வரந்தரும் தெய்வம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2014
பார்வையிட்டோர்: 9,544 
 

“பண்போட அன்போட நலமோட வளமோட நூறு வருஷம் நீடூழி வாழணும்டா கண்ணா”

தாத்தா பொக்கைவாய் சிரிக்க மலர்தூவி, பேரன் வருணை ஆசிர்வாதம் செய்தார்.

“தாத்தா! பூப்போட்டு ஆசிர்வாதம் பண்ணி எஸ்கேப் ஆகற டக்கால்ட்டி வேலைலாம் இங்க செல்லாது. அண்ணாக்கு வருஷா வருஷம் பர்த்டே கிஃப்ட் வாங்கித்தருவியே? இந்த வருஷம் எதும் இல்லியா..ம்ம்?!”

நர்மதா தாத்தாவிடம் கேட்டுவிட்டுக் கண்சிமிட்டினாள்.

“யாருடி சொன்னா எதும் இல்லனு? இப்ப சொல்றேன் கேட்டுக்க…என் சொத்தே அவனுக்குத்தான். பத்திரம் எடுத்துட்டு வர சொல்லு உங்கப்பனை. இப்பவே கையெழுத்து போடறேன் எல்லாத்துலயும்”

தாத்தா மேற்கண்ட வசனத்தை சிவாஜி கணேசன் கணக்காய் சொல்லிவிட்டு, மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்க, நர்மதா சிரித்தாள்.

“தாத்தா, எல்லாம் சரி. நிமிஷத்துல பேத்தி நானொருத்தி இருக்கறதயே மறந்துட்டயே நீ!? எல்லாம் பேரனுக்குன்னா…அப்போ பேத்திக்கு என்னவாம்”

“ஏண்டி கண்ணு, உனக்கு தான் தாத்தா நான் இருக்கனே அப்புறம் என்னவாம்?”

தாத்தா… மீசையை முறுக்கிக்கொண்டே பேத்தியை கேட்டுவிட்டு சிரித்தார்.

“நல்லா தான் நீ ஏமாத்தற என்னை…” என்றுவிட்டு நர்மதாவும் சிரிக்க அந்த இடமே கலகலப்பாயிருந்தது. தாத்தா அன்புடன் நர்மதாவின் தலையைக் கோதி உச்சிமுகர்ந்தார். நர்மதா தாத்தாவின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளினாள்.

“இந்தா…. நீயே இத வருண் கிட்ட குடு” என்றுவிட்டு பிறந்த நாள் பரிசாகத் தான் வாங்கி வைத்திருந்த பைக்கின் சாவியை சட்டைப் பைக்குள்ளிருந்து எடுத்து நர்மதாவிடம் கொடுத்தார் தாத்தா.

நர்மதா விழிவிரிய அதை வாங்கி, வருணிடம் நீட்ட, வருண் வாய்பிளந்தான்.

“தாத்தா ஐ லவ் யூ! ஐயோ தாத்தா! என்ன இப்டி எனக்கு சர்ப்ரைஸ்-லாம் குடுக்கற நீ?! எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? எதிர்ப்பார்க்கவே இல்ல. யு ஆர் க்ரேட் தாத்தா…”

இன்ப மழையில் நனைந்தவன் சட்டென்று தாத்தாவைக்கட்டியணைத்து அவர் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு துள்ளலாய் பைக்கை நோக்கி ஓடினான்.

தாத்தா, அவன் ஓடுவதை சிரித்தவாறே பார்த்துக்கொண்டிருந்தார்.

“டேய், என்னை ஒரு ரவுண்டு கூட்டிட்டு போடா…” நர்மதா திரும்பிப் பார்த்து அவனை நோக்கிக் கத்தினாள்.

“கூட்டிட்டு போய்ட போறான். அது யாரு நிஷாவா? உஷாவா? அவ கேக்காமலேயே இந்நேரம் ஒம்பது சுத்து சுத்தியிருப்பான்.

நான் என் வயசுக்கு எப்படி இருந்தேனோ அதே மாதிரி இருக்கான் இவனும். உங்கப்பன் தான் எதுக்கும் லாயக்கில்ல. என்ன பண்ண…..தவறி, அவன் அவனோட அம்மா மாதிரி பொறந்துட்டான்” என்றபடி தாத்தா மீண்டும் மிடுக்காக மீசையை முறுக்க,

“என்ன நடக்குது இங்க?” என்றபடி விஸ்வநாதன் அங்கே வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

விஸ்வநாதன் தாத்தாவின் மகன். வருணுக்கு அப்பா.

“ஒன்னுமில்லடா. உம்பிள்ளை, அடுத்த வருஷம் கணக்குல ஃபர்ஸ்ட் மார்க் வாங்கினான்னா, அவனுக்கு கார் வாங்கித் தரலாமான்னு நர்மதா கிட்ட கேட்டுட்டு இருந்தேன், அதுக்குள்ள நீ வந்துட்ட அவ்ளொதான். என்ன நர்மதா?”

தாத்தா நர்மதாவை பார்க்க, நர்மதா சிரித்தாள்.

“சரி சரி பாஸாட்டும் பாப்போம். அப்பா! கோயில்ல வருண் பேருக்கு அர்ச்சனை பண்ணனுமாம். அவ அம்மா ப்ரசாதம், அர்ச்சனைக்கு தேவையானதெல்லாம் எடுத்துவச்சிருக்கா. கொஞ்சம் நீங்களும் நர்மதாவும் போய்ட்டு வந்துருங்களேன்? எனக்கு போர்ட் மீட்டிங் இருக்கு காலைல. சாயந்தரம் வரும்போது நானும் அப்டியே கோயிலுக்கு போய்ட்டு வந்துடறேன்.”

வருணின் அப்பா, தாத்தாவிடம் விண்ணப்பித்தார். தாத்தா ஏற்றுக்கொண்டார்.

“சரிப்பா. அத விட்டா எங்களுக்கு வேற என்ன வேலை. கொழந்தே, போய்ட்டு அர்ச்சனை சாமான்-லாம் எடுத்துட்டு வாம்மா. போய்ட்டு வந்துடுவோம்”

“சரி தாத்தா!” நர்மதா சமையல் கட்டுக்குள் ஓடினாள்.

தாத்தாவுக்கும் நர்மதாவிற்கும் எப்போதும் இவ்விதமான உரையாடல்கள் உற்சாகம் நிறைந்ததாய் நடந்தவாறே இருக்கும்.

இருவரின் உரையாடலும் சொல்லப்போனால் இரு சம வயதொத்த நண்பர்கள் தமக்குள் சீண்டிச் சிரித்து மகிழும் உரையாடலைப் போல் தான் இருக்கும். சூரியன் மலர்ந்தால் எவ்விதம் நிலமெல்லாம் பகலில் ஜ்வலிக்குமோ… அவ்விதமே தாத்தாவும் அவளும் இருக்குமிடத்தில் சிரிப்புக்கும் சந்தோஷத்திற்கும் குறைவேயிருக்காது.

இருவரும் வருண் பேரில் அர்ச்சனை செய்யவேண்டி அதற்கான பொருட்களுடன் காரில் கோயிலுக்குப் பயணப்பட்டனர்.

நர்மதா, காரை ஸ்டார்ட் செய்ய, தாத்தா உள்ளிருந்த சிடி- ப்ளேயரில் தருமபுரம் சுவாமிநாதன் உருகிப்பாடும் திருவாசகத்தை இழைய விட்டார்.

தாத்தா சில போதுகளில் மட்டும் மிகுந்த மௌனம் காப்பது உண்டு. அதில் ஒரு பொழுது, திருவாசகம் கேட்கும் பொழுது.

மனிதர், இந்த பாடல் இசைக்கப் படும்போது மட்டும் அப்படியே இமைமூடி அதன் வரிகளில், வரிகளின் உருக்கத்தில் தானும் கரைந்து மறைந்து போவார்.

இன்றும் அப்படித்தான். தன்னை மறந்த நிலையில் அமுதத்து இனிப்பில் கட்டுண்ட எறும்பாய் மோன நிலையில் கண்மூடி அமர்ந்திருக்க, நர்மதா அவர்நிலை கண்டு இளநகை பூத்தாள்.

“இந்த பாட்ல என்னமோ இருக்கு தாத்தா! ஆளை என்னமா உருக்கிடறது? நானும் எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்து பாக்கறேன். இந்த பாட்டு போட்டா, நீ அப்டியே சைலன்ட் ஆய்ட்ற. எனக்கு முழுக்க புரியலன்னாலும் கூட எனக்கும் இத கேக்கும் போது என்னவோ பண்ணுது.”

தாத்தா பேத்தியின் வார்த்தைகளை உள்வாங்கியவராய் புன்னகையோடு அவள் பக்கம் திரும்பினார்.

“ஆமாம்மா. ஒருத்தர் இதுக்கு மேல தன்னைத் தாழ்த்திகிட்டு கடவுள் கிட்ட உருக முடியுமான்னு இத ஒவ்வொருவாட்டி கேக்கும் போதும் தோணும். நமக்கு அந்த மாதிரி பக்குவம் என்னைக்கு வாய்க்குமோ-னு இத கேக்கும்போதெல்லாம் நெனச்சுக்குவேன். மனசு மும்முரமா வேல செய்யும் போது வாய் மௌனமாய்டறது சகஜந்தானே? அதான் அப்பப்போ தூங்கினா மாதிரி உக்காந்துடறேன்” சிரித்தார்.

அவளும் பதிலுக்கு சிரித்தாள்.

“ம்ம்… இந்த பாட்டுக்கு பொருள் என்னனு படிச்சு தெரிஞ்சுக்கணும்னு இருக்கு. தினசரி வாழ்க்கைக்கும் இதுமாதிரி பாட்டுங்கள்லாம் அந்த காலத்துல இருந்திருக்கும் தானே? குழந்தைங்களுக்கு ஆத்திச்சூடி மாதிரி?!”

“ம்ம்.. இல்லாம என்ன? பிறந்ததிலேர்ந்து நாம கண்ண மூடற வரைக்கும் நம்ம வாழ்க்கைய முறைபடுத்திக்கன்னு நெறய பாட்டுங்க பாடி வச்சிருக்காங்கம்மா. என்ன பேசணும், எப்படி பேசணும், எப்படி உடுத்தணும், எப்படி சாப்பிடணும்னு நெறய்ய நெறய்ய…. திருக்குறள் மாதிரி, திருமூலர் எழுதின திருமந்திரம்ங்கறதும் அதுல ஒன்னு. ஒசத்தியானதும் கூட.

அன்பு தான் கடவுள். அதனால எல்லார்க்கிட்டயும் அன்பு செலுத்து; மனுஷங்க தான் நடமாடும் கோயில். அவங்களுக்கு உதவி செய். அது கடவுளுக்குப் போய்ச்சேரும்; ஒன்னுதான் கடவுள்; ஒன்னுதான் குலம் இப்டியா அற்புதமான விஷயங்கள் நெறய்யவும் ஆயிரம் ஆயிரத்தைநூறு வருஷத்துக்கு முன்னமே
ஒருத்தர் பாடி இருக்கார்ங்கறது எத்தனை பெரிய விஷயம்?!

அதை நாம சரியா புரிஞ்சுகிட்டு சரியா வாழ்ந்தோம்னாக்க அதவிட ஒசத்தியான வாழ்க்கை இந்த உலகத்துல வேற என்ன இருக்கமுடியும்?”

நர்மதா, தாத்தாவைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தாள்.

மௌனமே வார்த்தையாய் அங்கே பல நிமிடங்கள் உரையாடல் நிகழ, இதற்கிடையில் சீராய் சென்றுகொண்டிருந்த வாகனம் சட்டென நின்றதும் மௌனம் கலைந்தது.

“என்னம்மா வண்டிய நிறுத்திட்ட?”

“கோயில் வந்துருச்சி தாத்தா. இப்போ தான் பாத்தேன்”

“என்னம்மா சொல்றே? இன்னும் அதுக்கு நாம நாலஞ்சு கிலோமீட்டர் போகணுமே?!”

“ஐயோ தாத்தா. பேசிக்கிட்டே இருக்காம சட்டுனு எறங்குங்க. இல்லையானா கோயில் போயிடும். சீக்ரம் சீக்ரம்”

“என்னம்மா சொல்ற? எனக்கு ஒன்னும் புரியலயே?!”

கேட்டுக்கொண்டே தாத்தா இருக்கையினின்று விடுபட்டுக் கீழிறங்கினார்.

அதற்குள் நர்மதா காரின் பின்புறத்தில் வந்த வழியாக ஓடிக்கொண்டிருந்தாள். இந்த பெண்ணுக்கு என்னவாயிற்று? ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறது என்று குழம்பியவாறே…அவள் போகும் திசையில் விழிகளைச் செலுத்த, சட்டென பொறிதட்டியது.

“அடடா நாம தான் முட்டாள் தனமாக நின்னுட்ருக்கோம்” என மனதுள் எண்ணியவாறே உள்ளேயிருந்து பைகளை சுமந்துகொண்டு நர்மதாவை நோக்கித் தானும் ஓடினார்.

மூச்சிறைத்தது அவருக்கு. அவளருகில் சென்றதும் முகம் முழுதும் பூரிக்க நர்மதாவை நோக்கிச் சிரித்தார்.

நர்மதாவும் புன்னகையுடன் அவரிடமிருந்து பையை வாங்கிக் கொண்டாள். பிறகு அங்கே துரிதமாக செயல்கள் அரங்கேறின.

கொண்டு வந்திருந்த வாழை இலையில் பிரசாதம் பரிமாறப்பட்டது. பழங்கள் பரப்பப் பட்டன. கொண்டு வந்த நீரை அருகில் வைத்தாள் நர்மதா. வைத்தது தான் தாமதம், நடமாடும் கோயில் தெய்வம், தன் அகோரப் பசியால் வெடுக் வெடுக்கென வைத்திருந்ததையெல்லாம் கணமும் தாமதியாமல் வேகமாய்
விழுங்கிற்று.

தெய்வத்தின் பசியுணர்ந்த இருவரின் கண்களும் கண்ணீர் சிந்தின.

உண்டு முடித்த பின்னர் தெய்வத்திற்குக் கை கழுவ நீர் ஊற்றினார் தாத்தா.

ஊற்றிக்கொண்டே தாத்தா தெய்வத்திடம் பெயர் கேட்டார்.

தன் பெயர் சுருக்கி சாமி என்றது, சாமிக்கண்ணு என்கின்ற அந்த தெய்வம்.

சிலிர்த்தார்கள் இரண்டு பேரும். தெய்வம் அவர்களைப் பார்த்துச் சிரித்தது.

நடுவே, நர்மதாவை அலைபேசியில் அழைத்தாள் அம்மா.

“நர்மதா கோயிலுக்குப் போயிட்டீங்களாம்மா?”

“போய்ட்டோம்மா!”

“கூட்டம் நெறய்ய இருக்குமே. சாமி நல்லா பாத்தீங்களா?!”

“இந்த கோயிலுக்கு நெறய்ய கூட்டம் வர்றதில்ல போலிருக்கு. நானும் தாத்தாவும் மட்டும் தான் இருக்கோம். நல்ல தரிசனம்! ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா”

தாத்தாவைப் பார்த்துக் கொண்டே அம்மாவுடன் பேசினாள் நர்மதா. தாத்தா புன்னகைத்தார்.

அதே சமயம் கைகளைத் துடைத்துக் கொண்டு, மீதமிருந்த சில பழங்களைத் தன் கிழிந்த பையில் போட்டுக் கொண்ட சாமி என்னும் அந்த வயோதிகக் கந்தலாடைத் தெய்வம், இருவரையும் நோக்கி கண்ணீர் மல்க,

“ஐயா நீங்க நல்லா இருக்கணும்! அம்மா நீங்க நல்லா இருக்கணும்! உயிர் போற நேரத்துல சாப்ட குடுத்து உதவுறீங்களே…. ஐயா நீங்க நல்லா இருக்கணும்! அம்மா நீங்க நல்லா இருக்கணும்!” என்றவாறே பலமுறைத் தன் கரம் கூப்பிக்
கும்பிட்டவாறே தள்ளாடித் தள்ளாடி மெதுவாய் நடக்க,

“சாமி ஆசிர்வாதம் பண்ணிருச்சும்மா!”

சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தாள் நர்மதா.

ஆனால் அது, ஆரம்பம் தான்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *