வெளிப் பூச்சிக்கள்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,149 
 

காலை ஒன்பது மணிக்கே, வெயில் அனலாய் தகித்தது. முகுந்தன், துண்டால் முகத்தையும், வழுக்கைத் தலையையும் துடைத்துக் கொண்டார். ஆட்டோவில் அமர்ந்தபடி, கோவில் கோபுரம் தெரிகிறதா என்று, அவர் மனைவி வைதேகி பார்த்துக் கொண்டே வந்தார்.
மருமகள் பாமா, மூன்று வயதுப் பேரனை அணைத்துக் கொண்டு, அடக்கமாக அமர்ந்து கொண்டிருந்தாள். ஆட்டோ முக்கி, முணகி அந்தச் சிறுகுன்றில், ஒருவழியாக ஏறி நின்றது. உச்சியில் இருந்த கோவில் அருகில் செல்ல முடியாதபடி, ஏகப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஊர் ஓரத்தில் இருந்த அந்தக் கோவிலின் கும்பாபிஷேகத்தை காண, கூட்டம் குழுமியிருந்தது.
இறங்கி பணத்தைக் கொடுத்தார் முகுந்தன். அந்த சின்ன ஊரிலும் இருந்த, அத்தனை கார்கள் மத்தியில், ஒரு ஆட்டோவில் வந்து இறங்கியது சங்கடமாகத்தான் இருந்தது. சுற்றும், முற்றும் பார்த்தார். அறிமுகமானவர்கள் எவரும் பார்த்த மாதிரி தெரியவில்லை. தகிப்பிலிருந்து தப்பிக்க, சின்ன மண்டபத்தில் சிலரும், மரங்களடியில் சிலரும் அமர்ந்திருந்தனர்.
கலச பூஜை பக்கம், ஒரு கூட்டம். நல்ல வேளையாக, ஒரு பந்தலும் போடப்பட்டிருந்தது. ஆண்கள் நிறைந்த பந்தல் பக்கம், முகுந்தன் ஒதுங்கினார். மனைவியும், மருமகளும், பெண்கள் கூட்டம் நோக்கிச் சென்றனர்.
வெளிப் பூச்சிக்கள்!பந்தலில் திடீரென, அறிமுகமான முகங்களும் தெரிந்தன. சுந்தரேசனும், குருமூர்த்தியும் தங்களிடையே பேசிக்கொண்டே, அவரைப் பார்த்து கையைக் காண்பித்தனர். பால்ய நண்பர்கள், ஒரே அலுவலகத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்றாக ஓய்வும் பெற்றவர்கள். ஆனால், அப்போதைய நெருக்கம் இல்லாதது போல், முகுந்தனுக்கு மட்டும் ஒரு சங்கடம். ஒரு இடைவெளி, அவர் மனதிலேயே முளைத்திருந்தது.
“”பெரியவன் கலிபோர்னியா வேலையை விட்டுட்டு, சிகாகோ போயிட்டான். ரொம்ப சவுகரியமா இருக்குன்னு போன் பண்ணினான். மருமகளுக்கும் அங்கேயே வேலை கிடைச்சாச்சாம். காரும் மாத்திட்டேன்னு சொன்னான்,” என்று, குருமூர்த்தியிடம் தொடர்ந்து கொண்டிருந்தார் சுந்தரேசன்.
“”சின்னவன் இன்னும் மிட்சுபிஷிலதான் இருக்கான். ஜப்பானை விட்டு, அவனுக்கும் அமெரிக்கா போகத்தான் ஆசை,” என்ற, சுந்தரேசன் கொஞ்சம், சப்தமாகப் பேசுவதுபோல், முகுந்தனுக்கு தோன்றியது. இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு, நாற்காலி விளிம்பில்தான் அமர்ந்து கொண்டிருந்தார். செவி அவர்கள் பக்கம் திரும்பியிருக்க, பார்வையை எங்கெங்கோ படர விட்டுக் கொண்டிருந்தார்.
“”இந்த வருஷம் கனடாவிலேயும் நல்ல குளிர்ன்னு, என் பையன் விவேக் சொன்னான். அதனாலதான் நாங்கள் போகல,” என்று, அவர் மகன் பற்றி பெருமையுடன் விவரித்துக் கொண்டிருந்தார் குருமூர்த்தி.
“”பொண்ணு, மாப்பிள்ளை சவுக்கியமா?”
அக்கறையுடன், குருமூர்த்தியை விசாரித்தார் சுந்தரேசன்.
“”ஹூம்… இன்னும் ஹாங்காங் பேங்கிலதான், மாப்பிள்ளை வேலை செய்யறார். துபாயை விட்டுத்தான் வர மனசில்லை,” இருவரும் மவுனமாக முகுந்தனைப் பார்த்தனர்.
“”வெள்ளிக்கிழமை… பத்தரை மணி ராகு காலம் வரதுக்கு முன்னாலேயே அபிஷேகம் ஆயிடும் இல்லையா… புதுப்பிக்கற வேலையெல்லாம் எப்படி செஞ்சு முடிச்சிருக்காங் கன்னு, ஒரு நடை பார்த்துட்டு வர்றேன்.”
எழுந்தார் முகுந்தன்.
அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்தால், பரவாயில்லை என்று தோன்றியது. தாழ்வு மனப்பான்மை, அவரை சித்திரவதை செய்து கொண்டிருந்தது.
மண்டபத்தின் ஓரத்தில், மருமகள் பாமா அல்லாடிக் கொண்டிருந்தாள். தான் ஒரு நடை சுற்றி வந்த பின், அவர் மனைவி வைதேகி, பேரனை கையில் வாங்கிக்கொண்டு, மருமகள் பாமாவையும் போய்விட்டு வரச் சொன்ன அழகு, அன்று அவர் மனதைக் கவரவில்லை. பக்கத்தில், சுந்தரேசன் மனைவி மாதிரி இருந்தது.
“”பாட்டி… பாட்டி…” என்று சொல்லிக் கொண்டே, அவர் பேரன், சுந்தரேசன் மனைவி மடியிலும் தாவிக் கொண்டிருந்தான். அத்தோடு நிற்காமல், உரிமையுடன் அவர் கூந்தலையும் பிடித்து இழுக்க முற்பட்டான்.
ஜரிகையுடன் பளபளத்துக் கொண்டிருந்த சுந்தரேசன் மனைவியின் பட்டுப்புடவை, கசங்கிக் கொண்டிருந்தது. பேரனை எடுத்துக்கொள்ள விரைந்தார் முகுந்தன்.
“”அந்த மாதிரியெல்லாம் விஷமம் செய்யக் கூடாது.” அதற்குள் வைதேகியும், தன் பங்கிற்குப் பேரனை செல்லமாக அதட்டி இழுத்துக் கொள்ள முற்பட்டார்.
“”பரவாயில்லை இருக்கட்டும்… குழந்தைங்க செய்யற சேட்டையை பார்க்க கொடுத்து வைத்திருக்கணும்,” என்ற, சுந்தரேசன் மனைவி, குழந்தையை அள்ளிக் கொண்டாள்.
“”நான் அமெரிக்கா போயிருந்தப்ப, என்னோட பேரக் குழந்தைங்க என்னை, “மதர் இன் லா’ன்னு கூப்பிட்டாங்க… இந்த குழந்தையாவது, ஆசையா பாட்டின்னு கூப்பிடறானே!”
சுந்தரேசன் மனைவியின் குரல், கம்மியது போல் தோன்றியது.
“”நீங்க அப்பறம் பேரப் பிள்ளைங்களை பார்க்க போகலையா… கொஞ்சம் வளர்ந்தா, உறவு முறை புரியாமலா போயிடும்?” ஆறுதலாகப் பேச முயன்று கொண்டிருந்தாள் வைதேகி.
விரைந்து வந்த முகுந்தன், தள்ளி நின்று கொண்டார்.
“”வீட்டுக்காரருக்கு நெஞ்சுவலி வந்தப்ப, அங்க போய் டெஸ்ட் பண்ணிக்கலாம்ன்னு தான் பார்த்தோம். இந்தியாவிலேயே வசதிகள் அதிகம்ன்னு பசங்க சொல்லிட்டாங்க… டாலர் சேத்து வைக்கணும்ன்னு நெனைக்கறாங்களோ என்னவோ,” சுந்தரேசன் மனைவியின் குரலில் விரக்தி தென்பட்டது.
கேட்டும், கேட்காதது போல், மீண்டும் சென்று பந்தலில் அமர்ந்து கொண்டார் முகுந்தன்.
பத்தரை, நெருங்க நெருங்க, கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன், முகுந்தனின் பையன் கோபால், பந்தலை நோக்கி வருவது தெரிந்தது. முகுந்தன் புருவத்தை நெறித்தார்.
“எனக்கு பத்தரை மணிக்கு பேங்கில இருக்கணும் அப்பா… கஸ்டமர்கள் வர ஆரம்பிச்சிடுவாங்க… நீங்க போயிட்டு வாங்க…’ என்று சொல்லியபடி, அவர்களை அனுப்பியவன் வந்தது, அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
“ஒரு நடை வந்து பார்த்துட்டுப் போயிடு’ன்னு அவன் தாயார் சொன்னது, ஒருவேளை நினைவில் இருந்திருக்கலாம். எப்@பாது@ம எளிமையாக இருப்பவன், இன்று மிகவும் சாதாரணமாக இருப்பதுபோல், முகுந்தனுக்குத் தோன்றியது.
தள்ளி உட்கார்ந்து கொண்டு, கோபால் அமர்வதற்கும் வழி செய்தவர், சுந்தரேசனையும், குருமூர்த்தியையும் பார்த்து, ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தார்.
குருமூர்த்தியையும், சுந்தரேசனையும் பார்த்து, கண்களாலேயே வந்தனம் தெரிவித்த கோபால், “”அப்பா… நான் இங்க உட்கார வரலை… இந்தப் பையை உங்களிடம் தர வந்தேன்,” என்று சொல்லியபடி, முகுந்தன் கையில், அந்த பிளாஸ்டிக் பையைத் திணித்தான்.
“குழந்தைக்குரிய பால் பாட்டில, மருமகள் மறந்து வைத்து விட்டு வந்தாளா…’ என்ற குழப்பத்துடன், பையைத் திறந்தார். மினரல் வாட்டர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், இரண்டு ஆரஞ்சுப் பழங்கள் என, கண்களில் தென்பட்டன.
“”வெயில் அதிகமா இருந்ததுப்பா… இங்க சாப்பாட்டுக்கும் நேரமாகி விடும்… ஊருக்கு ஒதுக்குபுறமா இருக்கற, இந்தக் கோவில் பக்கம், என்ன கெடைக்கும்ன்னு தெரியல. அதனால தான், இதைக் குடுத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்…
“”உங்களோட எப்படியும், இரண்டு, மூணு பேர் தெரிஞ்சவங்க இருப்பாங்கன்னு தெரியும். அதனால, கொஞ்சம் தாராளமாக வாங்கி வந்திருக்கேன்… இரண்டு குடையும் வச்சிருக்கேன். உச்சி வெயில்ல, ஆட்டோ பிடிக்க கீழே போக வேண்டியிருக்கும் பாத்துக்கங்க!”
கோபால் கிளம்ப முற்பட்டான்.
“”கலச அபிஷேகம் எப்படியும் சீக்கிரம் ஆகிவிடும். பார்த்துட்டு கிளம்பேன்,” என்ற முகுந்தனுக்கு களிப்பில், பையனை உரிமையுடன் வற்புறுத்த உற்சாகம் பிறந்தது.
“”கீழ இறங்கிப் போகும்போது, அடிவாரத்திலிருந்தே பார்க்கறேம்பா… ஆபிசுக்கு லேட்டாய் போகக் கூடாது,” கோபால் விறுவிறென ஸ்கூட்டரை நோக்கி நடந்தான்.
இப்போது குருமூர்த்தியும். சுந்தரேசனும் கலச பூஜை காண, சற்று முன்பாகவே எழுந்து கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் எழுந்து, அவர்களுடன் சேர்ந்து கொண்ட முகுந்தனின் பார்வை மட்டும், கோபால் பக்கமே நிலைத்திருந்தது.
ஸ்கூட்டரை எடுக்கும் முன், கோபால் பார்வையும், முகுந்தன் பக்கம் திரும்பியது. “கலசத்தைப் பார்… கலசத்தைப் பார்…’ என முகுந்தன் ஜாடை காட்டினார். தலையை ஆட்டிய அவனும், பிஸ்கெட் பழங்களைச் சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க, அவருக்கு சைகை காட்டினான். கும்பாபிஷேகம் முடிந்த கையோடு, உயரத்திலிருந்து குருக்கள் தெளித்த நீரைவிட, கோபால் சைகைகள், அவருக்கு அதிகம் குளிர்ச்சியைத் தந்து கொண்டிருந்தன. பெருமிதத்தில் மீண்டும், அவரிடம் புல்லரிப்பு!
பந்தலில் அவர்கள் மறுபடியும் சென்று அமர்ந்த போது, நாற்காலியில், நன்றாகத் தள்ளி உட்கார்ந்தார் முகுந்தன். சுந்தரேசனிடமும், குருமூர்த்தியிடமும், திடீரென ஒரு மவுனம் குடிகொண்டிருந்தது.
முகுந்தன் தொண்டையைக் கணைத்துக் கொண்டார். சுந்தரேசனிடமும், குருமூர்த்தியுடனும் இப்போது, ஏனோ பேச வேண்டும் போல் இருந்தது.

– ஜி. குமார் (மார்ச் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *