அருண் என்கிற ஐந்து கால் நாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 7,334 
 

சந்தைக்கடைக்கு சாமான்கள் வாங்க வந்த புதுமணப்பெண் ஓட்டம்! இந்த வரி எனக்கு மிகப் பிடித்தமாக இருந்ததால் முதலில் அங்கிருந்தே விசயத்தை துவங்கி விடுகிறேன். அது சரி இந்த வரியை எங்கு பிடித்தேன் என்கிறீர்களா? அதான் இன்று காலை பேப்பரில் முகப்பு பக்கத்திலேயே கொட்டை எழுத்தில் போட்டிருந்ததே! மாலை வரை எனக்கு மனதில் இந்த செய்தியே தான் ஓடிக்கொண்டிருக்கிறது உள்ளுக்குள்.

அழகானவளும். கேனைத்தனமான சிரிப்பையும், கொடை மூக்கும் அமையப் பெற்றவளான சுகந்தி தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு தாய் தந்தை அரவணைப்பில் வீட்டில் ஒருவருட காலம் பொழுதோட்டிக் கொண்டிருந்தாள். காலைப் பேப்பரில் இப்படி சொல்லியிருக்க மாட்டார்கள் தான். இருந்தும் உங்களுக்கு புரியும் விதமாக தமிழில் மொழிபெயர்த்து முடிந்த மட்டிலும் விசயத்தை சொல்கிறேன்.

கேபிள் கனெக்சன் வழியாக வந்த அனைத்து சேனல்களையும் அம்மாவும், காதோரம் சுருள்முடி கொண்டவளும், காண்பவரையெல்லாம் தலைதெரிக்க ஓடவைக்கும் ஒட்டக நடையையும் கொண்டவளுமான சுகந்தியும் மாற்றி மாற்றி அழுத்திப் பார்த்து தங்கள் அறிவுச் சிந்தனையை வளர்த்துக் கொண்டார்கள். பக்கத்து வீட்டில் பத்தாம் வகுப்பு செல்லும் மகள் ஒருத்தியையும், ஒன்பதாம் வகுப்பு செல்லும் மகள் ஒருத்தியையும் கண்ணுக்குள் வைத்து காக்கும் குடும்பம் ஒன்று இருந்தது.

அந்தக் குடும்பம் திருநல்வேலியிலிருந்து பக்கத்து வீட்டுக்கு வந்து வருடம் ஐந்தாறு ஆகிவிட்டது. சொல்ல மறந்து விட்டேன் வேப்பங்குச்சியில் பல்சுத்தப்படுத்துபவளும், முகத்துக்கு எந்த நேரமும் பாண்ட்ஸ் பவுடரடித்து கண்ணாடி முன் நின்று தன் அழகை காண்பவளுமான சுகந்தி என்று சொன்னேனல்லவா! அவளின் உண்மைப் பெயர் என்னமோ கருதி மறைக்கப்பட்டதாய் பேப்பரில் போட்டிருந்தார்கள். அந்த என்னமோ என்னவென எனக்குத் தெரியவில்லை.

பக்கத்து வீட்டுகாரர்களிடம் நகர்ப்புறங்களில் தான் அதிகம் பழக மாட்டார்கள். அரிசி போன்ற வரிசைப்பற்களில் மஞ்சள் நிற கறையையும், கடவாய் பற்களில் இரண்டில் சொத்தையை ஏற்படுத்திக் கொண்டவளுமான சுகந்தி குறுநகரப்பெண். அந்த வீதியில் உள்ள பதினைந்து வீட்டுக்குள்லும் சகஜமாய் சமையல் கட்டு வரை போய் வருவாள். சகஜமென்றால் வீட்டுக்குள் நுழைந்ததும் சமையல் கட்டு போய் வெண்டைக்காயோ, கேரட்டோ பளிச்சென தெரிந்தால் வீட்டாரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே படக்கென எடுத்து நறுக் நறுக்கென கடித்தபடி அசைபோடுவதை சொல்கிறேன். உண்மைப்பெயர் மறைக்கப்பட்ட, ஊட்டுக்குள்ளே அடைகாக்கும் கோழியாய் பகலில் கிடக்கும் சுகந்தி நல்ல தீனிக்காரி!

சும்மா வீட்டில் இருந்தால் காதல் வரும். அல்லது காதலுக்கான அழைப்புகளும் வரும். காதல் பாடல்களை எந்த நேரமும் முனுமுனுப்பவளும், அட்டனங்கால் போட்டு படுத்தபடி டிவி பார்ப்பவளுமான சுகந்திக்கு வந்த பல அழைப்புகளை அவள் நிராகரித்தாள். திடீரென சுகந்திக்கு கல்யாண யோகம் வந்தது. மாப்பிள்ளை குணசேகரன் குணத்தில் தங்கமானவன் என்று அவன் அம்மா சொன்னது. அப்பாவும் சொல்லியிருப்பார் தான் என்றாலும் அவர் இறந்து மூன்று வருடங்களாகி விட்டதாம். வீட்டுக்கு ஒரே பையன். சொத்தும் பத்தும் கிடக்கிறது என்றார்கள். அது இன்னம் மூன்று தலைமுறைகளுக்கு ஆவும் என்றும் சொன்னார்கள்.

உட்கார்ந்து திங்க ஊத்துக்குளி வெண்ணெய் போலவும், திருநெல்வேலி அல்வா போலவுமிருந்த சுகந்தியை அலங்கரித்து அவனுக்கு முன் நிறுத்தினார்கள். குணசேகரனுக்கு, அம்மா சொல்படி கால்பெருவிரலால் நிலத்தை கீறுபவளும், அன்னாந்து பார்க்காத முகத்தையும், மாநிறத்தையுடையவளுமாயிருந்த சுகந்தி முழு திருப்தி. தன் திருப்தியை அவன் புன்னகையோடு அவன் அம்மாவிடம் சொன்னான். ‘பொண்ணு சூப்பர்மா’.

ஜாதகத்தை அலசிப் பார்க்கையில் பொருத்தங்கள் ஏழு இருந்ததும் ஒரு மலைக்கோவிலில் நல்லநாள் பார்த்து திருமணத்தை இருவீட்டாரும் முடித்தார்கள். முதலிரவுக்கு திருமணஜோடி மூன்று நாள் காத்திருக்க வேணுமென்று குண்டை தூக்கி போட்டார்கள். குணசேகரனுக்கு அது துக்கமாய் இருந்தது. சுகந்தியை பார்த்துப் பார்த்து பெருமூச்சு விட்டான். அருகில் இருந்தும் அள்ளிக் கொள்ள முடியவில்லையே!

டிவியில் டிஸ்கவரி சேனல் பார்த்தபடி பலகாரங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் மாமனார் வீட்டில். அன்று அந்த குறுநகரில் சந்தை நாளாம். வீட்டில் அடைந்து கிடப்பதற்கு பதிலாக சுகந்தி தான் கணவனோடு சந்தைக்குள் சென்று வர அம்மாவிடம் அனுமதி வாங்கி குணசேகரனை கிளம்பச் சொன்னாள். கொண்டையில் தாழம்பூ சூடியவளும், பட்டிக்காட்டு பச்சைக்கிளி போலவுமிருந்த சுகந்தியின் ஆசை கண்டு இவனும் உள்ளுக்குள் பற்றி எரிந்தான் படுவேகமாய்!

‘பாத்து பத்திரமா போயிட்டு வாங்க!’ மாமியார் வழியனுப்ப மாமனாரின் டிவிஎஸ்சில் புதுமனைவியை அமரவைத்து குணசேகரன் ராக்கெட்டை கிளப்புவது மாதிரி கிளப்பினான். சீமெண்ணெய் கலந்த பெட்ரோல் போலுள்ளது. புகை வேறு டிவிஎஸ் தீப்பிடித்து விட்டது போல உள்ளூர் வீதிகள் இரண்டைக் கடந்து மெயின் ரோட்டுக்கு ஏறியது. குணசேகரன் வானத்தில் மிதந்து செல்வது போல் சென்றான். அவனுக்கு சந்தைக்கு செல்லும் வழியை பின்னால் அமர்ந்திருந்த, குஞ்சம் வைத்து கட்டிய சேலை அணிந்தவளும், குப்புற எந்நாளிலும் படுத்து தூங்காதவளுமான சுகந்தி சொல்லிக் கொண்டே வந்தாள்.

ஒருவழியாக சந்தை கூடிய இடத்தை அவர்கள் அடைந்த போது கூட்டம் மிகுதியாக இருந்தது. சுகந்தியை முகப்பில் நிறுத்தி விட்டு வண்டியை பத்திரமான இடத்தில் நிறுத்தி விட்டு வந்து விடுவதாக குணசேகரன் உருட்டிக் கொண்டு சென்றான். ஒரு வருடமாய் சன் டிவி பார்த்தவளும், சாதி சனத்துக்கு மிரளாதவளுமான சுகந்தி தன் செல்போனை கையில் எடுத்துக் கொண்டு சந்தைக்குள் போகாமல், குணசேகரன் நிற்கச் சொன்ன இடத்திலும் நிற்காமல் வந்த பாதையில் பரபரப்பாய் கிளம்பினாள்.

குணசேகரன் வண்டியை பத்திரமான இடத்தில் நிறுத்தி சைடு லாக் போட்டு சாவியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு சந்தை வாயிலுக்கு வந்த போது, பன்னண்டாங் கிளாஸ் படித்தவளும், பளிச்சென்ற ஒடம்புக்கு சொந்தக்காரியுமான சுகந்தி அந்த இடத்தில் இல்லாதது கண்டு ஒருகணம் தவித்தான். அவள் பெயரை சப்தமிட்டு கூப்பிடலாமென்றால் பதட்டத்தில் அவளின் பெயரும் அவனுக்கு நினைவில் வரமறுத்து விட்டது.

சுந்தரியாய் இருக்குமோ? என்று யோசித்தபடி தலையை தட்டிக் கொண்டான். கட்டிய மனைவியின் பெயரை மறந்த கணவன் உலகத்தில் நான் ஒருவனாய்த்தான் இருப்பேன்! என்று நினைத்தபடி சந்தைக் கூட்டத்தினுள் நுழைந்தான். ஒருவேளை குணசேகரன் வரட்டும் காரியத்தைப் பார்ப்போமென வெங்காயம், தக்கோளி வாங்க சந்தைக்குள், முப்பது நாளைக்கு ஒருமுறை வீடு வளிப்பவளும், மூன்று நாளைக்கு ஒருமுறை சிக்சாம்ப்பால் தலைக்கு குளிப்பவளுமான சுகந்தி நுழைந்திருக்கலாம் அல்லவா? அடுத்த அரைமணி நேரம் சந்தை முச்சூடும் அலசியதில் சுகந்தி, சுமதி, சுந்தரி, இப்படியான பெயர் கொண்ட தன் மனைவியை காணோமென முடிவுக்கு வந்தான் குணசேகரன்.

இரவு தன் பெண்ணுடன் வராமல் தனித்து டிவிஎஸ்சில் வந்திறங்கிய மாப்பிள்ளைய வெறிக்கப் பார்த்தார் மாமனார். விசயத்தை இவன் மெதுவாக திண்ணையில் அமர்ந்து மென்று முழுங்கி ஒருவழியாய் சொல்லி முடித்தான். காது கொடுத்து வாசல் படியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மாமியார் முசுக் முசுக்கென அழ ஆரம்பித்து விட்டார்.

பக்கத்து வீட்டில் குய்யோ முய்யோவென சப்தம் கேட்டது. பலநேரங்களில் பொட்டுக்கடலை சாப்பிடுபவளும், பக்கத்து ஊருக்கு அடையாளம் தெரியாதவளுமான சுகந்திக்கு அவளது தந்தையார் அவளது செல்போனுக்கு தன் செல்போனிலிருந்து அழைப்பு போட்டார். “பொன் அந்தி மாலைப் பொழுது!” என்று எதிர்முனை படித்தது பாட்டு. “அப்போவ்! நானு பக்கத்து வீட்டு சுந்தரு மாமங்கூட வாழப் போயிட்டு இருக்கேன். எனக்கு நீங்க கட்டி வெச்ச குணசேகரனை புடிக்கலை. எங்களைத் தேடாதீங்க!” அவ்வளவு தான்.

உடும்பு மாதிரி ஓடிவருபவனும், நாய் போல குரைப்பவனுமான பக்கத்து வீட்டு சுந்தரு மாமனுக்கு பத்தாப்பு, ஒம்பதாப்பு படிக்கிற, ஒன்னு வயசுக்கு வந்த இன்னொன்னு இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்குற பொண்ணுக இருக்கே! இந்தக் கூறு கெட்டது இப்பிடி ஒரு வேலையை செஸ்சு போட்டுதே!

இருகுடும்பத்தாரும் குறுநகரில் இருந்த காவல் நிலையத்துக்கு ஓடி தங்கள் பிரச்சனைகளை வரிசைப்படுத்திச் சொன்னார்கள். ‘எம்மட வூட்டுக்கார்ரு சொக்கத்தங்கம்! அவதான் காட்டிக் காட்டி சொக்க வெச்சி இழுத்துட்டு ஓடிட்டா’ ‘எம் பொண்ணுக்கு சூது வாது தெரியாதுங்க சார்! அவன் தான் வசியம் பண்டி இழுத்துட்டு போயிருக்கான்’ போன்ற தமிழ் வரிகள் நிலையத்துக்குள் புழங்கிக்கொண்டிருந்தன.

நான்காவது நாள் அவர்கள் வேறொரு ஊரில் பிடிபட்டார்கள் போலீசார் வீசிய வலையில். கோழி அமுக்கு அமுக்கிக் கொண்டு வந்து நிலையத்தில் நிறுத்தினார்கள். சோலைமலை இளவரசியும், சென்னிமலை பெண்மந்தியுமான சுகந்தி ‘வாழ்ந்தால் சுந்தரு மாமன் கூடத்தான்! இல்லைன்னா சாவு தான்’ என்றாள். எப்படியோ பிள்ளை உசுரோட இருந்தால் சரி என்று சுந்தரியின் பெற்றோர்கள் சம்மதம் சொன்னார்கள்.

என் தமிழ் மொழிபெயர்ப்பில் சில குற்றம் குறைகள் இருக்கலாம். இருந்தும் ஓரளவு நான் உணர்ந்தவரை விசயத்தை சொல்லி விட்டேன். அதற்கு காரணம் நான் நூலகராக அவினாசியில் பத்து வருடம் இருந்து வருகிறேன். என் பெயரை சொல்லாமலே என் மொழிபெயர்ப்பை உங்களுக்கு படிக்க்க் கொடுத்திருக்கேன் பாருங்கள். என் பெயர் புலிகேசி. என் தந்தையார் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தவர். அம்மாவும் ஆசிரியப் பணியில் இருந்தவர் தான். வீட்டில் ஒரு ஆசிரியர் இருந்தாலே அவர் பிள்ளை மக்கு என்பார்கள். எனக்கு இரண்டு ஆசிரியர்கள் இருந்ததால் மக்கோ மக்கு நான். என் முதல் மொழிபெயர்ப்பே அதை உங்களுக்கு தெரியப்படுத்தியிருக்கும்.

நான் ஏன் ஒரு பெண் வாழ்வதற்காக பக்கத்து வீட்டுக்காரரை இழுத்தோடிப் போன தகவலை உங்களுக்கு சொல்ல வேண்டும்? ஒரு நல்ல சேதியாய் சொல்லி இருக்கலாமே! என்று நினைக்கிறீர்கள். நல்ல சேதிகள் நாட்டில் நடக்கத்தான் செய்கின்றன என்றாலும் இப்படியான விசயங்களைப் படிப்பதில் தான் மக்கள் ஆர்வமாய் இருக்கிறார்கள். இரண்டு பெண்பிள்ளைகளுக்கு தந்தையான ஒருவனுக்கு மச்சங்களின் பயனால் தான் பக்கத்து வீட்டு சிட்டு மாட்டியிருக்க வேண்டும். காமம் வயது வித்தியாசம் பார்ப்பதில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. காமம் என்ற சொல் எனது மொழிபெயர்ப்பில் காதல் என்று வருகிறது. அப்படிக்கூட நாம் சொல்லலாம்.

என் வயது என்ன என்று நினைக்கிறீர்கள்? கார்த்திகை வந்தால் என் முப்பதாவது பிறந்த நாளை மருதமலையோ, புதுத்திருப்பதியோ போய் சாமி கும்பிட்டு கொண்டாட வேண்டும். எல்லாச் சாமிகளும் கெளரவம் பார்க்கின்றன. ஒடிசலான தேகம் கொண்ட எனக்கு ஒரு காதலியை பெற்றுத்தருமாறு பலவாட்டி முறையிட்டு விட்டேன்.

யோசித்துப் பாருங்கள். பிறந்தநாள் அன்று ஒரு காதலி கூப்பிட்டு ”பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா செல்லம்! அப்புறம் நாம பேசி வச்ச மாதிரி கோவிலுக்கு போயிட்டு நேரா தியேட்டருக்கு போயிடறோம் என்ன? நான் வாங்கிக் குடுத்த ட்ரஸ் தானே போட்டிருக்கே? அம்மா வாங்கிக் குடுத்துதுன்னு போட்டுட்டு என் முன்னால வந்தே, எனக்கு மசக் கோவம் வந்துடுமாமா!” என்று காதால் கேட்க முடியாத நாளெல்லாம் ஒரு பிறந்த நாளா? எல்லாச் சாமிகளும் எனக்கு துரோகம் செய்கின்றன. ஆனால் சுகந்தி மாதிரியான பெண்கள் கெழவாடிகளோடு கூட்டணி போட்டு வாழ்கின்றன! இத்தனைக்கும் என் உடம்பில் மச்சங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கின்றன. மொத்தம் முப்பத்தி ஆறு!

அவினாசி பேருந்து நிறுத்தத்தில் கால்கடுக்க பலமுறை நின்று சலித்து ஜல்லடை போட்டு காதலியை தேடியிருக்கிறேன். ஒருத்தியை மனதுக்கு பிடிக்கிறது என்றால் அவளை பின் எப்போதும் அந்த இடத்தில் நான் காண முடிவதில்லை. நான் நினைக்கிறேன் டெல்லியிலிருந்து எனக்காகவே வந்து தங்கள் முகத்தை காட்டி விட்டு ப்ளைட் பிடித்து போய் விடுகிறார்களோ என்னவோ! இப்படி நடப்பதற்கு உருதுவில் ஒரு பழமொழி சொல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கோ உங்களுக்கோ தான் உருது தெரியாதே! பின் சொல்லி என்ன பயன்?

கல்யாணம் செய்து கொள்வதற்காக காதலியை தேடுபவனுக்கு எந்த நாளிலும் ஒரு பெண் அகப்படுவதில்லை! காரியம் பார்ப்பதற்கும், கூட இழுத்துக் கொண்டு சுற்றலாமென நினைப்பவனுக்கும் காதலிகள் வெகு விரைவில் அமைந்து விடுகிறார்கள். இப்படி தத்துவமென மொக்கைத் தனமாய் எழுதுவதற்கு தான் நான் சரிப்பட்டு வருவேன் போலுள்ளது.

சரி காதல் தான் எனக்கும் வெகு தூரத்தில் இருந்து கொண்டு பற்களை காட்டுகிறதே! விட்டு விடுவோம். அது அம்மா எனக்காக சொந்தத்தில் தேடி பிடித்துக் கொடுத்து விடுவார் ஒரு பெண்ணை. தாலி கட்டிய மனைவியை காதலிப்பவனாக மாறிவிட்டால் போகிறது. நான் வேறொரு விசயத்திற்கு வருகிறேன். சொல்லப் போனால் நான் உங்களை இவ்வளவு தூரம் கூட்டி வந்ததே இந்த விசயத்தை சொல்லத்தான். நான் இப்போது தீட்டிய கத்தியோடு அவினாசி தங்க நாற்கரச் சாலையில் சென்று கொண்டிருக்கிறேன். இப்படி எடுத்தவுடன் சொன்னால் மிரண்டு விடுவீர்கள் என்பதால் தான் சுகந்தி விசயமெல்லாம் சொல்லி உங்களை வலைக்குள் இழுத்துப் போட்டேன்.

இரண்டு நாட்களுக்கும் முன்பாக எனது டிவிஎஸ்சில் தங்கநாற்கரச் சாலைக்கு ஒட்டிய கீழ்ப்பாதையில் நான் சென்று கொண்டிருந்த போது நாய்களின் குரைபொலி கேட்டேன். பொடியான்கள் மட்டைபந்தாடும் மைதானத்தில் நான்கைந்து நாய்கள் ஒரு வித்தியாசமான நாயைப் பார்த்து குரைத்து மிரட்டிக் கொண்டிருந்தன. நாய்கள் என்றால் எனக்கு கொஞ்சம் பயம் ஜாஸ்த்தி தான். இது பலருக்கும் இருக்கிறது. அப்போது மைதானத்தில் பந்தாடும் பொடியான்களும் இல்லை. வெறிச்சோடிக் கிடந்தது.

மாலைவெய்யில் சுள்ளென அடித்துக் கொண்டிருந்தது. ‘இந்த ஏரியாப் பக்கம் வந்துடாதே!’ என்று நாய்கள் கூட்டமாய் அந்த ஒற்றை நாயைப்பார்த்து குரைத்துக் கொண்டிருந்தன என்று தான் விளங்கிக் கொண்டேன். அந்த வித்தியாசமான நாயும் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் “போங்கடா பெரிய இவனுக! பட்டா போட்டு குடுத்த மாதிரி அலட்டிக்கறானுக!” என்று சொன்னபடி நிதானமாய் வந்துகொண்டிருந்தது சாலையை நோக்கி! நில்லுங்கள்! அந்த நாய் பேசியதா என் காதில் விழுந்தது?

எனக்கே சந்தேகமாய் இருக்கவே வண்டியை ஓரம் கட்டி நிப்பாட்டினேன். ஆனால் நிச்சயமாக என் காதில் குரல் கேட்டதே! கொஞ்சம் குழப்பமாயும் இருக்கவே அந்த வித்தியாசமான நாயை நான் உற்றுப் பார்த்தேன். அது என்னவோ முனகிக் கொண்டுதான் வந்து கொண்டிருந்தது என்னை நோக்கி. அந்த நாய் செம்மிக் கலரில் கொஞ்சம் தடிமனாய் இருந்தது. அதன் நடை மட்டும் தான் நிதானமாக இருந்தது இங்கிருந்து பார்க்க!

எதன் காரணமாக அப்படி வித்தியாசமாய் நடந்து வருகிறது என்பது கொஞ்சம் கிட்டே வருகையில் தான் தெரிந்தது! அதற்கு ஐந்து கால்கள் இருந்தன. அதற்கும் எனக்கும் எந்தவித பகையும் இல்லைதான் என்றாலும் நாய்கள் விரட்டி விட்ட கோபத்தில் ஏதாவது என்மீது தாவி விட்டால் விசயம் சிக்கலாகி விடுமென்ற பயமும் எனக்கிருந்தது உள்ளுக்குள்.

அந்த நாய் கிட்டத்தட்ட என்னை நெருங்கி விட்டது. இனி அது முறைத்து உறுமினால் கூட நான் ஓட்டம் தான் எடுக்க வேண்டும். ஆனால் அது அப்படியான எந்த அறிகுறியுமின்றி ஐந்து காலகளால் சிரமப்பட்டு நடந்து வந்து கொண்டிருந்தது. என்ன இருந்தாலும் அதற்கு அந்த ஐந்தாவது கால் சிரமப்படுத்திக் கொண்டுதான் இருந்திருக்க வேண்டும். தன்னையே நொந்து கொண்டுதான் என்னைப்பற்றிய அச்சமின்றி வந்தது. ‘சீக்கிரம் ஒரு சாவு வரமாட்டேங்குது!’

இந்தமுறை உறுதியாய் எனக்கு சப்தம் கேட்டது. நாய் தான் மெலிந்த குரலில் பேசியபடி சாலைக்கு ஏறியது ஒரு ஜம்ப்பில். அதன் வால் நரிகளுக்கு உள்ளது போல அடர்த்தியாய் இருந்தது. மற்ற எல்லா நாய்களும் பொறாமைக் கண்களோடு தான் இதனைப் பார்த்து குரைத்திருக்க வேண்டும். இரண்டு தலைகள் உடைய சில விலங்கினங்களை டிஸ்கவரி சேனலில் நான் பார்த்ததோடு சரி. நான் பார்த்த விலங்கினங்கள் ஆடு, மாடு, பூனை, மயில் என்று தான் இருக்கின்றன. ஒரு யானையை அவினாசி தேர் அன்று அன்னாந்து பார்த்திருக்கிறேன். அதன் தும்பிக்கையில் பத்து ரூபாய் நோட்டொன்றை வைத்து ஆசி வாங்கியிருக்கிறேன். யானைகளை வைத்து தங்கள் வயிற்றுப்பாட்டுக்கு பிச்சையெடுக்க வைத்த பாகனை குனிய வைத்து குத்த யாரும் முயற்சிப்பதில்லை.

எனது வண்டியின் அருகே வந்த நாய் டயரை முகர்ந்து பார்த்து விட்டு பின்னங்கால் ஒன்றை உயர்த்துகையில் அதன் வயிற்றுப்புறமாக இருந்த அந்த ஐந்தாவது காலும் உயர்ந்தது. நான் உற்றுப் பார்ப்பதை பார்த்து இரண்டு முறை பீய்ச்சிவிட்டு கால்களை இறக்கிக் கொண்டது. மேலே சாலையில் வாகனங்கள் வினோத ஒலியுடன் கடந்து சென்று கொண்டிருந்தன.

“வண்டி டயர் மேல பிஸ் அடிச்சாத்தான் பிஸ் அடிச்சா மாதிரி இருக்குமா?” என்றேன் நான் அதனை பார்த்தபடியே!

“பழக்க தோசத்துல பண்ணிட்டேன் மன்னிச்சுக்க தலைவா!” என்றது அது. எனக்கு கைமுடிகள் எல்லாம் நேருக்கு நின்றன என்று சொன்னால் நம்புங்கள். உலகில் பேசும் நாயுடம் பேசும் மனிதன் நானாகத்தானிருப்பேன் என்று நினைக்கிறேன். இதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் தானே! இதற்கெல்லாம் கொடுப்பினை இருக்கிறது ஆனால் அவினாசி பேருந்து நிறுத்தத்தில் தான் எனக்கு முக்கியமான கொடுப்பினை இல்லை. இனி பேச்சுக் கொடுக்காவிட்டால் நகர்ந்து போய்விடுமே என்று நினைத்தேன். ஊடு போய் எனத்தை வெட்டி முறிக்கப் போகிறேன்? சித்த நேரம் பேசுவோமே பேசும் நாயிடம்!

“அந்த நாய்கள் எல்லாம் உன்னை விரட்டி விட்டுதுகளே ஏன்?” என்றேன்.

“அங்க நான் போயிருக்க கூடாது தலைவா! அது அவங்க ஏரியா! நான் அன்னூர்க்காரன். அங்க எனக்கு எந்த மதிப்பும் மருவாதியும் இல்லங்கறதால ஊரை விட்டு கிளம்பி பல மாசம் ஆச்சு!”

“அவங்க ஏரியாவ இருந்தாலும் நீ என்ன நிரந்தரமாவா அங்க தங்கப்போறே?”

“அப்படி இல்ல தலைவா! இப்ப நீ போய் பக்கத்து வீட்டுல புகுந்து பாய் போட்டு படுத்துக்க முடியுமா? அது மாதிரி தான். இது புரட்டாசி மாசம்! ஆனா எனக்கு எந்த பிரயோசனமும் இல்ல”

“ஓ! புரட்டாசி மாசமா? அதான் எல்லாம் கூட்டமா இருக்குதுகளா? ஆமா உன்னால முடியாது தான். பார்த்தாவே தெரியுது.” என்றேன்.

“ஆமா தலைவா! இந்த நடுப்புறத்துல இருக்குற காலு எனக்கு ரொம்ப இடைஞ்சலா இருக்குது! கடவுள் எனக்கு மட்டும் இப்படி பண்ணிட்டான்! அவனுக்கு என் கவலைகள் எங்க புரியப் போவுது! தாண்டுக்கால் போட முடியல! சொந்த ஊர்ல குண்டு போடறாங்க மனுசங்க!”

“குண்டா? நீ என்ன சொல்றே? அன்னூர்ல குண்டு போடறாங்களா?”

“ஆமா தலைவா! அவங்க பாக்குறப்ப நான் ஒதுங்கித்தான் போறேன். ஆனா கல்லெடுத்து சுடேன்னு வீசுறாங்க! அந்த ஊர்ல மட்டும் தான்னு நெனச்சு கருவலூர் வந்தேன். அங்கேயும் குண்டு போடறாங்க! உங்களை எதிர்த்து ஒரு நாயான நான் என்ன செஞ்சுட முடியும்? போக என்னால ரொம்ப வேகமா இந்த கால்களை வச்சுட்டு ஓடவும் முடியறதில்ல! புலம் பெயர்ந்து இப்ப மலேசியா வந்துட்டேன் போல!”

“இல்ல தப்பு! இது அவினாசி. நீ இப்ப அவினாசில இருக்கே!”

“எந்த ஊருக்கு போனா எனக்கு பிரச்சனைகள் இருக்காதுன்னு நீங்க நினைக்கீங்க தலைவா? சொந்த இனமே என்னைப் பார்த்து வெறுக்குற நிலையில இருக்கேன். கடவுளுக்கு தினமும் சாபம் குடுக்குறேன். என் சாபத்தால கடவுளுக்கு ஒரு தீங்கும் நடக்குறதில்ல! சிலசமயம் நான் நினைக்கிறேன் தலைவா, என்ன நாய்ப்பொழப்புடா இதுன்னு! நல்ல நாய்களுக்கு காலமில்ல போல!”

“எந்த ஊருக்குப் போனாலும் உன் பிரச்சனை தீராதுன்னு தான் நினைக்கிறேன்”

“அப்ப இந்த உலகத்தில நான் வாழ வழியில்லைன்னு சொல்றீங்களா தலவா?”

“ஒரு வழி இருக்கு! யாராச்சும் உன்னை வீட்டுக்கு கூட்டிப்போய் காவலுக்கு வளர்த்தணும். என் வீட்டுல ஏற்கனவே டைகர் இருக்கான் காவலுக்கு!”

“இல்ல தலைவா! நீங்க வாழ வழி சொல்லலை. மூனுவேளை சோத்துக்காக ஒரு குடும்பத்துக்கு வாலை ஆட்டச் சொல்றீங்க! அது என் இயல்புக்கு ஒத்து வராதுங்க தலைவா! நா வேற மாதிரி! பறந்து விரிஞ்ச இந்த தேசம் முழுசும் என்னோடதுன்ற நினைப்புல போயிட்டிருக்கேன். கெடச்சதை சாப்பிடறேன், சிலவேளை பட்டினி கிடக்கேன். இடம் கண்ட பக்கம் சுகமா தூங்குறேன். தலைவா! நான் ஒன்னும் தப்பா சொல்லலையே!”

“இல்ல சரியாத்தான் சொல்லுறே! உன்னோட இப்போதைய பிரச்சனை என்ன? சொல்லு என்னால முடிஞ்சா உனக்கு உதவுறேன்” என்றேன்.

“ஆஹா! அந்தக் கடவுள் என் வேண்டுகோளை நிறைவேத்தத்தான் உங்களை அனுப்பியிருக்கோணுமுன்னு தோணுதுங்க தலைவா! ஒரு கடவுளைப் போலவே என்னைப் பார்த்து இப்போதைய பிரச்சனை என்ன? அப்படின்னு கேட்டுட்டீங்க! என் வயசு அஞ்சு முடியப் போவுதுங்க தலைவா! இன்னும் மீறிப்போனா ஏழு எட்டு வருசம் நான் இருப்பேன்னு நினைக்கேன். ஒவ்வொரு வருசமும் புரட்டாசி மாசத்துல நான் ரொம்ப வேதனைப்படறேன் தலைவா! கடவுளை வருசத்துல இந்த மாசத்துல மட்டும் தான் அதிகம் வாய்க்கு வந்தபடி திட்டுறேன். என் சந்தோசத்தை தடுக்கறக்கு கடவுள் போட்ட தடை தான் இந்தக் கால்! இது இல்லைன்னா நான் சந்தோசப்படுவேன்! டேய் அருண்! உனக்கு அதிர்ஷ்டம் வந்தாச்சுடா!’

“யாரது அருண்? இங்க நாம ரெண்டுபேரு தான இருக்கோம்?”

”அருண்கறது எனக்கு நானே வச்சிக்கிட்ட பேரு தலைவா! நான் ஒரு தெருநாய். எங்க பொறந்தேன் எப்படி வளர்ந்தேன்னெல்லாம் ஒன்னும் ஞாபகத்துல இல்ல! எனக்கு கூட பிறந்தவங்க எத்தனை பேருன்னு கூட தெரியாது! என் தாய் உயிரோட இருக்காளா செத்துப் போயிட்டாளா? அவளும் என்னை மாதிரியே செம்மி கலரா? என் கூடப்பிறந்தவனுகளுக்கு அஞ்சு காலு இருக்கா? இப்படி எத்தனை கேள்விகள் இன்னி வரைக்கும் எனக்குள்ள ஓடிட்டே இருக்குது தலைவா! ஒரே உதவி! ஆமா! இந்த வயிற்றுக்கிட்ட இருக்குற கால் எனக்கு வேண்டாம் தலைவா!”

“அதை கத்தி வச்சுத்தான் வெட்டணும் அருண்”

“ஆஹா! எங்கே தலைவா இன்னொரு முறை அழகாய் சொல்லு என் பெயரை! எனக்கு நானே வைத்துக் கொண்ட அழகான பெயர்! கேட்க இனிமையாக இருக்கிறது.”

“காலை கத்தி வெச்சுத்தான் வெட்டணும் அருண். ரொம்ப வலிக்குமே!”

“இந்த அஞ்சு வருசமா நான் படற வலியை விட அது ஒன்னும் பயங்கரமா இருக்கப் போறதில்ல தலைவா! வீட்டுக்குள்ள நுழையிற எங்க ஆட்களை வாலை நறுக்கி விடறீங்கள்ள! அதுமாதிரித் தான் இதுவும்னு நினைக்கேன். தலைவா உன் வீடு வரவா இப்போது நான்?”

“இல்லை வேண்டியதில்லை! ஒரு பத்து நிமிடம் இங்கேயே நீ காத்திரு அருண். நான் கத்தியோடு வருகிறேன்” நான் டிவிஎஸ்சை ஸ்டார்ட் செய்தேன்.

“நான் மனிதர்களை நம்புகிறேன். மனிதர்களில் ஒருசிலர் கடவுளாக வாழ்கிறார்கள்” என்ற அருண் என்கிற ஐந்து கால் நாய் சாலையோரமாக சாய்ந்து படுத்தது!

வீடு வந்த நான் அம்மாவிடம் ஒன்றும் சொல்லாமல் கத்தியை எடுத்துப் போய் டிவிஎஸ்சில் செருகினேன். யாரையாவது போட்டுத்தள்ள கிளம்புகிறானோ? என்ற ஐய்யப்பாட்டுடனே அம்மா பார்த்தது என்னை! பாருங்கள் அவசரத்திலும் எனக்கு ஒன்று தோன்றியது. அது கட்டை மாதிரி ஒன்று வேண்டுமல்லவா காலை வைத்து தறிப்பதற்கு? சின்னதாக ஒரு விறகுக் கட்டையை டிவிஎஸ்சில் கால்புறத்தில் வைத்து காலால் அழுத்திக் கொண்டே நான் அருண் படுத்திருந்த இடம் நோக்கி வந்து சேர்ந்தேன். அருண் என்னைக் கண்டதும் எழுந்து வாலை ஆட்டி குஷியாய் குதித்து “வருக தலைவா!” என்றது.

“நாம அப்படி ஓரமாய் காட்டுப்புறத்திற்கு சென்று விடுவோமா?” என்ர அருண் தென்புறமாய் மீண்டும் மைதானத்துக்குள் இறங்கியது. நான் சாலையை ஒருமுறை தூரம் வரை பார்த்து விட்டு கையில் கட்டையையும் கத்தியையும் எடுத்துக் கொண்டு மைதானத்துக்குள் இறங்கினேன். அருண் ரொம்பவே அவசரப்பட்டது! கட்டையை கீழே போட்டு மிகச் சரியாய் வெட்ட வாகாய் கால் வைத்து படுக்கும்படி சொன்னேன். அது அப்படியே படுத்து “சீக்கிரம் முடி தலைவா!” என்றது.

அதன் வால் உள்புறமாய் சுண்டு கிடந்தது! பயத்தில் இருக்கும் நாய்கள் வாலை சொறுவிக் கொள்வது போலவே! அது வெட்டுவதற்கு வாகில்லாமல் இருந்தது.

“வாலை வெளியில் சுதந்திரமாக விடு அருண். கத்தி தவறினால் உனக்கு வால் போய் விடும்!” என்றேன்.

“மன்னித்துக் கொள் தலைவா! என்ன இருந்தாலும் சற்று பயமாகத்தான் இருக்கிறது எனக்கு. எதையோ இழக்கப் போகிறேன் என்று படபடப்பாய் இருக்கிறது. தயவு செய்து ஒரு வெட்டில் தனித்து கிடப்பது போல் பார்த்துக் கொள் தலைவா! இரண்டாம் வெட்டுக்கெல்லாம் தாங்க மாட்டேன் நான்! இதோ என் கண்களை நான் மூடிக் கொள்கிறேன்.”

எனக்கு வசதி கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது ஒரு வெட்டு போடுவதற்கு! தவிர ஒரே வெட்டில் கால் தனித்து வந்து விடவேண்டும் என்பது உண்மைதான். எனக்குள்ளும் கத்தியை ஓங்கும் பொழுது படபடப்பு கூடிக் கொண்டது. இதோ ஒரே வெட்டு! அடுத்த கணம் என்ன நடந்ததென்றால் அருண் வலியால் ‘கைக்கைக்கை’ என ஓலமிட்டபடி எழுந்து வட்டமடித்தது போல கண்ணு மண்ணு தெரியாமல் மைதானத்தில் ஓடியது! சொன்னது மாதிரி ஒரு வெட்டு தான். விறகுக் கட்டைக்கு அருகில் அந்த ஐந்தாவது கால் ரத்தம் சிந்திக் கொண்டு கிடந்தது. திரும்ப வெகு வேகமாக ஓடி வந்த அருண் என்னைப் பார்த்து குரைத்து விட்டு சாலைக்கு ஏறி நேர் கிழக்கே ஓடியது! நான் கத்தியிலிருந்த ரத்தத்தை கொலுஞ்சி செடியில் துடைத்தேன்.

– செப்டம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *