விருந்தாடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 6,920 
 

முதலில் பிள்ளைகள்தான் வந்தார்கள்.

”பெரீம்மா…”

மூன்று பேருமே நீ முந்தி, நான் முந்தி என முட்டி மோதிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததும் இவளைத் தொட்டார்கள்.

”நாந்தே ஃபஸ்ட்டு…”

முதலில் தொட்டது மூத்தவள் சாந்திதான். என்றாலும் சத்தம் கொடுத்தவன், கடைசிப் பையன் கதிர்வேலு. நடுவிலவள் சரண்யா எப்போதும்போல அமைதியாக இருந்தாள். அவள், இவளைத் தொடவும் இல்லை, பக்கத்தில் மட்டும் வந்து நின்றுகொண்டாள்.

”என்னாங்கடீ…” – துணி துவைத்துக்கொண்டு இருந்த இவள், ஆச்சர்யம் பொங்க, அனைவரையும் பார்த்துச் சிரித்தாள்.

”நாந்தே ஃபஸ்ட்டு… நாந்தே ஃபஸ்ட்டு…” மறுபுறம் கத்திக்கொண்டே இவளது முதுகில் தொற்றிக்கொண்டான் கதிர்.

”லே…. பெரிம்மாவ அமுக்காதடா. வேல செஞ்சுட்டு இருக்காங்கள்ல!”- சரண்யா தம்பியைக் கண்டித்தாள்.

அப்புறமும், ”நாந்தே ஃபஸ்ட்டு” என்றான். ஏதோ ஓர் அங்கீகாரத்தை வேண்டுகிற குரலாகத் தென்பட, இவள், ‘ஆமா, தம்பிதான் ஃபஸ்ட்டு” என்றபடி கையைக் கழுவிவிட்டு அவனைத் தூக்கி மடி யில் இருத்திக்கொண்டாள்.

அக்கா, தங்கச்சி மூன்று வீட்டுக்குமே கதிர் ஒருத்தன்தான் ஆண் வாரிசு. சொல்லிவெச்சதுபோல மீதி இரண்டு பேருக்கும் மும்மூன்று பெண் பிள்ளைகள்.

சாந்தி சரசரவென வீட்டுக்குள் நுழைந்து தண்ணீர்ப் பானையை நாடினாள். சரண்யா பட்டாசாலையில் கிடந்த இரும்பு சேரில் ஏறி உட்கார்ந்துகொண்டாள். காலெல்லாம் வலித்தது.

வீட்டுக்குள் இருந்த பெரியப்பாவைப் பார்த்துத் திடுக்கிட்ட சாந்தி, தண்ணீர்ச் செம்போடு வெளியில் வந்தாள். சட்டை எல்லாம் தண்ணீர் சிந்தி இருந் தது.

”மெதுவாக் குடிடீ. பொர ஏறப்போகுது…” என்ற இவள், ”எங்கடீ, ஒங்காத்தாளைக் காணோம்?”- கேட்ட நிமிடத்தில் நிலைப்படி தாண்டி உள்ளே நுழைந்தாள் செல்லமணி.

முகமெல்லாம் வியர்த்துப்போய் இருந்தது. காற்றில் அலைந்த தலை முடிகள் வியர்வையில் ஒட்டிக்கொண்டு இருந்தன. ரொம்பவும் தகிப்பு வந்தவளைப்போல, முகத்தைச் சுளித்து வாய் வழியே மூச்சுவிட்டுக்கொண்டு நின்றாள்.

தங்கையின் அந்தக் கோலத்தைக் காண இவளுக்குச் சகிக்கவில்லை. கோயில் சிலை வடிவாக, லட்சணமாக இருந்தவள். அக்காள் தங்கையில் செல்லமணிக்கு மட்டும் அப்படி ஒரு நிறம். வைலட் கலரில் ஜாக்கெட்டும் தாவணியும் அணிந்துகொண்டு நின்றால், தெருவே திருஷ்டி சுற்றிப்போடும். இப்படி வேகவெச்சக் கத்திரிக்காயா நொந்துகெடக்காளே.

”அம்மாவுக்கு ஒரு பெஞ்ச்சை எடுத்துப் போடுடீ… உட்காரட்டும்” என்று சரண்யாவை ஓடவிட்டு, மடியில் இருந்த கதிரை உசுப்பி, ”எந்திரி கண்ணு, அம்மாவுக்கு விசிறி எடுத்துட்டு வர்றேன்” என்றவள் திடுமென யோசனை வந்தவளாக, ‘யேஞ் செல்லம்… உள் ரூமுக்குள்ள போயி காத்தாடியப் போட்டு ஒக்கார்றியாடி?” எனக் கேட்டாள்.

இதுவே போதும் என வார்த்தை பேசாமல் கை ஜாடையில் சொல்லிவிட்டு, மகள் இருந்த சேரில் அமர, இவள் விசிறி எடுத்து வந்தாள்.

உள் ரூமுக்குள் இருந்து வந்த இவளது வீட்டுக்காரர், ”வா செல்லம்… என்னா இம்புட்டு மூச்சு வாங்குது… நடந்தா வந்தே?” அல்லிநகரத்துக்கும் அன்னஞ்சிக்கும் எட்டு கிலோ மீட்டருக்குக் குறையாது.

”ஆமா பெரீப்பா. ஒரே ஃபீடா ஓடி வந்தம். நாந்தே ஃபஸ்ட்டு. இல்ல பெரீம்மா!”- கதிர்வேல் எல்லோரையும் ஒதுக்கிவிட்டுப் பேசினான்.

புருசன், பொஞ்சாதி இரண்டு பேருக்குமே குபீரென்றது. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டார்கள்.

”ஆமா கழுத. பகல் பூரா வெயிலா வேகுது. ராப்பூராம் பனியாக் கொட்டுது”- சொல்லிவிட்டு அக்காள் தந்த விசிறியால் சுத்திச் சுத்தி விசிறிக்கொண்டாள்.

”ஏன்டி… இம்புட்டுத் தொல வாட்டு வேகுற வெயில்ல புள்ளை களை இழுத்துக்கிட்டு நடந்தாடி வந்தே. பாதகத்தி. ஏதாச்சும் நேர்த்திக்கடனாடி?”

”முந்தி காலத்துலதான் காரு, பஸ்சு எதுவும் கெடையாது. நடந்து வந்தம். இப்பத்தேன் பத்து நிமிசத்துக்கு ஒரு காரு… வண்டி.”

”கிறுக்குப் புடிச்சச் சிறுக்கி. பச்ச மண்ணுகளவாச்சும் பாக்க வேணாம்? நல்லத்தங்கா கெணக்கா வந்திருக்கா பாரு!” தன்முந்தானை யால் செல்லமணியின் வியர்வை யைத் துடைத்துவிட்டாள். இப்பிடி கரிச்சட்டியாப் போய்ட் டாளே… உள்ளுக்குள் அழுகை பொங்கியது.

”சொல்லு… என்னான்னா சொல்லணுமோ சொல்லு…” என்று சிலுப்பிய செல்லமணி, தன் மடியில் இருந்து பலகாரப் பொட்டலத்தை எடுத்து அக்காளிடம் தந்து, ”புள்ளைங்களுக்குக் குடு!” சட்டமாய்ச் சொன்னாள்.

பொட்டலத்தை வாங்கிப் பிரித்த இவள், ”என்னாத்தக் கொண்ணாந்துட்ட?” என்றபடி புருசனைப் பார்த்தாள். அவர் வெளியில் கிளம்பத் தயாராக இருந்தார். செல்லமணியின் சுபாவம் தெரிந்தவர். செல்லமணிக்குத் தொண்டை எப்பவும் பெரிசு. எந்தப் பேச்சுமே அமைதியாகப் பேசவே வராது. கோபம் கோபமாய்த்தான் வார்த்தைகள் வெளியே வரும். சிரிப்பதுகூட வீடே அதிரும்படியாகத்தான் சிரிப்பாள். ‘ஆம்பளைப் புள்ள இல்லாக் குறை தீந்துச்சுடி’ என்று இவளது அம்மா சொல்லிக் கேட்டது உண்டு.

ஒரு சாலை விபத்தில் மாமனாரும் மாமியாரும் இறந்துபோக, ஆண் வாரிசு இல்லாத அந்தக் குடும்பத்தில் மருமக்கமார் ரெண்டு பேரும் இருந்துதான் செல்லமணியை உள்ளூரிலேயே ஒரு வேன் டிரைவருக்குக் கட்டிக் கொடுத்தனர்.

மாப்பிள்ளை ஒரு லாட்டரி கடைக்கு வண்டி ஓட்டினான். லாட்டரித் தொழில் இருந்தவரைக்கும் டிக்கெட் கொள்முதல் செய்துவர, சில்லறைக் கடைகளுக்குச் சப்ளை செய்ய… என தினசரி வேலை இருந்தது. இப்போதோ ஓனர் வீட்டுக்கான வண்டியாகிப் போக… கோயில், கல்யாணம் காட்சி… என உள்ளூர் அளவில் ஓடுவதால், மாசச் சம்பளம் மட்டும்தான் கிடைக்கிறது. மூணு பிள்ளைகள். செல்லமும் ஏதாச்சும் வேலைகளுக்குப் போய்விடுவாள்போல. ஆனால், நல்ல செலவாளி. புருசனைக் கண்டால் கையைக் கட்டிப்போட்டுவிட்டது போலக் கத்துவாள்.

வெளியே கிளம்பியவரிடம் ஒரு பலகாரத்தைக் கொடுத்தாள் இவள். வாங்கிக்கொள்ளாவிட்டால் அதற்கும் ஏதாச்சும் சொல்லி செல்லமணி சவுண்டுவிடலாம்.

வாங்கிக்கொண்டவர், அவள் முன்பே அதனைப் பிய்த்தார். வாசலில் வந்து நின்று கதிர்வேலனைக் கைகாட்டி அழைத்தார். ”ம்” என்றபடி வெளியில் வந்தவனிடம், பாதிப் பலகாரத்தைக் கொடுத்தார்.

பொம்பளைப் பிள்ளைகளுக்கு இவள் கொடுத்தாள்.

”வாங்காதீங்கடி…” செல்லமணி போட்ட உத்தரவு பிள்ளைகளிடம் செல்லுபடி ஆகவில்லை. ”உம் புள்ளைங்களுக்கு வாங்கிட்டு வந்தேன்…”

”அதுக சாயங்காலந்தே வரும்” என்ற இவள், ”இதுக யாராம்?” எனக் கேட்டாள்.

”ம்… இதுக. ஊராத்தி பெத்ததுக. நீ சொன்ன மாதிரி கிறுக்கச்சி பெத்ததுக. நல்லத்தங்கா பெத்த புள்ளைக”- அடுக்க ஆரம்பித்தாள்.

நல்லவேளையாக, இவளது வீட்டுக்காரர் வாசலைக் கடந்துவிட்டார். செல்லமணியிடம் இனி பதில் பேச்சு பேசக் கூடாது. பேசினால், அதில் இருந்து பிடுங்கி நடுவாள். அந்த டிரைவர் பாவம் அப்பிராணி. பலமாகப் பேச மாட்டான். எப்படித்தான் காலத்தை ஓட்டுகிறானோ. ஒருநாள்கூட அவன் இங்கே வந்து மதனியார் வீடு என்று சாப்பிட்டது கிடையாது. எல்லாத்துக்கும் ஏதாச்சும் குற்றம் கண்டுபிடித்துவைத்திருப்பாள் செல்லம். அதற்காகவே வேலை, வேலைதான். வீட்டுக்குக்கூட ராத்திரி ஒன்பது மணிக்குத்தான் வருவானாம். காலையில் ஏழு மணிக்கு எல்லாம் கிளம்பிடுவானாம்.

இன்னிக்கி எந்தப் பிரச்னையை இழுத்து வருவாள் எனத் தெரியவில்லை. பேச்சுப்போக்கில் வரும். அதுவரை யாரும் இடைமறிக்கக் கூடாது. பொறுமை முக்கியம். முதலில் தன்னைத்தானே ரொம்பவும் கேவலமாகப் பேசிக்கொள்வாள். பிறகு, ‘தான் பிறந்திருக்கவே கூடாது’ எனப் புலம்புவாள். அதில் ஆரம்பித்து, தான் வாழ்க்கைப்பட்ட கதையையும் தனக்கு வாய்த்த புருசனையும் சாடி, நாறாகக் கிழித்துக் காயப் போட்டுவிட்டு… மெள்ள பிரதான விஷயத்துக்கு வந்து நிற்பாள்.

அந்த நேரம் ஒரு கேள்விக்கான இடம் கொடுப்பாள். அவள் எதிர்பார்க்கிற அந்த மணி ஒலித்துவிட்டால், வண்டி சீராக மேலே பயணிக்கும். இல்லாவிட்டால், திரும்பவும் முதலில் இருந்தே துவங்கிவிடும்.

”அதனாலதான் ஒடம்பொறந்தவள்னு… நீகூட மதிக்க மாட்டேங்கிற…” – இதுதான் தனக்கான இடம் என்று இவளுக்குப் பிடிபட்டது. தொடங்கினாள்.

”என்னத்தடி… ஒன்னிய மதிகாம ஒடப்புல தூக்கிப் போட்டுட்டாய்ங்க. வந்தா, வாயவெச்சுட்டு சந்தோஷமா இருக்க மாட்டியாடி? எதுனாச்சும் சண்டை போட்டுத்தேன் ஆகணுமா?”

பிள்ளைகள் பலகாரத்தைத் தின்று முடித்திருந்தன. பெரியவள் சாந்தி உள்ளே போய் தண்ணீர் மொண்டு குடித்து வந்தாள்.
”ஆமாமா… நாம் பேச ஆரம்பிச்சாலே, ஒங்களுக்கெல்லாம் சண்டையாத்தான் தெரியும். ஆனா, நிய்யி கழுத்தறுக்குற மாதிரி செய்ற அல்லாமே நல்லதாத்தேன் தெரியும்” என்றவள் புறங்கையில் கண்ணைக் கசக்கினாள்.

”யே… பொறுடி! நா என்னத்தே ஒன்னியக் கழுத்தறுக்குற மாதிரி செஞ்சேன்? வாய் இருக்குன்னு மானாங்காணியாப் பேசக் கூடாது”- இவளுக்கும் கோபம் வந்துவிட்டது.

”பின்ன…” என ஆரம்பித்தவள், அழுதுவிட்டாள். ”ஒரு வாய்ச் சோத்துக்கு வந்துருவான்னுதானே, கோயிலுக்கு மாமா போறதைச் சொல்லிவிடாம இருந்தே”-தேம்பித் தேம்பி சிறுபிள்ளைபோல அழுதாள்.

”அடிப்பாவி… இதேன் பிரச்னையா” என்று தனக்குள் சொல்லிக்கொண்டவள், ஒரு வாய்ச் சோறா விஷயம்? அதுக்கு மேல எத்தனை இருக்கு? கோயிலுக்குப் போறம்னு சொல்ல ஆரம்பிச்சா, கூட்டம்கொள்ளாது. தன் வகை, வீட்டுக்காரர் வகை என்று தொட்டுக்கொண்டே போனால்… அதுவும் நடந்தது. போன மூணாம் வருஷம் சொந்தபந்தங்கள் பூராத்தையும் கூப்பிட்டு சோறாக்கிப் போட்டு, வாழ மரம், தோரணம்… ரேடியாக்கூட கட்டி இருந்தார்கள். அக்கா, தங்கச்சி மூவருமாக வந்த ஜனம் போன ஜனம் என்று மூட்டை அரிசியைச் சரித்துச் சரித்து ஆக்கிக் கொட்டி, இரு முடி சுமந்து போனார் வீட்டுக்காரர்.

இப்போது வேலையும் அவருக்குச் சரியில்லாமல் இருக்கிறது. பெரிய கொத்தனார்தான் என்றாலும் சிமென்ட், மணல் விலை எல்லாம் எக்குத்தப்பாக ஏறிப்போய் வேலை ஆரம்பித்த கட்டடங்கள் பூராவும் முடிக்க முடியாமல் திண்டாடுகின்றன. ஏதோ ஒன்றிரண்டு சில்லறை வேலை நடப்பதால் பாடு கழிகிறது. இந்த நிலையில், கோயிலுக்குப் போகிற ஒவ்வொரு வருஷமும் சொந்தங்களைக் கூப்பிட்டுச் செய்வதுஎல்லாம்…

”ஏன்டி… லூஸாடி நீ? வேற என்னமோ, ஏதோன்னு நெனச்சிட்டேன். இந்த மனுஷன் என்னா அசுமத்துக்கா கோயிலுக்குப் போறாரு? என்னிய கட்டிட்டு வந்த நாள்லேர்ந்து போய்ட்டுத்தேன் இருக்காரு. இந்த வள்ளல்ல நான் போயி எம் புருசன் கோயிலுக்குப் போறாரு… வாங்க வாங்கன்னு சொன்னா ஊர்ல சிரிச்சுர மாட்டாக?”

”ஊரவா சொல்றாக. ஒடம்பொறந்தவளுக்குக்கூடச் சொல்லக் கூடாதா? சொன்னா சோத்துக்குக் கேடுன்னு நெனச்சுட்ட…”

செல்லமணி மேல் கோபம் கோபமாக வந்தது. ‘சோறு சோறுன்னுதான பேசுறா. சோறு என்னா அம்புட்டுப் பெருசா. கூப்பிட்டா சும்மா வருவாளா. வேட்டி சட்டை, கையிலே மொய்ப் பணம்… இதெல்லாம் தெரியாதா அவளுக்கு? சிரமப்படுகிறவளை நாமளும் கூப்பிட்டுச் சங்கடப்படுத்த வேணாம்னுவிட்டா… புரிஞ்சுக்க மாட்டாளா? இதெல்லாம் அவளிடம் சொல்ல முடியுமா?’

”ஒங்கிட்டப் பேசுனா எனக்கு தொண்டத் தண்ணிதான் வத்திப்போகும்” என்றபடி உள் ரூமுக்குள் போய் தண்ணீர் குடிக்கப் போனாள் இவள். துணி துவைக்கும் வேலை பாதியில்கிடக்கிறது.

உள்ளே பெரியவள் சாந்தி அப்பவும் தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தாள். அவளைப் பார்த்ததும் இவளுக்குள் ஏதோ அரூபமாக வயிற்றுக்குள் குதித்தது.

”ஏய் என்னாடி… அப்பாத புடிச்சி தண்ணியத் தண்ணியக் குடிச்சுக்கிட்டுஇருக்க?”- பரிதவிப்போடு கேட்டாள் இவள்.

”பசிக்குது பெரீம்மா…”

இவளை மேல் நோக்கிப் பார்த்தபடி சாந்தி சொன்னதும் இவளுக்கு உலகமே தலைகீழாகச் சுற்றியது.

”என்னாடி… சாப்புடாமயா வந்தீங்க?” – கிசுகிசுப்பான குரலில் கேட்டாள் இவள்.

”அம்மாதேன் பெரீம்மா வீட்டுக்கு விருந்தாடிப் போறம்ல… அங்கனப் போயிச் சாப்புட்டுக்கலாம்னு சொல்லிச்சி”- பசியின் அவஸ்தை வார்த்தைகளில் தெரிந்தது.

”அடிப் பாதகத்தி மக்கா… எப்ப சாப்புட்டீக?” என்றாள்.

தயங்கிய சாந்தி, ”நேத்திக்கி…” என்றாள்.

அதற்கு மேல் இவளால் தாளமுடியவில்லை. சாந்தியை இழுத்து இறுகக் கட்டிக்கொண்டாள். கண்கள் கலங்கி நெஞ்சுக் குழி அடைத்தது!

– மே 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *