வானம் முடியும் இடம்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,652 
 

இந்த வரனாவது, மாலதிக்கு அமைந்து விட வேண்டும் என்று, கடவுளை வேண்டிக் கொண்டே, அந்த பள்ளிக்குள் நுழைந்தார் கிருஷ்ணமூர்த்தி. “ஒரு தனியார் பள்ளி ஆரம்பித்து நடத்துகிறார் என்றால், மாப்பிள்ளை நல்ல வசதியாகத்தான் இருக்க வேண்டும்…’ என்று நினைத்துக் கொண்டார். வாத்தியார் என்பதால், அடிப்படையாக, குறைந்தபட்ச ஒழுக்கத்திற்கு எந்தக் குறையும் இருக்காது என்று, அவர் மனம் கணக்கு போட்டு வைத்திருந்தது. கொஞ்ச தூரம் நடந்து வந்ததில், முகம் வியர்த்து, வழிந்தது. தோளில் கிடந்த துண்டை எடுத்து, முகத்தில் காற்று வர வீசிக் கொண்டார். இந்த வரன், எப்படியாவது முடிந்து விட வேண்டும் என்ற பதற்றமும், பட படப்புமே அவரை அதிகம் தொற்றிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும், இவர் மாப்பிள்ளை பார்ப்பது, தன் மகளுக்கல்ல; தன் நண்பனின் மகளுக்கு.
முதல்வரின் அறையை ஒட்டியிருந்த அந்தப் பள்ளியின் வரவேற்பறை சிறியதாக இருந்தாலும், அழகாக இருந்தது. ரயில் ஓடுகளால் வேயப்பட்ட அந்தப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் படிப்பதாக, எதிர்ப்பட்ட ஒரு ஆசிரியர் தகவல் சொன்னார்.
“”பிரின்சிபல் சார், மீட்டிங்ல இருக்கார்… கொஞ்சம், “வெயிட்’ பண்ணுங்க,” என்று சொல்லிவிட்டு போனாள் ஆயா.
தன் முன் நிற்கும் ஆசிரியர்களுக்கு, இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து கொண்டிருந்தான் ஹரிகுமார். அதிகம் போனால் வயது, 30ஐ தாண்டாது. “மாப்பிள்ளை ஏதோ லட்சியவாத பள்ளி நடத்துவதாகவும், லாப நோக்கத்தோடு பள்ளி நடத்தவில்லை…’ என்றும், புரோக்கர் சொன்னது ஞாபகம் வந்தது கிருஷ்ணமூர்த்திக்கு.
வானம் முடியும் இடம்!“”உங்களில் சில பேர், ஸ்கேல் வைத்து மாணவர்களை அடிக்கிறதா கேள்விப்பட்டேன். குழந்தைகளை அடிக்காதீங்கன்னு பல தடவை சொல்லிட்டேன். சும்மா மிரட்டுங்க போதும். அன்பால திருத்த முடியாதவங்கதான், ஸ்கேல் யூஸ் பண்ணுவாங்க. இனிமே எந்த டீச்சரும், மாணவர்களை அடிக்கறதை நான் பார்க்கக் கூடாது.
“”அப்புறம் நிறைய டீச்சர்கள், குழந்தைகளுக்கு அதிக தடவை, இம்போசிஷன் கொடுக்கறீங்க. அதிகபட்சம், இரண்டு அல்லது மூணு தடவை இம்போசிஷன் எழுதச் சொல்லலாம். ஒரு மனப்பாட செய்யுளை, 50 தடவை எழுதச் சொல்லி இருக்கீங்க… தப்பு இல்லையா?
“”மாணவர்கள் கிட்ட கோபப்படற மாதிரி நடிங்க; ஆனா, கோபப்படாதீங்க. ஸ்கூல் பீஸ் கட்டாத மாணவர்கள் கிட்ட கூட, நீங்க கடுமையை காட்ட வேண்டாம். ஸ்டூடண்ட்ஸ் டைரியில், எழுதி அனுப்புங்க போதும். எல்லாருமே ஏழைக் குழந்தைகள் தான்; முடிஞ்ச போது கட்டட்டும்.
“”டீச்சர்கள் முதல்ல நல்ல ஒழுக்கத்தோட நடந்துக்கணும். நாமதான் அவங்களுக்கு, ரோல் மாடல். பெற்றோர் வார்த்தைகளை விட, உங்க வார்த்தைகளுக்குத்தான் மாணவர்கள்கிட்ட வேல்யூ அதிகம்.
“”நம்ம பள்ளியில படிக்கிற குழந்தைகள் எல்லாம், கிராமத்தை சேர்ந்தவங்க; படிக்காத குடும்பத்தை சேர்ந்தவங்க. நகரத்துல படிக்கிற குழந்தைகளுக்கு சமமா, அறிவை வளர்க்கற வேலையைத்தான், நாம செய்யணும். நம்ம ஸ்டூடண்ட்ஸ் குறைஞ்சது, 10 பேர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகள்ல உட்காரணும். இதுதான் என்னோட லட்சியம்; இந்த ஸ்கூல் ஆரம்பிச்சதோட நோக்கம். இதை முதல்ல புரிஞ்சுக்கிட்டு, குழந்தைகளை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லுங்கள்,” என்று கூறி முடித்தான் ஹரிகுமார்.
அவர்கள் கலைந்து சென்று விட்டனர்.
எல்லாவற்றையும், வெளியில் அமர்ந்தபடியே கேட்டுக் கொண்டிருந்தார் கிருஷ்ணமூர்த்தி. அவருக்கு, ஆச்சரியமாக இருந்தது. லாப நோக்கத்தோடு, பணம் பறிக்கும் எத்தனையோ பள்ளிகளை அவர் பார்த்திருக்கிறார். பணத்தை முக்கியமாக கருதாமல், இப்படியொரு பள்ளியை, தொடர்ந்து நடத்த முடியுமா என்பது அவருக்கு சந்தேகமாக இருந்தது. ஆனாலும், இந்தச் சின்ன வயதில், இவ்வளவு மெச்சூர்டாக, ஹரிகுமார் பேசியது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
உள்ளே சென்ற போது, ஹரிகுமார் எழுந்து நின்று, வணக்கம் சொன்னது, இன்னும் சந்தோஷத்தை தந்தது.
“”உட்காருங்கய்யா…”
“”நன்றி தம்பி… உங்களை தம்பின்னு சொல்லலாமில்ல. தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?”
“”அதனால என்னங்க? உறவோட வந்திருக்கீங்க… ரொம்ப சந்தோஷம்.”
“”ஆமா தம்பி… உங்களோட உறவை ஏற்படுத்திக்கலாம்ன்னு வந்திருக்கேன். உங்களுக்கு பொண்ணு பாத்துக்கிட்டு இருக்கிறதா, பக்கத்துல இருக்கிற திருமண தகவல் மையத்துல சொன்னாங்க. அது விஷயமாக பேசிட்டு போகலாம்ன்னுதான் வந்தேன்.”
“”சந்தோஷம்… பால் சாப்பிடுங்க; ஆறிடப் போகுது,” மேஜை மீதிருந்த பால் டம்ளரை காட்டியபடியே சொன்னான் ஹரி.
“”என் நண்பன் சுப்ரமணியன். இங்கதான் பக்கத்துல குன்னத்தூர். அவரும், உங்களை மாதிரி ஆசிரியரா இருந்தவர்; இப்போது, ஓய்வு பெற்று விட்டார். அவரோட பொண்ணு, டிகிரி முடிச்சிருக்கா. பி.எஸ்.சி., பிசிக்ஸ்., பி.எட்., முடிச்சுட்டான்னா, உங்க கூட ஸ்கூலுக்கு வந்திடுவா.”
மூச்சு விடாமல் பேசினார் கிருஷ்ணமூர்த்தி.
“”அப்புறம் நீங்க மற்ற ஆசிரியர்கள் கிட்ட பேசினது எல்லாம் கேட்டுட்டுத்தான் இருந்தேன். எப்படி வருமானத்தை பெரிய அளவுல எதிர்பார்க்காமல், ஸ்கூல் நடத்த முடியுது?”
“”ஏழை குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவையும், நல்ல எதிர்காலத்தையும் தரணும்ங்கிறதுதான் சார் என்னோட ஆசை, விருப்பம், லட்சியம் எல்லாமே! இதை, சொல்லால் மட்டும் சொல்லக் கூடாது; செயலிலும் காட்டணும்ன்னுதான் இந்தப் பள்ளியை ஆரம்பிச்சேன். எனக்கு அப்பா இல்ல, அம்மா மட்டும்தான். குடும்பம் நடத்தற அளவுக்கு, வருமானம் வருது. இது சர்வீஸ்; பிசினஸ் இல்ல. அதனால்தான், இதுல எந்த லாபத்தையும் நான் எதிர்பார்க்கல.
“”இந்த அளவுக்கு இந்த பள்ளிக் கூடத்தைக் கொண்டு வர்றதுக்கு, நான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன் சார்… வாடகை இடம் தான். இந்த இடத்தை லீசுக்கு வாங்கி, பில்டிங் கட்டி, அங்கீகாரம் வாங்கறதுக்குள்ள போதும், போதும்ன்னு ஆயிடுச்சு. ஆனா, இப்போ பிரச்னை இல்லாம போய்கிட்டிருக்கு. பக்கத்துல இருக்கற, அஞ்சாறு கிராமத்துலேர்ந்து வர்ற குழந்தைங்க, இங்க படிக்கிறாங்க. எல்லாம் ஏழை பாழைங்க. அவங்களுக்கு, சேவை செய்யறோம்ன்னு, நமக்கு திருப்தி,” என்று கொஞ்சம் புன்னகையோடு சொன்னான் ஹரி.
“”ஆனா, இவ்ளோ படிச்சிருக்கீங்க… நீங்க ஏன், டி.ஆர்.பி., எக்சாம் எழுதி, அரசாங்க பள்ளிக் கூடத்துக்கு, வாத்தியாராக போகக் கூடாது. பல பிரச்னைகளுக்கு இடையில், இந்த பள்ளியை உங்களால் தொடர்ந்து நடத்த முடியுமா?”
“”இல்லங்கய்யா… இது மாதிரி, ஏழைக் குழந்தைகளுக்கு, ஆங்கில பள்ளிக்கு நிகரா பாடம் சொல்லிக் கொடுத்து, அவங்களை தரமான மாணவர்களாக உருவாக்கி, அவுங்கள்ல, 10 பேரை, பெரிய பதவிக்கு கொண்டு வரணும்; அதான், என் ஆசை. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, அதுதான் என் லட்சியம்.”
“”உங்கள் லட்சியம் வெல்ல வாழ்த்துக்கள் தம்பி… உங்களோட போட்டோவும், ஜாதகமும் கொடுத்தீங்கன்னா, பொண்ணோட அப்பாக்கிட்ட காட்டி, பொருத்தம் பார்த்துட்டு வந்துடுவோம்.”
எழுந்து நின்றபடி கேட்டார் கிருஷ்ணமூர்த்தி.
தன் டேபிள் டிராயரை திறந்து, தயாராக வைத்திருந்த போட்டோவையும், மஞ்சள் தடவிய ஜாதகத்தையும் எடுத்து, ஒரு கவருக்குள் போட்டு நீட்டினான் ஹரி.
ஜாதகம் பொருந்தி இருந்தாலும், இப்படியெல்லாம் நடக்கும் என்று, அவர் எதிர்பார்க்கவில்லை. ஒரு வாரம் கழித்து, ஜாதகம் பொருந்தி இருக்கிறது என்று சொல்லி, மேற்கொண்டு பேசலாம் என்று கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமணியனையும் அழைத்துக் கொண்டு வந்த போது, அதிர்ச்சி காத்திருந்தது.
“”இன்னைக்கு ஸ்கூல்ல, சி.இ.ஓ., இன்ஸ்பெக்ஷன் நடக்குது சார்… உள்ளே போக முடியாது.”
பள்ளியின் வாட்ச்மேன் சொன்ன போது, வருத்தமாக இருந்தது இருவருக்கும்.
“”என்ன திடீர்ன்னு இன்ஸ்பெக்ஷன்?”
“”எல்லாம் பாலிடிக்ஸ்தான் சார்… எங்க ஸ்கூல் பிரின்சிபால் ஹரிகுமார், தங்கமான மனுஷன். ஏதோ ஏழைகளுக்கு, தன்னால முடிஞ்ச உதவியை செய்யறார்; அது, பல பேருக்கு பிடிக்கல சார்.”
“”புரியலியே…”
“”எல்லாம் பக்கத்து ஸ்கூல்காரங்க செய்ற வேலை சார்… பக்கத்து ஊர்ல, ஸ்கூல் நடத்தறவரு, பெரிய பண முதலை. பெரிய துணி மில் ஒண்ணு வெச்சிருக்கார்ன்னா பாத்துக்கோங்களேன். அந்த ஸ்கூல்ல, பீஸ் அதிகம்ன்னு ரொம்ப பசங்க சேரலை. நம்ம ஸ்கூல்ல பீஸ் கம்மி; அதனால், கூட்டம் அதிகம். அந்த பொறாமைல, நம்ம ஸ்கூல் மேல பெட்டிஷன் போட்டுருக்காங்க.
“”ஸ்கூலுக்கு கிரவுண்ட் இல்ல, பாதுகாப்பு இல்லைன்னு கண்டதையும் எழுதிப் போட்டுட்டாங்க. அதிகாரிகளும், பணத்தை வாங்கிக்கிட்டு, இங்க வந்து இன்ஸ்பெக்ஷன், ரெய்டுன்னு ஏதேதோ பண்ணிட்டு இருக்காங்க. நல்லதுக்கு காலமில்லை சார்.”
மிகவும் வெறுத்து போய் சொல்லி கொண்டிருந்தான் வாட்ச்மேன்.
“”நீ வருத்தப்படாதே கிருஷ்ணமூர்த்தி… இதுல என்ன இருக்கு? தனியா பள்ளிக்கூடம் நடத்தறது அவ்வளவு ஈசி இல்ல. ஏதோ லட்சியவாதி, சேவை செய்யறார்ன்னு சொன்னதால வந்தேன். ஜாதகமும் பொருந்தி இருந்துச்சு; ஆனா, வந்த இடத்துல இப்படி ஆயிடுச்சே.”
கிருஷ்ணமூர்த்திக்கு, ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் சுப்ரமணியன்.
“”இந்தக் காலத்துல, இது மாதிரி லட்சியங்கள் எல்லாம் எடுபடவும் முடியாது; சாத்தியப்படவும் செய்யாது. ஒரு வாரம், கழிச்சு வந்து பாரு கிருஷ்ணமூர்த்தி. ஸ்கூல் நடந்தா மேற்கொண்டு பேசுவோம்; இல்லைன்னா ஜாதகம் பொருந்தலன்னு சொல்லி, திருப்பிக் கொடுத்துரு. ஸ்கூல் இல்லைன்னா வருமானம் எப்படி வரும்? லட்சியம் எப்படி நிறைவேறும்?”
சுப்ரமணியன், கோபமாக பேசிய போது, என்ன செய்வது என்று தெரியாமல், நின்று கொண்டிருந்தார் கிருஷ்ணமூர்த்தி.
ஒரு வாரம் கழித்து வந்து பார்த்த போது, வருத்தப்பட்டது போலவே நடந்திருந்தது. “சரியான கழிப்பிட வசதி இல்லை, கட்டட வசதி இல்லை…’ என்று சொல்லி, பள்ளியை இழுத்து மூடி, சீல் வைத்திருந்தனர். அங்கு படித்த மாணவர்களை எல்லாம், வேறு பள்ளிகளில் சேர்த்து விட்டதாகவும், தகவல் கூறினர். இது, மிகவும் வருத்தமாக இருந்தது கிருஷ்ணமூர்த்திக்கு.
ஹரிகுமார் வீட்டை தேடி, கண்டுபிடித்து சென்ற போது, ஹரிகுமார், ஏதோ ஒரு புத்தகத்தை, புரட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
“”எல்லாம் கேள்விப்பட்டேன் தம்பி… பக்கத்து ஸ்கூல்காரங்க பாலிடிக்ஸ் செய்து, உங்க ஸ்கூலை நடத்த விடாமல் செய்துட்டதா சொன்னாங்க.”
பதிலேதும் பேசாமல், அவரைப் பார்த்தான் ஹரிகுமார்.
“”நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, நீங்க, டி.ஆர்.பி., எக்சாம் எழுதுங்க… கவர்ன்மென்ட் ஜாப் போங்க. அதுதான், என்னைக்குமே சேப்டி. இந்த ஸ்கூல் நடத்தறதெல்லாம் வேணாம்.”
“”நானும் அப்படியொரு முடிவுக்கு வந்துட்டேன் சார்… டி.ஆர்.பி., எக்சாமுக்குத்தான் படிச்சிட்டிருக்கேன்.”
“”அப்புறம் வருத்தப்பட்டுக் காதீங்க தம்பி… உங்க ஜாதகம், மாலதி ஜாதகத்தோட பொருந்தல. கனமும், தினமும் இல்லைன்னு, ஜோசிரியர் சொன்னார். அதுதான், உங்க ஜாதகத்தையும், போட்டோவையும் திருப்பிக் கொடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்.”
அவன், ஜாதகத்தையும், போட்டோவையும் வாங்கி வைத்துக் கொண்டான்.
“”பரவாயில்லை சார்… அப்பப்ப இந்தப் பக்கம் வாங்க.”
அவர் புறப்பட எழுந்த போது, “”உள்ளே வரலாமா சார்?” என்று கேட்டபடியே, ஏழெட்டு மாணவர்கள் உள்ளே நுழைந்தனர்.
எதற்கு இவர்கள் இங்கு வருகின்றனர் என்பது போல், ஹரிகுமாரை பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி.
“”அதான் நான் சொல்லியிருக்கேனே சார்… இந்த ஊர்ல இருந்து, 10 பேரையாவது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக்கணும்ன்னு. அதான், இவங்களை வீட்டுக்கு வரவழைச்சு, இலவசமா டியூஷன் சொல்லித் தர்றேன்… எங்க சொல்லிக் கொடுத்தா என்ன சார்… நாம லட்சிய பாதையில தொடர்ந்து முன்னேறணும்… அதுதானே முக்கியம்.”
நம்பிக்கையுடன் மெலிதாக புன்னகைத்தான் ஹரிகுமார்.
“லட்சியவாதிகள், தங்கள் வழிமுறைகளில் தோற்று போகலாம்; ஆனால், லட்சியங்கள் ஒருபோதும் தோற்பதில்லை…’ எப்போதோ, யாரோ சொன்னது நினைவுக்கு வர, ஹரிகுமாரை, ஆச்சரியமாக பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி.
மேஜை மீது மஞ்சள் பூசியிருந்த ஜாதகம், அதை ஆமோதிப்பது போல், காற்றில் வேகமாக படபடத்தது.

– ஆதலையூர் சூரியகுமார் (ஜனவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *