விண்ணைத்தாண்டிசென்றாய்!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 9,961 
 

சிகரம் குடியிருப்பு!!!

காலை நேரம்! இளங்கீரன் உச்சகட்ட பதட்டத்தில் அங்கும் இங்குமாய் அலைந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு ஆட்டோவில் தாரணியும் அவளது அம்மாவும் வந்தனர். இதை பார்த்த இளங்கீரன் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது.

“தாரணி! இளங்கீரன் நிக்குறான் நீ போய் அவன்ட்ட பேசிட்டு வா நான் வீட்டுக்கு போறேன்”

தாரணி இளங்கீரனை நெருங்கி வந்தாள்.

“என்ன ஆச்சு தாரணி நம்ம விஷயத்த பத்தி அப்பா அம்மாட்ட பேசுனியா! என்ன சொன்னாங்க?”

“டேய் நான் எவ்வளவோ பேசி பார்த்துடேன்டா, இனி எனக்கு நம்பிக்கை இல்ல”

“என்னடி சொல்ற? ஏன் உங்க அப்பா ஒத்துக்க மாட்றாங்க? இவ்ளோ நாள் நல்லா தான போகிட்டு இருந்தது.”

“ஆமாடா ஆனா இப்போ முடியாதுன்னு சொல்றாங்க!”

“நான் வேணும்னா எங்க அப்பாட்ட சொல்லி உங்க அப்பாட்ட பேச சொல்லட்டுமா?”

“வேணாம்டா”

“வேணாம்னா என்ன அர்த்தம்? நீ இல்லாம எப்படி இங்க இருக்குறது? உன்னால மட்டும் இருக்க முடியுமா?”

“உண்மை தான்டா ஆனா எனக்கு வேற வழி தெரியல, என்ன செய்ய சொல்ற?”

“நீ பேசாம எங்க வீட்டுக்கு வந்திரு எங்க வீட்ல நான் சொல்றேன்”

“சும்மா பைத்தியம் மாதிரி பேசாதடா! நீ நினைக்குற மாதிரிலாம் இல்ல”

“பின்ன?”

“டேய்! அப்படிலாம் எங்க வீட்ட விட்டுட்டுலாம் வர முடியாது”

“நீ தான் எனக்கு எல்லாமே! நான் எப்போதும் உன் கூட இருப்பேன்னு சொன்ன! அதுலாம் பொய்யா?”

“எதுமே பொய் இல்ல. ஆனா இது விதியாம்டா எங்க அம்மா சொன்னாங்க”

“சரி நான் உங்க அம்மாடயே பேசிக்கிறேன்”

தாரணியின் அம்மாவை நோக்கி இளங்கீரன் ஓடினான்.

“அம்மா “

“இளங்கீரா பாத்து வா ஏன் இப்படி ஓடி வற?

“தாரணி எல்லாத்தையும் சொன்னா. ஏன் இப்படி பன்றீங்க? நாங்க ரெண்டு பேரும் எப்படி இருப்போம்னு உங்களுக்கு தெரியும்லா”

“நல்லா தெரியும் இளங்கீரா! ஆனா தாரணி அப்பாக்கு இப்போ தான்பா வெளிநாட்டுல வேலை கிடைச்சிருக்கு, முதல்ல அவங்க மட்டும் தான் போறதா இருந்தது ஆனா இப்போ அங்க ஒரு ஸ்கூல்ல தாரணிக்கு 3ம் கிளாஸ்க்கு அட்மிஷன் கிடைச்சிட்டு. அதான் நாங்க எல்லாரும் போறோம். நாங்க எங்க போய்ற போறோம். லீவுனா இங்க தான வர போறோம்.”

“…….!!!!” இளங்கீரன் அழத்தொடங்கினான்!!!

“ஏன்பா அழுற? அவங்களுக்கு வருஷத்துல மே மாசம் முழுசா லீவு தான். அப்போ இங்க தான் வருவோம். அந்த மாசம் முழுக்க தாரணி உன்கூட தான் இருப்பா. நீ ரெண்டு ஜாலியா விளையாடலாம். அதுவர நீ சமத்தா இருக்கனும். நாங்க இன்னைக்கு கிளம்புறோம்! சாயங்காலம் 6 மணிக்கு ஃபிளைட். நீ சேட்டை செய்யாம நல்லா படிக்கனும் சரியா! “

“சரிம்மா. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல! தாரணிய நல்லா பார்த்துகோங்க, தினமும் பேச சொல்லுங்க.” அழுது கொண்டே சென்றான் இளங்கீரன்

மாலை 6.30 –

இளங்கீரன் வீடு

“டேய் கொஞ்மாவது சாப்பிடு டா மதியமே சாப்பிடல”

“எனக்கு வேணாம்”

“அண்ணா! அண்ணா! இங்க வா ஏரோஃபிளைன்! சீக்கிரம் வா!!!” என துள்ளி குதித்து கொண்டிருந்தாள் எழில்முல்லை.

வெளியில் சென்ற இளங்கீரன் வானத்தை நோக்கினான்.

தங்கை கண்களில் விமானமாக தெரிந்தது இளங்கீரன் கண்களில் தாரணி இறக்கை முளைத்து பறப்பதுபோல் தெரிந்தது.

விண்ணைத்தாண்டிசென்றாய்!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *