வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 9,803 
 

விடுமுறையன்றும் வழக்கம் போலவே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது நியூயார்க்கின் அந்த சாலை. வாகனத்தின் இரைச்சல்கள் சுவர்க்கோழிப் போல் ஓயாமல் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தன. அருணுக்கு மெல்ல விழிப்பு வந்தது. கண்ணைத் திறக்க விருப்பமில்லாமல் மெதுவாய்த் திறந்தான். நேரம் பத்தைத் தாண்டி பதினொன்றை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது.

“என் செல்லக் குட்டி எழுந்திருடா” என்று அம்மாவின் கொஞ்சலும் கெஞ்சலும் கலந்து வரும் சொற்கள், “கூ கூ” என்று ஏதோ ஒரு மரத்திலிருந்து கூவும் குயிலின் ஓசை, எப்போதுமே ஆரத் தழுவிக் கொள்ளும் கிராமத்துக் காற்று, “என்னடா சவுக்கியமா” என்று வீதிக்கு வீதி நலம் விசாரிக்கும் உறவுகள், நண்பர்களோடு சினிமா,விளையாட்டு என ஊர் சுற்றும் நேரங்கள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு தனிமையில் என்ன ஒரு வாழ்க்கை? அவனது நினைவலைகள் பின்னோக்கிச் சென்றன.

தேவைக்கேற்றப் பணத்தை இந்தியாவிலேயே சம்பாத்தித்தாலும், வெளிநாட்டில் வேலைப் பார்ப்பதை ஒரு பெருமையாகக் கருதும் சிறுமைத் தனமும், மென்மேலும் பணம் சேர்க்க வேண்டும் என்னும் வெறியும்தான் அவன் வேலைக்காக அமெரிக்கா வரக் காரணமாயிற்று. வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். எதையும் அவன் கேட்க மறுத்து விட்டான். அவனது எண்ணம் எல்லாம் பணம், வெளிநாட்டு மோகம் இதில் மட்டுமே இருந்தது.

ஆரம்ப காலத்தில் அவனுக்கு இவ்வாழ்க்கை இனிப்பாகத் தான் இருந்தது. ஆனால் போகப்போக தனிமையும் வெறுமையும் அவனை ஆக்கிரமிக்கத் தொடங்கின. மதுவும், மாதுவும், புகையும் அவன் வெறுமையை நிரப்பின. விடுமுறையே இல்லாமல் எல்லா நாளும் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. தங்கை கல்யாணம் முடிந்த கையோடு வந்தவன், தங்கையின் குழந்தை பிறப்பு, அவன் அப்பாத்தாவின் சாவு, மாமன் மகன் திருமணம் என எந்த சுப, துக்க காரியத்திற்கும் செல்ல முடியவில்லை. வேலை அவனைத் தேவதையாக அரவணத்து அரக்கியாக மாறி இருந்தது. எல்லாத் தொழிற்சாலையும், அலுவலகங்களும் உயிரை முற்றிலுமாக உறிந்து உடலை சக்கையாகத் துப்புபவைதான். வெகுநாள் கழித்து இன்றுதான் விடுமுறை கிடைத்தது.

அருணுக்கு மனம் எதிலும் லயிக்கவில்லை. யாருக்காக இப்படி எல்லாவற்றையும் இழந்து, தனக்கே பிடிக்காமல் ஒரு வாழ்க்கையை வாழ்கிறோம் என்று தன்னைத்தானேக் கேட்டுக் கொண்டான். தன்னைத் தானேத் தோண்டிப் பார்க்கும்போதுதான், தனக்குள் இருக்கும் குப்பைகள் எல்லாம் வெளியே சென்று, புதைந்து இருக்கும் வைரங்கள் வெளிவரும். எது எப்படியாயினும் அடுத்த வாரம் ஊருக்கு செல்வதென முடிவெடுத்தான். அடுத்த நாள் அலுவலகம் சென்றதும் , விடுப்பு விண்ணப்பத்தை சமர்ப்பித்தான். ஆனால் அவ்ன் விடுப்பு எடுப்பதை யாரும் அனுமதிக்கவில்லை. எதையும் பொருட்படுத்தாமல் ஊருக்குப் புறப்பட்டு வந்துவிட்டான். திடீரென்ற அவன் வருகை, அவன் குடும்பத்தினருக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை அளித்தது.

“எவ்வளவு நாள்டா இருப்பே” என்ற அம்மாவின் அவசரக் கேள்வியில் சேயைப் பிரிந்த தாயின் தவிப்பு தென்பட்டது.

” இரண்டு வாரம் மா” என்று புன்னகையுடன் பதிலளித்தான்.

அவன் ஊருக்கு வந்தது அவன் தங்கைக்கும் தெரிவிக்கப்பட்டது. தன் இரண்டு வயது மகனோடு அவளும் ஊருக்குப் புறப்பட்டு வந்துவிட்டாள். அண்ணனுடன் எல்லா விசாரிப்புகளும் முடிந்தன.

“மாப்பிள்ளை வரலையா” என்றான் அருண்.

“வெள்ளிக் கிழமை சாயந்திரம் வரேன்னார்” என்றாள் அவன் தங்கை கலயாணி.

“மாமா பாருடா!” என்று தன் மகனுக்கு புகைப்படத்தில் காட்டிப் பழக்கிய உருவத்தை நேரிடையாக அறிமுகப் படுத்தினாள் கல்யாணி. இரண்டரை வயதுக் குழந்தை சிறிது தயக்கத்துடன் அவன் அருகில் சென்றது. அவனை அள்ளி மார்போடு வாரி அணைத்துக் கொண்டான் அருண். இந்த சந்தோஷத்தை எத்தனை கோடிகள் கொடுத்தாலும் வாங்கிவிட முடியாது என்பது அவனுக்குப் புரிந்தது.

“மாமனும் மருமகனும் கொஞ்சி குலாவுங்க நான் அம்மாகிட்டேப் போய் வேலையைப் பார்க்கிறென்” என்றுப் புறப்பட்டாள் கல்யாணி.

“டேய் இங்கே பாரு! உனக்கு மாமா என்ன எல்லாம் வாங்க்கிட்டு வந்திருக்கேனு” என அவனுக்கு வாங்கி வந்த விளையாட்டு சாமான்களை காண்பிக்க , வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தை, “மாமா, எனக்கு ஒரு முத்தா கொடு” என்று தன் நன்றியை வெளிப்படுத்தியது. அனைத்து சாமான்களையும் எடுத்துக் கொண்டு குழந்தை விளையாடப் புறப்பட்டான்.

” எங்க ஆத்தா உசிரு போற நேரத்துலக் கூட உன்னைத்தாண்டா கேட்டுகிட்டு இருந்தது. சொந்த பந்தத்தை விட்டுட்டு அப்படி என்ன வேலையோ! என்னவோ என் ஆத்தாளுக்காவது நான் இருந்தேன். எனக்கு யார் இருக்கப் போறாங்களோ” என்ற தன் அப்பாவின் ஆதங்கத்தைக் கேட்டு பதில் சொல்ல முடியாதவனாய் அமர்ந்திருந்தான். “இங்கே பாருடா, காசு பணம் எல்லாம் நம்மளை சந்தோஷப் படுத்தத்தான், சந்தோஷத்தை தொலைச்சிட்டு பணத்தைத் தேடி என்ன பிரயோஜனம். எங்க கடைசி மூச்சு இருக்கிறவரைக்குமாவது இங்கே இருடா. நம்ம பட்டணம் னா பொழுது விடிஞ்சா வந்துடலாம்” என்று தன் மகனின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார் மாரிமுத்து. அவரது கரங்களின் இறுக்கம் அவன் மனதின் இறுக்கத்தை கரைத்துக் கொண்டிருந்தது.

“அப்பா! நான் தோட்டம் வரைக்கும் போயிட்டு வரேன்” என்று தற்காலிகமாக விடைபெற்றான் அருண். அங்கு அவன் தங்கையின் குழந்தை அழுது கொண்டிருந்தது.

கல்யாணி அவனிடம் “ஏண்டா செல்லம். . அழறே! எதையாவது தொலைச்சுட்டீயா” என்றாள்.

” இல்லைமா . அவன் என்னை அடிச்சுட்டான்” என்ற பக்கத்திலிருந்த இன்னொரு குழந்தையைக் காண்பித்தது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அருணுக்கு கண்கள் கலங்கின. அவன் அழும்போதெல்லாம் அவன் தாய் கற்பகம் அவனை அப்படிதான் கேட்பாள். இதுவரைப் பூட்டி வைத்திருந்த பாசம் எல்லாம் அழுகையாக வெடித்தது. அருண் கதறத் தொடங்கினான்.

குழந்தை அவன் அருகில் வந்தது. “மாமா எதையாவது தொலைச்சுட்டீயா” என்று பரிவுடன் கேட்டது.

“இல்லைடா தொலைச்சுட்டு இருப்பேன்” என்று கூறிவிட்டு எழுந்துப் புறப்பட்டான். குழந்தை புரியாமல் விழித்தது.

மனம் தீர்க்கமாய் யோசிக்க ஆரம்பித்தது. நேராகச் சென்று இணையதளத்தில் சென்னையில் உள்ள அனைத்து வேலை வாய்ப்புகளுக்கும் பதிவுசெய்தான். அதே சமயம் மின்னஞ்சலில் அமெரிக்காவில் உள்ள தன் பழைய அலுவலகத்திற்கு ராஜினமா கடிதத்தையும் அனுப்பி வைத்தான். கிடைப்பதைப் பெற்றுக் கொள்ள வாழ்க்கை ஒன்றும் பிச்சை இல்லை. நமக்கு என்ன வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அருண் முற்றிலும் தெளிவடைந்தான்.

வீட்டில் அம்மா வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்தாள். “அம்மா, இனிமேல் நான் உன்னைவிட்டு எங்கேயும் போகப் போறதில்லை. இங்கேயேதான் வேலை செய்யப் போறேன். காலைநீட்டு. உன்மடிமேல கொஞ்ச நேரம் படுத்துக்கிறேன்” என்றான். அவள் காலை நீட்டினாள். தாயின் கருவறையில் தூங்குவதிலும், மடியினில் சோகம் தொலைப்பதிலும் தான் எத்தனை ஆனந்தம்.

“உன்னைப் பிரிஞ்சு எத்தனை நாள் தெரியுமா அழுதிருக்கேன். யருமே இல்லாம ஒரு அநாதைமாதிரி இருந்ததுமா வாழ்க்கை. ஆனா எல்லாமே நீ பக்கத்தில் இருக்கும் போது பொடிபொடியா போயிடுதுமா. தெய்வத்தை எல்லா இடத்திற்கும் கூடவே கூட்டிட்டுப் போக முடியாது. தெய்வம் இருக்கிற இடத்திற்குதான் நாமப்போய் பார்க்கனும். நீதான்மா என் தெய்வம். அதான் உன்னைப் பார்க்க வந்துட்டேன். இனிமேல் உன்கூடவே இருப்பேன்” என்று சொன்னான் அருண்.

கற்பகத்தின் கண்ணீர் அவன் கன்னங்களை நனைத்தது. தேம்பி அழ நினைத்தவன், தாயின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு மௌனமாக அழ ஆரம்பித்தான். “என்னடா சின்னக் குழந்தைமாதிரி” என்று அருணின் கண்ணீரைத் துடைத்து விட்டாள் கற்பகம். தொலைந்துபோன எல்லாமும் கிடைத்து விட்டது போலோர் பிரமிப்பு அருணுக்கு. அந்த பிரமிப்பில் உலகம் யாவையும் மறந்து மழலையாக தாயின் மடியில் உறங்க ஆரம்பித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *