அப்பாவின் வயல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 14, 2021
பார்வையிட்டோர்: 1,652 
 

அப்பா கொஞ்ச நாட்களாக சாப்பாடே சாப்பிடுவதில்லை, மனைவி ஆரம்பத்தில் சொல்லும்போது அசட்டையாக இருந்து விட்டேன். பின்னர் நானும் தொடர்ந்து கவனித்தேன். தொடர்ந்து ஒரு வாரமாக அரிசி சாப்பாட்டை அப்படியே ஒதுக்கி வைத்து விடுகிறார். ஏன் சாப்பிட மாட்டேனெங்கிறீர்கள் என்று கேட்டால் ப்ச்..ப்ச். என்று சூள் கொட்டுகிறார்.

இவருக்கு என் மேல் வருத்தம் இருக்கலாம், என்ன செய்வது? வயது எண்பதை தாண்டி தொன்னூறை எட்டி பார்க்க போகிறார். போன வருடம் வரை விவசாயம் பார்த்து கொண்டிருந்தவர்தான். பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கும் ஆனைமலையில் ஒரு கிராமம்தான் எங்கள் ஊர்

நான் படித்து இங்கேயே பெண் பார்த்து கல்யாணம் எல்லாம் செய்து எனது குழந்தைகளும் பெரியவர்களாகி வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் செட்டில் ஆகி விட்டனர். அவர்கள் இருந்த வரை வீட்டில் கலகலப்புக்கு பஞ்சம் எதுவும் இல்லை. அவர்கள் போன பின்னால்தான் தனிமையை உணர்ந்தோம். எங்களுக்கே அறுபது வயதுக்கு மேல் ஆகி விட்டது. நான் சென்னையிலேயே நிரந்தரமாக தங்கி விட்டாலும் ஊரில்;இருந்து அரிசி வருடத்திற்கு இத்தனை மூட்டை வயலிலிருந்து வந்து விடும்.

காரணம் அங்கு அப்பா தனிக்கட்டையாக இருந்து, வயலில் வேலை செய்யும் ஒரு பெண் இவருக்கு சமையல் செய்து துணி மணிகளாய் துவைத்து கொடுக்க இவர் நிம்மதியாக விவசாயத்தை பார்த்துக் கொண்டு எங்களுக்கு அரிசியை அனுப்பி வந்தார்.

இனி மேலும் அவரை அங்கு வைத்திருந்தால் சிரமம் என்று இருவரும் பேசி கிராமத்துக்கு வந்து அவரின் மனதை கரைத்து வயல்களை வருடத்துக்கான தொகை என்று குத்தகைக்குபேசி விட்டு அவரையும் கூட்டி வந்து விட்டோம். வந்து இத்தனை நாள் அமைதியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இப்பொழுது ஏன் இப்படி இருக்கிறார் என்று புரியவில்லை.

அவருக்கு எண்பதுக்கு மேல் ஆகி விட்டது என்று எண்களில்தான் சொல்ல முடியுமே தவிர என்னை விட ஆரோக்கியமாகத்தான் இருந்தார். நானும் என் மனைவியும் காலையில் மூன்று கிலோமீட்டர் நடந்து தஸ் புஸ் என்று வீடு வந்து சேரும்பொழுது அவர் நிதானமாக எழுந்து வீட்டை சுற்றி தோட்ட வேலைகளை செய்து கொண்டிருப்பார்.

எங்களுக்கு காப்பியும் ஒரு சில நேரங்களில் போட்டு கொடுப்பார்.

அப்பா தனியாக யோசனையுடன் உட்கார்ந்திருந்தார். மெல்ல அவரை நெருங்கினேன். அப்பா இப்பவெல்லாம் அரிசி சோறு சாப்பிடறதையே விட்டுட்டியா?

அப்படி இல்லை, நம்ம வயல் அரிசிய சாப்பிட்டுட்டு இப்ப வேற அரிசி சாப்பாடு இறங்க மாட்டேங்குது.

போன மாசம் வரைக்கும் நம்ம அரிசி இருந்துச்சுப்பா, அதுக்கப்புறம் இந்த அரிசி மூட்டைய பக்கத்து கடையியல வாங்கிட்டு வந்தேன். வேணா அதை மாத்திட்டு வேற அரிசி வாங்கிட்டு வரனே?

வேணாம் வேணாம், இந்த அரிசி சோத்தை என் தட்டுல போட்ட உடனே மனசு முழுக்க துக்கமாயிடுது, ஏன்னு புரியலை, எனக்கு ஒரு உதவி செய்யேன், அந்த கடையில போய் இந்த அரிசி மூட்டை எங்கிருந்து வருதுன்னு கேட்டுட்டு வர்றீயா?

எனக்கு அப்பாவின் கோரிக்கை வித்தியாசமாய் இருந்தது. என்ன ஒரு மனிதன் பத்து வயதில் வயலில் இறங்கி சொந்த வயலில் அரிசி பொங்கி சாப்பிட்டு விட்டு இப்பொழுது அடுத்த வயல் அரிசி சாதம் இறங்க மாட்டேனெங்கிறதே இவருக்கு !

கடைக்காரன் இது மொத்தமா அரிசி மண்டியில இருந்துதான் எடுத்து வருவோம். அவங்க எங்க இருந்து கொண்டு வருவாங்கன்னு தெரியலை.

அப்பாவிடம் இதை சொல்லவும் சிறிது நேரம் அமைதியாக இருந்தவர் எனக்காக அந்த அரிசி மண்டிக்கு போய் இந்த அரிசி எங்க இருந்து வருதுன்னு கேட்டுட்டு வந்துடறியா?

எனக்கு மீண்டும் அப்பாவின் கோரிக்கையை புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்னடா இது? அப்பா அநியாயத்துக்கு நம்மை அலைய விடுகிறாரே?

இருந்தாலும் கடைக்காரன் சொன்ன அரிசி மண்டியில் போய் விசாரித்தேன். அவன் மதுரையில் ஒரு அரிசி மண்டியை சொன்னான். அங்கிருந்துதான் வருகிறது என்றான். எதற்கும் அப்பா கேட்பார் என்று அந்த அரிசி மண்டியின் விலாசத்தையும் வாங்கி கொண்டேன்.

நான் நினைத்தது போலவே அப்பா ஒரு முறை மதுரைக்கு போய் அந்த அரிசி மண்டியில் அவர்களுக்கு எங்கிருந்து அரிசி வருகிறது என்று கேட்டு வர சொன்னார்.

இதோ மெனக்கெட்டு மதுரைக்கு சென்று கொண்டிருக்கிறேன்.உங்களுக்கு சிரிப்பு வரலாம், ஒரு வயதான விவசாயிக்கு அரிசி விலாசத்துக்காக வயதான மகன் அலைகிறானே என்று. என்ன செய்வது? அப்பா இது வரை அவருக்காக எதுவும் என்னிடம் கேட்டதில்லை. இதை கூட நான் செய்யாவிட்டால் !

மதுரையில் அவர்கள் ஒரு அரிசி ஆலையை சொன்னார்கள். பொதுவாக அங்கிருந்துதான் எல்லா வகையான அரிசிகளும் எங்களுக்கு வரும் என்று சொன்னார்கள்.

அடுத்த பயணம், அவர்கள் சொன்ன அரிசி ஆலைக்கு.

அவர்கள் சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராமங்களில் இருந்து நெல்;லை வாங்குவோம் என்று விவரம் தெரிவித்தார்கள்.

அதற்கு மேல் எனக்கு எங்கு செல்வது என்று புரியவில்லை. திகைத்து நின்று விட்டேன். நான் என்ன செய்ய வேண்டும், அப்பாவுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்றும் புரியவில்லை. என் திகைப்பை பார்த்து அந்த ஆலையில் இருந்த பெரியவர் ஒருவர் என்ன விஷயம் என்று கேட்டார்.

நான் அப்பாவின் கேள்வியையும் அவர் படும் சிரமத்தையும் சொன்னேன். அது மட்டுமல்ல அப்பாவுக்கு எண்பது வருட வயல் அனுபவத்தையும் சொன்னேன்.

ஒண்ணு செய்யுங்க, இன்னைக்கு இங்கேயே தங்குங்க, நான் கொடுக்கற இந்த இரண்டு ஊர்ல இருந்துதான் எங்களுக்கு நெல் மூட்டைக அதிகமா வரும். அங்க போய் கேட்டு பாருங்க?

என்னன்னு கேக்க? நீங்கதான் நெல்லை அனுப்பிச்சீங்கன்னா?

சிரித்தார், நீங்க போய் கேளுங்க உங்களுக்கு புரியும், சொல்லி விட்டு அனுபவசாலிகளுக்கு எல்லாம் தெரியும், போய் விசாரிச்சு பாருங்க.

மறு நாள் நான் விசாரிக்க போகும் போது ஒன்றுமே புரியாமல்தான் சென்றேன். அங்கு போன பின்னால் அவர்கள் சொன்ன செய்தி நாற்று நடுவிற்கு முன்னால் எதிர்பார்த்த தண்ணீர் வராமல், அறுவடைக்கு முன்னர் பெரு மழை பெய்து வயலெல்லாம் முழுகி, ஏகப்பட்ட நட்டமாகி கிடைத்த வரை அறுவடை செய்து ஆலைக்கு கொண்டு போய் கொடுத்தார்களாம். நட்டம் தாங்காமல் இரு குடும்பங்களில் குடும்ப தலைவனே மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்களாம்.

எனக்கு மெல்ல புரிந்தது, அப்பாவின் வருத்தம். மெளனமாய் ஊர் திரும்பி கொண்டிருக்கிறேன். இனி வயலை குத்தகைக்கு விடக்கூடாது. முடிந்த வரை நானும் அப்பாவின் ஆலோசனையில் வயலை பார்த்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் அப்பா உயிருடன் இருக்கும் வரைக்குமாவது.

நீங்கள் மேற்கண்ட கதையை நம்ப மறுத்தால் உங்களுக்கு நா.பார்த்தசாரதி எழுதிய புறநானூற்றுச் சிறுகதைகள் என்னும் புத்தகம், பதிப்பு அழகாய் அம்மன் பதிப்பகம் திருச்சி (நாற்பது புறநானூற்று பாடல்களுக்கு சிறு கதையாக அழகாக விவரித்திருக்கிறார்.)

நினைக்கும் காலை மருட்கை உடைத்தே

எனைப்பெருஞ் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்

அதனினும் மருட்கை உடைத்தே பிறன்நாட்டுத்

தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி

இசை மரபாக நட்புக் கந்தாக

இனையதோர் காலை ஈங்கு வருதல்

வருவன் என்ற கோனது பெருமையும்

அது பழுதின்றி வந்தவன் அறிவும்

வியத்தொறும் வியப்பிறந் தன்றோ!

(புறநானூறு-217)

உறையூரில், காவிரிக்கரையில் கோப்பெருஞ்சோழன் வடக்கு நோக்கி வீற்றிருந்தான். அவனை சுற்றி அவனது குடி மக்கள், மந்திரி முதலானோர்நின்று கொண்டிருந்தனர். நேற்று வரை அரச வாழ்வில் இன்புற்றிருந்த அரசன் இன்று வாழ்க்கையை வெறுத்து சாகின்ற வரைக்கும் நோன்பு இருக்க துணிந்து விட்டான்.

பொத்தியாரே நீர் ஒரு ஏற்பாடு செய்யும்

பொத்தியார் புலவர் கை பொத்தி முன்னால் அரசரும் இன்று நோன்பிருந்து உயிர் துறக்க தயாராய் இருப்பவனுமான கோப்பெருஞ்சோழனிடம் வருகிறார்.

என் உயிர் நண்பர் பிசிராந்தையார் நான் வடக்கிருந்து உயிர் துறக்க இருப்பதால் அவரும் சற்று நேரத்தில் இங்கு வருவார்.

வந்தால் என்ன செய்ய வேண்டும்?

வேறு ஒன்றும் செய்ய வேண்டாம், அவரும் வடக்கிருந்து உயிர் துறக்க அருகில் ஒரு ஏற்பாடு செய்து வையும்.

சோகம் நிறைந்த அந்த சூழலிலும் அங்கிருப்பவர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது. பொத்தியாருக்கே சிரிப்பு வர சத்தமில்லாமல் அமுக்கி கொண்டார்.

சோழனுக்கு சிரிப்பொலி கேட்டது. எதற்கு சிரிக்கிறீர்கள்?

நீங்கள் சொல்வதை இன்னும் நம்ப முடியவில்லை. நீங்கள் இருவரும் உயிர் நண்பர்கள் எங்கிறீர்கள். இன்று வரை ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டதில்லை. காணாமல் கேட்டிருக்கிறீர்கள். இந்த நட்பை வைத்து அவர் உங்களோடு வடக்கிருக்க வருவாரா?

நட்பு வேறு, உயிர் வேறு அரசே, பிசிராந்தையார் உறுதியாக வடக்கிருக்க வரமாட்டார்.

பாண்டிய நாட்டில் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சிற்றூரில் வசிக்கும் பிசிராந்தையார் சோழ நாட்டுக்கு வந்து அரசர் பெருமானுக்கு தம் உயிரையும் கொடுக்க வேண்டும் என்பது என்ன அவசியம்?

சோழனை சுற்றியிருந்த எல்லோரும் பிசிராந்தையார் வரமாட்டார் என்றே உறுதியாக கூறினர். சோழன் அவர்கள் சொல்வதை மறு மொழி எதுவும் சொல்லாமல் கேட்டுக்கொண்டான். அவன் மனதிலிருந்த நம்பிக்கை குறையவே இல்லை.

“உடல்கள் இறுகக் கட்டி தழுவுகின்ற நட்பை காட்டிலும்,கண்ணால் காணாமலே மனகள் தழுவுகின்ற நட்புக்கு அதிக வன்மை உண்டென்று அவர் நம்பினார்.

பொத்தியாரே பிசிராந்தையார் கண்டிப்பாக வருவார். அவர் மனம் எனக்கு தெரியும். என் மனம் அவருக்கு தெரியும். நீர் மட்டும் நான் சொல்கிறபடி அவருக்கு இடம் ஒழித்து கொடுத்தால் போதும் வேறொன்றுன் செய்ய வேண்டாம்

இடம் ஒழித்து வைக்கிறோம். ஆனால் தங்களின் நம்பிக்கைதான் எங்களுக்கு வியப்பை தருகிறது.

வியப்போ வியப்பில்லையோ சிறிது நேரம் கழித்து பாருங்கள்.

அரசருக்கு கடைசி நேரத்தில் சித்த பிரம்மை என்று அனைவரும் நம்பினர். யாரோ பிசிராந்தையாராம், பாண்டிய நாட்டில் இருக்கிறார், அவர் இவருக்காக உயிர் கொடுக்க வருவாராம்? புலவர்கள் தங்களுக்குள் முணு முணுத்து கொண்டனர்.

அரஸ்னை தனியே விட்டு விட்டு அனைவரும் கிளம்பி விட்டனர், அவந்தான் வடக்கிருந்து உயிர் விடப்போகிறான், நான் எதற்கு இந்த வெயிலில் மணலில் காய்ந்து நிற்க வேண்டும். இந்த எண்ணத்தில் அனைவரும் கிளம்பி விட்டனர்.

அரசனோ எதை பற்றியும் கவலைப்படாமல் தன் நோக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.

இவர்கள் சென்று கொண்டிருக்கும்போது எதிரே ஒருவர் அந்த கடும் வெயிலில் ஆற்று மணலில் வேகு வேகு என்று நடந்து வந்து கொண்டிருந்தார். இவர்களை கண்டதும் ஐயா கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட இருக்கிறானாமே? அவன் எங்கு இருக்கிறான். நான் இந்த இடத்துக்கு புதிது, பாண்டி நாட்டிலிருந்து வருகிறேன்.

நீர் யார்? உமக்கு கோப்பெருஞ்சோழனிடம் என்ன வேலை?

ஐயா என் பெயர் பிசிராந்தையார், நான் பாண்டிய நாட்டை சேர்ந்தவன்.

பொத்தியார் அவரை மேலும் கீழும் பார்த்தார், சரி அவரை பார்த்து என்ன செய்ய போகிறீர்கள்?

நானும் வடக்கிருந்து உயிர் விட போகிறேன்.

பொத்தியாரும் மற்றவர்களும் அப்படியே அவர் காலில் விழுந்தனர். பிசிராந்தையாரே நீங்கள் நட்புக்கு ஒரு புதிய மதிப்பளித்து விட்டீர்கள். உங்களினால் அந்த நட்பு அமர காவியமாகி விட்டது. அவரை அழைத்து சோழனிடம் கொண்டு சேர்த்தார். காவிரிக்கரையில் இரு உயிர்களும் ஒன்றாய் நோன்பிருந்து உயிர் துறந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *