வலியும் வடுவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 6,090 
 

டாக்டர், இவங்க என் பொண்ணு, கலா. கொஞ்ச நாளா மனதே சரியில்லாம இருக்காங்க!?

போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வமில்லை, அவங்களுக்கு நீங்கதான் டாக்டர் கவுன்சிலிங் கொடுக்கனும் என்று கலாவின் அப்பாவும், அம்மாவும் டாக்டரிடம் ஏக்கத்துடன் கூறி நின்றனர்.

ஏன்? என்ன செய்யுது இவங்களுக்கு ? சொல்லத் துவங்கினர்,

டேய் திரு! டிபன் ரெடி, சாப்பிட வா, லன்ச்சுக்கு உனக்குப் பிடித்த உருளைக் கிழங்கு பொரியல் , லெமன் சாதமும் செஞ்சு இருக்கேன்,

மிச்சம் வைக்காமல் சாப்பிடனும் என்ன? புரியுதா?

அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு செய்கிறேன் தெரியுமா?

நீ என்னடான்னா சாப்பிடாமா திரும்பக் கொண்டு வரே, என எட்டாம் வகுப்பு படிக்கும் தனது ஒரே மகனிடம் புலம்பிக் கொண்டு இருந்தாள்.

எல்லாம் சாப்பிடுவான், சும்மா,சும்மா லெமன் சாதம் கொடுத்தா அவன் என்ன பண்ணுவான்,

எனக்குதான் தலை எழுத்து. அவனுக்கென்னா?

பிடிக்கலைன்னா கேன்டீன்ல வாங்கி சாப்பிட்டுக்குவான். விடு. இது திருவின் அப்பா.

உங்களுக்கு என்ன? பாதி நேரம் வெளியே போயிடுவீங்க, போகிற இடத்திலே சாப்பிடுவீங்க, ஆனா என் புள்ள படிக்குது, அது மாலை வீட்டிற்கு வருவதற்குள்ளே களைச்சுப்போயிடும். என்பாள்.

சரிசரி கிளம்புங்கள் மணி எட்டரை ஆகிட்டு,என விரட்டி, வாசல் வரை வந்து கையை ஆட்டி டாட்டா காட்டுவாள். இருவரும் மகிழ்வாகச் செல்வதை நின்று ரசித்து விட்டு , தன் குளியல் மற்றும் வீட்டு வேலைகளில் மூழ்கிடுவாள்.

ஆபீஸ் போய் சேர்ந்தவுடன் போன் செய்யனும், தவறினால் இவளே கூப்பிட்டு விடுவாள். செல்லில் கூட கூப்பிடமாட்டாள். வண்டி ஓட்டும் போது கணவர் போனை எடுத்துட்டா? அதனால் ஆபீஸ் போனில் கூப்பிட்டு பள்ளியிலே விட்டதையும் அவர் போய் அலுவலகம் சேர்ந்ததையும் பற்றி தினசரி விசாரிப்பாள் கலா.

மதியமானதும், பள்ளியில் இருந்து வந்தால் திருவிற்கு பசிக்குமே என சுண்டல், பழங்கள், நூடுல்ஸ் என ஏதாவது ஸ்நாக்ஸ், செய்திடுவாள். வெறும் பால் அவனுக்குப் பிடிக்காது ஆகையால் அதில் பூஸ்ட் அல்லது போர்ன்விட்டா இரண்டில் ஒன்று கலந்து கொடுத்து , போய் ஆறு மணி வரைக்கும் விளையாடு! வந்து படிக்கனும் எனச் சொல்லி அனுப்பி வைப்பாள். நேரமானால், தேடிக்கொண்டு விளையாடும் இடத்திற்கே சென்றிடுவாள்.

கணவனின் வருகையை எதிர்நோக்கி வாசல் வரை வந்து வந்து பார்த்துச் செல்வாள், அவருக்கு காபிதான் பிடிக்கும், அதுவரை திருவுடன் அமர்ந்து கேரம் விளையாடுவாள்.

இரவுக்கான டிபன் தயார் செய்து கொடுத்து, தூங்கும் முன் இருவரிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு , நாளை என்ன சாப்பாடு செய்ய எனக் கேட்டு தானும் யோசித்தபடியே படுக்கை அறை செல்வாள்.

இப்படியாக தினமும் நடைபெறும் அவளின் செயல்கள் மட்டும் தொடர்ந்து மூன்று மாதங்களாக செய்வதை டாக்டரிடம் விளக்கமாக கூறினார் கலாவின் அப்பா.

அதற்கு கலாவிடமிருந்த எந்த ரியாக்‌ஷனும் இல்லை, அவளும் இதையெல்லாம் அமோதிப்பது போல சிரித்தபடி அமர்ந்து இருந்தாள்.

நீங்க சொன்னது எல்லாம் ஒரு தாயாக, மனைவியாக கடமைகள் கலந்த அன்றாட வீட்டு வேலைகள்தானே இதில் என்ன கவலை உங்களுக்கு? எனக் கேட்ட டாக்டர்,

எங்க உங்க கணவர்? கூட வரலையா? என கலாவிடம் டாக்டர் கேட்டார்.

அவர் ஆபீஸ் போயிருக்கார். என்றாள் கலா.

பின்னால் நின்ற கலாவின் அம்மா அழவே,

ஏன் என்னாச்சு? – டாக்டர்.

இவளின் கணவரும், ஒரே மகனும் பள்ளிக்கும் போகும் வழியில் ஒரு விபத்தில் மரணமடைந்து மூன்று மாதமாகிறது டாக்டர்.

அந்த நிகழ்விற்குப்பின் இவள் அழவும் இல்லை, இவளின் அன்றாட இந்த செயல்களையும் நிறுத்தவில்லை.

இன்று வரை விதவிதமாக சமையல் செய்து ,காலை எட்டு மணிக்கு வெளியே வந்து டாட்டா காட்டுவது ,ஆபிஸுக்கு போன் செய்வது, சாப்பிடாமல் திரும்ப கொண்டு வந்துள்ளனர் என நினைத்து அதை தெருவில் வரும் நாய்களுக்கு போட்டு விட்டு, ஸ்நாக்ஸ் ,காபி,பூஸ்ட் கலந்து வைத்து ,அவன் விளையாடும் இடங்களுக்கு எல்லாம் சென்று அவனைத் தேடி விட்டு திரும்ப வருவாள்.

கூட விளையாடிய அவன் நண்பர்களிடம் விளையாடியது போதும் அவனை வரச்சொல்லுங்கள் என்று கூறுவாள்.. என்று சொல்லி கதறினார் கலாவின் அம்மா.

அவர்களின் இழப்பு நம்மைப் பொறுத்தவரையில் ஒரு மரண நிகழ்வு, ஆனால் தாய் கலாவின் பார்வையில் இந்த சோகம் ஆறாத வடுவை ஏற்படுத்தி இருக்கனும்.

பெரும்பாலான வியாதிகளுக்கு மருந்துகள் வந்துவிட்டாலும், புத்திர சோகத்திற்கான மருந்தினை மட்டும் காலம்தான் வழங்க வேண்டும் எனக் கூறி சில மருந்துகளை மட்டும் எழுதிக்கொடுத்தார்.

மருந்துச் சீட்டில் அவரது கண்ணீரும் ஒரு சொட்டு விழுந்து இருந்தது.

கண்ணீர்தான் மூன்று வேளை மருந்தோ?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *