வாழ்த்து!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2020
பார்வையிட்டோர்: 6,820 
 

சில நாட்களுக்கு முன்.

அவரை பார்த்தப்ப நான் என்னை எப்படி வருங்காலத்தில பார்க்கணும் நினைச்சேனோ அப்படியே வேசம் கட்டிட்டு வந்த மாதிரி தோணிச்சு. கைல காஸ்லி மொபைல்,பிளாட்டினம் வாட்ச் ,மிடுக்கான தோரணை இதெல்லாமே அவரு வசதிய அப்படியே படம் புடிச்சு காட்டிச்சு. எனக்கும் என்னைகாச்சும் ஒருநாள் இப்படி பந்தாவா ஆகணும்ங்கிற ஆசை இருந்திச்சு.. நானும் யாரை பத்தியும் கவலை படாம பணத்துக்காக மட்டும் ஓடிக்கிட்டு இருந்த சமயம் அது. கூடிய சீக்கிரம் நான் எதிர்பார்கிற வசதிய எட்டிருவேன்னு நம்பிக்கையும் நிறையவே இருந்த சமயம் அது. ஆனா அவரை பார்த்த நேரத்தில ஒரு கேள்வி மட்டும் மனசில ஓடிட்டு இருந்திச்சு.இவ்ளோ வசதியா இருக்கிற மனுசன் ஏன் இந்த இரயில்ல ,அதுவும் குளிர்சாதன வசதி கூட இல்லாத ஒரு பெட்டியில பயணம் பண்ணிட்டு வராரு.இவரு இருக்கிற பவுசுக்கு விமானத்திலேயே உயர்ந்த வகுப்புல டிக்கெட் போட்டு போலாமே.நான் அவரையே குறுகுறுனு பார்த்து இத்தன யோசிட்டு இருந்தேன்.ஆனா அதை எதையுமே கவனிக்காம அவரு என் குழந்தைங்க இரண்டும் பண்ற வால் தனத்தையே வச்ச கண்ணு வாங்காம ரசிச்சு பார்த்திட்டு இருந்தாரு.

என் ரெண்டு குழந்தைங்களுமே உலகமகா வாலுங்க.ரெண்டுக்குமே ஒரு வயசு தான் வித்தியாசம். என் பொண்டாட்டி குழந்தை உண்டா இருந்தப்ப கண்டிப்பா பொண்ணு தான் பிறக்கனும்னு ரெண்டு முறையும் வேண்டிகிட்டேன். பொம்பள பிள்ளைனா தான் நம்ம சொன்ன பேச்சு கேட்டு சேட்டை பண்ணாம நில்லுனா நிக்கும் உட்காருனா உட்காரும்னு மனசுல ஒரு கற்பனை பண்ணி வச்சிருந்தேன். நான் கேட்ட மாதிரியே ரெண்டு தடவையும் பொண்ணு தான் குடுத்தான் ஆண்டவன்.ஆனா நான் நினைச்சதுக்கு அப்படியே எதிர்மாறா இருந்திச்சு ரெண்டும். அதுங்க செய்யாத சேட்டையே இல்ல.

அன்னைக்கும் வழக்கம் போல ரெண்டும் மாறி மாறி அடிச்சிகிட்டு சேட்டை பண்ணிட்டு இருந்திச்சு.பெருசா நான் சொந்தக்கார விஷேசம் எதுக்கும் போறதில்ல. ஆமா அங்க போய் என்ன வந்திரபோகுது. அந்த நேரத்திக்கு ஆபிஸ்ல ஓவர் டைம் பார்த்தா காசாச்சு பார்க்கலாம் நினைப்பேன். ஆனா அன்னிக்கு வேற வெளி இல்லாமா தான் ஆபிஸ்சுக்கு லீவ் போட்டுட்டு என் மாமியார் ஊருக்கு போயிட்டு இருந்தோம். என்னோட மச்சினிச்சிக்கு அன்னயில்ல இருந்து ரெண்டாவது நான் கல்யாணம் இருந்திச்சு. அவ கல்யாணத்துக்கு நான் எதுக்கு, அவ கட்டிக்க போற மாப்பிள்ளை வந்தா போதாதா, நான் வந்து என்ன பண்ண போறேன்னு கேட்டதுக்கு நீங்க எப்பவும் இப்படி தான் பணம் பணம்னு எல்லா சந்தோஷத்தையும் தொலைக்க வச்சிட்றீங்கனு என் பொண்டாட்டி ஓன்னு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிட்டா. அவ வாய் அடைக்க வேற வழி தெரியாம தான் அன்னைக்கு அவங்க கூட வேண்டா வெறுப்பா போயிட்டு இருந்தேன்.

நானே வேற வழி இல்லாமா போயிட்டு இருந்தா நான் வேலை பார்த்திட்டு இருந்த கம்பெனிகாரன் வேற அப்பப்ப போன போட்டு ,அந்த அப்டேட்ல என்ன குடுத்தீங்க, நெக்ஸ்டு வீக் டார்கெட் என்னனு ,தொல்லை பண்ணிட்டு இருந்தான்.அவன் கேக்குறதுக்குலாம் லேப்டாப்ல செக் பண்ணி பதில் சொல்லிட்டு இருந்தப்ப அதையும் சரியா பண்ண விடாம என் குட்டி வாண்டுங்க டாடி அது இதுன்னு டிஸ்டெப் பண்ணிட்டு இருந்திச்சுங்க. இன்னிக்கு மனநிலைக்கு அதுலாம் டிஸ்டர்பென்ஸா நான் பார்க்கிறதில்ல. ஆனா அன்னிக்கு மன நிலைமைக்கு நான் அப்படி இல்ல.இப்ப நான் அதுங்கல ஆசையோட வாண்டுன்னு சொல்லிட்டு இருக்கேன். அப்பலாம் இதே வார்த்தை எரிச்சலோட தான் என்கிட்ட இருந்து முக்கால்வாசி நேரங்கள் வந்திட்டு இருந்திச்சு.

ரெண்டாவது வாண்டு திடீரின்னு என் டாப்டாப் மெளஸ பிடுங்கி விட்டுட்டா. நானும் ஆத்திரத்தில சனியனே என்ன பண்றேன்னு கத்தி விட்டுட்டேன். கத்தினது தான் மாத்திரம் அவ்ளோ நேரம் அமைதியா என் குழந்தைங்கள ரசிச்சிட்டு இருந்த மனுசன், பொங்கிட்டாரு.என்ன வார்த்தை சொல்றீங்க குழந்தைங்கள பார்த்துன்னு, என்ன நோக்கி சீர ஆரம்பிச்சிட்டாரு. நான் ஒரு நொடி அவரு கத்தின கத்துல ஸ்தம்பித்து போய்டேன்.அந்நேரத்துக்கு என் பக்கத்தில இருக்க பொண்டாட்டில என்கிட்ட சண்ணடைக்கு வந்திருக்கனும் வழக்கப்படி பார்த்தா ஆனா என்ன இவரு முந்திக்கிட்டாரேனு எனக்கு ஒன்னும் புரியாம உட்காந்திட்டு இருந்தேன்.

‘ஐ யம் ஸாரி‌’

‘கொஞ்ச எமோஸ்னல் ஆயிட்டேன்.ஐ யம் ரிஷி. ஃபார்மர் சியிஓ ஆஃப் ரிஷி கன்ஸ்டர்ஸன்ஸ்’.தன்னை அறிமுகபடுத்திட்டுக் கொண்டு கையை நீட்டினார்.

‘ஐ யம் ஜெகதீஸ்’. பதிலுக்கு நானும் என்ன அறிமுக படுத்திட்டு கைய குலுக்கி கிட்டேன்.

அவரு தொடர்ந்தாரு. ‘பிள்ளைங்க சேட்டை பண்றத ரசிக்கிற பாக்கியம்லாம் கொஞ்ச காலம் தான். அப்ப அதை தவிர விட்டா திரும்ப ஏங்குனாலும் வராது.நான் பார்த்த இந்த கொஞ்ச நேரத்தில நீங்க இவங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ணவே இல்ல.உங்க நல்லதுக்காக தான் சொல்றேன்.தப்பா எடுத்திக்க வேணாம்’.

ம்ம்.’அதுலாம் சரிதான் சார்.ஆனா எங்க முடியுது. இந்த காலத்தில பணம் இல்லாம ஒன்னும் நடக்காது.அதை சம்பாதிக்கவே நமக்கு நேரம் சரியா இருக்கு. அதான் குழந்தைங்கள பார்த்திக்க அவ இருக்காளே. நினைச்ச அளவுக்கு பணம் சேர்த்திட்டா அப்புறம் சந்தோஷம அவங்க கூட இருக்கலாம்ல’

‘நான் சொல்ல வரத நீங்க இன்னும் சரியா புரிஞ்சிக்கல.என்ன முப்பது வருஷத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரி இருக்கு உங்கள இப்ப பார்க்கும்பொழுது. குழந்தைங்களுக்கு அப்பாங்கிற உறவு வெறும் பணம் சம்பாதிச்சு போட மட்டும் இல்ல.அதையும் தாண்டி நிறைய இருக்கு.அதை யாராலையும் சொல்லி புரிய வைக்க முடியாது.நீங்க தான் அனுபவிச்சு தெரிஞ்சிக்கனும்.அன்ட் ஆல்ஸோ, நீங்க நினைக்கிற மாதிரி பணம் சம்பாதிச்சு முடிச்சிட்டு நீங்க திரும்ப வர வரைக்கும் பந்தமும் பாசமும் அப்படியே அசையாம உங்களுக்காக காத்துகிட்டு இருக்காது. சில சந்தோஷங்கள் காலத்தோட பிணைக்கப்பட்டது,அது அந்த காலத்தோட நகண்டு தூரம் போய்கிட்டே இருக்கும்.நாம தான் அதை சரியா பயன்படுத்திக்கனும்.நானும் இப்படி தான் பணத்த சம்பாதிக்க கடிவாளம் போட்ட குதிரை மாதிரி ஒடுனேன் ஒரு காலத்தில.ஆனா இப்ப…….இன்னிக்கு என் பொறந்த நாள். என் பெயருல பணம் போட்டு வச்சிருக்க அத்தனை பேங்கில் இருந்தும் வாழ்த்து மெஸேஜ் வந்திருக்கு.டிஜிட்டல் உலகம் ஆச்சே.ஆனா மனுசங்க ஒருத்தர் கிட்ட இருந்து கூட வாழ்த்து வரல.நான் எந்த அளவு பணம் சேர்க்கணும் நினைச்சேனோ , அதுக்கும் அதிகமான பணம் என்கிட்ட இருக்கு. ஆனா பாசமா ஒரு வார்த்தை பேச யாரும் இல்ல’.

‘மனைவி குழந்தைங்களாம்’ என்று தயங்கி தயங்கி நான் கேட்டேன்.

‘என் மனைவி என்ன விட்டு போய் பத்து வருஷம் ஆச்சு.குழந்தைங்க…..’

அப்படியே நிறுத்தி ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு, பின் தொடர்ந்தார்.

நான் அவங்களுக்கு ஸாம்பில காமிச்ச வாழ்க்கையை அவங்க அப்படியே ஃபாலோ பண்ணிகிட்டு இருக்காங்க. அவங்க சின்ன வயசுல நான் அவங்கள கண்டுக்காம, பணத்து பின்னாடி ஓடுனேன். இப்ப அவங்க பணத்துக்காக மட்டும் ,என்ன கண்டுக்கிற மாதிரி அப்பப்ப நடிச்சிட்டு இருக்காங்க.என் பொறந்த நாள் நியாபகம் வைக்கிற அளவுக்கு அவங்களுக்கு என் மேல் பாசம் கிடையாது. நான் அவங்கள குறை சொல்ல ஒன்னுமில்ல. விதைச்சது நான் தானே.இப்ப கூட ரயில்ல போன நாலு புது சொந்தங்கள் டெம்ரவரியா கிடைக்குமேன்னு ,அந்த சந்தோஷத்துக்காக தான் ரயில்ல வரேன். இருந்த சொந்தங்கள தொலைச்சிட்டு புது சொந்தம் தேடி அலையுறேன். வேடிக்கையா இருக்குல.

தன்னை தானே ஏளனம் செய்து புன்னகைத்தார் அவர்.

எனக்கு சுருக்கென்று வாழ்க்கை விளங்கிச்சு. வாழ்த்தை வச்சு வாழ்க்கைய சில நிமிடங்களில் புரிய வச்சிட்டாரு அவரு எனக்கு.ஒருவேளை அன்னிக்கு அந்த சந்திப்பு நடந்திருக்கலேனா பட்டு தெரிஞ்சிட்டு இருந்திருப்பேன் அந்த வலியை காலங்கள் கடந்த பிறகு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *