விதூஷகன் சின்னுமுதலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2012
பார்வையிட்டோர்: 9,459 
 

கதை ஆசிரியர்: அமரர் கல்கி

     சத்திரப்பட்டியைச் சுற்றிப் பதினைந்து மைல் விஸ்தீரணத்துக்கு, விதூஷகன் சின்னுமுதலியைப் பற்றி அறியாதவர் யாருமில்லை. சிறுபிள்ளைகள் முதல், கிழவர் கிழவிகள் வரையில் எல்லாருக்கும் அவனைத் தெரியும். எந்த ஊரிலே யார் நாடகம் போட்டாலும் அவனுக்கு அழைப்பு வராமலிராது. சின்னுமுதலி வருகிறான் என்றால் அன்று கூட்டம் இரண்டு மடங்குதான். அவனுடைய அகடவிகட அதிசய சாமர்த்தியங்கள் அந்தத் தாலூகா முழுவதும் பிரசித்தமாயிருந்தன.

     கூத்து மேடைக்குச் சின்னுமுதலி வந்துவிட்டானானால் ஒரே குதூகலந்தான். சில சமயம் கோணங்கிக் குல்லா தரித்து, புலி வேஷத்தைப் போல் கோடுபோட்ட கால்சட்டையும், மேற்சட்டையும் போட்டுக் கொண்டு வருவான். அவனுடைய நடை, உடை, பாவனை ஒவ்வொன்றும் ஜனங்களுக்குச் சிரிப்பு உண்டாக்கும். அவனுடைய பொய் மீசை நிமிஷத்துக் கொருமுறை மேலும் கீழும் போய் வரும். பேசுவதற்கு அவன் வாயைத் திறந்து விட்டாலோ சொல்ல வேண்டியதில்லை. நாடகக் கொட்டகை கிடுகிடாய்த்துப் போகும். சில சமயம் வெள்ளைக்காரனைப் போல் தொப்பி போட்டுக் கொண்டு வருவான்.

     “லேடீஸ் அண்டு ஜெண்டில்மென்” முதலிய ஐந்தாறு இங்கிலீஷ் வார்த்தைகள் அவனுக்குத் தெரியும். இவைகளை வைத்துக் கொண்டு அரை மணி நேரம் ஆங்கிலத்தில் பிரசங்கம் செய்வான். “அசல் வெள்ளைக்காரன் கெட்டான்!” என்று சொல்லி ஜனங்கள் குதூகலப்படுவார்கள்.

     என்னதான் பேசினாலும், பாட்டுப்பாடத் தெரியாவிட்டல் “விதூஷக பார்ட்” ரஸப்படுமா? சின்னுமுதலிக்குப் பாட்டுப் பாடவும் தெரியும்; ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் முதல், சிங்கார ரஸக்கீர்த்தனைகள் வரையில் அவன் வாயில் அகப்பட்டுப் படாத பாடுபடும். சுயமாகப் பாடும் சக்தியும் அவனுக்கு உண்டு.

     “இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
          அம்மென்றா லாயிரம் பாட்டாகாதா-சும்மா
     இருந்தா லிருப்பே னெழுந்தேனே யாயிற்
          பெருங்காள மேகம் பிள்ளாய்”

என்று காளமேகப் புலவர் பாடினாரல்லவா? அந்தப் புலவரும் நமது சின்னுமுதலியிடம் பிச்சை வாங்க வேண்டும். அவன் வாயில் வருவதெல்லாம் பாட்டுத்தான். பிரஸங்கங்களைச் சரமாரியாய்ப் பொழிவான். “பாட்டு” என்று பாடத் தொடங்கினானேயானால் “பாட்டு, காட்டு, ஏட்டு, வாட்டு, சூட்டு, மேட்டு…” என்று அடுக்கிக் கொண்டே போவான். இவற்றின் பொருள் அவனுக்கும் தெரியாது; கேட்பவர்களுக்கும் விளங்காது. ஆயினும் இந்தப் பாட்டுக்களை எல்லாரும் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

2

     சின்னுமுதலியின் பரம்பரைத் தொழில் கைத்தறி நெசவு. ஆனால் அந்தத் தொழிலை அவன் மறந்து வெகுகாலமாயிற்று. அவனுக்கு மனைவியும், ஒரு பிள்ளையும், ஒரு பெண்ணும் இருந்தனர். மனைவியும், பதினைந்து வயதான பிள்ளையும் நன்றாக நெசவு செய்வார்கள். இவர்கள் சம்பாதிக்கும் பணத்தினால்தான் குடும்ப நிர்வாகம் நடந்துவந்தது. மகள் வீட்டுக் காரியங்களைப் பார்ப்பாள். சின்னுமுதலி நாடகம் நடிக்கும் இடங்களில் தனக்குக் கிடைக்கும் வெள்ளரிக்காய், தேங்காய், வாழைப்பழம், வடை, முறுக்கு முதலிய பரிசுப் பொருள்களைக் கொண்டு வருவான். அப்பொழுதெல்லாம் குழந்தைகள் அவனை ஆவலுடன் எதிர்க்கொண்டு அழைப்பர்கள். அவனுக்குப் பணங்காசும் கிடைப்பதுண்டு. ஆனால் அதுமட்டும் வீட்டுக்கு வராது. பின், எங்கே போயிற்று என்று சொல்லவேண்டியதில்லையல்லவா?

ஆம்; சின்னுமுதலியின் விதூஷக சாமர்த்தியங்களுக்கெல்லாம் பெரும்பாலும் ஆதாரமாயிருந்தது கள்ளு, சாராயந்தான். ஆரம்பத்தில் கள்ளுக் குடித்து வந்தான். ஆனால் நாளடைவில் கள்ளில் அவ்வளவு ‘ஜோர்’ பிறப்பதில்லை யென்றறிந்து, சாராயத்தில் புகுந்தான். கூத்து நடத்துபவர்கள், சாராயக்கடை எவ்வளவு தூரத்திலிருந்தாலும், முன்னாடியே ஆள் அனுப்பி இரண்டு புட்டி சாராயம் வாங்கி வந்து தயாராய் வைத்திருப்பார்கள். ஆனால் வருஷம் 365 நாளுமா கூத்து நடக்கும்? கூத்தில்லாத நாட்களுக்கும் சாராயம் வேண்டுமல்லவா? எனவே, கூத்தில் கிடைக்கும் பணம் மற்ற நாட்களுக்கு உபயோகமாகும். அத்துடன், சின்னுமுதலிக்குத் தறிகள் செப்பனிடத் தெரியும். சிறுவயதில் பழகியிருந்தான். இந்த வேலையில் கிடைக்கும் கூலிப்பணத்தையும் சாராயக்கடைக்கே அர்ப்பணம் செய்து வந்தான். அவன் மனைவி பத்மாவதிக்கு இது மிகவும் கஷ்டமாய்த்தான் இருந்தது. ஆனால் அவள் என்ன செய்ய முடியும்? 1921-ம் வருஷத்தில் நடந்த காந்தி இயக்கத்தின் போது ஊரில் ஒரு முறை கட்டுப்பாடு செய்தார்கள், யாரும் குடிக்கக் கூடாது; குடித்தால் பதினைந்து ரூபாய் அபராதம் என்று. ஆனால் பஞ்சாயத்தார் முதல் ஊர்ஜனங்கள் வரையில் எல்லாரும் ஒருமுகமாகச் சேர்ந்து சின்னுமுதலி விஷயத்தில் மட்டும் விலக்குச் செய்துவிட்டார்கள். அவன் குடிக்காவிட்டால் ‘விதூஷக பார்ட்’ போட முடியாது. அவன் விதூஷகனாய் வராவிட்டால் கூத்து எதுவும் ரஸப்படாது. ஆகவே, அவனை மட்டும் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கியிருந்தார்கள். இந்த நிலைமையில் பத்மாவதி “குடிக்கவேண்டாம்” என்று சொன்னால் நடக்கிற காரியமா?

3

     கலியாணம் ஆன புதிதில் பத்மாவதிக்குத் தன் கணவனைப் பற்றி மிகவும் பெருமையா யிருந்தது. எல்லாரும் அவனைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். ஆனால் அவள் மட்டும் அவன் கூத்தைப் பார்க்கப் போகாமலிருந்தாள். பார்க்கவேண்டு மென்னும் ஆவல் அவள் மனத்திற்குள் நிரம்பி யிருந்தது. ஆனால் வெட்கம் தடை செய்தது. கடைசியாக ஒருநாள் பக்கத்து ஊரில் கூத்துப் போட்டபோது அயல் வீட்டுப் பெண்கள் வற்புறுத்தி அவளைக் கூட்டிச் சென்றார்கள். கூட்டத்தின் ஓரத்தில் உட்கார்ந்து பத்மாவதி தன் புருஷன் மேடைக்கு வருவதை ஆவலுடன் எதிர் நோக்கி யிருந்தாள்.

     கோணங்கிக் குல்லாவும், விகாரமான உடைகளும் தரித்து, கூத்தாடிக்கொண்டு சின்னுமுதலி மேடைக்கு வந்ததைப் பார்த்ததும் பத்மாவதிக்கு ‘பகீர்’ என்றது. அவன் செய்த கோரணி ஒவ்வொன்றும் பத்மாவதிக்கு அளவிலாத மனவேதனையை அளித்தது. அசங்கியமாகவும், அர்த்தமில்லாமலும் அவன் பேசிய பேச்சு அவளுக்கு நாராசமா யிருந்தது. இதற்கிடையில் மேடைக்கு மோகினிப் பெண் வந்தாள். விதூஷகன் அவளிடம் சென்று சிங்காரப் பேச்சுகள் பேசலானான். “கண்ணே பெண்ணே” என்று ஏதேதோ பிதற்றினான். பல்லைக் காட்டி இளித்தான். மோகினிப் பெண் அவன் கன்னத்தில் ஓர் இடி இடித்தாள். எல்லாரும் ‘கொல்’லென்று சிரித்தார்கள். சின்னுமுதலியும் சிரித்தான். பத்மாவதிக்குக் கண்ணில் நீர் ததும்பிற்று. அவள் மெதுவாய் எழுந்திருந்து தன் ஊரை நோக்கி நடந்தாள். கண்ணீர்விட்டு அழுதுகொண்டே போனாள்.

     இதற்குப் பிறகு, கூத்தாடப் போக வேண்டாமென்றும், குடிக்க வேண்டாமென்றும் அவள் சின்னுமுதலிக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அவன் கேட்கவில்லை. அவன் ஒரு வேளை கேட்பதாயிருந்தாலும் ஊரார் அதற்கு இடங்கொடுக்கவில்லை. இவ்வாறு நாள் போய்க்கொண்டிருந்தது. அவனைச் சீர்திருத்தலாம் என்ற எண்ணத்தையே பத்மாவதி விட்டுவிட்டாள். தன் குழந்தைகளே கதி என்றிருந்தாள். வீட்டுக்கு வந்தால் அவனுக்குச் சோறு போடுவாள். மற்றபடி அவன் எங்கே போகிறான், என்ன செய்கிறான் என்று கேட்பதில்லை. அவனும் எப்போதும் ஊர் ஊராய்ச் சுற்றிக்கொண்டிருந்தான். ஊரிலிருந்தால் சாப்பாட்டு வேளைக்கு வருவான். உடனே போய்விடுவான். குடித்துவிட்டு வீட்டுக்கு மட்டும் வருவதில்லை.

4

     ஒருசமயம் இரண்டுமாத காலம் வரையில் வெளியூர்களில் சுற்றிவிட்டு ஒருநாள் மாலை வீட்டுக்கு வந்து சேர்ந்தான். உடம்பு சரியாயில்லை யென்றும் தலைவலிக்கிறதென்றும் கூறினான். உடம்பெல்லாம் பற்றி எரிகிறதென்று சொன்னான். அவன் முகம் மினுமினுவென்று பிரகாசித்தது. கண்கள் திறுதிறுவென்று விழித்தன. பத்மாவதி அவனுக்குச் சோறுபோட்டு வீட்டிலேயே படுத்துக் கொள்ளச் சொன்னாள். அப்படியே படுத்துக் கொண்டான். ஆனால் தூக்கம் வராமல் முனகியவண்ணம் புரண்டு கொண்டேயிருந்தான். காலையில் வைத்தியனை அழைத்துக் காட்டவேண்டுமென்று பத்மாவதி எண்ணினாள். அவளும் குழந்தைகளும் பகலெல்லாம் வேலை செய்தவர்களாதலால் விரைவில் தூங்கிப் போனார்கள்.

     பத்மாவதி ஏதோ சத்தம் கேட்டு விழித்தெழுந்தாள். அப்போது அவள் கண்ட காட்சி அவளை நடுநடுங்கச் செய்தது. அர்த்தராத்திரி; மண்ணெண்ணெய் விளக்கு மங்கலாய் எரிந்து கொண்டிருந்தது. சின்னுமுதலி தலையில் ஒரு பழைய முறத்தைக் கவிழ்த்துக் கொண்டு கூத்தாடிக் கொண்டிருந்தான். முறம் கீழே விழாவண்ணம் அவன் உடம்பையும் கைகளையும் நெளித்துக் கொடுத்து ஆடினான். பத்மாவதி இன்னதென்று சொல்லத் தெரியாத பயங்கர மடைந்தாள். மெதுவாக எழுந்து அவனருகில் சென்றாள். சின்னுமுதலி ஆடுவதை நிறுத்தி அவளை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தான். உடனே “கண்ணே பொண்ணே” என்னும் விகாரமான கூத்தாடிப் பேச்சுகளைப் பேச ஆரம்பித்தான். பத்மாவதியின் முகவாய்க்கட்டையைப் பிடித்தான்; பல்லை இளித்தான்.

     பத்மாவதி தன்னையறியாமல் பயங்கரமான கூச்சல் ஒன்று போட்டாள். இதனால் குழந்தைகள் விழித்துக் கொண்டார்கள். மறுபடியும் சின்னுமுதலி பக்கத்திலிருந்த கூடை ஒன்றைத் தலையில் எடுத்து வைத்துக்கொண்டு ஆடினான். இதைப் பார்த்ததும் குழந்தைகளும் அழத் தொடங்கினார்கள். இதற்குள் சத்தம் கேட்டு அயல் வீட்டுக்காரர்கள் வந்து விட்டார்கள். எல்லாரும் சேர்ந்து சின்னுமுதலியைப் பிடித்துச் சமாதான வார்த்தைகள் சொல்லிப் படுக்க வைத்தார்கள்.

     மறுநாள் காலையில் கொங்கணப்பட்டியிலிருந்து சமாசாரம் கிடைத்தது. அவ்வூரில் கூத்து நடந்து கொண்டிருந்தபோது, சின்னுமுதலியின் ஆர்ப்பாட்டம் வழக்கத்தைவிட அதிகமா யிருந்ததென்றும், அவன் திடீரென்று ஒரு கூச்சல் போட்டு, ஸ்திரீ வேஷம் தரித்திருந்தவனின் மூக்கைக் கடித்துவிட்டு, நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் நடுவில் புகுந்து ஓடினானென்றும், சிலர் இதுவும் ஒரு விகடம் என்று நினைத்துச் சிரித்தார்களென்றும், மற்றும் சிலர் “இன்று போதை அதிகம்” என்று பேசிக் கொண்டார்களென்றும், அப்படி ஓடியவன் திரும்பி வரவேயில்லையென்றும் கொங்கணப்பட்டியிலிருந்து வந்தவன் சொன்னான்.

     சின்னுமுதலியின் விதூஷக நடிப்பை இன்னும் நீங்கள் பார்க்கலாம். சந்திரப்பட்டிக்கு நீங்கள் சென்றால், அவன் தன் பிதிரார்ஜித வீட்டின் வாசல் திண்ணையில் உட்கார்ந்து அரட்டையடித்தவண்ணமிருப்பதைக் காண்பீர்கள். கவிதைகளும், கீர்த்தனங்களும், அகட விகடங்களும், சிருங்காரப் பேச்சுகளும் அவன் சரமாரியாய்ப் பொழிந்து கொண்டிருப்பதைக் கேட்பீர்கள். ஆனால், கொங்கணப்பட்டி கூத்தில் செய்தபடி நடுவில் விழுந்தடித்து ஓடாவண்ணம், அவன் கால் ஒன்றைத் திண்ணையின் தூணுடன் சங்கிலியால் பிணைத்துக் கட்டியிருப்பதும் தெரியவரும். உங்களைக் கண்டதும் அவன் ஒண்ணரை டிராம் வாங்கி வரும்படி கெஞ்சிக் கேட்பான். “ஆகட்டும்” என்று சொன்னால் சந்தோஷமாய்ப் பேசிச் சிரிக்கப் பண்ணுவான். “மாட்டேன்” என்றீர்களோ திட்டுவான். அந்த ஊர்ச் சிறுவர் சிறுமிகளுக்குங்கூட இன்னும் அவன் சிரிப்பு மூட்டித்தான் வருகிறான். ஆனால் அவன் மனைவி பத்மாவதி அவனைக் காணும்போதெல்லாம் துக்கந்தாங்காமல் கண்ணீர் விடுகிறாள்; குழந்தைகளோ வெட்கித் தலைகுனிகிறார்கள்.

நன்றி: சென்னைநூலகம்.காம் (அமரர் கல்கியின் படைப்புகள்), அமரர் கல்கி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *