வேண்டாம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 28, 2019
பார்வையிட்டோர்: 6,037 
 

அமெரிக்காவில் வேலை செய்யும் நண்பன் நாகராசன் இந்தியா வந்தால் என்னைப் பார்க்காமல் இருக்க மாட்டான். உடனே அழைப்பான்.

விமானத்தை விட்டு இறங்கி வீடு திரும்பியதும் இன்றும் அப்படிதான் அழைத்தான்.

நான் எனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றேன்.

” வா. .. பரசு. .! ” வாசலிலேயே வரவேற்றான்.

அவன் மனைவி, மக்களெல்லாம் வந்திருந்தார்கள். அங்கு…. குழந்தைகளுக்குக் கோடை விடுமுறை என்றால் இப்படி வந்து விடுவார்கள்.

” என்னப்பா. . ! சௌக்கியமா. .? ” நான் அவனிடம் உற்சாகமாக கை குலுக்கி எதிரிலமர்ந்தேன்.

” நல்லா இருக்கேன்டா. .” எதிரில் அமர்ந்திருந்தவன் எழுந்து வந்து என் பக்கத்தில நெருக்கமாக அமர்ந்தான்.

” என்ன விஷயம். .? ” ஏறிட்டேன்.

” எனக்கு அவசரமாய் இருபது, இருபத்தி அஞ்சு வயசுல ஒரு பொண்ணு வேணும். .!” என்றான்.

” எதுக்கு. .? ” துணுக்குற்றுப் பார்த்தேன்.

” கலியாணத்துக்கு. ..”

” உனக்கா. .? ”

” அட படுவா. .” – என்று முதுகில் செல்லமாக வலிக்க அடித்தவன். .

” எனக்கில்லேடா. வேறொரு பையனுக்கு. பொண்ணு ஏழை, விதவையாய் இருந்தாலும் பரவாயில்லே. ” – சொன்னான்.

‘ இவ்வளவு இறங்கி வரக்காரணம். ..? ‘ எனக்குள் இடறியது.

” மாப்பிள்ளை. .? ” – ஏறிட்டேன்.

” இந்திய பையன்தான். அமெரிக்க குடியுரிமை உள்ளவன். வயசு முப்பது. அவனும் இந்த ஊர்தான். உனக்கும் தெரியும், பழக்கம். ! ” சொன்னான்.

குழம்பினேன்.

” பையன் கொஞ்சம் மூளை வளர்ச்சி இல்லாதவன் ” – மெல்ல சொல்லி இடியை இறக்கினான்.

” தாமோதரன். தணிகாசலம் பையன் !” ஆளையும் சொல்லி அதிரடித்தான்.

அந்த குடும்பமே எனக்குத் தெரியும். தணிகாசலத்து நான்கு மகள்கள், மூன்று மகன்கள். இதில் தாமோதரன் கடைசி. கடைக்குட்டி. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் மூளை வளர்ச்சி இல்லை. இயந்திர மனிதனைப் போல் நடப்பான், செல்வான், வருவான். உட்காரச் சொன்னால் உட்காருவன். எழுந்திரிக்கச் சொன்னால் எழுந்திரிப்பான். எல்லாருக்கும் திருமணம் முடிந்து நல்லவிதமாக இருக்கிறார்கள். தாமோதரன்தான் பாக்கி.

” அவரோட எல்லா புள்ளைங்களும் சிறகு முளைச்சி பறந்துட்டாங்க. போன மாசம் இவன் அப்பா காலமாகிட்டார். இப்போ தாயும் பிள்ளையும் மட்டுமே தனிக்குடித்தனம். தாயும் ஒரு பொண்ணைப் பார்த்து அவனை அவகிட்ட ஒப்படைச்சுட்டு நிம்மதியாய் கண்ணை மூடலாம்ன்னு நினைக்கிறாள். அவள் விருப்பமும் அதுதான். அதான் இந்த ஏற்பாடு. ” நாகராசன் மூச்சு விடாமல் சொன்னான்.

” தனக்குப் பிறகு பிள்ளையைப் பராமரிக்க ஒரு பெண் வேண்டும். தாயின் உள்ளம், எண்ணம், விருப்பம் சரி. ஆனால். .. இதற்கு திருமணம்தான் சரியான முடிவு என்பது எப்படி சரி. கூடப் பிறந்தவர்கள் பார்த்துக் கொள்ளலாமே. .!? ” என் மனதில் பட்டதை ஒளிக்காமல் சொன்னேன்.

” பேசியாச்சி. பையன்கள், கூடப் பிறந்த கடமைக்காக நாங்க ஒத்துப் போவோம்மா. மனைவிகள் சம்மதிக்க மாட்டார்கள். சம்மதிச்சாலும்… பராமரிப்பு சரியாய் இருக்காது. வலி, சுமை காரணமாய் நாங்க இருக்கும்போது இல்லாதபோது அவனை ஏதாவது சொல்லலாம். எங்களுக்குப் பொறுக்காது. குடும்பத்துல சண்டை, சச்சரவு, சங்கடங்கள் வரும்மா என்று சொல்லி ஒதுக்குகிறார்கள். கூடப் பிறந்த அக்கா, தங்கைகளும் இதையே சொல்லி கணவன்கள் மேல் பழியைப் போடுகிறார்கள். ” என்றான்.

இதுவும் எனக்கு ‘ சரி ‘ பட்டது.

ஆனாலும் எல்லோரும் ஒத்துப் போய்தான் இதை சமாளிக்க வேண்டும். கையின் விரல்களில் ஒன்று காயம் என்பதற்காக வெட்டித் தூர போடுவது எப்படி சரி. ? இந்த சுமையை தாலி கட்டி ஒரு பெண்ணின் தலையில் இருக்க வைப்பது எந்த வகையில் சரி. ? நியாயம். .? ஏழை, விதவையென்றாலும் எப்படி ஒத்துக்கொள்வாள். .? ‘ என் மனதில் ஓடியது.

நாகராசன் தொடர்ந்தான்.

” பாதிக்கப்பட்ட அவனுக்கு அமெரிக்க அரசாங்கம் கணிசமான அளவு உதவித்தொகை தருது பரசு. குடும்பத்துல இவன் பங்கு இருக்கு. இது மட்டுமில்லாமல் அம்மா பாகமும் இவனுக்குச் சேர வாய்ப்பிருக்கு. கூடப் பிறந்த எல்லாரும் தங்கள் பங்குக்கு ஆளுக்குக் கொஞ்சம் தருவாங்க. அப்படிப் பார்க்கப்போனால் எல்லாரையும் விட இவன்தான் பணக்காரன். ”

” பையனாலேயும் ஒன்னும் பயம், பிரச்சனை கிடையாது. பொம்மை போல் உட்கார்ந்திருப்பான். எழுந்திருப்பான், நடப்பான். திருமணம் முடிச்சா பொண்ணு அமெரிக்க குடியுரிமை ஆகி ராணி போல் இருப்பாள். ” நிறுத்தினான்.

‘ பணம், காசு, அமரிக்க குடியுரிமை எல்லாம் சரி . சேவை மனப்பான்மையில் எந்த பெண் முன் வருவாள். .? தாலி கட்டினால் அவனுடன் ஒரு நிமிஷமாவது தனித்திருப்பது எப்படி ? குடும்பம் நடத்துவது எவ்வாறு. .? ‘ – நினைத்தேன்.

என் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டவன் போல் நாகராசன் இதற்கும் பதிலைத் தயாராகவே வைத்திருந்தான்.

” பொண்ணுக்குப் புருசன் மேல பயம் வேணாம். அடிமட்ட சாது. அடுத்து. . தாய்க்காரி கூடவே இருக்கிறதுனால மருமகள் மேல் ஒரு ,துரும்பு படாம கண்ணும் கருத்துமாய்க் கவனிச்சுப்பாள். ” சொன்னான்.

” எந்தப் பெண், பெற்றவர்கள் துணிவார்கள். .? ஆயிரம் பாதுகாப்பு, காரணம் சொன்னாலும் யாரும் சம்மதிக்கிறது கஷ்டம். ! ” சொன்னேன்.

” பண ஆசை, வெளிநாட்டு மோகம். .. ஒத்துப்பாங்க ” என்றான்.

” அப்படிச் சம்மதிக்கலாம். ஆனா. .. திருமணம் முடிஞ்ச பிறகு அவளுக்குக் கஷ்டம்ன்னா நாம சமாளிக்கிறது கஷ்டம். விதின்னு சொல்லி விலகினாலும் நமக்குக் கேட்ட பேர் ! ‘ என்றேன்.

நாகராசனுக்கு இது மனதில் பட்டது. யோசிக்க ஆரம்பித்தான்.

” இந்த சிக்கலெல்லாம் இல்லாம இருக்க ஒரு வழி இருக்கு. ”

” என்ன. .? ” அவன் என்னை ஏறிட்டான்.

” அவனுக்குச் சேர வேண்டிய சொத்தோட…. மூளை வளர்ச்சி இல்லாதவங்க இருக்கிற இடம், அநாதை ஆசிரமத்துல கொண்டு விட்டால் ராசா மாதிரி கவனிச்சுப்பாங்க. ” மனதில் தோன்றியதைச் சொன்னேன்.

” அதையும் யோசிச்சாச்சு. மகன் அப்படி அனாதையாய்ப் போவதில்லை அந்த அம்மாவுக்கு விருப்பமில்லே. தாமோதரன் நூத்துல ஒண்ணா வாழ்ந்து சாக அவுங்க இஷ்டப்படல. இப்படி திருமணம் முடிச்சா பையனுக்குக் கஷ்டம் இருக்காது. ஒரு ஏழை பெண்ணுக்கு வாழ்க்கை, பணக்காரத் தன்மை கிடைக்கும்னு சொல்றாங்க. அமெரிக்க குடியுரிமை பெரிசு பரசு. ” என்றான்.

” ஆசைப்பட்டு வரலாம். ஆனா. .. ஆண், பெண் வாழ்க்கை வெறும் பணம், பகட்டினால் மட்டும் நிறைவில்லை நாகராசன். மனம் ! அதையும் தாண்டி தாம்பத்தியம். எப்படி முடியும். ..? ” என்றேன்.

” அதுக்கு வழி இருக்கு. மனம் இருந்தால் மார்க்கமுண்டு. ஆஸ்திக்கு இவனைக் கட்டி. .. ஆசைக்கு வேறொருத்தவனை. .. அமெரிக்க குடியுரிமை பெற்றதும் போடா விவாகரத்தின்னு கழட்டி விட்டுடலாம். ! ”

அதைக் கேட்டதும் எனக்குள் சட்டென்று ஆத்திரம் பொங்கியது.

” நீ இந்தியனாய் பேசல. .! ” வெடித்தேன்.

அதிர்ச்சியாய்ப் பார்த்தான்.

” இதுல தப்பு நிறைய இருக்கு. முக்கியமாய் நம்பிக்கைத் துரோகம். அடுத்து கற்பு. இந்திய பண்பாடு, கலாச்சாரக் கொலை. இந்த ஏற்பாட்டுக்கு அந்த தாயே மகன் பாசத்துல ஏத்துக்கிட்டால்கூட நான் ஒத்துக்க மாட்டடேன். மேலும் எவளும் சம்மதிக்க மாட்டாள். ” கத்தினேன்.

நாகராசன் அப்படியே ஆடிப்போய் என்னைப் பார்த்தான்.

அவனுக்கும் நான் கத்தியது சுட்டிருக்க வேண்டும். தலை குனிந்தான்.

பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய். ..

” நீ சொல்றாப்போல தாமோதரனை அவன் அம்மா துணைக்குப் பிறகு ஏதாவது ஒரு ஆசிரமத்துல சேர்த்து விடுறதுதான் எல்லாத்துக்கும் நல்லது. .. ! ” மெல்ல. … அதேசமயம் தெளிவாய்ச் சொன்னான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *