ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 21,934 
 

கதை ஆசிரியர்: ஜெயகாந்தன்.

கண்ணாடியின் முன்னே நின்று படிய வாரிய கிராப்பின்மேல் சீப்பின் பின்புறத்தை வைத்து அழுத்தி அழுத்தி வளைவுகள் ஏற்படுத்தும் முயற்சியிலேயே கடந்த பதினைந்து நிமிஷமாய் முனைந்திருக்கிறான் சீதாராமன்.
ஹேர் ஆயில், ஸ்னோ, பவுடர், சென்ட் ஆகியவற்றின் கலவை மணம் ஒரு நெடியாய்க் கமழ்கிறது அந்த அறையில்.
கண்ணாடிக்குப் பக்கத்தில் அந்த சிறிய மேஜையின்மேல் அவனது அலங்கார சாதனங்கள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றின் நடுவே அவனது ‘ஷேவிங் ஸெட்’ சுத்தம் செய்யப்படாமல் அப்படியே சோப்பு நுரையுடன் கிடக்கிறது. அலங்காரம் செய்துகொள்ள அரைமணிநேரத்துக்கு மேல் செலவழிக்கும் சீதாராமனுக்கு அந்த ஷேவிங் ஸெட்டைக் கழுவி வைக்க நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அப்படிப்பட்ட காரியங்களை யெல்லாம் செய்வதற்கே தவம் கிடந்து வந்தவள் போல் அதோ காத்து நிற்கிறாள் மதுரம் . . .
மதுரத்துக்குத் தன் கணவன் சீதாராமனைப் பற்றி உள்ளூர எத்தனையோ விதமான பெருமைகள்! . .
காபி தம்ளருடன் காலை நேரத்தில் அவன் கட்டிலருகே நின்று எழுப்பும்போது . . . இவ்வளவு நேரம் தூங்கும் கணவனைப் பார்த்து ஒருவகை பெருமிதம்!
வேலைகளையெல்லாம் முடித்துவிட்டுக் குழாயடியில் நின்று, கொஞ்சமும் மடிப்புக் கலையாத அவனது சட்டைகளை மீண்டும் ஒரு முறை துவைக்கும்போது – அதனுள்ளிருந்து தண்ணீரில் நனைந்து அகப்படும் சிகரட் பாக்கெட்டை எடுத்துப் பார்க்கும்போது – தன் எதிரே இல்லாத கணவனை எண்ணிச் சிரித்த முகத்தோடு கண்டிருக்கிறாளே – அப்போது ஒருவகை பூரிப்பு.
ஒவ்வொரு நாளும் ஆபீசுக்குப் புறப்படும்போது ஒரு கர்ச்சிப்பைக் கொடுத்து, முதல் நாள் கொடுத்த கர்சிப் என்னவாயிற்று என்று கேட்கையில் அவன் அசடு வழிய சிரிக்கிறானே – அப்போது ஒரு மகிழ்ச்சி.
இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனான தன் கணவனின் இதுபோன்ற பொறுப்பில்லாத செயல்களில் அலுப்போ சலிப்போ இல்லாமல் ஒவ்வொரு நாளும் பூரிப்பும் பெருமிதமும் கொண்டு தொடர்ந்து பணிவிடை புரிகிறாளே இதன் ரகசியம்தான் என்ன?
இரண்டு உள்ளங்களுக்குத் தெரிந்த எந்த விஷயமும் ஒரு ரகஸியமாகாது. ஆகவே அது அவளுக்கு மட்டும்தான் தெரியும்! ஆம், அவனுக்குக் கூட தெரியுமா என்பது சந்தேகம்தான். அதுபற்றிய ஞானமோ சிந்தனையோ இருந்தால், தன்னருகே நின்று பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போகும் அவளது உழைப்பையும் பணிவிடைகளையும் பெற்றுக்கொண்டு தன் போக்கில் போய்க்கொண்டிருக்க முடியுமா அவனால்?
ஆனால் அவனது போக்கை அலட்சியம் என்று கருதமாட்டாள் மதுரம். அவன் எப்பொழுதுமே அப்படித்தானாம். அவனது நடை, பேச்சு, பார்வை, தோரணை – எல்லாமே மிடுக்காக, கம்பீரமாக இருப்பதால் ஒரு அலட்சியம் போல் தோன்றுமாம்! . . அவனைப்பற்றி அவளுக்கு ரொம்பத் தெரியுமாம் . . . .
“சீதாராமன் மகா அதிர்ஷ்டசாலி” என்று அவன் ஆபீசில் வேலை செய்கிறவர்கள் கூறுவது, அவன் மனைவியைப் பற்றி இவ்வளவும் தெரிந்ததனால் அல்ல.
ஆபீசில் ‘ஹீரோ சீதாராமன்’ என்றுதான் எல்லோரும் அவனை அழைப்பார்கள்.
அவன் ஆபீஸ் ரிக்ரியேஷன் கிளப் நாடகங்களில் நடிப்பான்; ஹீரோவாகத்தான் நடிப்பான். அந்தத் தகுதி அவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று அவனும் நினைக்கிறான்; ஆபீசில் உள்ள மற்றவர்களும் சொல்கிறார்கள்.
‘ஹீரோ சீதாராம’னுக்கு இருக்கும் அழகுக்கும் அதிர்ஷ்டத்திற்கும் அவனுக்கு நிச்சயமாக சினிமாவில் ஒரு சான்ஸ் அடிக்கத்தான் போகிறதாம்.
அந்த ஆபீசில், தான் ஒரு குமாஸ்தாவாக இருப்பதில் தன்னால் ஆபீசுக்கே ஒரு பெருமை என்ற தோரணையுடன்தான் அவன் தனது இருக்கையில் உட்கார்ந்திருப்பான். வேலை ஏதும் செய்யாமல் அவுட்டுச் சிரிப்பும் அட்டகாசப் பேச்சுமாய் அவன் அரட்டை அடித்துக்கொண்டிருப்பதை எல்லோருமே அனுமதிக்கிறார்கள். வேலை ஏதும் செய்யாமல் பேசிக்கொண்டிருக்கும் அவனிடம் முதுகு ஒடிய உட்கார்ந்து எழுதிக்கோண்டே பல்லிளித்துப் பேசிக்கொண்டிருப்பதில் மற்ற குமாஸ்தாக்களுக்கும் ஒரு சுகம்!
அங்கே வேலை செய்யும் ஜூனியர் கிளார்க்குகள் – கலியாணமாகாத தனிக் கட்டைகள்கூட – இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனும் கிட்டத்தட்ட நாற்பது வயதானவனுமான சீதாராமனைப் போல் உடையணிந்துகொள்ளவும், சினிமா பார்க்கவும், செலவுகள் செய்யவும் முடியவில்லையே என்று பொருமுவது உண்டு.
அவர்களுக்குத் தெரியுமோ இவன் இப்படியெல்லாம் இருப்பதற்குக் காரணமே – இரண்டு குழந்தைக்களுக்குத் தகப்பனாகவும், மதுரத்தைப் போன்ற ஒருத்திக்குக் கணவனாகவும் அவன் இருப்பதனால்தான் என்று . . .?
அவர்கள் அதை உணரவேண்டிய அவசியமுமில்லை; உணராதிருந்தால் ஒரு பொருட்டுமில்லை. ஆனால் மதுரத்தைப் பொருத்தவரை அவன் கூட அவற்றை உணரவேண்டிய அவசியமோ அவன் உணராதிருந்தால் ஒரு பொருட்டோ அல்லதான்; எனினும் அவனைப்பொருத்தவரை-அவனது ஆத்ம உயர்வுக்கு அவன் அதை உணர்ந்திருக்க வேண்டாமா?
‘ஹீரோ சீதாராமனை’ப் பொருத்தவரை வாழ்க்கையும் உத்தியோகமும், குடும்பமும் மனைவியும் – எல்லாமே ரொம்ப அலட்சியமாகத்தான் இருக்கின்றன . . . . அவனுக்கிருக்கும் லட்சியமெல்லாம் ஒன்றுதான்! சினிமாவில் கிடைக்கப் போகும் அந்த ஹீரோ சான்ஸ்!
அவன், ஆபீசில் சம்பளம் வாங்கிக்கொண்டு, அதில் தன்னை ஒரு நவயுக வாலிபனைப்போல் அலங்கரித்துக்கொண்டு திடீர் என்று ஒரு நாள் வரவிருக்கும் அந்த சினிமா சான்ஸ§க்காகக் காத்திருப்பவனாகவே தன் இருக்கையில் அமர்ந்திருக்கிறான். ரொம்பப் பேர் வாழ்க்கையில் அப்படி வந்திருக்கிறதாமே! . . .
அவன் கண்களில் மற்ற எதைப்பற்றியுமே-சதா ஒர் அலட்சிய பாவமே மின்னிக்கொண்டிருக்கிறது.
அந்தக் கண்கள் ரொம்ப அழகாய் இருக்கின்றன என்று எண்ணி அவன் அழகிலும் புகழிலும் மயங்கிப் பெருமூச்செறிந்து கொண்டிருக்கும் டைபிஸ்ட் கமலா இந்த ஹீரோவுக்குப் பொருத்தமான ஹீரோயினாக, சில மாதங்களுக்கு முன் நடந்த ரிக்ரியேஷன் க்ளப் டிராமாவில் நடித்தாள். . . .
இதோ, இப்போது அறையில் கண்ணாடியின் முன்னால் நின்று அலங்காரம் செய்துகொள்ளும் இந்த ஹீரோவைப் பார்ந்து மகிழ்ந்து நிற்பதுபோலத்தான், அன்றும் அந்த நாடகத்தில் அவளோடு அவனைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தாள் மதுரம்.
கழுத்தில் கிடக்கும் மைனர் செயின் வெளித் தெரிய அணிந்த ஸில்க் ஜிப்பா, காலிலுள்ள அழகிய செருப்பை மறைத்துப் புரளும் வேட்டி இத்தியாதி அலங்காரங்களுடன் கண்ணாடியின் அருகிலிருந்து சற்றுப் பின்னால் வந்து தன் முழுத் தோற்றத்தையும் பார்த்துக்கொண்டபோது – அறையின் ஒரு மூலையில், புகையும் வியர்வையும் படிந்த முகத்தையும், ஈரக் கைகளையும் முந்தானையில் துடைத்தவாறு நின்றிருக்கும் மதுரத்தைக் கண்ணாடியினூடே பார்த்தான் சீதாராமன்.
அவன் தன்னைப் பார்ப்பதைக் கண்ட மதுரம் கண்ணாடியில் தெரியும் அவன் முகத்தை நோக்கிச் சிரித்தாள். சிரித்துக்கொண்டே அவனருகில் வந்த மதுரம் ஆதரவான குரலில் சொன்னாள், “பாருங்க, நான் இந்த மாசத்திலிருந்து சாப்பாட்டுக்காரியை ஏற்பாடு பண்ணப்போறேன். நீங்க காலையிலேயே சாப்பிட்டு போங்கன்னாலும் கேக்கறதில்லே . . .காலையிலே டிபன் சாப்பிட்டதோடப் போயி கண்ட ஓட்டல்லேயும் சாப்பிட்டா உடம்பு என்னத்துக்காகும்?” என்று அவள் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவள் சொல்லும் வார்த்தைகளே காதில் விழாதவன் போல் அவள் பக்கம் திரும்பிய சீதாராமன், எதிரில் நிற்கும் மதுரத்தின் தோள்களின் மீது இரண்டு கைகளையும் ஊன்றி அவள் முகத்தையே கூர்ந்து நோக்கினான் . . அந்தப் பார்வையில், வழக்கத்திற்கு மாறாக ஆழமானதொரு சிந்தனை தேங்கியிருந்தது.
“என்ன அப்படிப் பார்க்கறீங்க?” என்று நாணமுற்றவள் போல் சற்றுத் தலைகுனிந்தாள் மதுரம்.
“ம் . . நீ என்னமோ சொன்னியே. நான் கவனிக்கல்லே . . ” என்று தன் மனதில் இருப்பதை, சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல முடியாமல் ஒரு பேச்சுக்குக் கேட்டுவைத்தான் சீதாராமன்.
“அப்படி என்ன யோசனை? ஏதாவது புது நாடகத்துக்கு ஏற்பாடோ” என்று சிரித்தவாறே அவள் கேட்டபோது, அதை மறுத்து அவன் தலையாட்டுகையில் அவனது நெற்றியில் படிந்த சுருண்ட கேசம் அசைகின்ற அழகை ரசித்தவாறே மதுரம் விளக்கினாள்:
“நீங்க எதுக்கு ஓட்டல்லெ சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கணும்னு நான் ஒரு சாப்பட்டுக்காரியை ஏற்பாடு பண்ணியிருக்கேன். நாளையிலிருந்து ஆபீசுக்கே சாப்பாடு வந்துடும் . . என்ன சரிதானே என் ஏற்பாடு?” – அவன் தன் யோசனையைப் பாராட்டுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவனும் ரொம்ப அலட்சியமாக, “சாப்பாட்டுக்கு என்ன, ஏதாவது செய் . . ” என்று அந்த விஷயத்தை ஒதுக்கிவிட்டு, மீண்டும் என்னவோ சொல்வதற்குத் தயங்குகிறவனாகவே அவள் தோள் மீது வைத்த கைகளை எடுக்காமல் “மதுரம் . . ” என்று கனிந்த குரலில் அழைத்தான்.
“என்ன வேணும்?” என்று அன்புடன் கேட்டாள். அவன் பதிலுக்குப் புன்னகை காட்டினாள்.
ஆபீசுக்குப் போகிற நேரத்தில் அவசர அவசரமாக சீட்டியடித்தவாறு அவளைக் கவனிக்காமல் ஓடுகின்ற சீதாராமன், இன்று வழக்கத்திற்கு மாறாய், தன்னிடம் தயங்கித் தயங்கி நிற்பதற்கான காரணம் புரியாமல் நின்றிருந்தாள் மதுரம்.
சீதாராமன் மௌனமான சிந்தனையோடு தன் கைப் பையைத் திறந்தான். நேற்றே வீட்டுச் செலவுக்குக் கொடுத்திருக்க வேண்டிய சம்பளப் பணம் அதிலிருக்கும் நினைவு அப்போதுதான் வந்தது அவனுக்கு. அந்த ரூபாய்களை எடுத்து அவளிடம் நீட்டினான். அவள் அதனை வாங்கி எண்ணிப்பார்த்தாள்! ஐம்பது ரூபாய்கள் இருந்தன.
‘என்ன இது? இவ்வளவுதானா?’ என்பதுபோல் அவள் அவனைப் பார்த்தாள். அவன் மீண்டும் சிரித்தான்; அவளும் திருப்தியடைந்து சிரித்துவிட்டாள்.
அவ்வளவுதான்! அந்த விஷயம் முடிந்துவிட்டது.
இப்படிப்பட்ட புருஷனின் சம்பளப் பணத்தை நம்பியா ஒருத்தி குடும்பம் நடத்த முடியும்? . .
மதுரத்தின் தாய் சாகும்போது இந்த வீட்டை மகளுக்குக் கொடுத்துவிட்டுக் கண்ணை மூடினாள். அதன் ஒரு பகுதியைத் தங்களுக்கு வைத்துகொண்டு பின்கட்டு முழுவதையும் மூன்று போர்ஷன்களாக்கி வாடகைக்கு விட்டிருக்கிறாள்; இரண்டு மாடுகள் வாங்கி வைத்து வீட்டுக்குள்ளிருக்கும் குடித்தனகாரர்களுக்கு வாடிக்கைப் பால் அளக்கிறாள். தன் இரண்டு குழந்தைகளையும் இந்தப் புருஷனையும் வைத்துப் போஷிக்க அவள்படும் கஷ்டங்களை அவள் கஷ்டமாகவே நினைப்பதில்லை. அவளுக்கு அதுவே சுகமாக இருப்பினும் ‘நூத்தி எழுவது ரூபாய் சம்பளத்தை இவர் என்னதான் பண்ணுகிறார்!’ என்ற நினைப்பு உள்ளே எழந்தாலும், ‘ம், ஆண்பிள்ளைகளுக்கு எவ்வளவோ செலவு, போகட்டும்’ என்று அந்தப் புன்னகையிலேயே எல்லாவற்றையும் மறந்துவிடுகிறாள் மதுரம். எனினும் அதை லேசாகவாவது அவனுக்கு உணர்த்தாவிட்டால் சரியில்லையல்லவா?
“இதுக்குத்தான் சொல்றேன் – காசுக்குக் காசும் செலவு; ஒடம்பும் கெட்டுப் போகும். மத்தியான சாப்பாடு நீங்க வெளியே சாப்பிட ஆரம்பிச்சதிலிருந்து உடம்பே பாதியா போச்சு – நாளையிலிருந்து சாப்பாட்டுக்காரியை நான் ஏற்பாடு பண்ணிடறேன் . . ” என்று அவள் திரும்பத் திரும்ப அந்த விஷயத்தையே கூறுவதைக் கேட்டதும் சலிப்புற்ற அவன், திடீரெனப் பொறுமை இழந்து கத்தினான்!
“சரி, சரி, சரி! . . . அதுதான் ஒரு தடவை சொன்னியே . . . நீ அனுப்பறதையே திங்கறேன்; இனிமே ஓட்டலுக்குப் போயித் தின்னு தொலையலே – சரிதானே – ” என்றுக் கத்திக்கொண்டே புறப்பட்டான் சீதாராமன்.
தான் சொன்னதைத் தப்பாய் எடுத்துக்கொண்டு அவன் போவதைக் கண்டு – ஆபீசுக்குப் புறப்படுகிற நேரத்தில் அவனுக்குக் கோபம் வருவதுபோல் தான் நடந்து கொண்டதை எண்ணி – மதுரம் கண்கலங்கி நின்றாள்.
ஆனால் கோபித்துக் கொண்டு வேகமாய் வெளியேறிய சீதாராமன், வழக்கத்திற்கு மாறாக, அவள் ஆச்சரியம் கொள்ளும் விதத்தில் அறை வாசலில் ஒரு விநாடி நின்றான். அந்த ஒரு விநாடியில் அமைதியடைந்து திரும்பிப் பார்த்தான்.
மதுரம் கலங்கிய கண்களுடன் தலை குனிந்து நின்றிருந்தாள்.
அவன் அவளருகே வந்து அவள் தோளை நெருக்கி அணைத்து ஒரு சிறு குலுக்கலுடன் கேட்டான்: ‘வருத்தமா?’
மதுரத்துக்கு மேலும் மேலும் வியப்பாக இருந்தது.
“எனக்கு என்னத்துக்கு வருத்தம்?” என்று நனைந்த இமைகளுடன் சிரித்தாள் மதுரம். தன் கணவன் ஏதோ ஒரு காரியத்துக்காகத்தான் இவ்வளவு பீடிகையும் போடுகிறான் என்று உணர்ந்த அவள் ‘என்னிடம் காரியம் சாதிக்க இதெல்லாம் எதற்கு’ என்று யோசித்தவளாகக் கையிலிருந்த ரூபாய் நோட்டுகளை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தாள்.
“மது . . . மது . . உள்ளே வாயேன் – உன்கிட்டெ ஒரு விஷயம் ” என்று ஒருவகைப் பொய்க் குதூகலத்துடன் அவள் தோள்மீது போட்ட கையுடன் அவளை அணைத்தவாறு அறைக்குள் வந்தான் சீதாராமன். அவளை அழைத்தபோதும் அறைக்குள் நுழைந்தபோதும் இருந்த ஆர்வமும் வேகமும் திடீரென்று தணிந்து, ஆழமான யோசனை வயப்பட்டவனாய்க் கட்டிலின் மீது அமர்ந்தான் அவன்.
“என்ன விஷயம், சொல்லுங்கோ” என்று அவன் எதிரே இடுப்பில் கைகளை ஊன்றி நின்று மதுரம் கேட்டபோது அவள் கைப்பிடியில் அந்த ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதைதான் அவன் கேட்கப்போகிறான், ‘இந்தாங்க’ என்று கொடுத்து விடலாம் என்று தயாராய் நின்றிருந்தாள் அவள்.
“ஒண்ணுமில்லெ . . . நான் ரொம்ப யோசிச்சுப் பார்த்துத் தான் . . . . அதனாலெ உனக்கும்கூட நல்லதுதான்” என்று சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல முடியாமல் அவன் தவிப்பதைக் கண்டு, ஒரு புன்னகையுடன் அவன் பக்கத்தில் நெருக்கமாய் உட்கார்ந்தாள் மதுரம்.
“என்னத்தை இப்படி மென்னு மென்னு முழுங்கறீங்க . . ம் . . என்ன வேணும்” என்று அவன் மோவாயைத் தன்பக்கம் திரும்பினாள். ‘கேட்டதைக் தருகிறேன் ‘ என்ற நம்பிக்கை தரும் நல்லுணர்ச்சி அவள் கண்களில் மின்னிற்று. அவன் அப்போதும் மௌனமாய்த் தலை குனிந்து இருப்பதைக் கண்டதும், “சரி, சரி . . எனக்கு வேலை கெடக்குது . . ” என்று கொஞ்சம் பிகுவுடன் எழுந்தாள்.
“இரு . . இரு ” என்று அவள் கையைப் பிடித்து அருகே இழுத்து அவளைத் தழுவிக் கொண்ட சீதாராமன் உணர்ச்சி வயப்பட்டவன் போல அவள் முகத்தருகே குனிந்தான்.
“மது . . நீ சொல்வியே . . என் சந்தோஷம்தான் உன் சந்தோஷம்னு, நெஜம்தானே?” என்று கேட்கையில் அவனது சுவாசம் அவள் கன்னத்தை தகித்தது.
“அதுக்கு இப்ப என்ன? ஆபீசுக்குப் புறப்படற நேரத்திலே சட்டையெல்லாம் கசக்கிக்கிட்டு . . .” என்று அவன் பிடியிலிருந்து விலக முயன்றாள் மதுரம்.
அவள் மனத்துள் “இந்த மாசம் ஐயா ரொம்ப தாராளமா செலவு பண்ணிட்டார் போல இருக்கு . . கையிலே இருந்த பணத்தை ஒப்புக்குக் காட்டிட்டுத் திரும்பவும் வாங்கிக்கறத்துக்கு இவ்வளவு சாகஸமா? ஓ! இந்த ஐம்பது ரூபாய் இல்லாட்டித்தான் என்ன? கஷ்டத்தோட கஷ்டமா நான் கவனிச்சுக்குவேன். இவர் தயங்கறதையும் கொஞ்சறதையும் பார்த்தா பாவமா இருக்கு! சரி, இப்படி சம்பளம் பூரா என்னதான் செலவு பண்றார்? . . ” என்று எண்ணினாலும், ஒரு ஆண்பிள்ளையை, அதுவும் புருஷனை, அவன் சம்பாதிக்கும் பணத்தைப்பற்றி அப்படிக் கணக்கு கேட்பதற்கு, தனக்கு அதிகாரமில்லை என்றும், அப்படிக் கேட்பது அழகில்லை என்றும் அவள் உணர்ந்த பண்பினால் ஒரு துயரத்துடன் அவனைப் பார்த்து சிரித்தாள்.
அவன் அவளது காதோரத்தை உதடுகளால் லேசாக ஸ்பரிசித்தவாறு சொல்லிக் கொண்டிருந்தான்!
“நீ ஒரு உதவி செய்யணும் . . உதவின்னா அது எனக்குச் செய்யற உதவி மட்டும் இல்லெ; அதனாலேதான் தயக்கமா இருக்கு . . . உனக்குத்தான் தெரியுமெ – எங்க ஆபீஸ் டைபிஸ்ட் கமலா இல்லெ, கமலா . . .” என்று கூறுகையில் தொண்டை அடைத்துக் கொண்டது அவனுக்கு.
“யாரு – உங்க ஹீரோயின் கமலாவா” என்று கேலியாக விசாரித்தாள் மதுரம்.
“- ம்ஹ்ம் . . . இந்த மனுஷன் பண்ற செலவு போதாதுன்னு அவளுக்கும் இவளுக்கும் வேறே கைமாத்து கொடுத்தாகிறது போல இருக்கு . . . எல்லாம் வீண் ஜம்பம்!” என்று மனத்துள் முனகிக்கொண்டாள். அதே நேரத்தில் ‘உங்க ஹீரோயின் கமலாவா?’ என்று கேட்ட தன் கேள்விக்கு அவனிடமிருந்து ஒரு பதிலையும் எதிர்பார்த்தாள் மதுரம்.
அன்று -நாடகம் முடிந்து வீட்டிக்கு வந்ததும் ‘எப்படி நம்ப ஹீரோயின்’ என்று மதுரத்தை அவன் கேட்டபோது! . .
“கேள்வியைப் பாரு, நம்ப ஹீரோயினாம்!”என்று மதுரம் பொய்க் கோபத்தோடு முகம் திருப்பிக் கொண்டவுடன் –
“மது . . . நாடகத்திலே அவள் எனக்கு ஹீரோயின் . . . வாழ்க்கையிலே எனக்கு நிஜமான ஹீரோயின் நீ தானே?” என்று சொன்னானே, அந்தப் பதிலைத்தான் மீண்டும் ஒரு முறை எதிர்ப்பார்த்து இப்போதும் அவள் அவ்விதம் கேட்டாள்.
ஆனால் அவனோ பதிலேதும் சொல்லாமல் எதையோ சற்று நேரம் தலை குனிந்து யோசித்துவிட்டு “ம் . . அவளுக்குத்தான், இன்னக்கி மத்தியானம் அவ வருவா . . . இங்கே! . . நீயே அவள் கேட்கிற உதவியை தாராள மனத்தோட செய்யணும் . . . எனக்காகச் செய்வியா? அவள் உன்னைத்தான் நம்பியிருக்கா, அந்த உதவிக்குத் தகுந்த மாதிரி உன்கிட்டெ அவ நடந்துக்குவா . . . பாவம், அவ ரொம்ப நல்லவ . . . அவளுக்கு யாருமில்லெ . . ” என்று அவன் இவ்வளவு கரிசனையுடன் கேட்கும்போது, அந்தக் கரிசனை மதுரத்துக்கு பிடிக்கவில்லை; கொஞ்சம் எரிச்சல்கூட வந்தது.
“சரி . . சரி, அவள் வரட்டும் . . . உங்களுக்கு நாழியாகலியா?” என்று பேச்சை மாற்றினாள் மதுரம்.
“அப்போ நான் வரட்டா?” என்று அவளிடமிருந்து பிரியாவிடைப்பெற்றுச் செல்பவன் போல் அவன் வெளியேறினான்.
மதுரத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் மனத்தில் அன்று நாடகத்தில் சீதாராமனின் ஹீரோயினாக நடித்த கமலாவின் குழந்தை முகம் தோன்றியது . . . இவருக்கு ஏன் இவளுக்கு கடன் கொடுக்க இவ்வளவு கரிசனை என்ற கேள்விக்கு எழுந்த பதில்களை யெல்லாம் எண்ணி ‘சீ, சீ! நான் எவ்வளவு மோசமாக ஒரு பெண்ணைப்பற்றி நினைக்கிறேன்’ என்று தன்னைத் தானே கண்டித்துக் கொண்டாள்.
அது அவள் சுபாவம். தன் புருஷன் விவகாரமாகட்டும், வீட்டுப் பிரச்னையாகட்டும், குழந்தைகளின் தொல்லையாகட்டும் – எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு சமாதானம் தேடிக்கொள்ள முடியும் அவளால்.
இல்லாவிட்டால் இதுபோன்ற நினைவுகளிலேயே அவள் நின்றிருக்க முடியுமா? இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளது இரண்டு பெண் குழந்தைகளும் பள்ளிக்கூடத்திலிருந்து பசியோடு ஓடிவந்து நிற்குமே . . . .
சோப்புப் பவுடரில் ஊறவைத்த – கணவனின், குழந்தைகளின் – துணிமணிகளையெல்லாம் அலசிப்போட வேண்டுமே . . . .
அடுப்பில், உலை கொதித்துக் கொண்டிருக்கிறதே . . . .
மாடுகளுக்குத் தீவனம் வைக்கவேண்டும் . . .
‘எவ்வளவு வேலைகள் இருக்கின்றன’ என்ற மலைப்பும், வேலைகளைச் செய்யவேண்டும் என்ற துடிப்பும் பிறந்தது அவளுக்கு. உடனே அவள் மற்ற எல்லாவற்றையும் மறந்தாள். முதல் வேலையாக கணவன் அப்ப்டியே போட்டுவிட்டுப் போன ஸேவிங் ஸெட்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமை நோக்கிப் போனாள் மதுரம்.
மத்தியானம் இரண்டு மணிக்குமேல்தான் மதுரத்துக்கு சிறிது ஓய்வு. அந்த ஒரு மணி நேரத்துக்கும் குறைவான சந்தர்ப்பத்தில் ஹால் நடுவே, பின்கட்டு வாசற் கதவுக்கு நேரே நன்றாகக் காற்று வரக்கூடிய வழியில் வாசற்படியில் தலைவைத்து முந்தானையை விரித்துப் படுப்பாள் . . . கொஞ்ச நேரத்துக்கெல்லாம் போதுமென்றாகிவிடும். எழுந்துபோய் முகம் கழுவிக்கொண்டு வந்து தலைவார உட்கார்ந்துகொள்வாள். அந்த நேரத்தை விட்டால் அவளுக்குத் தலைவாரிக்கொள்ளும் சந்தர்ப்பமே இல்லாமற் போய்விடும். அதனாலென்னவென்று இருந்துவிட முடிகிறதா அவளால்? சாயங்காலம் அவர் வரும்போது என்னத்தான் வெட்டி முறிக்கும் வேலை கிடந்தாலும், தலை ஒரு வேஷம் துணி ஒரு கோலமாய் நின்றால் வீடு உருப்படுமா? . . . அதற்காகத்தான் மூண்று மணிக்கே தனது அலங்காரத்தை முடித்துக் கொள்வாள் மதுரம்.
. . . .அதற்கு என்ன அர்த்தம்? அவன் வருகையை மூன்று மணியிலிருந்தே எதிர்பார்க்கிறாள் என்பது தானா? நாலு மணிக்குப் பூக்காரி வருவாள்! அது வாடிக்கை! இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனவே! அவர்களுக்கும் சேர்த்துதான் வாங்குகிறாள்; ஆனால் அவர்களுக்காகவே வாங்குவதாகச் சில சமயங்களில் சொல்லிக் கொள்கிறாளே, அது அவ்வளவு உண்மையல்ல.
பொழுது சாய்ந்ததும் அவள் வாசற்படியில் வந்து வந்து பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருப்பாள்; அவன் காலையில் அலங்காரம் செய்துகொண்டு போகும்போது பரட்டைத் தலையும் அழுக்குத் துணியுமாய் நின்று கொண்டிருந்தாளே, ‘அவள் தானா இவள் ‘ என்று வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஒரு விநாடி நின்று அவன் பார்க்கவேண்டாமா?
அவன் பல சமயங்களில் அவளைக் கவனிக்காமலேயே போவான்; அவள் அந்த அலட்சியத்தைப் பொருட்படுத்த மாட்டாள். சில சமயங்களில் அவளது அலங்காரத்தைக் கண்டு அவன் சிரிப்பான்; அந்தக் கேலியை அவள் புரிந்துகொள்ள மாட்டாள்.
மத்தியானம் மூன்று மணிக்குக் கூடத்து ஹாலில் கண்ணாடியைச் சுவர் அருகே சாய்த்து வைத்துக்கொண்டு அவள் தலைவார ஆரம்பித்தபோது , வழக்கமாகக் கவனிக்கின்ற அந்த முன்புற நரையை, கூந்தலை வகிடாய்ப் பிரித்து ஒரு முறை பார்த்துக்கொண்டாள் மதுரம் . . . எண்ணெய் தடவி வாரிவிட்டால் அந்த நரைதான் மறைந்து கொள்கிறதே!
அவள் எண்ணெய் தடவிக்கொள்ளும்போதுதான் அவள் வந்தாள். அந்த ஹீரோயின் கமலா, தனது நரைத்த கூந்தலைப் பார்க்கக்கூடாது என்ற பதைப்பில், சீப்பை எடுத்துக்கொண்டு விடுவிடென்று உள்ளே நுழைந்து, அறையிலுள்ள நிலைக்கண்ணாடியில் அவசர அவசரமாய்த் தலையை வாரிக் கொண்டையிட்டுக் கொண்டபோது மதுரம் தன்னுள் பேசிக்கொண்டாள்: ‘ஏன்? இவள் பார்த்தால் என்ன? எதற்கு இவள் எனது நரையைப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறேன் . . .’
‘ . . . . அந்த ஹீரோவுக்குப் பொருத்தமான ஹீரோயினாய் மேடையில் தோன்றிய கமலா, வாழ்க்கையில் இப்படிப் பொருத்தமில்லாத ஒரு ஹீரோயினோடு அவன் வாழ்கிறான் என்று நினைத்துவிடக் கூடாது என்ற அச்சத்தினாலா? . . . .
அவள் உள்ளே வந்தாள்.
“வாம்மா . . . அன்னிக்கி நாடகத்திலே பார்த்ததுதான். எங்க வீட்டுப் பக்கம் வரக்கூடாதோ . . உட்காரு, இதோ வந்துட்டேன்!” என்று முன்புற கூந்தலை ஒரு தடவைக்கு மூன்று தரம் சீப்பால் அழுந்த வாரிக் கொண்டையிட்டுக் கொண்டபின், நட்பு முறையில் புன்னகை தவழும் முகத்துடன் ஹாலுக்கு வந்தாள் மதுரம்.
“உட்காரம்மா . . நிற்கிறாயே . . . ” என்று ஹாலில் கிடந்த பிரம்பு சோபாக்களில் ஒரு இரட்டைச் சோபாவை அவளுக்குக் காட்டி, தானும் ஒன்றில் அமர்ந்துகொண்டாள் மதுரம்.
– யாராவது புதிய மனிதர்கள் வரும்போதெல்லாம் அவள் அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பாள்.
அவள் எதிரே இரட்டைச் சோபாவில் உட்கார்ந்திருந்த கமலா, ஹாலை ஒரு முறை சுற்றிலும் திரும்பிப்பார்த்து, “எங்கே குழந்தைகளைக் காணலே” என்றாள்.
“இன்னும் பள்ளிக்கூடத்திலிருந்து வரல்லெ.”
“ஓ! சின்னவளும் போறாளா ஸ்கூலுக்கு?”
“ஆமாம் . . . இப்பத்தான் சேர்த்தேன் . . . ஒரு நாளைக்குப் போவா; ஒரு நாளைக்கு ‘மாட்டேன்’னு அடம் பிடிப்பாள் . . .” என்று கூறி சிரித்தாள் மதுரம். பதிலுக்கு அவளும் சிரித்தாள். அதன் பிறகு ஒரு விநாடி என்ன பேசுவது என்று புரியாமல் திகைத்த மதுரம், தொடர்ந்து தன் இளைய மகளைப் பற்றிக் கூறினாள்: “பள்ளிக்கூடம் போகலேன்னா விட்டிலே அவ பண்ற அட்டகாசம் தாங்க முடியறதில்லேம்மா . . . பெரியவ ரொம்ப சாது. இது என்னவோ இப்படி வந்திருக்கு . . உடம்பிலே சட்டை இருக்கப்படாதுங்கறா . . பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் கவுனை ஒரு மூலையிலே, ஜட்டியை ஒரு மூலையிலே அவுத்து எறிஞ்சுட்டுத்தான் சுத்தி சுத்தி வரா . . .நானும் எவ்வளவோ அடிச்சுப் பார்த்தாச்சு; ம்ஹ§ம் ” என்று சிரிப்பிற்கிடையே விவரித்தாள்.
“கொழந்தைதானே ” என்று கூறியவாறே தன் கைப்பையிலிருந்து ஒரு பிஸ்கட் டின், இரண்டு பெரிய சாக்லெட் பாக்கெட் முதலியவற்றை எடுத்து சோபாவின்மேல் வைத்தாள் கமலா.
‘கடன் கேட்க வந்தவள் இதையெல்லாம் ஏன் வாங்கி வந்திருக்கிறாள்’ என்று யோசித்தாள் மதுரம்.
‘முதல் தடவை வீட்டுக்கு வரும்போது வெறுங்கையோட வரலாமா?’ – என்று, எதிலுமே ஒரு சமாதானம் தேடிக் கொள்ளும் தன் இயல்புக் கேற்ப யோசித்துக் கொண்டிருந்த மதுரம், “இதெல்லாம் எதுக்கம்மா? . . . வீண் செலவு’ என்றாள்.
“நீங்க என்ன அக்கா, யாரோ விருந்தாளிகிட்டெ சொல்ற மாதிரி சொல்றீங்களே!” என்று உரிமையான பாவனையில் மதுரத்தைப் பார்த்தாள் கமலா.
மதுரம் நன்றி கலந்த புன்னகையுடன் கமலாவை, அவளது அலங்காரத்தை, உடை மோஸ்தரை, கூந்தல் சிங்காரத்தையெல்லாம் – தங்க நகையை எத்தனை மாற்று என்று எடைபோடும் பொற்கொல்லன் மாதிரிப் பரிசீலித்துக் கொண்டிருந்தாள். நடுவில் ஒரு முறை உள்ளே எழுந்து போய்க் காப்பிக்கு அடுப்பு மூட்டிவிட்டு மீண்டும் வந்து உட்கார்ந்துகொண்டாள்.
இவ்வளவு நேரமாய் வந்த காரியத்தைப் பேச கமலா தயங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் தானே ஆரம்பித்தாள் மதுரம்.
“அவர் காலையிலேயே சொல்லிவிட்டுப் போனார் ” என்றதும் கமலா, முகத்தில் ஒரு மாற்றத்துடன், “என்ன சொல்லிட்டுப் போனார்?” என்று கேட்டாள்.
“ஒண்ணுமில்லெ, நீ வருவேன்னு சொன்னார்; ம் . அப்புறம் உனக்கு யாருமே இல்லேன்னு சொன்னாரே . . நான் அவர்கிட்டேயே கேக்கணும்னு நினைச்சேன்; நேரமில்லே அப்போ. ஆமா, நீ இப்போ யார் வீட்டிலெ இருக்கே . சொந்த ஊர் எது? தாய் தகப்பன் இல்லாட்டியும் சொந்தக்கார மனுஷாள் இருப்பாங்க இல்லே?” என்று ஒரு அடுக்கு விஷயத்தை இரண்டு மூன்று கேள்விக்குள்ளே திணித்துக் கேட்டாள் மதுரம்.
கமலா மதுரத்தின் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லிவிடவில்லை. ஒரு நிமிஷம் மௌனமாய்த் தலைக்குனிந்து உட்கார்ந்திருந்தாள். . . . . . குனிந்த தலை குனிந்து, குனிந்து தாழ்ந்தது. கழுத்து நரம்புகள் புடைத்துப் புடைத்து விம்மின. காதோரம் சிவந்தது . . .
அவள் தலை நிமிர்ந்து பார்த்தபோது கமலாவின் கண்கள் கலங்கிச் சிவந்திருப்பது கண்ட மதுரம் திகைத்தாள்.
‘நாம் ஏதாவது தப்பாகக் கேட்டு விட்டோமோ?” என்ற அச்சத்துடன் அவளருகே வந்து ‘ஏம்மா வருத்தப்படறே? ..” என்று ஆறுதலாகக் கேட்டாள் மதுரம்.
‘என்கூடப் பொறந்த சகோதரியைப்போல நினைச்சுத்தான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்று உணர்ச்சியால் அடைத்த குரலுடன் கூறி, அதற்குமேல் சொல்லமுடியாமல் உதட்டைக் கடித்துக்கொண்டாள் கமலா. . .
“பெத்தவங்களைச் சின்ன வயதிலேயே பறிகொடுத்திட்டு மாமா விட்டிலே படாதபாடுபட்டு எப்படியோ படிச்சு முடிச்சுட்டு ஒரு வேலை கிடைச்சதும் அந்த நரகத்திலேருந்து விடுதலையானேன். ஒரு ஹாஸ்டல்லே தங்கி – ஒரு அனாதையாகவே துணையில்லாத வாழ்க்கை எவ்வளவு காலத்துக்கு வாழறது?” என்று சிவந்த நாசி விரிந்து துடிக்க அவள் கேட்டபோது, மதுரத்துக்கு அந்த நிலைமையின் சோகத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.
“ஏன்? ஒரு கல்யாணத்தைப் பண்ணிகிட்டு, குடியும் குடித்தனமுமா ராணி மாதிரி இருக்கலாமே நீ? உனக்கென்ன குறைச்சல்? என்னைமாதிரி எழுத்துவாசனை இல்லாதவள்னாலும் சொல்லலாம்? . . இதுக்கா வருத்தப்படறே?” என்று தைரியம் கூறினாள் மதுரம்.
கமலா ஒரு பெருமூச்செறிந்தாள்.
“அதுக்கெல்லாம் சொந்தக்காரர்களோ, வேறே பொறுப்பான பெரியவங்களோ இருந்தாத்தானே நடக்கும் . . அப்பிடி எனக்கு யாரும் இல்லியே . . . இந்த இரும்பத்தாறு வயசுக்குள்ளேயே எனக்கு அதெல்லாம் குடுத்து வைக்கலேங்கற தீர்மானத்தோட இப்படியே வாழ்ந்துடலாம்னுதான் இருந்தேன். ஒரு ஆதரவுமில்லாத எனக்கு எல்லாவிதமான உதவியும் செய்யறதுக்கு அன்பா, ஆதரவா இருக்கிறவர் ஆபீஸிலேயே இவர் – மிஸ்டர் சீதாராமன் – ஒருத்தர்தான் . . .” என்று அவள் கூறி நிறுத்தியதும் இருவரும் கவனமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
மதுரத்துக்கு திடீரென என்னவோ விபரீதமாய் ஒரு கற்பனை, ஒர் எண்ணம் – ஒரு தீர்மானம் உள்ளூற எழுந்தது. அது கொஞ்சம்கூட வெளியே தெரியவில்லை. வெளியே தெரியாத, சலனம் காட்டாத அது, அவளைச் சிலைப்போல் ஸ்தம்பிக்க நிறுத்தி, கமலாவின் உள்ளே ஊடுருவுவது போல் அவளைப் பார்க்க வைத்தது. தான் சொல்லவந்த விஷயத்தைச் சொல்லாமலேயே இவள் புரிந்துகொண்டுவிட்டாளோ என்ற திகைப்பில், கமலாவும் அவளையே வெறித்துப் பார்த்தாள்.
‘இவள் மறுத்துவிட்டால்? தன்னைத் தூஷித்துத் துரத்தி விட்டால்? . . . தன் மானத்தைக் கெடுப்பதுபோல் ஊர் கூட்டி நியாயம் கேட்டுவிட்டால்?’ என்ற திகில்கள் படிப்படியாய் விளையவே, திடீரெனக் குமுறி, வாய்விட்டுக் கதறியவாறு மதுரத்தின் கரங்களில் முகம் புகைத்துக்கொண்டாள் கமலா.
இப்போது ‘ஏன் அழுகிறாய்? எதற்கு வருந்துகிறாய்?’ என்றெல்லாம் மதுரம் கேட்கவில்லை. அவள் நின்றிருக்கும்போது வெறித்ததுபோலவே, அந்த இடத்தைவிட்டு விலகி வந்து தன் கரத்தில் முகம் புதைத்தழும்போதும்-அவள் பார்வை வெறித்து நிலைகுத்தியிருந்தது . . .
மதுரத்தின் கைகளை இறுகப்பற்றி அழுதுகொண்டே அவள் தௌ¤வான குரலில் சொல்லிவிட்டாள்: “உங்க வாழ்க்கையில் பங்கு கேட்கிறேன், அக்கா!”
– அழுகையென்ற கேடயத்தை ஏந்திக்கொண்டு அந்தக் கூரிய வாளை ‘சரே’லென மதுரத்தின் இருதயத்தில் ஆழமாகச் செருகிவிட்டாள் கமலா.
“இந்த அனாதைக்கு வாழ வழிகாட்டணும் . . . என் மானமே உங்க கையிலே இருக்கு. உங்களுக்கு நான் செஞ்ச துரோகத்தை மன்னிச்சு நீங்க என்னைக் காப்பாத்தணும் . . உங்க குழந்தை வேறே, என் வயித்திலே இருக்கிறது வேறே இல்லே அக்கா!”
செருகிய வாளை உருவி, மீண்டும் பாய்ச்சியபோது, தன் மனோபலம் முழுவதையும் திரட்டி, பல்லைக் கடித்துக் கண்களை மூடித் தாங்கிக்கொண்டாள் மதுரம்.
“இந்த நன்றியை உயிர் உள்ளவரைக்கும் நான் மறக்கமாட்டேன் . . .உங்களுக்கும் – நம்ப குடும்பத்துக்கும்” என்று கமலா கூறுவதை இடைமறித்து அமைதியான குரலில் மதுரம் முனகினாள்.
“போதும் கமலா . . . போதும் . . ஐயோ, என்னாலே, தாங்கமுடியலேடி அம்மா . . .” என்று படுகாயமுற்றவள்போல் அந்தச் சோபாவில் கிடந்து அண்ணாந்த தலையை இடமும் வலமும் புரட்டிப் புரட்டி உலுப்பியவாறு துடித்தாள் மதுரம்.
அரைமணி நேரம் வரை மதுரம் அசையவில்லை; விழிகளைத் திறக்கவில்லை.
சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்ட பிறகு, அவளது சம்மதிப்பை, பதிலை எதிர்நோக்கி உள்ளூர ஒரு தவிப்பும், பார்வையில் ஒரு திகைப்பும் கொண்டு உட்கார்ந்திருந்தாள் கமலா.
மதுரத்தின் நிலையைப் பார்க்கும்போது, அவளுக்குப் பயமாகவும் வருத்தமாகவும் இருந்தது. தான் நினைத்து எதிர்ப்பார்த்ததுபோல் அவள் ஆத்திரமோ வெறுப்போ கொண்டு தன்னைத் தூஷிக்கவோ, சபிக்கவோ செய்யாததால் – இந்த நல்லவளின் இதயத்தை நொறுக்கிவிட்ட, குற்றம் புரிந்துவிட்ட உணர்ச்சியில் அவளுக்குக் குமுறிக் குமுறி அழுகை வந்தது.
வெகுநேரம் மௌனமாய் அழுதுகொண்டிருந்த பின் இவளருகே வந்து “அக்கா . . அக்கா . . .” என்று அழுதுகொண்டே உசுப்பினாள் கமலா.
ஒன்றுமே நடக்காததுபோல் தௌ¤வான முகத்தோடு, உறுதியான பார்வையோடு நிமிர்ந்து உட்கார்ந்தாள் மதுரம். அவள் கண்களிரண்டும் தாமரை இதழ்ப்போல் சிவந்திருந்தன.
“நீ ஏம்மா இப்படி அழறே? தைரியமாய் இரு” என்று சொல்லிவிட்டு எழுந்து அறைக்குள் போனாள். அவளுக்கு ஏனோ சற்றுத் தனிமையிலிருக்க வேண்டும் போலிருந்தது. அறையில் கிடந்த கட்டிலையும், ஸ்டாண்டில் கிடந்த அவனுடைய துணிமணிகளையும் அவள் பார்வை வெறித்தது.
அவள் அறைக்குள் புறங்கைகளைக் கட்டியவாறு மெலும் கீழும் நடந்து நடந்து திரும்பி உலாவுவதை ஹாலிலிருந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் கமலா.
அவள் அறையின் நிலைக்கண்ணாடியின் முன் நின்றாள். அவளது ஆசைக்கணவன் அலங்காரம் செய்துகொள்வானே அதே இடத்தில் நின்று தன்னைப் பார்த்துக்கொண்டாள். அவசரமாக வாரியதால் சரியாக மறையாத அந்த முன்புறம் நரைத்த சிகை ஒரு கொத்தாய் இப்போது வெளியே கிளம்பி இருந்தது. முகத்தில் சுருக்கம் கண்டுவிட்டது, உடம்பு ஸ்தூலப்பட்டு, வயதுக்கு மீறிய தோற்றம் தட்டிவிட்டது.
அவர் எப்படி இருக்கிறார்! ‘அன்னிக்கிப் பார்த்தது போலவே . . .’ என்று எண்ணியவாறே அவள் ஹாலில் உட்கார்ந்திருக்கும் கமலாவை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
‘இவள் அவருக்குப் பொருத்தம்! நான்தான் கிழடாகிவிட்டேன்! . . . அது எப்படி? அவரைவிட வயசு குறைந்த நான் எப்படி அவரைவிடக் கிழமானேன்? ஆமாம்; என் கிழவியானது முதுமையினால் அல்ல; என் மூடத்தனத்தால் . . . அறிவில்லாத, புத்தியில்லாத ‘ — அவள் நறநறவெனப் பற்களைக் கடித்துக்கொண்டாள்.
– வாழ்க்கை முழுவதும் அவனைப் பற்றிய நினைவில் அவள் தன்னை மறந்திருந்தாள். அவன் அலங்காரம் செய்துகொண்டு இளமையோடு திகழ்வதைப் பார்த்துக்கொண்டு நிற்கின்றபோதே, தான் முதுமையடைந்து கொண்டிருப்பதை அவள் அறியாமல் போனாள்.
அவள் அவற்றையெல்லாம் இப்போது சிந்தித்துப் பார்த்தாள். அவள் மனதில் இப்போது குடைந்து கொண்டிருந்த உணர்ச்சி, தன் புருஷனை வேறு ஒருத்தி அபகரித்துக்கொண்டாளே என்பதல்ல. தான் எவ்வளவு ஏமாளியாய் ஒரு பொய்யை நம்பி, வாழ்க்கையின் இனிய பகுதிகளையெல்லாம் வீணாயும் விழலுக்குழைத்த வேதனையாகவும் மாற்றிக்கொண்டோம் என்ற கசப்பான உண்மை அவளை ஒரு வெறிச்சியைப் போல் விழிக்க வைத்தது.
அவள் நின்று நின்று பெருமூச்செறிந்தாள். வாயால் பேச வார்த்தையில்லை – எனினும் பேசினாள்.
‘குடும்பத்தின் சுமையெல்லாம் நான் சுமந்துகொண்டால் ஏன் தலை நரைக்காது? அவரைப்போல் ஒரு கவலையும் இல்லாமல் இருந்தேனா? எல்லாவற்றுக்கும் குறுக்கே நின்று நான் பாதுகாத்தால் அவர் என்றைக்குமே ஹீரோவாக இருக்க மாட்டாரா என்ன? . .. எனக்குத்தான் என் நினைவேயில்லை;எனக்கு அவர் நினைவே போதும். அவருக்கு அப்படியா? அவர் நினைவுக்கு நான் போதுமா? ஆ! எவ்வளவு பெரிய மோசடி? எவ்வளவு மோசமான சுரண்டல்? வாழ்ந்ததை நினைத்தால் குடலைப் புறட்டுகிறதேடி, அம்மா! சீ, இனிமேல் அவர் முகத்தைப் பார்க்கும் பாபம் எனக்கு வேண்டாம். அந்தக் கெட்ட சொப்பனம் தீர்ந்தது ‘ என்றெல்லாம் வாய்விட்டு முனகிக்கொண்டாள்.
அவள் நேரே ஹாலுக்கு வந்து கமலாவின் எதிரே உட்கார்ந்து அவளை அனுதாபத்தோடு உற்றுப்பார்த்துவிட்டுச் சொன்னாள்:
“கமலா! உன் தலை எழுத்துக்கு நான் என்ன செய்யமுடியும்? . . . நீ என் வாழ்க்கையிலே பங்கு கேக்கறே! நான் வாழ்ந்தேனா என்ன? நான் உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கறேன் – தயவு செய்து முழுக்க எடுத்துக்கோ! பதினைஞ்சு வருஷம் நான் அவரோட வாழ்ந்தவ. இந்தப் பெரிய கணக்குக்கு விடை – பூஜ்யம்னு இப்பத்தான் தெரிஞ்சிருக்கு . . . ஓ! நான் என்னென்ன பாடு பட்டிருக்கேன்! போகட்டும்! நீ சீக்கிரம் போயி, அவரை . . . இனிமேலே இந்த வீட்டில் அவருக்கு இடமில்லேன்னு சொல்லிடம்மா! அந்த முகத்தை நான் பார்த்தேன்னா அலறிச் செத்துடுவேன்! துரோகத்தை அனுபவிக்கிறதுகூடக் கஷ்டமில்லேம்மா . . துரோகியின் சிரிப்பைச் சந்திக்கிறது ரொம்பக் கொடுமை! நானும் என் குழந்தைகளும் யாரையும் நம்பி இல்லேன்னு நீயும் புரிஞ்சுக்கோ! ஆமா, இந்தப் பதினைஞ்சு வருஷமா அவர் மேலே இருந்த நம்பிக்கையிலே நான் வாழ்ந்திருக்கலாம்; ஆனா அவரை நம்பி இங்கே யாரும் வாழலே, வாழ முடியாது . . . அவர் அப்படி! சிக்கிரம் போயி அவரை இங்கே வரவேண்டாம்னு சொல்லிடு . . ம், போ! . . . மத்தபடி உன் தலை எழுத்துக்கு நான் என்ன செய்யமுடியும் – இந்த ஹீரோயின் கதை முடிஞ்சுது – அவருக்கு இன்னொரு ஹீரோயின் வேண்டாமா என்ன?” என்று சொல்லிவிட்டு எழுந்தாள் மதுரம்.
அவள் குரலில் இருந்த தௌ¤வும், அவள் வார்த்தைகளில் தோன்றிய நிதானமும் – அவள் கூறுவது வெறும் உணர்ச்சி வயப்ப்ட்ட முடிவு அல்ல என்று கமலாவுக்குப் புரிந்தது. கமலா தலை குனிந்து கை விரல்களின் நகங்களைப் பிய்த்தவாறு உட்கார்ந்திருந்தாள். எழுந்து நின்ற மதுரம் இரக்க உணர்ச்சியால் கண்கலங்கக் கமலாவைப் பார்த்தாள்.
சற்றுமுன் ‘என்கூடப் பொறந்த சகோதரி . . இந்த அனாதைக்கு வாழ வழி காட்டுங்க – அக்கா’ என்றெல்லாம் அவள் மன்றாடிக் கேட்ட வார்த்தைகளை எண்ணிப் பார்த்தாள் மதுரம்.
“கமலா . . . என்னைச் சகோதரியா நீ நெனைச்சிருக்கே . . . உனக்கு வாழ வழிகாட்டச் சொல்றே . . நான் எப்படியம்மா அதைச் செய்யமுடியும்? என் தாய் அப்பொ இருந்தாங்க, ‘இவரைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன்’னு நான் பிடிவாதமாய் இருந்தப்பொ, எங்கம்மா எவ்வளவோ புத்தி சொன்னாங்க – எனக்கு ஏறலியே – அம்மா ” என்று கூறித் தனது இறந்துபோன தாயை எண்ணிக் கண் கலங்கினாள் மதுரம்.
“இப்படியெல்லாம் வரும்னு நெனைச்சித்தானோ என்னவோ, தனக்குச் சொந்தமான இந்த வீட்டை வேற பிள்ளைகளுக்குத் தராமெ எனக்குத் தந்துட்டுப் போனாங்க. எனக்கும் என் குழந்தைகளுக்கும் கஞ்சி ஊத்தரது இந்த வீடு தானம்மா. இந்த வீடும் அந்த ரெண்டு மாடுகளும் தான். கமலா, அந்தமாட்டின் மேலே வைக்கவேண்டிய பாசத்தை, இந்த வீட்டின் மேலே வைக்கவேண்டிய பக்தியை, இத்தனை வருஷமா வீணடிச்சிருக்கேன்” என்று தானே பேசிக்கொள்வதுபோல் சொல்லிக்கொண்டிருந்த மதுரம் திடீரெனக் கடுமையான குரலில் கோபாவேசமாகக் கத்தினாள்: “இது என் வீடு! இந்த வாசற்படியை யாரும் மிதிக்கக்கூடாது.”
அந்தச் சத்ததையும் அவள் தோற்றத்தையும் கண்டு கமலா திகைத்துப் போனாள்.
தான் அங்கேயே இருந்தால் கமலாவின் முன்னே இன்னும் என்னென்ன அந்தரங்க தாம்பத்திய விஷயங்களையெல்லாம் ஆத்திரத்திலே பேசிவிடுவோமோ என்ற அச்சத்துடன், மதுரம் எழுந்து சென்று அறைக்குள் போய்க் கதவை மூடிக்கொண்டாள்.
கமலா அந்த அறையின் மூடிய கதவை வெறிக்கப் பார்த்தாள். முகத்தை மூடிக்கொண்டு குலுங்க குலுங்க அழுதாள்.
அவள் இப்போது எதற்காக அழுகிறாள்? தன் தலை எழுத்துக்கா?
‘இந்த ஹீரோயின் கதை முடிஞ்சுது; அந்தக் கெட்ட சொப்பனம் தீர்ந்தது’ என்று இவ்வளவு வைராக்கியத்தோடு அவனை நிராகரித்துவிட்ட மதுரத்தை அவள் எண்ணிப் பார்த்தாள்.
‘ஆ! இவளல்லவோ பெண்’ என்று கமலாவின் ஹிருதயம் விம்மிற்று.
தன்னைப்போல் படித்தவளோ, ‘எங்கே சென்று ஒரு டைப்ரைட்டரின் முன்னால் உட்கார்ந்தாலும் மாதம் நூத்தைம்பது ரூபாய்’ என்ற வாழ்க்கை உத்தரவாதமோ இல்லாத அவளுக்கு இருக்கும் அந்த உறுதியைக் கண்ட பிறகுதான், தான் ஒரு அனாதையுமல்ல, யாரிடமும் போய் எதையும் யாசிக்கவேண்டிய நிலையிலும் தான் இல்லை என்பதை உணர்ந்து தன்னம்பிக்கை கொண்டாள் கமலா.
‘ தன் வாழ்க்கை மேலும் கெட்டுப்போக வேண்டுமா?’ – என்ற கேள்விக்கு பதிலாய் அவன் உருவமே அவள் மனத்தில் தோன்றியது. அந்த அலட்சிய உணர்ச்சி மிகுந்த கண்கள் என்ன சொல்கின்றன? என்று இப்போது அவளுக்குப் புரிந்தது.
இவ்வளவு நல்ல மனைவியை, இவள் உழப்பை, இவள் அன்பை, இவள் பெருந்தன்மையை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு அவன் என்ன காரியம் செய்திருக்கிறான் – என்று ஒரு மூன்றாவது மனுஷியாகவே நின்று பார்க்கையில் அவன்மீது அவளுக்கு திடீரென்று ஒரு வெறுப்பே உண்டாயிற்று!
அந்த வெறுப்பு விஷம்போல் ஏறி வளர்ந்தது.
ஆம்; அவன்மீது விருப்பம் கொள்வதற்குத்தான் காரணமில்லை, அது ஒரு பலஹீனம் . . . அவனை வெறுப்பதற்கு நினைத்து நினைத்துப் பார்க்க ஆயிரம் காரணங்கள் – இந்த சில மாதப் பழக்கத்திலேயே – அவளுக்கு ஏற்பட்டிருந்தன.
‘ம் . . . மதுரம் நல்லாச் சொன்னாங்க ஒரு வார்த்தை- எவ்வளவு மோசமான சுரண்டல்!வாழ்ந்ததை நெனைச்சா குடலைப் புரட்டரதேடி, அம்மா. . . என்று.’ அந்த வார்த்தைகளின் ஆழமும் அர்த்தமும் உணர்ந்து யோசிக்கையில் தனக்கும் கண்கள் திறந்ததுபோல் இருந்தது கமலாவுக்கு.
கமலா தலை நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவள் கண்களில் ஒர் அலட்சியமே சுடர்விட்டது.
‘ம் . . . இரண்டு குழந்தைகளும் தாயுமாய் இருப்பவளுக்கு இல்லாத கவலையா, பிறக்காத குழந்தைக்கும் எனக்கும் வந்துவிடப் போகிறது?அப்படி வருவதை இவரா தாங்கி தடுத்துவிடப்போகிறார்?’ என்று எண்ணி ‘இரண்டாவது ஹீரோயின் கதையும் முடிந்தது’ என்று முணுமுணுத்துக்கொண்டே தன் கைப்பையைத் திறந்து காகிதமும் பேனாவும் எடுத்துத் திடமான தீர்மானத்தோடு கீழுதட்டை அழுத்திக் கடித்துக்கொண்டு கடிதம் எழுத ஆரம்பித்தாள் கமலா.
இரவு ஏழுமணிவரை அந்த பார்க்கில் கமலாவுக்காகக் காத்திருந்தான் சீதாராமன். ஆறு மணிக்கு நல்ல செய்தியுடன் தன்னை வந்து சந்திப்பதாகச் சொல்லியிருந்த கமலாவை இன்னும் காணாததால் அவன் சற்றும் பதட்டப்படவில்லை. வாழ்க்கையில் வெற்றிகளைத் தவிர வேறெதுவும் தனக்கு ஏற்படப் போவதில்லை என்ற உறுதியான அசட்டு நம்பிக்கையுடன் இருப்பவனாகையால், இந்த விஷயத்திலும் அவன் பூரண நம்பிக்கையுடனிருந்தான்.
‘சம்பாதிக்க ஒரு மனைவி, பணிவிடை செய்ய ஒரு மனைவி’ என்ற சுயநலம் நிறைவேறப் போகிற மகிழ்ச்சியில் வழக்கம்போலவே சீட்டியடித்துக்கொண்டு இரவு எட்டு மணிக்கு அவன் வீடு வந்து சேர்ந்தான். இன்று தன்னை இரண்டு பேர் இனிய முகத்தோடு வரவேற்பார்கள் என்ற குதூகலம்!
அவன் வீட்டின் முன் ஹாலுக்கு வந்தபோது அவன் எதிர்பார்த்தபடி அங்கே கமலாவையும் காணோம்; மதுரத்தையும் காணோம். அவனது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். பெரியவள் உமா, சோபாவில் உட்கார்ந்து பாடம் படித்துக்கொண்டிருந்தாள். சின்னவள் லதா – பிறந்த மேனியாய் – ஸோபாவின் பின்புறம் வந்து நின்று உமாவின் பின்னலை இழுத்துக் குறும்பு செய்துகொண்டிருந்தாள்.
அந்த சோபாவின் ஒரு பகுதியில் பிஸ்கட் பாக்கெட் பிரிந்து கிடந்தது; பிஸ்கெட்டுகள் இறைந்து கிடந்தன.
சீதாராமன் வீட்டிற்குள் நுழைந்ததும் ‘படீ’ரென சமையறைக் கதவை அறைந்து சாத்திய சப்தம் – அவனுக்கு நெஞ்சில் உதைத்தது போலிருந்தது.
அவன் சமையறைக் கதவை நோக்கி நடந்தான்.
மூடிய கதவின்மேல் லேசாகத் தட்டி, “மது . . மது . .” என்று அழைத்தான்.
உட்புறம் கதவின்மேல் முதுகைச் சாய்த்து அவள் திரும்பி நின்றுக்கொண்டிருக்கிறாள் என்று கதவிடுக்கில் தெரிந்தது.
உள்ளேயிருந்து அவள் குரல் ஸ்பஷ்டமாக ஒலித்தது!
“மானமுள்ள ஆம்பிளையா இருந்தா – என் வீட்டைவிட்டு கீழே இறங்கிடணும். இங்கே உங்களுக்கு இடமில்லை! இது என் வீடு!”
“மது! கதவைத் திற! சொல்றேன் ” என்று அழுவதுபோன்ற குரலில் கெஞ்சினான் அவள் கணவன்.
“முடியாது . . உங்கள் முகத்தைப் பார்த்தா – ஐயோ! வேணாம் . . .புருஷனின் முகத்திலே காறித் துப்பினவங்கறபேர் எனக்கு வேணாம்! . . .”
– சீதாராமனுக்குச் செவிட்டில் அறைந்தது போலிருந்தது. முகமெல்லாம் வியர்த்தது. தன் வாழ்க்கையிலே முதல் தடவையாய் ஒரு முதல்தரமான விபரீதம் நிகழ்ந்திருப்பதை அவன் அனுபவித்தான்.
அவனுக்குக் கோபமும் வந்தது.
“என்னடீ பேசறே? . . போகல்லேனா என்ன செய்வே?” என்று அந்தக் கதவை எட்டி உதைத்தான்.
கண்ணாடிப் பாத்திரம் நொறுங்கியதுபோல் உள்ளே இருந்து அவள் ஒரு ஹிஸ்டீரியா சிரிப்புச் சிரித்தாள். பிறகு, கலகலத்துப் பெருகிவரும் அந்தச் சிரிப்பிடையே சொன்னாள்: ” நல்லது, இங்கேயே இருங்க. அந்த ரெண்டு குழந்தைகளுக்கு ஒண்ணு அப்பன் இருக்கணும், இல்லே அம்மா இருக்கணும் . . நீங்களே இருங்க . . ” என்று அவள் கூறிக்கொண்டே கொடிக் கயிற்றை ‘படா’ரென்று இழுத்து அறுக்கும் சப்தம் கேட்டது சீதாராமனுக்கு.
அவனுக்குக் கையும் காலும் நடுங்கி விறைத்தன. ‘எக்ஸ்ரே’ சித்திரம்போல் மூடிய கதவுக்குப் பின்னால் நடக்கும் காரியம் அவன் கண்களுக்குத் தெரிந்தது. தனது ஒவ்வொரு நிமிஷப் பிரசன்னமும் அவள் கழுத்தில் இறுகப் போகிறது என்றறிந்ததும் அவன் ‘ஓ’வென்ற குரலில் அலறினான்.
“மதுரம், நான் போயிடறேன்! நான் போயிடறேன் . . . இதோ நான் போயிடறேன் . . ” என்று கதவின்மேல் இரண்டு கரத்தாலும் தடதடவெனக் குத்திக்கொண்டு கத்தினான் சீதாராமன்.
‘போ!’ என்று ஒருமையில் கூறிக் கையிலிருந்த கொடிக் கயிற்றால் மூடிய கதவின்மேல் ‘சவுக்’கென்று அவள் அடித்ததன் வேகமும் வெறுப்பும் அவனுக்குப் புரிந்தது.
‘தான் சாகிறேன் என்று சொன்னதும் அவன் இப்படி அலறுவதற்குக் காரணம் தன் மீது கொண்ட பாசமல்ல; இந்த இரண்டு குழந்தைகளின் சுமையும் தன் தலையில் விடியுமே என்ற கோழைத்தனம்தான்’ என்றெண்ணிய மதுரம், ‘சீ’ என்று அருவருத்து உடல் சிலிர்த்தாள்.
– இப்போதுதான் முதல் தடவையாக – அவளது சுபாவப்படி எந்த ஒரு ‘சமாதான’மும் தேடிக்கொள்ளாமல் அவனது பலஹீனத்தைப் பச்சையாய் – அவள் புரிந்துகொண்டாள்.
சீதாராமன் தன் அறைக்குள் ஓடி அவசர அவசரமாகத் தனது துணிமணிகளையெல்லாம் வாரி இரண்டு சூட்கேசுக்குள் அடைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தான்.
அப்போது கடிதப்பெட்டியில் ஒரு கடிதம் நீண்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து இரண்டு சூட்கேசுகளையும் கீழே வைத்துவிட்டு நடுவில் நின்று கடிதத்தை எடுத்துப் பிரித்தான்.
குழந்தைகளிரண்டும் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் கமலா வாங்கி வந்த பிஸ்கெட்டுகளையும் சாக்லெட்டுகளையும் தின்றுகொண்டிருந்தனர். ஒரு பெரிய ‘காட்பரீஸ்’ சாக்லெட்டைக் கடித்துப் பக்கத்தில் வைத்துவிட்டு சிலேட்டில் என்னவோ மும்முரமாய் எழுதிக்கொண்டிருந்தாள் பெரியவள்.
சின்னவள் பதுங்கிப் பதுங்கி அவளருகே வந்து அவள் கடித்து வைத்த சாக்லெட்டை, அவளறியாமல் தானும் எடுத்து ஒரு கடி கடித்தாள்.
“ஏண்டி என்னோடதை எடுக்கறே? அப்பா, இங்கே பாரு” என்று அருகிலிருந்த தகப்பனை அழைத்தாள் உமா.
அவள் கத்தியதும் சின்னவள் லதா தான் கடித்த சாக்லெட்டை மீண்டும் அவளருகே வைத்துவிட்டுட் தள்ளி நின்றாள். உமா அதை எடுத்து, திருப்பித் திருப்பிப் பார்த்து “சீ! எச்சில், எனக்கு வேணாம்” என்று சின்னவளிடமே அதைத் திருப்பிக் கொடுத்தாள்.
சின்னவள் லதா அதை வாங்கிக்கொண்டு விழித்தாள்.
அவள் அதைத் தனக்கே திருப்பித் தந்ததும் எச்சிலைத் தின்னக்கூடாது என்றும், சற்றுமுன் அவள் எச்சிலைத்தான் தின்றோம் என்று அறிந்ததும், லதாவும் தன் கையில் மூளியாய்க் கடிக்கப்பட்டு இருந்த அதே சாக்லெட்டைத் திருப்பித் திருப்பி அசூயையுடன் பார்த்து,
“தூ! எச்சில்! . . . ” என்று தன் கையிலிருந்ததை வீசி எறிந்தபின், வாயிலிருந்ததையும் துப்பிவிட்டு வாயைத் துடைத்துக்கொண்டாள்.
அந்த எச்சில் சாக்லெட் சீதாராமனில் காலடியில் வந்து விழுந்தது.
அவன் அதைப் பார்த்தான். கையிலிருந்த கடிதத்தைப் பிடித்தபிடியில் கசக்கி எறிந்துவிட்டுத் தனது சூட்கேசுகளை இரண்டு கைகளிலும் தூக்கிக்கொண்டு வாசற்படியில் விடுவிடுவென இறங்கினான்.
‘இங்கே வாடி உமா – அப்பா ‘ஓ’ போறார்’ என்றுக் கத்திக்கொண்டே பிறந்தமேனியாய் தெரு வாசற்படிக்கு ஓடிவந்தாள் லதா. அவள் பின்னாலேயே உமாவும் வந்து நின்றாள்.
தெருவில் இறங்கிய சீதாராமன் திரும்பிப் பார்த்தவுடன் அந்தக் குழந்தைகள் இருவரும் தங்கள் வழக்கப்படி தலைக்குமேல் கையை உயர்த்தி “அப்பா …….. டாட்டா” என்று கூவி விரலசைத்தனர்.
சீதாராமனின் கண்களில் – சதா ஒர் அலட்சியமே மின்னி அந்த அலட்சியத்தையே ஒரு அணியாக அணிந்து அதுவே ஒர் அழகாக அமைந்து பலர் நடுவே அவனை ஹீரோவாக்கிய அதே கண்களில்தான் – குளமாய் கண்ணீர் நிறைந்தது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *