வாசிப்பே சுவாசமாய்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 10, 2012
பார்வையிட்டோர்: 7,528 
 

தாம்பரத்தில் செங்கல்பட்டுக்கான மின்தொடர் வண்டியில் ஏறி தோதான இடத்தில் உட்கார்ந்தவுடன் சிவராமன் முதல் வேலையாக புத்தகத்தைப் பிரித்தவன், கொளவா ஏரியில் குளித்து கரையேறும் சில்லென்ற காற்று முகத்தில் மோதிய பிறகுதான் மூடிவைத்தான். சிவராமனின் தினசரி பழக்கமிது. தாம்பரத்தில் துவங்கும் அவனது வாசிப்பு கொளவா ஏரியில் தற்காலிகமாக முடிந்து, செங்கல்பட்டில் நரசிம்மவிலாஸ் பேருந்திலேறி தான் பணியாற்றும் அலுவலகம் உள்ள சாலவாக்கத்திற்கு பயணசீட்டை வாக்கியவுடன் மறுபடியும் துவங்கிவிடும். சாலவாக்கத்தில் இறங்கி தனது அலுவலகம் செல்லும் போதும் படித்துக் கொண்டே செல்வான். மாலையிலும் இதே கதைதான். வீடு திரும்பியதும் மனைவி சொல்லும் சிலபல வேலைகளை வேகவேகமாக முடித்துவிட்டு வாசிப்பைத் தொடர்வான். சிலசமயம் இரவு முழுக்க கண்விழித்துவிட்டு அப்படியே வேலைக்குச் செல்வதும் உண்டு.

குறிப்பிட்ட தலைப்பிலான புத்தகம் என்றில்லாமல் எது கிடைத்தாலும் படிப்பது சிவராமனின் பழக்கம்.இது அவனது சின்ன சித்தப்பா மூலமாக தொற்றிக்கொண்ட பழக்கம். அவர் சாப்பிடும் போதும் படிப்பார், நடந்து கொண்டேயும் படிப்பார்.

சிவராமனுக்கு தவறாமல் மூன்று வருடங்களுக்கொருமுறை வேலை மாற்றலாகிவிடும். அதிகாரிகளை காக்கா பிடிக்கத் தெரியாத ஊழியர்களுக்கு மாற்றல் எனும் கத்தி தலைக்கு மேலே எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும். மாற்றலைக் குறித்து சிவராமன் கவலைப் பட்டதே இல்லை. அவனது கவலை எல்லாம் மாற்றலாகிச் செல்லும் ஊரில் நூலகம் இருக்க வேண்டுமே என்பதுதான். நூலகம் இல்லா ஊரில் குடியிருக்கக் கூடாது என்பதுதான் சிவராமனின் கொள்கை. அதற்கு ஏற்றாற்போல் நூலகம்
இருக்கும் தெருவில்தான் குடியிருக்க வீடு தேடுவான்.

அவனது ஒரே சேமிப்பு புத்தகங்கள் மட்டுமே. அவனது ஒரே பண்டிகை புத்தக கண்காட்சிதான். அலுவலகத்துக்கு கிளம்பும் போது எடுத்துச் செல்லும் புத்தகங்களை எப்படியாவது வீடு திரும்புவதற்குள் படித்து முடித்துவிட வேண்டும். சாலவாக்கத்திற்குச் செல்லும் பேருந்தைத் தவறவிட்டு விட்டால் அடுத்த பேருந்து வருவதற்கு எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகும். பேருந்தை தவறவிட்டவர்கள் நொந்து நூடூல்ஸாகி விடுவார்கள். ஆனால் நமது சிவராமன் மட்டும் மனதுக்குள் மகிழ்ந்தபடி புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து விடுவான். கையில் வைத்திருக்கும் புத்தகம் சிறுகதைத் தொகுப்பாக இருந்தால் காண்டீபன் பேருந்தில் ஏறுவான். ஆய்வு சம்பந்தமானதாக இருந்தால் நரசிம்ம விலாஸில் ஏறுவான். நாவலாக இருந்தால் டி-78 அரசு பேருந்தை தேடுவான். குழப்பம் வேண்டாம். கையில் உள்ள புத்தகத்துக்கு ஏற்ப குறுக்கு வழியாகச் செல்வதா, சுற்று வழியாகச் செல்வதா என்பது தீர்மானிக்கப்படும். பேருந்தில் ஏறி அமர்ந்தப் பிறகு பேருந்தின் ஒரு பாகமாகவே அவனது உடல் மாறிவிடும். சாலையின் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப அவனது பின்புறம் தானாகவே இருக்கையிலிருந்து எழும்பி அதிர்விலிருந்து வாசிப்பைக் காக்கும்.

வாசிப்பைத் தவிர சிவராமனுக்கு வேறு எதிலாவது ஈர்ப்பு இருக்குமென்றால் அது அவனது ஒரே மகள் மாலதி தான். அவனது புத்தகங்களை மாலதி சில சமயம் கிழித்துவிடுவதுண்டு. ஆனாலும் கோபமேதும் கொள்ளாமல் பொறுமையாக கிழிந்தப் பக்கங்களை ஒட்டுவான். “மாலுக்குட்டி, படிக்கிறதுக்குத்தான் புத்தகம். கிழிக்கறதுக்கில்லை, இனிமே இப்படி பண்ணக்கூடாது. என் மாலுக்குட்டி புத்திசாலியாச்சே” என்று பொறுமையாகப் புரியவைப்பான். இதைப் புரிந்துக் கொண்டுதான் சிவராமனை கட்டுப்படுத்தும் ஆயுதமாக மாலதியை பயன்படுத்துவாள் அவனது மனைவி கமலா. வேறு யாருக்கும் சிவராமனும் கட்டுப்பட மாட்டான். புத்தக விஷயம் தவிர கமலாவுக்கு கணவன் மீது எந்த வருத்தமுமில்லை.
சிவராமனுக்கு நேரெதிரான குணாதிசயங்களைக் கொண்டவள் கமலா. புத்தகம் என்றாலே அலர்ஜி. அவளது அகராதியில் புத்தகங்கள் என்றால் காசுக்கு கேடு, வீட்டை நிறைக்கும் குப்பை, தூசைக்கிளப்பும் புழுதி, வீட்டை பெருக்கித்தள்ளவும் சுத்தம் செய்யவும் தடையாக இருக்கும் ஒரு பொருள். இதனால் இருவருக்கும் இடையே எப்போதும் சண்டைதான். புத்தகங்கள் மீது தனிப்பட்ட வெறுப்பு கமலாவுக்கு இல்லையென்றாலும் கூட தன்னைவிட சிவராமன் புத்தகங்களை அதிகமாக நேசிக்கின்றானே என்ற எரிச்சல் காரணமாகவே சண்டையை மேலும் தீவிரமாக்குவாள். மற்றபடி வேறு எந்தப் பிரச்சினையுமில்லை.

திருமணமானப் புதிதில் கமலாவை புத்தகங்கள் பக்கம் திருப்ப ஆனமட்டும் முயற்சித்தும் பலனேதும் கிட்டாததால் சிவராமனுக்கு சற்று வருத்தம் ஏற்பட்டதென்னவோ உண்மைதான். ஆனால் அவனது பரந்த வாசிப்பு அவனை பாந்தமாய் வார்த்திருந்தது. மற்றவர்களைப் புரிந்துக் கொள்வதில், அவர்களுக்கேற்ற விதத்தில் நடந்துக் கொள்வதில் சிவராமன் சற்றும் சலித்துக் கொண்டதில்லை. வீடாகட்டும், அலுவலகமாகட்டும் தன்னால் எந்தப் பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாகவே இருப்பான். முடிந்தவரை பிறருக்கு உதவுவதை தனது கடமையாகவே நினைத்தான். தனது சொந்த சிரமங்களை ஒரு பொருட்டாக அவன் என்றுமே எடுத்துக்கொண்டதில்லை. இந்த குணநலன்கள் நிச்சயமாக தனது தாய் தந்தையிடமிருந்து அவன் பெறவில்லை.

வழக்கம்போலத்தான் அன்றும் வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கதவு திறந்திருந்தது. துள்ளிக் குதித்து வரும் மாலுவையும் காணவில்லை. தன்னைக் குறைச் சொல்லிக்கொண்டே வரவேற்கும் கமலாவையும் காணவில்லை. வயிற்றுக்குள் என்னவோ ஒரு உணர்வு பிசைய ஆரம்பித்தது. பக்கத்து வீட்டுக்கு ஓடினான்.

சாவித்திரி பாட்டிதான் கதவைத் திறந்தாள். விஷயத்தைக் கூறினாள். மாலை ஐந்து மணிவாக்கில் மாலுகுட்டி மீது மோட்டார்சைக்கிள் மோதி விட்டதாகவும், பக்கத்திலிருக்கும் கிரேசி மருத்துவமனைக்கு கொண்டு போயிருப்பதாகவும் பாட்டி கூறியதைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. தட்டுத்தடுமாறி கிரேசி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். சிவராமனைப் பார்த்தவுடன் கமலா ஓடிவந்து கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள். இது சிவராமனை மேலும் கலவரப் படுத்தியது. தலையிலும், காலிலும் அடிபட்டுள்ளதாகவும், தையல் போட்டிருப்பதாகவும் கமலா சொன்னதைக் கேட்டதும் லேசாக பயம் தெளிந்தது. மருத்துவரை சென்றுப் பார்த்தான். காலையில் அனுப்பி விடுவதாகவும், பயப்படத்தேவையில்லையென்றும் அவர் கூறிய பிறகுதான் சிவராமனால் சகஜ நிலைக்கு வரமுடிந்தது.

தலையில் கட்டுடன் படுத்திருந்த மகளைப் பார்த்தவுடன் கண்களிலிருந்து கண்ணீர் மளமளவென வழியலாயிற்று. குழந்தை துவண்டுப் போயிருந்தாள். காலையில் டாடா காட்டியபடியே மழலை மொழியில் கொஞ்சலாக ஆப்பிள் வாங்கிவரும்படி கேட்டது நினைவுக்கு வந்து வேதனையை அதிகப்படுத்தியது.

இரவு மாலுவை தானே பார்த்துக்கொள்வதாகவும், வீட்டுக்குப்போய் தேவையானதை எடுத்துக்கொண்டு வருவதாகவும் கமலாவிடம் சொல்லிவிட்டு சிவராமன் அவசர அவசரமாக வீட்டுக்கு கிளம்பினான். பக்கத்து வீட்டு சாவித்திரி பாட்டியிடம் விவரத்தைச் சொல்லி, இரவு தனியாக இருக்கும் கமலாவுக்கு துணையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டான். தேவையான ஆடை, போர்வை, பணம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கதவை பூட்டப் போனவன் சட்டென திரும்பி வீட்டுக்குள் சென்று, கைக்கு கிடைத்த நான்கு புத்தகங்களையும் அள்ளிப் பையில் போட்டுக் கொண்டு கிளம்பினான்.

***கல்வெட்டு பேசுகிறது இதழில் வெளியானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *