கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 8,309 
 

“ஸ்கேன் மத்த டெஸ்ட் எல்லாம் எடுத்திருக்காங்க. ரிசல்ட் வந்த பிற்பாடு தான் எதுவும் சொல்ல முடியும். நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. ஆண்டவன் இருக்கான்.” தான் மயக்கத்தில் இருப்பாதாக நினைத்துக்கொண்டு டாக்டர் சொன்ன வார்த்தைகள் மகேஷை பயத்தின் எல்லைக்கேக் கொண்டு விட்டது.

இந்த ஐம்பது வயது வாழ்க்கையில் அவன் பயந்தது இது இரண்டாவது தடவை. 22 வயதில் பக்கத்து வீட்டு ஆண்டியின் வலையில் விழுந்து, அங்கிள் இல்லாத நேரங்களில் மன்மத ரகசியங்களை படிப்பது அவன் வாடிக்கை. ஒரு நாள் இருவரும் தங்களை மறந்த சரஸ சொர்க்கத்தில் இருந்த போது, திடீரென்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு பயந்தது முதல் தடவை. ( பின் பக்க வாசலைத் திறந்துக் கொண்டு வெளியே போய் வேலி ஏறி கைகளை சிராய்த்துக் கொண்டது எல்லாம் வேற கதை.)

அவனது எண்ண ஓட்டம் அவன் மனைவி அனிதாவின் விசும்பலால் தடைப்பட்டது. மெள்ள கண்களைத் திறந்து பார்த்த அவனை அனிதா கண்ணீர் மல்க பார்த்தாள். இந்த இருவது வருஷ கல்யாண வாழ்க்கையில் அவள் எவ்வளவு நல்லவள் – தன் மேல் எத்தனைப் பாசம் வைத்து இருக்கிறாள் என்று முதன் முதலாக மகேஷ் நினைத்தான்.

பக்கத்து வீட்டு ஆண்டியிடம் கற்ற மன்மதபாடம் ரொம்பவும் பிடித்து போனதால், வேறு பலரிடமும் அவன் நாட்டம் சென்றது. வயது அவனுக்கு துணை நிற்க, தடையில்லாத காட்டாறு போல ஒரு ஆறு வருடம் அவன் வாழ்க்கை ஓடியது,. அப்புறம் அம்மாவின் தூரத்து சொந்தம் என்று இந்த அனிதாவின் கழுத்தில் தாலியை கட்டினான்.

கல்யாணத்துக்கு அப்புறம், முன்னர் போல இல்லாவிட்டாலும், அவனுள் இருந்த காமம் அவ்வப்போது வேறு வழியில் நடத்திச் சென்றது. ஒரு குழந்தைக்குத் தகப்பன் ஆன இவன் செயல்கள் காற்றுவாக்கில் அவள் காதுவரை வந்தாலும், அதை எல்லாம் பெரிது படுத்தாமல் தன் குழந்தையே வாழ்க்கையாக அனிதா வாழ்ந்தாள்.

அப்படி இருக்கும்போது தான் நேற்று திடீரென்று நெஞ்சு வலிப்பதாக சொன்னான். உடனே ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து டெஸ்ட் எல்லாம் எடுத்து இதோ டாக்டரும் தன் முடிவைச் சொல்லிவிட்டார்.

எண்ண அலைகளில் மூழ்கி இருந்த அனிதா, திடீரென்று மகேஷ் தன் கைகளைப் பற்றியதுணர்ந்து ‘என்னங்க?’ என்றாள்.

அவ்வளவுதான். மகேஷ் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் துவங்கியது. “ அனிக்கண்ணா உனக்கு நான் துரோஹம் பண்ணிட்டேண்டா. ஒரு நாள் கூட நிம்மதியா வெச்சுக்க முடியாத படு பாவியா இருந்துட்டேனே. எத்தனை துரோஹம்! எத்தனை ஏமாற்றம்! சே! நால்லாம் ஒரு மனுஷனா? நாய விட கேவலமானவன்” என்று பிதற்றத் தொடங்கினான்.

தன் கணவன் தவறுகளை உணர்ந்து திருந்தி விட்ட சந்தோஷத்தில் அனிதா புன்னகைத்தாள். அப்போது “மேடம்! உங்களை டாக்டர் கூப்பிடறாங்க. ரிசல்ட் வந்திருச்சாம். ஒண்ணும் பயப்படறமாதிரி இல்லையாம். ஒரு பத்து நிமிஷம் வரச் சொன்னார். நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்” என்று ஒரு நர்ஸ் வந்து சொல்லவும், டாக்டரைப் பார்க்க எழுந்து போனாள்.

இதையெல்லாம் மகேஷும் கேட்டான். தான் சாகப் போவதில்லை என்று தெரிந்து கொண்டவன் மனதில் ஒரு நிம்மதி பரவியது.

இருபதுகளில் இருந்த அந்த கேரள நர்ஸ், இவனுக்கருகில் முதுகைக் காட்டிக்கொண்டு க்ளுகோஸ் ட்ரிப்சை சரி செய்து கொண்டிருந்தாள். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.

அவள் கைகளின் அசைவுகளுக்கேற்ப ஏறியிறங்கிக் கொண்டிருந்த அவள் பின்னழகை மகேஷின் கண்கள் மேயத் தொடங்கின.

– ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

1 thought on “வேதாளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *