வழி மயக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 13,126 
 

மழை இன்னும் விடவில்லை போல, நேற்றிலிருந்து விடாது பெய்து கொண்டிருக்கிறது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது மழை விழும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது மாதிரி இருந்தது. ஆனால் சிலசமயம் இந்த சத்தத்தை மட்டும் வைத்து மழைவிழுகிறது என்று தீர்மாணமாய் சொல்ல முடியாது. வீட்டின் முகப்பில் இருக்கும் மருதமரத்தின் கிளைகள் விரிந்து ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு மேலே படர்ந்திருக்கும் குடை மாதிரி. அதன் இலைகளில் நின்று விழும் மழைத்தண்ணீரின் சத்தம் ஏமாத்திவிடும் மழை பெய்கிறது என்பது போல. பத்மாவதி அம்மாவிற்கு எழுந்திருக்க முடியவில்லை, இடுப்பு வலியும், கெண்டைக்கால் சதைப்பிடிப்பும், படுக்கையோடு வஜ்ரம் போல ஒட்டியது உடம்பை. ஆனாலும் பிடுங்கிக் கொண்டு எழுந்ததுபோல எழுந்த பத்மாவதி அம்மா, மழை இன்னும் பெய்கிறதா என்பதை தெரிந்து கொள்ள, பாயில் நின்று கொண்டே ஜன்னலில் மூடியிருந்த சாக்குப் படுதாவை விலக்கிப் பார்த்தாள். தெருவிளக்கின் வெளிச்சத்தின் அடியில் மழை நின்று விட்டது தெரிந்தது. அதிசயமா தெருவிளக்கு எரிந்து கொண்டிருந்தது அன்று.

தெருவிளக்கின் வெளிச்சம் ஜன்னலில் இருந்து வழிந்து மழை ஈரமாய் பரவியது. வெளிச்சம் தொட சிணுங்கிக் கொண்டே, தலை வரை போர்வையை இழுத்துப் போர்த்திவிட்டு புரண்டு படுத்துக் கொண்டாள் சுமதி. போர்த்தியிருந்த போர்வைக்கு வெளியே கசிந்து இருந்த அவளின் முடிக்கற்றைகளில், தெருவிளக்கின் வெளிச்சம் பட்டு மினுக்கிக் கொண்டிருந்தது. பத்மாவதி அம்மா, காலால் படுக்கையை ஓரந்தள்ளி விட்டு, தரையில் கால் வைக்க மண் தரை குளிர்ந்து கிடந்தது. சுமதியைத் தாண்டி அடுப்பங்கரைக்குப் போனவள்… அடுப்பின் மேலுள்ள சுவரில் இருந்து வழிந்த மழைத்தண்ணீர் அடுப்பெங்கும் இறங்கி, சுமதியின் படுக்கையின் ஓரத்தையும் நணைந்திருந்தது கண்டதும், ஈரமானது கூட தெரியாம தூங்குது பாரு இது என்று நினைத்துக் கொண்டாள். கூரை ஒழுகுவதை வீட்டுக்காரரிடம் சொல்லியும், ஒண்ணும் பிரயோசனமிருக்காது. ”இஷ்டமில்லேன்னா வீட்டக்காலி பண்ணும்மா! இதுக்கு மேல இத ரிப்பேரெல்லாம் பண்ணமுடியாது! ஒரேடியா இடிச்சுட்டு வேற கட்னாத்தான் உண்டு” என்று சொல்லிவிட்ட பிறகு அதைக் கேட்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது பத்மாவதி அம்மாவிற்கு.

சுமதி அம்மாவை முழுதும் மறந்து விட்டாள், பத்மாவதி அம்மா தான் உலகம் இப்போது அவளுக்கு. சுமதியை எழுப்பி பத்மாவதி அம்மா படுத்திருந்த இடத்தில் படுக்கச் சொல்லிவிட்டு, கீழே விரித்திருந்த படுக்கையை எடுத்து ஓரமாகப் போட்டாள். விசேஷமான படுக்கை, கீழ்ப் புறம், பிளாஸ்டிக் தார்பாலினும், மேலே கோனிப்பையும் வைத்து, உள்ளே பழைய துணிகளை போட்டுத் தைத்த படுக்கை. பிளாஸ்டிக் தார்பாலின் இருக்கும் சைடு கீழே போய்விடும், ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்க. மேலே கோனிப்பை இருப்பதால் கொஞ்சம் கனகனன்னு இருக்கும். பழைய துணிகள் மெத்து கொடுக்கும், இது சுமதியா யோசிச்சு ரெடி பண்ணிய படுக்கை. பத்மாவதி அம்மாவிற்கும் இதே போல தான் படுக்கை. சொகுசாத்தான் இருக்கு புள்ள! ராசாத்தி! ஒன் சாமர்த்தியம் ஆருக்கும் வராதுடி! என்று நெட்டி முறித்தாள். சுமதி ஒம்பதாவது தான் படிக்கிறாள் நீச்சத்தொட்டி மாநகராட்சிப் பள்ளியில், பத்மாவதி அம்மாவின் மகளோட மகள் தான் சுமதி. சுமதி, பத்மாவதி அம்மாவிடம் வந்து ஏழு வருஷம் ஆகிவிட்டது.

பத்மாவதி அம்மாவின் மருமகன் கோவிந்தசாமி, சைக்கிள்ல தெற்குவெளி வீதி கிரைம் பிராஞ்ச் பக்கத்துல திரும்பும் போது பாண்டியன் பஸ், ஓரமாக இடித்து, பிளாட்பாரத்தின் பின் மண்டை மோதி, காதுகளில் இருந்தும், பின் மண்டையில் இருந்து ரத்தம் பெருகியோட, பெரியாஸ்பத்திரி கொண்டு போவதற்கு முன்னால் இறந்து போனான். யானைக்கல்ல கமிஷன் மண்டி வச்சிருக்கிற ரெட்டியார்ட்ட வேலை பார்த்து வந்தான். அவன் போனவுடனே மதுரவல்லியும், சுமதியும், அவர்களின் சோலை அழகுபுரத்து வீட்டை விட்டுவிட்டு, பத்மாவதி அம்மா இருக்கும், புலிப்பாண்டியன் கோயில் தெருவுக்கு வந்து விட்டார்கள். கொஞ்ச நாள் நல்லா தான் இருந்தா மதுரவல்லி, தானுண்டு தன் வேலையுண்டு என்று. அக்கம்பக்கம் பேச்சு கிடையாது. சுமதிக்கு வந்து கொஞ்ச நாள்லயே ஆஸ்பெஸ்டாஸ் கூரை சூடு தாங்காமயோ என்னமோ அம்ம போட்டுவிட்டது. மூணு தண்ணி ஊத்திய பிறகு, ஸ்கூலுக்குக் கொண்டு போய் விடப்போன மதுரவல்லி, ரொம்ப நேரமாகியும் திரும்பவே இல்லை. பத்மாவதி அம்மாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல், பழனிச்சாமியிடம் போய் பார்த்துவிட்டு வரச்சொன்னாள்.

அடுப்பில் அரிசியப் போட்டு விட்டு எரிகின்ற விறகையே பார்த்துக் கொண்டிருந்தாள் பத்மாவதி அம்மா. விறகின் எரியாத முனையில் இருந்து எண்ணெய் கசிந்து கொண்டு வருவது போல நுரையாய் வந்து கொண்டிருந்ததது. என்னாச்சு இவளுக்கு, கோவிந்தசாமி இறந்ததுல இருந்தே இப்படித் தான் இருக்கா, கோயில் வெளிபிரகாரத்துல கோலம் போட வாடின்னு சொல்ல, வேண்டாம்னு சொல்லிப்புட்டா! சொந்தபந்தம்னு யாரு வீட்டுக்கு வந்தாலும் பேசுறது கூட கெடையாது, பேசாட்டிப் பரவாயில்ல, சிரிக்கலாம்ல? அதுவும் கெடையாது. என்ன பண்ணப்போறோமோன்னு பத்மாவதி அம்மாவுக்கு கவலையா இருந்தது. பத்மாவதி அம்மாவுக்கு, அவளுடைய கணவன் இறந்த பிறகு கூடலழகர் பெருமாள் கோயில் வெளிப்பிரகாரத்துல கோலம் போடுறத ஒரு வேலையா செய்து கொண்டிருக்கிறாள்.

எழுபது வயதில் பாதம் வைத்து திருச்சூர்ணமிட்டு, குனிந்து நிமிர்ந்து சுருங்கி, நரம்புகள் ஓடும் கைகளில் பிரமாண்ட கோலங்கள், பிரகாரம் முழுக்க அடைக்கப்போடும்போது வேதனை ஏதுமில்லை. பத்மாவதி அம்மாள் சின்ன வயதில் மார்கழி மாதம் போட்ட கோலங்களின் நீட்சி தான் இந்த பிரகாரங்களிலும் தொடர்கிறது போல என்று நினைத்துக் கொள்வாள். அதிகாலையில் விஸ்வரூப தரிசனத்திற்கு முன்பாகவே குளித்து கோயிலுக்கு வந்துவிடுவாள். ஆண்டாள் சன்னதி பின்னால் இருக்கும் மாட்டுத்தொழுவத்தில் வைத்திருக்கும், சுண்ணாம்புப் பவுடரும், செம்மண்ணும் எடுத்து கரைத்து, முதல் கோலம் ஆண்டாள் சன்னதியில் தான் இருக்கும். அதற்கு பிறகு, பெருமாள் சன்னதி, மதுரவல்லித்தாயார் அதற்குப் பிறகு தான் வெளிப்பிரகாரம். ராஜம்மாவுக்கு, நிர்வாக ஆபீஸ் பெருக்குவதும் சிறு தெய்வங்களின் சன்னதிகளில் கோலம் போடுவதும் தான் வேலை. ராஜம்மா கோயில் அலுவலகச் சிப்பந்தி, மாசமானா நானூறு ரூபாய் சம்பளம். பத்மாவதி அம்மாவுக்கு அதுல பாதி தான் கிடைக்கும்.

ஆத்தா! என்று பழனிச்சாமியின் குரல் கேட்டது வாசலில். வந்துவிட்டான், போல என்று கதவைத் திறந்து வெளியே வந்தவள். என்னய்யா பாத்தியா மதுரத்தை? பார்த்தேன் ஆத்தா, ஆனா அது வராது! ஏன்யா? என்று குரலுடைந்து கேட்டாள் பத்மாவதி அம்மா. அது என்னவோ கோட்டி பிடிச்ச மாதிரி இருக்கு ஆத்தா, கூப்பிட்டா வரலை, மேல கிடந்த சீலையவும் காணோம்! நண்ம தருவார் கோயிலுக்கு முன்னாடி தான் இருக்கு. வரமாட்டேங்கி! நீ வந்து கூப்பிடு ஆத்தா, உன் மூஞ்சப் பாத்தா ஒருவேளை வரலாம்! போகும்போது சொல்லாத்தா! என்று பழனிச்சாமி திரும்பி விட. பத்மாவதிக்கு என்ன செய்வது என்று விளங்கவில்லை. இதுக்கு வைத்தியம் பாக்கணும்னா எங்க போறது? யாரக்கேக்குறது ஒண்ணும் புரியாமல் அவளுக்கு அழுகையாய் வந்தது.

பழனிச்சாமி போயி அவ பொஞ்சாதிட்ட சொல்லிட்டிருப்பான், அவ போயி ஊரெல்லாம் தமுக்கடிக்கப்போறா! அவம்பொஞ்சாதிய பத்மாவதி அம்மாவுக்கு கண்டாலே ஆகாது… பெரிய சிலுப்பட்டை! இவனுக்கு வந்து வாச்சிருக்காளே! போய் ஒரு நடை பாத்துட்டு வந்துடலாமா என்று தோன்ற, பழனிச்சாமிய கூப்பிட தயங்கி தான் பழனிச்சாமி வீட்டுக்குப் போனாள். பத்மாவதி அம்மா இருக்கிற வீட்டுக்கு பின்புறம் தான் அவன் வீடு, போய் பாக்கையிலே வெளிய தான் ஒக்காந்திருந்தான், அவனும் அவன் பொஞ்சாதியும். இன்னம் கடைக்குப் போகலையா பழனி? போகணும்த்தா, இவ கஞ்சி குடுக்குறேம்னா அதான். சரி குடிச்சிட்டு வா, நானும் ஒரு சோலியா டவுனுக்குப் போகணும், ஒங்கூடயே வாரேன்! என்று திரும்பவும் வீட்டிற்கு நடந்தாள்.

அந்த சின்ன சந்துக்குள் பத்து வீடுகள் இருக்கும், இதில் எல்லா வீடும் தெற்கப்பாத்து இருக்கு, பத்மாவதி அம்மா வீடு மட்டும் வடக்கப்பாத்து இருக்கும். எல்லா வீடும் ஒரு வரிசையில் இருக்க, பின்னாடி கிணற்றுப்பக்கம், மரத்தின் நிழலில் இருக்கும் வீடு அவளுடையது. மிகக்குறைந்த வாடகைங்கிறதால, ஆஸ்பெஸ்டாஸ் கூரை, மண்தரை, கதவில்லாத ஒற்றை ஜன்னல் எல்லாம் பெரிய குறையாத் தெரியலை பத்மாவதி அம்மாவுக்கு. அவளுடைய கணவர் இறந்த பிறகு, இந்த வீட்டுக்கு குடி வந்து விட்டாள் பத்மாவதி அம்மாள். சுமதிக்கு தான் இந்த வீடே பிடிக்கலை, மதுரவல்லி அதைப்பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் இருந்தாள்.

சுமதி வருவதற்குள் அவங்க அம்மாவை இங்க கொண்டு வந்துரணும், இதுமாதிரி ஒரு பிரச்னை அம்மாவுக்கு இருப்பது சுமதிக்கு தெரியவே கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள் பத்மாவதி அம்மா. சுமதி வீட்டுக்கு வர எப்படியும் நாலு மணி ஆயிடும், இன்னும் மூணு மணி நேரம் இருக்கு, அதுக்குள்ள மதுரவல்லிய பாத்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டா நல்லது என்று நினைத்தவள், அய்யய்யோ, சோறு வடிச்சோம்! ஊத்திக்கிட ஒண்ணும் செய்யாம வந்துட்டமேன்னு… ஒரு புளிச்சாறு வைச்சு துவையல் அரைச்சிடலாம்… பழனிச்சாமி வாரதுக்குள்ள, சுமதி வந்தவுடனே பசிக்குதுண்ணு சொல்வா என்று நினைத்துக் கொண்டு, அதற்கான வேலைகளை கவனித்தாள்.

பழனி வந்துவிட்டது தெரிந்தது வாசலில் ஆள் வந்ததும், திடீரென்று வீட்டிக்குள்ளே இருட்டாயிடும். துவையலை அம்மில இருந்து வழிச்சு, கிண்ணத்துல போட்டு அடுப்பங்கரைக்கு மேல வச்சுட்டு, லேசா கனன்று கொண்டிருந்த கங்குகளுக்கு மத்தியில் புளிச்சாறை வைத்துவிட்டு வந்தாள். சுமதி வரும்போது சூடா இருந்தா நல்லாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டே, கதவை இழுத்து சாத்தி, அமுக்கு பூட்டை பூட்டி விட்டு, சாவி இருக்கா முந்தானையில் என்று தடவ கையில் அகப்பட்ட சாவியை எடுத்து இடுப்புக் கொசுவத்தில் சொருகிக்கொண்டு, ரிக்‌ஷால போயிடலாமாய்யா? நான் காசு வச்சிருக்கேன் என்று பழனிச்சாமியிடம் சொல்ல, அவனும் சரியென்றான். ரிக்‌ஷாவில் போகும்போதே எல்லாதெய்வங்களையும் வேண்டிக் கொண்டாள். ஈஸ்வரா, ஏழுமலையானே, குளிர்மாமலை வேங்கடவா, பெருமாளே, முருகா என்று மனசுக்குள் தொழுது கொண்டே வந்தாள் வழியெங்கும், அவளையறியாமல் வாய் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.

மீனாட்சி டாக்கீஸ் வழியா போய், தெக்கு வெளி வீதிய பிடிச்சு, அப்படியே நண்மை தருவார் கோயிலுக்குப் போயிடுப்பா… கோயில் வாசலை அடைந்த போது, ஜிகர்தண்டா கடைக்கு முன்னால் கடைக்கு வந்த கூட்டம் இருந்தது. பழனிச்சாமிய ஒரு பக்கம் பார்க்கச் சொன்னவள், மதுரவல்லி எங்காவது தென்படுகிறாளா என்று கோயிலுக்குள் புகுந்து பார்க்க ஆரம்பித்தாள், பத்மாவதி அம்மாள். பழனிச்சாமி இவளை நோக்கி வேகமாய் வருவது தெரிய, என்ன பழனி! தட்டுப்பட்டாளா? என்றவளை இழுத்துக்கொண்டு ஜிகர்தண்டா கடையை ஒட்டி இருக்கும், சின்ன சந்திற்குள் புகுந்தவன், அவளை உள்ளே விட்டு வெளியே வந்துவிட்டான். போட்டிருந்த துணியெல்லாம் சுருட்டி தலைக்கு வைத்துக்கொண்டு படுத்துக் கிடந்தாள் மதுரவல்லி.

அவசர அவசரமாக அவள் கையில் சுருட்டி வைத்திருந்த சீலையை எடுத்து அவளுக்கு போர்த்திக் கொண்டே ஓவென்று அழுதாள் பத்மாவதி அம்மா. யார் யாரோ சந்தின் முனையில் இருந்து எட்டி பார்ப்பது தெரிந்தது. எல்லாரையும் மறைத்துக் கொண்டு நின்றான் பழனிச்சாமி. ரிக்‌ஷாக்காரனிடம் கடைக்கு அருகே வரச்சொல்லி, இவர்களோடு வரமறுத்த மதுரவல்லியை, இழுத்துக் கொண்டு ரிக்‌ஷாவில் ஏறினர். வீட்டிற்கு போகும்வரை வெளியே குதித்துவிட முயன்று கொண்டே இருந்தாள். அய்யோ, இவளை எப்படி சமாளிக்கப் போறோம், சுமதி பயந்து போயிட மாட்டாளா? அவளுக்கு மனசுல பாதிப்பு வந்திடாதா? என்று பல கேள்விகள் வந்தது பத்மாவதி அம்மாவிற்கு. வழியெங்கும் தாரைதாரையாய் அழுது கொண்டே வந்தாள். பழனிச்சாமிக்கு எப்படி இவளைத்தேற்றுவது என்று தெரியாமல், ஒன்றும் பேசாமல் ரோட்டை வெறித்து பார்த்துக் கொண்டே வந்தான்.

வீட்டிற்குள் வந்து இறங்கியவுடன், பழனி சந்தோஷம்யா, ரொம்ப உதவியா இருந்துச்சு நீ கூட இருந்தது, யார்ட்டயும் இதப்பத்தி பேசாதய்யா! என்றாள். நான் யார்ட்டயும் சொல்லல ஆத்தா! நீ பேசாம குனசீலத்துக்கு கொண்டு போய்டறியா… அங்க இதுக்கெல்லாம் வழி இருக்கு, இல்லேன்னா நாகூரு, என்ன செய்யப்போறேன்னு சொல்லு ஆத்தா, அதுக்குத் தக்கன ஏதாவது செய்யமுடியுதான்னு பாக்குதேன் என்றவன், ஏதாவது தேவைன்னா கூப்பிடு ஆத்தா, எந்நேரமா இருந்தாலும் பரவாயில்ல! கதவத் தட்டு, நான் வீட்டுக்குப் போறேன்! பழனிச்சாமி சென்றதும், பத்மாவதி அம்மாவுக்கு குழப்பமாய் இருந்தது, சுமதி வந்தா, அவ வேற ஆயிரம் கேள்வி கேப்பா, என்னன்னு சொல்லி சமாளிப்பேன். பெரியாஸ்பத்திரில கூட இது மாதிரி புத்திக் கோளாறு ஆனவங்கள வச்சு பார்க்குறாங்கன்னு யாரோ சொல்லியிருக்காங்க, ஆனா இந்த வயசுல நம்மால அல்லாடமுடியுமா தனியா? தனியார் ஆஸ்பத்திரில காட்டவும் வசதியில்ல… இந்த வேதனை எனக்கு தாங்குமாய்யா என்று பெருமாளின் படத்துக்கு முன்னால் நின்று பலதையும் நினைத்துக் கொண்டு அழுதாள்.

குனசீலம் கொண்டு போனா வழியிருக்குன்னு சொன்னானே, பழனிச்சாமி, அங்க போனா என்ன என்று யோசித்தவள். அது தான் சரி என்று முடிவு செய்தாள். பழனிச்சாமியை அழைக்க, வெளியே வந்த பழனிச்சாமியின் மனைவி, வாங்கம்மா! அவரு எல்லாம் சொன்னாரு, ரொம்ப வேதனையா இருந்துச்சு. உள்ள வாங்க! என்று மறுபடி அழைக்க… பழனி!!?? என்று இழுத்தாள்.. இருக்காரு! மாமா! என்ற குரலின் இறுதியில் நின்று கொண்டிருந்த பழனிச்சாமி, என்னாத்தா செய்யணும்? ஒண்ணுமில்ல! நான் அவளைக்கூட்டிக்கிட்டு குனசீலம் வரை போயிட்டு வர்றேன், என்ன வழியிருக்குன்னு பாக்குறேன், இன்னைக்கு ரவைக்குள்ள வரலையிண்டா, சுமதிய உங்க வீட்ல படுக்க வச்சுக்கிடுங்க! அம்புட்டு தான் பழனி! எனக்கு யோசிச்சு மாளலை, நினைக்க நினைக்க மனசுல கல்லப்போட்டா மாதிரி அழுத்துது என்றாள் பத்மாவதி அம்மா. பழனிச்சாமியின் மனைவி, அதுக்கென்ன அம்மா, நான் பாத்துக்குறேன். நீங்க போயிட்டு வாங்க, வேணும்னா இவரையும் கூட்டிக்கிட்டுப் போங்க! என்றாள். இல்லைல்ல… நான் மட்டும் போயிட்டு வந்துடுறேன்… அவருக்கு எதுக்கு வீனா அலைச்சல்… சுமதிய மட்டும் பாத்துக்கிட்டா போதும் என்ற வீட்டின் சாவியை அவர்களிடம் கொடுத்து விட்டு, வீட்டை நோக்கிப் போனாள், பழனிச்சாமியும் உடன் வந்தான்.

மதுரவல்லியை ஒருவழியாக புடவை கட்டவைத்து, பின்பக்கம் ஊக்குகளை மாட்டிவிட்டு, அவள் கழட்டமுடியாதபடி செய்தாள் பத்மாவதி அம்மா. பழனிச்சாமி ஆட்டோ ரிக்‌ஷா பிடித்து வரப்போனான், தனியா போறதாயிருந்தா, நடந்தே போயிடலாம், இந்தாதான் இருக்கு, ஆனா இவள வேற கூட்டிட்டுப் போகணுமே, ஆட்டோ ரிக்‌ஷாலயே போயிடலாம். அங்க இங்க தடவி வச்சிருந்த காசெல்லாம கையில எடுத்துக்கிட்டு, மதுரவல்லியை வலுக்கட்டாயமாக ஆட்டோ ரிக்‌ஷாவில் ஏற்றி பஸ் ஸ்டாப்புக்கு விரைந்தாள். மெஜுரா காலேஜ் பஸ்ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டு, மாட்டுத்தாவணிக்கு பஸ் பிடித்தாள் பத்மாவதி அம்மா. சுமதியை நினைத்து கவலையா இருந்தது பத்மாவதி அம்மாவிற்கு. மதுரவல்லிக்கு முன்னமே இந்த பிரச்னை இருந்திருக்கு போல, அதனால ஒரு சொரத்தே இல்லாமல், எங்கேயோ வெறிச்சு பார்த்துட்டே இருந்திருக்கா! சொல்ற வேலையெல்லாம் செய்றதால, பத்மாவதி அம்மாவுக்கு, இவ்வளவு சீரியஸா ஆகும்னு தெரியாமப் போச்சு. தன் மேல் சாய்ந்து கொண்டு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தவள், ஏனோ அமைதியாய் வந்தாள். மாட்டுத்தாவணியில் இறங்கியதும் அவளை இழுத்துக் கொண்டு திருச்சி பஸ்ஸில் ஏறினாள்.

மதுரவல்லி வழியெங்கும் தொந்தரவில்லாமல் தூங்கிக் கொண்டே வந்தாள். பஸ்ஸில் இருந்த சிலர், மதுரவல்லி உடுத்திருப்பதை வினோதமாய் பார்த்தது போல இருந்தது பத்மாவதி அம்மாவுக்கு. பத்மாவதி அம்மா தன்னை சகஜமாய் காட்டிக் கொள்ள அவர்களை எல்லாம் பார்த்து சிரித்து வைத்தாள். திருச்சி வந்து சேர எட்டு மணி ஆகிவிட்டது. இன்னும் உறங்கி கொண்டிருந்தவளை எழுப்பி, இறக்கி முகத்தை கழுவி விட்டு, கிருஷ்ணா பவனில் ஒரு தோசை வாங்கிக் கொடுத்தாள். நல்லா சாப்பிட்டாள் மதுரவல்லி. சாப்பிட்டு முடித்ததும், வாயைக் கழுவி விட்டு, ஒரு பழக்கடையின் முன்னால் இருந்த சிமெண்ட் பெஞ்சின் முன்னால் உட்காரவைத்து விட்டு, இங்கேயே இரும்மா நான் வந்துடறேன் என்ற பத்மாவதி அம்மா, சற்றுத் தள்ளியிருந்த இன்னொரு பெஞ்சில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள். என்னவோ நினைத்துக் கொண்டு விடுவிடுவென்று நடந்து காலியாயிருந்த மதுரை பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் பத்மாவதி அம்மாள்.

— ராகவன் (http://koodalkoothan.blogspot.com/)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *