கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 8,382 
 

தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்த்துவிட்டார் தாசரி நாயக்கர். அப்படி ஆகிவிட்டது சம்சாரிகள் பாடு.

‘ஒண்ணும் ஒப்பேறாது இனிமெ’ என்று சொல்லிக்கொண்டார் தனக்குள்.

பாவிப்பயல்கள் இப்படிச் செஞ்சிட்டாங்களே? எல்லா விலைகளும் கூடிக்கிட்டே போறதென்ன? இந்த அவுரியின் விலை மட்டும் இப்படி தலைகீழாக குறையற்தென்ன? ஏதோ கவுல் இருக்கு இதிலெ என்று உறுதியாய் நம்பினார்.

“லேய், யாரோடலெ விளையாடுறது?” என்று தனக்கு முன்னால் யாரோ இருப்பதாக நினைத்து ஒந்திபோல ஆட்டினார் தலையை.

அய்யோ, மோசம் போயிட்டேனே; ஒரு வருசப்பொமுதை எப்படி ஒப்பேத்திக் குடும்பத்தைக் காப்பாத்தப்போறேளோ என்று திகைத்தார்.

‘சந்தேகமில்லாமெ ஏதோ வஞ்சனைதான் நடக்கு, ஆமா’ என்று தனக்குள் பேசிக்கொண்டார். கோயிந்தசாமியைக் கோட்டிக்காரன்று திளைச்சேன்; மேலு தெரியாமப் புலம்புறாண்ணுல்லெ நினைச்சிட்டேன் அவனை. மாமா, இதுலெ சூது இருக்குன்னு சொன்னானே.

அவுரிக்கு அஞ்சி வருசத்துக்கு ஒருக்க விலை! பாக்கி நாலு வருசத்துக்கும் மண்ணைத் திண்றுக்கலேன்னு சொல்ராப்லெயில்லெ இருக்கு?

இப்படி அஞ்சு வருஷத்துக்கு ஒருக்க பத்து வருஷத்துக்கு ஒருக்க மட்டும் ஏன் விலையைக் கொடுக்கான்? ஒரேயடியா விலையைக் குறைச்சிக்கிட்டே போனா, சம்சாரி அவுரியைக் கையிலெயே பிடிக்கிறதை நிறுத்திவிடுவான். பிறகு, அவந்ததான் மண்னைாத் திங்கனும்ண்றுட்டு இந்தத் தத்திரம்! “ஏலேய், ஒங்க சங்கதிகளெல்லாம் தெரியும்டா” என்று சொல்லிக்கொண்டார்.

***

அவுரி நம்ம நாட்டில் பயன்படலை. அவ்வளவும் வெளிநாட்டுக்குத்தான் ஏற்றுமதியாகுது. இதனால் சர்க்காருக்குப் பவுன்பவனா வெனிதாட்டுச் செலாவணி கிடைக்குது. இது இன்றைக்கு நேத்து இல்லை; அறுவது வருசமா நடத்துட்டு வர்ர சங்கதி. இதை ஒழுங்கு படுத்தத் திராணி இல்லையே இவனுகளுக்கு, என்னமோ விவசாயிகளுக்குக் கிளிக்கப்போறதா பேச்சுத்தான்; காரியத்திலே ஒரு புண்ணாக்கையும் காணோம். –

கரிசல்காட்டுக்கு அவுரி வந்தபோது அதுக்குப் பொன்னவுரிண்ணே ஒரு பேரு உண்டும். அதோட பூவைப் பார்த்துப் அந்தப் பேரை வச்சானோ, விளைஞ்சா பவுன் பவுனாக் குவியும்ண்ணு வச்சானோ. காய்விளைஞ்சி குவிஞ்சி கிடக்கும் போது மின்னும் அந்த திறத்தைக் கண்டு அப்படி வச்சானோ.. தெரியலை. வெறும் பொட்டல்க் காட்டிலேயே சொகமாய் வருகிற இப்பயிர் நெய்க் கரிசல்லே வர்றதுக்குக் சேக்கவா வேணும்.

ஒரு வருசம் ஒரு பக்கா அவுரி விதை நூறுருபா விலை வித்தது!

***

தாசரி நாயக்கர் தென்கலம் என்கிற கிராமத்துக்குப் போய் நல்ல அவுரி விதையாய்ப் பார்த்து வாங்கிக்கொண்டு வந்தார். அந்தவருஷம் தனிச்சி அவுரியாகவே விதைத்தார். நல்ல உரக்கால் நிலம். ஐந்து ஏக்கர் தான் அவருக்கு இருந்தது. பண ஏர்தான்; சொந்த ஏர் கிடையாது, கோடைமழை பெய்ததும். சித்திரையிலெ ஒரு உழவு. அடேயப்ப!

அது ரொம்பச் சொகமான உழவு. கலப்பை பூமியிலெ முங்கி இருபுறமும் பொங்கி ‘மகுந்து’ விமுகிற அந்தக் கரிசல் மண்ணைப் பாத்துக்கொண்டே இருக்கலாம். அப்படி உழவு அமையிறதே அபூர்வம். உழவு பிடிக்கிறவனுக்கும் சந்தோஷம், மாடுகள்கூட உடம்பில் பிடிக்காமல் அசை போட்டுக்கொண்டே நடக்கும்!

விதைப்புக் காலமும் வந்தது. அவுரியை விதைத்து சூரியகாத்தியை ஊடுபயிராய்ப் பட்டம் போட்டார்.

கோடை உழவுக்கும் விதைப்புக்கும் களை எடுப்புக்கும் சுளைசுளையாய்ப் பணம் கொடுக்கவேண்டியதிருத்தது கையிலிருந்து,

கூலி ஆட்களும் முத்திமாதிரி இல்லை. முத்தி, அவர்களுக்கு ஒரு அக்கரையும் பதட்டமும் இருந்தது. நேரத்துக்குப் புறப்படணுமே. நிண்ணு வேலை செய்யணுமே என்று. இப்பொ அதெல்லாங் கிடையாது. எட்டு மணிநேர வேலைங்கிறதெல்லாம் பேச்சி; அதெல்லாம் இப்பொ டவுன்லெ உள்ள தொழிலாளிகளுக்குத்தான். காலையிலெ ஆறுமணிக்கு எழுத்திருக்கவேண்டியது. கடைக்குப் போறேன். அங்கெபோறேன் என்று சொல்லி ஒரு காப்பித் தண்ணியைப் போட்டுக் குடிக்கவேண்டியது. பிறகு கஞ்சியை ஏனத்துலெ எடுத்துக்கொண்டு, ஊர் சங்கதிகளைப் பேசிக்கிட்டே புறப்பட மணி ஏழு ஆயிடும். இதுக்கு மத்தியிலெ அவுகளை நாம ஒரு நாலு தரமாவது, ‘என்னாத்தா புறப்படுங்க; நேரங்காணாதா’ என்று மந்திரம் தெராப்போலெ சொல்லிக்கிட்டே இருக்கணும். புஞ்சையிலெ போய் களையைத் தொட்ட கொஞ்சநேரத்துக்கெல்லாம் ‘கஞ்சி குடிக்க”ண்ணு உட்காந்திடுவாங்க.

கஞ்சி குடிச்சி முடிஞ்சி, தேத்து சாய்ந்திரம் தெருவுலெ போட்ட சண்டையைப் பத்திய பேச்சு, அதிலே யார் சரியானபடி கேள்வி கேட்டா, பதிலுக்கு இவ எப்படி நாக்கைப் பிடுங்கிட்டுச் சாகும்படியா எதிர்க்கேள்வி கேட்டா என்கிறதெல்லாத்தையுமே பேசிக்கிட்டே வெத்திலை போயிலை போட்டு முடிச்சி திரும்பவும் அவுகளை களையெடுக்க ஆரம்பிக்க வைக்க கையைப் பிடிச்சித் தூக்கிவிடாத குறை தான். மணி பதினொண்ணு ஆகவேண்டியதுதான். செங்கோட்டை வண்டி வருதா தூரத்துலே புகை தெரியுதாண்று கவனிச்சிக்கிட்டே ஒரு கன்று ரயில் வண்டியையும் ஒரு காரண மட்டும் களையைக் கவனிச்சிக்கிட்டே இருக்கும்.

“ஏத்தா, களையைப் பார்த்து வெட்டுங்க, செங்கோட்டை ரயில் வண்டிக்காரனா உங்களுக்குக் கொத்து அளக்கப் போரான் றன்னு கூட புஞ்சைக்காரங்க கேக்கிறதுதான்; என்னத்தைக் கேட்டு என்ன செய்ய? இப்பொவெல்லாம் தீப்பெட்டி ஆபிசுக எங்கனெ பார்த்தாலும் வேற வந்துட்டது. சின்னஞ் சிறுசுகளெல்லாம் வெயில் முகத்தைப் பார்க்காம நிழல்லெ குத்த வச்சிக்கிட்டே தீப்பெட்டி போட ஆரம்பிச்சாச்சி. இந்த வயசான ஆட்கள் தான் கனைமொளைக்கு வாராங்க. இந்த ஆட்களோட தலைமுறையும் கழிஞ்சுட்டதானா, அவ்வளவுதான். விவசாயமும் களை மூடிப்போயிரும்.

இப்போ யாரும் தானியமாகக் கொத்து வாங்குறதில்லை, ரூபாதான்.

ரூபாயை வாங்கிட்டுப் போகவேண்டியது. ரேசன் கடையிலே போயி அவன் போடுற தாத்தம் பிடிச்ச நெல் அரிசியை வாங்கிட்டு வந்து பொங்கித் திங்கவேண்டியது. வேனா வெய்யிலிலெ அலைஞ் சிட்டு வந்து வயிறும் மனசும் குளிரும்படியா ஒரு போகிணி கம்மஞ் சோத்தைக் கரைச்சிக் குடிச்சோம்ண்ணு உண்டுமா. ஆக, கரிசல் காட்டிலெ கம்மம்புல் பயிரிடுகிறது குறைஞ்சி போச்சி. இன்னங் கொஞ்சநாள்லெ கம்பம்புல்லே எடுபட்டு போயிரும்.

பருத்தியாவும் போடமுடியல்லை. அதோட பருத்தி எடுக்க எங்கெ ஆள் கிடைக்கி? பருத்திக்கும் விலை இல்லை . அதும் ஒரு வருசம் விளையுது. மறு வருசம் போயிருது..

மூணாம் வருசத்தைவிட போனவருசம் கரிசல்காட்டிலெ தரிசு போடுற நிலங்கள் அதிகமாச்சி, இந்த வருசம் அதைவிட ஜாஸ்தி நிலங்கள் தரிசு போட ஆரம்பிச்சிட்டாங்க சம்சாரிக,

விவசாயங்கிற தொழில், அதிலும் கரிசல்காட்டு விவசாயங்கிற ஒரு தொழில் அழிஞ்சிக்கிட்டு வருது வேகமா. இது யார் கண்ணுலேயும் பட்டதாகத் தெரியலையே ஒரு தச்சாசாரி ஒரு நாக்காலி செய்தா, மரம் வாங்கின விலை, அவனோட உடல் உழைப்புக்கான கூலி இதை வச்சி ஒரு விலை சொல்வான். விலையைக் குறைச்சிக் கேட்டா கட்டாதுன்னு சொல்லிவிடுவான். சம்சாரியாலெ ஏன் அப்படிச் சொல்லமுடியலெ? செஞ்ச செலவுகளுக்கும் குறைச்சில்லெ பொருளை விக்க வேண்டியதிருக்கு. இந்த அநியாயத்துக்கு எப்பொ ஒரு முடிவு வரும்.

தாசரி நாயக்கரின் எதிரெ மஞ்ச மஞ்சோன்னு பூத்துக் குலுங்கின அவுரிப் பூக்களும், சூரியகாந்திப் பூக்களும் கலாமுன்னால் வந்து காட்சி தந்தது. அப்போது அவருடைய குழந்தைகளைப்போல அவரும் பார்த்துப் பார்த்துக் குதுகலித்தார்.

இப்போது தனக்கு முன்னால் அம்பாரமாய்க் குவித்து வைத்திருக்கும் பவுன்களைப் போல அவுரிக்காய் அம்பாரம் கிடந்ததையும் பார்த்தார். என்ன செய்ய; இதை என்ன செய்யண்ணு தெரியலையே என்று தவுதாயப்பட்டார். கிலோ ஒரு ரூபாய்க்கும் குறைவாகக் கேக்கிறானே பாவி; காய் அறுவடை செய்த கலிகூட விழலையே?

வெளிதாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிற ஒரு பொருள் விஷயத்தில் சர்க்கார் இப்படியும் ஒரு அக்கறையில்லாமே இருக்கே? இதை உண்டாக்குகிற சம்சாரிகளை தலையிலே கையை வச்சி உட்காரும் படியா பண்ணிட்டதேன்னு மனம் குலுங்கிப்போனார் நாயக்கர். கோயிந்தசாமி சொல்லுவான், நம்ம சர்க்கார்ண்ணு ஒண்ணு புதுசா வரணும்ண்ணுட்டு.

அந்த சமயம் தாசரி நாயக்கரின் மனைவி அங்கே வந்தாள். தனது புருஷன் உட்கார்ந்திருக்கும் கோலத்தைப் பார்த்து மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது அவளுக்கும்.

“என்ன செய்ய, தலைவிதி யாரை விட்டது?” என்று தம்மையே நொந்துகொண்டு, “சரி, சரி, எந்திங்க; அதுக்கு விதிச்சது அவ்வளவுதான்” என்று சொல்லிக் குப்பைக் கூடைகளில் அந்தப் பொன்னவுரிக் காய்களை எடுத்து எடுத்து வைத்தாள். நாயக்கர் ஒவ்வொரு கூடையாக அவைகளைக் கொண்டுபோய்க் குப்பைக் குழியில் போட்டுவிட்டு வரும்போது.

“இது சரியில்லை. இப்படிச் செம்மறி ஆடுகளைப்போல சம்சாரிகள், வருகிற துன்பங்களையெல்லாம் சகித்துக்கொண்டு தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு கிடப்பது முறையில்லை. ஏதாவது செய்யணும்; செய்தே ஆகணும்.” என்று தீர்மானித்தார்.

– தினமணி கதிர் – ஜனவரி 82

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *