கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 28, 2019
பார்வையிட்டோர்: 7,364 
 

விடிஞ்சா தீபாவளி. வீடே எனக்கு அந்நியமாத்தான் தெரியுது. ஆத்தா தான் சோறூட்டணும், ஆத்தா கூடத்தான் படுத்துக்கணும், ஆத்தா தான் குளிப்பாட்டணும்னு எல்லாத்துக்கும் இந்த ஆத்தா தான். இந்த நிசப்தம் என்னைய ஏதோ செய்யுது. மனுசனை உசிரோட சிலுவையில அறையறது மாதிரி. கால்ல சக்கரம் கட்டின மாதிரி அங்கேயும் இங்கேயும் பறப்பா. யானையாம் கோழியாம் என்று கதையை ஆரம்பித்த உடனேயே கண்ணு சொருக ஆரம்பிச்சுடும் அவளுக்கு.

எல்லாப் பொண்டு, பொடுசுகளும் கீர்த்தனா இல்லையா கீர்த்தனா இல்லையாகிதுங்க நான் என்னத்த சொல்ல. அவ பிறந்ததுக்கப்புறம் தான் அவரு முகத்துல சிரிப்பையே பாத்தேன். அந்த சிட்டானுக்காகத்தான் நாங்க உசிரை கையில புடிச்சிகிட்டு இருக்கோம். வீடுங்கறது சுவரும், செங்கல்லுமா மனுசா இல்லையா? வயசுல நான் ஒண்ணும் இல்லாதப்பட்டவ இல்ல. அப்பாவுக்கு தியாகி பென்ஷன் வந்தது. மூணு அண்ணன் நான் கடைசி. பிள்ளையார் மாதிரி அப்பா, அம்மாவையே சுத்திகிட்டு திரிஞ்சா சரிப்படாதுன்னு மூத்த அண்ணனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சாங்க. அங்கேயே கல்யாணம் பண்ணி அந்த நாட்டு குடிமகனாகவும் ஆயாச்சி. வந்து அப்பா அம்மாவை பார்த்து போவார் தான் வருஷத்துக்கு ஒரு முறை.

இவரு தான் நாராயணன் பார்டருல வேலை பாக்குறாரு அரசாங்க உத்தியோகம் தான் நல்ல சம்பளம் என்று அவர்களாக முடிவெடுத்துவிட்டு சமாச்சாரத்தை என்னிடம் வந்து சொன்னார்கள். அம்மா இருந்தாலாவது உனக்குச் சம்மதமா என்ன ஏதுன்னு வாய் வார்த்தையா கேட்டிருப்பா அவதான் எங்களை அனாதையா உட்டுட்டு போயிட்டாளே. அம்மா போனப்பவே அவ கூட போயிருக்கணும் எல்லாம் விதி. தலையெழுத்துண்ணு ஒன்னு இருக்குல்ல அதை யாரால மாத்த முடியும். கழுத்த நீட்டியாச்சி பத்து நாள் கூட இருந்துட்டு ரயில் ஏறுனவர்தான் முத குழந்தை பிறந்தப்பக் கூட வந்து என்ன ஏதுன்னு எட்டிப் பாக்கலை.

அப்பவே ஆஸ்பத்திரி வாட்ச்மேன் கேட்டான் பொண்ணா பொறந்துட்டு நீ கஷ்டப்படுறது பத்தாதாம்மா ஏம்மா பொண்ணைப் பெத்தேன்னு. டவுன்ல வளந்த பொண்ணு நான் கிராமத்துல குப்பை கொட்டுற மாதிரி ஆயிடிச்சி. மாமியார் அவருக்கு சின்ன வயசிலேயே தவறிட்டா. அவளுக்கும் சேர்த்து வைச்சி மாமனார் இல்லாத அக்கிரமமும் பண்ணினார். யார்கிட்ட சொல்லி நான் அழறது. எழுதுன கடிதாசியைக் கூட படிச்சுப் பார்த்துதான் போஸ்ட் செய்வாரு. தான் பொண்ணுக்கு குழந்தை இல்லைனா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்.

கலாவுக்கு ஒரு வயசு ஆனப்ப லீவுல வந்தாரு. அப்ப எடுத்த போட்டோ தான் இங்க மாட்டியிருக்கிறது. அடுத்தது தான் இவன் பொறந்தான். பேராண்டிக்கு நான் பேரு வைக்கிறேன்னு தாத்தா புகழேந்தின்னு வைச்சாரு. அவன பிழைக்க வைச்சி கொண்டு வந்ததே எனக்குப் பெரும்பாடா போச்சி. அவரு மாத்தலாகி தமிழ்நாட்டுக்கு வந்த கொஞ்ச வருஷத்துல பேராண்டியை தொட்டு தூக்கி பாத்த சந்தோஷத்துல அந்த புண்ணியவான் போய்ச் சேந்தாரு. வீட்டு மேல பஞ்சாயத்து நடந்தப்ப ஊர்ல யாரும் இவரு பக்கம் பேசலை. அதோட கொடுத்த பணத்துக்கு வித்துட்டு நாங்க ஒதுங்கிட்டோம்.

வாய கட்டி வயித்தகட்டி என் சொந்த ஊர்ல மனை வாங்குனோம். அங்க இங்க கடன் வாங்கி வீட எழுப்பங்காட்டிலும் நாக்கு தள்ளிடிச்சி. புதுசா கட்டடம் எழுப்பினா உடையவங்களை காவு வாங்கும்னு சொல்வாங்களே அதே மாதிரி ஆகிப்போச்சி. நான் செத்து பிழைச்சி வந்தேன்னா பார்த்துக்குங்க. எல்லாம் தலையெடுக்கிற காலத்துல அவரை சென்னைக்கு தூக்கி அடிச்சாங்க. கடைசி வரைக்கும் நகரத்து வாழ்க்கையோட எங்களால ஒத்துப் போக முடியலை. அங்க அப்பன் ஆத்தா கூட இருந்து புத்திமதி சொல்லியும் புகழேந்தி எந்த வேலையிலேயும் நிலைக்க மாட்டேனுட்டான். ஜோசியக்காரனுங்க சூரிய திசை முடியனும்னு சொல்லிட்டாங்க வேறன்ன செய்யிறது.

அவரு ரிட்டயர்டு ஆனாரு. சாமான் செட்டெல்லாம் தூக்கிகிட்டு சொந்த வீட்டுக்கே குடிவந்தோம். கலாவை சென்னையில இருக்கிறப்பயே கட்டிக் கொடுத்தாச்சி. அப்பப்ப இங்க வந்து இருக்கறோமா இல்லையான்னு எட்டிப்பார்ப்பா அவ்வளோதான். அடிமை வேலை ஒத்துவர மாட்டேங்கிதுன்னு புகழேந்திக்கு கடை வைத்துக் கொடுத்தோம். புகழேந்திக்கு கல்யாணப் பேச்சு எழுந்ததும் கலா கேட்டேவிட்டாள் கடையில வர்ற வருமானத்தை வச்சி எப்படி குடும்பம் நடத்துவான்னு.

இல்லாதப்பட்டவங்க அதனால நாம கேட்கக் கூடாதுன்னு கட்டுன புடவையோடதான் சுசீலாவைக் கூட்டி வந்தோம். சுசீலா நல்லவதான் ஆனா ஒருசொல் பொறுக்க மாட்டாள். இல்லாதப்பட்டவங்க வீட்டிலேர்ந்து வந்ததுனால நம்மை இளக்காரமா நினைக்கிறாங்களோ என்ற எண்ணம் அவளுக்கு. சரின்னு நானும் உட்டுட்டேன் கோவம் இருக்கற இடத்துலதானே குணம் இருக்கும்னு. இரண்டு வருஷம் கழிச்சி சுசீலாவுக்கு தங்கியது. முருகப்பயபுள்ள தான் பேரனா பொறப்பான்னு நினைச்சிருந்தேன். கீர்த்தனா பிறந்தாள். வீட்டில ஒரு குழந்தை தவழ்ந்தா குதூகலத்துக்கு கேட்கவா வேண்டும். அள்ளி அள்ளி அவளை அணைத்துக்கொண்டேன். குழந்தையும் தெய்வமும் கொண்டாடுற இடத்துலதானே. இந்த அணையப்போற தீபத்துக்கு எண்ணை வார்க்கத்தான் கடவுள் கீர்த்தனாவை அனுப்பி வைச்சிருக்கான். கீர்த்தனான்னா அவருக்கும் உசிரு என்ன இருந்தாலும் தன்னோட வாரிசு இல்லையா? அவருக்கு உடம்பு நோவு வந்து ஆஸ்பத்திரி, ஆபரேஷன்னு அலைய வேண்டி வந்துடுச்சி. கீர்த்தனாவை பாக்கும் போது அவரு முகம் பிரகாசமடையும் பாருங்க தாத்தாவின் உலகத்தில் பேத்திக்கான இடம் பாட்டிக்கான இடத்தைவிடப் பெரியது தானே.

அவரு நடமாட முடியாம வீட்டில இருந்தப்ப ஆழந்தெரியாம காலை விட்டு கடையையும் மூடிவிட்டான் புகழேந்தி. கஷ்டகாலம் குழந்தை முகத்தை பார்த்தாவது திருந்தணும். ஒரு அவசரத்துக்கு எங்க போவான். எல்லாம் எங்க தலையிலேயே வந்து விழுந்தது. பேத்திக்கு ஒண்ணுன்னா அவரு கணக்கு பாக்க மாட்டாரு. தாத்தா செல்லமா அவ இருந்தாலும் அடிப்பதற்கும், அணைப்பதற்கும் நான் தான் வேணும் அவளுக்கு. அந்த பச்ச மண்ண எதுக்க வைச்சிகிட்டு சண்டை போட வேண்டியதா போச்சி.

நான் சராசரி மாமியார் இல்ல. அதை தொட்டா குத்தம் இத தொட்ட குத்தம்னு சொல்ல மாட்டேன். சமையல் வேலை என்னுது நீ ஒத்தாசையா இருந்தா போதும் என்பேன். என்ன இருந்தாலும் மருமகளைவிட பெத்தமவ ஒருவிதத்துல உசத்தியாதான் போயிடுறா. மருமகள எந்த மாமியார் மகமாதிரி நடத்துறா சொல்லுங்க பார்ப்போம். எதுக்கெடுத்தாலும் பாம்பா படமெடுத்து ஆடுனா நான் என்ன செய்யிறது. சொல்லிக் கொடுக்கிற அக்கம்பக்கத்துக் காரங்களுக்கு நாம நல்லபடியா வாழணுங்கிற எண்ணம் இருக்காது. வெளி தெருவுக்கு போனா நம்மளபத்தி நாக்கு மேல பல்லுபோட்டு யாரும் பேசிடக்கூடாது. அதுக்கு நாம குடும்ப விஷயம் எதையும் வெளியில பேசக்கூடாது இதுதான் என் தரப்பு.

உத்தியோகம் புருஷலட்சணம் போய் சம்பாரிச்சுட்டு வாடாண்ணா. உப்பு விக்கப் போனேன் மழை பெய்யுது உமி விக்கப்போனேன் காத்து அடிச்சிதுன்னு தான் உருப்படாததுக்கு காரணம் சொல்ல ஆரம்பிச்சிட்டான் புகழேந்தி. எவ்வளவு காலத்துக்கு நாங்க முட்டுக் கொடுத்துக்கிட்டே நிற்போம் நாங்க இருக்கிறப்பவே சொந்தக் கால்ல நிக்கப் பழகிக்க வேணாம். எல்லாத்துக்கும் நம்ம கைய எதிர்பார்த்தா எரிச்சலா வராது. குழந்தைக்கு செய்யலாம் சரி அவனுக்கும் சேர்த்து நாமளே செய்யணும்ணா எப்படி. நான் பெத்தது சிங்கமா இருந்துதுன்னா இந்த விஷயம் சந்தி சிரிச்சிருக்காது. பொண்ணு பொறந்திருக்கு நாளைக்கே சடங்கு, சம்பிரதாயம்னு எடுத்து செய்ய வேண்டி வருமேன்னு பொறுப்பு வேணாம்.

சுசீலாவுக்கு எதற்கெடுத்தாலும் எங்கையையே எதிர்பார்த்து நிக்கிறது பிடிக்கலை. எரிஞ்சி எரிஞ்சி விழறாண்ணா ஏன் விழமாட்டா. பேசாம எப்படி கேட்டதுக்கெல்லாம் பணம் கொடுக்க முடியும் அப்படி இப்படி சொல்லத்தானே செய்வோம். அதை அவ உடும்பா பிடிச்சிகிட்டா. இப்ப என்னாச்சி அந்த உருப்படாதவனால ஊரே சிரிச்சிப் போச்சு. இதுல கலா வேற எரிகிற நெருப்புல எண்ணை ஊத்துற மாதிரி சம்பந்தமில்லாமல் வார்த்தையை விட்டுவிட்டாள். தனிக்குடித்தனம் போறோமென்று வேறு வீடு பாத்து போய்விட்டார்கள்.

அவருக்கு வெளி தெருவுக்கு செல்ல முடியாது. சீவனத்துப்போய் வீட்டோட இருக்கற மனுசனுக்கு கீர்த்தனா தான் ஒரே ஆறுதல். அவ இல்லாம அவருக்கு வீட்ல இருக்க முடியலை. இதுக்கெல்லாம் நான்தான் காரணம்னு ராத்திரியெல்லாம் ஒரே புலம்பல். எனக்கு அங்கேயும் இங்கேயும் கீர்த்தனா ஓடுறது கணக்கா பிரமை, அவ உருவம் என் கண்ணுக்குள்ளயே நிக்கிறதாலேயோ என்னவோ. விசேஷத்துக்கு போயிருந்தா கூட ஆத்தா என்னோட படுக்கிறதுக்கு வந்துடு என்று போன் செய்வாள். ஏனோ தெரியலை ஒருமணி நேரத்தில் இருபது தடவையாவது வாசலை வந்து பாத்துட்டேன். எவ்வளவு அழுத்தத்தைத்தான் மனசு தாங்கும். எங்க காலம்தான் மலையேறிப் போச்சில்ல. என்னால வந்த பிரச்சனையை நானே தீர்க்கறேன்னு செருப்பை போட்டுகிட்டு புகழேந்தி வீட்டுக்கு கிளம்பிட்டேன். வாசலில் வந்து நின்று கொண்டு நான் போவதை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார். இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி இருக்கும் அவருக்குத் தெரியாதா நான் மருமக காலில் விழுந்தாவது கீர்த்தனாவோட அவளையும் கூட்டிவருவேனென்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *