கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 13,522 
 

முதலில் ஒரு சொம்பு உருண்டு வந்து குருக்கள் வீட்டுக்கு எதிரே தெருவில் விழுந்தது. அதைத் தொடர்ந்து டம்ளர் “டங்டங்… டங்…ட…ங்’ என்று நொந்துகொண்டு தன் ஒலியை நிறுத்திக் கொண்டது.

வேதாந்த குருக்கள் ஒரு கணம் ஆடிப்போய்விட்டார். ஜாதகத்தைப் பிரித்து வைத்துக் கணித்துக் கொண்டிருந்தவரால் நடப்பது என்ன என்பதைக் கணிக்க இயலவில்லை. “”நாராயணா…நாராயணா” என்று சன்னமாக நாராயணனைத் துணைக்கு அழைத்தார்.

விதை புதிது“”என்ன சாமி… பயந்துட்டீங்களா… ஒண்ணும் பயப்படாதீங்க. இது மாசத்துல நாலு தடவை நடக்கற கூத்துதான். நீங்க இங்கே குடிவந்து ஒருவாரம் தானே ஆகுது. இது புதுசாத்தான் தெரியும்.” குருக்களிடம் ஜாதகம் பார்க்க வந்திருந்த முருகன்தான் சொன்னான்.

குருக்கள் யாருன்னு தெரியாதில்லையா..? பெருமாள் கோயிலுக்குப் புதிதாய் வந்திருக்கிற அர்ச்சகர்தான் வேதாந்த குருக்கள். கோயில் தெருவிலேயே கோயிலுக்குச் சொந்தமான வீடுகளில் ஒன்றை குருக்களுக்கு ஒதுக்கியிருந்தது நிர்வாகம்.

கோயிலின் இரண்டு பக்கங்களிலும் கோயிலுக்குச் சொந்தமான ஓட்டுவீடுகள் இருக்கின்றன. அதில் மூன்றாவது வீட்டுலே குடிவந்திருக்கிறார் குருக்கள். அவர், அவரது மனைவி, ஒரு மகள் என்று மூன்றுபேர்தான் குடும்பம். கும்பகோணத்திலிருந்து வந்திருக்கிறார்.

“”சொம்பு,டம்ளர் எல்லாம் ஏன் ரோட்டுக்கு வந்து விழுது? அவா யாரு?” என்று கேட்டார் குருக்கள்.

“”அவன் ஒரு குடிகாரன் சாமி… அவங்க அப்பன் இந்தக் கோயில்லே வேலை செஞ்சிக்கிட்டிருந்தப்போ இந்த வீட்டைக் கொடுத்தாங்க. நாப்பது ஐம்பது வருஷமா இங்கே குடியிருக்கானுங்க. வெறும் நூறுரூபா வாடகையில்! பிரஸ்லே வேலை செய்யிறான். பொண்டாட்டி புருஷனுக்கு சண்டை வந்துட்டா வீட்டுலே இருக்கிற சாமானெல்லாம் ரோட்டுக்கு வந்துடும். கொஞ்ச நேரத்துலே அவனோட சம்சாரம் வந்து எல்லாத்தையும் பொறுக்கிகிட்டுப் போவா… இது ரொம்ப வருஷமாவே நடந்துகிட்டிருக்கிறதுதான் சாமி”

“”அவன் என்ன மனுஷாளோட சேர்த்தியா? சண்டைன்னு வந்துட்டா இப்படியெல்லாம பண்ணுவான்?”

“”இன்னும் என்னவெல்லாமோ பண்ணுவான். அவனை யாரும் கண்டுக்கிறதில்லே.”

குருக்கள் சிறிது நேரம் யோசிச்சுண்டே இருந்தார். பிறகு முருகனுடைய ஜாதகத்தைப் புரட்டினார். காகிதத்தில் எதைஎதையோ எழுதிக் கூட்டினார். வெற்றிலை பாக்கை எண்ணினார். அந்தக் கூட்டலையும் காகிதத்தில் குறித்துக் கொண்டார். கணக்கை சரி பார்த்துக் கொடுத்தபின் முருகனைப் பார்த்து, “”முருகா, நான் ஒன்னைச் சொல்றேன் செய்வியா?” என்றார்.

“”சொல்லுங்க சாமி கண்டிப்பா செய்யிறேன்”

குருக்கள் சொன்னதைக் கேட்டு முருகன் சரி என்று தலையாட்டிக் கொண்டே எழுந்து நின்றான்.

தெருமுனை திரும்பியதும் சொல்லி வைத்த மாதிரி பீடி புகைக்குள் முகத்தை மறைத்துக்கொண்டு குடிகாரன் வந்து கொண்டிருந்தான். அவனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று முருகன் யோசிக்கும் முன்பே,

“”என்ன அண்ணே… நோட்டு புக்கும் கையுமா இந்தப் பக்கம்?” என்று ஆரம்பித்தான் ராமசாமி.(குடிகாரனின் பெயர்)

“”அடடே! ராமசாமியா…நல்லா இருக்கிறியாப்பா? பிரஸ்ஸýக்குப் போகலியா?

“”இன்னைக்கு ஞாயித்துக்கிழமை லீவுண்ணே”

“”ஆமா இல்லே. அது ஒண்ணும் இல்லே ராமசாமி. உங்க வீட்டுக்கு எதிர்வீட்லே புதுசா கோயில் குருக்கள் குடி வந்திருக்காரில்லையா. அவரு ஜோசியம் நல்லா இருக்கறது இருக்றபடியே சொல்றாருப்பா. அதான் போயி பார்த்துட்டு வர்றேன்” என்று ஜாதக நோட்டை தூக்கிக் காட்டினான் முருகன்.

“”அதெல்லாம் நடக்குதாண்ணே. சாஸ்திரம் பொய்யி… சாவறது மெய்யி”ன்னு தத்துவம் பேசினான் ராமசாமி.

“”சொல்றேன்னு தப்பா நினைக்காதே ராமசாமி. கோள்களோட வினைதான் நம்மை ஆட்டிப்படைக்குது. அதைத் தெரிஞ்சுக்கிட்டா கொஞ்சம் முன்ஜாக்கிரதையா நடந்துக்கலாம். சொல்றாங்களே… “தலைக்கு வந்தது தலைப்பாயோட போச்சு’ன்னு அது மாதிரி…”

சத்தமாக சிரித்தவாறே நடக்க எத்தனித்தான் ராமசாமி.

“”ஒரு நிமிஷம் நில்லுப்பா. நீ ரொம்ப நல்லவன்தான். அப்படியிருந்தும் உனக்கும், உன் பொண்டாட்டிக்கும் அடிக்கடி சண்டை வருதே அது ஏன்? கோபப்படாதே. அதுதான் கோள்கள் செய்யிற வேலை. உங்க ரெண்டு பேரோட ஜாதகத்தையும் எடுத்துனுப்போயி குருக்கள்கிட்ட காட்டு. அதுக்குப் பரிகாரம் சொல்வாரு.”

முருகனை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, “”சரி பார்க்கிறேன்” நகர்ந்தான் ராமசாமி.

வீட்டிற்குள் நுழைந்தவன் தன் மனைவி தலைவிரிக்கோலமாக உட்கார்ந்து கொண்டிருப்பதைக் கவனித்தான். கன்னங்களில் கண்ணீர் கோலமிட்டுக் கொண்டிருந்தது. மனதின் ஏதோ ஒரு மூலையில் கொஞ்சம் வலித்தது. தாழ்வாரத்திலிருந்த மரநாற்காலியில் அமர்ந்து கொண்டான். அனிச்சையாக கை பீடியின் கழுத்தைப் பிடித்து இழுத்தது. கொளுத்திக்கொண்டான். புகை ஆரிக்கிள்களை நிரப்பி வெளியேறியது. எதையோ அவன் யோசிக்கலானான்.

ஒரு மனிதன் தீயவனாவதற்கு ஒரே ஒரு நிமிடம் போதும். அந்த நிமிடத்திலேயே அவன் தீய செயலைச் செய்துவிட முடிகிறது. பிறகு நிதானமாக யோசிக்கும்போதுதான் அவன் செய்த தவறே அவனுக்குப் புரிகிறது. “ஒரு நிமிடம் சிந்தித்திருந்தால் நான் இந்தக் கொலையைச் செய்திருக்கவே மாட்டேன்’- என்று புலம்பும் கைதிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். கொஞ்சம் சிந்திக்கும்போது நல்ல தீர்வு கிடைக்குமல்லவா?

ராமசாமி தனக்குள் எதையோ பேசிக்கொண்டான். இருவரின் ஜாதகங்களையும் எடுத்துக் கொண்டு குருக்கள் வீட்டிற்குப் புறப்பட்டான்.

“”சாமி… சாமி”

“”யாரது?…” குரலை மட்டுமே வாசலுக்கு அனுப்பினார் குருக்கள்.

“”நான் எதிர்த்த வீட்டு ராமசாமி வந்திருக்கேன்.”

குருக்கள் ஒரு நொடி ஆச்சரியப்பட்டார். “குடிகாரன் அதுஇதுன்’னு சொல்லிண்டிருந்தா. இவன் சாதுவாட்டம் “சாமி’ ங்கறானே. எப்படியோ இவனை நல்வழிக்குக் கொண்டுவரணும் பகவானே! எழுந்து நடைக்கு வந்தார்.

“”என்ன விஷயம் ஒக்காருங்கோ.”

“”ஜாதகம் பார்க்கணும் சாமி. வெத்தலை பாக்கு வாங்கிட்டு வரலே. போயிட்டு வாங்கி வந்துடறேன்.”

“”பரவாயில்லை ஒக்காருங்க. ஜாதகத்தைக் கொடுங்க.”

நீட்டினான். குருக்கள் பிரித்து எதையோ கூட்டிக் கழித்தார். பின் ராமசாமியைப் பார்த்தார்.

“”உங்களோடது மகரராசி. அவிட்ட நட்சத்திரம். இரண்டாம் பாதம். வீட்டுக்காரியோட ராசியும் மகரம்தான். நட்சத்திரமும் அவிட்டம் இரண்டாம் பாதமே.”

“”ஆமா சாமி.”

“”ரெண்டுமே ஏக ராசி… ஏக நட்சத்திரம். அப்படி இருக்கக்கூடாது. பொருத்தத்துலே அதமம் வருது. உத்தமம், மத்திமம் வந்தாக்கூட பரவாயில்லே. அதமம் வரக்கூடாது. அப்படி வர்றவா கல்யாணம் பண்ணிக்கக்கூடாது. வாழ்க்கை சரியா அமையாது. போராட்டமான வாழ்க்கையாயிடும்.”

“”கரெக்ட் சாமி. அப்படித்தான் இருக்கு.”

“”உன் மனைவி உனக்கு சொந்தமா. அசலா?”

“”அத்தைப் பொண்ணு சாமி.”

“”அதான் சொந்தத்துக்குத் தோஷமில்லைன்னு சொல்லி கல்யாணம் பண்ணியிருக்கா. சரி போகட்டும். அது நடந்து முடிஞ்சுபோன சமாச்சாரம். “விதி தவறாக இருக்குமானால் தெய்வம் கண்ணை மூடிக்கொள்ளும். அதற்காக அழுது பயனில்லை’ ன்னு கவியரசர் கண்ணதாசன் சொல்லியிருக்காரு. அதுபோல நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடக்கப் போவதை பார்ப்போம்.”

“”சரி சாமி.”

“”அவ ஜாதகத்துலே இருக்கிற ஒரு ரகசியத்தை உனக்குச் சொல்றேன். அதை புரிஞ்சு நடந்துப்பியா.?

“”சொல்லுங்க சாமி நடந்துக்கறேன்.”

அவனிடம் எதையோ சொன்னார் குருக்கள். அவன் உறைந்துபோனான். கண்கள் லேசாகக் கலங்கின. கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கத்தானே செய்கிறது! ஒரு நிமிடம் அவனை அசைத்து விட்டது. உடல் நடுங்கியது. அடக்கிக் கொண்டான்.

“”பரிகாரம் ஏதாவது?”

“”விதியை நிர்ணயம் பண்றவன் பகவான். அவனை மீறி பரிகாரமெல்லாம் ஒண்ணும் செய்யாது. நான் சொன்னதை செய்தாலே போதும்.”

“”நிச்சயமா செய்யிறேன் சாமி.”

கும்பிட்டு விடைபெற்றான் ராமசாமி. வீட்டுப்படி ஏறி உள்ளே சென்றவன் அப்படியே நாற்காலியில் உட்கார்ந்தான். அவன் மனைவி அடுக்களையிலிருந்து காப்பி டம்ளரோடு அவனை நெருங்கி வந்தாள். மெüனமாக காப்பியை நீட்டினாள்.

“”மீனா” என்றான் மெல்ல.

இருபதாண்டுக் கால வாழ்க்கையில் முதல் சில மாதங்கள் மட்டுமே அவன் அவளது பெயரைச் சொல்லி கூப்பிட்டிருக்கிறான். அதன் பிறகு,”சனியனே, விளங்காமூஞ்சி, கழுதை, நாயே, பேயே’ என்று அடைமொழி கொடுத்தே ஆண்டுகளை ஓட்டியவன், இன்று அவளது பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதும் அவள் அதிசயப்பட்டுப் போனாள். உள்ளுக்குள் பயமிருந்தாலும், மனம் ஏதோ ஒரு சந்தோஷக் குளியல் போட்டது. பெண்களுக்கே உரிய ஒரு நளினம் கடைக்கண் பார்வையை வீசுவதுதானே! மெல்ல அவளும் வீசினாள்.

“”நீ காப்பிக் குடிச்சியா மீனா?” அவனது சன்னமான கேள்வி அவள் உடலைத் தென்றலாய்த் தழுவிச் சென்றது.

– பதில் சொல்லாமல் நின்றாள்.

காபியை வாங்கி கீழே வைத்தவன் அவளது கைகளைப் பற்றிக் கொண்டான்.

“”என்னை மன்னிச்சுடு மீனா. உன்னைப் புரிஞ்சுக்காம இத்தனைக் காலம் அட்டூழியம் பண்ணியிருக்கேன். அதையெல்லாம் பொறுத்துக்கிட்டு நீ வாழ்ந்துகிட்டிருக்கே. நான் மிருகமா இருந்தேன். இனிமே மனுஷனா வாழப்போறேன்” அவனை அறியாமல் கண்ணீர் வெளியேறியது.

– அவள் அதிர்ந்து போனாள்.

“”ஐய்ய! என்னங்க இது” என்று முந்தானையால் அவன் கண்ணீரைத் துடைத்தாள்.

“பகவான் சில காலங்களில் சில காரியம் நடக்கும் என்று நிர்ணயிக்கிறான். நம்முடைய பிரக்ஞை இல்லாமல் அவை நடந்து விடுகின்றன.’ என்று கண்ணதாசன் சொல்லிய அமுதமொழி இன்று ராமசாமியின் வாழ்க்கையில் நடக்கிறது.

“”மீனா, இனிமே நீ எதற்கும் பயப்படாதே. முன்னை மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். தைரியமா எங்கூட நீ பேசலாம். எது வேணுமானாலும் கேக்கலாம். உன் மனசுலே பட்டதைச் சொல்லலாம். இனிமே நாம ஒற்றுமையா, நிம்மதியான வாழ்க்கை வாழலாம். இது சத்தியம். என்னை நம்பு மீனா..”

யானைக்குட்டியை பழக்கும்போது முதலில் ஒரு சங்கிலியால் அதன் காலைக்கட்டி வைப்பார்கள். அது முரண்டு பிடித்து அறுத்துக் கொண்டு ஓட முயற்சிக்கும். ஆனால் காலிலுள்ள சங்கிலி அதை அடக்கி விடும். அதனால் அறுத்துக்கொண்டு ஓட முடியாது.

பெரிய யானையாக வளர்ந்த பின்னால் ஒரு சாதாரணக் கயிற்றை அதன் காலில் கட்டி வைப்பார்கள். ஆனால் யானையோ பல ஆண்டுகள் சங்கிலிக்குள் கட்டுண்ட ஞாபகத்திலேயே இதையும் நம்மால் அறுக்க முடியாது என்று கட்டுக்குள் அமைதியாக இருக்கும்.

அதுபோல மீனா பல ஆண்டுகள் சித்ரவதைகளை அனுபவித்தளாயிற்றே! அவளால் அதைத் தாண்டி எளிதில் வரமுடியவில்லை. அந்தப் பயம் அப்படியே ஒட்டிக் கொண்டிருந்தது. இருந்தாலும் மனைவியின் ஆறுதல் வார்த்தைகள் கணவனுக்கு இதம் தருகிறதல்லவா? அதற்காக அவள் பேசலானாள்.

“”அப்படியெல்லாம் பேசாதீங்க. உங்க மனசு ஏன் அப்படி நினைக்குது? ஆண்டவன் இனிமேலாவது நம்ம வாழ்க்கையை நல்லபடியா வைக்கட்டும்” என்றாள்.

அன்றைய இரவு ஓர் இனிய இரவாகக் கழிந்தது.

காலண்டரில் ஏழு தாள்கள் கிழிந்தன. முருகன் குருக்களை நோக்கி ஓடோடி வந்தான். குருக்கள் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்.

“”என்ன சாமி! என்ன மாயமந்திரம் பண்ணீங்க? ராமசாமி அடியோட மாறியிருக்கிறான். நெற்றி நிறைய விபூதி பூசியிருக்கிறான். கோயில் குளம்’னு பொண்டாட்டியோட சுத்தறான். ரொம்ப சாதுவாயிருக்கான். குடியைக் கூட விட்டுட்டானாம்! சண்டைசச்சரவு எதுவுமே இல்லே. என்ன சாமி பண்ணீங்க?”

குருக்கள் மெல்ல புன்னகைத்தார். “”ஒரு மனுஷன் திருந்தி வாழறான்னா நாம்ம பெருமைப்படணுமோல்லியோ.”

“”அது சரி சாமி, இத்தனை வருஷமா நடக்காத அதிசயம் நடந்திருக்கே. எப்படி?

“”அதுதான் மனோதத்துவம். மந்திரம் கால். மதிமுக்கால்.”

“”என்ன சாமி தத்துவம் பேசறீங்க”

“”முருகா! அசடாட்டம் கேள்வி கேட்டுண்டு இருக்காதே. மனுஷாளெல்லாம் எதற்குப் பயப்படறாளோல்லியோ மரணத்துக்குப் பயப்படுவாயில்லையா?’

“”நிச்சயமா சாமி”

“”உங்க ஜாதகப்படி உன் மனைவி இன்னும் இந்தப் பூமியிலே வாழப்போறதே நாலு மாசமோ, ஆறு மாசமோதான். அவளோட ஆயுள் அதோட முடியுது. இதைத் தடுக்க முடியாது. இந்தக் கடைசிகாலத்துலயாவது அவளோட சண்டைசச்சரவு இல்லாம, அவளுடைய ஆசைகளை நிறைவேத்தி வைப்பா. இத்தனை வருஷமா நீ செஞ்ச பாவத்துக்குப் பரிகாரம் இதுதான். அவளை நிம்மதியா வச்சுக்கற வழியைப் பாருன்னு சொன்னேன்.”

“”ஐயோ பாவமே! அப்படியா இருக்கு சாமி? பாவம் அந்தப் பொண்ணு. எந்த சுகத்தையும் அனுபவிக்காமையே வாழ்ந்துட்டா.”

“”நான் சொன்னேன்னுதானே சொல்றேன். ஜாதகத்துலே அப்படி இருக்குன்னு சொல்லலையே!”

“”என்ன சாமீ குழப்புறீங்க?”

“”அவன் திருந்தி வாழணும்னா ஜாதகத்து மேலே பழியைப் போட்டாத்தான் நடக்கும்னு முடிவு பண்ணினேன். அவா ஆயுள் நல்லாத்தான் இருக்கு. சும்மா ஒரு பொய்யை சொல்லி வச்சேன். எப்படியோ அவன் திருந்தி இருந்தா சரி. ஆறுமாச காலம் அவன் திருந்தியவனா நடந்துகிட்டானா அதுவே பழக்கமாயிடும். அப்புறம் வாழ்நாள் முழுக்க நல்லவனாவே வாழ்ந்துடுவான்.

“”சாமி…” அதற்குமேல் அவனுக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை.

– பெப்ரவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *