அவசரப்பட்டால் வெற்றி கிடைக்காது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 20, 2019
பார்வையிட்டோர்: 26,189 
 

“குருவே, நான் செய்யும் எதிலும் வெற்றியே கிடைப்பதில்லை. வெற்றி கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று பதட்டமாய் கேட்டவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.

“ அப்படியா?” என்றார் குரு.

“ஆமாம். நானும் நிறைய தொழில் செய்துப் பார்த்துவிட்டேன்” என்று சொன்னதும் குருவுக்கு அவன் பிரச்சனை என்னவென்று புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.

‘பிக்காஸோ உலகப் புகழ்ப் பெற்ற ஓவியர்.இன்றும் அவரது ஓவியங்கள் பல கோடி ரூபாய் விலைக்கு விற்கிறது. ஒரு முறை அவர் பூங்கா ஒன்றில் தனிமையில் உலவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அவரை அடையாளம் கண்டுக் கொண்டாள். அவரிடம் வந்து, “நீங்கள் பிக்காஸோதானே” என்று சந்தேகத்துடன் கேட்டாள். பிக்காஸோவும் சிரித்துக் கொண்டே “ஆமாம்” என்றார்.

உடனே அந்தப் பெண், ”நீங்கள் பெரிய ஓவியர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்னை உங்களால் வரைய முடியுமா?” என்று கேட்டாள். இது போன்ற கோரிக்கை பிக்காஸோவுக்கு வந்த்தில்லை. அந்தப் பெண்ணின் ஆர்வத்தை அவர் மறுக்க விரும்பவில்லை. உடனே ஒரு காகிதத்தை எடுத்து அந்தப் பெண்ணின் முகத்தை வரைந்துக் கொடுத்துவிட்டார். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் முப்பது வினாடிகள். பெண்ணுக்கு ஆச்சர்யம். “ரொம்ப அழகா வரைஞ்சிட்டிங்க” என்று சந்தோஷப்பட்டாள்.

“இந்த ஓவியத்தை நீ விற்றால் பல லட்சம் டாலர் கிடைக்கும்” என்று அவளிடம் சொன்னார் பிக்காஸோ. இதைக் கேட்டதும் அந்தப் பெண்ணுக்கு இன்னும் ஆச்சர்யம்.

“என்னது பல லட்சம் டாலரா? படம் வரைய முப்பது செகண்ட்தானே ஆச்சு?”

உடனே பிக்காஸோ சிரித்துக் கொண்டே, “ ஆமா, ஆனா இந்த நிலையை அடைய எனக்கு முப்பது வருஷம் ஆச்சு” என்றார்.

இந்த சம்பவத்தை சொன்னதும் வந்தவனுக்கு தன்னுடைய அவசரம் புரிந்தது.

அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: அவசரப்பட்டால் வெற்றி கிடைக்காது.

– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *