அமெரிக்க டாலர் Vs மருதாயிக் கிழவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 11,799 
 

ஆழ்வார்குறிச்சி வங்கிக்குள் நுழைந்தாள் மருதாயிக் கிழவி. பின் கொசுவம் வைத்துக் கட்டப்பட்ட சேலை. உழைத்து உழைத்து உரமேறிய உடல். சுருக்கம் விழுந்த முகம் என அவள் இருந்தாலும் பலமான வரவேற்புக்குக் குறைவில்லை.

“வாங்கம்மா வாங்க! உக்காருங்க! உங்க மகன் இந்த மாசமும் 500 டாலர் அனுப்பிட்டாரும்மா. அதை உங்க கணக்குல வரவு வெச்சாச்சு. இப்பம் செலவுக்கு எதும் எடுக்கணுமா? ” என்றார் அதிகாரி.

“எனக்கு என்னய்யா செலவு? ஒத்தைக் கட்டை. கணக்குலயே இருக்கட்டும். போன மாசம் எடுத்த துட்டே இன்னும் பாக்கி கெடக்கு”

“அப்பம் ஒரு லட்ச ரூவா ஆனதும் வைப்புல போட்டுரலாமா? இந்த இந்த ஃபாரத்துல கையெழுத்து மட்டும் போடுங்க , மத்ததெல்லாம் நான் பாத்துக்கறேன் ” என்றார். அவர் கடமை அவருக்கு. இந்த மாதத்து டார்கெட் முடிக்க வேண்டுமே?

மருதாயிக்கிழவியைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்குமே. இப்போது இந்தியாவில் பெருகி வரும் N R I பெற்றோர்களில் ஒருத்தி. என்ன ஒரே ஒரு வித்தியாசம் , மற்றவர்கள் எல்லாம் படித்தவர்களாக இருப்பார்களாயிருக்கும். ஆனால் மருதாயிக்கிழவிக்கு கையெழுத்துப் போட மட்டுமே தெரியும். அவளுக்கு சொந்த ஊர் கடையம். வாக்கப்பட்டு வந்த ஊர் ஆழ்வார்குறிச்சி. கொஞ்சம் நிலத்தை மட்டும் வைத்து விட்டு புருஷன் போய் விட்டான். கிழவி தான் நிலத்தில் காய்கறி போட்டு , கீரை விதைத்து மகனைப் படிக்க வைத்தது.

மகன் செல்வகுமாரும் நன்றாகப் படித்தான். உள்ளூர்ப்பள்ளியில் +2 முடித்து விட்டு சென்னைக்கு பொறியியல் படிக்கப் போனான். எல்லாவற்றிற்கும் உறுதுணையாய் இருந்தவர் பள்ளித் தலைமை ஆசிரியர் அருமைநாயம் தான். அவர் சொல்படி வங்கிக் கடன் வாங்கிப் படித்தான். படிப்பு முடியும்முன்னே பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அடுத்த ஒரு வருடத்திலேயே அமெரிக்கா போக விசா வாங்கி விட்டான் செல்வன். அது வரை அமெரிக்கா என்ற ஒரு கனவு தேசம் இருப்பதையே அறிந்திலள் கிழவி.

“ஏலே ! எய்யா ! ராசா! உனக்குத்தான் இங்ஙயே நல்ல சமபளம் கெடைக்குல்லா ! பொற எதுக்கு பரதேசம் போகணும்னு சொல்லுத? நமக்கு அங்ஙன யாரு இருக்கா? ஒரு ஒதவின்னாலும் நாலு பேரு வேண்டாமாடே ? என்னியத் தனியா விட்டுட்டு போகாதல” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.

மகனுக்குக் கோபம் வந்து விட்டது. அனைவரும் அமெரிக்காவுக்குப் போகத் தவம் கிடக்கையில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை அன்னையின் பேச்சைக் கேட்டு விடுவதா? அம்மாவை எப்போது வேண்டுமானாலும் சமாதானப் படுத்திக் கொள்ள முடியும். ஆனால் வாய்ப்பு அது மறுபடியும் வருமா? என்று நினைத்தவன் அன்னையை மூளைச் சலவை செய்தான். வருடம் ஒரு முறை வந்து பார்ப்பதாக வாக்களித்தான். மேலும் நிறைய வயல்கள் , தோப்புகள் வாங்கலாம் என்று ஆசை காட்டினான். விழுந்து விட்டாள் மருதாயி.

பிறகென்ன? ஒரு நல்ல நாளில் மருதாயி , பலவேசம் மகன் செல்வ குமார் சென்னையில் அர்த்த ராத்திரியில் விமானம் ஏறினான். அமெரிக்கா சென்று சேர்ந்த உடனே தலைமை ஆசிரியர் வீட்டுக்கு ஃபோன் செய்து தெரிவித்து விட்டான். வரும் ஞாயிறு காலை ஒன்பது மணிக்குப் பேசுவதாகக் கூறினான். இரவு பகல் மாற்றம் , ஜெட் லாக் போன்ற சொற்கள் ஒன்றும் அவளுக்குப் புரியவில்லை. ஆசிரியர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவள் புரிந்து கொள்வதாயில்லை.

” எல்லாருக்கும் ஒரே நேரத்துல தானே சூரியன் வரும்? அப்படி என்ன ஊரு அது? சூரியனே லேட்டா வருது? ” என்ற ஒற்றைக் கேள்வியில் அனைவரின் வாய்க்கும் பூட்டுப் போட்டு விட்டாள்.

ஆயிற்று செல்வாவும் அமெரிக்கா போய் வருடங்கள் பத்து ஆகி விட்டன. சரியாக இரண்டு வருடத்துக்கு ஒரு முறை வந்து விடுவான். தனியாக. ஒரு முறை மருதாயி அவனிடம் கல்யாணப் பேச்சை ஆரம்பித்த் போது தான் தெரிந்தது அவன் அங்கேயே ஒரு பெண்ணைக் காதலித்து மணந்து இப்போது 3 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது என்று. கிழவிக்கு வருத்தமான வருத்தம்.

“என்னல இது? உன் கலியாணத்தை என்னால பாக்க முடியாதபடிக்கு செஞ்சிட்டியே? உனக்கு பிடிச்ச புள்ளைன்னா நான் வேண்டாம்னா சொல்லப் போறேன்?” என்று கேட்டுக் கேட்டு மாய்ந்து போனாள். குடியுரிமைக்காக அங்கே தான் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதை அவள் என்ன கண்டாள் ?பாவம்.

மனைவியின் , மகனின் ஃபோட்டோக்களைக் கட்டினான். வெண்ணையைப் பிசைந்து வைத்தது போல மருமகள் , பேரனும் அப்படியே தான் இருந்தான். அவர்களில் எந்த தன்னுடைய வம்ச அடையாளத்தையும் காண முடியாத அவளுக்கு எல்லாமே அன்னியப்பட்டுப் போனது. அதற்குப் பிறகு மகனிடம் ஒன்றும் கேட்பதில்லை. அவனும் அம்மாவை வா என்று அழைக்கவில்லை.

முதல் முதல் அமெரிக்காவிலிருந்து செல்வன் வந்த போது வீட்டுக்கு ஃபோன் தொடர்பும் , இவள் பெயருக்கு ஒரு வங்கிக் கணக்கும் எடுத்துக் கொடுத்தான். அன்று முதல் இப்போது வரை மாதம் தவறாமல் 500 டாலர் அனுப்பி விடுவான். வரும் போதெல்லாம் அம்மா வைக்கும் கோழிக்குருமா , மட்டன் குழம்பு என வாய்க்கு ருசியாக சாப்பிடுவான். அவன் ஆசையோடு சாப்பிடும் விதத்தைப் பார்த்து கேட்பாள் ” ஏலே! செல்வா! நீ என்ன சோத்தையே கண்ணால காணாதவன் மாரி இப்ப்டி சாப்பிடுதே? உன் பொண்டாட்டி இதெல்லாம் உனக்கு ஆக்கிப் போட மாட்டாளா?”

“நீ வேற ! அவ எப்பப் பாத்தாலும் பிரெட் , பிரெட் அப்டீம்பா இல்லைன்னா உப்புமா மாதிரி பாஸ்தான்னு ஒண்ணு , இல்லைன்னா நம்ம ஊரு ஊத்தப்பம் மாரி பிஸ்ஸான்னு ஒண்ணு இதைத்தான் செய்வா”

“அவ சைவமாப்பா?”

“அட நீ வேற! எல்லாம் நல்லா சாப்பிடுவா. ஆனா அங்க நம்ம ஊரு மாதிரி மசாலா போட்டு செய்ய மாட்டாங்க. வெறும உப்புப் போட்டு அவிச்சி வெச்சிடுவாங்க ! அதைத்தான் எல்லாரும் சாப்பிடுவாங்க!” என்றான்.

“வெறும் கறிய என்னமாத் திங்க? ராசா! நான் உனக்கு பொடி எல்லாம் செஞ்சு தாரேன். நீயே உனக்கு வேணுங்கறதை பொங்கிக்கயேன்? ” என்று சொல்லி கறி மசாலா , சிக்கன் மசாலா என எல்லாப் பொடியும் செய்து கொடுத்து அனுப்பினாள். அதில் அவளுக்கு ஒரு திருப்தி.

ஒரு நாள் அவளை வங்கிக்கு அழைத்தார்கள்.

“அம்மா! உங்க மகன் கிட்ட இருந்து 500 டாலர் பணம் வந்திருக்கு. நீங்க எவ்வளவு வேணுமோ எடுத்துக்குங்க! மிச்சத்தை உங்க கணக்குல போட்டுடறோம்” என்றார் அதிகாரி.

“ஏன் சார்? எம்மவன் பணம் அனுப்பறதாத்தானே சொன்னான். இப்பம் டாலரா அனுப்பிட்டானா? இம்புட்டு டாலரை வெச்சிக்கிட்டு நான் என்ன செய்ய? நீங்களே பாதுகாப்பா வெச்சிக்குங்க ஐயா? இப்பம் எனக்கு ஒரு முருகன் டாலர் மட்டும் தாங்க. கயத்துல கட்டி களுத்துல போட்டுக்கிடுதேன்.” என்றாள்.

திகைத்துப் போனார் வங்கி ஊழியர். வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு “அம்மா! டாலர்னா நீங்க நினைக்கறா மாதிரி சங்கிலியில கோத்துக்கிடுற டாலர் கிடையாது. இது உங்க மகன் இருக்கற அமெரிக்க தேசத்துப் பணம். நமக்கு ரூவா மாதிரி அவங்களுக்கு டாலர்” என்றார். தான் ஏதோ தவறாகப் பேசி விட்டோம் என்பது மட்டும் இவள் முதுகு திரும்பியதும் அனைவரும் சிரித்த சிரிப்பில் புரிந்தது.

நாட்கள் ஓடின.

கொஞ்ச காலமாக ஊரெங்கும் குறிப்பாக இவள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சமூகக் கூடத்தில் ஓய்வு பெற்றவர்கள் உட்கார்ந்து பேசுவதில் அமெரிக்க டாலர் நிறைய அடிபட்டது. அங்கு பேசுவது எல்லாம் இவளுக்கு நன்றாக காதில் விழும். நாட்டு நடப்புகளை அவள் அறிந்து கொள்வது அந்தப் பேச்சுக்கள் மூலமாகத்தான். அவளுக்குப் புரிந்தது என்னவென்றால் அமெரிக்க டாலர் மதிப்புக் கன்னா பின்னா என்று ஏறி விட்டது . என்பது தான். பண வீக்கம் , அன்னியச் செலாவணி , கோடிக்கணகான ஊழல் பணம் வெளி நாட்டில் இருப்பு என இது ஒன்றும் அவளுக்குத் தெரியாது.

வங்கிக்குப் போனால் அந்த அதிகாரி இப்போதெல்லாம் ” வாங்கம்மா ! உங்களுக்கு நல்ல யோகம்! டாலர் ரேட்டு இப்பம் ரொம்ப ஜாஸ்தியில்லா? உங்க கணக்குல ஏகப்பட்ட பணம் கெடக்கு. ஹூம்! எல்லாம் நேரம்” என்று பெருமூச்சு விட ஆரம்பித்தார்.

தனக்கு ஒன்றும் தெரியாமல் முன்பு அவமானப் பட்டதைப் போல எதுவும் தப்பாக பதில் சொல்லி கேவலப் பட்டுவிடக் கூடாது என்று பேசாமல் வந்து விட்டாள். மருதாயிக்கு மனதுக்குள் ஒரே சந்தேகம். “அதென்ன எல்லாரும் டாலர் மதிப்புக் கூடிடிச்சின்னு சொல்றாக? இதுக்கு என்ன அர்த்தம் ? ஒரு வேளை எம்மவன் அங்ஙன பணத்துக்குக் கஷ்டப்படுதானோ? எதுக்கும் நம்ம ஆசிரியர் கிட்டக் கேட்டுடுவோம்” என்று தீர்மானித்துக் கொண்டவள் நேரே அருமைநாயகம் சாரின் வீட்டை அடைந்தாள். முதல் உபசாரணைகளுக்குப் பிறகு மெதுவாக ஆரம்பித்தாள்.

“ஏன் சார்? இப்பம் டாலர் மதிப்புக் கூடிடிச்சின்னு பேசிக்கறாகளே? அதுன்னா என்ன ?”

“அம்மா! டாலர் மதிப்புக் கூடுனது மட்டும் தான் உங்க கண்ணுக்குத் தெரியுது. ஆனா நம்ம ரூவா மதிப்பு ரொம்பக் குறைஞ்சு போச்சே அது தெரியுமா?”

“என்ன சார் சொல்றீங்க? அப்பம் நூறு ரூவாயோட மதிப்பு எம்புட்டு? அம்பது ரூவா இருக்குமா?”

“அது அப்படி இல்லம்மா! ஒரு நாலு வருஷத்துக்கு முன்ன நீங்க நூறு ரூவாயில வாங்குன பொருட்களை இப்ப வாங்குறதுக்கு எம்புட்டு ரூவா ஆகும்?”

“அது ஆகும் எரநூறு ரூவா இல்லை முன்னூறு ரூவா கூட ஆகும். அரிசி , பருப்பெல்லாம் என்னா வெலை விக்குது?”

“ஆங்க்! அது தான். ரூவா மதிப்புக் குறையக் குறைய நம்ம நாட்டுல வெலைவாசிக் கூடும். பண வீக்கம்னு ஒண்ணு இருக்கு. அதனால தான் டாலர் ரேட்டு கூடிக்கிட்டே போகுது!”

“இது நல்லதா கெட்டதா சார்?” கேட்கையில் குரல் நடுங்கியது.

“உங்களை மாதிரி வெளிநாட்டுலருந்து பணம் வரவங்களுக்கு நல்லது. ஆனா கீழ்த்தட்டு மக்களுக்கும் நடுத்தர வகுப்பு மக்களுக்கும் இது ரொம்பக் கெடுதல். பாருங்க இப்ப பெட்ரோல் விலை டீசல் விலை சமையல் கேஸ் விலை எல்லாத்தையும் அரசாங்கம் ஏத்திக்கிட்டே போகுது. இதுனால என்ன ஆகும் காய்கறி , அரிசின்னு நாம அன்னாடம் பயன் படுத்தற பொருட்கள் எல்லாம் விலை கண்டமேனிக்கு ஏறும். ”

மருதாயிக்கிழவியின் மனதில் கீழைத்தெரு சந்திரா வந்து போனாள். வீட்டுச் செலவை சமாளிக்க முடியாமல் வட்டிக்குப் பணம் வாங்கிக் கட்ட முடியாமல் தற்கோலை செய்து கொள்வது தான் முடிவு என அழுத அவளுக்குத் தான் பணம் கொடுத்தது நினைவு வந்தது.

“இதெல்லாம் ஏறும் போது மத்ததும் ஏறும் . உதாரணமா வீடு வாடகை , துணி மணி , நோட்டு பென்சில் , பேனான்னு எல்லாமே ஏறிக்கிட்டே தான் இருக்கும். நிலைமை இப்படியே போனா ஒரு நாள் நம்ம நாட்டு பொருளாதாரமே விழுந்திடும். அப்புறம் எல்லாரும் அமெரிக்காக் காரனுக்கு அடிமையாகிட வேண்டியது தான். ”

கிழவிக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“யாத்தே! இது நாம நெனச்சதை விட பெரிய பூதமால்லா இருக்கு? இப்படியே வெல வாசி கூடிக்கிட்டே போனா பிள்ளை குட்டி வெச்சிருக்கறவுக பாடு என்னாகுறது? வார சம்பளத்துல வாடகை குடுப்பாகளா? சாப்பிடுவாகளா? பிள்ளைங்களுக்கு நோட்டு பேனா வாங்கிக் குடுப்பாகளா? கீழத் தெரு சந்திராவுக்கு நான் ஒதவி செஞ்சு போட்டேன். ஆனா நம்ம நாட்டுல இன்னும் எத்தனை பேரு இப்படி இருப்பாக? அவுக எல்லாம் என்ன செய்வாக? பாவம் தான்” என்றபடி சிந்தித்துக் கொண்டிருந்தவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

“சார்! என் மவனுக்கு ஒரு லெட்டர் எழுதுங்க! இந்த மாதிரி நம்ம நாடே இப்பம் கஷ்டத்துல இருக்கு. அப்படி இருக்கும் போது நான் மட்டும் வெளி நாட்டுப் பணத்துல உல்லாசமா இருந்தா அது மக்களுக்குச் செய்யிற துரோகம். அதானால அவன் இனி எனக்குப் பணம் அனுப்ப வேண்டாம்னு கண்டிசனா எழுதுங்க! வங்கியில இருக்குற பணத்தை அவனுக்கே திருப்பி அனுப்பிடறேன்னு எழுதிடுங்க” என்றாள்.

“அம்மா! அப்ப நீங்க சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க? ” என்றார் அருமை நாயகம்.

“எனக்கென்ன சார்? இருக்கற வயல்ல பாடுபட்டா என் வயிறு நெறஞ்சிடும். நான் உழைக்காம சாப்பிடணும்னு நெனச்சி வெளிநாட்டுப் பணத்தை வாங்கிக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க? பக்கத்து வீட்டுக்காரன் பட்டினியக் கெடக்கற போது நான் மட்டும் தனியா விருந்து சாப்பிட்டா அது நியாயமா சார்? அப்படி செஞ்சா நான் மனுசியா? எனக்கு வேண்டாம்யா அவன் காசு! அவனையே வெச்சிக்க சொல்லுங்க. நான் வரேன்” என்று சொல்லி எழுந்து போய் விட்டாள் மருதாயி.

அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் சொத்துக் குவித்தும் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டுமென்று மேலும் மேலும் நாட்டைக் கொள்ளையடிக்க ஆசைப்படுகின்ற நாட்டில் வாழ்ந்து கொண்டு இன்னமும் மனிதாபிமானதுடனும் , தன்மானத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் மருதாயிக்கிழவி சென்ற பாதையை நோக்கிக் கைகளைக் குவித்தார் அந்த ஆசிரியர்.

“இந்தப் புத்தி நாட்டோட தலைவிதியை நிர்ணயிக்கிற பொருளாதார நிபுணர்களுக்கு வந்தா நல்லாருக்கும்” என்றார் உரக்க.

– செம்மலர் (நவம்பர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *