வேரான விழுதுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 7,648 
 

“என்னங்க, நான் ஒன்னு சொன்னா நீங்க கோவிச்சிக்க கூடாது,” “ என்ன பரிதா இதுபுதுசா கேக்குற, நிக்கா ஆன இத்தன வருமூத்துல, நீ எத சொன்னாலும் நான் கேட்டுக்குனு தானே இருக்கேன்? இப்போ என்னவோ புதுசா சொல்ற, பீடிக போடாம சட்டு புட்டுனு சொல்லு, தூக்கம் கண்ண சொக்குது, இன்னிக்கு ஆபிசுல ரொம்ப வேல”, என்று அயர்ச்சியுடன் கட்டிலில் படுத்திருந்தவனின் பக்கத்தில் வந்து அமர்ந்த அவள்,

“ஒன்னும் இல்லிங்க, இன்னிக்கு காலையிலே மேஸ்த்திரிய வரச்சொல்லி எதோ பேசினு இருந்தீங்களே, எதாவது வீடு கீடு கட்டப்போறீங்களா? என்ன? இந்த வீட்ட கட்டி முடிச்சி இப்போதானே ஆறு மாசமாவுது, அதுக்குள்ள எப்படின்னு கேட்டேன்.

“அது ஒன்னுமில்ல பரிதா, பே கமிசன் அரியர்ஸ் பணம் கொஞ்சம் வந்திருக்கு, கட்ன இந்த வீடும் சிக்கனமா ரெண்டு பெட்ரூம் தான் இருக்கு, நமக்கு ஒன்னும் ரெண்டு பசங்களுக்கு ஒன்னும் சரியா இருக்கு, பாவம் அப்பாவும் அம்மாவும் வயசான காலத்துல வாரன்டால படுத்துனு ரொம்ப அசௌகரியப்படுறாங்க, பக்கத்ததுலயே அடடாச் பாத்ரூமோட ஒரு ரூம் போட்டு குடுத்தா அவங்க பாட்டுக்கு நிம்மதியா இருந்திடுவாங்க,”

ஏன் இப்ப மட்டும், அவங்க நிம்மதிக்கு என்ன குறைச்சல் வந்தது, நல்லாத்தானே இருக்காங்க,ரெண்டு பேரும். வேளா வேளைக்கு கொட்டிக்கிறாங்க, நிம்மதியா டி.வியில வர எல்லா சீரியலையும் ஒன்னு விடாமபார்த்தனு ரிமோட்டும் கையுமாத்தானே இருக்காங்க,

“அதுக்கு இல்ல பரிதா, வயசானவங்க, கொஞ்சம் அசதி வந்தா நிம்மதியா கால நீட்டிப் படுத்துக்கவாங்க, இங்க பாரு நாம எல்லாம் படுக்கைக்குப் போனப் பிறகு பாயப் போட்டு படுக்கறாங்க, விடியரத்துக்கு முன்னாலேயே எழுந்து சோபாவுல ஒரு ஓரமா உக்காந்துனே தூங்குறாங்க, அத பாக்கறத்துக்கு ரொம்ப பரிதாபமா இருக்குது அதுக்குத்தான் .

“ஏங்க வயசாச்சினா து]க்கம் வராதுங்க, கொஞ்சநேரம் தூங்குவாங்க, கொஞ்ச நேரம் தூக்கம் வராம முழிச்சினு இருப்பாங்க, இதெல்லாம் வயசானவங்களுக்கு சகஷங்க, இதுக்குப் போயி ஏன் நீங்க இவ்ளவு வருத்தப் படரீங்க?,

“இல்லே பரிதா, அவங்களும் கொஞ்சம் தனியா இருக்கட்டுமே? ஆதனால நமக்கு என்ன?”

“ அப்போ இந்த வயசுல அவங்களுக்குக் கட்டில் சுகம் கேட்குதோ?”

“பரிதா, இத சொல்றத்துக்கு உனக்கு நாக்கு கூசல, சீச்சி.. ஏதோ வயசானவங்க, கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டுமேன்னு பார்த்தா இப்படி கேவலமா பேசுறியே, இது நல்லாவா இருக்கு”

“இதோ பாருங்க, இங்க இருக்கிறது அவங்களுக்கு வசதிப் படலேன்னா, உங்க அண்ணன் விட்டுலே போய் தங்கிக்க சொல்லுங்க, நம்மை விட அவங்க நல்லா வசதியாத்தானே இருக்குறாங்க,”

“பரிதா… பெத்தவங்கலபோய் , நீங்க அங்க தங்குங்க, இங்க தங்கிக்கங்கன்னு சொல்றது நல்லாவா இருக்கு, அது என்னவோ எனக்கு கொஞ்சங்கூட பிடிக்கல,”

“அப்போ பிடிக்கலன்னா நீங்க சும்மா இருங்க, இந்த வசதிக்கு அவங்க இங்க தங்குனா தங்கட்டும், அப்படி இல்லேன்னா எங்க வசதி கிடைக்குதோ அங்க போய் தங்கிக்கட்டும்.”

“ ஏன் பரிதா நீ இவ்வளவு பிடிவாதமா இருக்கிற?”

“இதோ பாருங்க, ஏதோ கடன ஒடன வாங்கி இந்த வீட கட்டியிருக்கோம். வாங்குன கடன ஒழுங்கா கட்டி முடிக்கனும், வளர்ந்து வரும் பசங்களுக்கு படிப்பு செலவு கவனிக்கனும், அதோடு ஒரு பொண்ண பெத்து வச்சிருக்கோம் என்ற நெனப்பிருக்கா உங்களுக்கு.. அது வளர்ந்து பெரியவளா நிக்கும் போது கட்டிக் குடுக்க நக நட்டுன்னு சேத்து வச்சாத்தானே நாளைக்குக் கௌரவமா இருக்கும். அதோட இப்ப தங்கம் வெல ஒரு வாரமா கொரஞ்சிக்கின்னே வருது. அரியர்ஸ் பணத்துலே அது இதுன்னு செலவு செய்யாம நம்ப பொண்ஹக்கு நகய வாங்கி வெச்சிடலாம். இன்னிக்கு நாளும் கெழமையும் நல்லா இருக்கு ஆபிச விட்டு சாய்ந்திரம் சீக்கிரமா வந்துடுங்க, லலிதாவுக்கோ, கல்யாணிக்கோ போய் நகய வாங்கிடலாம். உங்க அப்பாவும், அம்மாவும், எங்காவாது ஒரு மூலையிலே முடங்கிக் கிடக்கட்டும். ஆமா சொல்லிட்டேன் என்று ஆவேசமாக பேசி, அங்கிருந்து போக முயற்சிக்கும்போது,

“இதோ பார் பரிதா, இந்த வீட்ட கட்ட நாம் கஷ்டப்படும்போது ரிட்டையர் ஆன பணத்துல கொஞ்சம் கொடுத்து உதவி பன்னினது எங்க அப்பா தான் இது உனக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன், அவருடைய பங்கும் இதுல இருக்கு.”

“இருக்கட்டும் அதனால இப்ப என்ன? யாருக்குக் குடுத்தாரு பெத்த புள்ளைக்குத்தானே கொடுத்தாரு, அது அவருடைய கடமை இல்லையா?”

“எது கடமை பரிதா, புள்ளைகளை வளத்துப் படிக்கவச்சி ஒரு வேலை வாங்கிக் கொடுப்பது தான் பெத்தவங்க கடமை, கல்யாணத்தையும் பன்னி வெச்சி காலமெல்லாம் சோறு போடுவது பெத்தவங்க கடமை இல்லலே. பெத்தவங்கள அவங்க வயசான காலத்துல கவனிக்கிறது தான் பிள்ளைகளோட கடமை, இது எல்லாம் உனக்கு எங்கே தெரியப்போவுது”

“நீங்க என்ன சொன்னாலும் சரி, உங்க அப்பா அம்மாவுக்கு பக்கத்துல ரூம்போட நான் சம்மதிக்க மாட்டேன், நமக்கு சேமிப்புன்னு இருப்பது இது ஒன்னுதான் இதையும் நான் விட்டுக் கொடுத்தா நாளைக்கு எம் பொண்ண வச்சிக்கினு நான் நடுத்தெருவுல தான் நிக்கனும்”.என்று சொல்லிக்கொண்டே சமையல் அறைக்குப் போய்விட்டாள்.

மனைவியின் பிடிவாதத்தையும், பெற்றோரையும் நினைத்து, வரமறுக்கும் தூக்கத்தை வலுகட்டாயமாக வரவழைத்துத் தூங்க முயற்சித்தான் பஷிர்

“என்ன ரேஷ்மா, இப்படி சோர்ந்து உக்காந்துட்ட, வீட்ல மருமக இல்லையா? ஏங்கே போய் இருக்கா?”

நீங்க இவ்வளவு நேரமா எங்கே போயிருந்தீங்க,

குழந்தைகளை ஸ்கூல்ள விட்டுட்டு அப்படியே காலார நடந்து லைப்ரரிக்குப் போய் பேப்பர பார்த்துட்டு வந்தேன், பரிதா இப்பத்தான் மார்கெட்டுக்கு போய்ட்டுவர்ரேன்னு சொல்லிட்டுப் போனா,

“ஏன் ரேஷ்மா, இப்படி படுத்துன்னு இருக்கே, உடம்புக்கு என்ன பண்ணுது?”

“உடம்பெல்லாம் ஒரே வலியா வலிக்குது, கைகால் எல்லாம் கொடையுது, யாராவது கொஞ்சம் புடிச்சிவிட்டா தேவலாம் போல இருக்குது,”

அதுக்கென்ன, இப்படி கால நீட்டு நான் புடிச்சி விடுறேன். கொஞ்சம் கையையும் உடம்பையும் காட்டு நான் தைலத்த தேச்சி விடுறேன்.

நல்லா இருக்குதுங்க நீங்க பேசறது, இப்படி பட்டப்பகல்ல என் கையையும் காலையும் நீங்க இப்படி புடிச்சி விடுறத மருமக பார்த்தா நல்லாவா இருக்கும். அசிங்கம் இல்ல,

“கதவ சாத்திடுவோம், யாருக்கும் தெரியவாபோகுது,”

“வேறு வினையே வேண்டாம், வயசான காலத்துல கிழங்க பாரு பட்டப்பகல்ல இப்படி கொட்டம் அடிக்குதுங்கன்னு நம்பல அசிங்கமா பேசுவாங்க,

“பாவம் ரேஷ்மூ நீ, என்ன கட்டிக்கின்னு அந்தக் காலத்துல இருந்து இப்ப வரை ரொம்பத்தான் கஷ்டப் படுர, கொஞ்ச காலம் தான் நான் உன் கூட இருந்து குடும்பம் நடத்தினே, பெரும்பாலான நாள்; எல்லாம் டிரான்ஸ்பர், டிரான்ஸ்பர்ன்னு ஊர சுத்தினு இருந்தேன். மாசத்துக்கு ஒரு நாளோ, இரண்டு நாளோ அல்லது பண்டிகையும் கிழமைக்கும் தான் உங்கூட இருப்பேன். பிள்ளைகளை படிக்கவைத்து நல்லது கெட்டதைப்பார்த்து வளர்த்தது எல்லாம் நீ தானே, என்னோடு இருந்த காலங்களைத் தவிர நீ தனிமையில் இருந்த காலங்கள் தானே ரேஷ்மா அதிகம்.”

“அதுக்கு என்னங்க பன்னமுடியும், உங்க வேல அப்படி, அப்போ வயசு இருந்தது. இருக்க முடிந்தது, இப்போ தளர்ந்து போச்சி இல்லே, உடம்பு தடுமாறுது, இப்பத்தான் யாரையாவது புடிச்சிக்கனும்ன்னு தோனுது, எனக்கு உங்கள விட்டா யாருங்க இருக்கா, உங்க பக்கத்துலேயே இருக்கஹம்னு மனசு கெடந்து துடிக்குதுங்க. என்ன பண்றது நமக்குன்னு தனியா ஒரு ரூம் இருந்தா உங்களுக்குன்னு நானும் எனக்குன்னு நீங்களும் இருக்கலாம். பரவாயில்ல, நம்ப பசங்க, உங்கள ஒரு வீட்டுலேயும், என்ன ஒரு வீட்டுலேயும் இருக்க வைக்காம, சின்னவன் நம்ப ரெண்டு பேரையும் ஒன்னா இருக்க வச்சானே சின்னவன் அதுவே போதுங்க, “உங்களப் பாரத்துனே என் காலத்தை நான் கழிச்சிடுவேன்” என்று, உருண்டு விழும் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறாள்.

ஆபிசில் இருந்த வந்த பக்ஷிர், “பரிதா சீக்கிரம் ரெடியாவு, நகைக் கடைக்குப்போய்ட்டு வரலாம்” என்று சொன்னவுடன், “வேண்டாங்க போனப்போட்டு மேஸ்த்திரிய உடனே வரச் சொல்லுங்க,”

“ எதுக்கு பரிதா, இப்பப் போய் மேஸ்த்திரிய வரச்சொல்ற”

“அத்தைக்கும் மாமாவுக்கும் பக்கத்துல பாத்ரூம் அட்டாச்சுடன் ஒரு ரூம் கட்டி குடுக்கத்தான்” என்று சொன்னவுடன், பக்ஷிர் அதிர்ச்சியுடன், “என்ன பரிதா நீ நெஜமாத்தான் சொல்றியா” என்று ஆச்சர்யத்துடன் கேட்டான்.

“ஆமாங்க” என்று சொன்னவுடன், எப்படி இப்படி ஒரே நாள்ள மாறிட்ட என்று கேட்ட போது ஒரு புன்னகையை மட்டும் பரிதா பதிலாக தந்தாள். ஆம் அதில் தான் எத்தனை நிதர்சனங்கள், உண்மைகள், அர்த்தங்கள். பக்ஷிருக்குத் தெரியுமா? அது,

அவன் தாயும் தந்தையும் பேசிக் கொண்டிருந்ததை மார்கெட்டுக்குப் போய் திரும்பி வந்த பரிதா கேட்டு தானும் கண்ணீர் விட்டு அழுததை.

இரண்டு வயதான ஆன்மாக்களின் காதல் உணர்வைப் பூர்த்தி செய்வதை விட தன் பெண்ணுக்கு நகை சேர்த்து வைப்பது எந்த விதத்திலும் ஞாயம் இல்லை என்ற உணர்வையும் உண்மையையும் பரிதா நன்றாகப் புரிந்துக் கொண்டாள் என்பதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *