வாழ்க்கைத்தரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2017
பார்வையிட்டோர்: 7,157 
 

“அப்பா! வரும் வெள்ளிக்கிழமை அண்ணன் இங்கு வருவதாக இ மெயில் அனுப்பியிருக்கிறது!” குதூகலமாக குழந்தையைப்போல் சொன்னாள் தேன்மொழி. நீண்ட இடைவெளிக்குப்பின் பிறந்தவள். மேல்நிலை இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். குதூகலம் தொற்றிக்கொள்ள, அவள் அம்மாவிடம் சொன்னேன், “அப்பாடா! ஐந்து வருடங்கள் கழித்து நம்மூருக்கு வருகிறான் பாரி. எத்தனை நாட்கள் விடுமுறை என்று தெரியவில்லை. எல்லா ஏற்பாடுகளையும் செய்யவேண்டும்” அவளோ “ஒரேமகனை இத்தனை வருடபிரிவிற்குப் பிறகு பார்க்கவிருப்பதை நினைக்கும்போ தே படபடவென்றிருக்கிறது” என்றாள்.

வணிக நிர்வாகம் படிப்பு முடித்தபின் இங்கு வரவிருந்தவன், உடனடியாக வெளிநாட்டு வேலையில் சேரஅழைப்புவர, அங்கிருந்தே புறப்பட்டான்: இப்போதுதான் வருகிறான். பொறியியல் முடித்தபின் வளாக நேர்காணலில் கிடைத்த வேலையும், நாட்டின் முதன்மையான மேலாண்மை பல்கலைக் கழகத்தில் முதுகலை வணிக நிர்வாகம் படிக்க அழைப்பும், ஒருசேர வந்தபோது அவன் விருப்பப்படி படிக்கவே சொன்னோம். ஆர்வமுள்ள துறையில் மேலும்படிக்க ஊக்குவிப்பதுதானே பெற்றோரின் கடமை. கல்விக்கடன் பெற்று அவனை கடனாளியாக்காமல், கிராமத்திலிருந்த பெரிய வீட்டை விற்று படிப்புச்செலவை சமாளித்தோம். இங்கிருப்பது ஓடுவேய்ந்த வீடு, கல்தரைதான். பரவாயில்லை. உடன் வேலை பார்ப்பவர்கள் கடன் வாங்கி வீட்டை இழைத்துக்கட்டிக் கொண்டிருக்கும்போது, என்னால் அப்படிச்செய்ய இயலவில்லை.

முதுகலை வணிக நிர்வாகம் படிக்கும்போது காலாண்டு அரையாண்டு விடுமுறைகளில்கூட பாரிக்கு வேலை வாய்ப்பைக்கொடுக்க நிறுவனங்கள் தயாராக இருக்க, படிப்பிற்குப் பிரயோசனமாக இருந்தால் மட்டுமே பார்க்கச் சொன்னேன்: பணத்திற்காக அல்ல. செலவிற்காக அவன் எந்த சிரமமும் படக் கூடாது என்பதில் சிரத்தையாக இருந்தேன். அவ்வளவு ஏன்? அக்கால கட்டத்தில் எனக்குக்கிடைத்த பதவி உயர்வை நல்வாய்ப்பாக அனைவரும் நினைக்க, நானோ அதனை உதறித் தள்ளினேன். அது வேறுமாநில மாறுதலுக்குட்பட்டது. பாரியின் படிப்பு முடியும் தருவாயில், என் கண்ணோட்டம் அதைநோக்கியே இருந்தது. பொறுப்பான தந்தையாக இதைக்கூட செய்யக்கூடாதா என்ன? எல்லா இழப்புகளையும் ஈடு செய்வதுபோல், அவனும் நன்றாகப்படித்து நல்ல நிலைக்கு வந்துவிட்டான். உலகத்தின் முதன்மையான கணினி மென்பொருள் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பதவியை இந்த இளம் வயதிலேயே வகித்துவருகிறான். ஒரு சிறுகுறை: உயர் ந்தபதவிக்குண்டான வேலைகள் அதிகம் இருப்பதால், எங்களுடன் அடிக்கடி அவனால் முன்புபோல் பேசமுடியவில்லை. நாங்களும் எந்த கோரிக்கையையும் அவனிடம் வைக்கவில்லை

வெள்ளிக்கிழமையும் வந்தது. வீரமணி காரை ஏற்பாடு செய்துகொண்டு நானும் தேன்மொழியும், விமானநிலையத்தில் காத்திருந்தோம். அவனுக்குப் பிடித்தமான உணவுவகைகளை வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தாள் அவன் அம்மா. பாரியை வரவேற்பதாக எழுதிய அட்டைகளை ஏந்தி சிலர் நிற்பதாக, தேன்மொழி சொன்னாள். அவன் நண்பர்கள் போலும். விமானம் வந்து விட்டதை அறிவித்தார்கள். சம்பிரதாயங்கள் முடிந்து ஒவ்வொருவராக வந்தனர். தேன்மொழிதான் சட்டென்று கண்டுபிடித்தாள். “அண்ணன் நீலநிறக்கோட்டு அணிந்திருக்கிறது. தாடி வேறு” என்றாள். கண்ணாடியைத் துடைத்து போட்டுக்கொண்டு, கூர்மையாகப்பார்த்தேன். சற்று குண்டாகி யிருக்கிறான். அருகில் வந்தபின் கையை நீட்டினான்:கட்டிபிடித்துக் கொண்டேன். அவன் தேன்மொழியின் தலையில் குட்டி,“என்ன? இவ்வளவு உயரமாகிவிட்டாய். அம்மா வரவில்லையா? எல்லோரையும் இங்கேயே பார்த்துவிடலாமென்றல்லவா நினைத்தேன்” என்றான். “வாப்பா! வீரமணி காரையெடுத்து வந்திருக்கி றோம். நம் வீட்டிற்குப்போகலாம்” என்றேன். அவனோ “இல்லையப்பா! அங்கே பாருங்கள். நட்சத்திர ஓட்டலிலிருந்து என்னை அழைத்துச்செல்ல கார் எடுத்துவந்துள்ளார்கள். அஙகுதான் தங்கப்போகிறேன். இன்னும் இரண்டு மணிநேரத்தில் ஒரு முக்கியமான மீட்டிங். பின்னர் சிலஅலுவலக வேலைகள். டெல்லியில் இரண்டு நாட்கள். வேலைமுடிந்தபின் அங்கிருந்து நேரேசென்று விடுவேன். நேரம் கிடைத்தால் வீட்டிற்கு வருகிறேன்.” என்று கையசைத்து விரைந்தான் பாரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *