அங்காடி உணர்வுகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2019
பார்வையிட்டோர்: 6,899 
 

சுப மங்களா ஸ்டோர்ஸ்

தன் பிரமண்டாத்தைக் காட்டி நடு நாயகமாக கடை வீதியில் வீற்றிருக்க, இந்த ஒரு கடையின் வாடிக்கையாளர்களையும்,
பணியாளர்களையும் நம்பியே பல சிறு குறு வணிகர்களின் வியபாரம் நடந்து கொண்டு இருக்கின்றன.

வெளியூரிலிருந்து வந்து இருக்கும் அத்துணை பணியாளர்களுக்கும் இங்கே உறைவிடம் கொடுத்து உண்பதற்கு ஏற்பாடுகள் செய்யபட்டு இருபது வருடமாக தந்தையான சுப.அழகு முத்து அவர்களால் செம்மையாக நடத்தப்பட்டு தற்போது இளைய மகன்
அழகு.சுப்பையா அவர்களிடம் ஒப்படைத்து ஒதுங்கி் நின்று ஆலோசனைகள் மட்டும் வழங்கி வருகிறார்.

பெரிய முதலாளியை பார்க்கனும் என்று வந்து நின்றார்கள் இரு பெண் ஊழியர்கள், இருவரும் பத்து வருடத்திற்கும் மேல் பணி செய்யும் கடையில் மூத்த ஊழியர்கள்.

ஐயா,வருகிற நேரம், போய் வேலையைப் பாருங்க, வந்தா சும்மா நிற்கிறதைப் பார்த்தா கோவிச்சுக்குவாரு! கிளம்புங்கள், என்று விரட்டினார் ஹால் சூபர்வைசர்.

அந்த நேரம், முதலாளிகள் இருவரும் இவர்களைக் பார்த்துக்கொண்டே கடந்து போனார்கள்.

அங்க ராணியும்,சுதாவும் ஏன் நிக்கிறாங்க? ஏதாவது பிரச்சினையா? – பெரிய முதலாளி.அவருக்கு அத்துனை பணியாளர் பெயர்களும் அத்துப்படி.

இவங்க இரண்டு பேரும் நேற்று கால் நரம்பு சுருண்டுடிச்சுன்னு ஓய்வு எடுக்கச்சொல்லி நம்ம டாக்டர் சொன்னதாக விடுப்பு கேட்டு வந்தார்கள்.

லீவெல்லாம் கொடுக்கமுடியாது, அப்படி இருந்தா வேலையை விட்டுட்டு ஊருக்கு போயிடுங்கன்னு சொல்லிட்டேன், அதான் நிற்கிறாங்கனு நினைக்கிறேன். என்றுக்கூறிவிட்டு தனது கேபினுக்குச் செல்ல முயன்றார் சுப்பையா.

நில்லு, சுப்பையா,

நீ ஊருக்கு போங்கன்னு சொன்னதுக்கு என்ன பதில் சொன்னாங்க? என்று கேட்டார்.

போக மாட்டோம்! என மறுத்திட்டாங்க.

காரணம் சொல்லியிருப்பார்களே?

ஆமாம் அவர்கள் போய்விட்டால் இதையே காரணமாக வைத்து எல்லோரும் சொந்த ஊருக்கு கிளம்பி விடுவார்கள், என்றார்கள்.

உண்மைதான்,சுப்பையா, எல்லோரும் ஒரே ஊர்க் காரர்கள், நண்பர்களாய் பழகி இருப்பார்கள், ஒரிருவர் கிளம்பிவிட்டதினால் புதியதாக சேர்ந்தவர்களும் கிளம்பிப்போக நினைப்பார்கள், பிறகு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கருதிதான் அவர்கள் போயிருக்கமாட்டார்கள்.

அவங்க மட்டுமில்லே நம்ம ஆண், பெண் என சக பணியாளர் அனைவருக்கும் இந்த பிரச்சினை இருக்கும்பா, அதை முதலில் புரிந்துக் கொள்.

எப்படினா அவங்க வேலை அந்த மாதிரி, பொழுதுக்கும் நின்றபடியே எல்லாரையும் கவனிக்கனும், அவங்களுக்கு பிடித்த துணிகள்,மாடல்கள் கிடைக்கும் வரை தேடனும், மாடல் நல்லா இருந்தா சைஸ் கிடைக்காது, சைஸ் சரியாக இருந்தா விலை கூட இருக்கும், இப்படி எத்தனையோ கஷ்டங்களைக் கடந்து. கஸ்டமருக்கு திருப்தியான, வேண்டிய ஆடைகளை அளிப்பதன் மூலம் நமக்கான லாபம் அதிகரிக்க செய்யும் தெய்வங்கள் அவர்கள்.

அதற்குத்தானே அப்பா, சம்பளம் தருகிறோம்.
பின்னே?

மெலிதாக சிரித்தார்.. சம்பளம் கொடுக்கிறது அவர்கள் நம்மிடையே ஒப்படைத்த அவர்களின் நேரத்திற்குத்தான்…
வேலையை திறம்படச் செய்வது என்பது அவர்களது மனநிலையும், உடல்நிலையும் பொறுத்தது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னே இருந்த உடல்நிலையும், வயதும், தெம்பும் தற்போது அவர்களுக்கு குறையும்தானே!

அவர்களை எல்லாம் நமது சொத்தாக பார்க்க வேண்டுமே தவிர இடையூறாகக் கருதக் கூடாது.

இந்த புதிய தலைமுறைக்கு அதைச் சொன்னால் புரியாது, அதை நீ உணர்ந்தால்தான் புரியும்.

சரி நான் பார்த்துக்கிறேன், நீ திருப்பதி போகனும்னு சொன்னியே எப்போ போகிறாய்? என்றார்.

இன்றைக்கு இரவு கிளம்புகிறேன். நாளை தரிசனம் என்றுக்கூறிவிட்டுச் சென்றான்.

திருமலை தரிசன வரிசையில் சுமாரன கூட்டம்தான் இருந்தது.

நின்றால் ஒரு மணி நேரத்தில் பார்த்து விடலாம் என்றார்கள்.

மதியம் பன்னிரென்டு மணி இருக்கும், திடீரென தரிசனம் அடைக்கபட்டதாகவும், நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்ற, நாடளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் தரிசனத்திற்கு வந்து இருப்பதாகவும் இனி ஐந்து மணிக்குத்தான் தரிசனம் என்ற தகவல்களுக்கு வர, சுப்பையா செய்வது அறியாமலும், வெளியேற முடியாமலும் நடுவில் மாட்டிக்கொண்டான், குழந்தையை தோளில் சுமந்தும், கீழே அமர முடியாமலும் தவித்துத்தான் போனான், நெடு நேத்திற்குப்பிறகு கால் நரம்பு பிடித்து இழுத்ததில் மயக்கமுற்று , அவசரமாக வெளியேற்றப்பட்டு
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார் சுப்பையா

நரம்பு சுருண்டதில் மயக்கமுற்று தெளிவடையும் நேரத்தில் டாக்டர் முகம் பார்த்த சுப்பையாவிற்கு அவர் பெருமாளாக இவனுக்கு தோற்றமளித்தார், அவர் அணிந்து இருந்த பேட்சில் V. வேங்கடன் என மங்கலாக தெரிந்தது.

தொடர்ந்து நின்றதனால் மயக்கம் வந்ததாகவும், தினமும் யோக பயிற்சியும், நல்ல சத்தான ஆகாரங்களை எடுத்துக்கொள்ளும்படியும் அறிவுரைகள் ஏனோ அவனுக்கு மட்டுமல்ல, நமது சொத்தான பணியாளர்களுக்கும் தான்,
என்பதை உணர்ந்த நொடியில்,

பிறர் நலனில் அக்கறைக் கொள்ளும் எவருக்கும் இறை அந்த நிமிடமே இறங்கி வந்து அருள் புரியும்

உடல் நிலையை கருத்தில்கொண்டு நேரடியாக தரிசனத்திற்கு தேவஸ்தான சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது கண்டு நெகிழ்ந்து போனார்.

அனைத்து பணியாளர்களுக்கும், தினமும் யோகாசனப் பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி, நல்ல சத்தான ஆகாரம், சுகாதாரமான ஓய்வறைகள் தரமான தங்கும் வசதிகள் என அனைத்தும் கிடைக்கப்பெற்று நகரத்தில் முன் மாதிரி நிறுவனமாக இப்பொழுதும் திகழ்கிறது சுப மங்களா!

Print Friendly, PDF & Email

1 thought on “அங்காடி உணர்வுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *