‘பெற்ற’ மனங்கள்…..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 8,461 
 

வாசலில் இருந்த அழகிய இரு இணைக் காலணிகள் அவனுக்கு ஆச்சரிய கலந்த ஆனந்ததைத் தந்தன. நிச்சயம் பொன்னி அக்காவந்திருக்க வேண்டும்.அவன் விருட்டென்று வீட்டினுள் நுழைந்து கூடத்திற்கு பக்கத்தில் இருந்த அறையை எட்டி பார்க்கையில் அவனது கணிப்பு பொய்த்துவிட வில்லை.

பொன்னி அக்கா ஒருகழித்து எதிர்புற சுவரை பார்த்த வண்ணம் படுத்திருந்தாள்.அவன் மெல்ல நெருங்கி அக்காவின் தோளைத் தொட்டு, “பொன்னிக்கா” என்றழைத்தான்.

பொன்னி அக்கா திடுக்கிட்டு விழித்தாள்.விழிகளில் ஆச்சரியம் விரிய மெல்ல நிதானமாக எழுந்து அமர்ந்தாள்.

“அட அமுதனா.?என்னமா வளர்ந்துட்ட?”வார்த்தைகளிலும் ஆச்சரியம் காட்டினாலும் அவற்றை உச்சரித்த பின் அவளுக்கு மூச்சு வாங்கியது.மெதுவாக எழுந்து நின்று அவனது முகத்தைத் தன்னருகே இழுத்து நெற்றியில் முத்தமிட்டாள்.

அப்படி செய்கையில் பொன்னி அக்காவின் வயிறு அவனை இடிக்கவே செய்தது.பெரிதாக உப்பியிருந்த அக்காவின் வயிற்றை பார்த்து சிரித்தான்.

“பாப்பாவா அக்கா?”

“இல்லடா.ஸ்கேன்ல பார்த்தோம்.உன்னாட்டம் தம்பி”அக்கா கொஞ்சம் நாணம் கொஞ்சம் மகிழ்ச்சி கலந்து சொன்னாள்.

அவன் ஆச்சரியமாக பொன்னி அக்கவையே பார்த்தான்.கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளைக்குப் பிறகு அக்காவை பார்க்கிறான்.அக்கா உருவத்தால் உருமாறிப் போயிருந்தாலும் அக்காவின் கண்களும் குரலும் அப்படியேதான் இருந்தன.

கன்னத்தில் கொஞ்சம் கூடுதலாகவே சதைப் போட்டு மூக்கு சற்று வீங்கியதுப்போல் தோற்றம் தந்தது.அக்கா தடித்து விட்டாளா அல்லது வயிறு பெரியதாகியதால் அக்காவின் தோற்றம் தடித்து விட்டதாகத் தோன்றுகின்றதா என அவனுக்குத் தெரியவில்லை.

அம்மா ஒரு வாரத்திற்கு முன்பே பொன்னி அக்கா இங்கு வந்து தங்கப் போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.அக்காவிற்கு இது தலைப் பிரசவம் என்பதால் தாய் வீட்டில் தான் நடக்க வேண்டும் என்பது முறை.ஆனால் அக்காவின் தாய் வீடு முறையான வசதிகள் இல்லாத தோட்டத்தில் அமைந்திருந்ததால் அக்காவை இங்கு அழைக்க வேண்டிய சூழல்.

பொன்னி அக்கா பிறந்து வளர்ந்தது எல்லாம் தோட்டப்புறத்தில் தான்.ஆறாம் வகுப்பிற்கு பிறகு தோட்டத்திலிருந்து தூரமாக இருக்கும் பட்டணத்தில் படிப்பது சிரம்மாகத் தோன்றியதால் பொன்னி அக்கா இங்கு வந்து தங்கி படிக்கத் தொடங்கினாள்.

அம்மா அப்பாவின் பூர்வீகமும் அந்த தோட்டம் தான் என பொன்னி அக்கா சொல்லி அவன் அறிந்திருந்தான்.ஆனால் இதுவரையில் ஒருமுறைக்கூட அவன் அந்த தோட்டத்திற்கு சென்றது இல்லை.

அவனுக்கு வயது ஏழு இருக்கும் போது அப்பா அவனை அழைத்து “அமுதா உன்னோட பெரியப்பா மகள் பொன்னி இங்கு வந்து தங்கி படிக்கப் போகிறாள்.இனி உனக்கு தெரியாத பாடத்தை எல்லாம் அக்காவிடம் கேட்டுக்க”என்றார்.

அப்போது வந்து இங்கு தங்கிய பொன்னி அக்கா ஐந்தாம் படிவம் வரையில் இங்கேயே படித்து,பின் கல்யாணம் நடந்த போதுதான் தனது தோட்டத்திற்கே திரும்பிப் போனாள்.

அவனிடம் மிகுந்த அன்பு கொண்டவளாகவே இருந்தாள்.நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்ப்பதால் அக்காவும் அவன் வளர்ந்து விட்டதாக சொன்னாள்.

“ நம்ப அமுதன் எப்படி வளர்ந்துட்டான்.உதட்டுக்கு மேலே லேசா மீசை முளைக்க ஆரம்பிடுச்சு.இன்னும் ரெண்டு மூனு வருசத்துல பெரிய ஆப்பளையாட்டம் தெரிவான் பாருங்களேன்”

“என் பிள்ளையைக் கண்ணு வைக்காத,எப்படி வளந்தாலும் அவன் எனக்கு குழந்தைதான்”

“ஆமாம், இடுப்புல தூக்கி வைச்சுக்குங்க.” பொன்னி அக்கா பொய்யாக அம்மாவிடம் பொறாமை காட்டி முகத்தை ஒரு வெட்டு வெட்டினாள்.

அம்மா சிரித்தார்.அவர்கள் பேசுவதை இரசித்த வண்ணம் கூடத்தில் அமர்ந்து கைப்பேசியில் எதையோ தட்டிக்கொண்டிருந்த அவனும் சிரித்துக் கொண்டான்.திடிரென்று பொன்னி அக்கா குரலை சற்று தாழ்த்தி,

“சித்தி, அவன் ஜாடை அசல் அவனது அப்பா மாதிரி இல்லை?அவன் வந்து என் தோளைத்தொட்டு எழுப்பிய போது திரும்பினேன் இல்ல…அப்படியே ஒரு கணம் திகைச்சுட்டேன்.”

“ஏய் உஸ்ஸ்..அவனுக்கு வெளங்கிடப் போகுது” அம்மாவும் சற்றுத் தாழ்ந்த குரலிலேயே அக்காவை அடைக்கினார்.இதுவும் அவனுக்கு கேட்கத்தான் செய்தது.

திடிரென அவனைச் சுற்றி வெப்பம் படர்ந்தது போல் உணர்ந்தான்.மனதில் ஒரு வலி! தொடர்ந்து அங்கு அமர்ந்திருக்க அவனால் முடியவில்லை.எதேச்சையாக எழுந்திருப்பவன் போல் அவர்கள் முன் பாவனை செய்து எழுந்து அறையை நோக்கி நடந்தான்.

அறைக்குள் நுழைந்ததும் கதைவை தாழிட்டுக்கொண்டான்.மனம் அதிகமாகவே வலித்தது.இது அவனுக்கு புதிதான வலி இல்லை தான்.இருப்பினும் ஒவ்வொரு முறையும் புதியதாக வதைப்படுவதுப் போன்ற வலியை அவன் அனுபவித்தான்.

அம்மா அப்பாவோடு சேர்ந்து வெளியில் அல்லது கோவில்,திருமண வைபவங்களுக்கு செல்கையில் அப்பாவிற்கு தனக்குத் தெரிந்தவர் யாரிடமாவது இவனை அறிமுகப் படுத்தி வைப்பார்.அந்த நபரின் முகத்தில் ‘ஓ..இவன் தானா அது’ என்பது போல ஒரு அழுத்தமான பார்வை வந்து விழும்…

இவனை பற்றித் தெரியாதவர்களோ “என்ன உங்க பையனுக்கு அப்பா ஜாடையும் இல்லை,அம்மா ஜாடையும் இல்லை…பையன் தாத்தா பாட்டியாட்டுமா?” என எதார்த்தமாகக் கேட்கும் கேள்விகள் இவனை துழைக்கும்…

அதுப்போன்ற தருணத்தில் ஏன் நான் இவர்களது தத்துப் பிள்ளையானேன்.என்னை வேண்டாம் என தூக்கிக் கொடுத்த அந்த மனிதர், ஏன் அவரது முகத்தையும் கூடவே கொடுத்துப் போக வேண்டும்?’ கேள்விகளை தன்னை தானே கேட்டுக்கொண்டு நொருங்கிப் போவான்.

சற்று முன்பு பொன்னி அக்காவே அவ்வாறு சொன்னது இன்னும் அவனை நொருங்க வைத்தது.உண்மையாகவே என் முகம் அந்த மனிதரைப்போலவே இருக்கின்றதா?அவன் நிலக்கண்ணாடியில் நெருங்கி தனது முகத்தை உற்று கவனித்தான்.

வட்டம் இல்லாமல் கொஞ்சம் சதுர அமைப்பில், திருத்தப்பட்ட ஓவியம் போல் வடிவாயிருந்தது.தாவடையில் இறுகியிந்த சதை மேற்நோக்கி கன்ன கதுப்புகளில் கூடியிருந்தது.அவனது எடுப்பான நாசியையும் கண்களில் சதா ஒளிர்ந்துக்கொண்டிருக்கும் ஒளியையும் அவனை மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்டியது.

அப்பா நல்ல கறுப்பு.அம்மாவும் கறுப்பு என்றாலும் அப்பாவைவிட நிறத்தில் கொஞ்சம் ஒசத்தி.அதனால் பளீர் என்றிருக்கும் அவனின் நிறம் மற்றவர் கண்களை உறுத்தியது.இவன் யாரு மாதிரி என ஆராய வைத்தது.

எது எப்படியிருந்தபோதிலும் அவனுக்கு இந்த முக அமைப்பில் விருப்பமில்லாதிருந்தது.அதுவும் இப்படி பொன்னி அக்காவே நிச்சியப்படுத்திச் சொல்லிய பின் ‘ ஐயோ அந்த மனிதரின் முகம் தாங்கிய நான்….?’ என அவனுக்கு அழுகையே வந்தது.அவன் முதல் முதலாக அழுது ஆர்பாட்டம் பண்ணியது தமிழ் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கையில்…!வகுப்பாசிரியர் ‘என் குடும்பம்’ என்ற கட்டுரை வரைய சொன்ன போது இவனும் குதூகலமாகவே எழுதி சக மாணவர்களிடம் காட்டினான்.

“டேய் அமுதன் உங்கப்பா பெயர் ஏண்டா சண்முகம்னு எழுதிருக்க? நீ ஆ.அமுதன் தானே? உன் பெயர் அமுதன் த/பெ ஆனந்தன் என்றுதானே வரும்.பின்ன ஏண்டா இப்படி எழுதிருக்க?”

நண்பன் கேட்கப்போக அந்த கேள்விக்கு காரணமாக அமைந்திருந்த ஆனந்தன் என்ற பெயர் அவனுக்குள் முதல் பிரளத்தை நிகழ்த்தியது.வீடு திரும்பி அம்மாவிடம் கேட்டான்.

“அம்மா, அப்பா பெயர் என்னமா?”

“சண்முகம்”

“அப்ப ஏன்மா என் பெயருக்கு பின்னால அப்பா பெயர் ஆனந்தன் போட்டிருக்கு?”

அம்மா அதிர்ந்து, “உங்கப்பாவிற்கு ஆனந்தனு இன்னொரு பெயரும் இருக்கு” என்றார்.

ஆரம்பக் காலங்களில் அவன் சமாதானமாகி போனான்.வளர வளர அந்த பெயர் பல வகையில் அவனுக்குள் பேருருவம் எடுத்தது.மின்சார கட்டணம் தொடங்கி ஆஸ்ரோ வரையில் சண்முகம் என்ற பெயரையே ஒவ்வொரு ஆவணங்களிலும் தாங்கி இருக்கையில் தனது பெயருக்கு மட்டும் ஏன் இந்த ஆனந்தன்?முள்ளாய் அது அவனுள் உறுத்தியது.

மூடி மூடி வைத்திருப்பதைப் போட்டு உடைக்கும் வகையில் பொன்னி அக்காவின் தோட்டத்தைத் சேர்ந்த தூரத்து உறவினர் ஒருவர் தனது மகனின் கல்யாணப் பத்திரிகை கொடுக்க வந்திருந்தார்.அவனைப் பார்த்ததும் “அட இது ஆனந்தன் மகன் தானே?இப்போ ஆனந்தன் எங்கிருக்கிறான்?”என எதிர் பாராமல் கேட்டு விட்டார் வந்தவர்.

அனைவரும் அதிர்ந்துபோக அந்த மனிதர் தான் எதோ எதார்த்தமாக கேட்டு விட்டேன் என்று திரும்பும் வரையில் காலில் விழாத குறையாய் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

உண்மையறிந்து அவன் தேம்பி தேம்பி அழுதான்.அம்மாவும் அப்பாவும் அவனை சமாதனப்படுத்தி சேர்ந்து அழுதார்கள்.

“நீ எங்கப்பிள்ளை தாண்டா.உன்னை இதுவரையில் ஈ எறும்பு கடிக்காமல் எங்க கண்ணுக்குள்ளவே வைத்து வளர்த்தோம்.உன்னை விட்டுட்டு எங்களால் இருக்க முடியாது.நீ இல்லையினா நாங்க செத்துப் போயிடுவோம்”அம்மா கதறினார்.

“உன்னை பொறந்த மூனு மாசத்திலேயே அவங்க உன்னை வேண்டாம்னு தூக்கி கொடுத்துட்டாங்க.அந்த நாள் தொடங்கி இந்த தேதி வரைக்கும் எங்க உயிரா தான் உன்னை வளர்க்கிறோம் அமுதா.உன் பெயருக்கு பின்னால அப்பா பெயரா என் பெயரு இல்லாவிட்டால் என்ன,நீ தான் எங்கப் பிள்ளை.எங்கள வெறுத்திடாதப்பா” அப்பாவும் அழுதபோது அவன் ஆடிப்போனான்.

எந்த மனிதரை பார்த்து ‘இவர் என் அப்பா,எங்கப்பாவிற்கு என்னவெல்லாம் தெரியும் தெரியுமா?’ என சக நண்பர்களிடம் பிரமித்தும் பெருமையாய் சொல்லித்திரிந்தானோ அந்த மனிதர் தனது தகப்பன் இல்லை என்ற உண்மை அவனைத் தகிக்க வைத்தாலும் அவர்கள் அவன் மீது வைத்திருந்த அளவிட முடியாத அன்பு அத்தனையும் தூக்கி போட வைத்தது.

இவர்கள் தான் என் தெய்வங்கள் என்று அவர்களுடன் ஒன்ற வைத்தது.முகமறியாத அந்த மனிதன் மீது உள்ளுக்குள்ளவே அவனுக்கு வன்மம் வளர்ந்தது.

பொன்னி அக்கா தனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு பெயர் தேடுவதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல் பட்டுக்கொண்டிருந்தாள்.போதாதற்கு அவனையும் இழுத்து வைத்துக்கொண்டு பெயரைத் தேடச்சொன்னாள்.

அவனும் ஆர்வமாகத்தேடினான்.ஆனால் அக்காவோ எந்த பெயரும் சரியாய் அமையவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டிருந்தாள்.

“உன் பிள்ளைக்கு பெயர் வைக்கிறதுக்காக என் பிள்ளையை கஷ்டப் படுத்தாதே.அப்படி என்னதான் அதிசயமான பெயரை தேடுற?சதீஸ்,சுரேஸ்…சர்வின் இந்த பெயரெல்லாம் நல்லா இல்லையா என்ன?” அம்மா சலித்துக்கொண்டார்.

“இல்லை சித்தி,இதுவெல்லாம் தமிழ் பெயரே இல்லை.நான் தூய தமிழில் இருக்கிற பெயரா தேடுறேன்.நம்ம அமுதன் பெயர் மாதிரி”

“அட அப்படி வேற இருக்கா?”

“ஆமாம் சித்தி.தமிழர்களா இருந்துக்கொண்டு நாமே தமிழ்ல பெயர் வைக்காவிட்டால் எப்படி?இவரு கண்டிப்பா தூய தமிழிலில் தான் பெயர் வைக்கணும்னு சொல்லிட்டாரு.”

“நான் பார்த்த வரைக்கும் தமிழு… தூய தமிழுனு பொறக்க போகிற பிள்ளைக்கு தலையை பிச்சுக்கிறவ நீயாதான் இருக்கணும்”

“அப்படி சொல்லாதீங்க சித்தி,தமிழ் சிறந்த மொழி.ஞான மொழினு கூட சொல்வாங்க.தமிழின் ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னால் அடர்ந்த அர்த்தம் இருக்கு.உதாரணத்துக்கு பிள்ளைய பெத்தவங்கள ‘பெற்றவர்’ என்று கௌரவிக்கிறது தமிழ்.அதாவது பிள்ளை என்ற வரத்தை பெற்றவர்கள் என்று பெத்தவங்களை சிறப்பிக்கிறது”

அக்கா பெயர் தேடும் செயலை மறந்து தமிழ் சிறப்பைப் பற்றி பேசத் தொடங்கி விட்டார்.பேச்சு வேறு திசைத் திருப்பி விட்டதால் அன்று அக்கா நல்ல தமிழ் பெயரை தேடுவது அதோடு நின்றது.அன்றைய இரவிலேயே பொன்னி அக்காவிற்கு பிரசவலி கண்டது.வலியில் துடித்த அக்காவை மருத்துவ மனைக்கு அழைத்துப் போனார்கள்.

மறுநாள் மாலையில் பொன்னி அக்கா அழகிய ஆண்குழந்தையோடு திரும்பினாள்.அனைவருக்கும் மகிழ்ச்சி.அவன் குழந்தையின் பக்கத்திலேயே அமர்ந்துகொண்டான்.குழந்தையின் மெல்லிய அசைவுகளை ஆச்சரியத்தோடு இரசித்தான்.

“அக்கா நானும் சின்ன பிள்ளையில இப்படிதான் சின்னதா இருந்திருப்பேனா?”

“ஆமாண்டா.நீயும் இப்படிதான் குட்டியா இருந்த”

“அந்த சின்ன வயசில நான் என்னக்கா தப்பு பண்ணிருப்பேன்.ஏங்கா அவங்க என்னை வேண்டாம்னு தூக்கி கொடுத்துட்டாங்க?” கேட்கும் போது அவனின் குரல் தழுதழுத்தது.

பொன்னி அக்கா எதும் பேசவில்லை.அக்காவின் கண்கள் மட்டும் கலங்கியிருந்தன.

சில வாரங்களுக்கு பின் பொன்னி அக்காவை அழைத்துப் போக மாமா வந்திருந்தார்.அன்றைய இரவு மாமா அவனுடன் தான் படுத்திருந்தார்.அவன் நல்ல தூக்கத்திலிருந்து இடையில் ஏனோ திடிரென விழித்தான்.அக்கா மாமாவின் அருகில் வந்து அமர்ந்து கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டிருந்தாள்.

“இங்க பாருங்க,எங்க சித்தி இன்னும் கொஞ்ச நாள் என்னையும் பிள்ளையும் இங்கேயே விட்டிட்டு போனு சொல்லுவாங்க,நீங்க முடியாதுனு சொல்லிடிங்க”

“என்ன பொன்னி இப்படி பேசுற?இது உன் சித்தி வீடு தானே,உங்க சித்தி பிரியப் படற மாதிரி கொஞ்ச நாள் இங்க தங்கேன்.பிள்ளையை எத்தனை பொருப்பா கவனிச்சுக்கிறாங்க?”

“அதெல்லாம் முடியாதுங்க,அவங்க என் பிள்ளையை தூக்கும் போதெல்லாம் யாரோ என் வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டுற மாதிரி இருக்கு.எங்க சித்திக்கு பிள்ளை இல்ல தான்.அவங்க பாவம் தான்.ஆனா அவங்க ஆனந்தன் அண்ணனுக்கு செஞ்சது துரோக மாதிரி எனக்கு படுது.பிள்ளையில்லாத இவங்களோட குறைய போக்க ஆனந்தன் அண்ணன் எந்த பிரதி பலனையும் பார்க்காமல் அவருக்க பிறந்த மூனாவது பிள்ளையை தூக்கி தானம் செய்தாரு தெரியுங்களா?”

“அது தான் எற்கனவே சொல்லிருக்கிறியே.”

“அதை பத்தி உங்க கிட்ட சொன்னபோது நமக்கு பிள்ளை இல்லைங்க.இப்போ முன்னூறு நாளு சுமந்து ஒரு பிள்ளையை பொத்த போதுதான்,உண்மையில் தாய்மை என்றால் என்ன,அதன் தியாகம்,வலி,உயிரையே கொடுத்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பது எவ்வளவு பெரிய விசயமுனு தெரியுது.”

“………………………………………………………………………….”

“ஆனந்தன் அண்ணனோட மனைவி பிள்ளையை கொடுத்துவிட்டு பல நாள் அழுதுகிட்டே இருந்தாங்க.எஸ்தேட்டுல எங்க வீட்டுக்கு பக்கத்துல தான் ஆனாந்தன் அண்ணனோட வீடு.அவரு எவ்வளவு நல்லவரு தெரியுமா?பிறருக்கு உதவற மனசு.பெத்த பிள்ளையே நண்பருக்கு கொடுத்திருக்காருனா எவ்வளவு பெரிய தருமரா இருப்பாரு.?ஆனால் சித்தியும் சித்தப்பாவும் கிட்டத்திலேயே இருந்தால் பாசத்தை பங்கு போட்டுக்குவாங்குணு தோட்டத்தை விட்டே தூரமா எங்கோ போய்ட்டாங்க.”

இந்த இடத்தில் பொன்னி அக்காவின் குரல் தழுதழுத்து பேச்சு சிறிது நேரம் தடைப்பட்டது.

“ஆனந்தன் அண்ணன் பல முறை எங்கப்பா மூலமாக சொல்லி அனுப்பியும் சித்தியும் சித்தப்பாவும் பிள்ளையை ஒரு தடவை கூட அவங்க கண்ணுல காட்டல.எங்களுக்கு கூட அவங்க இருக்கிற இடம் ரொம்ப நாளுக்கு பிறகு தான் தெரிஞ்சுச்சு.பாவம் அதற்குள்ள ஆனந்தன் அண்ணன் ஊரை விடே எங்கோ போயிட்டார்.பாவம் அவரு இப்போ எங்க இருக்கிறாரோ?”

“சரி,இப்ப அதுக்கு என்ன?பச்சைப் பிள்ளைய அடுத்த ரூம்புல விட்டுட்டு இங்க வந்து கதை அளந்துகிட்டு.நாளைக்கு நாம கிளம்புறோம்.போய் பிள்ளையைக் கவனி”

அக்கா மெல்ல எழுந்தாள்.அந்த மெல்லிய இருட்டில் கட்டிலுக்கு மறுபக்கத்தில் படுத்திருக்கும் அவனை எட்டி பார்த்தாள்.பின் நெடிய பெருமூச்சு விட்டாள்.

“இங்கிருந்து போனாதான் எனக்கு நிம்மதியே வரும்.என் பிள்ளைய அவங்க தூக்கும் போதெல்லாம் ஆனந்தன் அண்ணன் நிலை ஞாபகத்துக்கு வந்து நிம்மதியில்லாமல் செய்யுது.சரி நான் போய் படுத்துகிறேன்.”

பொன்னி அக்கா மெல்ல அறையை விட்டு வெளியேறினாள்.

அவனுக்கு குப்பென்று வேர்த்திருந்தது.உடனே விருட்டென்று எழுந்து அறையை ஒளிர செய்து தனது முகத்தை நிலக்கண்ணாடியில் பார்க்க வேண்டும் போலிருந்தது.

அந்த மனிதரை பிரதி எடுத்திருக்கும் இந்த முகத்தை,நிறத்தை…சதா ஒளி சிந்துவதுப் போன்ற இந்த கண்களை இரசிக்க வேண்டுமெனத் தோன்றியது.இதுவரை தனது பெயருக்கு பின்னாலிருந்த ஆனந்தன் என்ற பெயருக்கு இனி தனி கௌரவமும் மரியாதையும் பிரமிப்பும் தந்து ஆயுள் வரை போற்ற வேண்டும் என நினைத்தான்..

தனது பெயருடன் அவரது பெயரை இணைத்து எழுதி பார்த்து பரவசமாகப் போகின்ற விடியலின் மீதும் அதை தாங்க போகும் காகிதத்தின் மீது அவனுக்கு அளவில்லாத மதிப்பு ஏற்பட்டது.

– 26 மார்ச், 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *