வேலைக்காரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 7,326 
 

கிரஹப் பிரவேசம் முடிந்து பெங்களூர் டாடா நகரில் உள்ள புது வீட்டிற்கு குடியேறியதும் சரஸ்வதிக்கு அதிகமான வேலைப் பளுவால் மிகுந்த ஆயாசமாக இருந்தது.

முதலில் ஒரு நல்ல வேலைக்காரியை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். வேலைக்காரி கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல. பல பேரிடம் சொல்லி வைத்தாள்.

அந்தப் பெரிய வீட்டில் ரிடையர்ட் ஆன கணவர், கல்யாண வயதில் மகன் ராகுல் என மொத்தம் மூன்று பேர்தான். ராகுல் அமேசானில் வேலைபார்ப்பதால் அதன் தலைமையகம் சியாட்டிலில்தான் பாதிநாட்கள் இருப்பான்.

அன்று காலை ஒரு சிறுவன் அவள் வீட்டின் கதவைத் தட்டினான். சீக்கிரம் ஒரு காலிங்க்பெல் பொருத்த வேண்டும் என்று நினைத்தபடி சரஸ்வதியின் கணவர் போய்க் கதவைத் திறந்தார்.

அந்தச் சிறுவன், “சார் என்பேர் செந்தில்….இந்த ஏரியாவுக்கு நான்தான் பேப்பர் போடுகிறேன்….உங்க வீட்டுக்கும் போட்டுறலாமா?” என்றான்.

“அதெப்படி என்னிடம் தமிழில் பேசுகிறாய்?”

“உங்க வீட்டம்மா காலைல வீட்டு வாசலில் கோலம் போடுவதைப் பார்த்தேன்…தமிழ்க்காரங்கதான் காலைல வீட்டிற்கு கோலம் போடுவாங்க, கன்னடத்துக்காரங்க முதல் நாள் நைட்டே வாசல் தெளித்து கோலம் போட்டுருவாங்க.”

அவன் பதிலில் கன்வின்ஸ் ஆனவர், “சரி நாளைமுதல் டைம்ஸ் போடு” என்றார். தமிழில் யாருடனோ கணவர் பேசிக்கொண்டிருப்பதைக்கேட்டு அங்கு வந்த சரஸ்வதி, அவனிடம் “எனக்கு ஒரு நல்ல வேலைக்காரி வேண்டும், உதவி செய்ய முடியுமா?” என்றாள்.

அவன், “மேடம் என் பெயர் செந்தில், ஊர் தர்மபுரி. என்னோட சித்திபொண்ணு தர்மபுரில சின்னப்பத்து படிச்சிட்டு வீட்டில் சும்மாதான் இருக்குது. நாளை கூட்டியாரவா?” உங்களுக்கு பிடிச்சிருந்தா வேலைல சேர்த்துக்குங்க..” என்றான்.

சரஸ்வதி ஏராளமான சந்தோஷத்துடன் “கண்டிப்பா கூட்டிகிட்டு வாப்பா…” என்றாள்.

மறுநாள்….

சொன்னமாதிரியே அவளைக் கூட்டி வந்தான்.

சரஸ்வதி அவளை ஏற இறங்கப் பார்த்தாள்.

வயது இருபது இருக்கும். கழுவிட்ட பப்பாளி மாதிரி பளிச்சென்று வளப்பமாக இருந்தாள். வரிசையான பற்களில் அழகாகச் சிரித்தாள்.

“உன் பேரென்ன?”

“ஆரஞ்சி…”

“என்னது ஆரஞ்சியா? அந்த ஆரஞ்சி முப்பதா?”

“இல்ல மேடம் என் முழுப்பெயர் ஆ.ரஞ்சிதம். அதத்தான் எல்லாரும் சுருக்கி ஆரஞ்சின்னு கூப்பிடறாங்க.” சிரித்தாள்.

“…………………”

“ஒரு ரெண்டு நாள் எனக்கு டிரெயினிங் குடுங்கம்மா….அப்புறம் நாலுநாள் பாருங்க… என்னியப் பிடிச்சிருந்தா வச்சிக்குங்க. இல்லாட்டி அனுப்பிச்சிருங்க.”

சரஸ்வதிக்கு அவளின் வெளிப்படையான பேச்சு மிகவும் பிடித்திருந்தது.

கணவரைக் கூப்பிட்டு ஆரஞ்சியை காண்பித்தாள்.

அவள் கணவர் தன் பங்குக்கு “என்ன படிச்சிருக்க? கல்யாணம் ஆகிவிட்டதா?” என்று கேட்டார்.

“இன்னும் ஆகல சார், பத்தாப்பு படிச்சிருக்கேன்…”

நான்கு பெட்ரூம்களுடன் வீடு பெரியது என்பதால் சரஸ்வதி விலாவாரியாக அவளது தினசரி; வாரம் இரண்டுநாள்; வாரம் ஒருநாள் வேலையை விவரித்தாள். அதன்படி, தினமும் காலையில் தண்ணீர் தெளித்து கோலம் போடவேண்டும்; வீடு பெருக்கி, பத்து பாத்திரம் தேய்த்து, துணிகள் தோய்க்க வேண்டும்; வாரம் இரண்டு முறை அதாவது செவ்வாய், வெள்ளி வீடு மெழுக வேண்டும்; வாரம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை மின்விசிறிகள், ஜன்னல் மற்றும் கதவுகளை சுத்தமாகத் துடைக்க வேண்டும்.

சம்பளம் மாதம் ஐந்தாயிரம், மூன்று வேளை சாப்பாடு, டிபன், காபி; உடுத்த நல்ல துணிமணிகள்; வீட்டின் டெரஸ் ரூமில் தங்கிக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

சம்பளத்தை சேர்த்து வைத்து தர்மபுரியில் உள்ள அம்மாவுக்கு அனுப்பலாம் என்பதால், ஆரஞ்சி சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டாள்.

செந்தில் விடைபெற்றுக் கொண்டான்.

ஆரஞ்சி இரண்டு நாட்களிலேயே வேலையை கற்றுக் கொண்டாள். சுறுசுறுப்புடன் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள்.

சரஸ்வதிக்கு அவளின் வெள்ளந்தியான பேச்சும், சிரிப்பும்; வேலைசெய்யும் பாங்கும் மிகவும் பிடித்துவிட்டது. தனக்கு ஒரு நல்ல வேலைக்காரி நிரந்தரமாக அதுவும் தன் சொந்தவீட்டில் அமைந்ததை எண்ணி பெருமை கொண்டாள். ஆரஞ்சியை தன் மகளைப்போல் பார்த்துக்கொண்டாள்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆறு மாதங்கள் சென்றன…

சரஸ்வதிக்கு முதன்முதலாக ஆரஞ்சியின் மேல் ஒரு சின்ன சந்தேகம் முளைத்தது.

ஆம்….அவள் தன் படுக்கையறையில் வைத்திருந்த ஒரு பத்து ரூபாய்த் தாளைக் காணவில்லை. ஆனால் அதை அவள் பெரிதுபடுத்த விரும்பவில்லை.

ஒருவாரம் கழித்து அவள் கணவர், “டேபிளின்மேல் வைத்திருந்த இருபது ரூபாய் நோட்டை நீ பார்த்தாயா?” என்றார்.

இப்படியாக அவ்வப்போது உதிரியாக வீட்டுனுள் போட்டு வைத்திருந்த ரூபாய் நோட்டுக்கள் காணமல்போயின. இதை இப்படியே வளரவிட்டால் நாளைக்கே ஒரு பெரிய திருட்டு நடந்து போலீஸ் கேஸாகிவிடலாம் என்பதால் ஆரஞ்சிமீது ஏற்பட்ட தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள முடிவு செய்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை….

தன் கணவரிடம் சென்று அவ்வப்போது ரூபாய் நோட்டுக்கள் காணமல் போவதையும், தனக்கு ஆரஞ்சிமீதுதான் சந்தேகம் என்றும் சொன்னாள்.

“நாம போலீஸ் வெரிபிகேஷன் பண்ணாம அவளைச் சேர்த்தது தவறு…இன்னிக்கி ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை என் லேப்டாப் மீது போட்டுவை…அது காணாமல் போனால் இன்றைக்கே அவளை தர்மபுரிக்கு துரத்தி விட்டுவிடு.”

இருவரும் வேண்டுமென்றே ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை அவள் கண்ணில் படும்படி லேப்டாப்மீது வைத்தனர்.

ஆரஞ்சி தன் தினசரி வேலையை முடித்துவிட்டு டெரஸ் ரூமுக்கு சென்று சற்று ஓய்வெடுத்தாள்.

சரஸ்வதி ஓடிச்சென்று லேப்டாப்பின் மீது பார்த்தாள்.

அங்கு வைக்கப்பட்டிருந்த ஐம்பது ரூபாய் நோட்டைக் காணவில்லை.

சரஸ்வதியின் கணவர் பதட்டத்துடன், “நம்ம வீட்டு வேலைக்காரி ஒரு திருடி…தர்மபுரிலருந்து ஒரு திட்டத்தோடத்தான் வந்திருக்கிறாள்..நீ அவளை சாயங்காலம் கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போ. நான் டெரசில் அவள் ரூமுக்கு சென்று என்னென்ன ஒளித்து வைத்திருக்கிறாள் என்று பார்க்கிறேன்.” என்றார்.

அதன்படி சரஸ்வதி ஆரஞ்சியை அருகிலுள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்றாள்.

அவள் கணவர் ஆரஞ்சியின் டெரஸ் ரூமிற்கு சென்று பரபரப்புடன் ஆராய்ந்தார். ஒரு கிழிந்த பர்ஸில் தனக்கு ஆறு மாதங்களாக கொடுக்கப்பட்ட சம்பளப் பணம் முப்பதாயிரத்தை அப்படியே வைத்திருந்தாள் ஆரஞ்சி. வேறு ஒன்றும் கிடைக்கவில்லை.

ஏமாற்றத்துடன் தன் அறைக்கு திரும்பி வந்தார்.

கோவிலுக்கு சென்று திரும்பிய சரஸ்வதியிடம் “அவள் ரூமில் ஒன்றும் தேறவில்லை” என்று சொன்னார்.

“சரி விடுங்க… நானே அவளிடம் நேரில் கேட்டுவிடுகிறேன்…நம் சந்தேகம் உறுதியானால் அவளை இன்றே வீட்டைவிட்டு விரட்டி விடலாம்.”

முன் அறையில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தவளை, “ஆரஞ்சி இங்கவா” என்று கூப்பிட்டாள்.

அவள் ஓடிவந்து “என்னம்மா?” என்றாள்.

“ஐயா ரூம் லாட்டாப் மேல ஐம்பது ரூபாய் வைத்திருந்தேன்…நீ பார்த்தாயா?”

“ஆமாம்மா….நான்தான் எடுத்து வச்சிருக்கேன். இப்ப வேணுமா?”

“என்னது எடுத்து வச்சியா? எங்க இப்ப காமி…”

ஆரஞ்சி விறுவிறென சரஸ்வதியின் ரூமுக்கு சென்று அங்கிருந்த டிரெஸ்ஸிங் டேபிளின் இரண்டாவது இழுப்பறையத் திறந்து காண்பித்தாள்.”

உள்ளே பார்த்த சரஸ்வதிக்கு ஏராளமான பத்து ரூபாய் நோட்டுகளும்; சில இருபது ரூபாய்களும்; ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும்; ஒரு நூறு ரூபாய் நோட்டும்; டாலரில் ஒரு நோட்டும் தெரிந்தன.

“நீ எதுக்கு இதெல்லாம் எடுத்து இங்க வச்ச? உடனே எங்களிடம் பணத்தை கொடுத்துவிட வேண்டியது தானே?”

“உண்மைதாம்மா…. ஆனா நான் வீடு பெருக்கும்போது நீங்க தினமும் காலைல கோவிலுக்கு போயிடறீங்க…. நம்ம ஐயா தினமும் காலைல லேப்டாப்ல மூழ்கி கிடப்பாரு. அவரை நான் தொந்திரவு செய்யக் கூடாதுன்னு நிறைய்யத் தடவை நீங்களே சொல்லியிருக்கீங்க….அதான் கிடைத்த பணத்தை உங்க டிரெஸ்சிங் டேபிள்ல போட்டு வச்சேன்.”

“சரி அந்த நூறு ரூபாய் நோட்டு, டாலர் நோட்டு எப்படி வந்தது?”

“போனவாரம் நம்ம சின்ன ஐயாவோட சட்டையை தோய்க்கும்போது அவர் சட்டைப் பையில் இருந்திச்சு…அதத்தான் எடுத்து வச்சேன்.”

“…………………”

“நம்ம வீடு பெரியவீடு, புதுவீடு வேற…. அடிக்கடி ப்ளம்பர், எலக்ட்ரீஷியன் போகவர இருக்கிற வீடும்மா. பணத்தை கண்ட கண்ட இடங்களில் போட்டுவச்சா, அவங்க மனசு கெட்டுடும்…நாமதான் கவனமா இருக்கணும். அதனாலதான்மா நான் உங்க ரூம்ல கொண்டுவந்து வச்சேன்….தப்பாம்மா?” இயல்பாகக் கேட்டாள்.

தன்னை சந்தேகப் படுகிறார்கள் என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத அவளின் வெள்ளந்தியான பதில்களைக்கேட்டு சரஸ்வதியின் கணவர் நிலை குலைந்தார். சரஸ்வதிக்கு கண்களில் நீர்முட்டியது.

ஆரஞ்சியை வாஞ்சைபொங்க கட்டியணைத்து, “ஒரு தப்பும் இல்லடி என் ராஜாத்தி” என்றாள். குரல் தழுதழுத்தது.

‘ஒரு நல்ல பெண்ணை எவ்வளவு ஈனத்தனமாக எடைபோட்டு விட்டோம்?’ என்று சரஸ்வதியின் கணவர் கூனிக் குறுகிப்போனார். .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *