கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,672 
 

‘‘டாக்டர், நான் ரகு பேசறேன்… நீங்க இப்பவே என் வீட்டுக்கு வர முடியுமா? ரொம்ப அவசரம், ப்ளீஸ்!’’

‘‘என்ன ரகு… ஏதாவது எமர்ஜென்சியா? உனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லையே?’’

‘‘எனக்கு ஒண்ணும் இல்லை டாக்டர்! ஆனா, நான் சொன்னா நம்ப மாட்டேன்னீங்களே, அந்த செக்ஸ் வெறி பிடிச்சவ, இப்போ என் கண் முன்னால் எவன்கூடவோ சல்லாபம் பண்ணிட்டு இருக்கா. இப்படி ஒரு கொடுமை என் எதிரிக்குக்கூட ஏற்படக் கூடாது டாக்டர். நான் போன மாசமே உங்ககிட்ட சொன்னேன்… ரேகா ஒரு நிம்போமேனியாக்கா, செக்ஸ் வெறி பிடிச்சவளா மாறிட்டு வர்றாள்னு. நீங்கதான் நம்பாம, எனக்கு ஏதோ மனப்பிராந்தி அது இதுன்னீங்க. இப்ப நீங்களே நேர்ல வந்து, உங்க கண்ணால அந்த அசிங்கத்தைப் பாருங்க, உண்மை புரியும்!’’

‘‘டென்ஷன் ஆகாதே! என்ன நடந்தது, பொறுமையா சொல்லு ரகு!’’ ‘‘நான் வழக்கமா ஏழு மணிக்குத்தான் ஆபீஸ்லேர்ந்து வருவேன், டாக்டர். ரேகாவும் ஏறக்குறைய அதே நேரத்துலதான் அவ ஆபீஸ் லேர்ந்து வருவா. எங்க ரெண்டு பேர்கிட்டயும் வீட்டுச் சாவி தனித்தனியா இருக்கு. இன்னிக்குத் தலைவலினு மத்தியானம் லீவு போட்டுட்டு வீட்டுக்கு வந்தேன். வாசல்ல ரேகாவோட ஸ்கூட்டி நின்னுட்டு இருக்கு. இவ இந்த நேரத்துல இங்க வந்து என்ன பண்றானு, பின்பக்கமா போய் ஜன்னலை லேசாத் திறந்து பார்த்தேன். எங்க பெட்ரூம்ல, ரேகா யாரையோ கட்டிப்பிடிச்சுட்டுக் கிடக்கா டாக்டர்..!’’

மனோதத்துவ நிபுணர் டாக்டர் சேதுவுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. ‘என்ன மனிதன் இவன்! தன் மனைவி சோரம் போவதை இப்படியா அடுத்தவரைக் கூப்பிட்டுக் காண்பிப்பான்!’

ஆனால், இப்படி ஒரு அதிர்ச்சியான விஷயத்தைத் தனியே எதிர்கொள்ள நேரும் எவனும், அடுத்து என்ன செய்வான் என்று சொல்ல முடியாது. விபரீதமாக ஏதாவது செய்து தொலைப்பதற்குள், தான் அங்கே போய்த்தான் ஆக வேண்டும்!

‘‘இதோ, உடனே கிளம்பி வர்றேன்!’’

ரகுவுக்கு ஆபீஸில் வேலைப் பளு அதிகம். எக்கச்சக்கமான டென்ஷன். அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு, அதன் விளைவாக தாம்பத்யத்தில் ஈடுபட முடியாமல் போய்விட்டது. கூடவே, குழப்பம் மற்றும் சந்தேக எண்ணங்கள் தலைதூக்கி விட்டன.

அது அவனுக்கே தெரிந்து தான் வாரம் ஒரு முறை சைக்கோதெரபிக்காக சேது விடம் வருகிறான். அவர் அவனுடைய டாக்டர் மட்டுமல்ல, நெடுநாளைய குடும்ப நண்பரும்கூட!

‘ஒரு வேளை, தனது கணவனிடமிருந்து இல்லற சுகம் கிடைக்காமல்தான், ரேகா வேறு வழியைத் தேடிக் கொண்டாளோ?’ என்று ஒரு யோசனை சேதுவின் மனதுக்குள் ஓடியது.

டாக்டரின் காரைப் பார்த்ததுமே, தெருமுனையில் இருந்த காபிக் கடையில் இருந்து ரகு ஓடி வந்து வழி மறித்தான்.

‘‘காரை இங்கேயே நிறுத்திட்டு, நடந்து போயிடலாம், டாக்டர்!’’

ஒரு தர்மசங்கடமான மௌனத்தில், இருவரும் ரகுவின் வீட்டை நோக்கி நடந் தார்கள். வாசல் கேட்டின் கொக்கியை ஓசைப்படாமல் நீக்கி, பூனையைப் போல் மெதுவாக நடந்து, பின்பக்கம் சென்று, படுக்கையறை ஜன்னலை அடைந்தார்கள். லேசாகத் திறந்திருந்த ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார் சேது.

ரகு சொன்னது சரிதான்!

‘‘அது உன் மனைவி ரேகாதான்னு எப்படிச் சொல்றே?’’

‘‘என்ன டாக்டர், என் மனைவியை எனக்குத் தெரியாதா? அவ கட்டியிருக்கிற புடவை, இந்த முறை தீபாவளிக்கு நான் வாங்கிக் கொடுத்தது!’’

காதல் காட்சியின் கிளைமாக்ஸ் அரங்கேறும் முன் சேது, ரகுவை இழுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார்.

‘‘பார்த்தீங்களா டாக்டர், அவ நிம்போமேனியாக்தானே? செக்ஸ் வெறி பிடிச்ச மிருகம்தானே? நான் இப்போ என்ன செய்யட்டும் டாக்டர்? தடால்னு கதவைத் திறந்து உள்ளே போய், அந்த ரெண்டு பேரையும் வெட்டிக் கொன்னுட்டு, நானும் தற்கொலை செஞ்சுக்கட்டுமா…’’ & மேலே பேச முடியாமல் வெடித்து அழுதான் ரகு.

அவன் தோளில் தட்டிச் சமாதானப் படுத்தி, தெருமுனை காபிக் கடைக்கு அழைத்து வந்தார் சேது.

‘‘பொறுமையா இரு ரகு. எமோஷன லாகாதே! அது சரி, ரேகாகூட இருக்கிறது யாருனு தெரியுமா?’’

‘‘தெரியலையே டாக்டர்! அவளோடு ஒண்ணா வேலை பார்க்கிறவன் எவனாவதுதான் இருக்கணும். நான் அந்த ஆளைக் குறை சொல்ல மாட்டேன். இவதான் சரியில்லே. கொஞ்சம் பார்க்க ஸ்மார்ட்டான ஆம்பிளையா இருந்தா ஓவரா இழையறா. வெளியே பார்ட்டிகள்ல அழகான இளைஞர்களைப் பார்த்தா, ரொம்பவே வழியறா. நான் நிச்சயமா சொல்றேன், அவ நிம்போமேனி யாக்தான்!’’

சேது விரக்தியாகச் சிரித்தார்.

‘‘சும்மா திருப்பித் திருப்பி அதையே சொல்லாதே ரகு! ‘நிம்போமேனியா’ங்கிற வார்த்தையையே மனோ தத்துவ அகராதியிலிருந்து எடுத்துட்டாங்க, தெரியுமா உனக்கு? மஞ்சள் பத்திரிகை படிக்கிறவங்களும், ப்ளூ ஃபிலிம் பார்க்கிறவங்களும்தான் அந்த வார்த் தையை அடிக்கடி உபயோகிக்கிறாங்க. மத்தபடி, மனவியல் நிபுணர்கள் அப்படி ஒரு மன நோய் இருக்கிறதாவே நினைக்கிறதில்ல!’’

‘‘என்ன டாக்டர் சொல்றீங்க?’’

‘‘ஆமாம் ரகு, அதிகமான செக்ஸ் ஆசை உள்ள பொம்பளைங்கள ‘நிம்ப்’னு சொல்லலாம்னா, முதல்ல எது அளவான செக்ஸ் ஆசை, எது அதிக மான செக்ஸ் ஆசைனு வரையறுக்கணு மில்லையா? உண்மையில் செக்ஸ் உணர்வை அப்படி வரை யறுக்கவே முடியாதுன்னு மனவியல் சாஸ்திரம் சொல்லுது!’’

‘‘அப்போ, இங்கே நாம பார்த்த காட்சிக்கு என்ன அர்த்தம்?’’

‘‘ரகு, நிஜத்தை எதிர் நோக்கக் கத்துக்கணும். உன்னால அவளுக்குத் தாம்பத்திய சுகம் கொடுக்க முடியலை. அவளும் பாவம், எத்தனை நாளைக்குத்தான் காத்திருப்பா! ஏதோ, தன் வழியில சுகத்தைத் தேடிக்கிட்டா. அவ்வளவுதான்! ரேகா ஒரு சூழ்நிலைக் கைதி. புரிஞ்சுக்க!’’

‘‘இருந்தாலும், இது அவ எனக்குச் செய்ற துரோகம் இல்லையா டாக்டர்?’’

‘‘ரேகா செஞ்சது சரினு நான் சொல்ல வரலே! சந்தர்ப்பவசத்துல சாதாரணமா நடக்கிற தப்புதான்னு சொல்றேன். ராத்திரி, நேரடியா ரேகா கிட்ட இதப் பத்திப் பேசு. ‘உன்னை மன்னிச்சுட்டேன். நடந்தது நடந்ததா இருக்கட்டும். இனிமே, இது மாதிரி பண்ணாதே!’னு சொல்லு. அல்லது, நீயா முன் வந்து அவளுக்கு விவாகரத்து கொடு. அவளை அவ வழியில போக விடு. உனக்கு இன்னும் ஆறு மாசத்துல ட்ரீட்மென்ட் முடிஞ்சதும், நீ திரும்ப வும் தாம்பத்தியத்துல ஈடுபடலாம்கிற நிலைமை வந்ததும், நீ வேற ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்க. உனக்கு இப்ப முப்பத்து நாலு வயசுதானே ஆகுது?

டாக்டர் சேது போன பின்பு, ரகு கால் போன போக்கில் நடந்து போய், அருகில் இருந்த ஒரு பார்க் பெஞ்ச்சில் உட்கார்ந்து, நெடு நேரம் யோசித்தான். மனம் கொஞ்சம் தெளிவானது.

முதல் கட்டமாக, ரேகாவை மனதார மன்னித் தான். மனம் லேசானது. வீட்டுக்குக் கிளம்பினான்.

வீட்டில் மதுமிதாவும், அவள் கணவனும் அவனது வருகைக்காகக் காத்துக்கொண்டு இருந்தனர்.

மதுமிதா, ரேகாவின் தங்கை.

‘‘என்ன ரகு, மதுவையும் கிரியையும் விருந்துக்குக் கூப்பிட்டதை மறந்துட்டீங் களா? கிரி நாளைக்கு துபாய் கிளம்பறார். காலைல அஞ்சு மணிக்கு ஃப்ளைட்! ரெண்டு பேரும் ரொம்ப நேரமா உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்காங்க. உங்க ஆபீஸ§க்கு போன் பண்ணிப் பார்த்தேன். அப்பவே கிளம்பிட்டதா சொன்னாங்க. எங்கே போயிருந்தீங்க, ரகு?’’

வெறுப்பு வழியும் ஒரு சிரிப்பை ரேகாவின் கேள்விக்குப் பதிலாக்கி விட்டு, வந்தவர்களைச் சம்பிரதாயமாக வரவேற்றான் ரகு. ரேகா ஏற்பாடு செய்திருந்த தடபுடல் விருந்திலோ, அவள் அந்தப் புதுமணத் தம்பதியை அடித்த கிண்டலிலோ அவன் மனம் சிறிதும் ஒட்டவில்லை. அவர்கள் போன பின்பு, ரேகாவிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்பதிலேயே அவன் மனம் குறியாக இருந்தது.

மதுமிதா ரேகாவிடம் விடைபெறும்போது, ரகு வாசற்கதவுக்கு அருகில் நின்றுகொண்டு இருந்தான்.

மது கண்கள் கசிய, ரேகாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நெகிழ்ச்சியாகப் பேசினாள்… ‘‘ரொம்ப தேங்க்ஸ் அக்கா! நீ செஞ்ச உதவியை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன்!’’

ஒரு சாதாரண விருந்துக்கு எதற்காக இப்படிக் கண்ணீரும் கம்பலையுமாக அவள் நன்றி சொல்ல வேண்டும்? ரகுவுக்குப் புரியவில்லை.

அவர்கள் போனதும், ரேகாவிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான்.

‘‘அதை விடுங்க ரகு, பெரிசா ஒண்ணுமில்ல!’’

‘‘முடியாது. என்னன்னு சொல்லு!’’

‘‘ஐயே, அதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம். உங்களுக்கு எதுக்கு?’’

‘‘இல்லை. எனக்கு அது என்னன்னு இப்பவே தெரிஞ்சாகணும். நீ எதையோ என்கிட்டேர்ந்து மறைக்கப் பார்க்கிறே!’’

‘‘ஐயே, விடமாட்டீங்களே! கிரிக்கும் மதுவுக்கும் கல்யாணமாகி பதினஞ்சு நாள்தானே ஆகுது! கிரி நாளை காலைல துபாய் போறாரு. அப்புறம் ஒரு வருஷம் கழிச்சுதான் பார்க்க முடியும். இப்படிக் கல்யாணமான புதுசுலேயே அவங்க பிரியறது கொடுமை இல்லியா? அதைவிடக் கொடுமை என்னன்னா, மதுவோட மாமியார் வீட்டுல நிறைய உறவுக்காரங்க டேரா அடிச்சிருக்கிறதால, புருஷனும் பெண்டாட்டியும் தனியா இருக்கச் சந்தர்ப்பமே கிடைக்கலியாம். மது என்கிட்ட போன்ல சொல்லி அழுதா.

நான் அவங்களை நம்ம வீட்டுல வந்து இருக்கச் சொன்னேன். ‘நாங்க ரெண்டு பேரும் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலதான் ஆபீஸ் லேர்ந்து வருவோம். அதுவரைக்கும் நீங்க போய் அங்க இருந்துக்குங்க. இப்ப உடனே கிளம்பி நேரே என் ஆபீஸ§க்கு வந்தா, வீட்டுச் சாவி தர்றேன்’னு சொன்னேன். ‘வேணாம்டி! உன் ஹஸ்பெண்ட் ஏதாவது தப்பா நினைச்சுக்கப் போறார்!’னு தயங்கினா. ‘சேச்சே! என் ரகு மாதிரி ஒரு ‘ஜெம்’மை இந்த உலகத்துலயே பார்க்க முடியாது. இதைக் கேள்விப்பட்டார்னா, நல்ல காரியம் பண்ணினேனு என்னைப் பாராட்டத்தான் செய்வார்’னு சொல்லி, வற்புறுத்தி அவகிட்டே சாவியைக் கொடுத்தேன். அவங்க காலையிலேயே வீட்டுக்கு வந்துட்டாங்க. ஏழு மணிக்கு நான் வர்ற வரைக்கும் இங்கே அவங்க ராஜ்ஜியம்தான். ஏன் ரகு, உங்களுக்கு இதுல ஒண்ணும் கோபமில்லையே?’’

ரகுவுக்குப் படபடவென்று வந்தது. ‘‘அது இருக்கட்டும் ரேகா, நீ ஆபீஸ்லேர்ந்து ஸ்கூட்டிலதானே வந்தே?’’

‘‘இல்ல ரகு! கிரியும், மதுவும் என்னை ஆபீஸ்ல வந்து பார்த்தபோது, அவங்ககிட்ட ஸ்கூட்டியைக் கொடுத்து அனுப்பிட்டேன். நான் ஆட்டோவில்தான் வந்தேன்.’’

‘‘மது இங்கே வந்து உன் புடவைல எதையாவது எடுத்துக் கட்டிக்கிட்டாளா?’’

‘‘இருக்கலாம். மதுவும் கிரியும் காலைல ஏதோ கல்யாணத்துக்குப் போயிருந் தாங்க போல. மது என் ஆபீஸ§க்கு வரும்போது பட்டுப் புடவைல இருந்தா. அதனால வீட்டுக்கு வந்ததும் என் புடவை ஏதாவது எடுத்துக் கட்டிக்கிட்டு இருப்பா. ஏன் இப்படித் துருவித் துருவிக் கேக்கறீங்க? உங்களைக் கேக்காம அவளுக்கு இங்கே இடம் கொடுத்தது உங்களுக்குப் பிடிக்கலியா? தாபத்துல தவிக்கிற தம்பதிக்கு ஹெல்ப் பண்ணினா, அவங்க மனசார வாழ்த்தறதுலயே உங்க குறை சீக்கிரம் குணமாகிடும்ல? அதனால, அவங்களுக்கு ஹெல்ப் பண்ணினதுல என் சுயநலமும் கலந்திருக்கு ரகு!’’

‘‘ரேகா, ரேகா… என்னை மன்னிச்சிரு ரேகா!’’ என்றபடி தன் மார்பில் சாய்ந்து விம்மி அழுத கணவனைத் தேற்றத் தெரியாமல் நின்றிருந்தாள் ரேகா.

– ஜனவரி 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *