அவரவர் பார்வையில்

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,421 
 

வீட்டைப் பூட்டிவிட்டு, ஒருமுறைக்கு, இருமுறை, நன்றாக இழுத்துப் பார்த்தான் தியாகு.
“”போதுங்க… கையோட வந்துடப் போவுது!” என, கிண்டலடித்தாள் மனைவி வித்யா.
“”இரு… இத கையோட கொண்டு போறத விட, பக்கத்து வீட்ல கொடுத்துட்டு போலாம்…” என்ற தியாகுவிடம், வித்யா கேட்டாள்…
“”ஏங்க… பக்கத்து வீடுதான் பூட்டி கிடக்கே?”
“”நான், இந்த பக்கத்து வீட்ட சொன்னேன்…” என்று தியாகு சொல்ல, முகம் சுளித்து, “”வேண்டாங்க… அவங்க ஒரு டைப்பு. வாங்க மாட்டேன்னு சொல்லிட்டா, என்னவோ மாதிரி ஆயிடும்!” என்று தடுத்தாள் வித்யா.
“”அட… நாமளே முடிவு பண்ணினா எப்படி… நாம இந்த தெருவுக்கு புதுசு… குடி வந்து, மூணு மாசம் தான் ஆவுது. நாம தான் பேசிப் பழகணும். இந்த சின்ன உதவிக்கு, அவங்க மாட்டேன்னா சொல்வாங்க?” என்ற தியாகு, பிடிவாதமாக, வீட்டுச் சாவியை, தன் வீட்டிற்கு இடப்புறமுள்ள, ஒரு பங்களா டைப் வீட்டில் கொடுக்கச் சென்றான்.
வாசலில் நின்றபடி, காலிங் பெல்லை அழுத்தினான். கொஞ்ச நேரம் கழித்து, ஒரு நடுத்தர வயது பெண்மணி, கண்ணாடிக்குள் கண்களைச் சுருக்கியபடி, வெளியே வந்தாள்.
“”அம்மா… நாங்க பக்கத்து வீடு. வெளியே போறோம்… சாவிய கொஞ்சம் வெச்சுக்க முடியுமா? கையோடு கொண்டு போனா தொலைஞ்சுடுமோன்னு சின்ன பயம்!” சாதாரணமாகச் சொல்லி, பதிலுக்குக் காத்திருந்தான்.
அந்த அம்மாள், கொஞ்சம் உத்துப் பார்த்துச் சொன்னாள்… “”இல்லப்பா… நாங்க கூட வெளியில போனாலும் போவோம்!” ஒற்றை வாக்கியத்தில் முடித்து, பதில் கூட எதிர்பார்க்காமல், உள்ளே சென்றாள்.
அவரவர் பார்வையில்தியாகுவிற்கு சற்று ஏமாற்றமும், அவமானமுமாகப் பட்டது. “”சரி…” என்றபடி, திரும்பி வந்தான். அவன் கையில் சாவியைப் பார்த்து, வித்யா நக்கலடித்தாள்.
“”இது தேவையா… பொண்டாட்டி சொன்னா, புரிஞ்சிக்கணும். ஒரு வீட்ட பார்த்தாலே, புரிஞ்சிக்க வேண்டாம்…”
மேற்கொண்டு அவளைப் பேச விடாமல் “”சரி… கிளம்பு, சினிமாவுக்கு நேரமாச்சு!” என, அவசரப்படுத்தினான் தியாகு. இதை அவர்களது, ஏழு வயது மகன் சுகன் வேடிக்கை பார்த்தபடி நின்றான்.
அன்று இரவு —
தியாகு, தன் மனைவியிடம், “”ஏன் வித்யா… நம்ப வீட்டுக்கு வலப்பக்கத்துல இருக்கறவங்க மாதிரி, இந்தப் பக்கம் இருக்கறவங்க இல்லியே…”
“”அது கூட புரியலயாங்க… இந்த பக்கம் உள்ளவங்க, நம்பள மாதிரி மாதச் சம்பளம் வாங்கறவங்க… வாடகை வீட்ல குடியிருக்கிறவங்க… பக்கத்து வீட்டு மனுஷங்க, தயவு வேணும்ன்னு நம்பறவங்க…
“”ஆனா, அந்த பக்கம்… காம்பவுண்ட் டைப் பாருங்க… என்னவோ ஆறடி உசரத்துல கோட்டை மாதிரி… காரணம் பணம். பெரிய கவுரவம்ன்னு நெனப்பு வேற… அன்னிக்கு கோவில்ல பாத்தப்ப கூட, நானே வலிய சிரிச்சு பேச்சு கொடுத்தேன்… ஆனா, அந்தம்மா…கம்முன்னே இருந்திச்சு…
“”வீட்டுக்காரரு போய் சேர்ந்துட்டாராம்… ஒரே பையன், பேங்க்ல வேலையாம், காலைல போனா, ராத்திரிதான் வருதாம்… பரம்பரையாவே வசதி போல; அதான் அலட்சியம்!
“”ஒரு தடவ… நம்ம சுகன், விளையாடும் போது, பந்து அந்த வீட்டுக்குள்ள விழுந்தது, அத எடுக்கப் போனப்ப அந்தம்மா, கேட்டை கூட திறக்காம… தானே எடுத்து கொடுத்துட்டு, “இனிமே இந்த பக்கம் விழக்கூடாது’ன்னு சொல்லிச்சாம்… கொழந்த பொய் சொல்லுமாங்க… நம்மள மதிக்காதவங்கள, ஏங்க நாம மதிக்கணும்… காலையில சாவி கொடுக்கப் போய், நீங்களே புரிஞ்சுகிட்டீங்கல்ல?” வித்யா கொட்டித் தீர்த்தாள்.
“”சரி விடு வித்யா… அவங்க பணம், அவங்களோட…” தியாகு அவளை சமாதானப்படுத்தினான்.
மறுநாள் ஞாயிறு. விடுமுறையானதால், மெதுவாகவே வீட்டு வேலைகளைத் துவங்கினாள் வித்யா. வாசலில், அழைப்பு மணி அடிக்க, வந்தது அவள் அப்பா சுந்தரம்.
“”ஹை…” குழந்தையாய் துள்ளினாள் வித்யா.
“”வாங்க மாமா…” கையில் பேப்பருடன், வெளியே வந்து வரவேற்றான் தியாகு.
“”என்னம்மா… சவுக்கியமா… மாப்ள எப்படி இருக்கீங்க… குட்டிப் பையன் எங்க?” கையில் பழங்கள், சில பொம்மைகளுடன், உள்ளே வந்தார் சுந்தரம்.
“”தூங்கறான்… இதோ எழுப்பறேன்பா…” சொன்னாள் வித்யா.
ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து விட்டு, “”என்ன மாப்ள… புது வீடு எப்படி இருக்கு… ஆபிசுக்கு போய்ட்டு வர, சவுரியமா இருக்கா… அக்கம் பக்கத்துல எப்படி… நல்லா பழகுறாங்களா… ஏரியா புடிச்சிருக்கா…” அக்கறையாக விசாரித்தார் சுந்தரம்.
“”பரவால்ல மாமா… முன்ன இருந்த வீட்ட விட, இது சவுரியமாத்தான் இருக்கு…” தியாகு சொல்லிக் கொண்டிருக்கும் போது, இடை மறித்தாள் வித்யா.
“”மத்தத பத்தி ஒண்ணுமில்லப்பா… ஆனா, பக்கத்து வீடு, அதுவும், இந்த வீட்டுல ஒரு அம்மா… பணக்காரி, அதான் சரியா ஒட்ட மாட்டேங்குதுப்பா… ஆனா, இந்த பக்கத்து வீட்ல பரவால்லப்பா…. பேசறாங்க. நானும், அவங்களுக்கேத்த மாதிரியே போய்டறேன்பா… நம்ம தயவு வேண்டாம்ன்னு இருந்தா, நமக்கு எதுக்கு அதுங்க தயவு?”
சிரித்தார் சுந்தரம்…
“”வித்யா… நீ இன்னும் பழைய மாதிரியே இருக்க, குடும்பம்ன்னு வந்த பிறகு, வாழ்க்கையில அடிபடணும்மா… அப்புறமாத்தான் பொதுக் கருத்து சொல்லணும்… என்ன மாப்ள… நாம இங்க புதுசு, வந்த உடனேயே, ரப் அண்ட் டப்பா இருக்க முடியுமா… ரெண்டு பேரும், வேலைக்கு போறவங்க… அனுசரித்து போகணும் இல்லையா?” என்றவரிடம், வித்யாவுக்கு பரிந்து பேசுவது போல் சொன்னான் தியாகு…
“”இல்ல மாமா. அவ சொல்றதும் சரிதான்… போனா, கேட்டை கூட திறக்காம பேசுறாங்க, அந்தம்மா… நான் என்ன ரோட்ல போறவனா… பக்கத்து வீட்டுக்காரன் தானே… இத்தனைக்கும், அந்த வீட்ல அம்மாவும், புள்ளையும் மட்டும்தான். யோசிச்சு பாத்தா, எங்க தயவுதான் அவங்களுக்கு வேணும். சரி அவங்கள விடுங்க… குளிச்சாச்சா… குளிக்கணுமா… கெய்சர் போடட்டுமா?” தியாகு கேட்க,
“”வேண்டாம் மாப்ள… குளிச்சிட்டுதான் கிளம்பினேன்…” என்று சொல்லி, பேரனை எழுப்ப, பெட்ரூம் சென்றார்.
மதியம், எல்லாரும் உணவருந்தும் நேரம்.
சுந்தரம் கேட் டார், “”ஏன் மாப்ள… வர்ற வெள்ளிக்கிழமை, வீட்ல, ஒரு கணபதி பூஜை பண்ணிடலாமா?”
“”அப்பா… இது வாடகை வீடுதானே… அதான் பால் காய்ச்சியாச்சே…” தேவையா? என்பது போல் கேட்டாள் வித்யா.
தியாகுவோ, “”மாமா… சாமி விஷயம்; மறுக்க தயக்கமா இருக்கு. செஞ்சுடலாம்,” அரைமனதாக ஒத்துக்கொண்டான். தன் மகளுக்கு புரிய வைக்க முயன்றார் சுந்தரம்.
“”பூஜை நமக்குதாம்மா… வீட்டுக்கு இல்ல. செலவு கூட, ரெண்டாயிரத்துக்குள்ள தான் ஆவும். நல்ல விஷயம். நீங்க லீவு மட்டும்தான் போடணும். மத்தத நான் பாத்துக்கறேன்… என்ன?” என்றார் சுந்தரம்.
“”சரிப்பா,” என்றாள் வித்யா.
“”கூட்டம் ரொம்ப வேணாம்மா… நம்ம சொந்தக்காரங்க, இருபது பேர், அப்பறம் தெருக்காரங்க, பத்துபேர். என்ன முப்பது பேருக்கு சாப்பாடு சொல்லிடலாம் இல்லியா?” தியாகுவைப் பார்த்து கேட்டார் மாமனார்.
“”தெருக்காரங்களா… அட, யாரையும், எனக்கு தெரியாது மாமா. இந்த பக்கத்துல உள்ளவங்க, வேலைக்கு போறவங்க. நமக்காக, லீவு போட மாட்டாங்க. அந்தப் பக்கம், அந்தம்மா வராது…” தியாகு சொல்ல, சுந்தரம் தடுத்தார்.
“”ஏன் வர மாட்டாங்க… நான் போய் கூப்பிடறேன். அப்படி வந்தால், நீங்க வேண்டாம்ன்னு சொல்வீங்களா?”
“”அட போங்க மாமா… உங்களுக்கு ஏன் இந்த வம்பு?” என்றான் தியாகு. உடனே எழுந்தார் சுந்தரம்.
“”மாப்ள… ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க… வந்து உங்ககிட்ட நிறைய பேசணும்…” சொல்லி விட்டு, வெளியே சென்றார். தியாகுவும், வித்யாவும் புரியாமல் நிற்க, அந்த பக்கத்து, பணக்காரி வீட்டை நெருங்கினார் சுந்தரம். பின், பத்து நிமிடத்தில் திரும்பினார்.
“”என்னப்பா… ஏன் அங்கே போனீங்க… அந்தம்மா உள்ளே விட்டிச்சா… என்ன பேசினீங்க?” வித்யா சற்று வெறுப்பாகவே கேட்டாள்.
“”எல்லாம் நல்லாவே பேசிச்சு… மொதல்ல உட்காரு, பொறுமையா சொல்றேன். எந்த விஷயத்துலயும், உங்க பார்வை மாதிரியே… எல்லார் பார்வையும், இருக்கணும்ன்னு எதிர்பார்க்கறது தப்பும்மா… அவங்கவங்களுக்குன்னு, தனித்தனி பார்வை இருக்கத்தான் செய்யும். அத தப்புன்னு எடுத்தவுடனேயே, எப்படி சொல்ல முடியும்… நாமதான் நம்ப செயலால, நடத்தையால மாத்தணும்…
“”அது ஒரே நாள்ல முடியுமா… அதுக்கு பொறுமை வேணும். இப்ப என்கிட்ட அந்தம்மா பேசல… என்ன, ரொம்ப அதிகமா பேசல… என் வயசுக்கு மதிப்புக் கொடுத்து, கேட்டை திறந்து உள்ள கூப்ட்டாங்க… நான் தான் வேண்டாம், உள்ள வரலன்னு, நாகரிகமா மறுத்திட்டேன்.
“”அது அவங்களுக்கு புடிச்சிருக்கும். கணபதி பூஜைன்னு சொன்னேன்… முடிஞ்சா வர்றேன்னாங்க. தண்ணீர் தரட்டுமான்னு கேட்டாங்க… வேண்டாம்ன்னு வந்துட்டேன். எங்க முதல் அறிமுகம், இப்படி இருந்ததே நல்லது தான்!
“”எடுத்த உடனேயே, நம்பள பத்தி, நல்லா புரிஞ்சு, உள்ள கூப்பிட்டு, சாப்பாடு போட்டு, ரொம்ப மரியாதை கொடுத்து பழகணும்ன்னு, நாம எதிர்பார்க்கறது என்னம்மா நியாயம்?
“”மொதல்ல, ஒண்ண புரிஞ்சுக்க… நாம இங்க புதுசு, நமக்குதான், அக்கம் பக்கம் தயவு,தேவை. அவங்க ரொம்ப காலமாவே இருக்கறவங்க. பணக்காரங்க வேற… திடீர்ன்னு பக்கத்துவீட்டுக்காரங்க தயவு தேவைதானேன்னு, புடிச்சோ, புடிக்காமயோ, பழகித்தான் ஆகணும்ன்னு என்ன கட்டாயம்?
“”இந்த உலகத்துல, மதம், ஜாதி, உறவு இதைவிட, எல்லார் மனசுலயும் ஸ்டேட்டஸ், அதாவது, அந்தஸ்து, அதுவும், பணத்தால் கிடைக்கிற வசதிங்கற அந்தஸ்து தாம்மா நிறைய இருக்கு… இத வெளிப்படையா ஒத்துக்க மாட்டாங்க… புரியுதா?
“”ஒரே மதத்துல… ஒரே ஜாதில கல்யாணம் செய்றவங்க… நல்ல மனுஷங்கன்னு, ஏழையோட சம்பந்தம் பேசுவாங்களா… சரி சொந்தம்கிறதால, வசதி இல்லாதவங்க கூட, எவனாவது உறவு வெச்சுப்பானா… அதோட சாரம்தான், இந்த மனுஷங்களும்… சக மனுஷங்களோட பேசக் கூட, ஒரு அந்தஸ்து எதிர்பார்ப்பாங்க… அது இருந்தாத்தான், நீங்க எதிர்ப்பாக்கற, கொஞ்ச அன்னியோன்யத்தோட பழகுவாங்க… இல்ல பட்டும்படாமத்தான் பழகுவாங்க… புரியல இல்ல?
“”உதாரணமா, நம்ம வீட்டு வேலைக்காரி கூட, நாம எப்படி பழகறோம்… வேலையத் தவிர, வேற எதாவது பேசறோமா… இல்ல, அவ வீடு வரைக்கும் போய் பழகுறோமா… காரணம், ஒரு ஸ்டேட்டஸ் மெயின்டெய்ன் பண்றோம். வேலைய முடிச்சப்பறம், அவங்களும் சக மனுஷங்கதானே…
“”அதே நேரம், நம்ம ஆபீஸ்ல உள்ள மேலதிகாரிய, எப்படி எடை போடறோம்… வேலையத் தவிர, மத்த விஷயத்துலயும், அவங்கள மதிக்கறோம். வீட்டுக்கு கூப்ட்டா, பெருமையா பீல் பண்றோம்… அவங்க நம்ம வீட்டுக்கு வந்தாலும், அதே தான், இந்த இரண்டுக்கும் இடைல என்ன வித்தியாசம்?
“”ஒரு அந்தஸ்து, கவுரவம், அது பணத்துல வந்ததுதானே… அதுதான் பக்கத்து வீட்டு விஷயமும்… நம்ம பக்கத்து வீட்ல ஒரு ஏழை, குடிசைல இருந்து, அவங்க நம்ப கூட பேசலேன்னா, இந்த அளவுக்கு பீல் பண்ணுவோமா… நல்லதுன்னு போய்டுவோம்…
“”உங்ககிட்ட, ரொம்ப ரிசர்வ்டா இந்தம்மா இருக்காங்கன்னா, நீங்க குடியிருக்கறவங்க. குணம் எப்படியோ… நம்பி உங்ககிட்ட நல்லா பழக ஆரம்பிச்சா, இல்ல பரஸ்பரம் வீட்டுக்குள்ள போய் வந்தா, அத சாக்கா வெச்சு, அவங்ககிட்ட கடன் கேட்கலாம். இல்ல பொருள் கேட்கலாம்… வேற உதவி கேட்கலாம். அடிக்கடி வீட்டுக்கு வந்து, தனிமைய கெடுக்கலாம். கொஞ்சம் வளர விட்டுட்டு, அப்புறம் வெட்ட முடியாதே…
“”அதான்… கயிறா, பாம்பான்னு ஏன் தெரிஞ்சுக்கணும்ன்னு, ஒதுங்கியிருக்கவே ஆசைப்படறாங்க… அது, அவங்க உரிமை. நீங்களும் அது மாதிரி இருக்கலாம்; அது உங்க உரிமை!
“”அதுக்காக, அவங்கள தப்பா நெனைக்கக் கூடாது… ஆனா, அக்கம் பக்கத்துல உள்ளவங்க, நம்பள நல்லா புரிஞ்சிக்கணும்ன்னு ஆசைப்பட்டா, நீங்க உங்கள் செயல், பேச்சு மூலம், நாங்களும் கவுரவமானவங்கன்னு காட்டணும். அதுக்கு, ரெண்டு மூணு வருஷம் கூட ஆகும். இடையில பாக்குற, பேசற வாய்ப்பு கிடைச்சா, அளவா பயன்படுத்திக்கணும்.
“”இப்ப, இந்த கணபதி பூஜைக்கு, அவங்க வந்தா, நல்லா கவனிக்கணும். இது மாதிரி, பல சந்தர்ப்பம் வரும். அத பயன்படுத்தி, நாம தான் நம்மள சுத்தி, நல்ல சூழ்நிலைய உருவாக்கிக்கணும். என்ன புரியுதா மாப்ள?” என்றார் சுந்தரம்.
மாமனாரின் பக்குவப்பட்ட பேச்சில் உண்மையிருப்பது, தியாகுவிற்கு புரிந்தது. “பணம் எவருடைய அடிப்படை குணத்தையும் மாற்றாது. எனவே, அதை வைத்திருப்பவர்களிடம், அந்த குணத்தை வெளிப் படுத்தும்படி, நாம்தான் பழக வேண்டும் என, புரிந்து கொண்டான். மாறாக, பணம் உள்ளவர்களை, அதே காரணத்திற்காக வெறுப்பதும் சரியல்ல. பணம் இல்லாதவர்கள் எல்லாரும், நல்லவர்கள் என்பதும் தவறு. பணம் உள்ளவர்கள் அனைவரும், திமிரானவர்கள் என்பதும் தவறு!’
இதை, வித்யாவிற்கும் விளக்க வேண்டும் என, நினைத்துக் கொண்டான்.

– கீதா சீனிவாசன் (ஜனவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *