O, பூஜ்யமல்ல!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 26, 2022
பார்வையிட்டோர்: 4,930 
 

(1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கிலைட்டி ஸியாமினி சோமநாதர்!” வழக்காளியச் சத்தம் போட்டுக் கூப்பிடுறாங்க. வாய்க்குள்ள நுழயாட்டிலும் என்ன வடிவான பேர்? என்னப் பாக்கியமண்டு தான் கூப்பிடுறாங்க. சிவபாக்கியம், தவபாக்கியம், தங்கப்பாக்கியம் எண்டு வடிவாக் கூப்பிட்டா நல்லா இருக்குமே எண்டு சிலவேள நான் யோசிப்பன். எனக்கு வடிவான பேர் புடிக்கும். அதுக்கென்ன செய்யிற? மாங்காட்டுப் பள்ளிக்குடத்தில் ரெண்டு எழுத்துப் படிக்க அப்பன் அனுப்பேக்குள்ள, வெத்திலத் தோட்டத்துக்குள்ள கள்ளமொளிச்ச எனக்கு இந்த பேரு காணாதா? என்ர மகளுக்கு பத்மினி எண்டுதான் பேர் வெச்சிருக்கிறன்.

“வயது?” பேர்போன அப்புக்காத்தரய்யா கூட்டுக்க நிக்கிறதுட்டக் கேட்க்கிறார். அது எடுப்பாச் சோடிச்சிரிக்கி. இம்பிட்டுப் பெரிய திரிகாணிக் கொண்டக்காரி. முகத்தில போட்டிரிக்கிற பவுடர் இங்க மணக்குது. அப்படிச் சிவப்பியல்ல. சட்டைக்குக் கீழ இரிக்கிற வயித்துப் பாட்டில பொதுநிறம்.

“மாசியில் முப்பத்தொரு வயது முடியும்” நேத்துதான் சமஞ்ச பொடிச்சியாட்டம் இரிக்கு. அதுக்கு இத்தின வயசா? எனக்கென்ன வயசிரிக்கும்?

அப்புக்காத்தர்களும் பொரக்கிலாசிகளும் கேக்கிறதெல்லாத்துக்கும் ஆருக்கு பதில் தெரியும்? யப்பான்காரன் இந்தப் பக்கத்தில் குண்டுபோட்ட வரிசந்தான் நான் புறந்தனானாம். என்ர அம்மைக்கு இதுகளொண்டும் தெரியாது. அது வெறும் கிணாந்தி. அப்பனுக்கு ஒண்டும் நினப்பில்ல. அவரு படிச்சவரு. இளயாம்பி கடைக்குப் பேப்பர் படிக்கிறது. கேக்கப்போவார். அந்தத் தருமராசா கதை யெல்லாத்தயும் நெஞ்சில வெச்சிரிக்கிற மனுசனுக்கு இதுகள் தெரியாது. ஆனா விதானயார் மெய்யாக் கனக்கப்படிச்ச ஆள்தான் ஊரில் உள்ள எல்லார்ற புறப்பு வளப்பெல்லாம் அப்படியே சொல்லுவார். தோம்பர் இரிக்கிறார். அறளை புடிச்சகிழவன்.

“காதற் திருமணம் தானே?” இதுதான் குறுக்குக் கேள்வியாக்கும். இப்படித்தான் கேப்பாங்க எண்டு அன்னம்மா மச்சாள் சொன்னது. காசி வாங்கிப் பேசுற அப்புக்காத்த ரல்லுவா? சும்மா உடுவாரா?

“ஓம்.” கூச்சப்படாம, வெக்கப்படாம ஒத்துக் கொள்ளுறாள். இதுகளெல்லாம் காதலெண்டு சொல்லுதுகள். போனகிழம் அந்தத் தேத்தாத் தீவுப் பள்ளியில படிக்கிற ஆரோக்கியம்-சாமத்தியப்பட்டு மூண்டு மாசந் தானாம் ஆரோடயோ ஓடீட்டாளாம். இப்பிடி ஒடிப்போறதும் காதவாக்கும். இதுகும் எந்தப் பள்ளியில் படிக்கேக்கிள்ள, ஓடிப் போச்சுதோ? விதானயார்ற மோதவில தான் என்னப் புளியந்தீவுப் பொடியன் கணபதிக்குக் கட்டிக் குடுத்த முன்னும் பின்னும் இவரத் தெரியவும் மாட்டுது. ஒரு நாள் எங்கட ஊட்டுக்கு விதானயார் தான் கூட்டியந்தார். அப்ப அப்பு உசிரோட இரிக்கி. இவர் ஆள் நல்ல சிவலயும் களிக்குத்திமாதிரி . சோக்கான உடுப்புத்தான். அப்பு ஒரு நாளும் சேட்டுப் போடமாட்டுது. சுருட்டயெண்டாலும் இவர்ட மயிர்தான் சுருட்டை.

“என்னைப் பார்த்துச் சொல்லும்” அப்புக்காத்தர் உறுக்குகிறார்.

அண்டைக்கு இவர் வெச்ச கண் வாங்காமல் என்னப் பாக்கிறார். என்னை எல்லாச்சனங்களும் கொத்துக்க இரிக்கிற மாம்பழமெண்டுதான் சொல்லுவாங்க. புளியந்தீவில ஓடாவி வேல செய்து நல்லாச் சம்பாரிக்கிறாரெண்டும் விதானயார் சொன்னார். எல்லோருக்கும் புடிச்சுப்போச்சு. எனக்கும் புடிச்சுசிட்டு,

முத்தவெளி விலாவுப் பக்கமாக இரிக்கிற வாக மரத்தடியில வந்து குந்துறன். என்ர மகள் என்ர அம்மையோட சண்டைக்கு நிக்குது. அது என்னதக் கொட்டித்தள்ளுது கடலக்கொட்ட கேட்டு அது புடிக்கிற சண்டயப் பாக்கவேணும். ஒரு காசிக்கு வேண்டிக் குடுக்கிறன். அம்மையும் நானும் ஒரு வாய்க்கு வெத்தில் போட்டா என்ர வாய் எப்பவும் நல்லாச் சிவக்கும். வாய் சிவத்தால் புரிஷன் சீவனை வெச்சுப் பிரியமா இரிக்குமாம்.

எங்கட ஊடு, வெட்டுக்காட்டு துண்டில் புதிசாக் கட்டின பெரிய ஊட்டுக் களுக்குக் கிட்டத்தான் இரிக்கு. ஆனா அயலட்டயில கூப்பிட்ட குரலுக்கு உதவியில்ல. அந்தப் பெரிய ஊடுகளிலயும் மனுஷங்கதான் சீவிக்கிராங்க. ஆனா அதுகள் எங்கள எங்க மதிக்கு துகள்? என்ர இவருக்கு ஓடாவி வேல, வஸ்கொம்பனியிலதான். அண்டக்கு வெள்ளிக்கிழம். தாவரிப்பு வளக்குகள வெள்ளிக்கிழமயளிலதானே கூப்பிடுறாங்க. இவர் நாயித்துக்கிழமயிலதான் ஊட்டில நிப்பார். கொஞ்சம் பூசீட்டா அடுப்படிய விட்டு உசும்பமாட்டுது மனுஷன். சனியில ஒரு தியால வேலதான் அண்டக்குத்தவறணப் பக்கம் போச்சுது எண்டால் கரிக்கலுக்கதான் வரும். எழுவான் பக்கம் இந்தாள் போனாலே எனக்கு நெஞ்சுக்க இடிதான் நாங்களென்ன ஏசண்டுத்தொரயோ? அவர் வேலக்குப்போனா மகளத் தூக்கிக் கொண்டு காணிக்கமாதா கோயிலடிக்கு வந்து கறியப் புளிய வாங்கிறனான். ஓடி ஆடிச் சமச்சு வெச்சிட்டா, பொடிச்சிர முஸ்பாத்தியில இரிக்கிலாம். மாங்காட்டில் இரிக்கேக்குள்ள பக்கத்து வீட்டிலயெல்லாம் போய்க்கதைப்பன். இஞ்ச அயலட்டயில் பேச்சுத்துண இல்லாம வாய் புளிச்சுப் போகும். அம்மை இஞ்ச ஆசை அரிமயா வந்தா உண்டு, ஆனா அதுவும் வந்து ரெண்டு மூண்டு நாள் தங்கினா அவர்ற முகம் கறுத்துப்போகும். நான் என்னத்தக்கண்டன்? களுதாவளயான்ர புண்ணியத்தில தான் அந்த நோனாக்கா வந்து சேந்தாளெண்டு முதலில நினச்சன்.

இவர் சாட்சி ஊட்டடியில நிண்டு விதானயாரோட கதைக்கிறார். பாவியப்போல நிக்குது. உடம்பும் இளச்சுப் போச்சு ஆனா இந்த மனுஷன் எனக்குச் செய்த வேலய நினச்சுப் பார்த்தா…. துரோகி. வில்லியம் வாஸ் கொஞ்சம் கிழவன்தான். வஸ் கொம்பனியிலதான் ஓடாவி. தல பஞ்சுப்பெட்டிதான். ஏதோ பேச்சில தன்ர பொஞ்சாதிய இஞ்ச கூட்டிக்கு வந்து இரிக்கிறதுக்கு வீடில்ல எண்டு சொன்னதாம் மனுசியும் நல்லது தனக்குத் தெரியுமெண்டு இவர் சொன்னார். எனக்குப் பாவம் போல இரிந்தது. இவரே நாங்க இரிக்கிற வெட்டயில ஒரு குடில் போட்டுக் குடுத்திட்டார் சண்டாளி அவள் இப்படிப் புரிஷன் கொள்ளி எண்டத நான் எப்பிடிக் கண்டன்? மாங்காட்டில் இரிக்கேக்குள்ள களுவாஞ்சிக்குடி வக்கர்ற பொஞ்சாதிய எனக்கும் தெரியும் வதுளச் சிங்களத்தி தமிழ் கதைக்கிற கிளிபோலத்தான் ஆனா இந்தத் தட்டுவாணி கூட என்ன வடிவாத்தமிழ் கதைக்குது.

“டியே, புள்ள வழக்குக் கூப்பிட்டாலும் நீ இஞ்ச நிக்கிறே!” என்ர அம்மை சும்மா இரிக்காது. எப்பவும் அவதிதான்.

பொம்புள வழக்காளியள் நிக்கிற பக்கம் போறன். அப்புக்காத்தரய்யா நல்லாத்தான் கழத்துறார்.

“உன் புருஷன் வேலைக்காரியுடன் தொடுப்பு என்பதை நீ கண்ணால் பார்த்திருக்கிறாயா?”

“திருமதி சோமநாதர்! கேட்பதற்குப் பதில் “

“இல்லை தானும் என் கணவரும் கூட்டென்று வேலைக்காரியே என்னிடம் சொன்னாள்”.

எதிரில் எதிரியா நிக்கிற தொர பாவம் பெரிய உத்தியோகமாக்கும் மிரிச்ச இடத்துப் புல்லுக்கூடச் சாகாது. அப்பிடிச்சாங்கம்.

“ஏன் உன் வேலைக்காரி உன்னிடம் பொய் சொல்லியிருக்கக் கூடாது?”

என்ர மச்சாள் அன்னம்மா சொன்னது மெய்தான். அவளுக்குக் கோடு கச்சேரியெல்லாம் ஏறிப் பழக்கம் ரெண்டு தரமெல்ல தாவரிப்பு வழக்குப் பேசியிரிக்கிறாள். உடுப்பில பாத்தாப் படிச்ச மனுஷி போல இரிக்கு. மெய்யாப் பேய் மனுஷிதான். தன்ர புரிஷன் வேலக்காரியோட தொடுப்பெண்டால் அவள ஊட்டவிட்டுத் துரத்திப்போட்டுப் புரிஷனோட இரிக்கிறதுதானே? இதுக்கெல்லாம் கோடேறிச் சங்கை குறயிறதா?

இந்தக் கண்மாணிக்கத்தாண நான் ஒருக் காலும் நினக்கேல்ல. வாஸின்ர பொஞ்சா தியோட இவர் தொடுப்பெண்டு, ரெண்டு பேரும் சரசமா, சளசண்டியா, பேசுவாங்க. அந்த மனுஷியுமோ இவருக்கு மூப்பு. நீண்ட பல்லும், குரங்குபோலத் தான். இவரத்தம்பி எண்டு கூப்பிடும். கன்னத்து மசிர் கூட ஐஞ்சாறு நரச்சுப் போச்சு . போயும் போயும் அவளோட … நான் கறிபுளி வேண்டக் காணிக்க மாதா கோயிலடிக்குப் போனா, வேரூண்டி நின்றிடுவன். அவள் தாண்டவன் வெளிக் கனகம்மா வந்தாளெண்டால் கேக்கவா வேணும்? கனகம் நல்லவள். மனதுக்க ஒண்டுமில்லை. ஊர்க்கதை எல்லாம் வரும். நான் காணிக்க மாதா கோயிலடிக்குப் போகேக்குள்ள இவர் வஸ் கொம்பனிக்கு முன்னால இரிக்கிற தேயிலக் கடயிலதான் நிப்பார். இந்தாளுக்குத் தேயிலப் பயித்தியமும்.

அண்டைக்கு வரக்குள்ள மகளும் குழப்பம் எடுத்துட்டாள். பொட்டிக் காரணிட்ட மலிவாச் சள்ளமீன் கோருவ கிடச்சுது. சந்தியடிக்குப் போகாம சட்டுப் புட்டெண்டு திரும்பீட்டன். என்ர கண்ணில் காட்டத் தான் மாமாங்கத்தான் அனுப்பினான்.

பக்கூசுக்கதவு ஒள்ள கெழுஞ்சிரிந்துது, கோழி கீழி வீட்டுக்குள்ள போய் எடுத்து வெச்ச கூப்பன் அரிசியக் குடிக்கு தெண்டு தான் நினச்சன். ‘சூ’ எண்டு விரட்டிக் கொண்டு உள்ளுக்க பாய்ஞ்சு போனா…எனக்கு நெஞ்சுக்க உலக்கயால இடிச்சது போலதான் இரிந்துது. நான் இவரோட படுத்துத்தான் இந்தப் பொடிச்சியப் பெத்தனான். புரிசனோட படுக்க என்ன வெக்கம்? ஆனா இந்தக் கிழட்டுக் கூதி பட்டப்பகலில உரிஞ்சுபோட்டு என்ர புரிஷனோட….அவளுக்குத் தான் அடங்கா அமர் எண்டால், இந்தக் கண் அவிஞ்சுபோவானுக்கு என்ன மதி? எனக்குச் சரியாத் தான் பத்தி வந்திச்சு. எனக்குக்கோவம் வந்துதெண்டால் அடக்கேலாது. அப்பு சாகும் வரைக்கும் என்னக் கோவக்காரி எண்டு தான் சொல்லும். வந்த விசரில, பொடிச்சிய மூலையில போட்டுட்டு , வாருவக்கட்டு எடுத்து நோனாக்கு நல்லாக் குடுத்தன். இது ஒரு ரோஷம் கெட்ட மனுஷன். “டியே, மாங்காட்டில் குளத்துச் செல்வன் மீன் கண்ட உன்னக் கூட்டிக்குவந்து, நேரந் தியாலம் தப்பாமல் தீண்போட்ட கொழுப்பா? பறவேசை! இண்டக்கு, இப்பவே கொம்மையிட்ட போயிடு” எண்டு ஊரெடுக்கக் கத்தீச்சிது. இவர் வாயத் துறந்தால் புடயன் பாம்பு வாயத் துறந்தாப்போலதான்.

இழவெடுத்த கோட்டடிக்கு வந்தால் தூங்கவேணும். அன்னம்மா நாலும் அறிஞ்சவள். விளக்கத்துக்கு எடுத்த அந்த வழக்கத் தான் நடக்குது. என்ன கண காட்டில் நான் பட்டிட்டண் டாப்பா . ஒரு சுதியில் பேசிட்டுப் போறார், மறுகாச் சரியாப் போயிடு மெண்டுதான் நான் சமச்சுச் கிமச்சு வெச்சன் . பொழுதுபட்டு ராவாப் போச்சுது. ராக்கண் முழிப்புத்தானாக்கும். பொடிச்சியோட ராக்கண்

முழிச்சதுபோக, இப்ப இந்த மனுஷன் குடிக்கிறது தான்; வெறிக்கிறது தான். குடிச்சால் இப்பிடியா தலைகால் தெரியாம நிதானம் போயிடும்? இந்தச் சோக்கில அந்தச் சிங்கள நோனாவயும் கூட்டியாந்தார். அவளம் குடிச்சிரிக்கேணும். இல்லாட்டிச் சட்டைக்க மேலால பாச்சியக் காட்டிக்கொண்டு கட்டயில போற கையால எனக்குப் போட்டார். ராத்திரி இவர் அவளக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு படுக்க, நானும் பொடிச்சியும் அப்படியே அடுப்படியில படுத்துக் பொடுகீட்டுக் கிடந்தம். இந்த மனுஷன் என்ன மாடா ? ராவெல்லாம் பொடிச்சி ஊரெடுக்கக் கத்தினது காதில உழெல்லயா? அந்த ஆள்கொள்ளி வத்தாப்புறகு எனக்கு என்ன வேலை? நான் மாங்காட்டுக்குப் போயிட்டன். அப்பன் செத்துப்போனாலும், அம்மை உடப்போகுதா?

மாணிக்கனுக்க நெடுகயும் என்னில ஒரு கண்தான். போகக்குள்ள வரக்குள்ள குறுக்கறுத்துப் பாப்பான். இப்படித்தான். பூமணி அவள்தான் புதுக்குடியிருப்பானுக்கு. வாழ்க்கைப்பட்ட பூமணி-புரிஷனோட கோவிச்சுக் கொண்டுவந்து மாங்காட்டில் இரிந்தாள்.

புறகு என்ன புதினமெண்டால் வயிரவனுக்கு வாழ்க்கப்பட்டு, அவனுக்கு ஒரு புள்ள பெத்தாள். ஊர் தேசமடிச்சுச் சொந்தப் புருஷன் திரும்பி வந்து கூப்பிடக்குள்ள, அவன்ர புதுக் காசில மயங்கி, இவன விட்டு அவனோட ஓடீட்டாள். இதென்ன சீர்கெட்ட வாழ்க்கை ? ஒவ்வொரு புரிஷனுக்கு ஒவ்வொரு புள்ளயப்பெத்துச் சீவிக்கிறது. மதம் கொழுத்தவள், தான துரோபதி அம்மனெண்ட நினப்பு.

“உன் கணவர் யோக்கியமானவர். அன்புத் தந்தையாகவும் ஆசைக்கணவனாகவும் வாழ்ந்திருக்கிறார். மீண்டும் ஒரு தடவை ஏன் அவருடன் வாழ்ந்து பார்க்க கூடாது?” நீதவான் நல்ல மனுஷன், அப்பனப் போல புத்தி சொல்லுறார்.

“நான் மாட்டேன். அவர் எனக்கு வேண்டாம்.” மனுஷி ஒத்தக்காலில் நிக்கி.

“அப்படியானால் தாபரிப்புத் தொகையை அடுத்த தவணையில் நிர்ணயிக்கிறேன். அடுத்த தவணை, ஜுன் மாதம் நாலாந் திகதி.”

“மகேஸ்வரி…மகேஸ்வரி..”

அடுத்த வழக்கை விசாரணைக்கு எடுக்குறாங்க. என்ர வழக்கை எப்ப எடுக்கப் போறாங்களோ? நான் அம்மையும் பொடிச்சியும் குந்தியிருக்கிற இடத்துக்கு வாறன். சோனகர்ட பள்ளி வாசலுக்கிட்ட கூட்டமாக்கும். இதென்ன கூட்டம்? மாமாங்கத்தான்ர தீத்தத்துக்குச் சே சே எண்டுதான் சனம், அண்டக்கு என்னக் கும்பிடவும் உடல்ல. ஆளுக்கு நல்ல தண்ணி. குடிச்சால் இப்படித்தான். வீண் கணகாட்டு ஏன் எண்டு யோசிச்சி, திரும்பினன். வரக்குள்ள என்ன நடுறோட்டில நிப்பாட்டிட்டுப் போய்க் குடிச்சிட்டு வந்தது. இடஞ்சல் வந்து மூண்டு நாள் தான். கொயிலுக்கு போற துக்காக முழுகினனான். பொடிச்சியப் பெத்த புறகு வந்த முதல் இடஞ்சல், கலங்கலாப்பட்டுக் கொண்டே இருந்துது.

சொன்னாக் கேக்குதா மனுஷன். ஒரு கட்டு மட்டு இல்லயா? நெடுக நெடுக எண்டால்? குடிச்ச அண்டைக்கு கட்டாயம்….நான் ஒண்டுக்கும் மறுப்புச் சொல்லுறதில்ல. அண்டைக்கு இடுப்ப அடிச்சுப் போட்டது போலத்தான். பாவாடை யெல்லாம் ஒரே துவால. வெத்திலத் துப்பல மிரிச்சுட்டன். புல்லில மிரிச்சுத் துறச்சன்.

கைகால் இரிக்கு. புழச்சுத் தின்னலா மெண்டு நினச்சன். என்ர சின்னம்மைக்காரி கோட்ட முனயில் இரிக்கிற அரிசி மில்லில் தான் வேலை. எனக்கு அங்க வேலயொண்டு வாங்கித் தாறதாகச் சொன்னது. சின்னம்மைக்காரி நல்லவளென்டுதான் நினச்சிரிந்தன். எனக்கென்ன சூதுவாது தெரியும்? ஒரு நாள் அண்டக்கு மத்தியானம் வயித்துக்க எக்கச்சக்கம். காட்டுக்குப் போய் இரிந்திட்டு, தோட்டப்புட்டி மடுவில அடியக்கழுவலாம் எண்டு எட்டிப் பாத்தா …… அங்க, என்ர சின்னம் மைக்காரியும் பொம்புளக்கந்தன் சிவலப் போடியும்…தூ! பட்டப்பகலில் கோழி மிரிக்கினம். புறகு நான் சின்னம்மைக்காரியோட பேசுறல்ல. ஒமோம், மில்லில வேல செய்யுறவள் ஆர் தான் யோக்கியம்? பொழுது கிறிகீட்டா, காசிக்குக் கடப்புத் தூக்கிறவளவதான். நான் தான் எப்பிடியோ? இந்தப் பொடிச்சியத் தாவரிக்கிறது ஆர்? ஒரு பொழுதுக்கு, ஒரு தியாலத்துக்கு , தேவயெண்டால் ஒம்பது புரிஷனும் தேடிக்குவலாம். ஆனா சாகுமட்டும் பொடிச்சியயும் வெச்சுத் தாவரிக்கிறதுக்கு =… விதானயார் லேசான ஆளில்ல. அவர்தானே தாவரிப்பு வழக்கு வெக்கப் புத்தி சொன்னவர். “இவங்களச் சும்மா விடக்குடாது. ஒரு பொடிச்சியக் கடசிமட்டும் காப்பாத்துறன் எண்டு சொல்லிக் கட்டுறது. அவளுக்கு ஒரு புள்ளயக் குடுத்திட்டு இன்னொருத்தியோட ஓடுறது. உனக்கில்லாட்டியும், அந்தப் பொடிச்சின்ர தாவரிப்பு வழக்குவை. அப்பதான் அந்தச் சிங்களப் பலகாரததின்ர இனிப்பில போனவன் திருந்துவான். எண்டு விதானயார் விடாப்புடியாச் சொன்னார். இண்டைக்குத் தான் வழக்கு விசாரணைக்கு எடுப்பாங்க. எப்ப எடுப்பாங்களோ?

நான் இப்பவும் குமரப் போலத்தான் இரிக்கன். செட்டி பாளயத்து மாணிக்கனப் பாத்துச் சிரிச்சாப்போதும். அவன் என்ன ஓடாவி வேலயா? சொந்தப் பூமி வெச்சி வெள்ளாம செய்யிறவன். ராசாத்தியப்போல தான் என்ன வைச்சிரிப்பான். அவனும் ஒரு மாதிரியாம். அவண்ட மனத ஆர் கண்டது? செல்லன்ர அக்கை தாலியறுத்து மூண்டு வரிஷம். இப்ப புள்ள பெத்து இரிக்கிறாள். மாணிக்கத்துக்குத்தான். பெத்தவளெண்டு சத்தியம் பண்ணுறாள். இந்த ஆம்புளயன்ற குணமே இதுதான். ஒண்டோட அடங்கிறல்ல. நான் எப்பவும் அலுப்புச் சலிப்புச் சொல்லுகிறதில்ல. எந்த வெறியில வந்து உடம்ப முறிச்சாலும் உடுவன். இவர் சொல்லுகிறபடியெல்லாம் ஆடுவன். இதுக்குத்தானே ஒரு பொம்புளய ஒரு ஆம்புள இச்சப்பட்டு எடுக்கிற எண்டு நினப்பன். ஆனா கடைசியில் அந்தச் சிங்களத்திதான் இனிச்சாள்.

“பாக்கியம்!” எண்டு விதானயார் என்ர பொரக்குலாசிக்குக் கிட்டவந்து நிண்டு கூப்பிடுகிறார். அவருக்குப் புறக்குக்கு இவரும் நிக்கிறார். பொரக்சிலாசி ஐயாவுக்கு அம்மை தன்ர தோட்டை ஈடு வெச்சுத்தான் காசி குடுத்தவ . நாயம் தெரிஞ்ச மனுசனாம்.

“கணபதி உன்னத்தான் திரும்பி ஏத்துக்கிறானாம். இனிக்கைவிட மாட்டானாம்.”

“அந்தச் சிங்களத்தியோட என்னயும் ரெண்டு மாடாய் வெச்சிரிக்கப் போறாராக்கும்.

இப்பத்தான் இவர் வாயத் துறக்கிறார். நான் வெட்டுக்காட்டில இரிந்து போய் ஒரு வரிஷம் இரிக்கும். இரண்டு தவணைக்கு வந்து முகத்த நிமிந்து பார்க்கேல்ல. இண்டக்குத்தான் தூரத்தில நிக்கேக்குள்ள பாத்தன். இப்ப பாக்க இரக்கமா கிடக்கு.

“என்ர கிளியான்ர அரும தெரியாம துரோகம் செய்துட்டன். அந்தத் தட்டுவாணியின்ர மயக்கம் தெளிஞ்சு போச்சு. பெரிய கணகாட்டுப் பட்டுட்டன். அவளுக்குச் சவுக்காரத்துக்கும் பவுடருக்கும் என்னால உழைக்கேலாது. ரெண்டுபேரும் சேர்ந்து குடிச்சா என்ன மிச்சம்? உன்ர தாவரிப்பு வழக்கு நோட்டீஸ் வந்த அடுத்த நாளே ஏறாவூர் தங்கவேலனோட ஓடீட்டாள். இப்ப அந்தப் புரியனக்கொள்ளி காளவாய்ச் சேனயில இரிக்கிறாளாம்.”

அம்மையும் பொடிச்சியத் தூக்கிக் கொண்டு நாங்கள் பேசின இடத்துக்கு வருகுது.

வழக்கப் பேசின இம்புட்டுப் பெரிய திரிகாணிக் கொண்டக்காரி தன்ர பொரக்கி லாசியோட பேசிக் கொண்டிரிக்கிறாள்.

“கசாது அழிக்கக்கூடாது. அவருடைய சம்பளத்திற்கு இறுநூறு ரூபாவாவது தாபரிப்புக் கிடைக்கும். அதை வைத்துக்கொண்டு, நான் என் இஷ்டம் போல வாழ்வேன். அவருக்கு நான் நல்ல பாடம் படிப்பித்துக் காட்டுவேன்.

“அது உங்கள் இஷ்டம். வாங்கின பணத்திற்காக நான் வழக்குப் பேசுவேன்.”

அதுக்கிடையில என்ர பொடிச்சி அப்பனில இறாஞ்சித் தாவுது.

“அவரும் கண்ண மூடீட்டார். இனி ஒருக்காலும் என்ர மகளக் கைவிட மாட்டனெண்டு களுதாவளயான்ர கொயிலில் கைப் பூரம் அடிச்சு சத்தியம் பண்ணித் தந்தாத்தான் என்ர மகள் மருமகனோட அனுப்புவன்” எண்டு அம்மை விதான யாரிட்டச் சொல்லுறாவு,

“என்ன கணபதி?”

“அதுக்கென்ன?”

“சத்தியமா?”

“சத்தியமா. களுதாவளப் புள்ளை யாரறியச் சத்தியம். என்ர புள்ளயாணச் சத்தியம்.”

“இவ்வளவு காலமும் இல்லாத உருக்கம் இப்பதான் மகளில் புறந்திருக்கு” எண்டு நான் முகத்தச் சுழிக்கிறன்.

“அப்ப வழக்கு?” பொரக்கிலாசி கேட்கிறார்.

“சமாதானமாகப் போறமெண்டு பாக்கியம் கோட்டில் சொல்லும்” விதானயார் உலகம் அறிஞ்ச மனிஷன்.

பொடிச்சி அவர் வாங்கிக் குடுத்த டொப்பியச் சூப்பிறாள். அம்மை பாவம். வெத்திலயச் சப்புது.

“அக்கினேஸ் செபத்தியாம்பிள்ளை!” அடுத்த வழக்கை விசாரணைக்கு எடுக்குறாங்க. மச்சாள் சொன்னது சரிதான். என்ர வழக்கை எப்பதான் எடுக்கப்போறாங்களோ? இந்த மனுஷன் மகள் மடியிறக்குதுமில்ல.

– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *