கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 6,292 
 

அது ஒரு தொடக்கப்பள்ளி.வாரத்தில் மூன்று நாள் கம்ப்யூட்டர் க்ளாஸ் நடக்கும்.மற்ற பாடங்களைவிட கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஆர்வத்துடன் மாணவர்கள் வருவதற்கு ஆசிரியர் இளங்கோவன் தான் காரணம்.

பிரேயர் முடிந்தவுடன் கனஜோராக குதூகலத்துடன் கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு ஓடும் குழந்தைகளளை தலைமை ஆசிரியை கண்டித்தும் கேட்பதில்லை.குட் மார்னிங் என்று ஆசிரியர் இளங்கோவனை வரவேற்பதில் சிறிது கெஞ்சலும் இருக்கும்,இன்று வகுப்புக்கு எங்களை அழையுங்கள் என்ற வேண்டுகோளும் அதில் அடங்கி இருக்கும்.

அந்தப் பள்ளி ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்குச் சொந்தமானது.பெண் துறவிகள் மேற்பார்வையில் இயங்கி வருவது.அங்கு எந்த ஆணையும் பணிக்கு அமர்த்துவதில்லை.முதல் முறையாக இளங்கோவனை ஆசிரியராக நியமித்தார்கள்.

சொந்த பந்தங்கள் சிறிதும் மதிப்பதில்லை இளங்கோவனை.அவன் கவி தான்,ஆனால் கவிதை எழுதுவதை ஒரு வேலையாக சமூகம் நினைப்பதில்லை.உலகியல் ரீதியான வெற்றியை தவற விட்டவன் தான் இளங்கோவன்.வெற்றி கர்வத்தையும்,செல்வத்தையும் தரும்;ஆனால் தோல்வியோ சிறிது உள்ளுக்குள் திரும்பிப் பார்க்க வைக்கும்.அப்படி சிந்தனை பயணம் செய்ததில் இளங்கோவன் ஒன்றை உணர்ந்தான்.இந்த உலகே மயானம்,இறப்பதற்காகத்தான் எல்லோரும் இருக்கிறார்கள்.வாழ்க்கையே நிலையில்லாத போது அது என்ன நிலையான வேலை.நாம் தங்கியிருக்கும் வீடு கூட விடுதி போன்றது தான்.நேற்று தந்தை வசித்தார்,இன்று நான்,நாளை என் மகன் வசிப்பான்.

எப்போது இந்த உலகம் அநித்யம் என்று உணர்கின்றோமோ அப்பொழுதே இந்த உலகை வேறு மாதிரியாக பார்க்க ஆரம்பித்து விடுவோம்.நாம் செய்யும் செயல்களின் பலன்கள் நல்ல பலன்களாக இருந்தாலும் சரி,தீய பலன்களாக இருந்தாலும் சரி எங்கிருந்தாலும் நம்மை அடையாமல் விடாது.செயலுக்குத்தான் இவ்வுலகில் தண்டனை தருகிறார்கள்,இந்தியாவில் இ.பி.கோ சட்டம் போன்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சட்டம்.ஆனால் மனதில் எண்ணுவதே மிகப்பெரிய பாவம்.

அவனுக்கும் பெண் பார்த்தார்கள்.மணம் முடிக்க நல்ல மனம் இருந்தால் மட்டும் போதாது.பணம் வேண்டும்,அக்கரைச் சீமையில் பணியிலிருக்க வேண்டும்.பெண் பார்த்த அனுபவம் ருசிகரமானதாக இல்லை.முதல் பெண்ணை பிடித்திருந்தது தான்,ஆனால் லகான் இவன் கையில் இல்லையே.ஊதியத்தைக் காரணம் காட்டி இவனை நிராகரித்தார்கள்.முதல் கோணல் முற்றிலும் கோணலானது.

கடைசியில் அந்த பெண்ணுக்கு வெளிநாட்டிலிருக்கும் ஒருவனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு,கடைசி நேரத்தில் மாப்பிள்ளை பின்வாங்க யாரோ சொந்தக்காரப் பையன் ஒருவனை கட்டி வைத்ததாக கேள்விபட்டான்.

‘புதனுடன் கேது சேர்ந்தால் எப்படி படிப்பு சரியா வரும்’ இப்படி புலம்புவாள் அம்மா.ஏன் புலம்ப மாட்டாள் இவன் பொறியியல் பட்ட படிப்பை முடிக்காமல் பாதியில் விட்டவன்.

இங்கே அதை சொல்லித்தான் ஆக வேண்டும்.பொறியியல் இரண்டாம் ஆண்டில் நடைபெறும் மூன்றாம் பருவத் தேர்வு, ஒரு பாடத்தில் விடை எழுதும் தாளில் இவன் தத்துவக் கருத்துக்களை எழுதி கொடுத்துவிட்டான்.எது தெரிந்ததோ அதைத்தானே எழுத முடியும்.அடுத்த நாள் எல்லா பேராசிரியருக்கும் விஷயம் தெரிந்துவிட்டது.தெர்மோடைனமிக்ஸ் வகுப்பு எடுக்கும் வாத்தியார் கூப்பிட்டு பிசிக்ஸ் மேடத்தை போய் பார்க்கச் சொன்னார்.ஏனென்றால் அந்தப் பாடத்தின் விடைத் தாளில் தான் இவன் தத்துவத்தை அருவியாய் கொட்டியது.

பிசிக்ஸ் மேடத்திடம் போய் நின்றான். ‘வெளியே என்ன பேசிக்கிறாங்கன்னு தெரியுமா’ என்று கேட்டார். ‘எது இப்படி உன்னை எழுத தூண்டுனிச்சி’ என்றார்.அதற்கு இவன் ‘நான் தோத்துட்டேன் மேடம்’ என்றான்.உண்மை தான் இவனோட படித்த ஒரு பெண் கல்லூரியில் உதவி பேராசிரியையாக இருக்கிறாள்.இப்போது சொல்லுங்கள் இவன் தோற்றுவிட்டான் தானே.

‘ஆம்பளையா பொறந்துட்டு இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமா இல்லை’ என்றார் மேடம். ‘மத்தவங்க உன்னை பிரின்சிபால்கிட்ட மாட்டிவிட சொன்னாங்க நான் தான் ஒத்துக்கலை சரி,வேற எதுல உனக்கு ஆர்வம் அதிகம்’ என்று அக்கறையுடன் கேட்டார்.

உடனே இளங்கோவன் சுதாரித்துக் கொண்டு ‘கொஞ்சம் கவிதை எழுதுவேன் மேடம்’ என்றான். ‘அப்ப அதுலேயே கவனம் செலுத்தி முன்னேற வேண்டியது தானே.எந்த நிர்பந்ததுக்கும் வளைந்து கொடுக்காதே நீ உன் முடிவில் உறுதியா இரு.இஞ்சினியரிங் படிப்பை டிஸ்கன்ட்னியூ பண்ணிடு.நாங்க எல்லோரும் க்யூல நின்னு உன்னைப் பார்க்கணும்,அப்படி நீ வளரணும் என்ன புரியுதா’ என்றார் மேடம்.

இளங்கோவனை இது தான் நம் வழி என்று உணரச் செய்ததே அந்த மேடம் தான்.இளங்கோவனை கவிப்பித்தனாக்கிய கதை இது.இறைவனை பயபக்தியோடு வணங்குகிறோம் என்றால் அவனது படைப்புக்களான மனிதர்கள் மீதும் நேசம் வைக்க வேண்டும் என உணர்ந்தான்.அவனுக்கு ஏற்பட்ட ஒவ்வொரு அவமானங்களும் ஆன்மிகத்தின் பக்கம் திசை திருப்பியது அவனை.

இந்த நிலையில் தான் ஆசிரியர் வேலை கிடைத்தது இளங்கோவனுக்கு.எல்லா குழந்தைகளையும் தன் குழந்தைகள் போல எண்ணும் மனப்பக்குவம் இருந்தது அவனுக்கு.அவன் சொல்லும் கதையை கேட்க குழந்தைகள் சத்தம் போடாமல் கம்மென்று இருக்கும்.

பள்ளியை கோயிலாக்கிய இளங்கோவனை இறைவன் கணக்கு முடித்து அனுப்பி வைத்த இடம் மயானம்.அவன் கதை சுமந்து வந்த பாதைகளின் வழியே அவனைச் சுமந்து பாடை சென்றது.குழந்தைகள் சொல்லிக் கொண்டிருந்தன கதை சொல்லும் வாத்தியார் கண்டிப்பாக ஒரு நாள் வருவாரென்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *