அழகான ராட்சஸி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 7,783 
 

காலை நேரம். இனிமையான காதல் பாடல்களை ஒலிக்க விட்டுக்கொண்டே சென்றது பேருந்து.
ஏதோ ஒரு நிறுத்தத்தில் அந்தப்பெண் ஏறினாள். அதுவரை காதல் பாடல்களை கேட்டுக்கொண்டே கனவில் மிதந்துகொண்டிருந்த ரஞ்சித்துக்கு அவள் தேவதையாய் தெரிந்தாள்.

அவனுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது. சாதாரணமாக ஒரு பெண்ணை ரசிப்பதை விட, காதல் பாடல்கள் பிண்ணணியில் ரசிக்கும் போது அவளே நம் காதலி போன்றதொரு பிம்பம் ஏற்படுமல்லவா அப்படித்தான் ரஞ்சித்தும் நினைத்துக்கொண்டான்.

மை தீட்டியதால் கண்கள் பார்ப்பதற்கு அழகாய் இருந்தது. மெல்லிய உதடுகள், நெற்றியில் சிறிய பொட்டு. அதன் மேல் சந்தன கீற்று. அதிகம் எண்ணெய் வைக்காமல் பின்னிய கூந்தல். அதில் அழகாய் சூடிய மல்லிகைப்பூ. இப்படி ஒரு ரம்மியமான காலைப்பொழுதை இந்த பேருந்தில் ஏறவில்லையென்றால் தவறவிட்டிருப்பேனே என அவன் யோசித்துக்கொண்டிருக்கும் போதே ஒலித்த பாடல் அவனுக்குள் இன்னொரு ஆசையையும் தூண்டியது.

“கடைக்கண் பார்வைதனை
கன்னியர்கள் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு
மாமலையும் ஓர் கடுகாம். ”

இந்த பாடலை கேட்டதும் அந்தப்பெண்ணின் கடைக்கண் பார்வை தன்மீது திரும்பினால் நன்றாக இருக்குமே என ஏங்க ஆரம்பித்துவிட்டான். அப்போது இவன் எண்ணியது போலவே அந்தப்பெண்ணின் கண்கள் இவனை நோக்கி திரும்பியது. இவனும் ஆவலோடு இருந்தான். ஆனால் அவளின் பார்வை ரஞ்சித்தை அடையாமல் அவனுக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்த வேறொருவன் மேல் தேங்கி நின்றது. இவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
இவனும் அப்போது தான் இவனுக்கு முன்னால் இருந்தவனை கவனித்தான். மஞ்சள் கலரில் சட்டை அணிந்திருந்தான். கருப்பாக இருந்தாலும் ஓரளவு கலையாகவே இருந்தான். ஆனால் அந்தப் பெண்ணை விட வயதில் மிக மூத்தவனாக காணப்பட்டான்.

அந்த மஞ்ச சட்டைக்காரனும் அந்தப்பெண்னை தான் பார்த்துக்கொண்டிருந்தான். பார்ப்பதோடு மட்டுமல்லாமல் காதல் பாடல்களுக்கு ஏற்றவாறு இவனும் பாடுவதும், பாடும்பொழுதே அப்பெண்ணை பார்த்து சிரிப்பதுமாக இருந்தான். அதைவிடக் கொடுமை வாரணம் ஆயிரம் சூர்யாவை போல் கையால் நெஞ்சில் குத்திக்கொல்வதும் எதிரில் இருந்த கம்பியில் தலையை சாய்த்துக்கொண்டு வெட்கப்படுவதுமாக ஒரே குஷியாய் இருந்தான். அந்தப்பெண்ணும் அவ்வப்போது இவனை ஓரக்கண்ணால் பார்த்து புன்னகைப்பதும் பிறகு எங்கோ பார்ப்பதுமாக இருந்தாள்.

அடிக்கடி அவள் தன் காதோரம் பறக்கும் மயிலிறகை ஒத்த மென்மையான கூந்தலை தன் விரல்களால் காதுமடல் வரை தள்ளிவிடுவது ரஞ்சித்திற்கு ஓவியம் தீட்டுவது போல் இருந்தது. இருப்பினும் அவளை இப்போது ரஞ்சித்தால் முழுவதும் ரசிக்க முடியவில்லை. காரணம் அவள் மஞ்ச சட்டையை ரசிப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. ச்சே இந்த காலத்து பொண்ணுங்களோட ரசனையை புரிஞ்சிக்கவே முடியல என தனக்குத்தானே முனகிக்கொண்டான். அதில் அவனை விட தான் எதில் குறைந்துவிட்டோம் என்ற ஆதங்கம் இருந்ததும் அவன் முனகளுக்கு மற்றொரு காரணம்.

அந்தப்பெண் அவனை அடிக்கடி பார்த்துவிட்டு சிரிப்பதால் மஞ்ச சட்டைக்காரன் ஈஈஈஈ என்று இளித்துக்கொண்டே இருந்தான். இப்பொழுது அந்தப்பெண்னை பார்த்துக்கொண்டே பாட்டு பாடவும் ஆரம்பித்துவிட்டான். இவனை பார்த்தும் பார்க்காத மாதிரியும் அவளின் கண்கள் அங்குமிங்கும் நடனமாடிக்கொண்டிருந்தன.

அப்போது ஒலித்த பாடலை மஞ்ச சட்டைக்காரன் சற்று குரலை உயர்த்தியே பாட ஆரம்பித்தான்.

“உன்னை தொட்ட தென்றல் வந்து
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி, உள்ளுக்குள்ளேயே ஆசை வைத்து தள்ளி தள்ளி போவதென்ன நீதி”

அந்தப்பெண்ணிற்கு அவன் செயல்கள் சில நேரங்களில் கோபமூட்டின என்பதை அவள் கண்களிலும் உதடுகளின் முனுமுனுப்பிலும் ரஞ்சித்தால் உணர முடிந்தது. பிறகு அவள் தன் மொபைலை நோண்டுவதும் அவ்வபோது மஞ்ச சட்டைக்காரனை பார்ப்பதுமாக இருந்தாள். திடீரென அவனை பார்த்து புன்னகைத்தாள். அதில் ஏதோ ஒரு விஷமம் இருந்தது.

அதே நேரத்தில் பேருந்தில் சற்று கூட்டம் அதிகமானதால் அப்பெண் மஞ்ச சட்டைக்கு அருகில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மஞ்ச சட்டை எந்த அளவிற்கு சந்தோஷத்தோடு இருந்திருப்பான் என சொல்ல வேண்டியதில்லை. அதற்கு நிகரான இல்லை அதைவிட அதிகமான எரிச்சலுடன் இருந்தவன் ரஞ்சித்.

அந்தப்பெண் பேருந்தில் ஏறும் போது ரஞ்சித் இருந்த சந்தோஷமான மனநிலைக்கும், இப்போது இருக்கும் எரிச்சலான மனநிலையையும் ஒரு நிமிடம் நினைத்துப்பார்த்துவிட்டு ‘ச்சே, நாம எதுக்கு நம்மல குழப்பிக்கணும், யாரு யார பாத்து சிரிச்சா நமக்கென்ன வந்துச்சி ‘ என சிந்தித்து விட்டு மறுபடியும் காதல் பாடல்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தான்.

மஞ்ச சட்டைக்காரன் அந்தப்பெண் தன் அருகில் வந்ததிலிருந்து அதிகபிரசங்கியாக நடந்து கொண்டான். அவள் கைவிரல்களை தொடுவது போல் இவன் கையை வைப்பதும், காலினால் அவள் கால் மீது இடிப்பதும் அவள் அவனை முறைத்துப் பார்க்கும் போது ஸாரி ஸாரி என பதறுவதும் பிறகு அதையே தொடர்வதுமாக இருந்தான்.

அந்தப்பெண் அடிக்கடி மொபைலில் கவனத்தை செலுத்திவிடுவதால் அவனின் சில சேட்டைகளை அவள் கண்டுகொள்ளவில்லை. அவளுக்கும் அதில் விருப்பம் என்பதாக அதை அவன் தவறாக எடுத்து கொண்டான்.

அவள் இவனை அதன் பிறகு கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ஆனால் மஞ்ச சட்டை அதைப் பற்றி அதிக நேரம் யோசிக்கவே இல்லை. அடுத்த கட்டமாக அவளிடம் பேசுவதற்கான முயற்சியில் இறங்கிவிட்டான்.

“எந்த ஸ்டாப்ல இறங்கணும்” என கேட்டான்.

அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. ஒரு முறை நிமிர்ந்து அவனை பார்த்து விட்டு மறுபடியும் மொபைலில் மூழ்கிவிட்டாள். இருப்பினும் அவன் விடுவதாக இல்லை. மேலு‌ம் மேலும் அவளிடம் ஏதோ பேசிக்கொண்டும், கேட்டுக்கொண்டும் வந்தான். சிலவற்றிற்கு அவள் ஏதோ பதிலும் சொன்னாள்.

ஆனால் அவனுடைய பேச்சு போக போக தவறான பாதையில் சென்றது. அப்பெண்ணை அவன் ஆபாசமாக ஏதோ சொல்லி வர்ணித்திருக்கிறான் என்பது அப்பெண்ணின் முகத்தில் ஏற்பட்ட மாறுதலிலேயே யூகிக்க முடிந்தது. அவள் முகத்தில் கோபம், அழுகை போன்ற கலவையான குறிப்புகள் தென்பட்டன. பிறகு அவனிடமிருந்து சற்று விலகி கூட்டத்தில் நெருக்கிக்கொண்டு நின்றாள்.

அடுத்தடுத்த நிறுத்தங்களில் பேருந்தில் கூட்டம் குறைய தொடங்கியது. அவன் கண்கள் அவளின் அங்கங்களை மேய்ந்து கொண்டிருந்தன. அவள் கண்கள் அவன் மீது நெருப்பை உமிழ்ந்தன. அவள் பார்வையை மஞ்ச சட்டை கண்டுகொள்ளவே இல்லை.

அப்போது மற்றொரு நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது ஒருவன் ஏறினான். அங்குமிங்கும் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணின் அருகில் வந்து நின்றான். அவள் ஏதோ சொன்னது போல் இருந்தது. அடுத்த சில நொடிகளில் மஞ்ச சட்டைக்கு சரமாரியாக அடிகளும், குத்துகளும் விழுந்தது. மஞ்ச சட்டை என்ன நடக்கிறது என்றே புரியாமல் தடுமாறினான்.

“என்னடா ஒரு பொண்ணு தனியா வந்தா, உன் இஷ்டத்துக்கு பேசுவியா. மூஞ்சி முகரையெல்லாம் பேத்துடுவேன். பொறம்போக்கு நாயே. ” என்று ஆவேசமாக பேசினான்.

அதற்குள் பக்கத்தில் இருந்தவர்கள் அவனை அமைதிப்படுத்தினர். மஞ்ச சட்டை வாயை திறக்க முடியாமல் தலையை தொங்கபோட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

சிறிது நேரம் அப்பெண்ணையும் மஞ்ச சட்டையையும் பார்க்காமல் இருந்த ரஞ்சித் ஒருவன் வந்து மஞ்ச சட்டையை வெளுத்து எடுப்பதை பார்த்து அவனுக்கும் கொஞ்சம் உதறல் எடுத்தது. நல்ல வேளை நாம அந்தப் பெண்ணுக்கு எதுவும் தொந்தரவு கொடுக்கவில்லை என எண்ணிக் கொண்டான்.

அவள் இவ்வளவு நேரம் மொபைலை நோண்டிக்கொண்டே இருந்ததற்கு காரணம் இப்போது புரிந்தது. அவள் காதலனுக்கோ அல்லது நண்பணுக்கோ தகவல் கொடுத்திருக்கிறாள். அவன் தான் இப்போது வந்து அவளுக்காக சண்டை போடுகிறான் என அறிந்து கொண்டான்.

ரஞ்சித் மறுபடியும் அந்தப் பெண்ணை பார்த்தான். இவ்வளவு நேரம் அழகாக மட்டும் தெரிந்தவள் இப்போது அழகான ராட்சஸியாக தெரிந்தாள்.

இந்த காலத்தில் பெண்கள் இவளை போன்று தைரியமாக இருந்தால் தான் பிழைக்க முடியும் என அவன் நினைத்துக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *