வினைப் பிரதி…..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 5,255 
 

மகன் செல்வம் வீட்டை விட்டு வேகமாக வெளியேற… இதயத்தை எடுத்து மிதித்த வலியில் சுருண்டு அமர்ந்தார் தணிகாசலம். ‘என்ன கேள்வி ! என்ன வலி !’ நினைக்க நினைக்க….. முகமெங்கும் முத்து முத்தாக வியர்வை.

சிவகாமி கணவர் வலி உணர்ந்து அருகில் வந்தாள்.

”நம்ம புள்ளதானே! பேசினாப் பேசிட்டுப் போறான். மன்னிச்சிடுங்க.” சொல்லி பக்கத்தில் அமர்ந்தாள்.

”இ….இல்ல சிவகாமி. அவன்…” அவருக்கு அதற்கு மேல் பேசமுடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க….மனைவி மடியில் தலை வைத்து அப்படியே சோபாவில் சுருண்டு படுத்தார். சிவகாமி அவரை ஆதரவாக அணைத்து தட்டினாள்.

எதிர் சுவரில் இருந்த புகைப்படத்தில் மாமனாரோடு இருந்த மாமியார் இவளைப் பார்த்து சிரித்தாள்.

தணிகாசலம் குடும்பம் பெரிய குடும்பம். ஒரு அக்காள், அடுத்து இவர். அப்புறம் தொடர்ச்சியாய் நான்கு தங்கைள். கடைசியில் இரண்டு தம்பிகள். அம்மா, அப்பா என்று குடும்பக் கட்டுப்பாட்டுக்கு முன்னுள்ள காலம்.

சாப்பாட்டுக்குக் கவலை இல்லை. கிராமத்தில் மிராசு. வீட்டில் விவசாயம். தணிகாசலம் பதினோராம் வகுப்பைத் தாண்டும் போதே அக்காவிற்குத் திருமணம். பட்டப்படிப்பு முடிந்து இவர் பக்கத்து நகரிலுள்ள தாலுகா அலுவலகத்தில் அரசாங்க வேலைக்குச் சென்றபோது தங்கைகளெல்லாம் பத்தாம் வகுப்பிற்குக் கீழ்.

தணிகாசலத்திற்குக் காலா காலத்தில் திருமணம். உடன் செல்வம், சீமான் என்று இரண்டு குழந்தைகள். இவர்கள் ஒன்றாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு செல்லும்போது….இரண்டு தங்கைகளுக்கு இருந்த சொத்துக்களை விற்று திருமணம். அடுத்த திருமணத்திற்குப் பேச்செடுத்த போதுதான்…. சிவகாமி சுதாரித்தாள்.

”என்னங்க..!” கணவனைத் தனியே அழைத்துச் சென்றாள்.

”என்ன ? ” இவரும் அவள் பின் இவன் கொல்லைக்குச் சென்றார்.

”நான் இந்த வீட்டுக்கு வந்து பத்து வருசமாச்சு. நமக்குன்னு என்ன சேர்த்து வைச்சிருக்கிங்க ?” கேட்டாள்.

தணிகாசலத்திற்குப் புரியவில்லை.

”ஒன்னும் கெடையாது.! உங்க தங்கச்சி திருமணத்துக்காக உங்க சேமிப்பு, சம்பளம், இருந்த சொத்து பத்தும் காலி. இருக்கிறது பெருமையாய் பிசாத்து இந்த இரண்டு கட்டு ஒட்டு வீடு. இதுவும் உங்களுக்கு மொத்தமா சொந்தம் கெடையாது. பின்னால ரெண்டு தம்பிகள் இருக்காங்க. நாம எல்லாரையும் உழைச்சு கரையேத்தினதுக்குக் கடைசியாய் சன்மானம்….இந்த வீட்டுல மூனுத்துல ஒரு பாகம். பிச்சை.! அதையும் உங்க அம்மா – அப்பா சாவுக்கு செலவழிச்சா சரியாய்ப் போச்சு. நாம ஓட்டாண்டி. நாம இப்பவே மூட்டையைக் கட்டி தனிக்குடித்தனம் போறதுதான் புத்திசாலித்தனம். போனாத்தான் நம்ம புள்ளைங்களையும் நல்ல படிப்பு படிக்க வைச்சு கரையேத்தலாம். பிற்காலத்துக்கு நமக்கும் ஏதாவது பணம் காசு சேர்க்கலாம். கௌம்புங்க.” சொன்னாள்.

யோசித்துப் பார்த்த தணிகாசலத்திற்கு மனைவி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை புரிந்தது. படபடவென்று அடுத்து ஆக வேண்டிய காரியங்கள் பார்த்தார்.

இரண்டு நாட்களில் ஊஞ்சலில் அமர்ந்திருந்த அப்பாவிடம் சென்றார். அம்மா சமையலிலும் சிவகாமி அறையிலும் இருந்தார்கள்.

”அ…அப்பா நான் தனிக்குடித்தனம் போறேன்.” மெல்ல சொன்னார்.

”ஏன் ??” அவர் துணுக்குற்றார்.

”பசங்க படிப்புக்கும் நான் அலுவலகம் போய் வரவும் கஷ்டமா இருக்கு.”

”இத்தினி வருச காலமா இங்கிருந்துதானே போய் வர்றே ?”

”இப்போ முடியiலை. புள்ளைங்க படிப்பு, டியூசன் எல்லாத்துக்கும் வசதி இல்லே.”

”வந்து…. ” அவர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். ”என்னங்க! ” சிவகாமி மாமியார் இருந்த இடத்திலிருந்து கணவருக்குக் குரல் கொடுத்தாள்.

”என்ன ?”

”அவன் போகட்டும்.”

”விசாலாட்சி !!”

”புருசன் பொஞ்சாதி பேசினதைக் கேட்டேன். அவுங்க தனிக்குடித்தனம் போக முடிவாச்சு. நீங்க எது சொல்லி தடுத்தும் பலனில்லே.” கணவர் அருகில் வந்தாள்.

”இல்லே… விசா! இந்த பொட்டப்புள்ளைகளைக் கரையேத்தினபிறகு போனா நமக்கு உதவியாய் இருக்குமோன்னு யோசிச்சேன்.” அவர் தன் மனதிலுள்ளதைக் கொட்டினார்.

”அவனை நம்பியா பெத்தீங்க ?”

”விசாலாட்சி ?!!” அவள் இப்படி சொல்வது அவருக்கே அதிர்ச்சியாய் இருந்தது.

”பெத்த நமக்கு புள்ளைங்களைக் காப்பாத்தத் தெரியும். அப்படியே தெரியலைன்னாலும் அவுங்க அவுங்க விதி. இவன் இப்போ வெளியே போனாத்தான் புள்ளைங்க படிப்பு, தனக்குப் பின்னால நாலு காசு சேர்க்க முடியும். தலைப் புள்ளைத்தான் தாங்குங்குறது என்ன கட்டாயம்.? நாம பெத்தது எங்கேயோ எப்படியோ நல்லா இருந்தா சரிதான்.” இவர்கள் பேசியதைக் கேட்ட விளைவு….. ரொம்ப தெளிவாகச் சொன்னாள்.

சிவகாமிக்கு மாமியார் இப்படி பேசியது கொஞ்சம்கூட வருத்தத்தை ஏற்படுத்தவில்லை.

மாறாக கிழவி தங்களது பேச்சைக் காது கொடுத்துக் கேட்ட கடுப்பு, வருத்தத்தில் சொல்கிறது. ரோசம் நமக்கு சாதகம்! என்ற நினைப்பில் மௌனமாய் இருந்தாள்.
அடுத்து மாமனார் பேசாமலிருக்க….

தணிகாசலம் தயாராய்ப் பார்த்து வைத்திருந்த வாடகை வீட்டில் குடியேறினார்கள். தனிக்குடித்தனம் வந்த மகிழ்வில் ஆசைக்கு ஒன்றுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பெற்றார்கள். தனிக்குடித்தனம் வந்த விநாடியிலிருந்தே தணிகாசலம் பிறந்த வீடு மறந்தார். குடும்ப விரிவு, பொறுப்புகள் அதிகமாக சுத்தமாக துறந்தார். தம்பி, தங்கைகள் திருமணத்திற்குக்கூட வேற்றுக்குடும்ப வாசியாய்ப் போய் மொய் எழுதி நிறுத்திக் கொண்டார்.

இதோ…. இப்போது இவர் தலைமகன் செல்வம் எம்.பி.ஏ முடித்து சென்னையில் நல்ல கம்பெனியில் வேலை. அதோடு மட்டுமில்லாமல்…..தன்னோடு வேலை பார்க்கும் அழகான பெண்ணைப் பார்த்து காதல், திருமணம், குடித்தனம். கணவன், மனைவி நல்ல சம்பளம். மருந்துக்கும் பைசா அனுப்பவில்லை.

இங்கே தணிகாசலத்திற்கு….. பையன் திருமணத்தால் கையிலிருந்த கொஞ்ச நஞ்ச கையிருப்பும் காலி. அடுத்தவன் எம்.பி.ஏ முடிக்க வேண்டும். பெண் பிள்ளைகள் படிப்பு, திருமணம் முடிக்க வேண்டும். இவர் அலுவலகத்திலிருந்து வேறு ஓய்வு. கஷ்டம்.

வேறு வேலையாய் வீட்டிற்கு வந்த மகனிடம், ”பணம் கொடுப்பா?” என்று கேட்ட தண்டம்……

”அப்பா! நான் அங்கே அம்பது லட்சத்துக்கு அடுக்கு மாடி குடியிருப்புல ஒரு வீடு விலை பேசி இருக்கேன். மன்னிக்கனும் எதிர்பார்க்காதீங்க..” செல்வம் சொன்னான்.

தணிகாசலம் தலையில் இடி. ”என்னப்பா….! தாய்க்குத் தலைப்பிள்ளை, குடும்பத்துக்கு மூத்தவன் எல்லாம் இருந்து முடிப்பேன்னு நெனைச்சா…. இப்படி காலை வார்றீயே…” கேட்டார்.
”என்னப்பா ! என்னை நம்பியா எல்லாரையும் பெத்தீங்க ? என்னைப் பெத்ததுக்குக் கடமையாய்க் கடனாய்ப் படிக்க வைச்சீங்க. அதுக்காக பெத்த புள்ளைக்கிட்ட பிரதிபலன், நன்றி விசுவாசம் எதிர்பார்க்குறது எவ்வளவு கேவலம் !?” சாட்டையடி அடித்துப் போனான்.

வலிக்காமல் என்ன செய்யும் ?

இப்போது புகைப்படத்திலிருந்த விசாலாட்சி சிவகாமியைப் பார்த்து சிரிக்காமல் என்ன செய்வாள்.?

அவளுக்கும் வலித்தது.

”பெத்தப் புள்ள சோறு போடலைன்னு புகார் கொடுத்தால் பையன் கம்பி எண்ணனும் என்கிற சட்டம் பெத்தவங்களுக்குச் சாதகமா இருக்கிற இந்தக் காலத்துல பையன் என்னப் பேச்சு பேச்சிட்டுப் போறான் பார்த்தியா ?” தணிகாசலம் வருத்தத்துடன் மனைவியைப் பார்த்தார்.

”விடுங்க. இந்த எதிர்வினை இன்னும் தொடராமல் இவனோடு முடியனும்ன்னு வேண்டுவோம் ! அதுதான் நாம செய்ததுக்குப் பிரதி பலன்.” என்று ஆறுதலாக கணவனைத் தட்டி பெருமூச்சு விட்டு தன் மனச்சுமையை இறக்கினாள் சிவகாமி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *