வள்ளி அத்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 16,294 
 

தீபாவளி வரப்போகிறது என்றால், எல்லோருக்கும் ஆனந்தமாக இருக்கும். எனக்கோ வயிற்றைக் கலக்கும். காரணம்… வள்ளி அத்தை!

தீபாவளிக்கு முன்னமே எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவாள் வள்ளி அத்தை. அதற்கான முன்னேற்பாடுகளில் அதிகம் பாதிக்கப்படுவது, நான்தான். ”சாரு… வள்ளி அத்தை வரப்போவுது. வீட்டை ஒட்டடை அடி, புத்தகத்தை எல்லாம் அடுக்கி வை…” என்று அம்மாவும், ”சாரு… தோட்டத்தை எல்லாம் சுத்தப்படுத்தக் கூடாதா… வள்ளி அத்தைகிட்டே திட்டு வாங்கிட்டுத்தான் செய்யணுமா..?” என்று அப்பாவும் பரபரப்பார்கள்.

”வள்ளி அத்தை வருதுனா… ஏம்மா அப்பாவும் நீயும் இந்த ஆட்டம் ஆடறீங்க… என்னையும் ஆட்டுவிக்கறீங்க?” என்றேன் ஒருமுறை அம்மாவிடம்.

”வாயை மூடுடி. வள்ளி அத்தை. தீபாவளிக்கு மட்டும்தான் பரோடாவில் இருந்து வருது. இந்த வீட்டுக்கே அதிர்ஷ்ட தேவதையா இருந்த பொண்ணு. வருஷத்துக்கு ஒருமுறை பிறந்த வீட்டுக்கு வந்து சீராட்டிட்டுப் போவுது. அதுல என்னடி வந்தது?”

ஆனாலும், எனக்குப் பிடிக்காது. இத்தனைக்கும் வள்ளி அத்தை வரும்போது எங்கள் அனைவருக்கும் புது டிரெஸ், பட்டாசு, ஸ்வீட் என்று கைகள் இரண்டிலும் பைகள் கனக்கத்தான் வருவாள். ஆனால், பண்ணுகிற அட்டகாசம் இருக்கிறதே… அப்பப்பா!

”சாரு… கணக்குல பார்டர் மார்க் வாங்கியிருக்கியே. அடுத்த வருஷம் ப்ளஸ் டூ… ஞாபகமிருக்குல்ல?”

”அண்ணி… எவ்வளவோ சொல்லியும், சீட்டுல சேர்ந்திருக்கீங்க. தினமும் சீட்டு கம்பெனி ஏமாத்தற கதைதான் டி.வி-யில ஓடுது…”

”சட்டை பாக்கெட்டிலே பார்த்தேன். மறுபடியும் சிகரெட்டா அண்ணா..?” என ஒவ்வொருவருக்கும் ‘செக்’ வைப்பாள்.

‘வள்ளி அத்தை வராத தீபாவளி எப்படியிருக்கும்?’ என்று நினைத்து நினைத்துப் பெருமூச்சுவிடுவேன். ஆனால்… அத்தையும் தீபாவளியும் இதுவரை பிரிந்ததில்லை.

”நாளும் கிழமையுமா டி.வி. முன்ன உட்கார்ந்தா ஆச்சா? கிளம்புங்க, முருகன் கோயிலுக்குப் போவோம். சாமி கும்பிட்டு பக்கத்து வயல்லயும், குன்றுலயும் ஜாலியா விளையாடிட்டு வரலாம்” என்பாள். எங்கிருந்தோ ஒரு சூனியக்காரி வந்துவிட்டாள் என்றுதான் அத்தையை நினைக்கத் தோன்றும். அத்தனை ஆட்டமும் தீபாவளியோடு முடியும். மறுநாளே பரோடா கிளம்பிவிடுவாள்.

”பரோடாவுல மெயினான இடத்துல பெரிய மளிகைக் கடை. நானும் அவரும்தான் பார்த்துக்கணும். ஒரு நாளும் கடையைப் பூட்ட முடியாது. அதான், அவர் வரல” என்பாள். ஆனால், இதுவரை எங்களை ஒருமுறைகூட அவள் வீட்டுக்கு அழைத்ததில்லை.

”அவருக்குக் கொஞ்சம் குணம் பத்தாதுண்ணா. அண்ணியாலயும், உன்னாலயும் ஒரு சொல் பொறுக்க முடியாது. ஏதோ… இப்படி வருஷத்துக்கு ஒருமுறை பிறந்த வீட்டுக்கு அனுப்பறாரே… அதுவே போதும்!” என்பாள்.

சரி, எங்களை வீட்டுக்குத்தான் அழைக்க முடியாது. கடிதம், தொலைபேசி என்று அவ்வப்போது எங்களை விசாரிக்கவுமா முடியாது? தீபாவளிக்கு 20 நாட்களுக்கு முன்பு, ”பத்து நாள்ல வர்றேண்ணே..!” என்று அதிகாரமாகத் தொலைபேசுவதைத் தவிர, எங்களிடம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டாள்.

ஊர் திரும்புபவளிடம், எதைக் கொடுத்தாலும் வாங்கமாட்டாள். ”வேண்டாம் அண்ணி. அங்கே எனக்கென்ன குறைச்சல்? வீடு, கார்னு வசதியா இருக்கேன். குழந்தையில்லைங்கிற ஏக்கம்கூட எனக்கில்லை. சாருமதியே எனக்குப் போதாதா?!” என்று அவள் சொல்லும்போது, அப்பா கண்கலங்கி விடுவார். ஒரு வாரகாலம் அம்மாவை ‘அது சொத்தை, இது சொத்தை’ என்று படாதபாடு படுத்தியவள், கிளம்பும்போது ‘அண்ணி!’ என்று கட்டி அணைத்துக் கொள்வாள். அம்மாவுக்கும் கண்ணீர் ஓடும். வருடா வருடம் நடக்கும் இந்த நாடகத்தைப் பார்க்க எனக்கு எரிச்சலாக எரியும். ‘வள்ளி அத்தை அடுத்த தீபாவளிக்கு வரக்கூடாது’ என்று வேண்ட ஆரம்பித்துவிடுவேன். என் வேண்டுதலை காலம் மாற்றிப் போட்டது… நான் மைசூர் டூர் போனபோது!

அழகழகான அரண்மனைகள், சோலைகள் என எதைப் பார்த்தாலும் பிரமிப்பு. நாள் முழுக்க மைசூரைச் சுற்றிவிட்டு, தங்கியிருந்த விடுதி திரும்பி, அன்றைய அனுபவத்தை தோழி மஞ்சுளாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது… பக்கத்தில், புதிதாக எழும்பிக் கொண்டிருக்கும் பில்டிங் பக்கம் பார்வை பாய்ந்தது.

செங்கல் ஜல்லிக்கு அருகே, வேலை பார்ப்பவர்களின் சின்னச் சின்ன குடிசைகள். சிலர் குடிசைக்கு வெளியே அடுப்பு மூட்டி சமைத்துக் கொண்டுஇருந்தார்கள். ஒரு பெண் சத்தமாக, ”இப்படி கஞ் சத்தனமா இருந்து என்னத்த வாரிட்டு போவப்போறே..? சாப்புடாம கொள்ளாம மயக்கம்போட்டு விழுந்தா… யாரு பாக்கறது? இந்தக் கஞ்சியைக் குடி” என்று வைக்க, எதிரிலிருந்த பெண் மறுத்து, ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

வெறும் காட்சியாக பார்த்துவிட்டு மஞ்சுளா பக்கம் திரும்பிய என் மூளையில், சரேலென ஒரு மின்னல். மீண்டும் பார்த்தேன். இதயம் ஒரு விநாடி நின்று துடித்தது. அது, வள்ளி அத்தையா?! ஆமாம், வள்ளி அத்தைதான்! நைந்த நைலக்ஸ் புடவையுடன், காது, மூக்கு, கழுத்தில் எல்லாம் பொட்டுத் தங்கம் இல்லாமல்! அது வள்ளி அத்தை என்று நம்பமுடியவில்லை. ஆனால். அது அவள்தான். ”கடைக்குப் போயிட்டு வரேன்க்கா…” என்று சொன்ன குரலும் அவளுடையதுதான். அவள் நகர்ந்த மறுநிமிடம், அங்கு பாய்ந்தோடினேன்.

”அம்மா, இப்ப போறாங்களே, அவங்க பேரென்ன..?” – என்னை ஏற இறங்கப் பார்த்தார் அவர்.

”ஏம் பாப்பா… அவ பேரு வள்ளி…” – எனக்கு மயக்கம் வந்துவிடும் போலிருந்தது.

”இங்கேயா வேலை செய்யறாங்க?”

”ஆமா… ஆறு வருசமா இங்கேதான்.”

”ஆறு வருசமா… இதே ஊர்லயா..?”

”அவ புருஷன் ஒருத்திகூட ஓடிப்போனதுல இருந்து, வள்ளிக்கு நாங்கதான் ஆதரவு. வருசம் முச்சூடும் வெயில்லயும் மழையிலயும் வேலை பார்த்து காசு சேர்க்கும். தீபாவளி வந்துட்டா… இன்னும் கொஞ்சம் கடனை உடனை வாங்கிட்டு சொந்த ஊருக்குக் கிளம்பிடும். அப்ப மட்டும் நல்ல துணிமணி, நகைனு போட்டுக்கிட்டுக் கௌம்பும். பொறந்த இடத்துல வசதியா வாழ்ந்திருக்கு. அவங்க மனசு நோகக்கூடாதுனு இன்னமும் அதேமாதிரி போயிட்டு வந்துட்டு இருக்கு. ம்… விதி. ஆமா… ஒனக்கு வள்ளியைத் தெரியுமா?” என்றவரிடம் அவசரமாக மறுத்து விடுதிக்கு ஓடினேன். வந்தவுடன் நான் ஏன் சத்தமிட்டு அழுகிறேன் என்று தெரியாமல் திகைத்தாள் மஞ்சுளா.

வீட்டுக்கு வந்ததுமே, ”தீபாவளி வரப் போவுது. வள்ளி அத்தை வர்றதுக்கு முன்ன வீட்டுக்கு வெள்ளையடிக்கணும்னா கேக்குறாரா..?” என்றாள் அம்மா.

”ஆள் சொல்லிட்டுதான் வந்திருக்கேன். சாரு, அலமாரி தலைகீழா கிடக்கு. வள்ளி அத்தைகிட்ட பாட்டு வாங்கிட்டுத்தான் செய்யப்போறீயா?” என்றார் அப்பா.

நான் கண்களைத் துடைத்துக்கொண்டேன். ‘வள்ளி அத்தை வராத தீபாவளி, இனி வரவேகூடாது’ என்று வேண்டிக் கொண்டே, ஒட்டடை அடிக்க ஆரம்பித்தேன்!

– அக்டோபர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *