வெளியேறிச் செல்லும் மகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 8,953 
 

வீடு அமைதியாக இருந்ததிலிருந்தே அப்பா வந்திருக்கிறார் என்பத தெரிந்து கொண்டான்,கணேசன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்க வந்திருக்கார்.

“ம்…என்ன கோரிக்கையோ ?”

இன்று கடைசி வெள்ளி ,மாலையில் மனைவியைக் கூட்டிக்கொண்டு கோயிலுக்குப்போகலாம், அப்படியே பர்மாக் கடையில் டிபன் செய்யலாம்னு மனசுக்குள் போட்ட திட்டம் சட்டென திவாலாகிப்போனது.

வராண்டாவில் செருப்புகளைக் கழட்டி விடும்போதே, “இன்னும் காணலேன்னு நெனச்சேன் வந்துட்ட கணேசா. உனக்கு ஆயுசு கெட்டிப்பா.” வழக்கமான பானியில்,அப்பா.

அடுத்த நிலையின் மனைவியோட காட்டமான செயல்கள் தன்னுள் நிழலாடினாலும்…பொய்யாக முகம் மலர வைத்து, ”வந்து ரொம்ப நேரமாச்சாப்பா. ஊர்ல அம்மா நல்லா இருக்காங்களா… அவங்களையும் கூட்டி வரவேண்டியது தானப்பா” உதட்டு வார்த்தையை உதிர்த்தான், கணேசன்.

“அவ எங்க வர… அது விசயமாத்தான் வந்தேன்.” புள்ளி வைத்தார்.

“அம்மாவுக்கு என்னப்பா” என்றவாறே அங்கே காபியுடன் வந்த மனைவியைக் கவனித்தான்.

“பதறாதீங்க. தேவையில்லாமல் ஏதாவது வாக்குக் கொடுத்தீக அவ்வளவுதான்” என்பது போல் பார்வையிலேயே உத்தரவுப் போட்டாள்.

அவன் எச்சில் விழுங்கினான்.

“பத்து நாளா அவ உடம்பு முடியாம ரெம்ப செரமப்படுறா நானும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போய்க் காட்டியும் வியாதி கேட்காமல் அலுத்துப் போய்.ஓயாத இருமல் சளின்னு கெடக்கா. நாகர்கோயில்ல ஏதோ ஆஸ்ப்பத்திரி இருக்காம் அங்கப்போனா சரியாகுமாம் முத்து சொன்னார் அதான் உன்ன பார்த்துட்டுப்போகலாமுனு இங்க வந்தேம்பா ” அப்பாவின் வார்த்தையில் இயலாமையும், பணத்தேவையின் எதிர்பார்ப்பும் கலந்திருந்தது.

அதையெல்லாம் சாடையாக கேட்ட மாலாவின் முகம், அஷ்டகோனலாக மாறியது.

தனக்கு உயிர்தந்து,சுமந்து, இந்த அழகான பூமிக்குக் கொடுத்தவள் வயதின் பிடியில் நோய்வதைப்படுகிறாள்… வைத்தியத்தில் அவளை அமைதிப்படுத்த வேண்டியது மகனின் கடமைதானே… உள்ளுணர்வு துடித்தாலும் தனக்குக் கல்யாணம் ஆனதும் மாமியாரின் தூபத்தில் மறுவாரமே மில்காலனி வீட்டுக்கு அனுமதி வாங்கி தனிக்குடித்தனம் சென்று விட்டான். மாலாவோ கணவனை முழுமையாகத் தன் வசமாக்கித் தலையாட்டிப் பொம்மையாக வைத்தாள்.

ஒரே மகன் தங்களை விட்டு விலகிப் போனாலும் மனைவியிடம் சந்தோசமுடன் வாழட்டுமென உள்ளுக்குள் நினைத்தார்கள். ஆனாலும் அப்படியே இருந்துட்டா சம்மந்தியம்மாளும், மருமகளும் பெத்தவங்க புள்ளங்கற உறவையே மறக்கடிச்சு, கடைசிக்காலத்துல தங்களைக் கவனிப்பதற்கும், கடைசிக் காரியம் பன்றதுக்கும் கணேசனை அனுப்பாம தடுத்துருவாங்கனு நிறைய யோசித்து, உறவைப் புதுப்பிக்கும் முகமாக மாதத்தில் ஒரு முறையாவது வந்து ஏதாவது ஒரு காரணம் கூறி செலவுக்கு பணம் வேண்டுமென வாங்கிப் போவார்கள்.

அப்பா,அம்மா வருவதும். அவர்களின் தேவைக்குச் செய்வதும் கடமைதான் என கணேசன் மனமார ஏற்றுக் கொண்டலும், அவர்களின் நினைவு அவனுக்குள் தங்கவிடாது மகளின் மூலமாக புகைப்போட்டாள் மாமியார்.

அதன் விளைவு… அடுத்தடுத்த அவர்களின் வருகைக்கு முகச்சுழிப்பு காட்ட, முதுமைப் பிடியிலும் தன்மானம் காத்துக் கிராமத்துலேயே தங்கி விட்டனர்.

“அப்பா ரெண்டு மாசமா மில்ல வேலை நிறுத்தம்பா சம்பளமில்லாம இருக்கிறேன்” மனைவியின் நெனப்பை சட்டென வார்த்தையாக்கிய கணவனின் சாமர்த்தியம் பார்த்து மாலா பூரித்தாள் உள்ளுக்குள்.

“எதிர்பார்த்து சொல்ற மாதிரி சொல்றானே கணேசன்…” பெருமூச்சு விட்டார், இனி பேச ஒன்றுமில்லையென நினைத்தபடி,

“அப்படியாப்பா இது தெரியாம நான்பாட்டுக்கு கிளம்பி வந்துட்டேனே… சரி அவ தலையெழுத்துப்படி நடக்கட்டும்” எழுந்து கொனண்டார்.

தன் மாமனார் ரோசப்பட்டதில் மாலாவுக்கு நிரம்ப சந்தோசம்.

“இருந்து சாப்பிட்டு போங்கப்பா”ன்னு வார்த்தைக்குக் கூட சொல்லவில்லை.

கணேசனின் மனசுகிடந்து தகித்தது… ஆண்மை முட்டியது… சீறத் தயாரானான்… ஆனால் முடியவில்லை. மனைவியோட ஆளுமையின்கீழ் தன்னால் எதுவும் செய்யமுடியாத இயலாமை அவனை அடங்க வைத்தது.

நாட்களின் நகர்வு சுட்டெரித்தது. வேலையில் மனது ஒன்றவில்லை, எப்போதும் இறுக்கம் தடவிய முகமானது. சக ஊழியர்கள்கூட

“என்ன கணேசா வீட்ல ஏதாவது பிரச்சனையா?”ன்னு துருவிக் கேட்டும் அவன் மெளனத்தையே பதிலாக்கினான்.

அன்று வாரவிடுமுறை… மில்லில் வேலையென வீட்டில் பொய் சொல்லி அப்பா அம்மாவைப் பார்க்கச் சென்ற போது, அங்கே அவன் கண்ட காட்சி ஒருநொடி திகைக்க வைத்தது.

அப்பாவும், அம்மாவும் நடுக் கூடத்தில் அமர்ந்து ஆதித்தியா சேனலில் வடிவேல் நகைச்சுவைக்காகச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

இதென்ன கூத்து…

ஆரோக்கியமாக இருக்கும் மனுசியை ஏன் நோய் எனப் பழிக்கவேண்டும். நாடகமாகத்தான் அப்பா வந்தாரா? என்னிடம் அப்படியென்ன எதிர்பார்ப்பு அவருக்கு?

எதுவாகவும் இருக்கட்டுமே அபாண்டமான சோதனை தேவையில்லையே…

அம்மாவுக்கு உடல் நிலையில் எதுவும் இல்லையோ…

சத்தமில்லாமல் வந்து நிற்கும் மகனைப் பார்த்து, “கணேசா நீ நல்லாயிருக்கியாப்பா” பாசமிகுதியோடு அம்மா கேட்டாள்.

“என்ன கணேசா, மனசு கேட்காம வந்தியா?” அப்பாவின் வார்த்தை குத்துவதாக இருந்தது. பொறுத்துக் கொண்டபோது கண்கள் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்து, பின் அழுதே விட்டான்.

போதாதா உருகிவிட்டாள், அம்மா.

“ஏம்பா பொய் சொன்னீங்க” என்று கேட்டான்.

“உன்னோட அம்மாதாம்பா அப்படி சொல்லச் சொன்னா”

“எதுக்குமா” அம்மாவால் பேச முடியவில்லை.

“இதோ பாருப்பா கணேசா நீபாட்டுக்கு மாமியார் சொந்தமே பெருசுன்னு சுத்தமா எங்கள மறந்துட்டு இருக்க. காலம்போன காலத்துல பெத்தபுள்ள கிடைக்கிமோ கிடைக்காதோன்னு தினம் தவிச்சோம். கடைசியா ஒரு சோதனை வச்சுப் பார்த்து நாம பாட்டுக்கு இங்கேயே இருந்தரலாம்னுதான் உன்னோட அம்மா யோசனப்படி அன்னிக்கு நடிச்சேன். அதுல என் கனிப்பு நெசமாச்சுப்பா” சொல்லிப் பெருமூச்சு விட்ட அப்பா…

கேள்வியாக ஏறிட்டான், கணேசன்.

“என்னதான் உடம்பு சரியில்லேனு சொன்னாலும் உன் மகன் வரமாட்டான், வேனா நீ செத்துட்டேனு தகவல் போனா…கடமைக்காக வருவான்னு…” முடிக்கவில்லை

“நிறுத்துங்கப்பா” கத்தி விசும்பினான்.தன் உள்ளத்தில் முள்ளாய் ஏதோ ஒன்னு குத்தியது.

வாங்கி வந்த ஹார்லிக்ஸ், பழம், பிஸ்கெட் வகை அடங்கிய பையை நீட்டினான்.

“வேணாம்பா… நீயே வேலையில்லாம இருக்க, செரமப்படும் போது இதுவேற கடன் சுமையா. அதுவுமில்லாம நீ எங்களுக்கு மகன்ங்கற ஸ்தானத்துலருந்து சுத்தமா விலகிப் போயிட்ட. இப்ப கணேசன் மூனாம் மனுசன். அடுத்தவங்க கொடுக்கும் எதுவும் தேவையில்லேனு நெனக்கிறவ நான். என்னைய என் வீட்டுக்காரு ரொம்ப சந்தோசமா வச்சுருக்காரு… உன்னோட பொருளை வாங்கி அவரோட அன்யோன்னிய உரிமைய விட்டுக் கொடுக்க விரும்பல” அம்மாதான் இப்படி கூர்மையாக பேசினாள்.

அம்மா கொடுத்த சொல்லின் உள்ளிருந்து கொடுத்த வலி தாங்கமுடியாமல் துடித்தான் கணேசன்.

“பெத்த உறவுல உண்மையில்லேனு தெரிஞ்சிப்போச்சு இனி ‘உனக்கு நான் எனக்கு நீ ’ன்னு எங்களோட உசிரு போர வரைக்கும் இருந்து பார்த்துட்டுப் போறோம்… மரம் செடிலாம் ஈரப்பதம் இருக்கும் வரைக்கும் பசுமையாயிருக்கு. காஞ்சிபோனாத் தானா பட்டுப்போயிருதுல அதுமாதிரிதான் எங்களோட வாழ்க்கையும்… கவலைப்படாம நீ கெளம்பி உன் பெண்டாட்டி, புள்ள, மாமியார்ன்னு அவங்களையாவது அக்கரையோட பார்த்துக்க கணேசா…”

அவனால் அம்மாவின் பேச்சுக்கு எதையும் பதிலாகச் சொல்ல முடியாமல் காலடியில் பூமி பிளந்த பிரமையோடு சட்டென அங்கிருந்து வெளியேறினான் கணேசன்.

பிள்ளை வெளியேறிச் செல்வதைக் கண்டும், ஒன்றும் நடக்காதது போல் அவர்கள் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கத் தொடங்கினர்.

ஆமாம். கணேசன் இன்றா வெளியேறிப் போகிறான்? அவன் அவர்களை விட்டு வெளியேறி… பல வருடங்களாகி விட்டதே.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *