அனுபவம் புதுமை..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நகைச்சுவை
கதைப்பதிவு: June 27, 2022
பார்வையிட்டோர்: 13,156 
 

கருப்பையா கருப்பு கிடையாது.நல்ல சிவப்பு நிறம்.அம்மா அகிலாண்டம் மாதிரி.. ! நல்ல உயரம் கூட..!

“பொறந்த குழந்தய பக்கத்துல நரஸம்மா படுக்க வைக்கயில எனக்கு நம்ப முடியல. குழந்த செவப்பா என்னொசரம் இருந்தான்..கண்ணுபடும்போலத்தான் இருந்துச்சு…!”

அதனால்தானோ என்னவோ அவனுக்கு கருப்பையா என்று நாமகரணம் செய்தாள் போலிருக்கிறது.!

கருப்பையா பார்ப்பதற்கு தாயைப்போல இருந்தாலும் குணத்தில் அப்பாவைக் கொண்டிருந்தான்…

அகிலாண்டம் பாம்பைக் கண்டால் கையால் பிடிப்பாள்.கணவன் முத்தையாவோ தொடை நடுங்கி..பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே நடுங்குவான்….

கருப்பையாவுக்கு அப்பா அளவுக்கு பயம் இல்லாவிட்டாலும் ரொம்ப இளகிய மனசு.

ஆள் வாட்டசாட்டமாக வளர வளர அகிலாண்டேஸ்வரி மனசில் ஒரு ஆசை புகுந்து கொண்டது.!

கருகருவென்று மீசையும் , மரவட்டை மாதிரியான புருவமும் கொண்ட கருப்பையாவை ஒரு காக்கி உடையில் வைத்து பார்த்து மகிழ்ந்தது…

கொஞ்ச நாளில் அது ஒரு வெறியாகவே மாறியது..

“டேய்! கருப்பையா…! நீ போலீஸ்காரனா ஆகணும்ன்னு எனக்கு அம்புட்டு ஆசையா இருக்குப்பா…! உன்னப் பார்த்தாலே திருட்டுப் பசங்க விழுந்தடிச்சு ஓடிப்புட மாட்டாங்க..!

“அம்மா.. அவுங்க ஓடிட்டா அப்புறம் நான் எப்படி அவுங்கள பிடிக்கிறதாம்…?

சொல்லிவிட்டு பெரிதாக சிரிப்பான் கருப்பையா..!?!

“நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது..நல்லா உடம்ப தேத்தி வச்சுக்க….

தினமும் நாலு முட்டையும் , கறியும் , பிரியாணியும் ஆக்கிப் போட நானிருக்கேன்..

பள்ளிக் கூடத்தில் ஓட்டப் பந்தயத்துல கலந்துகிட்டு முதல் ஆளாக வரணும்..

ராசா..! உன்னிய போலீசாக்கி பாத்த பொறவுதான் ஆத்தா கண்ணு மூடும்..!

செய்யறேன்னு சத்தியம் பண்ணு..!

கருப்பையாவுக்கு போலீஸ் என்றால் குழந்தையிலிருந்தே பயம்..!

ஒருமுறை ஒரு சினிமாவில் போலீஸ்காரன் திருடனை அடிஅடியென்று அடித்ததைப்பார்த்து

‘அம்மா..வாங்க..! வீட்டுக்கு போயிரலாம்..! எனக்கு பயம்மா இருக்கு..!”என்று அழுது கொண்டே கிளம்பிவிட்டான்.

வரும்போதே டிராயரில் ஒண்ணுக்குப் போனதாய் அகிலாண்டம் சொல்லி சொல்லி சிரிப்பாள்..

அவன் குணம் தெரிந்தும் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாள் என்று கருப்பையாவுக்கு எரிச்சலாய் வரும்..

என்ன செய்வது..? அம்மாவை மீறி ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லையே. .!

படிப்பில் மோசம் என்று சொல்லமுடியாது.. ஆனால் விளையாட்டில் ஆர்வம் அதிகம்.

ஓட்டப்பந்தயம், கூடைப்பந்து , கால்பந்து எல்லாவற்றிலும் முதலில் நிற்பான்..

அவன் தனக்கு கீழ் வகுப்பில் படிக்கும் மாணவர்களுடன்தான் அதிக நேரம் செலவிடுவான்..

மதியம் சின்ன பிள்ளைகளை கூட்டி வைத்துக் கொண்டு ஓடிப் பிடித்து விளையாடுவான்..

ஆனால் எப்போதுமே அவன்தான் திருடன்..அந்த பிள்ளைகள்’ போலீஸ் ‘

‘பிடிடா..பிடிடா..’ என்று துரத்துவார்கள்.. யாருக்கும் பிடி கொடுக்கமாட்டான்..

எப்போதாவது அவன் போலீசானால் ஒரே நிமிடத்தில் எல்லா திருடர்களையும் பிடித்து விடுவான்.!

ஆனால் உடனே மனசு கேட்காது..!

‘டேய்.பொழச்சு போங்கடா…இனிமே திருடாதீங்க..என்ன..?” என்று விட்டு விடுவான்..

அவன் குரலில் உண்மையான கரிசனம் இருக்கும்..இவனாவது..போலீசாவதாவது…?

இது ஏன் அகிலாண்டத்துக்கு புரியாமல் போனது…?

ஒரு வழியாகப் பத்தாவது படித்து முடித்தான்..

போலீஸ் வேலைக்கு மனுவும் போட்டான்…

எல்லாம் முடிந்து நேர்முகத்தேர்வு வரை வந்துவிட்டான்..!

பயிற்சியும் முடிந்தது….

சமயநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு வருடம் பயிற்சியில் கான்ஸ்டபிளாக பொறுப்பேற்றான்..!

அகிலாண்டம் தனது மகன் பெரிய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆனதுபோல் ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டாள்..

வலியபோய் தெரியாதவர்களிடமெல்லாம் பெருமை அடித்துக் கொண்டாள்..!

“பொன்னம்மா..எம்பிள்ள பெரிய போலீசு ஆபீசராயிட்டான்.. உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சினையின்னா பையன் பாத்துகிடுவான்..

சமயநல்லூர் டேசன்லதான் சோலி…! இனிமே ஊர்ல ஒரு திருட்டு , பொரட்டு இருக்காது.. எவன் வாலாட்டுறான்னு பாக்கலாம்..!”

“சின்னக்கண்ணு..! ஒம் பொண்ண கட்டிக் கொடுத்த எடத்தில சீரு , செனத்தி கேட்டு வீட்டுக்கு தொரத்திப்புட்டான்னு சொன்னியில்ல…

எம்பிள்ள பெரிய ஆபீசராயிட்டான்..

போயி கம்ப்ளீண்டு பண்ணச் சொல்லு.. ஒரு பய தப்பிக்க முடியாது…!”

பையனுக்கு ஆரத்தி கரைத்து திருஷ்டி சுத்திப் போட்டாள்.

ஆனால் கருப்பையா வயிற்றில் புளியைக் கரைத்தது அம்மாவின் பேச்சு..

***

கருப்பையா தன்னை நன்றாக கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.

காக்கி சட்டை.. விசில்….
தொப்பியில் நீல நிற ரிப்பன்.
இடுப்பில் நீல நிற பெல்ட்..
கறுப்பு காலணிகள்..!

கான்ஸ்டபிள்.கிரேட் 2. !

“வணக்கம் ஏட்டய்யா…!

வாசலில் ப்யூன் ரத்தினம் சல்யூட் அடித்து வரவேற்கும் போது தங்கப்பதக்கம் சிவாஜி போல ஒரு நடை நடந்து பார்த்தான்..!சரியாக வரவில்லை….!

அது மிகச் சிறிய காவல் நிலையம்.கான்ஸ்டபிள் முருகன் அவனுடைய சீனியர்..!

இவர்கள்தான் காவல் நிலைய பொறுப்பு.

வாரத்துக்கு மூன்று முறை இன்ஸ்பெக்டர் கதிர்வேலு வருவார்.. கொஞ்சம் கண்டிப்பான ஆசாமி…!

மற்றபடி ஈ ஓட்டிக் கொண்டுதான் இருப்பார்கள்..!

அந்த ஊரில் எல்லோரும் சமாதானபிரியர்கள் போலிருக்கிறது..!

முருகனும் கருப்பையாவும் நெருங்கிய தோழர்களாகி விட்டார்கள்..

“முருகன் சார்..இங்க ரொம்ப கேசுங்கள காணோமே… நான் வந்தப்புறம் ஒண்ணு ரெண்டு பிக்பாக்கெட் , காசு வச்சு சீட்டாட்டம் , தேங்கா திருடன்னு பெட்டி கேசுங்கதான் பாத்தேன்..”

“ஏம்பா..கருப்பையா.நாம நிம்மதியாக இருக்கறது உனக்கு பிடிக்கலையா..?

“அதுக்கில்லப்பா.. போலீஸ் ஸ்டேஷன்னாலே பரபரப்பான இருக்கும்போலன்னு ….

சினிமாங்கள்ள வரமாதிரி..!”

“கருப்பையா..நீ சொல்றது சரிதான்..நீ மட்டும் போன வருசம் ஜாயின் பண்ணியிருந்தன்னு வையி…!”

“ஏன்..என்ன நடத்திச்சு…?”

‘வீச்சரிவா வீரப்பன்’ன்னு கேட்டிருக்கியா…?

அரிவாள கழுத்துக்கு நேர வீசினான்னு வையு…உடல் வேற..தல வேற..!”

“இன்னாது…!?”

அப்படியே எழுந்து நின்று விட்டான் கருப்பையா..

உடம்பெல்லாம் வெடவெடவென்று ஆடியது..!

“கருப்பையா..உக்காரு..இந்தா தண்ணி குடி..!

இன்னாப்பா..பேரைக் கேட்டதுமே இப்படி சாமி வந்தவன் கணக்கா ஆடுற..? நீ போலீசுன்னு மறந்து போச்சா…?”

ஆமாம்..உண்மையிலேயே கருப்பையாவுக்கு மறந்துதான் போயிற்று..

குனிந்து தன் காக்கி சட்டையைப் பார்த்துக் கொண்டான்..

வெட்கம் பிடுங்கித் தின்றது..

“இல்ல..சின்ன வயசுல நடந்தது ஏதோ நாபகம் வந்திருச்சு..
ம்ம்ம்..சொல்லு…! “

“அவன பாத்தா இந்த வட்டாரமே கிடுகிடுக்கும்..

அப்ப கதிர்வேலுதான் சீனியர் கான்ஸ்டபிள்….!

மார்க்கெட்டுல ரகள பண்ணினவன சுத்தி வளச்சு பிடிச்சிட்டாரில்ல..இப்பம் பய களி தின்னுப்புட்டு கம்பி எண்ணிட்டிருக்கான்..!

பாவம்! கதிர்வேலு சார்..! “

“என்னாச்சு….?”

“கழுத்த சீவ அரிவாள வீசிப்புட்டான்..காயத்தோட போச்சு..அவரு வந்தா தழும்ப காட்டச்சொல்லு…!

உடனே இன்ஸ்பெக்ட்டரா ப்ரமோஷன் ஆயிருச்சே..அதச் சொல்லு…”

கருப்பையா அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை..

யாருக்கு வேணும் இன்ஸ்பெக்டர் பதவி…?

கழுத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான்..

பேசாமல் ரிப்போர்ட் எழுதிக் கொண்டு , பிக்பாக்கெட் கேசை ஒரு நாள் லாக்கப்பில் வைத்தோமா..? இரவு ஒரு ரோந்து போனோமா ? பத்திரமாய் வீடு வந்து சேர்ந்தோமா ? என்று இப்படியே காலத்தை ஓட்டி விட்டு , ரிட்டையர் ஆகி , கை நிறைய பென்ஷன் வாங்கிக் கொண்டு , பேரப்பிள்ளைகளைக் கொஞ்சிக் கொண்டு…!

சுகமாக நித்தியா தேவி அவனைத் தழுவிக் கொண்டாள்…

***

கருப்பையா நினைத்ததெல்லாம் நடந்து விடுமா என்ன..?

அதுவும் போலீஸ் உத்தியோகத்தில் தினம் தினம் நிம்மதியாக சாப்பிட்டு விட்டு தூங்கமுடியுமா..?

அந்த நாளும் வந்தது….!

உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டல்லவா.?

மதியம் சாப்பிட்டதும் லேசான மயக்கம்…!

டேபிளில் தலைவைத்து சாய்ந்து ஒரு வினாடி கூட இருக்காது…

தொலைபேசி எழுப்பி விட்டது..

“ஹலோ.. நான் இன்ஸ்பெக்டர் கதிர்வேலு பேசறேன்…”

ஒரு வினாடி கருப்பையாவுக்கு ஒன்றும் புரியவில்லை.!

இன்ஸ்பெக்டர் ஏன் தன்னைக் கூப்பிட வேண்டும்…?

“நாம ஒரு தப்பும் செய்யலியே..!”

அப்புறம்தான் தான் ஒரு போலீஸ் என்பதும் இது போலீஸ் ஸ்டேஷன் என்பதும் நினைவுக்கு வர, சட்டென்று எழுந்து நின்று சல்யூட் அடித்தபடி ..,

“யெஸ் சார் !’ என்றான்.

“கருப்பையா.. நீங்களும் முருகனும் இப்பவே காவேரி குப்பம் போங்க..

‘பிளேடு பக்கிரி ‘ன்னு கொஞ்ச நாளாவே மிரட்டிட்டு திரியரதா கேள்வி.குப்பத்துல புகுந்து பெரியகலாட்டா பண்றதா சேதி வந்திச்சு…

நீங்களும் முருகனும் உடனே ஜீப்ப எடுத்துட்டு போங்க. கையோட பிடிக்காம திரும்பக் கூடாது.! “

“யெஸ் சார்….!“

அர்ஜுன் ரேஞ்சுக்கு சல்யூட் அடித்துவிட்டு தொலைபேசியை வைத்தானே தவிர இப்போதே வயிற்றைக் கலக்கியது..

“யாரது பிளேடு பக்கிரி…?’ பரவாயில்லை..அரிவாளுக்கு பிளேடு எத்தனையோ தேவலை…

முருகன் வெளியே போயிருந்தான்.

வந்ததுமே இருவரும் ஜீப்பில் கிளம்பி விட்டார்கள்..!

வழியெல்லாம் நிறைய பிளேடு பக்கிரிகள் மனக்கண்ணில் வந்து போனார்கள்..

குண்டாய் , ஒல்லியாய், குட்டையாய், உயரமாய், கன்னத்தில் பெரிய தழும்புடன் , ராஜ்கிரண் மீசை , வீரப்பன் மீசை , நக்கீரன் மீசை என்று வித வித மீசையுடன்…!”

காவேரி குப்பம் நெருங்க நெருங்க ஒரு வித படபடப்பு..

முருகன் நல்ல ஃபார்மில் இருந்தான்..பிடித்தால் அடுத்தது இன்ஸ்பெக்டர் தான்..!

குப்பத்தில் ஒரே ரகளை , சோடா பாட்டில்கள் பறக்கும் என்று நினைத்துப் போனவர்களுக்கு பெரிய ஏமாற்றம்….!

“வாங்க ஏட்டய்யா…இம்மா நேரம் பண்ணிப்புட்டீங்களே..பய டாவு காட்டிப் பாத்தான்..பிளேடக் காட்டி , ‘கீசிடுவேன்..கீசிடுவேன்’ னு பயமுறுத்திக்கிட்டே இருந்தான். சுத்தி வளச்சு நாங்களே பிடிச்சிட்டோம் போலீஸ் டேசனுக்கு இட்டாந்து போங்க ஏட்டய்யா. நாலு தட்டு தட்டினா பெண்டு நிமிந்துடும்…”

ஒரு கயிற்றால் கட்டி வைத்திருந்தார்கள்..

பிளேடு பக்கிரி நல்ல உயரம்.திடகாத்திரமான உடம்பு.வாரப்படாத கேசம்..

ஆனால் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அவனுடைய மீசை.. அப்படியே கருப்பையாவைப் போல.அதே டைப்..!

கிட்டத்தட்ட பார்ப்பதற்கும் கருப்பையா போலத்தான் இருந்தான்..

கருப்பையாவுக்கு ஏனோ அவனைப் பார்த்ததும் ஆத்திரமோ , கோபமோ வரவில்லை…

***

“கருப்பையா..உங்கையாலயே இந்தா…..!இந்த வெலங்கப் பூட்டு..மொத கேசு..!”

‘ஏதோ தாலியை எடுத்து பெண் கழுத்தில் கட்டு ‘என்பதுபோல கருப்பையா காதில் விழுந்தது..

இன்ஸ்பெக்டர், ‘கருப்பையாதான் அவன நல்லா கவனிக்கணும்னு சொல்லிட்டாரு..”

கருப்பையாவுக்கு லேசாக கை நடுங்கினாலும் விலங்கை எடுத்து கைகளில் பூட்டினான்.

‘கீசிடுவேன்.கீசிடுவேன் ‘என்று பக்கிரி முணுமுணுத்துக்கொண்டே இருந்தான்.

எங்கேயாவது பிளேடை ஒளித்து வைத்திருந்து நிஜமாகவே கீசிடுவானோ…?

ஜீப்பில் ஏற்றுவதில் ஒரு சிரமமும் இருக்கவில்லை..

ஸ்டேஷனில் கேசை ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு பக்கிரியை லாக்கப்பில் அடைத்தாயிற்று..

கருப்பையா ரிப்போர்ட் எழுதி முடித்தும் விட்டான்..

அடுத்து விசாரணைதான்…

“பக்கிரி..இதோட எத்தன வாட்டி உள்ள போயிருக்க…?”

ஒன்றும் காதில் விழாதமாதிரி இருந்தான் பக்கிரி..முகத்தை வேறு திருப்பிக் கொண்டான்..

கம்பியில் தட்டினான் ஏட்டு கருப்பையா..

“இதப்பாரு..பக்கிரி..உன்னத்தான் கேக்கறேன்.காதுல விழுகல..? திரும்பி பாரு…கேக்குற கேள்விக்கு மரியாதையா பதில் சொல்லல , இந்த இந்த கருப்பையா யாருன்னு காட்டுவேன்….!

“இன்னா செய்வ…?”

கருப்பையாவுக்கு உண்மையிலேயே என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை..

ஒரு வினாடி அப்படியே நின்றான்..!

அவன் நினைத்தமாதிரி அவனிடமிருந்து பதிலை பிடுங்குவது அத்தனை சுலபமாயிருக்கப்போவதில்லை

முகத்தை கொஞ்சம் கடுமையாக வைத்துக் கொள்ள வேண்டுமோ ?

“பக்கிரி..என்ன நடந்ததுன்னு ஒண்ணு விடாம சொல்லு…நீ மிரட்டனதப் பாத்த சாட்சிங்க இருக்காங்க..தப்பிக்க முடியாது.. உண்மையைச் சொன்னா உனக்கும் நல்லது.எனக்கும் நல்லது…”

“உனக்கு நல்லது..எனக்கு என்னா நல்லது…? “

பக்கிரி சொல்வதிலும் நியாயம் இருப்பதாய் தோன்றியது கருப்பையாவுக்கு..

“என்ன கருப்பையா..மயிலே மயிலே இறகு போடுன்னு கெஞ்சிகிட்டு நிக்கிற..நாலு தட்டு தட்டினா கக்கிடமாட்டான்?

“காலைல சரியா எட்டு மணிக்கு வருவாரு இன்ஸ்பெக்டர்….அதுக்குள்ளாற அவன கேக்குற விதத்துல கேட்டு எல்லா உண்மையும் தெரிஞ்சுக்க….இல்லைனா உன் தோல உரிச்சுபுடுவாரு மனுசன்..!”

முருகன் எச்சரித்துவிட்டு போய்விட்டான்…

கருப்பையா குலதெய்வத்துக்கு கெடா வெட்டி பொங்கல் வைப்பதாக நேர்ந்து கொண்டு தனது வேலையைத் தொடங்கினான்..

லாக்கப்பை திறந்து தைரியமாக உள்ளே போனான் கருப்பையா..

வாசலில் செக்யூரிட்டியிடம் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தான்.

ஏதாவது ஏடாகூடமாய் சத்தம் கேட்டால் உடனே வரச்சொல்லி..

பக்கிரி நல்ல உறக்கத்தில் இருந்தான்..பார்த்தால் ஒரு குழந்தை தூங்குவது போல..

எப்படி எழுப்புவது…?

“ டேய்..பொறுக்கி நாயே..! என்ன தூக்கம்? எந்திரிடா..”
என்று எல்லா போலீசும் பேசும் வசனம் வாயில் வர மறுத்தது…”

“பக்கிரி..!பக்கிரி..! என்று மெதுவாக கூப்பிட்டான்..

ம்ஹூம்..நல்ல அனந்தசயனம்..!

லேசாக தொட்டு உலுக்கினான்.

திடீரென்று “ஆ “என்று அலறினான்.!

சடாரென்று எழுந்து உட்கார்ந்தான் பக்கிரி..

முதலில் எங்கே இருக்கிறோமென்றே புரியவில்லை…!

உடனே சமாளித்துக் கொண்டு..

“கீசிடுவேன்..கீசி..” என்று முணுமுணத்துக் கொண்டே எழுந்து நின்று , நழுவிய லுங்கியைக் கட்டிக் கொண்டான்..

“பக்கிரி..பயப்படாம நடந்தத சொல்லு…”

கருப்பையா தன்னையறியாமல் அவன் தோளில் கையைப்போட்டான்…

பக்கிரிக்கு ஒரு நிமிடம் உடம்பெல்லாம் புல்லரித்தது..

“சார்.. இன்ஸ்பெக்டர் சார்..!”

இன்ஸ்பெக்டர் என்று தன்னைக் கூப்பிட்டதும் கருப்பையாவுக்கு
தேவதைகள் எல்லாம் வெள்ளை உடையில் மேலேயிருந்து தலையில் பூமாரி பொழிந்தது போலிருந்தது.

தான் இன்ஸ்பெக்டர் இல்லை என்று சொல்ல மனது வரவில்லை.

இருந்துவிட்டு போகட்டுமே..!

“என்ன பக்கிரி.உடம்பெல்லாம் நடுங்குதே..”

“சார் தூக்கத்தில நீங்க என்ன லத்தியால ரத்தம் வராப்ல அடிக்கிற மாதிரி கெனா கண்டேன் சார்…!”

“பக்கிரி ! உன்னப்பாத்தா திருடன் மாதிரியே தெரியலையே..நீ எப்படி.?”

“சார்.. உண்மையைச் சொல்லட்டா..? உங்களப்பாத்தா கூட போலீசு மாதிரி இல்ல..!”

இருவரும் பெரிதாக சிரித்தார்கள்..

“சார்….நான் நெசமாலுமே திருடன் கிடையாது..வயித்து பொழப்புக்கு என்னன்னவோ வேலையெல்லாம் செஞ்சவந்தான் !

ஆனா சோம்பேறி..

நோவாம நொங்கெடுக்கணும்னு ஆசப்பட்டா..?

கபாலி தான் சொன்னான்.

“டேய்..சும்மனாச்சும் கையில ஒரு பிளேட வச்சுக்க. ‘கீசிடுவேன்..கீசிடுவேன்’ னு மெரட்டினன்னு வைய்யு .

ரொட்டி , பழம் , பன்னு , பிஸ்கெட்டுன்னு ஏதாச்சும் துன்னக் கெடைக்கும்..’ ன்னான்

“சார் இதுவரைக்கும் நானு ஒத்தனக்கூட பிளேடால கீறினதில்ல..அன்னைக்கு மார்க்கெட்டுல கூட அந்த பொம்பள எங்கைய தட்டிவிட்டிச்சு.அப்போ பிளேடு கீறி ரத்தம் வந்திச்சுபோல..ஊரக் கூட்டிடுச்சு சார்..சார்.. சார்..என்ன மன்னிச்சு விட்றுங்க சார்..இனிமே சத்தியமா திருடமாட்டேன்..”

தடாலென்று காலில் விழுந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அழுதான் பிளேடு பக்கிரி…

கைதட்டும் சத்தம் பலமாகக் கேட்டது..!

இன்ஸ்பெக்டர் கதிர்வேலு..!

“வெரி குட் கருப்பையா..! ஒரே நாள்ல கதற கதற உண்மைய கக்க வச்சு, காலில விழ வச்சிடீங்களே…! உங்கள நிச்சயம் மேலெடெத்துல சிபாரிசு செய்வேன்..!

வாங்க..இங்க உக்காருங்க..சொல்லுங்க..என்ன நடத்திச்சு..? உண்மைய எப்பிடி போட்டு வாங்கினீங்க…?”

“ஒண்ணுமில்ல இன்ஸ்பெக்டர்..! தோள்ல லேசா ரெண்டு தட்டு தட்டினேன்.. அவ்வளவுதான்..! சார் இவன…?”

“நீங்க என்ன நெனைக்கிறீங்க…?”

“விட்டுறலாம்னு தோணுது…”

பிளேடு பக்கிரி உள்ளிருந்து கையெடுத்து கும்பிட்டான்…

“வாய்யா….இங்க ஒரு கையெழுத்த போட்டுட்டு போ… இன்னொரு தபா இங்க பாத்தேன்…!”

கருப்பையாவிடம் கண்ணாலேயே விடைபெற்றான் பக்கிரி..

வெறும் பக்கிரி..!

அப்போதே பிளேடைத் தூக்கி எறிந்துவிட்டானே..!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *