அழகு நிலையம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 8,452 
 

நீண்ட நாட்கள் வடக்கேயே வேலை பார்த்து வந்த நமச்சிவாயத்திற்கு ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளராகப் பதவி உயர்வுடன், சொந்த ஊருக்கே மாற்றலும் ஆகி விட்டது. சுமார் முப்பது வருடங்கள் கழித்து தன் சொந்த ஊருக்கே வந்துள்ள அவருக்கு பலவிதமான மாற்றங்கள் தென்பட்டன. புதிய பலமாடிக் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், போக்குவரத்து நெருக்கடிகள், புதிய பேருந்து நிலையங்கள், மக்கட்தொகைக்குப் போட்டிபோட்டுப் பெருகியுள்ள வாகனங்கள், மொத்தத்தில் அமைதியாகவும், சற்று சோம்பேறித் தனமாகவும் இருந்த அந்த ஊர், ஆரவாரமாகவும், சுறுசுறுப்பாகவும் மாறி உள்ளது.

அவர் அந்தக் காலத்தில் வழக்கமாகச் சம்மர் கிராப் அடித்துக்கொள்ளச் செல்லும் அந்த “அழகு நிலையம்” என்ற முடி திருத்தும் கடை மட்டும் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே, அதே மங்கிப்போன போர்டுடன் “அழகு நிலையம் – உரிமையாளர்: பங்காரு” எனக் காட்சியளித்தது. சுழலும் நாற்காலிகளில் நால்வர் அமர்ந்திருக்க, இவர் மட்டும் வெயிட்டிங் லிஸ்டில் நம்பர் ஒன்றாக, அங்கிருந்த, சற்றே ஆடும் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து செய்தித்தாள்களைப் புரட்டிக்கொண்டிருந்தார். “சார், நீங்க வரலாம்” என்று அழைத்த அந்த முடி திருத்தும் தொழிலாளியை உற்றுப் பார்த்த நமச்சிவாயத்திற்கு அவரை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்துப்பழகிய முகம் போலத் தோன்றியது. “கட்டிங்கா, ஷேவிங்கா அல்லது இரண்டுமா” என்று கேட்டவாறே, சுழல் நாற்காலியில் அமர வைத்து, பொன்னாடை போலத் துணியைப் போர்த்தத் தயாரானார், அந்தத் தொழிலாளி. “கட்டிங் அண்ட் ஷேவிங் – இரண்டும் தான்” என்றார். வெகு அழகாக முடிவெட்டப்பட்டு, பளிச்சென்று வழு வழுப்பாக ஷேவிங் செய்யப்பட்டு நமச்சிவாயம் பத்துவயது குறைந்தாற்போலக் காணப்பட்டார்.

முழுத்திருப்தியுடன் முப்பது ரூபாய்க்கு மேல் ஒரு ஐந்து ரூபாய் சேர்த்துக் கொடுத்தார். “ரொம்ப தாங்க்ஸ் சார்” என்றவர் “நீங்க இந்த ஊருக்குப் புதுசா சார்? இதற்கு முன்பு உங்களை எங்கேயோ பார்த்ததுபோல எனக்குத் தோன்றுகிறது சார்” என்றார் அந்த முடித் திருத்தும் தொழிலாளி.

“எனக்கும் உங்களைப் பார்த்ததும் அது போலத்தான் தோன்றியது. இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன்தான் நான். முப்பது வருடங்களுக்கு முன்பு இதே ஊரில் தான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு சென்னைக்குச் சென்று கல்லூரிப் படிப்பை முடித்தேன். பிறகு வேலை விஷயமாக வடக்கே பல ஊர்களுக்குப் போய் விட்டு இப்போது திரும்ப இந்த ஊருக்கே பணி மாற்றத்தில் வந்துள்ளேன்” என்றார் நமச்சிவாயம்.

“எந்த ஸ்கூலில் படித்தீர்கள் சார்?” என்றதும், நமச்சிவாயம் தான் பதினோறாவது வகுப்பு படித்த ஸ்கூல் பெயரையும் படித்து முடித்த வருஷத்தையும் சொன்னதும் “அப்போ உங்க பெயர் ‘நமச்சிவாயம்’ தானே?” என்று சொல்லித் தன் வலது முழங்கையை திருப்பிக் காட்டினார். ஆழமாகப் பல் பதிந்த தழும்பு ஒன்று காணப்பட்டது. “டேய், அப்போ நீ ராஜப்பாவாடா? ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி ஆகிவிட்டாயே?” என்று சொல்லி அவரைக் கட்டித் தழுவிக்கொண்டார் நமச்சிவாயம். பள்ளியில் படிக்கும்போது நமச்சிவாயத்தைவிட ராஜப்பா நிறைய மதிப்பெண்கள் பெற்று வகுப்பிலேயே முதல் மாணவனாகத் திகழ்ந்தவர். அவருடைய கையெழுத்து மணி மணியாக, அழகாக இருக்கும். அழகாக ஓவியம் வரையும் திறமையும் உண்டு. விஞ்ஞானப் பாடத்தில் படம் வரைந்து பலரின் பாரட்டுக்களையும் பெற்றிடுவார். எந்த வேலையையும் முழுமையாக, தெளிவாக, தவறேதுமில்லாமல், அழகாக செய்து முடிக்கும் திறமையுள்ளவர். ஆசிரியர்கள் அனைவருக்குமே அவரை மிகவும் பிடிக்கும். நமச்சிவாயத்திற்கு அந்தக் காலத்தில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுத்த குரு நாதர் ராஜப்பாதான். ராஜப்பாவும், நமச்சிவாயமும் ஆறாவது முதல் பதினொன்றவது வரை ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்த ஆருயிர் நண்பர்கள். ஆறாவது படிக்கும் போது ஏதோ ஒருவருக்கொருவர் ஏற்பட்ட விளையாட்டுச் சண்டையில் நமச்சிவாயம், ராஜப்பாவின் முழங்கைப்பக்கம் நன்றாக பல் பதியுமாறு கடித்துவிட்டார். ஒருவருக்கொருவர் பழைய நினைவுகளில் மூழ்கிக் கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்து விட்டு, பிறகு அந்த அழகு நிலையத்தில் பலர் தங்களையே பார்ப்பதை உணர்ந்து இயல்பு நிலைக்குத் திரும்பினர். “நீ என்னடா, இந்தத் தொழிலுக்கு வந்து விட்டாய்? மேற்கொண்டு படித்து வேறு நல்ல வேலைக்குப் போய் இருக்கக் கூடாதா? ” என்று பரிவுடன் வினவினார்.

ராஜப்பா ஸ்கூல் படிப்பு முடிந்ததும், தனக்கு ஏற்பட்ட, தன் தந்தையின் திடீர் இழப்பையும், குடும்பப் பொறுப்புக்களைச் சுமக்க வேண்டிய நிர்பந்தங்களையும், மிகவும் கஷ்டமான பொருளாதாரச் சூழ்நிலைகளையும் எடுத்துக்கூறி, மேற்கொண்டு படிப்பைத் தொடர முடியாதபடி ஆனதையும் விளக்கிவிட்டு, தானும் பலவிதமான வேலை வாய்ப்புக்களுக்கு முயற்சித்துப் பலனின்றி கடைசியில் எங்கள் பரம்பரை குலத்தொழிலாகிய முடி வெட்டும் வேலையைத் தொடங்கியதில், அது தான் இன்று ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கு வழி காட்டி வருவதாகச் சொன்னார்.

இப்போது நோய் வாய்ப்பட்டுள்ள இந்தக்கடை முதலாளி பங்காரு அவர்களும், இந்தக் கடையை யாருக்காவது விலைக்கு விற்று விட முடிவெடுத்துள்ளார். அவர் ஒருவேளை அவ்வாறு செய்து விட்டால், தான் பார்த்துவரும் இந்தத் தொழிலுக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய நிலைமையில் இருப்பதாகவும், அது தான் இப்போது பெரிய ஒரு கவலையாக இருப்பதாகவும் கூறினார். தன் ஆருயிர் நண்பன், இவ்வாறு தன் கஷ்ட நிலைமையை எடுத்துக் கூறியதும், நமச்சிவாயம் அவன் மேல் இரக்கம் கொண்டு அவனுக்கு உதவிட விரும்பினார். மறுநாள் தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்கும் படிக்கூறி தனது விஸிடிங் கார்டை அவனிடம் கொடுத்து விடைபெற்றார்.

மறுநாள் அந்தக் குளு குளு ஏ.சி. அறையில் உள்ளே நுழைந்த ராஜப்பா பிரமித்துப் போய்விட்டான். நமச்சிவாயம், சீஃப் மேனேஜர் என்று அழகிய பெயர்ப் பலகை, சிம்மாசனம் போன்ற இருக்கை, படுத்துப் புரளும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய மேஜை, கூப்பிட்ட குரலுக்கு எடுபிடி ஆட்கள், பல வண்ணங்களில் தொலைபேசிகள், அழகிய பூப்போட்ட வண்ணத் திரைச்சீலைகள், ரம்யமான பூந்தொட்டிகள். தன்னுடன் படித்த நமச்சிவாயத்தின் இன்றைய நிலைமையைப் பார்த்து மிகவும் பெருமைப்பட்டார், ராஜப்பா. தயங்கி நின்ற அவரைக் கைகுலுக்கி வரவேற்று, சோபாவில் அமரச்செய்து, இரண்டு ஆப்பிள் ஜூஸ் கொண்டு வருமாறு ஆர்டர் செய்தார், நமச்சிவாயம். நமச்சிவாயம் அளித்த வங்கிக் கடன் உதவி மூலம், அந்த அழகு நிலையம் ராஜப்பாவுக்கே சொந்தமாக்கப்பட்டது. மிகவும் நவீனப் படுத்தப்பட்டது. சுத்தம் மற்றும் சுகாதாரம் கடைபிடிக்கப்பட்டது. குளிர் சாதன வசதிகள் செய்யப்பட்டன.

மேலும் ஒரு சிலருக்கு அந்தக் கடையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. தொலைபேசி வசதி செய்யப்பட்டது. கலர் டி.வி.. பொருத்தப்பட்டது. முடி வெட்டிக்கொள்ள முன்பதிவு செய்யப்படும் – தொடர்புக்கு தொலைபேசி எண்: குறித்த நேரத்தில் தாமதமின்றி சேவை செய்து அனுப்பப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயம் தலைமையில் கடையின் திறப்பு விழா நடைபெற்றது.

ராஜப்பா, இப்போது அந்தக் கடையின் முழு உரிமையாளராக ஆக்கப்பட்டார். சிறந்த சேவை அளித்ததால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அந்தக் கடைக்கே வந்து பெருமளவில் தரவு அளித்தனர். “செய்யும் தொழிலே தெய்வம், அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்” என்று நினைத்து, உண்மையாக உழைத்த ராஜப்பாவை, தெய்வம் கை விடவில்லை. நமச்சிவாயம் ரூபத்தில் வந்து கை தூக்கி விட்டது.

– செப்டம்பர் 2007

Print Friendly, PDF & Email

1 thought on “அழகு நிலையம்

  1. அற்புதம் தெய்வம் மானுட ரூபத்தில் வரும் என்பது உண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *