கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 10,015 
 

“வாய்நிறைய பல்லாக வரவேற்பதில், வெங்கட்டுவை மிஞ்சி அந்த ஏரியாவில் யாருமே இல்லை.

போஸ்ட்மேன் முதற்கொண்டு, கேஸ் டெலிவரி பாய் வரை,தெரிந்தவர், தெரியாதவர்கள் என்ற பாகுபாடில்லாமல் “உள்ற வாங்கோ, காபி சாப்பிட்டுட்டு போங்கோ“ன்னு உபசரிப்பதில் அலாதி பிரியம் அவருக்கு. அந்த பிரியத்திலும் சுயநலமுண்டு. வருகிறவர் சாக்கில், ஒரு கப் காபி கூடுதலா கிடைக்கும்ல, ஆதான் அப்படி ஒரு உபசரிப்பு.

வருகிறவர்கள் காபி சாப்பிட்டு விட்டு, சும்மா இருக்க மாட்டார்கள்.

“என்ன ஸார், ஒங்க ஒய்ப் வேலைக்கு போறாங்களா ? இல்லே உறவுஸ் ஒய்ப்பா ? “கேள்வி எழுப்புவார்கள்.

“அவ வீட்டுல சும்மாதான் இருக்காப்பா“ இப்படி எல்லோரிடமும் சொல்வதில் அல்ப சந்தோஷமும் அவருக்குண்டு.

இவர் இப்படி சொல்வதைக் கேட்டு “ஏனுங்கோ, எல்லார்கிட்டேயும், நான் சும்மா இருக்கறதா சொல்றீங்களே, நான் செய்யற வேலைகளை, ஒங்களால செய்ய முடியுமா? நான் இல்லேன்னதான் என்னோட அருமை புரியும்-ன்னுசொல்லியும், அந்த பழக்கத்தை மட்டும் மாற்றி கொள்ளவேயில்லை.

இப்படி சொல்றதை நிறுத்தணும்ம்ன்னா, ஒரே வழி, நாம ஒரு பத்துநாள் வெளியூர் போகணும், அப்பத்தான் அருமை தெரியுமென முடிவெடுத்தாள் அம்புஜம்.. அன்றிரவு
“என்னங்க, எங்க அம்மாவுக்கு ஒடம்பு சுகமில்லையாம், ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடேறேனே” என்றாள்.

சரி…சரி, சீக்கிரமா வந்துடு என்று மறுநாள் பஸ்ஸில் ஏற்றியனுப்பி வைத்தார்

பஸ் ஏற்றிவிட்டு வந்தவருக்கு காபி சாப்பிட தோன்றியது.

சமையலறைக்குள் போனார்.

கேஸ் ஸ்டவ் பற்றவைத்து, பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைத்தார். காபி பொடியைத் தேடினார், காபி பொடி டப்பா கண்ணில் தட்டுப்படவில்லை. கண்ணாமூச்சி காட்டியது.
ஒவ்வொரு டப்பாவை திறந்து…திறந்து பார்ப்பதற்குள்….பால் பொங்கி வழிந்தோடியது.

சரி, காபி பொடிதான் கிடைக்கவில்லை, பாலையாவது குடிக்கலாமே என்று சர்க்கரை டப்பாவை தேடினார்..

சர்க்கரை டப்பாவிற்கு பதில் மிளகாய் தூள் டப்பாதான் கையில் கிடைத்த து. காபியும் சாப்பிடாமல், பாலையும் குடிக்க முடியாமல்… சே, அம்புஜம் இல்லாதது எவ்வளுவு கஷ்டமா இருக்குன்னு அலுத்து கொண்டு வெளியே போனார்.

எதிர்பட்டார் அடுத்த தெருவில் குடியிருக்கும் ஒருவர்.

“எப்படி இருக்கீங்க வெங்கட், நலம் விசாரித்து, இவர்போலவே, வாங்க வீட்டுக்கு, காபி சாப்பிட்டிட்டு போங்கோ” என அவர் வீட்டுக்கு கூட்டி போனார்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன், “மல்லிகா, கெஸ்டுக்கு காபி போட்டு கொண்டு வாயேன்” என்று மனைவியை கேட்டு கொண்டார்.

காபியை குடித்தவாறே …“இன்னாப்பா ஒன் ஒய்ப் வேலைக்கு போறாங்களா ? இல்லே உறவுஸ் ஒய்ப்பா” கேள்வி எழுப்பினார் வெங்கட்டு.

“என் ஒய்ப் சி.இ.ஓ-வாக இருக்காங்கப்பா” என்றார்

எந்த கம்பெனி ? பெரிய கம்பெனியோ ? என்று கேட்டார்.

”நெம்பர் ஐம்பத்து நாலு, இராமானுஜம் தெரு, மேற்கு மாம்பலம்” என்று அவருடைய வீட்டின் அட்ரஸையே சொன்னார் அந்த நண்பர்.

“தன் மனைவி சும்மாதான் இருக்கா”ன்னு எல்லார்கிட்டேயும் சொன்னதின் வலியை வெங்கட்டு உணர்ந்தார். சர்க்கரை போட்ட காபி கசத்தது

– செப்டம்பர் 22-29

Print Friendly, PDF & Email

1 thought on “வலி

  1. மிக மிக சிறப்பாக ஒரு முக்கியமான செய்தி தன்னை மிக எளிதாக சொல்லி விட்டார் ஆசிரியர் அவர்கள்
    மனமார்ந்த பாராட்டுகள். மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *