கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 13,625 
 

என்ன கோபாலு இந்தப்பக்கம்…? எங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டியே…என்ன விசேஷம்?”

“”இல்ல மச்சான்…உங்களைத்தான் பாத்துட்டுப் போகணும்னு வந்தேன்”

“”வா…வா…உட்காரு! யம்மா…யார் வந்திருக்கான்னு பாருங்க…! நம்ம கோபாலு”

“”யப்பா…வா…ஆயிரம் வாட்டி இந்தத் தெருவுல போவ…ஆனா ஒரு வாட்டிகூட வீட்டுக்குள்ள வந்ததில்ல…இன்னைக்கு மச்சான் இருக்கான்னு தெரிஞ்சி வந்திரிக்கியாக்கும். எப்படியிருக்க? தொழிலெல்லாம் எப்படியிருக்கு…?”ன்னு கேட்டுகிட்டே குறுங்கட்டில்ல வந்து உட்கார்ந்தாங்க மாடசாமியோட அம்மா.

“”யய்யா…கோபாலு என்ன சோலியா வந்திருக்கானாம்…?”

“”தெரிலம்மா…இப்பத்தான வந்திருக்கான்” என்றான் மாடசாமி.

வரப்பு“”யய்யா…இரு; நான் காப்பித்தண்ணி கொண்டாரேன்”-எழும்ப முயன்ற அவர்களை…””வேண்டாந்த்த…நீங்க உக்காருங்க அத்தை” என்று உட்கார வைத்தான்.

“”சரி, மாப்ள…என்ன ஏதும் விசேஷமா?”

“”விசேஷம்லாம் ஒண்ணுமில்ல மச்சான். நம்ம அய்யும்புள்ளி வயல் இருக்குல்ல…”

“”ஆமா இருக்கு…”

“”அதுக்குக் கிழக்குப் பக்கம் எங்க வயல் இருக்குல்ல…”

“”சரி”

“”அந்த வயலை வித்துடலாம்னு இருக்கேன்”

“”எதுக்கு மாப்ள அந்த வயலை விக்கிற?”

“”…”

“”எலே…உனக்குக் கிறுக்கு கிறுக்கு ஏதாச்சும் புடிச்சு போச்சா? அந்த வயலை எதுக்கு விக்கிற? நம்ம ஊர்லயே அதுதான் நல்லா விளையக்கூடிய வயலு…மழை தண்ணி இல்லன்னாலும், பாதாள மடைக்குப் பக்கத்துல இருக்குறதால, குளத்துல கொஞ்சமா தண்ணியிருந்தாலும் ரெண்டு எட்டுல வயலுக்குப் பாஞ்சிடும். மழைத்தண்ணி ஒழுங்கா இருந்தா மூணு போகமும் விளையும். அதைப்போய் விக்கப் போறேன்னு சொல்றியே! உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா…”- பொரிந்து தள்ளினார் மாடசாமியின் தாயார்.

“”இல்ல அத்தை… சூழ்நில அப்படி. அதை வித்துதான் சமாளிக்க வேண்டியிருக்கு”

“”சரி. அப்டிய விக்கணும்னா வேற காஞ்ச பூமி எதையாவது வில்லு…இல்ல அந்தக் கள்ளுக்கடை திரட்டுல இருக்குற நிலத்தை வில்லு. அய்யம்புள்ளி வயலைப் போய் விக்கணும்னு சொல்றியே”

“”அந்த…அந்த இடம் அவ்வளவு விலை போகாது. இந்த வயல்தான் நல்ல விலைக்குப் போகும். அதான் இதை விக்கலாம்னு வந்தேன்”

“”சரி மாப்ள. எதுக்கும் அவசரப்படாத. வேற வழியில சமாளிக்க முடியுமான்னு பாரு”

“”இல்ல மச்சான்…நல்ல முடிவு பண்ணிட்டுதான வந்திருக்கேன்”

“”யாரு என்ன விலைக்குக் கேக்குறாங்க… எதுவும் விசாரிக்கிறியா?”

“”இல்ல மச்சான்…யார் கிட்டயும் சொல்லல. உங்ககிட்டதான் முதல்ல வந்திருக்கேன்”

“”எங்கிட்டயா?”

“”ஆமாம் மச்சான், தெற்குப் பக்கம் புதுக்குடி ஊர்க்காரர் வயல், மேற்குப்பக்கம் உங்க வயலு, வடக்கயும், கிழக்கயும்…வாங்குற அளவுக்கு யாரும் இல்ல…அவனுவ ரெண்டு பேருமே இத்து போனவனுவ. ஒழுங்கா பணமும் வந்து சேராது. புதுக்குடிகாரருக்கு குடுக்குறது நியாயமில்ல! நீங்க நம்ம ஊரு, நம்ம சொந்தம், அதுமட்டுமில்ல. கொடுக்கல் வாங்கல்ல நீங்களும் உங்க அப்பா மாதிரி நியாயமானவங்க. அசலூருக்கு விக்கிறத அடுத்த வயல்காரங்க நீங்க உங்களுக்கு விக்கிறதுதான் நியாயம். நீங்க வாங்கீட்டீங்கன்னா அப்படியே வரப்பைத் தட்டி ரெண்டு வயலையும் ஒண்ணாக்கிடலாம்”-கோபாலு சொல்லிக்கொண்டே போனான்.

மாடசாமியின் நினைவுகள் பின்னோக்கிப் போய்க்கொண்டிருந்தன.

ஐந்து வருடங்களுக்கு முன்னால்…

நேரம் கிடைக்கும்போதெல்லாம், அப்பாவுக்கு உதவியாக வயல்காட்டு வேலைகள் அத்தனையும் இழுத்துப் போட்டுச் செய்வான்.

ஒரு சமயம், ஊருக்குத் தெற்கே உள்ள அய்யம்புள்ளி வயலில் (தென்னை மரத்தடி வயல், கல்காவடி வயல், குளத்தங்கரை வயல், குப்பைத் திரடு வயல், கள்ளுக்கடை வயல்…என்று வயல்களை அடையாளம் சொல்வது ஊர் வழக்கம்) தண்ணீர் பாச்சுவதற்காக மண்வெட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு சென்றான்.

நல்ல உழவு நேரம், வயல் எல்லாம் தொழி அடித்து சேறும் சகதியுமாக இருந்தது. வரப்புல நடந்து போவதே சிரமமாக இருந்தது.

நடுவைக்கு முன்னால நாலுபக்க வரப்பில் உள்ள புல்லைச் செதுக்கி, வயலில் போட்டு, மிதித்து அதையும் உரமாக்கிவிடுவார்கள். வரப்பும் களையின்றி சுத்தமாகிவிடும்.

தெற்குப் பக்க வரப்பில் நடந்தது போய், கிழக்குப் பக்க வரப்பில் நடப்பதற்கு திரும்பினான்.

வரப்பு வரப்பாக இல்லை!

குறைந்தது முக்கால் அடி அகலமாவது இருக்க வேண்டிய வரப்பு மூன்று அங்குலம் கூட இல்லை.

முத்துப்பாண்டி மாமா (கோபாலுடைய அப்பா) அந்த அளவுக்கு வரப்பையெல்லாம் வெட்டி வயலுக்குள் வீசிக்கொண்டிருந்தார்கள்.

“”என்ன மாமா…வரப்பை இப்படி வெட்டுறீங்க? எப்படி நடந்து போறது?”

“”உன்னை எவன் வரப்புல போகச் சொன்னான்? உன் வயலுக்குள்ள இறங்கிப் போ”

“”என்ன மாமா… ரெண்டு பேருக்கும் பொதுவான வரப்பை நீங்க இப்படி வெட்டி வரப்பே இல்லாத மாதிரி ஆக்கிட்டிங்களே…”

“”அப்படித்தான்டா வெட்டுவேன்…இப்ப என்னல பண்ணணும்ங்கிற…?”

“”மாமா நீங்க பேசுறது நியாயம் இல்ல”

“”நியாயம் இல்லன்னு தெரிதுல்ல. பொத்திகிட்டு போயாம்ல. எதாவது பேசுன…கையில என்ன இருக்குதுன்னு பார்த்துக்க…”

அத்து மீறி வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு நேரே வீட்டுக்கு வந்தான் மாடசாமி.

“”அப்பா…எங்க அம்மா…? அந்த முத்துப்பாண்டி மாமா இப்படிப் பண்றாங்க…”- ன்னு நடந்ததையெல்லாம் அம்மாவிடம் சொல்லிக் குமுறினான்.

“”சரி…சரி…ஆத்திரப்படாதய்யா…நீ படிச்ச புள்ள…அவுகளும் நீயும் ஒண்ணா? பொறுத்தார் பூமியாள்வார்; பொங்கினார் காடாள்வார். நீ பொறுமையாயிரு. வரப்பை வெட்டுனவன் வாழ்ந்ததில்லன்னு சொல்வாங்க. நமக்கு ஒரு குறையும் வராது” என்று மகனைச் சாந்தப்படுத்தினாள் அந்தத் தாய்.

ஏ ஏ ஏ

“”என்ன மச்சான் என்ன யோசனை?”-கோபாலின் குரல் கேட்டு பழைய நினைவுகளில் இருந்து நிகழ்காலத்துக்குள் வந்தான் மாடசாமி.

“”என்ன மச்சான் இவ்வளவு யோசிக்கிறீங்க? அய்யம்புள்ளி வயல்னா அத்தனை பேரும் எனக்கு உனக்குன்னு வந்து நிப்பானுவ…நீங்க என்னடான்னா…”

“”அதுக்கில்ல மாப்ள…நீ வரப்பை தட்டிட்டு, ரெண்டு வயிலயும் ஒண்ணாக்கிடலாம்னு சொன்னியா…அதான் ஏதோ ஒரு நினைவு”

“”சரி என்ன மச்சான் சொல்றீய?”

“”இந்தா பாரு, எங்கம்மா சொன்ன மாதிரி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காத. அது பொன்னு விளையிற பூமி! இன்னைக்குப் பணத்துக்கு அவசரம்னு வித்துட்டு, அப்புறம், நாளைக்கு நாலு காசு வந்த பிறகு, “அடடா அவசரப்பட்டு வித்துட்டோமே’ன்னு கலங்கப்படாது. அதனால ஒரு தடவைக்கு ரெண்டு தடவை, ஒரு நாளைக்கு ரெண்டு, மூணு நாள் யோசனை பண்ணி ஒரு முடிவுக்கு வா”

“”ஆமாய்யா…தம்பி சொல்றது சரிதான்… நீ எதுக்கும் ஒரு யோசனை பண்ணிக்கய்யா”

“”இல்ல அத்தை… நான் விக்கணும்கிற முடிவுலதான் வந்திருக்கேன். அதுவும் உங்ககிட்ட விக்கணும்னுதான் வந்திருக்கேன்த்த…அதுல எந்த மாற்றமும் இல்லை” திடமாகச் சொன்னான் கோபால்.

ஏ ஏ ஏ

வாங்கியாச்சு! பத்திரம் எல்லாம் பதிவு பண்ணி, பட்டா மாற்றுவதற்கும் ஏற்பாடு பண்ணாயாச்சி.

“”யய்யா…கோபாலு சொன்ன மாதிரி அந்த வரப்பைத் தட்டிட்டியன்னா ரெண்டு வயலும் ஒண்ணாயிடும்; உழுறதுக்கு நடுறதுக்கு எல்லாம் செüகரியமாயிருக்கும்ல…”

“”ஆமாம்மா…! ஆனா நான் அந்த வரப்பைத் தட்டமாட்டேம்மா! எந்த வரப்புல நடக்க முடியாம நான் வயலுக்குள்ள இறங்கி நடந்தேனோ அந்த வரப்பை எடுக்க வேண்டாம்மா.

அந்த வரப்புலதாம்மா புதுக்குடி ஊர் அண்ணாச்சி நடந்து போறாங்க; நாலுமாவடி அண்ணாச்சி வயலுக்குப் போகணும்னாலும் அந்த வரப்புல போறதுதான் அவுகளுக்கு செüகரியம்.

அந்த வரப்பு இல்லன்னா, அவங்கல்லாம் பல வயல்களைக் கடந்துதான் அவங்கவங்க வயல்களுக்குப் போகணும். அந்த வரப்பு இருந்திச்சின்னா எல்லாருக்கும் உதவியாயிருக்கும். அதனால் அந்த வரப்பை நல்லா ஒரு அடி அளவுக்கு அகலப்படுத்தி வச்சிருவோம் சரியாம்மா! நாலு பேருக்கு நல்லவனா இருந்தா மட்டும் போதாது, நாலு பேருக்கு உதவியாவும் இருக்கணும்னு அப்பா அடிக்கடி சொல்வாங்கள்ல…”

“”ஆமாய்யா…எம்புள்ளை…நீ எப்பவும் நல்லாயிருப்பய்யா…” மகனை அணைத்து முத்தமிட்டாள் அந்த அன்புத் தாய்.

– ஜூன் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *