அமைதியின் குரல்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,497 
 

இரும்பாலை பணியாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக அமைந்திருந்தது, அமுத சுரபி மேல்நிலைப்பள்ளி.

சுற்றிலும் உயரமான மதில் சுவர், முகப்பில் பெரிய இரும்புக்கதவு, உட்புறம் அழகான வடிவமைப்பில் சின்ன வகுப்பறைகள், ஒரு ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் என, அத்தனை வசதிகளும் ஒருங்கே இடம் பெற்று, மாணவர்களுக்கு கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டுகிற அமைதியான சூழலோடு காணப்பட்டது.

அமைதியின் குரல்!

எல்லாரது குழந்தைகளுக்கும், தரமான கல்வி அளிக்க வேண்டும் எனும், உயரிய குறிக்கோளோடு உருவாக்கப்பட்ட அருமையான பள்ளிக்கூடம் அது. அலுவலர்களும், தொழிலாளர்களும் வசிக்கிற நகரியத்தின் எல்லையில், மாணவர்கள், எவ்வித தொந்தரவும் இல்லாமல் சென்று, கல்வி கற்று, வீடு திரும்பும் வகையில் பள்ளி அமைந்திருந்தது.

உணவு இடைவேளை நேரம். மதியம், 1:00 மணி.

வாசலில் நிழலாடியது.

மூக்குக் கண்ணாடியை கழற்றியவாறு, யாரென்று ஏறிட்டுப் பார்த்தார் தலைமையாசிரியர் சதாசிவம்.

“வணக்கம் ஐயா!”

“குட் ஆப்டர்நூன் சார்!”

ஆளுக்கொரு விதமாய் வணக்கம் சொல்லி, பவ்யமாக நின்றனர். வானதி, பீட்டர், கணேசன், அகமது என, 11ம் வகுப்பு மாணவ – மாணவியர்; கிட்டத்தட்ட, 15 பேர்.
“வணக்கம்… இன்னைக்கு நடத்திய பாடங்கள் எல்லாம் புரிஞ்சுதா?” வினவினார் சதாசிவம்.

“கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ்ல எல்லாமே புதுப்பாடம் சார்… நல்லா கவனிச்சோம்!” அவர்களின் சார்பாக, பதில் தந்தாள் வானதி.

“வெரிகுட்… வீட்டுக்குப் போய் மறுபடியும் வாசிச்சு, மனசிலே ஏத்திக்கணும். நீங்க எல்லாரும், பிளஸ் 2வில் நிறைய மார்க் எடுக்கணும்கிறதுதான் உங்கிட்டேயிருந்து என்னுடைய எதிர்பார்ப்பு!” வாஞ்சையோடு கேட்டுக் கொண்டார்.

ஒருமித்த குரலில், “சரிங்க சார்… கண்டிப்பாக சார்!” என்றனர்.

மாலை வகுப்புகள் மற்றும் விளையாட்டுப் பயிற்சி முடிந்து, எல்லா மாணவ – மாணவியரும் பள்ளியை விட்டு வெளியேறிய சமயம், தலைமையாசிரியரின் அறைக்குள், “திமு திமு’வென வெள்ளைச்சட்டை – வேட்டியில், 10 பேர் நுழைந்தனர்.

“வாங்க, வாங்க… உட்காருங்க!” இன்முகம் காட்டி வரவேற்றார் சதாசிவம்.

உதவியாள் எடுத்து போட்ட மடக்கு நாற்காலியில் அவர்கள் அமர்ந்தனர்.

கூட்டமாக வந்த அவர்களை கண்டதும், ‘அடடா… இன்னைக்கும் வந்திட்டாங்களே… ஹெட்மாஸ்டரை மிரட்டுவாங்களே… என்ன நடக்கப் போவுதோ…’ எக்கச்சக்க கவலையுடன் வாசலருகே குழுமினர் பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர், ஆசிரியைகள்.

“நீங்க எதுக்கு வர்றீங்க… கவலைப்படாமல் வீட்டுக்கு போங்கள்; நான் சமாளிச்சிக்கிறேன்,” சிரித்தவாறு, சக ஆசிரியர்களை, அன்போடு வேண்டி, கேட்டுக் கொண்டார் சதாசிவம்.
அரைகுறை மனதோடு, தயக்கத்துடன் அவர்கள் நகர்ந்தனர்.

“நேரிடையாக விஷயத்துக்கு வந்திடறோம்… எங்களை சாதாரண ஆளுங்கன்னு நினைச்சிட்டீங்களா… இவ்வளவு பேரும் ஒண்ணா சேர்ந்து, உங்ககிட்ட கேட்டுட்டோம். நீங்க பாட்டுக்கு அலட்சியமா இருக்கிறீங்களே… பள்ளிக்கூடம் திறந்து, ஒரு வாரம் ஆவுது… இன்னும் எங்களுக்கு நல்ல பதில் வரலையே! இந்த வருஷம் நீங்க கண்டிப்பாக சம்மதிக்கணும். பேக்டரி எம்.டி.,கிட்டே கேட்டோமே… அவரு உங்ககிட்டே சொல்லலையா?” ஆளுக் கொன்றாக சரமாரிக் கேள்விகளை எழுப்பி, முறைத்தனர்.

“கோபம் வேண்டாம்… நான் ஏற்கனவே என் முடிவைத் தெளிவாக சொல்லியாச்சு. அதன் பிறகும் நீங்க வற்புறுத்த வேண்டாமே… அதுக்கு மாற்றாக நல்ல யோசனையும் சொன்னேன். அந்த காரியத்தை சீக்கிரம் ஆரம்பிச்சிடுங்க; காலம் கடத்தாதீங்க,” கறாராய் பதில் அளித்தார் சதாசிவம்.

“ஓஹோ… அப்படியா… நன்கொடையை அதிகமாக அள்ளித் தர்றோம்ன்னு சொல்றோமே… பிறகென்ன, ரொம்பத்தான் பிகு பண்றீங்க?” குரல் உயர்த்தினர்.

“சத்தம் போடாதீங்க… ஒரே பதிலை எத்தனை தடவை சொல்றது. இனி என்னால் எதுவும் செய்ய முடியாது.”

“ஹெட்மாஸ்டரே… அதிக ஆட்டம் போடறீங்க… பின் விளைவைச் சந்திக்க வேண்டியிருக்கும்; உங்க வேலைக்கு ஆபத்து வந்திடும்,” கண்களை உருட்டி, மிரட்டினர்.

“அதைப்பத்தி பயமில்லை… உங்க பணம் தேவையில்லை. அதை கொடுத்து, வேற எங்கேயாவது முயற்சி செய்துக்குங்க. நீங்க போகலாம்,” அமைதி வார்த்தைகளால் அறிவுறுத்தினார்.

“இனி, உங்ககிட்ட பேசி புண்ணியம் இல்லை வாத்தியாரே… எங்கே, யாரை பார்க்கணும்ன்னு எங்களுக்குத் தெரியும். அங்கேயிருந்து ஆர்டர் போட வைக்கிறோம். <உங்களுக்கும் சேர்த்து வேட்டு வச்சாத்தான், சரிபட்டு வருவீங்க…” அவர்களிடமிருந்து ஆவேசம் பொங்கிற்று.

“நீங்க எங்கே வேணும்னா<லும் சொல்லிக்குங்க… என்ன வேணும்னாலும் செஞ்சுக்குங்க. அதைப் பத்தி இந்த சதாசிவம் கவலைபடப் போவதில்லை,” தீர்க்கமாகக் கூறி, எழுந்து நின்றார்.
“சதாசிவம், வெகு சீக்கிரத்தில், “சாதாசிவமாக’ ஆகப் போவது நிச்சயம்!”

கிண்டலாய்க் கூறி, கடுப்புடன் அகன்றனர்.

அடுத்த நிமிடம் —

பக்கத்து அறையிலிருந்து புறப்பட்டு, தலைமையாசிரியரின் அறைக்குள் நுழைந்தனர் சக ஆசிரியர்கள்.

புருவம் உயர்த்தி, மிகுந்த ஆச்சரியத்தோடு அவர்களை நோக்கினார் சதாசிவம்.

“நீங்க எப்படி இங்கே… அப்பவே உங்களையெல்லாம் வீட்டுக்குப் போகச் சொன்னேனே,” விழித்தவாறு கேட்டார்.

“எப்படி சார் மனசு வரும். நாமெல்லாம் ஒரே குடும்பம்… நீங்க குடும்பத் தலைவர்… உங்களை அவங்க ஏதாவது வம்புக்கு இழுத்தால், நம்ம தரப்பில் உள்ள நியாயத்தைச் சொல்லி, உங்களுக்கு உதவலாமேன்னுதான் அடுத்த ரூமில் காத்துக்கிட்டிருந்தோம். பிடி கொடுக்காமல் உறுதியான முடிவைச் சொல்லி, நீங்களே துரத்திட்டீங்க!” தோழமை பொங்க கூறினர்.

அவர்களின் அந்தச் செயல் கண்டு, நெஞ்சம் நெகிழ்ந்தார் சதாசிவம். “அவர்களின் துணை இருக்கும் போது, இனி அஞ்சத் தேவையில்லை!’ மனதில் நம்பிக்கை கூடியது.

மறுநாள் காலை —

மைதானத்தில் மாணவ – மாணவியர், வகுப்பு வாரியாக நேர்க்கோடு போட்டது போல, வரிசையாக நின்றனர். ஒரு மாணவி, இனிய குரலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட, எல்லாரும் கூட்டாகப் பாடினார்; இன்னொரு மாணவன் அன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வுகளை, செய்தித்தாள் குறிப்புகள் மூலம் கணீரென்று வாசித்தான்.

தலைமையாசிரியர் சிற்றுரை முடிக்க, பிறகு நாட்டுப்பண் ஒலிக்க, காலை அணிவகுப்பு நிறைவேறிற்று. அனைவரும் அமைதியாக வகுப்பறை நோக்கிச் சென்றனர்.

தன் அறைக்குச் சென்று, சதாசிவம் அமரப் போன தருணம், முகப்பில் ஒரு வாகனம் உறுமலுடன் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு ஆசாமி இறங்கி வந்து, சதாசிவத்துக்கு வணக்கமடித்து, ஒரு பழுப்பு உறையை நீட்டினார். அதை வாங்கிப் பிரித்துப் படித்ததும், சதாசிவத்துக்குக் கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது. உதவியாளரிடம் தகவல் கூறிவிட்டு, அந்த ஆசாமியோடு, நடந்து போய் வாகனத்தில் உட்கார்ந்து கொண்டார்.

வாகனம் நகரம் நோக்கி சாலையில் வளைந்து, நெளிந்து, விரைந்தோடிச் சென்று, நின்ற இடம் கல்வி அலுவலர் அலுவலகம்.

‘ரத்தினவேல் கல்வி அலுவலர்!’ பெயர் மற்றும் பதவி பொறித்த பலகை கதவில் தொங்கியது.

முதலில் வண்டியிலிருந்து குதித்த ஆசாமி, கதவைத் திறந்து உள்புறம் போய், கல்வி அலுவலரிடம் எதையோ சொல்லிவிட்டு திரும்பி வந்தார்.
“நீங்க ஐயா…” கும்பிட்டார் சதாசிவம்.

“வாங்க சார்… உட்காருங்க!” என்று வரவேற்றவாறு, அருகில் நின்ற உதவியாளரிடம், “நான் சொல்ற வரைக்கும் வேறு யாரையும் உள்ளே அனுப்பாதீங்க,” கட்டளையிட்டு அனுப்பினார் ரத்தினவேல்.
அவர் எதிரில் இருந்த பாலிமர் நாற்காலியில் அமர்ந்தார் சதாசிவம்.

“என்ன இது… மத்த பள்ளிகளைப் பத்தி எந்த புகாரும் வரலை. ஆனால், உங்களைப் பத்தி குறை சொல்லி அடிக்கடி முறையிடறாங்களே… அதிசயமாக இருக்கே… போன வருஷமும் இதே போல நிறைய ரிப்போர்ட்கள்… விசாரிக்கறேன்னு மழுப்பி அனுப்பிட்டேன். ஏன் இப்படி பிடிவாதம்?” சரவெடியாக கேள்விகளை அடுக்கினார் கல்வி அலுவலர்.

“உண்மைதான் சார்… பள்ளி நலனுக்காக நான் கொஞ்சம் கண்டிப்போடு நடந்துக்கிறேன். மற்றபடி வேறு எந்த தவறும் செய்யலை சார்…” பவ்யமாகக் கூறினார்.

“உங்க பேக்டரி முதலீட்டில், அரசு உதவியோடு இயங்கும் பள்ளி. அங்கே வேலை செய்றவங்க பிள்ளைகளின் படிப்புக்காகத்தான் மேல்நிலைப்பள்ளியை ஆரம்பிச்சாங்க. நகரிய பிள்ளைகளுக்கு ஒதுக்கியது போக, மீதியைச் சுற்று வட்டாரத்திலிருந்து கொஞ்சம் பேருக்கு மட்டும் அனுமதிக்கலாம்ன்னு ஒப்புக்கிட்டோம்…

“அதுக்காக, கூடுதலாக கட்டணம்ன்னு நிபந்தனை… ஒரு பிரச்னையுமில்லாமல் சிவனேன்னு போயிட்டிருந்தது… திடீர்ன்னு இப்போ உங்களால தகராறு கிளம்பியிருக்கு… ஒண்ணும் பேசாமல் வழக்கம் போல கட்டணத்தை வாங்கிட்டு, சேர்த்துக்க வேண்டியதுதானே … வீணாக எதுக்கு முரண்டு பிடிக்கணும்…” சூடாகச் சொற்கள் குதித்து விழுந்தன.

“அது மட்டும் முடியாது சார்… இதுக்கு சம்மதிக்க மாட்டேன்!” சன்னமான குரலில் அழுத்தம், திருத்தமாக விடையளித்தார் சதாசிவம்.

“பள்ளிக் கட்டட நிதின்னு நன்கொடை வேற தர்றேன்கிறாங்க… நமக்கு லாபம் தானே!”

“இவ்வளவு நாளாக அந்த நன்கொடை பணத்தை வாங்கிட்டு, சில மாணவர்களை அனுமதிச்சது உண்மை தாங்க… நல்லா படிப்பாங்கன்னு நினைச்சோம். ஆனால், அந்த பணக்கார வீட்டு பசங்க, இங்கே வந்து சேந்தும் கூட திருந்தலை. செல்லமாக வளர்ந்ததால், திமிர் பிடிச்சு போய் ஒழுங்கா படிக்கல. தேர்விலே தேறலை. அதனாலே, பிளஸ் டூ ரிசல்ட், நூறு சதவீதத்திலிருந்து, தொண்ணூறாக குறைஞ்சிடுச்சு…

“பணத்தைக் காட்டிச் சேர்ந்திட்டா மட்டும் போதுமா… முழு ஈடுபாட்டோட கஷ்டப்பட்டு படிச்சு தேறணும்கிற எண்ணம் அவங்ககிட்டே துளிகூட இல்லை. அவங்களால நம்ம பள்ளியின் நல்ல பெயர் கெட்டு விடும். அதனாலே தான் நான் போன வருஷத்திலிருந்து அப்படிப்பட்ட பணக்கார மாணவர்களை அனுமதிக்கலை…

“அதுக்கு மாறாக தரமான பள்ளியில் சேர்ந்து, நிறைய மார்க் வாங்கும் ஏக்கத்தில் இருக்கிற, ஏழை மாணவர்களுக்கு கல்வி போதிக்கலாம்ன்னு முடிவெடுத்து, கடந்த வருஷத்திலிருந்து அதை நடைமுறைப் படுத்திட்டிருக்கோம் சார்…”

“கூடுதலாக தொகை நன்கொடையாக வரும் போது, நமக்கு நன்மைதானே… அதுக்கு ஏன் முட்டுக்கட்டை போடணும்?” வாதிட்டார் அலுவலர்.

“அப்படி பணபலம் உள்ளவங்க, அதிகமாக நன்கொடையை வாரியிறச்சு, செல்வாக்கைக் காட்டி, பக்கத்து டவுனில் இருக்கிற பெரிய பள்ளிகளில் தாராளமாக சேர்த்து, அவங்க விருப்பத்தை சுலபமாகச் சாதிச்சுக்கலாமே… பத்தாம் வகுப்பிலே குறைவான மார்க் எடுத்ததால், அங்கிருந்து வலுக்கட்டாயமா வெளியேத்தப்பட்ட பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுத்தால், நமக்குத்தான் ஆபத்து.

“இங்கே இடம் கிடைச்ச மிதப்பிலே, அவங்க நல்லா படிக்க மாட்டாங்க. ரிசல்ட் திடீர்ன்னு சரிஞ்சிடும். நம் பள்ளியின் பேரைக் கெடுத்துக்க வேணாம்ன்னுதான் சம்மதிக்கலை!” தைரியத்தோடு எடுத்துரைத்தார்.

“ஏற்கனவே ஏழ்மை… வருமானத்துக்கு வழியில்லை… அப்புறம் இதுக்கு கூடுதல் பணம் கட்டி, படிக்க எப்படி முடியும்?” கிடுக்குபிடி போட்டார் ரத்தினவேல்.

“சரியான கேள்வி… அதுக்கும் நானே ஒரு வழி கண்டுபிடிச்சேன்…” சிறிது நேரம் இடைவெளி தந்தார் சதாசிவம்.

அவரைப் புதிராய் பார்த்தார் கல்வி அலுவலர்.

“ஆமாம் சார்… அவங்களோட விண்ணப்பங்களை கவனமாகப் படிச்சிப் பார்ப்போம். அந்தந்த கிராமங்களுக்குப் போய், அவங்க படிச்சிட்டிருந்த உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்கிட்டேயும், பசங்களோட பெற்றோர்கிட்டேயும் அந்த மாணவ – மாணவியரைப் பத்தி குறை – நிறைகளை விசாரிப்போம். அதிலே எந்தக் குறையுமில்லாத, பத்தாம் வகுப்பில் அதிக மார்க் வாங்கிய, ஒழுங்காகப் படிக்கிற ஆர்வமுள்ள, 15 பேரை தேர்வு செய்துதான் சேர்த்துக்கிறோம்; அவங்ககிட்டேயிருந்து கட்டணமும் வசூலிக்கிறதில்லை…”

“அப்படியா?” குழப்பமடைந்து, நெற்றிச் சுருக்கினார்.

“வறுமைச் சூழலை பலவீனமாக எடை போட்டு, அவங்களோட அறிவையும், திறமையையும் பாழாக்க நினைப்பது சரியல்ல ஐயா… இதுக்கு தீர்வாக நானும், சக ஆசிரிய – ஆசிரியைகளும் எங்கள் பங்காக ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, அவங்களோட கல்விக் கட்டணத்தைக் கட்டிட்டோம்…” உணர்ச்சி மிளிரக் கூறினார்.

இதைக் கேட்டதும், ரத்தினவேலுவின் முகம், வியப்பின் உச்சிக்குப் போயிற்று; உடம்பு, உள்ளமெல்லாம் சிலிர்த்தது.

“அதுமட்டுமில்லை சார்… இன்னொரு சேதியும் சொல்லிடறேன்… அந்த மாணவ – மாணவியர், 15 பேரும், பரம ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. காலையில் பழைய சோறு சாப்பிட்டு வருவதோடு சரி; மதியம் பட்டினி. 4:00 மணிக்கு பள்ளி முடிஞ்சதும், ஸ்பெஷல் கோச்சிங் வகுப்புக்கும் போறாங்க…

“அவங்க நாள் முழுதும் வெறும் வயித்தோட இருக்கிறதைப் பார்த்ததும், எங்களுக்கு மனசு பதறிடுச்சு. அதுக்கும் ஒரு யோசனையைத் தேடினோம்… இப்போ ஆசிரியர்கள் எல்லாரும் அவங்களுக்கும் சேர்த்து சாப்பாடு தயார் செய்து, தனி அடுக்கில் வைத்து, தினமும் கொடுக்கிறோம் சார்… இந்த விஷயம் யாருக்கும் தெரியாது… இதை தற்பெருமைக்காகச் சொல்லலை… இவ்வளவு தூரம் விசாரணை வரை வந்திட்ட பிறகு, உங்ககிட்டே மறைக்க விரும்பலை… தயவு செஞ்சு, நீங்க யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க சார்…” கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

“சபாஷ்… ரொம்ப நல்ல காரியம்!” நெஞ்சம் நெகிழ்ந்து முகம் மலர்ந்தார் ரத்தினவேலு.

மறுபடியும் பேசலானார் சதாசிவம்…

“இந்த ரெண்டு காரியத்தையும், இனிமேல் தொடருவதுன்னு உறுதி எடுத்திருக்கோம் சார். மிதிவண்டி, சீருடை, புத்தகத்தை அரசாங்கம் இலவசமாகத் தந்திட்டிருக்கு… பிறகென்ன, எந்த வித கவலையுமில்லாமல், சிந்தனை சிதறாமல் அவங்க நல்லா படிக்கிறதுக்கு, அருமையான வாய்ப்பு. கடந்த ஆண்டு பிளஸ் ஒன் சேர்ந்து படிச்சு, பரிட்சை எழுதின அந்த, 15 பேரும், 90 மார்க்குக்கு மேல் எடுத்திருக்காங்க…

“இன்னும் கடினமாக உழைச்சு, படிச்சாங்கன்னா, பிளஸ் 2வில் இன்னும் அதிக மார்க் கிடைப்பது நிச்சயம். ஏழைகளின் எதிர்காலம் ஒளிமயமாக அமையறதுக்கு, இப்படி ஒரு வழியை உண்டாக்கி, அதை அமல்படுத்த களம் இறங்கிட்டோம்… இனி, பின் வாங்குவதாக இல்லை; இப்போ நீங்கதான் தீர்ப்பு சொல்லணும்,” பணிவாக கூறி முடித்தார்.

“பலே… பலே அருமையான சேவை. இப்போ முழு விவரமும் தெரிஞ்சுகிட்டேன்… எல்லாம் புரிஞ்சு தெளிவாயிட்டேன். இனி, உங்களுக்கு நானும் உறுதுணையாயிருக்க சபதம் எடுத்திட்டேன். என் பங்குத் தொகையும் இனி உண்டு… ஏராளமான எதிர்ப்புக்கிடையே, போராடி ஜெயிச்சிட்டிருக்கீங்க… தொடர்ந்து இந்த சேவையை செய்யுங்க…

“ஏற்கனவே கடந்த வருஷம், பலமுறை முயற்சி செய்து, அந்த பெரிய புள்ளிகள் ஒண்ணும் செய்ய முடியாமல் தோத்துத் திரும்பிட்டாங்க… இந்த வருஷம் ரெண்டு, மூணு தடவை முட்டி மோதிப் பார்ப்பாங்க… நீங்களும், நானும் இழுத்தடிப்போம்… யார் சிபாரிசு செஞ்சாலும், காதிலே வாங்கிட்டு, கண்டுக்காமல் இருப்போம். அப்புறம் சலிப்பாகி அடங்கிடுவாங்க. ஆவேசக்குரல் கொல்லும்; ஆனால், அமைதிக்குரல் எப்போதும் வெல்லும்!

“இந்த சிறந்த செயலைத் தொடருங்கள் மிஸ்டர் சதாசிவம்… அதன் மூலம் அந்த ஏழைப் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கும்… அந்த மனநிறைவே நமக்கு மகிழ்ச்சி!” சதாசிவத்தைக் கட்டியணைத்து, வாழ்த்தி அனுப்பினார் ரத்தினவேல்.

கம்பீரமாக, நிமிர்ந்து நடைபோட்டு வந்து அமர்ந்த சதாசிவத்தைச் சுமந்து கொண்டு, அமுதசுரபி பள்ளி நோக்கி விரைந்தது வாகனம்.

– மாலா உத்தண்டராமன் (டிசம்பர் 2011)

இயற்பெயர்: ப.உத்தண்டராமன்.
பணி: நெய்வேலி நிறுவனத்தில் முதன்மை மேலாளர்.
இதுவரை, 300 சிறுகதைகள், 20 நாவல்கள், பல கவிதைகள் எழுதி, பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. நான்கு நூல்களை வெளியிட்டுள்ளார். இலக்கிய பீடம் நாவல் போட்டியில், முதல் பரிசு பெற்றுள்ளார். பல இதழ்கள் நடத்திய சிறுகதை போட்டிகளில் பங்கு கொண்டு, பல பரிசுகளை பெற்றுள்ளார். நன்மை செய்வது, நல்லதை எழுதுவது இவரது குறிக்கோள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *