அலைகளால் அழியாத தூசு..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 2, 2021
பார்வையிட்டோர்: 2,409 
 

கழுத்துவரைபோர்வை போர்த்தி சோர்ந்து, சுருண்டு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த 30 வயது இளைஞன் இனியன் மல்லாந்து படுத்து கண் விழித்தான்.

மூங்கில், தென்னங்கீற்றுகளிலான கூரை பார்வையில் பட்டது. அப்படியே கண்களை இறக்கி நோட்டமிட்டான். செம்மண் சுவர்களாலான குடிசை புரிந்தது.

வாசல் திறந்திருக்க வெளியே….

“லெமூரியாக் கண்டம் எனும் குமரிக்கண்டம். ஆழிப் பேரலைகளால் அழியப்பட்ட பெரும்பூமி. இது….பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டது…..”படிக்கும் சிறுமியின் குரல் கேட்டது.

“அறம் செய விரும்பு. ஆறுவது சினம்…”ஆறு வயது சிறுவனின் குரலும் சேர்ந்து கேட்டது.

‘தப்பித் தவறி தமிழ் நாட்டிற்கே வந்து விட்டோமா..? எந்த இடம், என்ன ஊர்..?’ என்று சிந்தனையைக் கிளற….

வாசலில்…. 50 வயது மதிக்கத்தக்க ஆள். புன்னகையுடன்….

“கண் விழிச்சாச்சா…?” கேட்டு அருகில் வந்தார்.

முன் பின் பார்த்தறியாத முகம்.

படுக்கையில் கை ஊன்றி தட்டுத் தடுமாறி குழப்பமாக எழுந்தான்.

“படுங்க….”ஆறுதலாக சொல்லி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார் அவர்.

வெளியே இன்னும் சிறுவர் சிறுமியரின் படிப்புக் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

சிரமப்பட்டு அமர்ந்த இனியன்….

“ஐயா…! நீ….நீங்க….?” கலவரமாகப் பார்த்தான்.

“நானா…? என் பேர் பொற்கை !” என்றார்.

“ஐயா…. ! இடம்….?” இழுத்தான்.

“குமரிக்கண்டம் குஞ்சு. இல்லை இல்லை அலைகளால் அழியாத தூசு..!!”

குழப்பமாகப் பார்த்தான்.

“புரியலையா…? குமரிக்கண்டத்தின் எஞ்சிய பூமி…”என்றவர், வாசலைப் பார்த்து…

“கோப்பெருந்தேவி…!” குரல் கொடுத்தார்.

“என்ன தாத்தா..?” கேட்டுக்கொண்டே…. பாவாடை சட்டையில் ஆறு வயது சிறுமி உள்ளே வந்தாள்.

“மாமாவுக்கு… குடிக்க கேழ்வரகு கஞ்சி கொண்டு வாம்மா..! அம்மாவைக் கேள் கொடுப்பாங்க…”என்றார்.

“சரி தாத்தா..!” அவள் அகன்றாள்.

உடன் பொற்கை இவனைப் பார்த்து…

“தம்பி… ! நீங்க… எந்த ஊர், என்ன பேர்…?” கேட்டார்.

“நான்….. தமிழ்நாடு. ராமேஸ்வரம். பேர் இனியன்.” என்றான்.

“அப்படிங்களா..? ரொம்ப மகிழ்ச்சி. அப்புறம் ஏன் கடல்ல மிதந்தீங்க..?”

“நான், பத்து பேர்களோட பெரிய படகுல வந்து….ராமேஸ்வரம் தாண்டி நான்கு நாள்களுக்கு முன் மீன் பிடிச்சிக்கிட்டிருந்தோம். திடீர்ன்னு பேய்க்காத்து மழைன்னு சூறாவளி. நாங்க வந்த படகு சின்னா பின்னம். கண்ணிமைக்கும் நேரம் என்னோட வந்த ஆட்களெல்லாம் திக்கு திசை தெரியாமல் ஆளுக்கொரு பக்கம் காணாமல் போனாங்க. நானும் அப்படித்தான் கடல்ல மிதந்தேன். ஒரு கட்டையைப் பிடிச்சிக்கிட்டு ரெண்டு பகல் ரெண்டு ராத்திரின்னு மிதந்தேன். நீந்தினேன். இடையில் ஒரு கட்டு மரம் கிடைச்சுது. ஏறி படுத்தேன். இரண்டு மூன்று நாட்களாய் சோறு தண்ணி இல்லாத தாக்கம். சோர்வு, களைப்பு. மயக்கம். அப்படியே கண் மூடினேன்.” நிறுத்தினான்.

“அப்புறம் நான் சொல்றேன்…..!” என்ற பொய்கை…

“ரெண்டு நாட்களுக்கு முன் நான் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது கடற்கரையில் கரை ஒதுங்கி கட்டுமரத்தில் குப்புறக்கிடந்தீங்க. அப்புறம் என் வீட்டு ஆட்கள் உதவியோடு உங்களை இங்கே தூக்கி வந்து முதலுதவிகள் செய்து, வயித்துக்கு ஆகாரம் கொடுத்து… படுக்க வச்சேன். இப்போ கண் விழிச்சிருக்கீங்க.”நிறுத்தினார்.

இனியனுக்குப் புரிந்தது.

“ஐயா.. ! இன்னைக்குத் தேதி என்ன…?” கேட்டான்.

“ஆடி 26. ஏன் கேட்டீங்க…?”

“ஆடி 18ந்தேதி புறப்பட்டு கடல்ல கவிழப்பட்ட நான்..கிட்டத்தட்ட ஏழெட்டு நாட்களுக்குப் பின் உங்க கைக்குக் கிடைச்சு இன்னைக்குக் கண் விழிச்சிருக்கேன் இல்லையா…?” என்றான்.

“ஆமா..”

“அவ்வளவு நாட்களாய் நான் கடலில் மிதந்திருக்கேன்னா… இந்த இடம் எங்கே இருக்கு…?”

“சரியா சொல்லனும்ன்னா ஒரு பக்கம் மடாஷ்கர், இன்னொரு பக்கம் ஆப்பிரிக்கா. இதுக்கு இடைப்பட்ட தூரத்தில் இருக்கோம்..”என்றார்.

“தமிழ் நாட்டிலேர்ந்து எவ்வளவு தூரம்…?”

“கிட்டத்தட்ட பல ஆயிரம் மைல்கள்….”

“அவ்வளவு தூரமா..?” இவன் வியக்கும்போதே சிறுமி கலயத்துடன் உள்ளே வந்தாள்.

பின்னாலேயே…அவள் தாய் 34 வயது மதிக்கத்தக்கப் பெண்ணும் உடன் வந்தாள்.

“தம்பி ! உடம்பு நல்லா இருக்கா…?” அன்பாக கேட்டுக் கொண்டே அருகில் வந்தாள்.

இனியன் அவளுக்குப் பதில் சொல்வதற்கு முன்பே…

“இது என் மருமகள். மந்தாரை !” என்று இவனுக்கு அவளை அறிமுகப்படுத்தினார் பொற்கை.

“வணக்கம்மா..” கை கூப்பினான்.

“வணக்கம். ஒன்னும் கவலைப் படாதீங்க. உடம்பு தேறி நல்லா ஆனபிறகு உங்க நாடு போய் சேரலாம்..”சொல்லிச் சென்றாள்.

‘முன் பின் அறிமுகமில்லாதவனிடம் என்ன ஒரு வாஞ்சை!?’ – இவனுக்குள் வியப்பு வந்து நெஞ்சு விசகசித்தது .

“தாத்தா..! கஞ்சி !” வைத்து விட்டு சென்றாள் சிறுமி.

“இவள் பேரு பொன்முடி. பேத்தி. சூட்டிகையான பொண்ணு. குடிங்க தம்பி. நாம அப்புறம் பேசலாம்…!” சொல்லி கலயத்தை நீட்டினார் பொற்கை.

வாங்கி வாயில் சாய்த்தான்.

இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயங்கள் பொடிதாக நறுக்கிப் போட்டு கலக்கிய அருமையான கேழ்வரகு கஞ்சி . இவன் வாழ்நாளில் இப்படி ஒரு கஞ்சியை குடித்திராத அமிர்தம். சுவையாக இருந்தது.

குடித்து முடித்து கீழே வைத்தபோது உடம்பில் புது உற்சாகமும், தெம்பும் வந்தது போலிருந்தது.

“நீங்க கண் விழிக்காம படுக்கையில இருந்த ரெண்டு நாளும் இந்த ஆகாரம் தான் இனியன் . வாயைப் பிளந்து உங்களுக்கு ஊட்டினோம்.”என்றார்.

“நல்ல சுவை அய்யா..!” என்றான் இவன்.

“பையன் பாண்டியன். மீன் பிடிக்க போயிருக்கான். மீன் பிடி மட்டுமில்லாம இங்கு விவசாயமும் தொழில். நெல், கம்பு, கேழ்வரகு, திணை, சோளம் எல்லாம் எங்க தேவைக்கேற்ப விளையுது. விளைய வச்சுக்கிறோம். யாரும் மத்தவங்ககிட்ட கையேந்திறதில்லே.

ஆறு காத மையில் நீளம், அம்பது காத தூர அகலம் உள்ள தீவில் எங்களுக்கு எல்லாமே கிடைக்குது.” நிறுத்தினார்.

இனியன் பேசாமல் இருந்தான்.

அவர் தொடர்ந்தார்.

“சுமார் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள குமரிக்கண்டத்தில் பக்ருளி, குமரின்னு இரண்டு பெரிய நதிகள், மலை, அருவி, ஆறு, காடுகள்ன்னு நல்ல செழிப்பாய் இருந்த பூமியை பாண்டியர்கள் நாற்பத்தி ஒன்பது நாடுகளாய்ப் பிரிச்சி நல்ல சிறப்பா ஆண்டிருக்காங்க.

இங்கே தென் மதுரை என்கிற இடத்தில் முதல் தமிழ்ச்சங்கம் நிறுவி… பரிபாடல், முதுநாரை, முடுகுறுக்கு, பேரதிகாரம்… எல்லாம் அரங்கேறி இருக்கு.

அப்புறம்… கபாடபுரம் இரண்டாம் தமிழ்ச்சங்கத்தில்… அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மா புராணம்…. அப்படின்னு நிறைய அரங்கேறி இருக்கு.

தொல்காப்பியத்தைத் தவிர…மத்ததெல்லாம்… மூணுமுறை ஏற்பட்ட பேரலை, கடல் கொந்தளிப்புகளால் கண்டத்தோடு சேர்த்து எல்லாம் காணாம போச்சு.

அப்புறம்தான் தமிழ் நாட்டுல உள்ள மதுரையில் மூன்றாம் தமிழ்ச்சங்கம் தோன்றி…. அங்கே அகனாநூறு, புறனாநூறு, நாலடியார், திருக்குறள் எல்லாம் அரங்கேறி இருக்கு.

பாரம்பரிய தமிழ் பூமி தம்பி இது.

இத்தனை பெரிய கண்டத்தில் தப்பியது… அம்பது காத நீளம், அறுபது காத அகலம் கொண்ட சிறு பூமி. இதுவரை யார் கண்ணுக்கும் புலப்படாத சின்னத் தீவு.

இங்கே இப்போ மலை காடெல்லாம் பெரிசா கிடையாது. பேய்கிற மழைத் தண்ணியை ஏரி, குளம், குட்டைகள் வெட்டி சேர்த்து வைச்சி குடிக்கிறோம், விவசாயம் செய்யுறோம். இதெல்லாம் பாண்டியர்கள் எங்களுக்கு விட்டுப் போன சொத்து.

ஆடு, மாடு, கோழிகள், வளர்ப்பு. மாடுகள் இழுக்கிற கட்டை வண்டி, கூண்டு வண்டிகள்தான் போக்குவரத்து , பயணம். தனிமனித பயணம் போக்குவரத்துக்கு குதிரைகள்தான் உபயோகம்.

மற்றப்படி இங்கே நாங்க முருகனுக்கு ஒரு கோயில் கட்டி இருக்கோம். அவர்தான் எங்க முக்கிய கடவுள். அடுத்து.. மாரியம்மன், காளிஅம்மன்கள்கோயில்களும் இருக்கு. அதெல்லாம் எங்கள் குலதெய்வங்கள்.

வருங்கால சந்ததியினருக்கு உபயோகப்படும் விதமாய் முருகன் கோயில்ல எங்க வரலாறுகளை எழுத்துகளாய்க் கல்வெட்டுகளாய் செதுக்கி இருக்கோம். இங்கே எழுத்தாணி பனை ஓலைகள்தான் உபயோகம்.

ஆதியில் அம்பது குடும்பங்கள் கொண்ட ஒரு ஊர் பொழைச்சதாதான் சரித்திரம். இன்னைக்கு ஆயிரம் குடும்பங்கள் இருக்கு. ஆண், பெண் பெரும்பாலான எல்லாருக்கும் பாண்டிய அரசர்கள், அரசிகள் பெயர்கள்தான், அடுத்து தமிழக சேர, சோழ அரசர், அரசிகளின் பெயர்கள்.

தமிழ்த்தான் எங்க பேச்சு மொழி. நான் சொல்ற இந்த சரித்திரத்தை எல்லாம் பள்ளிப் படிப்புலேயே வழி வழியாய் நாங்க சொல்லி வர்றோம். இதோ என் பேரன், பேத்திகள் படிக்கிறார்களே…! அப்படித்தான் எங்களுக்கு சரித்திரம் தெரியுது.

அன்னைக்கு அரசர்கள் காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்களோ அப்படியே வாழ்ந்து வர்றோம். மத்தபடி புதுசா எந்தவித நாகரீகம், பழக்க வழக்கங்களும் கிடையாது. அது எங்களுக்குத் தேவையும் இல்லே. கத்துக்கவும் விரும்பல .

ரெண்டு நாள் கழிச்சி உடம்பு தெம்பானதும்..புறப்படுங்க. ஊரை என்ன இந்த தீவையே சுத்திக் காட்டறேன். அப்போ தெரியும். நான் சொன்னதெல்லாம் உண்மை என்கிறது தெரியும். ! படுத்து களைப்பாறி இன்னும் உடம்பை தேத்துங்க. வெளியில கொஞ்சம் வேலை இருக்கு. அப்புறம் வர்றேன்.” என்று சொல்லி .எழுந்து வெளியேறினார் பொற்கை.

தனித்து விடப்பட்ட இனியனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘எப்படி இப்படி…?’ – என்று யோசிக்க வைத்தது.

ராமேஸ்வரத்தில் இன்னும் ஆள் நடமாட்டமில்லாத, மக்கள் புழக்கமில்லாத நிறையத் தீவுகள் இருப்பதாய் இவனும் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்திருக்கிறான். அவைகள் எல்லாம் எப்படி இருக்கின்றன, எவ்வாறு இருக்கின்றன என்று பார்க்க ஆசைப் பட்டிருக்கிறான். நண்பர்களிடம் சொல்லியும் இருக்கிறான்.

அதில் பார்த்த சிலர்…’ அங்கேயெல்லாம் ஒண்ணுமில்லே. எதுக்கு வீண் வேலை…?’ இவனிடம் சொல்லி ஒதுக்கி இருக்கிறார்கள்.

இன்னும் இப்படி.. மாலத்தீவுகள், லட்சத்தீவுகள் , அந்தமான் தீவுகளின் பக்கமும் இருப்பதாகப் படித்திருக்கிறான்.

அது போல இது ஒரு தீவு. உலகக் கண்ணில் படாத..குமரிக்கண்டத்தின் எச்சம்.!. தூசு. !!

‘இந்த மக்கள் தமிழை எப்படி பாதுகாக்கிறார்கள்..?! இன்னும் பழமை மாறாமல், அதை போற்றி, பாதுகாத்து…’ – நினைக்க நினைக்க வியப்பாய் இருந்தது. யோசிக்க யோசிக்க மலைப்பாய் இருந்தது.

அடுத்து இந்த இடத்தை விட்டு எப்படி இந்தியா, தமிழகம் செல்லப் போகிறோம். வீட்டைப் பார்க்கப் போகிறோம்..? – கவலை வந்தது.

அதையும் பொற்கையிடம் சொன்னான்.

“ஒன்னும் கவலைப்படாதீங்க தம்பி. எங்களைத்தான் யாருக்கும் தெரியாதே தவிர… எங்களுக்கு எல்லாரையும் தெரியும். மீன் பிடி தொழிலில் படகு, கட்டு மரம்கள்தான்தான் உபயோகம். பயணத்திற்குப் பாய் மரக்கப்பல். அதுலதான் எங்க மக்கள் அதிக தூரம் போய் சுத்தி வருவாங்க. அப்படி உங்களைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பறோம். அதுக்கு நீங்க வடக்கு நோக்கிப் போகனும். அப்படிப் போக காத்து நமக்கு சாதகமா வீசனும். இப்போ அது சரி இல்லே. இன்னும் ரெண்டு நாள்ல சரியாகும். அப்போ அனுப்பறோம். கவலைப் படாதீங்க.” சொன்னார்.

அப்போததுதான் இவனுக்கு உயிரே வந்தது. தெம்பு, தைரியமானான்.

இரண்டு நாட்களிலேயே… பிள்ளை, மருமகள், பேரன், பேத்திகள் எல்லோரும் இனியனுக்கு நன்கு பழக்கமாகி விட்டார்கள்.

மூன்றாம் நாள் பொற்கை சொன்னது மாதிரியே இவனை அழைத்துக் கொண்டு நடையாய்ப் புறப்பட்டார். அடுத்து ஒரு குதிரையில் ஏறி இருவரும் சென்றார்கள்.

வழவழ தார் சாலைகள் இல்லாமல் எல்லாம் மண், கல் சாலைகள்.

சாலைகள், பாதைகள் இருபுறமும்… நிழல் தரும் பிரமாண்ட… மா, புளியன் என்று காய், கனி தரும் மரங்கள்.

எங்கும்… ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி அக்கம் பக்கமெல்லாம் பச்சைப் பசேர் என்று விவசாயம்.என்று விவசாயம்.

எல்லாம் தமிழ் முகங்கள்.

எல்லாம் ஆதிகால மச்சு, மாடி, குடிசை, ஓட்டு வீடுகள். மருந்துக்கும் கல்,மண்,சிமெண்ட் கலந்த கான்கீரீட் கட்டிடங்கள் இல்லை.

பள்ளி கல்லூரிகள் என்று பெரிதாக வளர்ச்சி இல்லை என்றாலும்….அந்த தீவிற்குத் தேவையான பள்ளிக்கூடங்கள் இருந்தன.

கடற்கரை ஓரங்களில்… பத்துப் பதினைந்து பாய்மரக்கப்பல்களைத் தவிர…எல்லாம் படகுகளும், கட்டுமரங்களும்தான்.

பொற்கை சொன்னது எதுவும் பொய் இல்லாமல் இனியனுக்குப் பார்க்கப் பார்க்க பூரிப்பாய் இருந்தது.

‘தேதி, இன்றோடு ஆடி 30. தமிழகம் இந்நேரம்… தன்னைக் காணாமல் போனவர்கள், இறந்தவர்கள் வரிசையில் சேர்த்திருக்கும் !’ – நினைத்தான்.

திரும்பி வந்து அதே கவலையில் ஆழ்ந்திருந்தான்.

“கவலைப்படாதே நண்பா. நாளைக்கு உங்களுக்கு சாதகமாய்க் காத்து துவங்குது. உங்களை அனுப்பி வைக்க பாய்மரக்கப்பல் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன். நிம்மதியாய்த் தூங்கு !” பாண்டியன் சொன்னான்.

அப்போதுதான் இவனுக்கு உயிரே வந்தது.

நிம்மதி உறக்கமும் வந்தது.

மறுநாள் காலை…

கடற்கரைக்கு வந்து… பேரன், பேத்திகள், மந்தாரை என்று குடும்பமே இவனை வழியனுப்பி வைத்தது.

இவனுக்குப் பிரிய மனமில்லை.

இருந்தாலும் கண்ணீரோடு விடை பெற்றான்.

பாண்டியன் நின்றிருந்த பாய்மரக்கப்பலில் ஏற சென்றவனின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்திய பொற்கை…

“இனியன் ! எங்களுக்கு ஒரு உதவி செய்யனும்..”என்றார்.

“என்ன ஐயா..?”

“இப்படி ஒரு தீவு இருக்கு, இப்படி நாங்கள் வாழறோம்ன்னு நீங்க அங்கே யார்கிட்டேயும் மூச்சு விடக்கூடாது!” சொல்லி தயவாய்ப் பார்த்தார்.

“ஏன் ஐயா..?”

“உலகத்தில் தெரிந்தும், தெரியாமலும் எத்தனையோ ஆச்சரியங்கள், அதிசயங்கள் இருக்கு. அதுல நாங்களும் ஒன்னா இருந்து. இப்படியே உலகம் அழியறவரைக்கும் இருந்து, மறைந்து போறோமே.!.. இதில் யாருக்கு என்ன கஷ்டம்..?” என்றார்.

“சரி ஐயா !” என்று தலையசைத்த இனியன்… பொற்கை காலில் கண்ணீருடன் விழுந்து எழுந்து கனத்த மனத்துடன் கப்பல் ஏறினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *