வைராக்கியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 8,039 
 

வானத்திலிருந்து உதிர்ந்துவிட்ட நட்சத்திரங்களைப் போல் இறைந்து கிடந்தன அந்த மகிழம்பூக்கள்.

ரங்கத்திற்கு சிறுவயது முதலே மகிழம்பூக்கள் என்றால் உயிர். பொறுமையாக எத்தனை வேலையிருந்தாலும் அத்துடன் மகிழம் பூக்களைப் பொறுக்கி நாரில் கோர்த்துத் தலையில் சூடிக்கொள்வாள்.
திருமணம் ஆகி இரண்டாண்டுகளுக்குள் அவள் பூச்சூடிக்கொள்ளமுடியாமல் செய்துவிட்டது தெய்வம். அதற்காக அவள் மகிழம்பூப் பொறுக்குவதை விடவில்லை. தான் சூடிக்கொள்ள முடியாவிட்டால் எ.ன, தான் பெற்றெடுத்த செல்வம் மீனாவிற்குச் சூட்டி அழகு பார்ப்பாள்.

கணவன் இறந்த சோகத்தை மகள் மீனாவால் மறக்க முடிந்திருந்தது. மிகவும் கஷ்டப்பட்டுத் தன் சிரமம் எதையும் காட்டிக்கொள்ளாமல் பிறர் வீடுகளில் உழைத்துத் தன் சக்திக்கு மீறித்தான் செல்லமாக வளர்த்தாள் மீனாவை.

அந்தக் கிராமத்தில் பண்ணையார் வீட்டுப் பெண்ணுக்கு அடுத்தபடியாக மீனாதான் பாலியெஸ்டர் பாவாடையும், பட்டுப் பாவாடையும் கட்டிக்கொள்பவள் மீனா வளர வளர, மகளைப் பார்த்துப் பார்த்துப் பூரித்தாள். ரங்கம் பெருமைப்பட்டாள். கர்வப்பட்டாள்.

ஈரேழு உலகத்திலும் தான்தான் மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த அந்த சந்தோஷ சூழ்நிலையில் தான் மண்ணை அள்ளிப் போட்டதுபோல் அந்தக் கிராமத்திற்கு படஷூட்டிங்கிற்காக சினிமாக்காரர்கள் வந்திறங்கினார்கள்.

கட்டுப்பாட்டையும், கலாச்சாரத்தையும் மீறாத அந்தக் கிராமத்து மக்களைக் கவர்ச்சியால் மயக்கி அந்த வெகுளிப்பெண்ணைத் தன் வசமாக்கி, தாயையே எதிர்த்துப் பேசும் அளவிற்கு சினிமா மோகத்தை ஏற்படுத்தி, சினிமாக்காரர்கள் ஷூட்டிங் முடித்து, ஊரைவிட்டுப் போகும்பொழுது மீனாவையும் அவள் வீட்டைவிட்டு, அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

இன்றோ, திரை உலகில் மின்னும் தாரகை மீனாஸ்ரீ. ஊரெல்லாம் பிரபலமாகப் பேசப்படும் அளவிற்குச் சுடர் விட்டுப் பிரகாசித்தாள் மீனாஸ்ரீ.

தனக்குத் தெரிந்த பெண் என்பதால் அந்தக் கிராமத்து மக்கள் கூடப் பக்கத்து ஊரில் ஓடும் மீனாஸ்ரீ படத்தைப் பார்த்துவிட்டு வந்து ரங்கத்திடம் சொன்னார்கள்.

ஆனால் ரங்கம் மட்டும் சபலப்படவில்லை. வீட்டை விட்டு மகள் ஓடினதே அவமானம், அதிலும் கேவலமான சினிமாவில் சேர்ந்துவிட்டாளே என்று எண்ணியெண்ணி மாய்ந்துபோனாள் ரங்கம்.
ஒரு மாதம் வரை வீட்டைவிட்டு வெளியில் கூட வராமல் தன் விதியை நினைத்து, நினைத்து அழுதிருக்கிறாள். கணவனை இழந்த போது கூட ரங்கம் இத்தனை வருத்தப்பட்டிருப்பாளா என்பது சந்தேகமே!

“என்னைப் பொறுத்தவரையில் என் மகள் செத்துத் தான் போயிட்டா. இன்னொரு முறை அவளைப் பற்றிய பேப்பர் செய்திகளையும், அவ படத்தைப்பற்றிய செய்திகளையும் என்கிட்டே பேசாதே, மீறிப்பேசினே, உன்னையும் என் மக லிஸ்டிலே சேர்த்துருவேன் இது உறுதி”

“தப்புடியம்மா, தப்பு. இனிமே அவள்பற்றிப் பேச மாட்டேன். உன் மனசைத் துன்புறுத்திட்டேன். என்னை மன்னிச்சுடு” பஞ்சவர்ணம் சொல்லியபடியே அந்த இடத்தை விட்டகன்றாள்.

அவள்போனதும் ரங்கம் கதவைச் சாத்தி வைத்து விட்டு வந்து அமர்ந்து அழலானாள். “எனக்கு ஏன் இப்படியொரு அவனமானம் ஏற்பட வேண்டும்? இந்தப் பெண்ணுக்கு ஏன் இப்படிப்புத்தி போகணும்? அவ அப்பா நாட்டுக்காக உயிரையே கொடுத்தார். இவ நாட்டையே கெடுத்து இப்படிக் குட்டிச்சுவராக்குகிறாளே.” அழுதழுது தூங்கிப் போனாள்.

அடுத்தநாள், தனக்கு வேண்டிய ஒருவரைப் பார்க்க டவுன் பக்கம் போன ரங்கம், மூலைக்கு மூலை உள்ள பேனரைப் பார்த்துத் திடுக்கிட்டாள். கண்ணைச் சுருக்கிக் கொண்டு ஒருமுறைக்கு இருமுறை பார்த்தாள். சந்தேகமில்i. அரைகுறை ஆடையுடன் கவர்ச்சிப் பாணியில் மீனாஸ்ரீ சிரித்துக்கொண்டிருந்தாள்.

“என்னடி ரங்கம், பெண்ணைப்பற்றிப் பேசப்படாதுன்னு சொல்ற நீயா, பெண்ணோட படத்தைப் பார்த்ததும் இப்படி மயங்கி நின்னுட்டே?” பக்கத்தில் சென்ற பஞ்சவர்ணம் விலாவில் இடித்துக் கேலி செய்தாள்.

“இல்லே, பஞ்சவர்ணம், தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்னு சொல்லுவாங்களே, அது இது தான். நான் நாளைக்கே சென்னைக்குக் கிளம்பப் போறேன். இனிமேலும் என் பெண்ணைப் பார்க்காம என்னால இருக்கமுடியாதுடி!! கண் கலங்கக் கூறினாள் ரங்கம்.

ஊரார் பாராட்ட படிக்கவைத்து, நல்ல இடத்தில் திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என்று அவள் கண்டிருந்த கனவையெல்லாம் ஒரு நொடியில் பொய்யாக்கி விட்டு இன்று சினிமா நடிகையாக, பணம், புகழ் என்று மின்னிக்கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு நாளும் மீனாஸ்ரீயைப்பற்றிய செய்திகளை படித்து, தொகுத்து அளிப்பாள் ரங்கத்தின் ஆத்ம தோழி பஞ்சவர்ணம். அப்பொழுதெல்லாம் ரங்கம் காதைப் பொத்திக்கொள்வாள், கடுமையான வார்த்தைகளால் தோழியைச் சாடுவாள்.

“இருந்தாலும் உனக்கு இத்தனை வைராக்கியம் கூடாதடி ரங்கம். உலகம் புகழும் மீனாஸ்ரீயைப் பார்த்து பெருமைப்படாமல், மகள் என்ற நினைவுகூட இல்லாமல் வேற்று ஆளைப்போல இப்படித் திட்டுகிறாயே, நியாயமா? என்பாள் பஞ்சவர்ணம்.

“இதோ பார், பஞ்சவர்ணம்! இனியொரு தடவை அவளை என் மகள்னு சொல்லாதே, என் மகள் செத்து போயிட்டா, அதோ பார்” என்று ரங்கம் சுட்டிக் காட்டிய இடத்தைப் பார்த்த பஞ்சவர்ணம் அதிர்ந்துதான் போனாள்.

ரங்கம், காட்டிய இடத்தில் பவழமல்லி மாலையுடன் மீனாவின் படம் சிரித்துக்கொண்டிருந்தது. அடியே இதென்னடி அநியாயம்? உயிரோடிக்கிற மகளைச் செத்து போய்விட்டதா சொல்றியே!”

ரங்கத்தின் மனமாற்றத்திற்கான காரணம் புரிந்து சிரித்துக்கொண்டாள் பஞ்சவர்ணம். டவுனில் வேலைகளை முடித்துக்கொண்டு ஊர் வந்துசேர்ந்த ரங்கம், அடுத்தநாள் சென்னை செல்ல ஆயத்தமானாள்.

ஊர் மக்கள் எல்லாம் வழியனுப்ப ரங்கம் பிரியா விடைபெற்றாள்.

அம்மாவைச் சற்றும் எதிர்பாராத மீனாஸ்ரீ மகிழ்ச்சியில் திகைப்பில் ஓடிவந்து அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

உணர்ச்சிவசப்பட்ட ரங்கம் ஒரு கணம் நிதானித்து, மகளின் வீட்டையும் அவள் பரிசாகப் பெற்றுள்ள பொருட்களையும் நோட்டம் விட்டாள்.

“ஏம்மா, மீனா இதெல்லாம் நீ நடிச்ச படங்களுக்காகக் கொடுத்த பரிசுகளா அம்மா?” ரங்கம் கேட்க-

“ஆமாம், அம்மா. இன்னும் இரண்டுநாளில் எனக்குப் பெரிய பாராட்டுவிழாவே நடத்தறாங்க. லட்சக் கணக்கான வாசகர்கள் என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பறதாக் கடிதம் எழுதிக்கிட்டே யிருக்காங்க. நாளுக்கு நாள் ரசிகர்களின் அன்புத் தொல்லை தாங்க முடியலை அம்மா” என்று பெருமையுடன் கூறினாள்.

“இத்தனை பேரும் புகழுமா இருக்கிற உனக்கு நான் கூட ஒரு அன்புப் பரிசு கொண்டுவந்திருக்கேன் அம்மா, அதை நீ விரும்புவாயோ மாட்டாயோ, ஆனால் நான் கண்டிப்பா உனக்குக் கொடுக்கத்தான் போறேள்.”

“என்னம்மா அதை சீக்கிரம் காட்டும்மா, மற்றவங்க கொடுக்கிற பரிசைவிட என்தாயார் கொடுக்கிற பரிசு பெரிதல்லவா? அதன் மதிப்பே தனியானது. சீக்கிரம் கொடும்மா” அவசரப்பட்டாள் ஆர்வப்பட்டாள் மீனாஸ்ரீ.

ரங்கம், தான் கொண்டுவந்திருந்த பைகளில் தேடி, ஒரு டின்னை எடுத்து அதிலிருந்த மீனாஸ்ரீக்கு மிகவும் பிடித்த அயிட்டமான ஜிலேபியை எடுத்து, தன் மகளின் வாயில் அன்புடன் ஊட்டிவிட்டாள்.

“என் அம்மான்னா அம்மாதான், எனக்குப் பிடித்தமான ஜிலேபியை மறக்காமல் செய்து கொண்டுவந்திருக்கிறாயே, உனக்குத்தான் என்னிடம் எத்தனை அன்பு? இத்தனைநாள் எப்படிம்மா இருந்தாய்? அம்மா…. எனக்கு…. என்னமோ மாதிரி… இருக்கம்மா….. ஏம்மா…..?” வாய் குழறியது, கண்கள் இருண்டது மீனாஸ்ரீக்கு.

“ஆமாண்டி, பாலூட்டி வளர்த்த என் கையாலேயே உனக்கு பாழும் விஷத்தைக் கலந்து ஊட்டிவிட்டேண்டி, ஏன் தெரியுமா? கிராமத்திலே கணுக்கால் தெரியாம புடவை கட்டிக்கிட்டுத் திரிந்த நீ இன்னைக்கு காசுக்காக உடல் தெரிய சீச்சி…. என் பெண்ணுன்னு சொல்லிக்கவே எனக்கு வெட்கமாயிருக்கு. எத்தனை இளைஞர்களைப் பாழ்படுத்தறே? காசுக்காக உடலை விற்கிறவளுக்கும், உடலை காட்டி நடிக்கிற உனக்கும் என்ன வித்தியாசம்? நீ ஓடி போனதற்காகக் கூட நான் வருத்தப்படவில்லை. ஆனால் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த உன் புத்தி ஏன் இப்படி போகணும்? உன்னைப்போல சமுதாயப் புல்லுருவிகளை நாட்டிலே நடமாடவிடுறதே பாவம்டி, அதான் பெத்த தாயே உன்னைக் கொல்ல வேண்டிய அவசியம் வந்தது.” ரங்கம் விழிகளில் நீருடன் பேசிமுடித்தாள்.

“அம்மா… என்னை….” “மீனாவின் விழிக்கோடியில் ஈரம் கசிய, குரல் எழும்ப முடியாமல்… மூச்சு உள்ளுக்கே இழுக்க முடியாமல்…. ஆடாமல் அசையாமல்…”

“மீனா…” ரங்கத்தின் அழுகை நெஞ்சத்தைக் குத்திக் கிழிப்பதாய் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *