கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 21,207 
 

ஏற்காடு ஏரி! பனி காலமானதால் குளிரில் கொஞ்சம் அதிகமாகவே சிலிர்த்துக் கொண்டது. சீசனாக இல்லாத போதும் தமிழைத் தவிர அவ்வப்போது தெலுங்கும் இந்தியும் ஆங்கிலமும் காதில் விழுந்தது. ஜனார்த்தனன் கழுத்தை சுற்றியிருந்த ம·ப்ளரை இன்னும் இழுத்து விட்டுக் கொண்டார். கம்பளி குல்லாயைத் தடவிக் கொண்டார்.

”கல்யாணம் ஆன உடனேயே தேன்நிலவுக்கு ராஜியோடு இங்கே வந்ததுதான். அப்போதும் இதே மாசம் தான். இதே குளிர்தான். ஐம்பது வருஷங்களுக்கு மேல் ஆகிறது என்றால் நம்பவே முடியவில்லையே…….”

ஜனார்த்தனம் பழைய நினைவுகளை அசை போட்டார். இருபது வயது இளம் மனைவி குளிரால் வெடவெடவென்று நடுங்கும்போது அவர் அவளை இழுத்து அணைத்துக் கொண்டார். அவள் வெட்கத்தில் சிணுங்கினாள். ”வேணும்னுட்டு தானே இந்த மாதிரி குளிர் இடத்துக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கீங்க…. சே… ரொம்ப பொல்லாதவர்ப்பா நீங்க….” என்றாளே தவிர, அவளும் இன்னும் அவரை நெருக்கி கொண்டாள்.

”ம்….. ராஜி! என்னை இப்படி தனியா விட்டு விட்டுப் போக உனக்கு எப்படியடி மனசு வந்தது? ஐ மிஸ் யூ ஸோமச்… இன்னும் எனக்கு இங்கே எத்தனை நாள் வாழ்க்கையோ? அந்த பக்கத்தில் எனக்காக காத்திருக்கிறாயா?

ஜனார்த்தனன் கண்ணை மறைத்த நீர்திவலைகளைத் துடைத்துவிட்டுக் கொண்டார். கடைசி முறையாக ராஜியின் நினைவாக போட்டிங் போகலாம் என்று வரிசையில் நின்றிருந்தவர் தோளை யாரோ தொட்டார்கள். அவர் திரும்பி பார்த்தார்.

அப்படி தோள் தொட்டவர் ஒரு வெள்ளைக்காரர். அந்த குளிரிலும் பர்ம்யூடா ஷாட்ஸ¤ம், காட்டன் டீ ஷர்ட்டும் அணிந்திருந்தார். அவருக்கு ஜனார்த்தனன் மாதிரியே வயது எழுபதுகளில் தான் இருக்கும்.

தலை தொப்பியை சரி செய்துக் கொண்டு ”ஹாய் ….. ஐயாம் ஏரன். சியாடடில், அமெரிக்காவிலிருந்து வந்திருக்கேன். நீங்க மட்டும் தனியா வந்திருப்பது போல் தெரிகிறதே?” என்று கையை நீட்டினார்.

ஜனார்த்தனம் அவர் கையைப் பிடித்துக் குலுக்கி ”ஆமாம். நான் ஜனார்த்தனன். சென்னையிலிருந்து வந்திருக்கிறேன்” என்றார்.

”நாம ரெண்டு பேருமா போட்டிங் ஷேர் பண்ணிக்கலாமா? நானும் தனியாள் தான்….”

ஜனார்த்தனன் யோசித்தார். ஏன் கூடாது – ”ஓகே…. ஆனா நான் தான் டிக்கெட் எடுப்பேன்….”

இருவருமாக சிறிது நேரத்தில் தாங்களே ஓட்டிக் கொண்டு செல்லும் படகில் ஏறிக் கொண்டனர். ஏரன் ஜனார்த்தனன் கையிலிருந்து துடுப்புகளை பிடிவாதமாக வாங்கி வலிக்க தொடங்கினார். படகு மெல்ல நகர ஆரம்பிக்க காற்று சுகமான குளிரை சுமந்துக் கொண்டு நரம்புகளைத் தொட்டது.

”இதற்கு முன் இந்தியா வந்திருக்கிறீர்களா?” ஜனார்த்தனன் கேட்டார்.

”இல்லை. இதுதான் முதல்முறை. என்னுயை மனைவி ஜூலியாவுக்கு இந்தியா ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவள் சமீபத்தில் இறந்து போனாள். தான் எரிக்கப்பட்டு சாம்பலை பனாரஸில் கங்கையில்தான் கரைக்க வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறாள். அதற்காக இந்தியா வந்தேன். அவளுடைய டயரியில் இந்த ஏரியைப் பற்றி எழுதியிருக்கிறாள். அதனால் இங்கேயும் வரவேண்டும் என்று தோன்றியது.”

”ஐ அம் சாரி…. உங்கள் மனைவியை இழந்து தனியாகத் தான் இருக்கிறீர்களா?”

”ஆமாம். ஆனால் நீங்கள் நினைப்பது போல் ஜூலியாவின் மறைவினால் நான் தனியாக இருக்கவில்லை. அவளை விவகாரத்து பண்ணி விட்டு அதற்குப் பிறகு நான்குமுறை கல்யாணம் பண்ணிக் கொண்டுவிட்டேன். என் மேல் குற்றமா அல்லது அவர்கள் தான் காரணமாக என்று தெரியாது. அவர்கள் ஐந்து பேருமே என்னிடம் விவகாரத்து வாங்கிக் கொண்டு விட்டார்கள். உங்களுக்கு எத்தனை மனைவிகள்?”

ஜனார்த்தனன் சிரித்தார்.

‘எனக்கு ஒரே ஒரு மனைவி தான். ஐம்பத்தி மூன்று வருடங்கள் என்னுடன் ஒற்றுமையாக குடித்தனம் பண்ணினாள். போன வருடம் தான் இறந்து போனாள்….”

”ஐ அம் சாரி…. உங்களுக்கு எத்தனை பிள்ளைகள், பெண்கள்? க்ராண்ட் சில்ரன் உண்டா?”

”எங்களுக்கு ஒரு பெண். ஒரே ஒரு பிள்ளை மட்டும் தான். பெண் திருமணமாகி ஒரு பையனுடன் விசாகப்பட்டிணத்தில் இருக்கிறாள். அவளுடைய கணவன் அங்கே ஸ்டீல் ப்ளான்டில் வேலை பார்க்கிறான். என் பையனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு பேரக் குழந்தைகள். அவர்கள் கூட அமெரிக்காவில் தான் இருக்கிறார்கள். உங்களுக்கு?”

ஏரன் மஞ்சள் பற்கள் தெரிய சிரித்தார். ”என்னுடைய ஒவ்வொரு மனைவிக்கும் என்னால் குறைந்தது இரண்டு குழந்தைகள். மற்ற கணவன்மார்களுடன் வேறு சில. நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்… எங்கள் திருமணங்களில் உன் குழந்தைகள், என் குழந்தைகள், நம் குழந்தைகள் என்பது சர்வ சாதாரணம். எனக்கு பதினெட்டு பேரப் பிள்ளைகள். ஏழு பேத்திகள்…”.

”அம்மாடியோவ்…. அது சரிதான். நீங்கள் நானும் ரொம்பவே வித்தியாசமான பின்னணியில் வந்தவர்கள் தான். நான் காலேஜில் ப்ரொ·பஸராக இருந்தேன். சம்பாதித்ததெல்லாம் என் பெண்ணை நிறைய வரதட்சிணை கொடுத்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கவும், என் பையனை என்ஜினியரிங் படிக்க வைக்கவுமே சரியாக போய்விட்டது…”

”ஏன்? உங்கள் மனைவியும் வேலைக்குப் போகவில்லையா?”

”யார்? என் ராஜியா? அவள் என்னையே நிமர்ந்து பார்த்து பேசமாட்டாள். அவளாவது? வெளியே போய் நாலு பேருக்கு முன்னாடி வேலை பார்ப்பதாவது?”

”எனக்கு ரொம் ஆச்சரியமாக இருக்கிறது மிஸ்டர் ஜனார்த்தனன். நாம் இருவரும் ஒரே ப்ளானட்டில் தானே இருக்கிறோம்?”

”ஏன் கேட்கிறீர்கள்?” ஜனார்த்தனன் நெற்றி புருவங்களை சுருக்கிக் கொண்டு விட்டார்.

”இல்லை…. நம் இருவரும் பனிரெண்டாயிரம் மைல்கள் தான் தள்ளி வாழ்கிறோம். உலகம் சுருங்கிக் கொண்டு வருகிறது என்கிறார்கள். ஆனால் நமக்குள் தான் எத்தனை வித்தியாசங்கள்? என்னுடைய குழந்தைகளுக்கு நான் எதுவுமே செலவழிக்க தேவையிருக்கவில்லை. பெண்கள் கல்லூரியோ பள்ளிபடிப்போ முடிந்த கையோடு வேலைக்கும் போக ஆரம்பித்து விடுவார்கள். தாங்களாகவே வேலைக்கும் போக ஆரமபித்து விடுவார்கள். தாங்களாகவே துணையைத் தேடிக் கொண்டார்கள். தங்கள் கல்யாணத்தைத் தாங்களே செலவழித்து ஜாம் ஜாமென்று பண்ணிக் கொண்டார்கள். என்னைத் திருமணத்திற்கு அழைப்பார்கள். அவ்வளவுதான். பிள்ளைகளோ, தாங்களே ஸ்காலர்ஷிப்பில் ஸ்டேட் காலேஜ்களில் படித்து வேலை தேடிக் கொண்டு பெண்ணையும் தேடிக் கொண்டு கல்யாணம் செய்துக் கொண்டார்கள்.”

”அப்போ நீங்கள் சம்பாதித்ததை என்ன செய்தீர்கள்?”

”நான் சம்பாதித்ததில் பாதிக்கு மேல் என்னை விவகாரத்து செய்த மனைவிகள் ஜீவனாம்சம் என்ற பெயரில் எடுத்துக் கொண்டார்கள். நான் ஒரு பெயிண்டர். சம்பாதிப்பதையெல்லாம் சேமித்து வைத்துக் கொள்வேன். வருடாவருடம் ஒரு மாதம் லீவு எடுத்துக் கொண்டு பல ஊர்களுக்கும், பல நாடுகளுக்கும் சென்று அங்கேயுள்ள ஓவியங்களைப் பார்த்து மகிழ்வேன். வீட்டில் இருக்கும் போது வாரம் இரண்டு நாட்கள் வெளியே போய் பல தினுசான ரெஸ்டாரெண்டுகளில் சாப்பிடுவேன். ஒரு நாள் இத்தாலியன், ஒரு நாள் தாய், ஒரு நாள் இந்தியன்…..”

”ராஜி உயிரோடு இருந்தவரை நான் ஓட்டலில் சாப்பிட்டதேயில்லை. அவள் விடியற்காலை சாப்பிட்டதேயில்லை. அவள் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்துவிடுவாள். அவள் போடுகிற காபி மாதிரி நீங்கள் எந்த ரெஸ்டாரண்டிலும் சாப்பிட்டிருக்க முடியாது. நான் எழுந்துவிட்டது அவளுக்கு எப்படித்தான் தெரியுமோ? நான் மாடி இறங்கி வரும்போது அவள் கையில் காபியுடன் நின்றிருப்பாள். முகமெல்லாம் சிரிப்புடன் என் கையில் டம்ளரை வைப்பாள். அவள் எழுந்திருப்பதற்கு முன் ஒரு நாளாவது நான் எழுந்து அவளுக்கு என் கையால் காபி போட்டுக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ஒருநாள் கூட அப்படி நடந்ததில்லை….”

ஜனார்த்தனன் கண்களில் பனித்த நீரை துடைத்துக் கொள்ளக்கூட முயற்சிக்கவில்லை.

ஏரன் பேசினார். ”என்னுடைய எந்த பெண்டாட்டியும் எனக்கு எந்த பணிவிடையும் செய்ததேயில்லை. நானே தான் காலையில் எழுந்தவுடன் டீ போட்டுக் கொள்வேன். சமையலிலும் எப்போதும் பக்கத்தில் இருந்து முக்கால்வாசி பார்த்துக் கொள்வேன். காய்கறிகளை அழகாக நறுக்குவதில் நான் எக்ஸ்பர்ட் தெரியுமா? அத்தோடு என்னுடைய மூன்றாவது பெண்டாட்டிக்கு சமையலறை என்றாலே ஒரு வெறுப்பு, அவெர்ஷன். அதனால் அவளுடன் குடித்தனம் பண்ண மூன்று வருடங்களும் தினம் நான்தான் மூன்று வேளையும் சமைப்பேன்…. அவள் சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட மட்டும் செய்வாள்.”

”நாம் இருவரும் ஆல்மோஸ்ட் ஒரே வயசுதான். ஆனால், நம் இருவருடைய வாழ்க்கை முறையும் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்று நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. இல்லையா?”

”ஆமாம்….. நம் வாழ்க்கை முறையில் எந்த ஒற்றுமையும் இருப்பதாக தெரியவில்லை. உங்கள் மகன் அமெரிக்காவில் இருக்கிறார் என்கிறீர்களே, அங்கே வந்திருக்கிறீர்களா?”

”மொத்தமாக இரண்டு முறை வந்திருக்கிறேன். கரெக்ஷன்….. வந்திருக்கிறோம். என் மனைவியும் நானும்…..”

”உங்களுக்கு அமெரிக்கா பிடித்ததா?”

ஜனார்த்தனன் இதற்கு என்ன பதில் சொல்வது என்பது போல் யோசித்தார். ஏரனிடம் அமெரிக்கா பிடிக்கவேயில்லை என்று சொன்னால் அவருடைய மனம் வருத்தப்படலாம். என்னிடத்தில் யாராவது உங்கள் இந்தியா எனக்குப் பிடிக்கவேயில்லை என்று சொன்னால் நான் எவ்வளவு வருத்தப்படுவேன்?” என்று நினைத்துப் பார்த்தார்.

”என் பிள்ளை இருப்பது சான்·ப்ரான்ஸிஸ்கோவிற்கும் லாஸ்ஏஞ்சல்ஸ¥க்கும் இடையே இருக்கிற ஒரு குக்கிராமத்தில். அங்கே கார் ஓட்ட தெரிந்தால் மட்டுமே வெளியே போக முடியும். எனக்கு அது தெரியாது. என் மருமகளும் வெளியே வேலை பார்க்கிறவள். அதனால் என் மனைவியும் நானும் கொட்டு கொட்டு என்று வாரம் முழுவதும் வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்திருப்போம். சனி, ஞாயிறு மட்டும் தான் என் பிள்ளை எங்களை எங்கேயாவது கூப்பிட்டுப் போவான். அதுவும் மனசிருந்தால்….”

ஏரன் சட்டென்று ஆச்சரியமாக கேட்டார்.

”யூ மீன்… உங்களக்கு கார் ஓட்ட தெரியாதா? நான் பதினாறு வயதான அன்றே போய் லைசன்ஸ் வாங்கிவிட்டேன். அதுவும் அந்த இளம் வயதில் ஹைஸ்கூலில், கூட படிக்கும் அழகான பெண்களைக் கவர வேண்டுமானால் கார் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் அப்பாவிடமிருந்து கடன் வாங்கியாவது நல்ல கார் வைத்திருக்க வேண்டும். அப்போது தான், சனிக்கிழமை மாலைகளில் தனியாக வீட்டில் உட்காரமல் தியேட்டருக்கு போய் மேக் அவுட் பண்ணலாம்…..”

”மேக் அவுட் என்றால்?” ஜனார்த்தனம் கேட்டார்.

ஏரன் வாய்விட்டு ஓவென்று சிரித்தார்.

”நிஜமாகவே உங்களுக்குத் தெரியாதா? ஒரு பெண்ணுடன் மேக் அவுட் பண்ணுவதன் டீன் ஏஜ் பிள்ளைகளுடைய தலையாய காரியம்…. அதாவது உதடுகளோடு உதடு பொருத்தி நிமிட கணக்கில் முத்தமிடுவது, அதற்கும் மேலே கூட சில சமயம் போய்விடுவோம். அப்படி போகாவிட்டாலும் போனதாக மறுநாள் பள்ளிக்கூடத்தில் பீற்றிக் கொள்ள வேண்டியது….”

”உங்கள் பெயர் கெட்டுப் போய்விடாதா?”

”கெட்டுப் போவதா? ஸ்கோர் பண்ணினால் தான் ஹீரோவாக மற்ற மாணவர்களுக்கு நடுவில் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு ”என்னைப்பார்… நான் ரொம்ப மாச்சோ ஆண்பிள்ள….” என்று பெயர் வாங்கலாம். மற்ற பெண்களும் அப்போது தான் துரத்தி பிடித்து டேட் பண்ண ஆசைப்படுவார்கள்”.

ஜனார்த்தனம் பெருமூச்சு விட்டார். ”அப்பாடியோ? அந்த வயதில் நான் ஏதாவது பெண்ணை ஓரக்கண்ணால் பார்ப்பது கூட யாருக்கும் தெரியாமல் தான் செய்ய வேண்டும் என் அம்மா, அப்பாவுக்கு நான் ஏதாவது பெண் பின்னால் போனேன் அல்லது பேசினேன் என்று தெரிந்தால் போதும்! அப்புறம் அப்பா நேரிடையாக ஏதும் பேச மாட்டார். அவருடைய பெல்ட்டுதான் பேசும்….”

”அப்புறம் எப்படி உங்களுக்கு ஏற்ற துணையைத் தேடிக் கொள்வீர்கள்?”

ஜனார்த்தனன் சிரித்துக் கொண்டே சொன்னார். ”என் துணையை நானே தேடிக் கொள்வதா? அம்மா அப்பா பார்த்து வைத்த பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்பது எங்கள் புத்தகங்களில் எழுதாத சாஸ்திரம். அட்லீஸ்ட் எங்கள் காலத்தில்.”

”யூ மீன் …. உங்கள் மனைவியை நீங்களாக தேடிக் கொள்ளவில்லையா? ஏரன் ஆச்சரியமாக கேட்டார்.
”நானே தேடிக் கொள்ளாதது மட்டும் இல்லை. கல்யாணத்திற்கு முன் அவள் வீட்டுக்கு என் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள் அத்தை, பாட்டி, தாத்தா என்று ஒரு பட்டாளமே போனோம். அவள் – அது தான் என் வருங்கால மனைவி ராஜி – ஒரே ஒரு நிமிடம் வெளியே வந்தாள். எங்கள் எல்லோருக்கும் பொதுவாக நமஸ்காரம் பண்ணினாள். உள்ளே போய் விட்டாள். அவளை நான் அப்போது பார்த்தது ஒரு நிமிடத்திற்கு குறைவுதான். அந்த அளவு கூட அவள் என்னைப் பார்க்கவில்லை என்று பிற்பாடு ராஜி என்னிடம் கூறினாள்…”

”அடடா….. இது எவ்வளவு புதுமையாக இருக்கிறது தெரியுமா? நான் பதின்மூன்று வயதிலிருந்தே டேடிங் பண்ணினேன். என் முதல் மனைவி ஜூலியாவை கல்லூரியில் சந்தித்தேன். அதற்குப் பிறகு அவளோடு நான்கு வருடங்கள் வாழ்ந்தேன்.”

”கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலா?”

”ஆமாம். எங்கள் இருவருக்குமே கல்யாணம் என்ற வார்த்தையே பயமாக இருந்தது. யூ ஸீ…… எங்கள் பெற்றோருமே இரண்டு மூன்று முறை டிவோர்ஸ் பண்ணியவர்கள். அதனால் முதலில் சேர்ந்து வாழ்வது, ஒருவருக்கொருவர் பிடித்திருந்தால் கல்யாணம் பண்ணிக் கொள்வது என்று பேசிக் கொண்டோம்”.

”பிடிச்சிருந்ததா?”

”அப்கோர்ஸ் நாங்கள் திருமணம் என்ற பந்தம் இல்லாமல் வாழ்ந்தபோது எங்களுக்குள் சண்டைகளே வரவில்லை. ஏனென்றால் இருவருமே சுதந்திரப் பறவைகளாக எங்களை உணர்ந்தோம். ஆனால் திருமணம் ஆன உடனேயே நான் தான் மிகவும் பொஸஸிவ் மனிதனாக மாறிவிட்டேன் என்று நினைக்கிறேன். அவளை யார் பார்த்தாலும், அல்லது அவள் யாருடன் பேசினாலும் எனக்கு கோபம் வந்தது. எங்களுக்குள் இதனால் நிறைய சண்டை வர ஆரம்பித்து விட்டது……

”என் மனைவி ராஜி எனக்கு கிடைத்தது என்னுடைய அதிருஷ்டம் என்று தான் சொல்லுவேன். ஒருநாள் கூட நாங்கள் சண்டை போட்டதில்லை. தினசரி காய்கறி வாங்குவதிலிருந்து பிள்ளை எந்த படிப்பு படிக்க வேண்டும், பெண்ணுக்கு மாப்பிள்ளையைத் தேடுவது என்ற எந்த விஷயத்திலும் அவள் என் கருத்துக்கும் அபிப்ராயத்துக்கும் மறுப்பு சொன்னதில்லை. அது ஏன்? மழை வரும் போல இருக்கிறது. குடை எடுத்துக் கொண்டு போ என்று நான் சொன்னால் தான் அவள் குடை எடுத்துக் கொண்டு வெளியே போவாள் என்றாள் உங்களால் நம்ப முடிகிறதா?”

”நம்ப முடியவில்லை தான். எங்கள் கலாச்சாரத்தில் ஒரு பெண் தன் கணவனுடைய பேச்சைக் கேட்டுத்தான் நடக்கிறாள் என்றால் அவளை உசத்தியாக எண்ண மாட்டார்கள். நீ என்ன அவனுக்கு அடிமையா என்று கேட்டு ஒரு வழி பண்ணிவிடுவார்கள் என்பது தான் உண்மை…….”

ஜனார்ததனனும் ஏரனும் அதற்கப்புறம் ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் படகை அதன் போக்கிலேயே விட்டுவிட்டு உட்கார்ந்திருந்தார்கள். குளிர், காற்று, மற்ற படகுகளிலிருந்து அவ்வப்போது வரும் சத்தம் தவிர வேறெதுவும் அங்கில்லை. இருவரும் அவரவர் வாழ்க்கையைப் பற்றி அசைப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

படகை வாடகைக்கு எடுத்த நேரம் முடிவடைய இன்னும் சில நிமிடங்களே இருந்தன.

அவர்களின் மெளனத்தைக் கலைப்பதாய் முதலில் ஏரன் தான் கேட்டார்.

”ஊருக்குத் திரும்பிய பிறகு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

ஜனார்த்தனன் ஒரு பெருமூச்சு விட்டபடி சொன்னார். ”என் பெண் மைதிலியுடன் நான் போயிருக்க முடியாது. எங்கள் கல்சரில் அது அவ்வளவாக சாத்தியம் இல்லை. அமெரிக்காவில் இருக்கும் என் மகன் கிரண் என்னை அங்கே கூட்டிக் கொள்ள பயப்படுகிறான். ப்ளட்ப்ரஷர், சர்க்கரை வியாதி, கொலஸ்ட்ரால் எல்லாம் தான் வயசோடு சேர்ந்து வந்து விடுகிறதே…. எனக்கு ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் கிடைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டான். அங்கே அது இல்லாமல் இருக்க முடியாதாமே. அதனால் அவனும் என்னைத் தன்னுடன் வந்து இரு கூப்பிட்டுக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக…..

ஜனார்த்தனம் மேலே பேச முடியாமல் நிறுத்தினார், அவர் குரல் லேசாக நடுங்குவது போல் இருந்தது.

”ப்ளீஸ் டெல் மீ…. அதற்கு பதிலாக என்ன செய்தான்?” ஏரனின் குரலிலும் ஒருவித அவசரம் தெரிந்தது.

”சென்னையில் இருக்கிற ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டான். டாடி….. அது தான் உங்களுக்கும் எங்களுக்கும் நல்லத என்று போன் செய்து சொல்கிறான். அங்கே போவதற்கு முன் என் உயிருக்குயிரான ராஜியுடன் தேன்நிலவை கொண்டாடிய இடத்திற்கு வந்து பார்க்க வேண்டும் என்று தான் இங்கே வந்தேன்….”

இப்போது ஏரன் மெல்லிய குரலில் பேசினார். ”கேன் யூ பிலீவ் இட்? ஐயாம் இன் தி ஸேம் போட்! என்னுடைய குழந்தைகள் எல்லோரும்… ஐ அம் சாரி… ஒருவருமே இப்போது குழந்தையில்லை… அவர்கள் எல்லோரும் தன்னுடைய அம்மா, ஸ்டெப் ·பாதரோடு வசிக்கிறார்கள். அதனால் இனி நான் அவர்களுக்குத் தேவையில்லை. எனக்கு ப்ராஸ்டேட் கான்ஸர் இரண்டாவது ஸ்டேஜ் தாண்டிவிட்டதாம். சீக்கிரத்திலேயே யாராவது எப்போதும் என்கூடவே இருந்து பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு யாரும் தயாராக இல்லை. அதனால் என்னுடைய கடைசி மனைவியுடைய கடைசி பையன் மட்டும் பரிதாபப்பட்டு என்னை ஒரு ஓல்ட் ப்யூபின் ஹோமில் சேர்த்து விட்டிருக்கிறான். நான் ஸியாட்டில் திரும்பிய உடனே அங்கே தான் போய் தங்க வேண்டும்…..”

படகு கரை திரும்பியது.

ஜனார்த்தனன் சொன்னா. ”ஏரன்… உங்களுக்கும் எனக்கும் கலாச்சாரத்தில் எவ்வளவு வித்தியாசங்கள் என்று இவ்வளவு நாழி பேசிக் கொண்டிருந்தோம். கடைசியாக நம் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது பார்த்தீர்களா? வயதான நாம் இருவருமே முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறோம். நமக்கு அதில் விருப்பமா இல்லையா என்று யாரும் கவலைப்படவில்லை……”

ஆமாம்….. நாம் பெற்ற குழந்தைகளே… நாம் பார்த்து பார்த்து வளர்த்த குழந்தைகளே நம்மை வேண்டாம் என்று ஓல்ட் ப்யூப்பின் ஹோமில் கொண்டு விடுகிறார்கள். இதில் மட்டும் அமெரிக்கா, இந்தியா என்று வித்தியாசம் இல்லை. அப்பாடா! கடைசியாக ஒரு ஒற்றுமையைக் கண்டுபிடித்து விட்டோம் இல்லையா?”

ஜனார்த்தனனும் ஏரனுமூ வாய்விட்டு சிரித்தபடி படகைவிட்டு இறங்கினார்கள். ஆனால் இருவர் சிரிப்பிலும் சோகம் இருந்தது.

[2000 ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான சிறுகதை.]

– நவம்பர் 2001

Print Friendly, PDF & Email

3 thoughts on “வித்தியாசம்

  1. என்னுடை நெருங்கிய சிநேகிதியான கீதா பென்னட் எப்போதுமே வித்தியாசமாக சிந்திப்பவர். சகலகலா வல்லவர். அவருடைய கதையைப் படிக்க வாய்ப்பு அளித்த சிறுகதை இணைய தளத்துக்கு மிக்க நன்றி…

  2. வயதாகிவிட்டால் இதே போல கதைகள் ஏராளம். உணர்ச்சி பூர்வமான கதை வாழ்த்துக்கள்

  3. கீதா பென்னெட்டின் மிகச்சிறந்த கதைகளில் என் மனதில் மிக ஆழமாகப்பதிந்த சிறுகதை இது. இந்தக்கதையை நான் பலருக்கு சொல்லி படிக்க சொல்லி இருக்கிறேன். இன்று, இப்போது படிக்கும் போதும், அதே உணர்ச்சியும், மன நெகிழ்ச்சியும் உண்டாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *