ஹாக்சாபிளேடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 7,984 
 

”தம்பி! உங்க அண்ணன் இருக்கானா?”

“படிச்சுட்டு இருக்கான், என்ன விஷயம்?”

“கொஞ்சம் வரச் சொல்லேன், ப்ளீஸ்…” –கீழே என் தம்பி யாருடனோ பேசிக்கொண்டிருந்தான், இந்தத் தெருல யாருக்காவது ஏதாவது பிரச்சனைனா எங்க ’கேங்’ல இருந்து யாராவது ஒருத்தனைத்தான் உதவிக்குக் கூப்பிடுவாங்க. அநியாயத்துக்கு இன்னிக்கு எல்லாரும் எஸ்கேப் ஆயிட்டானுங்க, நான் மட்டும் எதோ எம்.எஸ்.சி. வரைக்கும் வந்துட்டோமே இப்பவாவது பரிட்சைக்குக் கொஞ்சம் படிக்கலாமேனு வீட்ல இருந்தேன், இப்ப அதுக்கும் ஆபத்து வந்தாச்ச…

அது யார் என்று குரலை வைத்து நான் ஓரளவுக்கு ஊகித்திருந்தேன், வாயெல்லாம் பல்லாக, நக்கலாக சிரித்தபடியே வந்த என் தம்பியைப் பார்த்தவுடன் என் ஊகம் உறுதியானது.

நேராக என்னிடம் வந்தவன் “உன்னக் கூப்பிடுறாங்க” என்றான்,

“பூட்டா?” என்றேன்,

“மாமியும் பூட்டு, பிராப்ளமும் பூட்டு” என்று இளித்தான்,

“அதான பார்த்தேன், எங்கடா நீங்க படிச்சுகிடிச்சு வெச்சு சென்னைல மழை கிழை வந்திருமோனு பயந்துட்டே இருந்தேன், போங்கப்பா போங்க…” என்றாள் நாங்கள் குடியிருந்த கோயில்.

”ரகு, சங்குவையும் கூப்பிடவா?” என்றான் என் தம்பி,

“அவங்க வீட்ல இல்லை, எஸ்கேப்” என்றேன், கேங்கில் இரண்டு நபர் குறைகிறதே என்ற வருத்ததுடனேயே பூட்டு மாமியின் பிரச்சனையைத் தீர்க்கக் கிளம்பினோம்.

’பூட்டுமாமி’, எங்கள் தெருவிற்குக் குடிவந்த இரண்டே மாதங்களில் இந்த நாமகரணத்தில்தான் (எங்களிடையே) படு ”பாப்புலர்” ஆகி இருந்தார் அந்த மாமி. இயற்பெயர் வீட்டின் முன் தொங்கிய நேம்போர்டில் மட்டுமே இருந்தது, ’சீதாலஷ்மி’ என்று.

எங்கள் தெருவிற்கு அவர் வீடு பார்க்க வந்த அன்று பார்த்தது, அதன் பிறகு ஒரு வாரம் கழித்து ஒரு நாள் மாலை வழக்கம் போல நாங்கள் அரட்டையடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த வீட்டிலிருந்து அவர் வெளியில் கிளம்பிப் போகிற பொழுதுதான் பார்த்தோம்.

அனைவருக்கும் சற்றே ஆச்சரியம்தான்.

“என்னடா இது, நாம் பார்க்கும் போதுலாம் வீடு பூட்டித்தான் இருந்துச்சு, இப்ப இவங்க இருக்காங்க? எப்ப ஷிஃப்ட் ஆனாங்கனே தெரியலயே” என்றான் ரகு ஆச்சரியத்துடன்,

“விட்றா! நாம என்ன எப்ப பார் இங்கேயே நின்னுட்டு வாட்ச் பண்றோமா என்ன? அவங்களும் தனியாள்தான, சாமான்லாம் கம்மியாத்தான் இருக்கும், நாம காலேஜ் போயிருக்கிற கேப்ல வந்துருப்பாங்க” என்றேன்,

சங்கு இடையிட்டான், “ஆனா, நான் அப்பவே நோட் பண்ணென் டா, முதல்ல இருந்த பூட்டும் இப்ப இருக்குற பூட்டும் வேற மாதிரி இருக்குனு, அப்பவே டவுட் ஆனேன்…” என்று,

“முதலைக்கு ஏன் பூட்டு போட்டாங்க?” என்று அவனை ஓட்டினான் ரகு,

“ஆமா, இவரு சி.பி.ஐ, பூட்டெல்லாம் நோட் பண்ணி வெச்சுப்பாரு…” என்று நானும் சேர்ந்துகொண்டேன், இப்படி ஏதாவது வாய் கொடுத்து எங்களால் கலாய்க்கப்படுவதே சங்குவின் வழக்கம்.

”அதவிடுங்கண்ணா, அந்த மாமிக்கு இந்த வயசுல எவ்ளோ பலம் பாருங்க, புல்-அப்ஸ்-லாம் எடுக்குறாங்க!” என்றான் என் தம்பி ரகுவிடம், அவன் தவறிகூட என்னை ‘அண்ணா’ என்று கூப்பிட மாட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டுச் சற்றே குழப்பத்துடன் நாங்கள் அந்த மாமியின் வீட்டுப் பக்கம் நோக்கினோம், அவன் சொன்னது முக்கால்வாசி உண்மை என்று புரிந்தது.

மூன்று தாழ்ப்பாள்கள் இருந்த அந்தக் கதவிற்கு நான்கு பூட்டுக்களைப் போட்டுவிட்டு, எல்லாம் நன்றாக பூட்டியிருக்கிறதா என்று பூட்டு மாறிப் பூட்டு தொங்கிப் பார்த்துக்கொண்டிருந்தார் அந்த மாமி. ஒரு வழியாக திருப்தி அடைந்தவுடன் கடவுளின் மேல் (அல்லது கதவின் மேல்) பாரத்தைப் போட்டுவிட்டு கிளம்பினாள் லஷ்மி மாமி. (இச்சம்பவம் நடந்த காலக்கட்டத்தில் அவருக்கு ‘பூட்டுமாமி’ பட்டாபிஷேகம் நடந்திருக்கவில்லை என்பதை வாசகர்கள் மனத்தில் கொள்ள வேண்டுகிறோம்!)

அவர் எங்களைக் கடந்து செல்கையில் அசரீரி வாக்கு போல் கேட்டது, “அந்தப் பூட்டுக்களோட வெயிட்லயே கதவு பேர்ந்து விழுந்துடும்னு நினைக்கிறேன்” என்ற ரகுவின் கமெண்ட், சற்றே தயங்கி நின்ற மாமி, பின் இறைவன் மேல் இருந்த நம்பிக்கையில்(!) வீட்டை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு நடையைக் கட்டினார். நாங்களும் சற்று நேரம் அரட்டையடித்து, எங்கள் தெருவின் மற்ற முக்கிய ’ஸ்காண்டல்’களையும் அலசிவிட்டு அவரவர் வீட்டிற்குச் சென்றோம்.

***

சுமார் எட்டுமணியளவில் நான் சாப்பாட்டை முடித்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்த பொழுது (அட! ’குமுதம்’தாங்க, தப்பா நினைக்காதீங்க!) தமிழ் சினிமா வில்லன் ரேஞ்சிற்குச் சிரித்தவாறே என் அருகில் வந்து நின்றான் என் தம்பி,

“என்னடா? என்ன மேட்டர்?” என்றேன்,

“சீதா மாமியாத்து பூட்டை எவனோ உடைச்சிட்டன்” என்றான்,

“அவாத்துப் பூட்டை…” என்று நான் தொடர்வதற்குள் எங்கள் கு.இ.கோ குறுக்கிட்டார்,

“இதுல சிரிக்க என்னடா கிடக்கு? பாவம், அவா வந்து ஒரு வாரம்கூட ஆகல, அவா என்னவோ உன் ஜென்ம விரோதி மாதிரி சந்தோஷப்படுற? போய் என்னனு பாருங்க, ஏதாவது உதவி தேவைனா பண்ணிக் கொடுங்க, போங்க” என்று மிரட்டி விரட்டினாள். டக் என்று சிரிப்பை ஆஃப் பண்ணிவிட்டு நானும் என் தம்பியும் போய்ப் பார்த்தோம்.

எங்க குழு உறுப்பினர்கள் எல்லாம் சரியா ஸ்பாட்டுக்கு வந்திருந்தாங்க, ஆனா அங்க நடந்திருந்த கதையே வேற! பூட்டை யாரும் உடைக்கவில்லை, மாமிதான் நாலு பூட்டில் இரண்டு பூட்டின் சாவியைத் தொலைத்துவிட்டிருந்தாங்க!

”சாவி இருந்தாலே இந்தப் பூட்டைலாம் திறக்க ரெண்டு நாள் ஆகும், இதுல சாவி வேற இல்லையா…” என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம். பூட்டை உடைக்கலாம், ஆனால் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் பூட்டை (பூட்டுக்களை!) யார் உடைப்பது என்பதுதான், ”ஏற்கனவே சீதாமாமி பூட்டில் புல்-அப்ஸ் எடுக்குறவங்க, இப்ப அவங்க கண்ணெதிர்லயே நாம பூட்டை உடைச்சா அப்புறம் அவங்க வீட்டைவிட்டு வெளில போகவே மாட்டாங்க” என்று நாங்கள் கண்டுகொள்ளாமல் ஓரமாய் நின்று நடப்பதை வேடிக்கைப் பார்த்தோம்.

எங்கள் தெருவின் 1970, 1980 Gangsters-லாம் வந்து ஆளாளுக்கு ஏதேதோ செய்தார்கள், இல்லை இல்லை, சொன்னார்கள்! நோ வே!

“மூணாவது தெரு போனா அங்க பூட்டு ரிப்பேர் பண்றவன் இருப்பான், பெட்டர் யூ ட்ரை ஹிம்!” என்று 1970 ஒருவர் யோசனை தந்தார்,

“அதாண்டி சீதா சரி! நானே உன்னக் கூட்டிண்டு போறேன், கிளம்பு” என்று வழிமொழிந்தார் லஷ்மிபாட்டி, எங்கள் தெரு பாட்டிகளின் தலைவி (கவனிக்க: இவர் லஷ்மி “பாட்டி”).

‘ஒரு தெருல பிரச்சனையத் தீர்க்க எங்களைப் போல ஒரு கேங் இருந்தா, பிரச்சனையைக் கிளப்புறதுக்கு ஒரு பாட்டிகள் கேங் இருக்கத்தானே இருக்கும்?’ ஆனால், பாதி நாட்கள் எங்களுக்குப் பிரச்சனையே அவங்கதான்.

“என்னைப் பார்த்தா பிரச்சனையா தெரியுதா உங்களுக்கு? நாங்க உங்கள வையுறது (திட்றது) உங்க நல்லதுக்குத்தான்னு நீங்களே தெரிஞ்சுப்பேள் டா!” என்பார் லஷ்மிபாட்டி,

“ஐயாம் சாரி பாட்டி, இது என் கதை, நான் இந்த ’ஆங்கிள்’லதான் எழுதுவேன்!”.

”பதினஞ்ஞ்ஞ்ஞ்சு ரூபா தரேன்னு சொன்னேன், அந்தக் கடங்காரன் அப்பவும் வரவே மாட்டேன்னுட்டான்” என்று பூட்டு ரிப்பேர் செய்பவனைத் திட்டியவாறே திரும்பி வந்தார்கள். இரண்டாவது எபிஸோட் தொடங்கியது. வேறு வழி இன்றி, எங்களிடம் சரணடைந்தனர் லஷ்மி & லஷ்மி கேங். (71.8% பாட்டிகளுக்கு ஏதாவது ஒரு ’லஷ்மி’ பெயரையே வைத்துள்ளனர் என்கிறது நாங்கள் போன வாரம் எடுத்த ஒரு சர்வே ரிப்போர்ட்.)

முதலில் அந்தப் பூட்டையும் கதவையும் பார்த்துப் பயந்தாலும், வீட்டுக்கு சொந்தக்காரியே சொல்லிவிட்டார் என்ற தைரியத்தில் கதவில், மன்னிக்கவும், ‘களத்தில்’ குதித்தோம். பூட்டைப் பார்த்துப் பயந்தது அதன் அளவினால், ஆனால், கதவைப் பார்த்துப் பயந்தது எங்கே விழுந்துவிடுமோ என்ற கவலையில்! அரைமணி நேர போராட்டத்திற்குப் பிறகு கதவிற்குப் (பலத்த) சேதமின்றி பூட்டுக்களை மட்டும் உடைத்துத் தந்தோம்.

இந்தப் போராட்டத்தில் எங்கள் சுத்தியல் ஒன்று உடைந்துவிட்டது, ஆனால், சீதாமாமி ரொம்ப நல்லவர், அடுத்த நாளே ஒரு புது சுத்தியல் வாங்கி வந்து கொடுத்துவிட்டார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகுதான் சீதாமாமி ‘பூட்டுமாமி’ ஆனார், அதைவிட முக்கியமான விஷயம் அவர்கள் பலவித ஆயுதங்களை (எல்லாம் பூட்டை உடைக்கத்தான்) வாங்கி வைத்துக் கொண்டார்கள் என்பதுதான். ’ஒருநாள் இவங்க அந்த டூல்-பாக்ஸின் சாவியையே தொலைத்தாலும் தொலைப்பார்கள்’ என்று எண்ணியதோடு அந்த நாளையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் நாங்கள்!

இப்படிப்பட்ட புகழுடைய பூட்டுமாமி இன்று ஒரு பிரச்சனை என்று என்னைத் தேடுகிறார் என்றால், அது வேறு என்னவாக இருக்கும்?

அதான் “மாமியும் பூட்டு, பிராப்ளமும் பூட்டு” என்றான் என் அருமைத் தம்பி! நானும் போய் பார்த்தேன், இந்தமுறை சற்று சிறிய பூட்டுத்தான், வீட்டின் உள் அறைதானே என்று சிறிய பூட்டாய்த்தான் போட்டிருந்தார்.

‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்பதைத் திருவள்ளுவரைவிட அழுத்தமாய் எனக்குப் புரிய வைத்தது அந்தப் பூட்டு. அதை உடைக்க மிகவும் சிரமப்பட்டேன், பின்ன, எனக்குத் தினம் ஒரு பூட்டை உடைச்சு பழக்கமா என்ன?

சின்னப்பூட்டுத்தானே என்று முதலில் இளக்காரமாய் நினைத்திருந்தேன், பின்னர் அதன் சிறிய அளவே ஒரு பிரச்சனையாய் இருப்பதை உணர்ந்தேன். சிறியதாக இருந்ததால் அதைச் சுத்தியலால் குறிபார்த்து, அதே சமயம் வேகமாய் அடிப்பது மிக கஷ்டமாய் இருந்தது, போதாக்குறைக்குக் கதவின் மேல் சுத்தியல் பட்டுவிடக்கூடாது என்ற கட்டுப்பாடு வேறு (அட, கதவு விழுந்தா கூட பரவால்ல, சுவரே விழுந்திடுச்சுனா?!)

அதனோடு போராடிக் கொண்டிருக்கியில் சட்டென எனக்கொரு யோசனை உதயமாகியது, மிகுந்த உற்சாகத்துடன் அதைச் செயல்படுத்த எண்ணி என் தம்பியை அருகில் அழைத்து அவனிடம் சொல்லி அனுப்பினேன். அவனும் உடனடியாக எங்கள் வீட்டிற்கு ஓடிப்போய் நான் கேட்டதைக் கொண்டு வந்தான். சற்று நேரத்தில் பூட்டு உடைக்கப்பட்டது, இல்லையில்லை, அறுக்கப்பட்டது!

சீதாமாமிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை, ’இதென்ன பிரம்மாஸ்திரமா’ என்பதைப் போல் என் கையில் இருப்பதை வியந்து பார்த்துக் கொண்டே கேட்டார், “இது என்ன டூல்?” என்று,

அவர் கேட்டவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை, என் தம்பிக்கும்தான், ‘நாளைக்கே போய் இதை வாங்கிண்டு வந்து வெச்சிருவா பாரு’ என்ற எண்ணம்தான் அதற்குக் காரணம், ஆனாலும் கஷ்டப்பட்டுச் சிரிக்காமல் அவங்களுக்குப் பதில் சொன்னேன், “‘ஹாக்ஸா ப்ளேடு’ மாமி, தெருமுனைல இருக்குற ஹார்டுவேர் கடைல கிடைக்கும்…” என்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *