கண்ணாடி ஒளிர அந்தப் பிரசங்கம் செய்யப் போகிறவர் மேடையில் நுழைந்து அவருக்கென்று இருந்த இருக்கையில் அமர்ந்தார். எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தி விட்டு அமர்ந்தனர். நான் உட்கார்ந்து இருந்த இடத்தில் இருந்து அவர் முகம் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை.

இருந்தாலும், அன்றலர்ந்த மலர் போல் பிரகாசமாக, நிரந்தரமாக ஓர் புன்னகை தவழும் முகமாக நிச்சயம் உணர முடிந்தது.

‘எல்லோருக்கும் எனது மாலை வணக்கம்’ என்று ஆங்கிலத்தில் தன உரையைத் தொடங்கினர் பிரசங்கி. நல்ல கனமான, ஆனால் இனிமையான குரல். ஆங்கிலம் மிகச் சரளமாக வழிந்தோடியது.

‘இந்த உலகில் அழியாதது ஆத்மா ஒன்றுதான்; மற்ற எல்லாமே அழியும் பொருட்கள். இந்த உடல் அழியும். ஆனால், உள்ளேயிருந்து இந்த உடலைச் செலுத்தும் ஆத்மா அழியாதது; அழிக்க முடியாதது. இந்த உடலின் மூப்பு அல்லது அவசியம் அதற்கு அனாவசியம் என்று தோன்றும்போது அது வேறு ஒரு உடலைத் தேடித் பறந்து செல்கிறது. அதுதான் நம்மை இயக்கம் சக்தி, விசை. ஆனால், அது நம்முடைய எந்த செயல்களாலும் பாதிக்கப் படுவதில்லை. எத்தனை அபூர்வமான விஷயம்? இதைத்தான் ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில் அர்ஜுனனுக்கு….’

தங்கு தடையின்றிச் செல்லும் ஆற்றின் நீரோட்டம் போல் அவர் பேச்சு செல்கிறது.

அங்கங்கே ஓரிரு தமிழ் வார்த்தைகள், ஹிந்தி மேற்கோள்கள், புன்னகை செய்ய வைக்கும் மெல்லிய நகைச்சுவை உதிர்ந்து கொண்டே போனது.

அவர் வேறு…அவர் குரல் வேறு….அவர் புன்னகைத் தோற்றம் வேறா…சரியாகப் புரியவில்லை. தெரிந்த கருத்துக்கள்தான். பலமுறை கேட்ட தத்துவங்கள்தான். புரிந்த மொழிதான். ஆனாலும், அலுப்பு ஏற்படாமல், எதோ ஒரு இசை போல் அவர் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.

‘நிலையற்ற இந்த உலகில் நிலையில்லாத பொருட்கள் மீதும், மனிதர்கள் மீதும் ஏன் பாசம் வைத்து துயருறுகிறோம்…ஆசையைத் தவிர்த்து விடுங்கள்..உங்கள் உள்ளத்தில் ஆத்மாவின் ஒளி பெருகட்டும்…அதிகமான ஆனந்தம் உங்களுக்கு இந்தப் புவியில் எங்கு கிடைக்கும்? யோசியுங்கள் நண்பர்களே!’

எங்கு கிடைக்கும்?

‘கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்டான் மாயன்,’ என்று கண்ணனைப் பற்றி பாடினாராம் ஆழ்வார். இவர் கண்களுக்குத் தெரியாத வார்த்தைக் கயிற்றால் அந்தப் பெரிய அரங்கத்தையே கட்டிப் போட்டிருப்பதைக் காணும் போது எனக்கு வியப்பாக இருந்தது.

எனக்கு அருகில் உள்ளவர் அவ்வப்போது தனது கையில் உள்ள டயரியில் ஏதேதோ குறித்துக் கொண்டார். எல்லோர் பார்வையும் அந்த மேடையில் குவிந்து இருக்கிறது. நான் ஒருவன் மட்டுமே சற்று அசிரத்தையாக இருப்பது போல் தோன்றுகிறது. வெளியில் பார்க்கிங்கில் இருக்கும் நெரிசலை நினைத்தது பயமாக இருப்பதால் சட் என்று எழுந்து கொண்டு வெளியேறினேன்.

எனது மோட்டார் சைக்கிள் ஒரு உதையில் கிளம்ப மறுத்தது. சற்றுப் பொறுமை இழந்து திரும்ப திரும்ப முயற்சி செய்கையில் பக்கத்தில் இருந்த காரின் விளக்கு ஒளிர்ந்தது. புன்னகை தவழும் முகத்துடன் ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் காரை நோக்கி வந்தார்.

என்னைப் பார்த்து புன்னகையுடன் ‘ ஸ்டார்டிங் ட்ரபிள்? ‘ என்கிறார் அவராகவே.

‘யெஸ்’ என்று புன்னகை செய்தபடி இன்னொரு முயற்சியில் வெற்றி பெற்று வண்டி உறுமிக் கொண்டு உயிர் பெற்றது.

‘என்ஜாய்ட் த லெக்சர்?’என்றார் அவராகவே.

‘யெஸ்..இன் எ வே.’ என்றான் நான்.

அந்த மனிதர் பெரிதாக சிரித்தார்.

‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்றேன் நான்.

‘இல்லை…நீங்கள் சற்று இளைஞராக இருக்கிறீர்கள். அதனால்தான் இந்த தத்துவ விசாரணை விளக்கங்கள் எந்த அளவுக்கு உங்களைக் கவர்ந்திருக்கும் என்று எண்ணித்தான் அந்த கேள்வியைக் கேட்டேன்,’ என்றார்.

எனக்கு அவரது விமர்சனம் ‘சட்’ என்று ரோசத்தைக் கிளப்பியது.

‘ஏன்? என்னை விட இளைஞர்களைக் கூடப் பார்த்தேன்..ஆனால், அவர் சொல்வது ஒன்றும் புதிது இல்லை..காலம் காலமாக எல்லா வேதாந்திகளும் சொல்லி வந்ததுதான்,’ என்றேன் நறுக்கென்று.

‘அதைக் கேட்கவா இத்தனை கூட்டம் என்கிறீர்களா?’ என்றார் அவரும் கத்தி இறக்குவது போல்.

‘யெஸ்,’ என்றேன் புன்னகையுடன்.

அவரும் புன்னகை செய்தார்.

‘அதிலும் ஓர் சூட்சுமம் அல்லது தத்துவம் இருக்கிறது..’

நான் எந்த எதிர் கேள்வியும் கேட்காமல் அவரே பதில் சொல்லட்டும் என்று காத்திருந்தேன்.

‘இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை என்று விதிக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தான் நாம் செய்து கொண்டு இருக்கிறோம். அவருக்கு விதிக்கப் பட்ட வேலை தத்துவ விசாரணை செய்வது. இன்று நமக்கு விதிக்கப் பட்ட வேலை அதைக் கேட்பது….’

‘அதைத் தவிர அதற்கு வேறு மதிப்பு இல்லை என்கிறீர்களா என்ன?’ என்றேன் வியப்புடன்.

‘பின்னே? இவர் சொன்ன வேதாந்த விஷயங்களை எந்த அளவுக்கு இன்றைய உலகத்தில் ஒரு மனிதனால் பின் பற்ற முடியும்? நான் ஒரு தொழில் அதிபர். எனக்கு நாளைக்கு ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் மேல் நாட்டு வர்த்தக அதிகாரிகளுடன் விருந்து. அதில் மது கட்டாயம் உண்டு. வித விதமான உணவு வகைகள். மனிதர்கள். இவைகளை என்னால் எப்படி தவிர்க்க முடியும்? அதே போல்தான் ஒவ்வொருவருக்கும்..’

‘அப்படியென்றால் இவர் சொல்வதை பின்பற்றுபவர்கள் யார்? ‘

அவர் உதட்டைப் பிதுக்கினார்.

‘எவருமில்லை. ஏன்? அவரே இல்லையே? அவரே ஐந்து நட்சத்திர ஓட்டலில் தானே தங்கி இருக்கிறார்?’ என்றார் புன்னகையுடன்.

‘அப்போ இங்கு சேரும் கூட்டம்?’

‘ஆ…அதுவும் ஒரு போதை. அல்லது பொழுதுபோக்கு. நல்ல பொழுதுபோக்கு. அவரது ஆங்கிலப் புலமையையும் பேச்சையும் கேட்டீர்கள் இல்லையா..அது எனக்கு மிகவும் பிடிக்கும்.’

கார் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தார்.

‘வாஸ்தவம்தான்,’ என்றேன் நான்.

‘பார்க்கலாம்… நம் ‘ஆத்மா’ நாம் செய்யும் செயல்களுக்கெல்லாம் பொறுப்பாக இருந்தாலும் அவை நம் ஆத்மாவை பாதிக்காது. என்ன சரிதானே? உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. குட் நைட்,’ என்று மலர்ந்த முகத்துடன் காரைச் செலுத்திக் கொண்டு சென்றார். நானும் என் வண்டியைக் கிளப்பி அவரைப் பின் தொடர்ந்தேன்.

அவர் கார் விரைவாக வெளியேறிப் புள்ளியாகி மறைந்து போகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *