வெளிறிய அந்திமாலை

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 4,924 
 

கோமதி கொஞ்சம் கொஞ்சமாகத் கோமதியம்மாளாக மாறிவிட்டார். ஒருவேளை அப்படிச் சொல்ல முடியாது. கோமதியின் தலைமுடி தான் காலத்திற்கு முன்னமே நரைக்க ஆரம்பித்துவிட்டதே. அப்படி நரைக்காமலிருந்திருந்தால் அவர் இன்னும்கூடக் கொஞ்ச காலத்திற்குக் கோமதியம்மாளாக மாறியிருக்க மாட்டார். நாள் கணக்கில் அவர் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. மாதத்தில் ஒரு நாள் மட்டும் அவர் தலைக்குக் கூடுதலாக எண்ணெய் பூசி, இறுக்கமாக ஜடை பின்னி, அசைக்க முடியாத கொண்டை போட்டு வெளியில் கிளம்புவார். கணவரின் இறப்புக்குப் பின் பென்சன் வாங்குவதற்காக மட்டுமே வீட்டின் கதவைத் திறந்து வெளியேறுகிறார். அந்தச் சமயங்களில் உலகம் மனத்தின் அற்புதமான வெளிப்பாடு என்பதுபோல் தோன்றும். கணவர் இறந்த விபத்து நடந்த இடத்தைக் கடக்கும்போது பழைய நினைவுகள் புத்தம் புதிதாகி அதே சாயங்காலம் இன்னும் அப்படியே அங்கே உறைந்திருப்பதாய்த் தோன்றும்.

விபத்து நடந்தபோது மாலை ஆறுமணி. அது சமீபத்தில் ஒருவழியாக்கப்பட்ட சாலை. வாகனங்கள் சுதந்திரமாகவும் வேகமாகவும் சென்றுகொண்டிருந்தன. ஒரு மனம் நடுங்கும் கிறீச்சிடலும் அதைத் தொடர்ந்து ஒரு பதற்றமும் பரிதவிப்பும் சாலையில் வெடித்துச் சிதறின. உடலைத் தூக்கிப்போடும் படாரென்ற சத்தம் கேட்டது. இளைஞனைப் போல உடையணிந்த முதியவரொருவர் சாலையில் விழுந்துகிடந்தார். அவர் மீசையும் தலைமுடியும் அதீதக் கருமையாயிருந்தன. அது சாயமேற்றப்பட்டதென நன்றாக யூகிக்க முடிந்தது. அவரை மோதிய வாகனம் எதுவென்று தெரியவில்லை. அந்த வாகனம் அவரை மோதியதும் செப்பிடு வித்தை மாதிரிமறைந்துவிட்டது.

போக்குவரத்தின் வேகம் மட்டுப்பட்டுவிட்டது. இன்னும் எவ்வளவு ரோடு போட்டாலும் இப்படித்தான் எனும் மனநிலையில் வாகனப் பயணிகள் ரோட்டில் கிடப்பவரைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் எரிச்சலுடன் கடந்தனர். உயிர்ச் சூட்டோடு ரத்தம் தார்ச் சாலையில் பரவிக்கொண்டிருந்தது.

கந்தலான ஒருத்தர் ஓடித் தலையைப் பிடித்துத் தூக்கிப் பார்த்து அரண்டுபோய்க் கத்தினார், “ஐயா ஐயா உயிர் இருக்குதுய்யா. தூக்குங்கய்யா ஆஸ்பத்திரிக்கி”. அவரை ஒரு பழைய காலத்தைச் சேர்ந்த முட்டாள் என்பது மாதிரி எல்லோரும் பார்த்தனர்.

“வாய்யா இப்படிப் பெரிய டாக்டர் மாதிரிப் போய்த் தொடுற.” கூட்டத்தில் ஒருத்தர் எரிச்சலுடன் கத்தினார். கடையில் இருந்து ஒருத்தர் தண்ணீர் கொண்டுவந்து வாயில் ஊற்றினார். ரத்தத் திவலைகள் மிதக்கத் தண்ணீர் வாயில் தேங்கி நின்றது.

போலீசும் ஆம்புலன்சும் வந்த போது அது பிரேதமாகியிருந்தது. போலீசார் ஜீப்பிலிருந்து இறங்கி சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். பிரேதத்தின் பாக்கெட்டிலிருந்து செல்போன் ஒலித்தது.

விதவிதமாய்ச் சமைப்பதில் கோமதியம்மாள் மிகவும் ஆர்வத்துடனிருந்தார். பிள்ளைகளை ஹாஸ்டலிலிருந்து அழைத்துவரும்போது அவர்களுக்கு வழக்கமான உணவுகளைத் தரக் கூடாது என்று கண்டிப்பாக நினைத்தார். சாதாரணமாகவே அவர் ஒரு ரசம் வைத்தாலும் அது வெறியூட்டக்கூடிய அளவுக்குச் சுவையாய் இருக்கும். அப்படி ஒரு நுட்பமான கைப்பாகம் அவருக்கு வாய்த்திருந்தது. மேலும் ஏராளமான சமையல் புத்தகங்களை வாசித்து அற்புதமான நூலகம் மாதிரித் தேர்ந்த உணவுச் செய்முறைகளைத் தன் மூளையில் அடுக்கிவைத்திருந்தார். கணவரின் மறைவுக்குப் பிறகு சமையல் என்ற விசயத்தையே கோமதியம்மாள் புறக்கணித்துவிட்டார். தனக்காக மட்டுமே சமைத்து அதைத் தான் மட்டுமே உண்பது கொடுமையாய் இருந்தது. பிரட், பிஸ்கெட், நூடுல்ஸ் என உணவு முறை மாறிவிட்டது. தாமோதரனை நாலு நாள்களாய்க் காணவில்லை. நூடுல்ஸ் பாக்கெட்டுகள் தீர்ந்துவிட்டன.

வானம் நீண்ட நேரமாய்க் கவிந்திருக்கிறது. காற்றின் சூடு அடங்கிவிட்டது. போர் அடித்தது. தாமோதரன் ஒரு நாளைச் சலிப்பில்லாத தாய் மாற்றிவிடுவான். வீட்டிலிருந்த காற்றின் ஒவ்வொரு அணுவிலும் தனிமையென முத்திரையிட்டிருந்தது. அவர் அந்தக் காற்றை வீட்டிலிருந்து வெளியேற்ற விரும்பினார். சோபாவிலிருந்து எழுந்து பால்கனி அருகே சென்றார். குளிர்ச்சியான இளம் கருமை நிறக் கண்ணாடி போர்த்திய ஜன்னலை நீக்கினார். ஒரு மூட்டை பிரிந்து கொட்டுவதைப் போல வெளிக்காற்று அவர்மேல் கொட்டியது. தானாய் ஒரு புன்னகை விரிய வெளியே வேடிக்கை பார்த்தார். தூரத்தில் உயரமான லான்லி சூப்பர் மார்க்கெட் தெரிந்தது. அங்கே சாமான்களை எப்படி வாங்குவதென கோமதியம்மாள்தான் தாமோதரனுக்குச் சொல்லிக்கொடுத்தார். நாளை அவன் வந்தால் நூடுல்ஸ் வாங்கிவர அனுப்ப வேண்டும். கீழே தள்ளுவண்டியில் காய்கறிகள் நகர்ந்துகொண்டிருந்தன. உடனே அவருக்கு இந்த நாள் கணவர் இறந்த நாளாய் மாறிவிட்டது.

வீட்டைத் துடைப்பது, துணிகளை அலசிப் போடுவது போன்ற வேலைகளை அன்று மத்தியானமே செய்து முடித்துவிட்டார். பரபரவென்று வேலைகளைச் செய்து முடிக்க வேண்டிய அவசியம் அவருக்கு எப்போதுமே இருந்ததில்லை. எவ்வளவு நிதானமாகச் செய்தாலும் வேலைகள் சீக்கிரமே முடிந்துவிடும். பிறகு வெறுமையாய்க் கழியும் பகல் பொழுது. டிவி சேனல்களைக் கொஞ்ச நேரம் மாற்றிக்கொண்டிருந்தார். அது வீட்டு வேலைகளைவிட மிகுந்த அலுப்புத் தருவதாய் இருந்தது. டிவியை அணைத்துவிட்டு வார இதழ்களைப் புரட்ட ஆரம்பித்தார். அப்படியே தூங்கிவிட்டார்.

விழிப்பு வந்தபோது பொழுது மறைந்துவிட்டது. அறைக்குள் வெளிச்சமின்றி இருந்தது. வேகமாக எழுந்து விளக்கைப் போட்டார். பகல் பொழுது கழிந்துவிட்டது குறித்து மகிழ்ச்சியும் இரவு வெகுநேரம் தூக்கம் வராமல் அவதிப்பட வேண்டுமே என்ற கவலையும் ஒன்றாய் மனத்தில் எழுந்தன. கொஞ்சமாய்க் காபி தயாரித்துக் குடிக்க ஆரம்பித்தார். நாளைய சமையலுக்குக் காய்கறிகள் இல்லையென்பது நினைவுக்கு வந்தது. அவரை இன்னும் காணவில்லை. போன் செய்து சொல்லிவிட்டால் வரும்போது வாங்கிவந்துவிடுவார். காபியைக் குடித்துவிட்டு அவருடைய செல் நம்பருக்கு டயல் செய்தார். ரிங் போய்க்கொண்டே இருந்தது. வழக்கமாக அவர் ஒரு ரிங்கிலேயே எடுத்துவிடுவார்.

கோமதிக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று அசைந்து நகர்ந்தது. கட்டுப்படுத்த முடியாமல் உள்ளுணர்வு வளர்ந்தது. அவர் தன் கைகளில் மெல்லென நடுக்கம் பரவுவதைப் பார்த்து எரிச்சலடைந்தார். போன் ஆன் ஆகிவிட்டது. “ஏங்க வீட்டுக்கு வரும்போது அப்படியே…”

“ஹலோ” என்றது சம்பந்தமில்லாத மனிதரின் குரல். கோமதி கலவரமடைந்தார். தகவலைச் சொல்வதற்கு முன்னமேயே அது அவர் மனத்தை அடைந்துவிட்டது. அவருக்கு உடனடியாகத் துயரத்தைவிட இந்த நிகழ்வைத் தான் எப்படித் தனியாகச் சமாளிக்கப்போகிறோம் என்ற பீதிதான் உருண்டு அடைத்துக்கொண்டது. அனிச்சையாய் மகன்களுக்குப் போன் செய்தார். வீட்டைப் பூட்டிக்கொண்டு சம்பவ இடத்துக்கு ஓடினார். ஒவ்வொரு அடிக்கும் கால்கள் அடுத்த அடியை மறந்து குழம்பின. கடலலை மாதிரிக் காற்று வாய்க்குள் சென்றது. சேலை முந்தியைச் சுற்றி வாயைப் பொத்திக் கொண்டு ஓடினார்.

அது நடந்து ஆறேழு மாதங்கள் ஆகிவிட்டன. கணவரின் மறைவுக்குப் பின்னர்தான் அவர் இந்தத் தனிமையை உணர்ந்துகொண்டார் எனச் சொல்ல முடியாது. திருணமாகி வந்து ஒரு மாதத்துக்கு மட்டும் சந்தைக் கடை மாதிரியான ஒரு வீட்டுச் சூழலில் இருந்தார். வீட்டுக்காரர் பெயர் கனகராஜ். கல்யாணம் செய்துகொண்டு வந்த ஒரு மாதத்தில் அவருக்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் வேலை கிடைத்துவிட்டது. தமிழகத்தின் தென்கோடியில் குளச்சலில் அவருக்குப் பணியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. உறவினர்களோ நண்பர்களோ அணுக முடியாத தொலைவு. அங்கே அவர் நான்கு வருடங்கள் பணிபுரிந்தார். கோமதிக்கு அப்போதே தனிமை நன்றாக அறிமுகமாகிவிட்டது.

மதுரைக்கு மாற்றலான பின்பு பெரியவன் சேதுவும் இளையவன் சக்திவேலும் பிறந்தனர். பத்து வருடங்கள் கலகலப்பாகச் சென்றன.

கரண்ட் போய்விட்டது. மழைக் காற்று மேற்காக வீசுகிறது. மேற்குக் காற்று வந்தால் பால்கனியில் சாரல் உள்ளே வரும். திறந்திருந்த ஜன்னலை மூடிவிட்டார். சார்ஜ் லைட்டைப் போட்டார். சேதுவுக்குப் போன் செய்ய நினைத்து உடன் அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.

கனகராஜ் மகன்களை எந்தப் பிசிறுமில்லாமல் கச்சிதமாக வளர்க்க விரும்பினார். வீட்டுச் சூழல் சரிப்படாது என அவர் தெளிவான ஒரு கருத்தைக்கொண்டிருந்தார். ஆரம்பப் பள்ளி முடிந்தவுடனே அவர்களைக் கொண்டுபோய் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார். கோமதி எவ்வளவோ அழுதும் வாதாடியும் எதுவும் நடக்கவில்லை.

பிள்ளைகள் இனித் தன்னுடையவர்கள் அல்ல என்று கோமதி அப்போதே உணர்ந்துகொண்டார். மகன்கள்மீதான ஏக்கம் அவர் மனத்தைப் பெரும்பாரமாக அழுத்தியது. அந்தக் காலகட்டத்தில் அவர் மனத்தில் ஏதேதோ நிறங்களும் சம்பந்தமில்லாத காட்சிகளும் தோன்றின. அது சித்தப் பிரம்மையின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். தெரியவில்லை. அவர் இது குறித்து மருத்துவர் யாரையும் சந்திக்கவில்லை.

பிள்ளைகள் பைத்தியம் பிடித்தவர்கள்போலத் தோன்றினர்கள். பிடிப்பற்று மிதக்கும் பரிதவிப்பு அவர்கள் முகத்தில் ஆழமான தடத்தைப் பதித்திருந்தது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு அழைத்துவரும்போது அவர்கள் அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதார்கள். தனக்கு இப்படி ஒரு அவலத்தை உண்டாக்கித் தந்த கணவர்மீதான பிடிப்பு அவருக்கு அப்போதே விலகிவிட்டது.

கனகராஜ் இதனாலெல்லாம் பெரிதாக ஒன்றும் பாதிக்கப்படவில்லை. போகப்போக எல்லாம் சரியாகிவிடும் என்பதை எப்போதும் தயங்காமல் சொன்னார். அவர் சொன்னது மாதிரி குழந்தைகள் ஒன்றிரண்டு வருடங்களில் அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டனர். வரும்போதெல்லாம் தங்கள் நண்பர்களைப் பற்றிய கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். வளர வளர வீட்டுக்கு வருவதற்கான அவர்களின் ஆர்வம் குறைந்துகொண்டே வந்தது. சில சமயம் நண்பர்களைக் கூட்டி வந்தார்கள்.

கோமதிக்கு அது போகப் போகச் சரியாகவில்லை. சகிக்க முடியாத இந்த நிலையை மாற்றிவிட முடியாதா என அவர் வருடக் கணக்கில் ஏங்கிக்கொண்டிருந்தார். மகன்கள் அவர் கண்களுக்குத் தெரியாமலேயே ஆண்களாக மாறினர். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே மிகப் பெரிய சம்பளத்தோடு வேலைக்குத் தேர்வானவர்கள். தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டுமென அவர்கள் யாருடைய ஆலோசனையும் கேட்கவில்லை. ஒருவேளை அவர்கள் நண்பர்களிடம் அது பற்றிப் பேசி இருக்கலாம். பெரு நகரங்களில் அவர்கள் தங்கள் ஜாகைக்கு இடம் பிடித்துக்கொண்டனர். உடன் பணிபுரியும் பெண்களைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். பெற்றவர்களைப் பார்க்க வீட்டுக்கு வருவது சடங்காகி, சம்பிரதாயமாகி அப்படி அப்படியே வழக்கொழிந்துவிட்டது.

கனகராஜுக்கு இதைப் பற்றியெல்லாம் சிந்தனை இருந் ததா இல்லையா தெரியவில்லை. கோமதி எவ்வளவு புலம்பினாலும் அவரால் சிரிக்க முடிந்தது. அவர் உடலில் வரிசையாக நோயின் குறிகள் தோன்றின. சர்க்கரையாலும் குறைந்த ரத்த அழுத்தத்தாலும் சிறுநீரகக் கோளாறாலும் அவதிப் பட்டார். ஒரு நாளைக்கு அவர் விழுங்கும் மாத்திரைகள் வியப்பூட் டும் அளவுக்கு இருந்தன. ஏதாவது ஒரு நோய் அவரை வாரிக்கொண்டு போய்விடும் என்றுதான் இருந்தார். ஆனால் விபத்து நோய்களை ஏமாற்றிவிட்டது.

காற்றில்லாமல் மழை பெய்தது. மழை பெய்துகொண்டிருக்கும் போதே கரண்ட் வந்துவிட்டது. இரவு உணவுக்காக என்ன தயார் செய்யலாம் என்ற யோசனையில் கோமதி எழுந்து சமையல்கட்டுப்பக்கம் போனார். பிரட் டோஸ்ட் செய்துகொள்ளலாமா அல்லது கொஞ்சம் பாஸ்தாவை வேகவைத்துக்கொள்ளலாமா என்று யோசித்தார்.

மிளகு, சீரகம், தனியா போன்றவை சோகேசில் வரிசையாய்க் கண்ணில்பட்டன. அவற்றை அவர் தாமோதரனுக்காக வாங்கிவைத்திருக்கிறார். ஒரு விசேசமான நாளில் விருந்து தயாரித்துத் திடீரென அவனுக்குப் பரிமாற வேண்டுமென நினைத்திருந்தார். கனகராஜின் மறைவுக்குப் பின்தான் தாமோதரன் அறிமுகமானான். பேப்பர், பால் கொண்டுவந்து தருவது கரண்ட் பில், போன் பில் கட்டுவது மற்றபடி கடைகளுக்குப் போய்ச் சாமான்கள் வாங்கிவந்து தருவது போன்ற வேலைகளை அவன் விருப்பமுடன் செய்தான். கோமதியம்மாள் உலகத் தொடர்பில்லாமல் இருப்பதற்கு அவன் பெருமளவு உதவினான்.

தினமும் பத்தரை மணிக்கு கோமதியம்மாளின் அபார்ட்மெண்டில் அக்கா என்றபடி வருவான். சோபாவில் உட்கார்ந்துகொண்டு தொண தொணவென எதையாவது பேசிக்கொண்டிருப்பான். கைகள் டிவி ரிமோட்டில் சேனல்களை மாற்றிக்கொண்டே இருக்கும். வயது வித்தியாசமின்றி அவன் தன்னிடம் இவ்வளவு உரிமை எடுத்துக்கொள்வது முதலில் அவருக்கு வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருந்தது. ஆனால் மறுநாள் கண்விழிக்கும் போதிருந்தே அவன் வருகையைப் பற்றிய நினைவாக இருந்தது. ஒரு பதினாறு அல்லது பதினேழு வயதில் அவன் உடலில் தெரிந்த இறுக்கம் அவருக்கு வியப்பாய் இருந்தது. இந்த வயதில் சக்தியும் சேதுவும் வெண்டைக்காய் மாதிரி இருந்தனர்.

பத்தரை மணிக்கு அவன் வரும் பொழுது கோமதியம்மாள் நீராடி தலைகட்டியபடி ஸ்பெகட்டியோ பிரட் ஆம்லெட்டோ சாப்பிட்டுக் கொண்டிருப்பார். தாமோதரன் ஆச்சரியமாக “இதுதான் சாப்பிடுவீங்களா? சோறெல்லாம் சாப்பிடமாட்டீங்களா?” என்பான். கோமதி சிரித்தபடி கொஞ்சம் தட்டிலிட்டு அவனிடம் நீட்டுவார். அவன் வேண்டாமென ஒரேயடியாக மறுத்துவிட்டுப் பிறகு வாங்கிக்கொள்வான்.

முகம் பெருமிதத்தில் பூரிக்க ஒரு நாள் கையில் டிபன் பாக்ஸோடு வந்தான். “எங்க வீட்ல இருந்து சாப்பாடு கொண்டுவந்திருக்கேன். சாப்படறீங்களா?” என்றான். அவருக்கு அது பிடிக்கவில்லையென்றாலும் ஆச்சரியமாய் விழிகளை விரித்து டிபன் பாக்சை வாங்கிக் கொண்டார். அவன் குதூகலமடைந்தான். டப்பாவில் தக்காளி சாதம் இருந்தது. அந்தச் சுவை கோமதியம்மாளுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. ஆனாலும் ரசித்துச் சாப்பிடுவது மாதிரி நாலுவாய் அள்ளிச் சாப்பிட்டார்.

தாமோதரனுக்குத் திடீரென சந்தேகம் வந்துவிட்டது. “சாப்பாடு நல்லால்லதானே?” என்றான். அவருக்கு அவன் தலையைத் தடவித் தர வேண்டும்போல வாஞ்சை ஏற்பட்டது. சேது இப்படித்தான் பத்தாவது படிக்கையில் வீட்டுக்கு வரும்போது அரைக் கிலோ மைசூர்பாகு வாங்கி வந்துவிட்டான். அதனால் ஏற்பட்ட தீவிர உணர்விலும் பெரிய மனித உணர்விலும் அந்த விடுமுறை முழுவதும் பாதிக்கப்பட்டு விட்டான்.

தக்காளி சாதத்தைச் சாப்பிட்டு முடித்தபோது தாமோதரனுக்கு ஒரு நாள் தன் கையால் விருந்து தயாரித்துப் செய்து பரிமாற வேண்டுமென முடிவு செய்துகொண்டார். அதற்கான மளிகைச் சாமான்களை வாங்கிவர அவனை அனுப்பாமல் அவரே போய் வாங்கிவந்தார். அவனுக்குத் தெரிய வேண்டாம். நினைக்கும்போதே அவருக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. சாதாரண நாளாய் இல்லாமல் ஏதாவது ஒரு விசேச நாளில் இது நடந்தால் இன்னும் நன்றாக இருக்கும். அவர் ஏதாவது ஒரு விசேச நாளுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்.

அவர் நிலைகுலைந்து போய்விடவில்லையென்றாலும் தனிமை மீண்டும் உக்கிரமாகச் சூழ்ந்து கொண்டது. தாமோதரன் வீட்டுப் பக்கம் வந்து ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்டது. ஒருவேளை உடம்பு சரியில்லையோ? அல்லது அவர் மாதிரி…. வீடு எங்கிருக்கிறது என்று கூடக் கேட்டு வைத்துக்கொள்ளாத தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டார். அதுவும் போன் நம்பர்கூட வாங்கி வைத்துக்கொள்ள நினைக்காத தன்னுடைய செய்கை இப்போது அவருக்குப் பெரும் விசித்திரமாய் இருந்தது.

மேலும் சில நாட்களுக்குள்ளா கவே அவர்கள் கடைவீதியில் நேர்ப்பட்டுக்கொண்டார்கள். முதலில் அவருக்கு அவனை ஓங்கி அறைய வேண்டும்போல ஆத்திரம் வந்தது. அவன் இவரைப் பார்த்துவிட்டானோ அல்லது பார்க்கத்தான் இல்லையோ அவரைக் கடந்துவிடுபவன்போலத் தீவிரமாய்ப் பராக்குப் பார்த்தான். கோமதியம்மாளுக்கு வேடிக்கையாய் இருந்தது. கிண்டல் மிளிர அவன் எதிரே வந்து, “அப்புறம் சார் எப்படி இருக்கீங்க?” என்றார்.

அவன் இவரை நேருக்கு நேராய்ப் பார்க்கவே அஞ்சினான். எங்கெங்கோ பார்த்தபடி, “நல்லாயிருக்கேன் இப்ப வெளியூருக்கு வேலைக்குப் போறேன். அதான் வர முடியல” என்றான். அவனுடைய இந்தத் தடுமாற்றம் மிகவும் அருவருப்பாய் இருந்தது. அவன் முகத்தில் மிகப் பெரிய அழுகை மறைந்துகிடப்பதுபோல் தோன்றியது. அவனோடு வந்திருந்தவன் இவளையே ஊடுருவிப் பார்த்தான். அந்தப் பார்வை இவரை ஏதோ எடைபோட முயல்வது மாதிரியும் இகழ்ச்சியாகவும் இருந்தது.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவர்களுக்கு வழிவிட்டுவிட்டார். என்னவோ போலிருந்தது. தங்களைப் பற்றிய ஒரு அருவருப் பான கற்பனை எங்கேயோ தோன்றி அவனைத் தீண்டியிருக்கிறது. அதிர்ச்சியில் அவருக்கு விக்கிக்கொண்டது. கடவுளே எவ்வளவு ஆபாசமான ஒரு சமூகச் சூழலில் வாழ வேண்டியிருக்கிறது.

அன்றிரவு அவருக்குத் தூக்கம் வரவில்லை. தாமோதரனின் பழைய புதிய முகங்கள் மாறி மாறி முடிவில்லாமல் தோன்றிக்கொண்டேயிருந்தன. இரவு நகராமல் உறைந்துகிடந்தது. கடிகார முட்கள் காலத்தைச் சீரணிக்க முடியாமல் திணறின.

கிட்டத்தட்ட விடிகாலை நேரத்தில்தான் அவர் கண்கள் தூக்கத்தின் வசம் சென்றன. ஆனால் விடிவதற்குள்ளாகவே அவர் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்துகொண்டார். கடுமையான அதிர்ச்சியில் அவர் வாய் பிளந்திருந்தது. அவருக்கும் தாமோதரனுக்குமிடையேயான ஒரு வெளியில் சொல்ல முடியாத கனவை அப்போது அவர் கண்டிருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *