கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,061 
 

வீட்டு நடையில் சலீம் காலடி எடுத்து வைக்கும் போது, நடையின் ஓசையின் மூலம் அவனது வருகையை தெரிந்து கொண்ட அவனது உம்மா பாத்திமா, “”டேய் சலீம்… நில் அங்கேயே… வீட்டுக்குள்ளே வராதே… உன்னை பெத்த என் வயித்துல பிரண்டைய வச்சுதான் கட்டணும். ஏண்டா என் வயித்துல வந்து பொறந்து, எங்க உயிரை வாங்குற. எங்களால இந்த தெருவுல தலை நிமிர்ந்து நடக்க முடியலைடா… நீ பண்ணிட்டு வந்திருக்கிற காரியத்துக்கு, நம்ம குடும்பத்தையே ஜமாஅத்தை விட்டு தள்ளி வச்சிருக்கணும். ஆனா, உங்க வாப்பா, முத்தவல்லி இப்ராகிம் ராவுத்தர் கால்ல விழாத குறையா கெஞ்சி கேட்டுக்கிட்டதால, நீ வந்த உடனே உன்னை ஜமாஅத்துக்கு வரச் சொல்லி இருக்காங்க… அங்க போயி, அவங்க என்ன முடிவெடுக்காங்களோ, அதுக்குப் பிறகுதான் நீ இந்த வீட்டுக்குள்ள வரலாம்; இப்ப வீட்டுக்குள் வராதே,” என்று கொடுத்த குரல், வேகத்தடுப்பு சுவரைப் போல அவனின் நடையின் வேகத்தைக் குறைத்தது.
இதை ஏற்கனவே எதிர்பார்த்த சலீம், ஜமாஅத் நடக்கும் இடமான பள்ளிவாசல் நோக்கி நடந்தான். அவனது கால்கள் பள்ளிவாசலை நோக்கி நடக்க, அவனது மனம் தன் நண்பன் சங்கரின் வீட்டில் நடந்த விசயங்களை நோக்கிச் சென்றது…
சங்கர் என்ற சங்கரநாராயணன், சலீமின் ஆருயிர் நண்பன். இருவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து, 12ம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்தனர்.
சலீமின் பெரும்பாலான பொழுது, சங்கர் வீட்டில்தான் கழியும். சலீம் அவனது வீட்டில் இருந்த நேரத்தை விட, சங்கரின் வீட்டில் இருந்த நேரம்தான் அதிகம். அவனுடைய சாப்பாடும் சங்கரின் வீட்டிலே முடிந்து விடும். அதனால், சங்கரைப் போன்று சலீமும் சைவமாகவே வளர்ந்து விட்டான்.
வேஷம்சலீம் வீட்டில் பிள்ளைக்குட்டிகள் அதிகம் என்பதால், சலீமின் படிப்பை, 6ம் வகுப்போடு நிப்பாட்ட அவன் வாப்பா முயற்சி செய்த போது, சங்கரின் தந்தை ராமகிருஷ்ணன் தான் அவனது கல்வி செலவை ஏற்று, மேற்கொண்டு படிக்க வைத்தார்.
சலீமுக்கு தன் நண்பன் சங்கரை விட, அவனது அப்பா ராமகிருஷ்ணனைத்தான் ரொம்ப பிடிக்கும். ஏனென்றால், சங்கர் தன் மீது அன்பாக இருக்கிறான் என்றால், அதற்கு காரணம் இருவரும் ஒன்றாக படித்ததால், பழகியதால் ஏற்பட்ட அன்பு. ஆனால், தன் மகனின் வகுப்புத் தோழனிடம் அவர் அன்பு காட்ட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அவர் சங்கரையும், சலீமையும் ஒன்றாகத்தான் பார்த்தார். தீபாவளிக்கு துணி எடுக்கும் போது, சங்கருக்கு எடுப்பதைப் போல, சலீமுக்கும் எடுத்து விடுவார்.
முதலில் சங்கரின் அப்பாவை, “சார்’ என்று மரியாதையுடன் தான் கூப்பிடுவான். ஆனால், அவர்தான் என்னப்பா, “சாரு மோரு’ன்னு கூப்பிடுறே… என்னைப் பார்த்தா உங்க அப்பாவை விட வயசானவனா தெரிஞ்சா, பெரியப்பான்னு கூப்பிடு… உங்கப்பாவை விட சின்னவனா தெரிஞ்சா சித்தப்பான்னு கூப்பிடு என்று சொல்லி விட்டார்.
இளமையாக, கம்பீரமாக இருந்த அவரை, பெரியப்பா என்று கூப்பிட மனமில்லை; அதனால், சித்தப்பா என்றே கூப்பிட ஆரம்பித்தான்.
“ஏன் சித்தப்பா… உங்க தெருவிலே, மத்த வீட்டிலே, எங்களை உள்ளே கூட விட மாட்டாங்க… அப்படியே எங்க பிரண்ட்ஸ் யாராவது வற்புறுத்தி கூப்பிட்டு, அவங்க வீட்டுக்கு போனாக் கூட, நாங்க உக்காந்த இடத்தில தண்ணி தெளிப்பாங்க; நாங்க காபி குடிச்சா, அந்த டம்ளரை தண்ணி தெளிச்சிதான் எடுத்துக்கிட்டு போவாங்க. ஆனா, நீங்க என்னடான்னா, என்னை, உங்க வீட்டுக்குள்ளே எல்லா இடத்திலேயும் விடுறீங்க. நான், உங்க வீட்டுக்கு வர்றதினாலே, உங்க சாமி உங்களை கோவிச்சுக்காதா? உங்க சாஸ்திரத்துக்கு பங்கம் வராதா?’ என்று கேட்டான்.
அதற்கு ராமகிருஷ்ணன் சிரித்துக் கொண்டே, “நீ, என் வீட்டுக்குள் வந்தா, சாமி குத்தமாகும்ன்னு உனக்கு யாருப்பா சொன்னது? எங்க சாமி ஐயப்பனே உங்க மதத்தைச் சேர்ந்த வாபரை பிரண்டு ஆக்கிக்கிட்டாரு… ராமரோ குகன், விபீஷன், சுக்ரீவன் என எல்லாரையும் சகோதரராகவே மாற்றிக் கொண்டார். சிவபெருமானோ, வேடன் கொடுத்த மாமிசத்தையும், எச்சில் நீரையும் மிக விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டார். இப்படி நாம கும்பிடுற சாமிகளே, ஜாதியோ, பேதமோ பார்க்காம, மனசை மட்டும் பாக்குறப்ப, அற்ப மனுசங்க நாம ஏன் ஜாதி, மதம்ன்னு பிரிச்சுப் பார்க்கணும்… எனக்கு எல்லாரும் ஒண்ணுதான்…’ என்று, அவனை அணைத்து, தன் கைகளால் அவனது தலையை தடவி விட்டுக் கொண்டே சொன்னார்.
ஸ்கூல் விட்டதும், சங்கருடன் சலீமும் வந்து விடுவான். சலீமுக்கு அவன் அம்மா போட்டுத் தரும் இஞ்சியும் ஏலக்காயும் கலந்த சாயாவை விட, சங்கரின் தாயார் கலந்து தரும் பில்டர் காபியின் சுவை பிடித்து விட்டது. நெய் மணக்கும் பிரியாணியை விட, வெண்ணெயின் சுவை தூக்கலாக தெரியும் தயிர் சாதம் ருசியாக தெரிந்தது. ஆட்டின் நல்லி எலும்பை கடித்து துப்புவதை விட, சாம்பாரில் உள்ள முருங்கைக்காயை சுவைத்து துப்ப பழகி விட்டான்.
சங்கரின் தாயார் ஜானகியும், கணவனுக்கு ஏற்ற மனைவியாய் சங்கரையும், சலீமையும் பேதம் பார்க்காமல் ஒன்றாகவே நடத்தினாள். தவளை வடை சுட்டால், சலீமிற்கு பிடிக்கும் என தனியாக டிபன் பாக்சில் போட்டு வைத்து, அவன் வந்தவுடன் கொடுப்பாள். அதேபோன்று வாழைப்பூ அடையும் அவனுக்கு பிடிக்கும் என்பதால், அடைக்குப் போட்டால் மாவை தனியாக எடுத்து வைத்து, அவன் வந்தவுடன் சுடச்சுட நெய்யில் வார்த்து கொடுப்பாள்.
“என்னது… போற போக்க பார்த்தா, உங்க பிள்ளை யாருன்னு எனக்கே சந்தேகமா இருக்கு…’ என்று சங்கர் கூட கிண்டல் செய்ய ஆரம்பித்தான்.
“போடா… உனக்கு எப்பவும், எதிலேயும் விளையாட்டுதான். சலீமும் என் பையன்தாண்டா… என் வயித்துல பொறக்காட்டியும், அவனையும் என் பையனாத்தான் பார்க்கிறேன்…’ என்று சங்கரின் வாயை அடைத்து விடுவாள்.
சலீம் சாப்பாட்டில் சைவமாக வளர்ந்தாலும், தன் மதக் கொள்கையை தவறாமல் பின்பற்றிக் கொண்டிருந்தான். ரம்ஜான் நோன்பு சமயத்தில், சங்கர் வீட்டிற்கு வந்தால், பச்சத் தண்ணியைக் கூட தொட மாட்டான் என்பது சங்கர் வீட்டில் எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அந்த சமயத்தில், சங்கரின் அம்மா சலீமுக்கு பிடித்த உணவுப் பொருள் ஏதாவது செய்தால், அவன் நோன்பு திறக்கும் நேரம் வரை காத்திருந்து, அதன் பிறகு அவனுக்கு என்று தனியாக செய்து கொடுப்பாள்.
காலம்தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே. அது, தன் கடமையை தொடர்ந்து செய்து கொண்டுதானே இருக்கிறது. சலீம்
பிளஸ் 2வோடு, தன் படிப்பை நிறுத்திட்டு, அவனது தந்தைக்கு உதவியாக ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டான்.
சங்கர் ஸ்டேட் லெவலில் ரேங்க் எடுத்திருந்ததால், அவனுக்கு எளிதாக ஐ.ஐ.டி.,யில் படிக்க இடம் கிடைத்தது. அவன் படித்து முடிக்கும் முன்பே பிரபலமான வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. வெளிநாட்டு வேலைக்குப் போக அப்பாவிடம் அனுமதி கேட்டான்.
“நீ வெளிநாட்டு வேலைக்குப் போ… அதிலே எனக்கு சந்தோஷம்தான். நான் உன்கிட்ட காசு பணம்ன்னு எதுவும் கேட்கப் போறதில்லை. கடவுள் புண்ணியத்தில் எனக்கு பணம் தேவையான அளவு இருக்கு. அதனால, நீ எனக்கு பணம் அனுப்பணும்ன்னு நான் எதிர்பார்க்கல; ஆனா, உன்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் எதிர்பார்க்கிறேன். நான் செத்தா, எனக்கு கொள்ளிப் போட மட்டும் எங்க இருந்தாலும் நீ வந்து சேர்ந்திடு. ஏன்னா, எனக்கு நீ ஒரு பையன் மட்டும்தான் இருக்கே. நீ வந்து கொள்ளிப் போடாட்டா, எனக்கு சொர்க்கம் கிடைக்காது; “புத்’ங்கிற நரகம்தான் கிடைக்கும். நான் நரகத்திலே கிடந்து கஷ்டப்படக் கூடாதுங்கிறதுக்காக எனக்கு கொள்ளிப் போட மட்டும் எப்படியாவது நீ வந்துடணும்…’ என்று சொல்லியேதான் அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்.
சங்கர் வெளிநாடு போன பிறகும், சலீம் தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கு போய் பில்டர் காபியும், தயிர் சாதமும், தவளை வடையும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தான். ஒரு தடவை சலீம் போயிருந்த போது, இருவருக்கும் ஜானகி சுடச்சுட வாழைப்பூ அடையை நெய் மணக்க வார்த்துப் போட்டுக் கொண்டிருந்தாள். மூன்றாவது அடையை சாப்பிட்டு முடிக்கும் போது, நெஞ்சில் கை வைத்தபடி, “நெஞ்சு குத்துவதாக’ சொன்னார் ராமகிருஷ்ணன்.
“ஆமா… பொழுதன்னைக்கும் பருப்பு சாம்பார், உருளைக் கிழங்கு வறுவல்ன்னு நாக்குக்கு ருசியா கேளுங்க… பத்தாததற்கு அடிக்கடி அடை சுட்டுத் தரச் சொல் லுங்கோ… அப்புறம் கேஸ் பிரச்னை வராம என்ன பண்ணும்? சித்த இருங்கோ, சுடு தண்ணியில பெருங்காயம் கரைச்சு கொண்டு வர்றேன். குடிச்சா கொஞ்சம் இதமா இருக்கும்…’ என்று சொல்லி, ஜானகி உள்ளே போகவும், ராமகிருஷ்ணன் அப்படியே சாய்ந்து விட்டார். அவர் மடாரென சாய்ந்த சத்தத்தைக் கேட்ட ஜானகி, பெருங்காயத்தை கூட கரைக்காமல், அப்படியே ஓடி வந்து, “ஏண்ணா… என்ன பண்ணுது நோக்கு?” என்று அவரைப் போட்டு உலுக்கும் போது, அவர் தலை சாய்ந்த விதமே, அவரின் உயிர் பறவை அவரிடமிருந்து விடைபெற்று போயிருந்ததை சொல்லியது.
ராமகிருஷ்ணனை பார்த்ததுமே, டாக்டர், “உயிர் பிரிந்து ரொம்ப நேரமாகி விட்டது. இனிமேல் அடுத்து ஆக வேண்டியதை பாருங்கள்…’ என்று சொல்லி விட்டார். பிறகு, சலீம்தான் கூட இருந்து எல்லா உதவியும் செய்தான்.
உடனே, சங்கருக்கு தகவல் சொன்னான். சங்கர் வரும் வரை உடம்பு கெட்டுப் போகாமல் இருக்க, பிரீசர் கண்ணாடிப் பெட்டியை வரவழைத்து, அதில், அவரை வைப்பதற்கு ஏற்பாடு செய்தான். தகவல் தெரிந்து வருகிறவர்கள் உட்கார பந்தல் போட்டு, அதில் தேவையான அளவு சேரையும் வாடகைக்கு எடுத்துப் போட்டான். அவர் வீட்டில் சமைக்கக் கூடாது என்பதால், பக்கத்து வீட்டில் சொல்லி, தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து, வருகிறவர்களுக்கு குடிப்பதற்கு காபியும், சாப்பிட உப்புமாவும் கிண்டி வினியோகம் பண்ண வேண்டிய ஏற்பாடும் செய்தான். காரியம் பண்ண வேண்டிய வாத்தியாருக்கும் தகவலை சொல்லி, அவரையும் வரவழைத்தான்.
இனி, சங்கர் வரவேண்டியதுதான் பாக்கி. சங்கரின் வரவை எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சலீமின் மொபைல் போனில், “சங்கர் காலிங்’ என்ற எழுத்துடன் ஒலித்த சப்தம், சங்கர் அழைப்பதை அவனுக்கு தெரிவித்தது.
“சொல்லு சங்கர்… இப்ப எங்கே வந்துட்டு இருக்கே… உனக்காகத்தான் எல்லாரும் காத்துக்கிட்டிருக்கோம்…’
“அது வந்து, சலீம்… இங்கே திடீர்ன்னு ஏற்பட்ட வானிலை மாற்றம் மற்றும் புயலால் எல்லா விமானப் போக்குவரத்தையும் நிறுத்தி வெச்சிருக்காங்க… நிலைமை சரியாக, எப்படியும் குறைஞ்சது மூணு நாளாவது ஆகும். அதுக்கு அப்புறம்தான் நான் வர முடியும். இப்ப என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன்…’ என்று திக்கித் திணறி அழுகையுடனும், துக்கத்துடனும் சொல்லும் போது, என்ன செய்வது என்றே தெரியவில்லை சலீமுக்கு.
மறுநாளே, எல்லாரும், “எப்போ எடுக்கப் போறீங்க?’ என்று கேட்க ஆரம்பித்து விட்டனர். பிரீசரில் வைத்திருந்ததால், ராமகிருஷ்ணன் உடல் அழுகாது. ஆனாலும், அங்கு எப்போது கால நிலை சரியாகும், எப்போ சங்கர் கிளம்பி வருவான் என்பதை உறுதியாக சொல்ல முடியாத சூழ்நிலை.
கோவிலின் அர்ச்சகர், “ஊரில் பொணம் கிடக்கறப்ப, கோவில் நடை தெறக்க முடியாது; நாளைக்கு எடுத்திட்டா நல்லது. பகவானை தொடர்ந்து பட்டினியா போட்டா, அந்த பாவம் நமக்கு தான். அதனால, சீக்கிரம் எடுத்துட்டா நல்லது<…’ என்று சொல்லிவிட்டு போயிட்டார்.
எல்லாரும் ஒருவிதமான இறுக்கமான நிலையிலேயே இருந்தனர். சீக்கிரம் எடுத்து விட்டால், தங்களது அடுத்த வேலையைப் பார்க்க போகலாமே என்ற எண்ணம்தான்.
ராமகிருஷ்ணனின் உடலை எடுக்க வேண்டுமென்றால், அவருக்கான இறுதிக் காரியங்களை மகன் ஸ்தானத்தில் இருந்து யார் செய்யப் போகின்றனர் என்பதுதான் இப்போது எல்லாரின் மனதுள்ளும் எழுந்துள்ள ஒரே கேள்வி. மகன் உறவுமுறை உள்ள ஒவ்வொருவரிடமும் சங்கரின் சூழ்நிலையை சொல்லியும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி நழுவுவதிலேயே குறியாக இருந்தனர். ஜானகியின் நிலையை பார்க்க, பார்க்க ரத்தம் கொதிக்க ஆரம்பித்து விட்டது சலீமுக்கு. கணவனை இழந்த துக்கம் ஒருபுறம் என்றால், மகன் வரவில்லையே என்ற துக்கம் மறுபுறம். இதைவிட பெரிய கொடுமை, தன் கணவருக்கு இறுதி காரியம் செய்ய, ஒவ்வொருவரையாக தாங்குவது? இதைப் பார்த்த சலீமிற்கு பொறுக்கவில்லை. அவனது மனதில் திடீரென்று ஒரு எண்ணம் உதயமானது. கணவரின் தலைமாட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த ஜானகியின் அருகில் போய் நின்றான்.
“அம்மா… நான் உங்ககிட்ட ஒண்ணு சொன்னா, தப்பா நினைக்க மாட்டீங்களே…’ என்று தயக்கத்துடன் மெல்லிய குரலில் கேட்டான்.
“என்ன?’ என்பது போல சலீமை நிமிர்ந்து பார்த்தாள் ஜானகி.
“என்னை நீங்க உங்க பையனாத்தானே நினைக்கிறீங்க?’
“ஆமா… இதிலென்ன சந்தேகம்…’ என்பது போல அவளது பார்வை இருந்தது.
“அப்ப, சித்தப்பாவுக்கு எல்லா காரியத்தையும் நானே பண்றேன்…’
“சரி’ என்பது போல தலையாட்டி, தன் ஒப்புதலை சொல்லி விட்டாள். முதலில் சலீமின் இந்த செயலை பார்த்து வெகுண்ட சிலர், பிறகு தலையிட்டால், நம்ம தலையில் பொறுப்பு வந்து விடுமோ என்ற எண்ணத்தில் அமைதியாகி விட்டனர். “எப்படியோ, சீக்கிரம் எடுத்து விட்டால் போதும்…’ என்ற எண்ணம், எல்லார் மனதிலும் வந்து விட்டதால், இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும், எல்லாரும் மவுனமாகவே இருந்து விட்டனர்.
இறுதி காரியம் பண்ணும் பொருட்டு, தாடியை மழிக்க நாவிதரிடம் போய் உட்கார்ந்து விட்டான் சலீம். பிறகு, பூணூல் அணிந்து, நெற்றியில் திருநீறு பட்டையாக பூசி, சங்கர் போன்றே மாறி, தீச்சட்டியை கையில் தூக்கிக் கொண்டு, சுடுகாட்டுக்கு போய் அனைத்து காரியங்களையும் முறைப்படி செய்து, தலைக்கு ஊற்றி விட்டுத்தான் திரும்பினான்.
இன்று ஜமாஅத் கூடியதற்கு காரணம் இதுதான். இதை எதிர்பார்த் திருந்ததால், சலீம் அதிர்ச்சியடை யவில்லை. ஜமாஅத் நடக்கிற இடமான பள்ளி வாசலுக்கு வெளியே இருந்த மண்டபத்திற்கு சென்றான். அங்கே, முத்தவல்லி இப்ராகிம் ராவுத்தர், அஜ்ரத் அப்துல் மாலிக், பக்கத்து வீட்டு பாரூக், எதிர்த்த வீட்டு நாசர் என, முக்கிய பிரமுகர்கள் எல்லாரும் உட்கார்ந்திருந்தனர். அவர்களோடு சலீமின் தந்தை அபுபக்கரும் உட்கார்ந்திருந்தார்.
எல்லாருடைய முகத்திலும் கோபம் நெருப்பாய் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தது.
“”ஏய்… காபிர்… உன்னை ஜமாஅத்திலிருந்து தள்ளி வைக்கிறோம். இனி, நீ இந்த ஊருக்குள் வரக் கூடாது. உனக்கும், நம் சமூகத்துக்கும் உள்ள தொடர்பு முடிஞ்சு போச்சு. இனி, யாராவது உன்னோட தொடர்பு வச்சுக்கிட்டா, அவங்களையும் ஜமாஅத்தை விட்டு தள்ளி வெச்சிடுவோம்ன்னு இதன் மூலம் எச்சரிக்கை கொடுக்கறோம்,” என முத்தவல்லி இப்ராகிம் ராவுத்தர் சொல்ல, சொல்ல எல்லாரும் ஆமோதிப்பது போல தலையாட்டினர்.
“”என்னை ஏன் காபிர் என்று சொல்றீங்க? நான் தினமும் பஜ்ரு, ளுஹர், அஸர், மரிப், இஷா என ஐந்து தொழுகையும் தவறாமல் தொழுதுக்கிட்டு இருக்கேன். நம்ம மதத்தில் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாய கடமையாக்கப்பட்ட ஐந்து பர்ளுக்களில் நான் ஹஜ்ஜுக்கு மட்டும்தான் இன்னும் போகலை. மற்ற கடமைகளை பின்பற்றிக் கொண்டு இருக்கிறேன். திருக்குரானில் உள்ள, 30 ஜுஸ்உக்களும் மனப்பாடமாக தெரியும். விவரம் தெரிஞ்ச பிறகு ஒரு ரம்ஜானுக்கு கூட நோன்பு வைக்காம இருந்ததில்லை. இப்படி நம்ம மார்க்கத்தை எல்லா வகையிலும் பின்பற்றிக் கொண்டிருக்கும் போது, என்னை ஏன் காபீர்ன்னு சொல்றீங்க? ஜமாஅத்தை விட்டு தள்ளி வைப்பதற்கான காரணம் என்ன?” என்று கேட்டான் சலீம்.
“”என்னதான் நல்லவன் மாதிரி நீ வேஷம் போட்டாலும், நீ ஒரு முனாபிக் (நயவஞ்சகன்). நீ என்ன பண்ணிட்டு வந்திருக்கேன்னு உனக்கே தெரியும். அப்புறம் ஏன் தெரியாத மாதிரி கேக்குற? ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பொறந்த நீ, இந்து முறைப்படி சங்கரோட அப்பாவிற்கு இறுதிச் சடங்கு பண்ணிட்டு வந்திருக்கே. முஸ்லிம் இளைஞனுக்கு உள்ள அடையாளமான தாடியை சிரைச்சிட்டு வந்திருக்கே. இதைவிட வேறு என்ன காரணம் வேணும்ன்னு நீயே சொல்லு,” என்று பக்கத்து வீட்டு அப்துல் அஜீஸ் கோபத்துடன் கத்தினான்.
“”ராமகிருஷ்ணன் சித்தப்பாவிற்கு இறுதி காரியத்தை செய்தது நானில்லை; சங்கர்தான்.”
“”என்னடா உளருதே? நீ செய்த காரியத்தை ஊரே பாத்திருக்கு… பிளைட் கிடைக்காததாலே சங்கர் இன்னும் வெளிநாட்டுலதான் இருக்கான். நீ என்னடான்னா சங்கர் செய்தான்னு முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிற மாதிரி அண்டப்புழுகா சொல்லுறே,<” என்று கர்ஜித்தார் அப்துல் மாலிக்.
“”நான் சொல்றத நீங்க புரிஞ்சுக்கல… நம்ம சமூகத்தைச் சேர்ந்த பிரேம் நசீர்லேர்ந்து, இப்ப உள்ள ஆர்யா வரை எத்தனையோ பேர் சினிமாவிலே இந்துக்கள் வேஷம் போட்டு நடிச்சிருக்காங்களே… அதையெல்லாம் ஏன் தப்புன்னு சொல்லலை?”
“”அது, சினிமாவிலே போடுற வேஷம்; நடிக்கிறதுக்காக வேஷம் போடுறாங்க… நடிப்பு முடிஞ்சதும் வேஷத்தை கலைச்சிடுவாங்க… அதை ஏன் இப்ப தேவையில்லாம சொல்ற?”
“”அவங்க போடுற வேஷம் மாதிரி, இன்னைக்கு நானும் வேஷம்தான் போட்டேன்… நான் இன்னைக்கு போட்ட வேஷத்தோட பேரு சங்கர். இன்னைக்கு ஒரு தாயாரோட துயரைத் துடைக்க, அவங்க பையனா வேஷம் போட்டேன்… இப்பவும், நான் ஒரு உண்மையான முஸ்லிம்தான். இன்னைக்குக் கூட நான் அதிகாலை தொழுகையான பஜ்ருவம், மத்தியான தொழுகை ளுஹரையும் தொழுதிட்டுதான் வந்திருக்கேன். எந்த நேரத்திலும் நான் ஒரு முஸ்லிம்ங்கிறத மறக்கவே இல்லை.”
“”வேஷம் போடுற நீ, எதுக்காக தாடியை சிரைச்சிக்கிட்டே,” என்று மறுபடியும் அஜீஸ்தான் சத்தம் கொடுத்தான். அங்கிருந்தவர்களில் அஜீஸ்தான் இளைஞன்; எனவே, அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை.
“”காந்தி வேஷம் போடுறப்ப, வேஷம் தத்ரூபமா இருக்கணும்னா, தலையை மொட்டை அடிச்சாதான் முடியும். அதே மாதிரி நான் போட்ட வேஷத்திற்கு தாடியை எடுக்க வேண்டியதாயிட்டு… பணத்திற்காக வேஷம் போடுறவங்களை தண்டிக்க நினைக்காத நீங்க, நான் போட்ட வேஷத்தை தண்டிக்கணும்ன்னு நினைச்சா, அதையும் நான் ஏத்துக்க தயாரா இருக்கேன். நான் சொல்றதை ஏத்துக்கிறதும், ஏத்துக்காததும் உங்க இஷ்டம்,” என்றான். சலீம்.
“”இங்க பாரு, நீ என்னதான் பேசினாலும் நாங்க ஏத்துக்க தயாரா இல்லை. உன்னை ஜமாஅத்திலிருந்து தள்ளி வெச்சது வெச்சதுதான்; நீ போகலாம்,” என்று மறுபடியும் அப்துல் அஜீஸ் கத்தினார்.
“”பெரியவங்க நாங்க பேசாம இருக்கிறப்ப, நீ ஏன் தேவையில்லாமல் சத்தம் போடுற அஜீஸ்? இதப்பாரு சலீம்… இஸ்லாம் என்றாலே சாந்தி, சமாதானம் என்றுதான் பொருள். அதனால, இங்கே சண்டைக்கோ, மனக்கசப்புக்கோ வேலையில்லை. ஒரு நாடகத்திலே நடிக்க ஆரம்பிச்சவன், அந்த நாடகம் முடியுற வரைக்கும் வேஷத்தைக் கலைக்கக் கூடாது. அதனால, நீ இன்னும் செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை முடிச்சுட்டு வா… ஏன்னா, நாங்களும் மனசாட்சி உள்ளவங்கதான். எங்களுக்கும் ஒரு தாயின் நிலைமை தெரியும். நிம்மதியா போய் மத்த காரியங்களை கவனி,” என்று முத்தவல்லி இப்ராகிம் சொல்லவும், மற்றவர்களும் அவர் சொல்வதை ஆமோதித்தனர். அவனை ஆசிர்வதிப்பது போல, வான மகள் தன் சாரல் கரங்களால் அவனது தலையை வருடி விட்டாள்.

– எஸ்.செல்வசுந்தரி (அக்டோபர் 2011)

படிப்பு: பி.எஸ்.சி., (தாவரவியல்)
பணி: திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய் துறையில் உதவியாளர்.
பொழுதுபோக்கு: புத்தகங்கள் படிப்பது.
தினமலர் நாளிதழின் தீவிரமான வாசகி. முதன் முதலில் கல்லூரியில் படிக்கும் போது, இது உங்கள் இடம் பகுதிக்கு விளையாட்டாக எழுதி போட, முதல் கடிதமே வெளியானது. நம்மாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை வர, பிற பத்திரிகைகளுக்கும் எழுத ஆரம்பித்தார்.
இதுவரை, 20க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 50க்கும் மேற்பட்ட துணுக்குகள், கட்டுரைகள் என, பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. டி.வி.ஆர்., சிறுகதைப் போட்டியில் பரிசு பெறுவது, இது இரண்டாவது முறை. முதல் பரிசு எனும் வெற்றிக்கனியை எட்டும் வரை, தொடர்ந்து போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது ஆசை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *