கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 2,593 
 

அபலையர் காப்பகம் என்ற பெயர்ப் பலகை, அந்தப் பெயருக்கு உரியவர்களைப் போலவே, எளிமையாகத் தோற்றம் காட்டியது. ஆனாலும், எளிமையும் ஒரு அழகு என்பதை விட, எளிமைதான் எழில் என்பது போல் – அதே சமயம் தான் என்ற கர்வம் இன்றி காட்சியளித்தது. இந்தப் பலகையை தாங்கும் இரும்பு கம்பிகள், லி ங்கங்கள் போலவும் அவை பொருத்தப்பட்ட மதில்சுவர்கள் ஆவுடையாகவும் தோற்றம் காட்டின. இவற்றிக்கு இடையே வாய் மூடிக் கிடக்கும் இரும்புக் கிராதி. கதவுகள். இப்போது திருவாய் மலர்ந்தருளின. கண்ணபிரான், திருவாய் திறந்து, அதற்குள் அடங்கிய அண்ட சராசரங்களை, யசோதைக்கு காட்டியது போல, உள்ளே மண்டிக் கிடக்கும், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் ஆகியவற்றை காட்டியது. கூடவே, கண்ணபிரான், காட்டியிருக்காத தொலைபேசிக் கண்ணாடி அறை, அச்சுக் கூடம், நகலகம் ஆகியவற்றை வீடுபடுத்திய சின்னச் சின்ன கட்டிடங்களையும், தையல் கூடம், செயற்கை வைரத்திற்கு பட்டை திட்டும் தொழிலகம், தச்சுப் பட்டறை, பள்ளிக் கூடங்கள், சொற்பொழிவு மண்டபம், அப்போதுதான் கட்டப்பட்ட திறந்த வெளிக் கலையரங்கம் முதலி யவற்றையும், பனித்துளி பனை போல் காட்டி கொண்டிருந்தது.

தாழ் திறந்த அந்த வாசல் வழியாக, குட்டாம் பட்டியர்கள் உரிமையோடு உள்ளே போய்க் கொண்டிருந்தார்கள். வெளி வாசலில் இருப்பக்கமும் நின்று கொண்டிருந்த காப்பகத் தலைவர் லூதர்மேரியும், இளங்கோவும், வந்தவர்களுக்கு, மனமார தலை தாழ்த்தி, வாயாரச் சிரித்து வரவேற்றார்கள். கூட்டத்தினரும் இளங்கோவை வணக்கங்கையா’ என்றும், மேரியை “வணக்கங்கம்மா’ என்றும் சொல்லிக் கொண்டே உள்ளே போனார்கள். சாதாரண வேட்டி சட்டையுடன், கால நேரம் என்பது தன்னைத் தான் பின்பற்ற வேண்டும் என்பது போல் கையில் ஒரு கடிகாரம் கூட இல்லாமல், சூரியப் பிரகாசமான முகங்கொண்ட இளங்கோவையும், வாயில் புடவையுடன், அடக்கமே கம்பீரமாக தோன்றிய லூர்துமேரியையும், அப்போதுதான் பார்ப்பதுபோல் பார்த்தார்கள். ஒவ்வொரு தடவைக்கும், ஒரு புதுப் பொலிவைக் கொடுக்கும் நாற்பது வயதுக்காரர்கள்.

எதிர்ப்பக்கம் ஒரு சுழல் விளக்கு கார் வருவதைப் பார்த்ததும், இளங்கோவும் மேரியும், தோள் மேல் தோளுரச, இணைந்து முன்னோக்கி நடந்தார்கள். அந்தச் சமயம் பார்த்து வாசல் கூட்டத்தில் கசாமு.சா… என்ன காரணத்தாலோ காப்பக மேலாளர் தனசேகரன், கூட்டத்தை உள்ளே போகவிடாமல் தடுத்தான். உடனே ஒரு சண்டியர், கூட்டத்தின் தாற்காலிக தலைவராகி கத்தினார்.

‘நாங்க போகக் கூடாதுன்னா… இன்னார் இன்னார்தான் வரணுமுன்னு, போஸ்டர்ல போட்டிருக்கலாமே… எதுக்காக அனைவரும் வருகன்னு போஸ்ட்டர்லயும், வரவேற்பு வளைவுகளிலும் போட்டிங்கப்பா…’

‘ஒரு தடவையா வருகன்னு போட்டாங்க? ரெண்டு தடவைல்லா போட்டாங்க…’

அவ்வளவுதான். ஆளுக்காள் பேச்சு. அது முற்றி ஏச்சு. க்ைகு கை வீச்சு. குரல்… கூக்குரல்.

சுழல் விளக்கு காரை நோக்கிச் சென்ற இளங்கோவும் மேரியும், காரிலிருந்து இறங்கிய ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி கூப்பிய கைக்கு, பதில் வணக்கம் போடாமலே, அவசர அவசரமாய் வாசல் பக்கம் ஒடி வந்தார்கள். எஸ்.பி.யின் கண்ணசைவு கட்டளையை தன்ல மேல் சூடியது போல், வாசல் பக்கம், லத்தி வீச்சுக்களோடு ஒடி வந்த போலீஸ்காரர்களை காப்பகத் தம்பதி, கையாட்டி, முகமாட்டி, அவர்களை பாதி வழியிலேயே நிற்க வைத்தார்கள். கூட்டத்தினர் இளங்கோமேரி சோடியை பார்த்தது பெட்டிப் பாம்பானார்கள். ஒவ்வொருவரும், ஏதோ ஒரு வகையில் இந்த

காப்பகத்தின் உதவியை பெற்றவர்கள். என்றாலும் உதவி பெறாத, ஒரு வெளியூர் விருந்தாளி மட்டும், சிறிது காட்டமாகக் கேட்டார்.

‘எங்கள வரச் சொல்லி இப்படி மட்டம் தட்டபடாது’

‘நீ சும்மா இரு மச்சான்… அம்மாம்மா… நீங்க போனத சாக்கா வச்சி, இந்த தனசேகரன் எங்கள தடுக்காரு…’

லூர்துமேரி, கருணையையும், கண்டிப்பையும் வார்த்தைகளாக்கி உதிர்த்தாள்.

இது உங்க காப்பகம்… உங்களோட உழைப்பால் உருவான அமைப்பு இது… உங்களை தடுக்க எங்களுக்கே உரிமை கிடையாது. தம்பி தனசேகரா! உங்களுக்கு, தனி ஆவர்த்தனம் செய்யனுமுன்னு ஆச வந்துட்டு. பேசாம ஏதாவது ஒரு ஊருல போய் செய்துட்டுப் போங்க… அதுக்காக எங்க சனங்களை தடுத்து… காப்பகத்துக்கு ஏன் கெட்ட பேர் வாங்கி கொடுக்கிங்க?”

‘சாப்பாடு போதாதுன்னுதான் மேடம்’

‘இப்ப கூட தனி ஆவர்த்தன முயற்சியை நீங்க மறுக்கலியே… சரி போகட்டும்… சாப்பாட்டுக்காக சனங்களா… சனங்களுக்காக சாப்பாடா… பற்றாக்குறை ஏற்பட்டால், தென்காசிக்கு போய் வாங்கிட்டு வந்தா போச்சு… வாங்கம்மா… வாங்கய்யா… நாங்களே உங்கள கூட்டிட்டு போறோம்.’

இதற்குள், அந்த தம்பதியர் நேரில் வந்து வரவேற்பதற்காக சுழல் விளக்கு கார் பக்கம் நின்ற எஸ்.பி., எதையும் காட்டிக் கொள்ளாமல், இளங்கோ.மேரி தம்பதி பக்கம் வந்தார். இளங்கோ, அவரது கையைப் பற்றிக் கொண்டு முன் நடக்க, மேரி பின் நடக்க, கூட்டம் முழுவதும் அவர்கள் பின்னால் நடந்தது. நடந்த விவகாரத்திற்கு காரணமான தனசேகரனை, கண்களால் நிமிட்டிக் கொண்டும், காப்பகத் தம்பதியை, பயமற்ற பக்தியோடு பார்த்துக்கொண்டும், அவர்களுக்கு வாழ்க என்ற முழக்கத்தை முழங்க, வாயைத் திறந்து வைத்துக் கொண்டு பின்னர் அந்த முழக்கங்கள், அவர்களுக்கு பிடிக்காது என்பதை உணர்ந்து, அதே சமயம் திறந்த வாய், பயன்பட வேண்டும் என்பது போல், அக்கம் பக்கம் பேசிக் கொண்டும், சிறிசுகள், இலை மறைவு காய் மறைவாய் சோடி சேர்ந்து கொண்டும், பெரிசுகள், உறவினர்களை தவிர்த்து, உற்ற நண்பர்களை தேடிப் பிடித்து சேர்ந்து கொண்டும், உள்ளே போனார்கள்.

காப்பகத்தின் உள்வளாகம், மாவிலைத் தோரணங் களாலும், மல்லிகைச் சரங்களாலும், காகித கலர் நட்சத்திரங் களாலும், ஆகாயப் பந்தலாய் மின்னியது. இதன் அடர்த்தி, சூரியக் கதிர்களை கட்டிப்போட்டது. வழக்கமான திரைப் படப் பாடல்களுக்குப் பதிலாக, வைஷ்ணவ ஜனதோவிலிருந்து, ஒராயிரம் சூரியன் உச்சி திலகம் வரை பாடல்களாக ஒலித்தன.

ID மேடையில், பக்க வாட்டில், இரட்டை இருக்கை சோபாவில், மணமகள் ராணியும், மணமகன் ராமுவும், கழுத்து நிறைய மாலையுடன், கண் கொள்ளாப் பார்வையுடன், வாய் கொள்ளாச் சிரிப்போடும், ஒருவருக்கொருவர் பதில் வார்ப்பாய் அமர்ந்திருந்தார்கள். மேடையின் நடுப்பகம், ராஜநாற்காலிகள் தவிர்க்கப்பட்டு, சிற்றரசு நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. மேடைக்கு எதிரே கண் முட்டும் அளவிற்கு கூட்டம். முதல் பகுதியில் ஒரே மாதிரியான வாயில் புடவையோடு, காப்பகப் பெண்கள் பெஞ்சுகளில் உட்கார்ந்திருந்தார்கள். முன் பக்கத்து முகப்பில் மாவட்ட மற்றும் உள்ளுர் வி.ஐ.பி.கள்… கூட்டம் நெடுக இருப்பக்கங்களிலும் நின்று கொண்டிருந்த காப்பக சேவகிகள்…’ என்ன வேண்டும் சொல்லுங்கள், என்று கேட்பது மாதிரி, முகம் குவித்து நின்றார்கள். மணமக்களை, அண்ணாந்து பார்த்த காப்பகப் பெண்களில் சிலர், அவர்களைப் போல் தங்களுக்கு ஆக வில்லையே என்ற விசனம். பலருக்கோ, அப்படி ஆகி விட்டதே என்ற சோகம்.

இதற்குள் அமைச்சர் வந்துவிட்டார். முன்னால் பாதுகாப்பு ஜிப்பும், பின்னால் தொண்டர், வேன்களுமாய் வந்ததும், கூட்டத்தினர், அந்த உள்ளூர் மாட்டை விலையாக்க போவதில்லை என்பது போல் சும்மாவே இருந்தார்கள். அமைச்சர், அந்த மக்களைப் பார்த்து தொண்டர்போல் வணக்கம் போட்டபோது, ஒவ்வொரு குட்டாம் பட்டியாரும், தான்தான் அவரை அமைச்சராய் ஆக்கியதுப்போல் ஆசிர்வாதமாய் கைவிரல்களை அகலப் படுத்தினார்.

மாண்புமிகு அமைச்சர், கட்சி பிரமுகர்கள், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர், சமூகநல அதிகாரி ஆகியோர் சகிதமாக மேடை ஏறினார். அமைச்சருக்கும், அவரது பரிகாரங்களுக்கும் கிடைக்காதுபோன ஆரவாரம், காப்பகப் பொறுப்பாளர்களான லூர்துமேரியும், இளங்கோவும் மேடை ஏறியபோது, வட்டியும் முதலுமாய் இரண்டு நிமிடம் நீடித்தது.

தமிழ்த் தாயை வாழ்த்தி வரவழைத்த பிறகு, லூர்துமேரி வரவேற்புரை வழங்க வந்தாள். அப்போது வயதுக்கு வராத சிறுமிகள் முதல் வயதில் முதிர்ந்த மூதாட்டிகள் வரை, அவரை தாயாக்கி மகளாக்கி பார்த்தது. கூட்டம் மேரியின் முகத்தையே உன்னிப்பாகப் பார்த்தது. அந்த அம்மாவும், முன் கூட்டியே தயாரிக்கப்பட்ட ஜோக்குகள், ஆவேசங்கள், நீட்டல் முழக்கங்கள் ஆகிய மேடை லட்சணங்கள் ஏதுமில்லாமல், இயல்பாகப் பேசினாள். அமைச்சரையோ, அதிகாரிகளையோ பேரிட்டு அழைக்காமல் நேரிடையாகப் பேசினாள்.

‘அனைவருக்கும் வணக்கம். மேடையில் இருக்கும் நண்பர்களையும், கூட்டமாய் அமர்ந்திருக்கும் உங்களையும், நான் வரவேற்பது, என்னை நானே வரவேற்ப்பது மாதிரி. ஆனாலும் சில புது முகங்கள் கண்ணில் படுவதால், இந்தக் காப்பகத்தைப் பற்றி சுருக்கமாக கூற விரும்புகிறேன்.

“பத்தாண்டுகளுக்கு முன்பு, தர்மபுரியில் நல்லதோர் அரசு வேலையில் பணியாற்றிய என் கணவர் இளங்கோவும், ஆசிரியையாக பணியாற்றிய நானும் மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் தொண்டாற்ற வேண்டும் என்ற உந்தலில் இந்த குட்டாம் பட்டியின் இதே இடத்தில், ஒரு சேவக குடிசை போட்டோம். அன்று உங்கள் ஆசிர்வாதத்துடன் நடப்பட்ட அருகம் புல், இன்று ஆலமரம் போன்ற பிரதான கட்டிடத்தையும், அதன் விழுதுகள் போன்ற கிளைக் கட்டிடங்களையும் கொண்டுள்ளது. அப்போது ஏன் வந்தோம் என்று நினைத்த நாங்கள், இப்போது முன்கூட்டியே வந்திருக்க கூடாதா என்று நினைக்கிறோம்.”

பலத்த கைதட்டல்கள், அவளை மேற்கொண்டு சிறிது நேரம் பேசவி டாமல் கட்டிப்போட்டது. அந்த தட்டல்களுக்கு கைக்கூப்பிவிட்டு, ஓசை அடங்கியதும், லூர்துமேரி மேலும் உற்சாகமாகப் பேசினாள்.

“சரி….. சொந்த புராணத்தை விட்டு, இந்த கல்யாண புராணத்திற்கு வருகிறேன். மணமகள் ராணி, மூன்றாண்டுகளுக்கு முன்பு, அகலிகையாகி, இங்கே கொண்டுவரப்பட்டாள். ஓராண்டுக்கு முன்பு, மணமகன் ராமு, அபலையர்களும் . ஆணாதிக்கமும் என்ற தலைப்பில் பல்கலைக் கழகத்தில் முனைவர்ப் பட்டம் வாங்குவதற்காக இந்த காப்பகம் வந்தார். என் மகள்களிடம் நேர்காணல் செய்தார். உள்ளத்தால் களங்கப் படாத என் மகள் ராணியை அவருக்குப் பிடித்து விட்டது. சொத்து சுகத்தை துளசாக உதறிவிட்டு, மணமுடிக்க வந்துவிட்டார். இப்படி ஊருக்கு பத்து பேர் கூட வேண்டாம்.ஒருவர் முன்வந்தாலே, பாரதம் வாழும் கிராமங்களை புதுமையாக்கி விடலாம். இந்த திருமணத்தின் மூலம், நான் மூன்றாவது தடவையாக மாமியாராகிறேன். இப்படி முந்நூறு தடவை மாமியாராக விரும்புகிறேன்.”

கூட்டத்தில் ஒரு சிலரே முதலில் கைதட்டினார்கள். அந்த தட்டல்களை புரியாதவர்கள், பக்கத்தில் இருந்தவர்களிடம் காரணம் கேட்க அவர்கள் மூன்றாவது தடவை மாமியார் என்பதற்கு விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். இதனால், கூட்டத்தின் சராசரிகள், அவள் பேச்சுக்கு மீண்டும் தடங்கல் ஏற்படும் அளவிற்கு பலமாக தலையட்டி வலுவாக கைதட்டினார்கள். லூர்து, பேச்சை சிறிது நிறுத்திவிட்டு கூட்டத்தை, குறுஞ்சிரிப்பாகப் பார்த்துவிட்டு தொடர்ந்தாள்.

“மணமகள் என் மகள் என்பதால், நான் அதிகமாக குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் மணமகனான என் மருமகனைப் பற்றி சொல்லியாக வேண்டும். என் கணவர் இளங்கோவைப் போல, இவரும் ஆணாதிக்க சிந்தனை இல்லாதவர். இப்படி சொல்வது எதிர்மறைதான். ஆக்க பூர்வமாக சொல்ல வேண்டுமானால் மணமகன் பெண்ணியவாதி. ஒருவனுக்கு ஒருத்திதான் என்ற தமது தாரக மந்திரமாம் தமிழ் பண்பாட்டின் சின்னமாவார்.”

“இப்போது நம் கண் முன்னால் வளர்ந்து மேலோங்கிய நமது அமைச்சர் முடிசூடி, இந்த திருமணத்தை இனிதே நடத்தி வைப்பார். டில்லிக்கு ராசாவானாலும், தாய்க்கு பிள்ளை என்பதுபோல் நமக்கு எப்போதும் பிள்ளையான தம்பி முடிசூடி வருகிறார்.”

லூர்துமேரி பேசி முடிக்கவும், உள்ளூர் அமைச்சரான முடிசூடி மைக்கருகே போவதற்கும் சரியாக இருந்தது. மேரிக்கு கிடைத்த கைத்தட்டல்களை, அமைச்சர் தனக்குத்தான் என்று மானசீகமாக வழிப்பறி செய்துகொண்டு, பேச்சாற்றலைக் காட்டினார்.

“டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார், அன்னை தெரேசா ஆகியோரின் முப்பெரும் உருவகமாகத் திகழும் லூர்துமேரி அம்மையாரும், அவரை பேசவிட்டு ரசிக்கும் பெண்ணியச் சிந்தனையாளர் இளங்கோவும், எனக்கு அம்மையப்பன். என் படிப்பிற்கு உதவியவர்கள். என்னை அரசியல் மேடையில் உலா வரச் செய்தவர்கள். இப்படிப் பட்ட இந்த சேவை இமயங்கள் இன்று, மூன்றாண்டுகளுக்கு முன்பு கொடியோரால் கற்பழிக்கப்பட்டு, ஒரு புதர்ப் பக்கம், குற்றுயிரும் குலையுயிருமாய் வீசப்பட்ட ராணி அவர்களை…”

இந்தச் சமயத்தில், காப்பகச் செயலாளர் இளங்கோ, வேக வேகமாய் எழுந்து, அந்த இளம் அமைச்சரின் காதைக் கடித்தார். உடனே அமைச்சரும் காது வலியில் அவதிப்படுவது போல பேசினார்.

‘நான் பேசியது தவறுதான் நண்பர்களே தவறுதான். கற்பழிக்கப்பட்ட ராணியின் கற்பழிப்பைப் பற்றியோ, அவர் புதருக்குள் வீசப்பட்டதைப் பற்றியோ நான் பேசியிருக்கக் கூடாதுதான். இதனால் மணமகளும் என் கண் முன்னால் காட்சிதரும் காப்பகப் பெண்களும் இன்னும் அழுகையை அடக்க முடியாமல் அல்லல் படுவதை அறிவேன். இந்தச் சந்தர்ப்பத்தில் இளங்கோ அவர்கள் காதில் சொன்னதை பகிரங்கமாக அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன். ஒரு பெண்ணை, அவள் எந்த நிலையில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொண்ட பிறகு, அவளைத் தள்ளி வைப்பதோ அல்லது அவளை உதறிவிட்டு இன்னொரு பெண்ணோடு இணைவதோ, அசல் போக்கிரித் தனம். ஒரு சமூக விரோதியால்தான், தாலி கட்டிய மனைவியை தள்ளி வைக்க முடியும் என்று இளங்கோ அவர்கள் அன்று சொன்னதையும், இன்று சொன்னதையும், இனிமேல் அப்படி சொல்லப் போவதையும் இணைத்து, இளைஞர்களுக்கு அறிவுருத்த கடமைப் பட்டுள்ளேன்.

நான் பெரியார் பக்தன் என்றாலும் சகுனங்களில் நம்பிக்கை உள்ளவன். உள்ளத்தால் பொய்யாத, உடலால் ஓயாத இளங்கோமேரி தம்பதி நடத்தி வைக்கும் இந்தத் திருமணம் பல்லாண்டு பல்லாண்டு காலம் உள்ள அளவிற்கு நீடிக்கும். சிலர், மதம் மாறி திருமணம் செய்வார்கள். சிலர், சாதி மாறி மனப்பார்கள். ஆனால், எனது ஆசான்களான அய்யா இளங்கோ அவர்களும், அம்மா மேரி அவர்களும் மதங்களையும், சாதிகளையும் புறம்தள்ளி, கலப்புமணம் செய்து கொண்ட வழிகாட்டிகள். இவர்களின் வழியில் எந்த தம்பதியும் நடந்தால், தொல்லை இல்லை. துயரம் இல்லை… மாறாக நன்மை கூடும்… நல்லது அனைத்தும் தேடிவரும்.’

அமைச்சர் முடிசூடியின் குரல் வறண்டு போயிருக்க வேண்டும். குறிப்பறிந்து ஒருவர் நீட்டிய ஒரு தண்ணிர் குவளையை புறந்தள்ளி விட்டு, ஒரு கோலாவை குடித்தார். குடித்த வாயை தோள் துண்டால் துடைத்த படியே வடிகட்டிப் பேசினார்.

‘நமது இளங்கோ அவர்களும், லூர்துமேரி அம்மையாரும் சுப சகுனங்கள். இவர்கள் ஏற்பாடு செய்த திருமணமும் சுபமாகவே நீடிக்கும். எனது அம்மையப்பனிடமிருந்து, நான் கற்று கொண்டதை கடைபிடிப்பதை உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டவன். இளங்கோ அவர்கள், தனது மனைவியான லூர்து அம்மையாரை நீங்க நாங்க என்று பன்மையில்தான் அழைப்பார். இவர்கள் போல் அனைவரும் மனைவியரை இனிமேலாவது நீங்க நாங்க என்று அழைக்காது போனாலும் நாயே… பேயே… நரியே… மாடே… முண்டமே… பட்டிக்காடே… காண்டாமிருகமே… கழுதையே…’ என்று திட்டாமலாவது இருக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்’

அமைச்சர், தாம்பளத் தட்டில், மஞ்சள் அரிசி, மங்கலத் தேங்காய், வெற்றிலைப் பாக்கு வகையறாக்களுக்கு மத்தியில் இருந்த மஞ்சள் சரடை எடுத்தார். பின்னர் பின் யோசனை செய்தவர் போல், இளங்கோ – மேரி தம்பதியை கட்டாயமாக வரவழைத்து, அவர்களது கரங்களில் தாலி சரட்டை திணித்து, இருவரையும் சேர்ந்தாற் போல் மணமகன் ராமுவிடம் கொடுக்கச் செய்தார். மேளங்கள் முழங்கின. கை தட்டுகள் வெடி வேட்டுகள் போல் ஒலித்தன. மணமக்களின் பெயர்களைச் சொல்லி ஒரு வாழ்க என்றால், இளங்கோலுர்து தம்பதிக்கு பல வாழ்க…

திருமணம் முடிந்ததும், விருந்துக்கு நேரமில்லை என்று உடனடியாய் புறப்பட்ட அமைச்சரையும், எஸ்.பியையும் வழியனுப்பி வைப்பதற்காக, மேரியும் இளங்கோவும் வாசல் வரை வந்தார்கள். வரும்போது வரவேற்க முடியாமல் போனவர்களை, போகும் போதாவது வழியனுப்பி வைப்பதே நயத்தகு நாகரீகம் என்று கருதி அவர்களது வாகனங்கள் கண்மறைவது வரைக்கும் வாசல் வெளிப்பக்கமே காத்து நின்றார்கள். திரும்பி நடக்க போனால், வாசல் பக்கம் இரண்டு பேர்… ஒன்று பழைய முகம்… இன்னொன்று பார்த்தது போன்ற முகம்.

பழைய முகக்காரிக்கு, லூர்துமேரியை விட ஒரு வயது அதிகமாக இருக்கும். அதிகமாக படிக்காத அசல் மண் வாசனை அவள் முகத்தில் துளிகளாகவும் தலையில் தூசி துப்படாக்களாகவும் வெளிப்பட்டன. அவள் முகம் பழுத்துப் போய் இருந்தது. கைகால்கள், சதைக்குச்சிகளாகத் தோற்றம் காட்ட, கண்கள் குழிகளாய், தொண்டை, எலும்பு வளைவாய், நல்லதொரு காட்சிக்கு, எதிர்க் காட்சியாய் நின்றாள். நவீன ராமன் விட்டுப்போன கிராமத்து வனவாசக்காரி. அவள் அருகே நிற்கும் சிறுவன், வேர் ஆடும் செடிபோல் குழைந்து நின்றான். ஒழுங்கற்றுப் போன வலது கால்… இடையில் இருந்து நழுவி கைகளால் பிடித்து நிறுத்தப்படும் அழுக்கு டவுசர். கோராதி கோரம்… உடம்பு எங்கும் சிரங்குத் தடயங்கள்… நேருக்கு நேர் பார்க்காமல் கவிழ்ந்தும், அண்ணாந்தும் பார்க்கும் வறண்டு போன கண்கள்…

இளங்கோ, அந்தப் பெண்ணை நேருக்கு நேராய் பார்க்க முடியாமல் தடுமாறினார். அவள் கழுத்தில் தொங்கிய தாலி தன்னை துக்கு கயிறாய் பற்றுவது போல நெளிந்தார். இதற்குள் திருமதி லூர்துமேரி இளங்கோ, பழக்கப்பட்டது போல் தோன்றும் அந்த பதிமூன்று வயதுப் பையனை, தடுமாற்றத்தோடு பார்த்தபோது, பழைய முகக்காரி, மேரியை அந்தப் பையனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

‘இவள்தாண்டா உன் அம்மா… நீ மூணு வயசுக் குழந்தையா இருக்கும் போது, உன்னை விட்டுட்டு, என் கழுத்துல தூக்குக் கயிறு மாட்டுன இந்த மனுசனோட ஒடிப் போனவள்… சரி…சரி… புறப்படு… வேற ஏதாவது ஒரு அனாதை ஆசரமத்தைப் பார்த்து போவோம்…’

நோயும் நொம்பலையுமான அந்த சிறுவனும், தனக்குத் தானே பாடை விரித்தது போல் தலைவரி கோலங் கொண்ட அந்தப் பெண்ணும் திரும்பி பாராமல் நடந்தார்கள்.

– ஓம் சக்தி திபாவளி மலர், 2001 – சமுத்திரக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர், 2001, ஏகலைவன் பதிப்பகம், சென்னை – 600 041

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *