அப்படித்தான் ‘அது’ எனக்குக் கிடைத்தது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 15,731 
 

– கோவிண்ட்! என்றார் மேனேஜர்.

– யெஸ் சார்! என்றேன்.

– நாலு மணிக்கு ஏர்போர்ட் போகணும்.

– யெஸ் சார்!

– குணரத்னம் வர்றார். அடிஷனல் ஜாயின்ட் செக்ரெட்டரி! ஃபைனான்ஸ் மினிஸ்ட்ரி! பெரிய புள்ளி!

– யெஸ் சார்!

– நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தங்கறார்.

– யெஸ் சார்!

– ‘ஏ’ கிளாஸ் வசதி கொடுக்கணும்!

வால்யூம் குறைத்து – யெஸ் சார்! என்றேன்.

– என்ன, சுருதி இறங்குது?

– சார்! என்னைக் கொஞ்சம் பாருங்க!

பார்த்தார். அரை செகண்ட் அதிர்ச்சி.

– இன்னும் நீ குளிக்கலையா?

– இல்லை சார்! இப்பதான் சென்ட்ரல்ல குப்தா குடும்பத்தை விட்டுட்டுத் திரும்பறேன். குளிக்கலை; சாப்பிடலை. யார்ட்டே போய்ச் சொல்வேன், சார். பத்து வருஷமாச்சு! இதே பி.ஆர்.ஓ. போஸ்ட்ல கஷ்டப்படறேன்!

– புரியுதப்பா! அதெல்லாம் எம்.டி. செய்யணும். அவர் மனசுன்னா இளகணும்! இளகும். வேலையைச் செய்! தானா இளகுவாரு! அப்புறம், வர்றவர் வி.வி.ஐ.பி! அவரால எம்.டி-க்கு எவ்வளவோ காரியம் ஆகணும். ரொம்ப ஜாக்கிரதையாக் கவனி! வெஜிடேரியன்! லிக்கர் சாப்பிடுவார். அப்புறம்… ம்… அதெல்லாமும் கவனிச்சுக்க!

– யெஸ் சார்!

பின்பு, எங்கள் நாட்டிங்ஹாம் கெஸ்ட்ஹவுசுக்கு ஒரு போன் அடித்தேன். சமையல்காரர், வேலைக்காரர், காவல்காரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தேன். மணி 12 அடித்ததும், மேனேஜரிடம் சொல்லிவிட்டு, ஆபீஸ் டொயோட்டாவில் வீட்டில் அழகாக வந்து இறங்கினேன். ஷவர் போட்டுக் குளித்துச் சாப்பிட்டு, சின்னத் தூக்கம் போட்டு, ஏர்போர்ட் போனேன்.

நாலு மணிக்கு கரெக்டாக ப்ளேன் வந்தது.

வந்தார் குணரத்னம். 55 இருக்கும். முகத்தில் வரி… வரி… வரி! கண் இடுங்கி, தலையெல்லாம் தார் பாலைவனமாகி, கன்னத்தில் ஆரம்பக் குழி விழுந்திருக்க,
ஒன்று, கடுமையாக உழைத்திருக்க வேண்டும்; அல்லது, நிறைய ‘விளையாடி’யிருக்க வேண்டும்!

பெரிய சூட்கேஸை டிக்கி வயிற்றுள் போட்டு, அவரை பின் ஸீட்டில் ஏற்றிக்கொள்ள…

சென்னையில் மழை, தண்ணீர், மின்சாரம், இலங்கை எல்லாம் பேசிவிட்டு, – நான் ரெஸ்ட்டுக்கு வந்திருக்கேன். யாருக்கும் நான் இருக்கிறதாகச் சொல்லாதே! என்றார்.

நாட்டிங்ஹாமில் போய் இறங்கினோம். உள்ளே டபுள் ஸ்விட்டில் அவர் உடைமைகளை வைத்து ஏ.சி-யைப் போட்டு, வெளியே வரும்போது மேஜை மீது இருந்த அந்தப் புத்தகத்தின் முகப்பு என் கண்ணில் பட்டது. சின்ன அதிர்ச்சி!

அதில் ஒரு தற்காலச் சாமியாரின் படமும், அவரது உபதேசத்தைக் குறிக்கும் தலைப்பும் இருந்தது.

உள்ளே போய் சமையல்காரரைப் பார்த்து ‘மெனு’ பேசி, ஜமாய்க்கச் சொல்லி, விஸ்கி வகையறாக்கள் வந்துவிட்டனவா என்று பார்த்தேன். ஷிவாஸ் ரீகல் மூன்று பாட்டிலும், டின் பீர் வகைகளும், ஒரு ரம் பாட்டிலும், வரிசை யாக சோடாக்களும் கப்போர்டில் குந்தவைத் திருந்தன. பிளேட்களில் முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு வறுவல்கள் குவிந்திருந்தன.

அத்தனையும் என்னைத் திருப்தியாக்கிவிட, வி.வி.ஐ.பி. அறைக்குள் மீண்டும் நுழைந்தேன். குணரத்னம் குளித்து, ஏதோ தோத்திரம் முணு முணுத்துக்கொண்டு இருந்தார். எனக்குச் சோதனை ஆரம்பமாகிவிட்டது ‘அதெல்லாம்’ இவருக்கு விநியோகம் பண்ணலாமா?

– ஐஸ் பாக்ஸ் அனுப்பறேன்! என்றேன் மெள்ளமாக.

அவரும் – ஹ§ம்! என்றார் மெள்ளமாக.

– பாதாம்பருப்பு அனுப்பறேன்! என்றேன். ஈரத் துண்டோடு திரும்பினார்.

– ம்… அப்புறம், உள்ளூர் எல்லாம் வேண்டாம்! என்றார்.

அப்படி வா, வழிக்கு! என்றது மனது!

– எல்லாம் ஃபாரின்தான் சார்! என்றேன்.

அந்தோணியின் பொன்வறுவலும் ஸ்காட்ச் பொன்னிறமும் எவரையுமே ஒரு ‘அச்சா’ புன்னகை போடவைக்கும். ஆனால், குணரத்னத்துக்கு ஒரு அரைக்கால் முறுவலாவது ஏற்பட வேண்டுமே! கிடையாது. முகத்தில் அதே விரக்தி! ‘சரிதாம் போ’ என்கிற பார்வை.

வெளியில் வந்தேன். யோசனையோடு போன் முன் உட்கார்ந்தேன். எங்கள் கம்பெனி தரும் மாதாந்திர ரீ-டெய்னர் தொகை 20,000 ரூபாயில் நான்கு பெண்கள் சுகஜீவனம் நடத்தி வந்தார்கள்.

முதல் பெண் ரீடா. போன் போட் டேன். அவள் அம்மா பேசினாள். விஷ யத்தைச் சொன்னதும், – என்ன ஸார்! நேத்தே சொல்லியிருக்கக் கூடாது? குழந்தை பெங்களூர் போயிருக்கா! என்றாள்.

இரண்டாவது மோகி! அவளது வேலைக்காரி பதில் சொன்னாள். மோகி குடும்பத்தோடு ஒரு கிரகப்பிர வேசத்துக்குப் போயிருக்கிறாள். ராத்திரி தான் திரும்பி வருவாள்.

மூன்றாவதும், நாலாவதும் போன் போட்டுப் பார்க்கக் கிடைக்கவில்லை.

ஆத்திரமாக வந்தது. காரைப் போட்டு நவநீகர் காலனிக்குப் போனேன். ஃப்ளாட்டில் சாதனா இருந்தாள். விஷயத்தைச் சொன்னேன். – ஐயோ, கோவிண்ட்! நான் லீவு! என்றாள்.

– லீவாவது, கீவாவது! உடனே வா! இல்லாட்டி என் மானம் போயிடும்! என்றேன்.

– ஐயோ… கோவிண்ட்! நான் லீவு! என்று சிரித்தாள். மரமண்டைக்குப் புரிந்தது.

புறப்பட்டேன். சிநேகா ஒருத்திதான் பாக்கி. பெசன்ட் நகரில் இருந்தாள். எச்.ஐ.ஜி. வாசலில் பஸ்ஸரை அழுத்தினேன்.

ஒரு சின்னப் பெண் திறந்தாள். உள்ளே போய்ப் பார்க்க, சிநேகா கம்பளி போர்த்திப் படுத்திருந்தாள். நல்ல டெம்பரேச்சர். முகத்தைத் திறந்து, – ஸாரி, கோவிண்ட்! வேற யாரும் இல்லையா? என்றாள்.

தலையில் கை வைத்துக்கொண்டு, கெஸ்ட் ஹவு சுக்குத் திரும்பினேன்.

அறைக்கு வெளியே பார்த்ததும் திடுக்கிட்டேன் ஒரு ஷிவாஸ் ரீகலும், மூன்று சோடா பாட்டில்களும் வெளியே வந்திருந்தன – காலியாக! குணரத்னம் உள்ளே விளாசிக்கொண்டு இருந்தார். சூரன்! சீக்கிரத்தில் இவ்வளவையும் வெளியே அனுப்புகிறவர் இரவைச் சும்மாவிடுவாரா?

ஏழு, எட்டு, ஒன்பது என்று நேரம் ஓடிவிட்டது. குணரத்னம் சாப்பாடு முடித்துவிட்டு, உள்ளே கனைத்துக்கொண்டு இருந்தார்.

சாப்பாட்டுத் தட்டுக்களை எடுக்க வேலைக்காரி கதவைத் திறக்கப் போனாள்.

– வேணி, நில்லு! என்றேன். நின்றாள்.

24 வயது இருக்கும். பார்வைக்கு இன்னும் பதின் வயதுகளைத் தாண்டவில்லை. உடல் வாளிப்புள்ள வசீகரச் சதைப் பெருக்கு! நெளிவுகள் நிறைந்த அருமையான நாட்டுப்புறக் கட்டுமானம்!

கெஸ்ட் ஹவுஸில் இரண்டு வருடப் பழக்கம். நடக்கும் வேலைகள் அத்தனையும் அத்துப்படி! சின்ன வயசுதானே! புருஷன் வெளிநாட்டு வேலைக்குப் பறந்துவிட்டு இருந்தான். இங்கே வேலை செய்ததால் நிறைய ஐந்து நட்சத்திர அந்தஸ்தில் கனவு கண்டு இருந்தாள். அதன் ஜாடைகள் எனக்குத் தெரியும். சின்னச் சின்னப் பார்வைகளை என் பக்கம் தூண்டிவிடுவாள். ஒதுக்கமாக என் கண் படும்படி அடிக்கடி நிற்பாள். வி.ஐ.பி. இரவுகளில் அந்தோணியும் ஐயரும்கூடத் தூங்கிவிடுவார்கள். ஆனால், இவள் என்னோடு முழித்திருந்து…

– வேணி! எனக்கு ஒரு உதவி பண்ணணும்.

– செய்யறேன் ஸார்!

– தப்பா நினைச்சுக்க மாட்டியே?

– என்ன சார் இது… சொல்லுங்க, செய்யறேன்!

– இன்னிக்குச் சோதனையா நாலு பேரும் இல்லை. நான் ஏதாவது செய்யாட்டி என் வேலை போயிடும். எனக்கு வேற வழி தெரியலை. நீதான்… நீதான் கொஞ்சம்…

அவள் வெட்கத்தில் பக்கென்று சிரித்தாள். தயாரானாள். அவளை ஷவரில் குளிக்கவைத்து, புதுச் சேலை வாங்கி வந்து உடுத்தி, கூந்தலைப் பறக்கவிட்டு, சோளி இல்லாத வெறும் மேற்புறங்களைத் தண்ணீரில் சுளீர் என்று படும்படி வைத்து, இரண்டு ஸிந்தெடிக் முத்து வடங்களைக் கழுத்தில் போட்டு, அந்தரங்கங்களில் பெர்ஃப்யூம் ஸ்ப்ரே செய்து உள்ளே அனுப்பினேன்.

பின்பு, கதம் கதம் என்று மார்பு அடித்துக்கொள்ள, கோபத்தில் வெடித்துக்கொண்டு குணரத்னம் எப்போது வரப்போகிறார் என்று பயந்தபடி இருந்தேன்.

ஆனால், இரவு முழுவதும் அவரும் வரவில்லை. அவளும் வரவில்லை. அந்த ஒரே இரவை இரண்டு இரவாக… அல்ல, மூன்று இரவாகவே மாற்றினார் என்று காலையில் வேணியிடமிருந்து கேள்விப்பட்டதும்… ரொம்பவும் சங்கோஜமாகவும், விநயத்தோடும் அறை வாசலிலேயே காத்திருந்தேன்.

குணரத்னம் குளித்து கிளித்து, நியமங்கள் முடித்து, முழு டிரெஸ்ஸில் விச்ராந்தியாக வெளியே வந்தார். ஒரு பெரிய கும்பிடு போட்டேன். என்னைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல், ஒரு அடி எடுத்துவைத்தவர், திரும்பினார்.

– நீங்கதான் பி.ஆர்.ஓ-வா?

– ஆமா, சார்!

– இதைப் போல எனக்கு யாரும் எங்கேயும் வசதி செய்து கொடுக்கலை. இதைப் போல ரொம்ப வித்தியாசமான அனுபவம் இதுக்கு முன்னால கிடைச்சதே இல்லை. வரேன்.

– சார்…

– என்ன?

– பத்து வருஷமா பி.ஆர்.ஓ-வா இருக்கேன். எனக்கு ஒரு பிரமோ…

– எம்.டி-கிட்டே சொல்றேன் என்றார் அழுத்தமாக!

அப்படித்தான் ‘அது’ எனக்குக் கிடைத்தது!

– நவம்பர், 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *