தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 9,091 
 

கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்கிறோம். நானும் குமாரும். சென்னைக்கு ஏதோ வேலையாக வந்தவன், அப்படியே என்னைப் பார்த்துப் போக வீட்டுக்கு வந்திருக்கிறான்.

மதுரைக்குப் பக்கம் எங்கள் கிராமம். நான், குமார், சப்பை என்கிற குமரன் மூவரும் ஊரைப் பொறுத்தவரை மும்மூர்த்திகள். எங்கேயும், எப்போதும் சேர்ந்தே சுற்றிக் கொண்டிருப்போம். மூவரில் குமரன் கொஞ்சம் பயந்தவன், அல்லது ஒருவிதமான அப்பாவி. ஊரிலேயே ஒல்லியான தேகம் கொண்ட பாலாவிடம் கூட அடிவாங்குபவன். அதுவும், அவனுக்கு எட்டவில்லை என்று இவனை திண்ணைக்குப் பக்கத்தில் நிற்க வைத்து, ஏறி நின்று அடித்திருக்கிறான். இவனும் எதிர்ப்பைக் காட்டாமலோ அங்கிருந்து நகராமலோ நின்று அடி வாங்கி இருக்கிறான். அதனால்தான் சப்பை என்ற நாமகரணம். அவரவர் வீட்டில் “அந்த ரெண்டு பயளுகளோட சேராதடான்னா கேட்குறயா?’ வார்த்தைகள் சதா ஒலித்த வண்ணம் இருக்கும். குறிப்பாய் சொல்லிவைத்தாற்போல் ப்ளஸ் 2வில் நாங்கள் மூவரும் கணக்கில் கோட்டடித்ததும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடாது என்று தடை. ரகசியக் காதலர்கள் போலப் பார்த்துக்கொள்வோம்.

அதிகாரம்ரிசல்ட் வந்திருந்த அந்த நாள் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒருநாள் என்றெல்லாம் எழுதத்தான் ஆசை. ஆனால் அப்படி எல்லாம் இல்லை. சப்பைதான் மாலைமுரசு ஆபிசின் வாசலில் கூட்டத்தோடு நின்றிருந்தான். நானம் குமாரும் எதிரில் ஜம்ஜம் ஸ்வீட்சில் தம்-டீ குடித்துக் கொண்டிருந்தோம். அந்தக் காலக்கட்டத்தின் புதுவரவு அந்த தம்-டீ. ஏலக்காய் இஞ்சி சமவிகிதத்தில் ஒரு மாதிரி தொண்டையில் காரமாய் இறங்கும் என்பதையெல்லாம் தாண்டி, கப் அண்ட் சாஸரில் கொடுப்பார்கள் என்பதும் சாஸரில் ஊற்றிக் குடிப்பதே தம்-டீயின் வெற்றிக்கான அதி முக்கிய காரணம். கையில் பேப்பரோடு அருகில் வந்த சப்பை எங்களிடம் கூறிய முதல் வார்த்தை, “இதாண்டா உங்ககிட்ட, என்னைய விட்டுத் திங்குறதுலேயே இருபபீங்க, டீ சொல்லுங்கடா.’ சரி, பார்ட்டிதான் இன்று என மகிழ்ச்சியில் மொத்தம் மூன்று டீக்கு ஆர்டர் கொடுத்து பேப்பரைப் பிடுங்கினேன். “அத என்னத்தப் பார்க்குற, போச்சுப் போச்சு,’ என்றான். “என்னடா சொல்ற மாப்ள?’ நிஜமாவே வருத்தமும் பயமும் கலக்கத் தொடங்கி இருந்தது. ஆனாலும் நப்பாசை, அவன் எப்போதும் போல் விளையாடுகிறான் என்று. அதையும் தாண்டிய நம்பிக்கை வேறு பயமுறுத்தியது, ஃபெயில் ஆவதற்கான அனைத்துச் சாத்தியங்களும் இருப்பதற்கான நம்பிக்கை.

குமார் உறுதிப்படுத்தினான். மூவரின் நம்பர்களும் இல்லை. “அப்பன நெனச்சாத்தாண்டா பயமா இருக்கு’ சப்பை லேசாகப் பயந்தான்.

“விடுங்கடா, நேரா மீனாட்சி டாக்கீஸ் போவோம், மதியம், மொத ஆட்டம் ரெண்டாம் ஆட்டம் மூணு ÷ஷாவும் பார்ப்போம். மத்தத அப்புறம் யோசிப்போம். இப்ப ஊருக்குப் போன பொங்க வெச்சுருவாய்ங்க’ அந்த நேரத்தில் அதுதான் சரியாகப்பட்டது.
தங்கரீகல் ஆங்கிலப் படம் போகும் மனநிலையில் இல்லை என்பதால், அமிர்தம் தியேட்டரில் தஞ்சம் புகுந்தோம். ஹம் ஆப்கே ஹெய்ன் கௌன் என்ற படத்தை ஒரு வருடமாய் ஓட்டிக் கொண்டிருந்தார்கள் அங்கே. எதிரில் மீனாட்சி பாரடைஸில் ஆயிரத்தில் ஒருவன். அமிர்தத்தில் இரண்டு ÷ஷாவும் மீனாட்சியில் ஒரு ÷ஷாவும் ஓட்டிமுடித்து, பெருங்குடியைக் கடக்கும்பொழுது தான் ரிசல்ட் ஞாபகம் மீண்டும் வந்தது. அந்த இரவுச் சாலையில் எங்களுடைய இரண்டு சைக்கிள்கள் மட்டும், குமாரோடு டபுள்ஸில் சப்பை. “என்னடா சொல்றது?’ பரிதாபமாய்க் கேட்டான் சப்பை. “பேசாம இருக்க வேண்டியதுதாண்டா, அடுத்து எழுதி பாஸ் பண்ணிருவோம்னு சொல்லுவோம். எதுல போச்சுன்னு தெரியலயேடா’

“எதுல எதுலன்ன கேள்றா’ என்றவன், அவனாகவே சொன்னான்.

“பிஸிக்ஸ்ல போயிருக்கும்டா, ஒரு கேள்வி, ஒரே ஒரு கேள்விக்குக்கூட பதில் தெரியலயேடா, அந்தப் பாடத்தைக் கண்டுபிடிச்சவென் மட்டும் இப்ப இங்க இருக்கணும், அவனோட இயக்க ஆற்றல முடுக்க ஆற்றலா மாத்திருவேன்’ – ஆத்திரத்தை சைக்கிள் மிதியில் காட்டினான் குமார்.
ஊரே மந்தையில் திரண்டு இருந்தது. எங்களைப் பார்த்ததும் விளக்கு வெளிச்சங்கள் கூடின. வெங்கிடுவின் குரல் சத்தமாய்க் கேட்டது.

“நாந்தான் சொன்னனேப்பா, இவெங்களாவது சாகுறதாவது? இருக்குறவனுகள சாகடிக்கிறப் பயளுக’.

பரிந்து போனது. ரிசல்ட்டைப் பார்த்துநாங்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவெடுத்து விட்டோம் எனத் தேடி இருந்திருக்கிறார்கள். சப்பையுடைய சட்டையப் பிடித்து உலுக்கினார் அவன் அப்பா. “எங்கடா போனீக? எடுபட்ட பயலுகளா’.

அவ்வளவுதான். அதன்பிறகு கொஞ்சம் புத்தி வந்து மூவரும் வீட்டுக்குத் தெரியாமல் குரங்குத் தோப்பில் அமர்ந்து படிக்கத் தொடங்கினோம். சப்பை ஏதாவது ஒரு மேட்டரில் யாரிடமாவது மாட்டி அடிவாங்கி வருவான். பதிலுக்கு நாங்கள் போய்ச் சண்டை போட்டு வருவோம்.

“நல்ல கூழக்கெடா மாதிரி இருக்க, இப்பிடி அடிவாங்குறயேடா சப்பா?’ என்றால், சிரிப்பான்.

கடின முயற்சிக்குப் பலனாய் பாஸ் செய்தோம். மூவரையும் கவனமாய் வேறு வேறு கல்லூரியில் சேர்த்துவிட்டார்கள். ஆனால் நாங்கள் பெரியார் பஸ் ஸ்டாண்டில் சரியாக நான்கு மணிக்குச் சந்தித்துக் கொள்வோம்.

இரண்டு நாட்களாய் சப்பையைக் காணவில்லை. வீட்டுக்குப் போய்ப் பார்த்ததில், திருநீறு வைத்து, கையில் சிவப்புக் கயிறு கட்டிப் படுத்திருந்தான். “ஏண்டா சேர்ந்தே சுத்துறீங்க, எவனோ காலேசுல போட்டு அடிச்சிருக்கான், நீங்க கேட்குறது இல்லியா?’ சப்பையின் அம்மா காபியைக் கொடுத்துத் திட்டினார். அவர் நகர்ந்ததும் விசாரித்தால் பயந்து பயந்து சொல்கிறான், “ஒரு டைவா மாப்ள, நல்லா பேசுச்சு, சரி பிக்கப் ஆகிடுச்சுன்னு நெனச்சா, எவனோ ஒருத்தன் ஏழெட்டுப் பேரோட வந்து சத்தாச்சுட்டாண்டா, அந்தப் பிள்ளய அவனும் லவ் பண்றானம், ஹிஸ்ட்ரி டிப்பார்ட்மெண்ட்டாம், பயமா இருக்குடா’ என்றான். “ஜாரி என்னடா சொல்லுது?’ குமார் எரிச்சலாய்க் கேட்டான். “சிரிக்குதுடா.’
நம்பவே முடியாத அந்தக் காரியத்தைச் செய்தான் சப்பை. யாரிடமும் சொல்லாமல் ஊரைவிட்டு ஓடிவிட்டான். தேடாத இடமில்லை. எப்படியும் ஓரிரு நாட்களில் வந்துவிடுவான் என்று நானும் குமாரும் நம்பியதும் பொய்த்துப்போனது. ஒருவேளை அந்தக் கல்லூரி எதிரி ஏதாவது செய்துவிட்டானோ என்று போய் பார்த்தோம். அவன் சரியான சாம்பாராக இருந்தான். “என்ன பாஸ், சும்மா பசங்களோட சேர்ந்து போய் பேசினதுக்கே எஸ்ஸாகிட்டாரா’ என்று பம்மினான்.

“இவனுக்கெல்லாமாடா பயந்து ஓடி இருக்கான், இதுக்காகவே அவனக் கண்டுபிடிச்சு அடி வெளுக்கணும்டா’ என்றேன் ஆத்திரம் ஆத்திரமாய். அவன் கல்லூரி டீக்கடையில் நின்று முதல் முறை அழுததும் நினைவில் இருக்கிறது. “விட்றா வருவான் சப்ப, நம்மகிட்டக் கூட சொல்லாம போய்ட்டான் பாரு’ என்ற குமார் தம்மைப் பற்றவைத்துப் புகையை வெளியேற்றவேயில்லை.

“என்ன ஊர்டா இது, எங் பார்த்தா வண்டிங்க, கசகசன்னு கர்மம்டா’ குமார் நிகழ்காலத்துக்கு அழைத்துவந்தான். “ஏன் கேட்குறப்போ, அப்பிடியே மெசினோட மெசினாத் தாண்டா இருக்கணும், அக்கம் பக்கம் எவனுக்கும் எவனையும் தெரியாது.’ கிராமத்தில் இருந்து வருபவர்களிடம் இந்த அங்கலாய்ப்பை அவர்களோடு சேர்ந்து பாடிவிடுவது என் வழக்கும். அப்படி எல்லாம் இல்லடா, இங்க என்னா எக்ஸ்போசரு, என்னா சொகுசு வாழ்க்கை என ஆரம்பித்தால் “ஏத்தமாகிவிட்டாது’ என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துவிடுவார்கள்.

காய்ந்து வெடித்த மண்வெடிப்புகளிலெல்லாம் சோவென மழை பெய்தது போன்று குளிர்ந்து இருந்தது மனது. எத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்துக் கொண்டாலும் நட்புக்குத் தனியாய் ரெனிவல் எல்லாம் தேவைப்படுவது இல்லை; விட்ட இடத்தில் இருந்தே தொடர்கிறது. இரவு வரை அவ்வளவு பேசினோம்.

இரவு. கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட். எவன் யாரை பிரிந்தாலும் துக்கிப்பதில்ø, கூடினாலும் சந்தோஷிப்பதில்லை அதன் பாட்டுக்கு தன் வேலையான கூட்டத்தை உளளிழுத்துத் துப்பும் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருந்தது. இருந்துட்டு போயேண்டா மாப்ள வில் என் குரல் கம்மியதை உணர்ந்தான்குமார்,. நீ வாடா குற்றாலம் சீசனும் வருது. சப்பக்கிட்ட சொன்னா ராஜமரியாதையோட வரலாம்டா என்றான். நிச்சயமாய் போய் வரவேண்டும் என நினைத்து கொண்டேன். அவனை அனுப்பி விட்டு வீட்டு போய் கொண்டிருக்கிறேன். உங்கள் குழப்பத்தையும் தீர்த்து வைப்பது கடமை.

சப்பை ஓடிப்போய் இரண்டு மாதங்கள் கழித்து வந்தவன் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் படித்து கொண்டே இருந்தான். வாரத்துக்கு ஒரு முறை எங்களை பார்ப்பான். அப்பொழுதும் படிப்பை பற்றியே பேசுவான். ஒரு நாள் போலிஸ் ஆகபோறேன்டா என்றவன். அதன்பிறகு ஒரு வருடம் அதற்கான முயற்சிகளில் மட்டுமே இருந்தான்.
இன்று குமரன் என்றால் அந்த சரக்மே நடுங்குகிறது. அவனுடைய அடிக்கு பயந்து கள்ளச்சாராய வியாபாரிகள் வேறு ஏரியாவுக்கு போய்விட்டார்கள். இப்பொழுதும் என் மொபைலில் அவன் எண்களுக்கான பெயர் சப்பை தான். அந்த இரண்டு மாதங்கள் எங்கிருந்தான் என்பதை இன்று வரை அவன் சொன்னதுமில்லை. நாங்கள் கேட்டதுமில்லை.

– ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *