வந்தவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 8,507 
 

” ஜிக்கன் வந்துட்டான்மா ” என்று என் அக்கா ஜெயா வேகமாய் ஓடிவந்து என் அம்மாவிடம் ரகசியக் குரலில் கிசுகிசுத்தது ஹாலில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்ததாய் பாவ்லா பண்ணிக்கொண்டிருந்த என் காதிலேயே விழுந்தது. ஜிக்கன் என் மாமா பையன். பொள்ளாச்சியில் எல்.ஈ.ஈ ( இந்தக்காலத்து டிப்ளமா இன் எலெக்ட்ரிக்கல் இஞ்சினீயரிங்க் ) படித்துவிட்டு அங்கேயே ஏதோ பட்டறையில் சூப்பர்வைசராக இருந்தவனை என் மாமா வலுக்கட்டாயமாக பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பில் கலாசி என்னும் கடை நிலைப் பணிக்கு அனுப்பிவைத்திருக்கிறார். என் அப்பாதான் அந்த வேலைக்கு ஏற்பாடு செய்ததாகவும் அதேபோல் அப்போதுதான் பிஎஸ் ஸியை முதல் வகுப்பில் முடித்திருந்த என் உடன்பிறந்த அண்ணனுக்கும் ஒர்க் ஷாப்பில் கலாசி வேலையை வாங்கிக்கொடுக்கச் சொல்லி ‘ எவ்வளவோ மன்னாடியும் ‘, ” அடிப்போடி! டிகிரி முடிச்சவனுக்குப் போயி கலாசி வேலயா? ஒனக்கெல்லாம் அவ்வளவுதான் புத்தி ” என்று தன் வாயை அடைத்துவிட்டதாகவும், அப்பாமாத்திரம் என் அண்ணனையும் ரயிலில் அப்பவே ” இழுத்துவிட்டிருந்தால் ” அவனும் இப்போதுபோல் ஊரூராய் அலையாமல் ஸ்திரமாக ஒரு இடத்தில் இந் நேரம் மூணு நாலு ப்ரோமோஷன் வாங்கி ஜிக்கன் போல இருந்திருப்பான் என்றும் பின்னாட்களில் அம்மா புலம்பிய போதெல்லாம் என் அப்பா காதில் ஏதோ கொசு பூந்துவிட்டதுபோலக் காதைக்குடைந்துகொண்டே எதுவும் காதில் விழாததுபோல் போய்விடுவார்.

ஜிக்கன் வந்த செய்தியைக் கேட்டு இதுதான் சாக்கு என்று புஸ்தகத்தைக் கிடாசிவிட்டு ஜிக்கனை அதுவரை பார்த்தேயிராததால் எப்படி இருப்பான் அவன் எனப் பார்க்கும் ஆவலில் ” ஜிக்கன் வந்தாச்சா ? ” என்று வடிவேலு பாணியில் கத்திக்கொண்டு வாசலை நோக்கி ஓடிய என்னை சமையல்கட்டிலேயே பிடித்து முதுகில் பளாரென ஒன்று வைத்து ” போடா, போய் படிக்கிற வழியப் பாரு ” என்று அப்பாவின் மேலிருந்த கோபத்தை அம்மா என்மீது காண்பித்தாள். ஆனால் எனக்கு அடிவிழுந்த அடுத்த செகண்டிலேயே கதவைத் திறந்துகொண்டு நுழைந்த ஜிக்கனைப் பார்த்து, ” வா ஜிக்கா! எப்படி இருக்கே? ” என்று முகம் முழுக்க சிரிப்பாய் ஜிக்கனை வரவேற்ற அம்மாவின் ஸ்ப்லிட் செகண்ட் மாற்றத்தில் வியந்து, வாங்கின அடியின் வலிக்கு அழமறந்துபோய் நின்றேன். அம்மாவுக்கு ஜிக்கன் எங்கள் வீட்டிலேயே தங்கிவிடுவானோ என்ற பயம் வேறு இருந்தது . எங்கள் வீட்டில் ஏற்கனவே எட்டு டிக்கெட்டுகள். மாமா கொஞ்சம் நல்ல உத்யோகத்தில் இருந்ததால், பிள்ளைகளை கொஞ்சம் வசதியாகவே வளர்த்திருந்தார். அந்த அளவுக்கு வசதி இல்லாததாலும், மேலும் அப்பா இதுதான் சாக்கு என்று தன் அண்ணன் தம்பிகளின் பிள்ளைகளையும் கூப்பிட்டு இங்கு வைத்துக்கொண்டால் என்ன ஆவது என்ற நியாயமான கவலையாலும் ஜிக்கன் ” சீக்கிரம் வேறு இடம் பார்த்துக்கொண்டு போய்விடவேண்டும் தாயே ” என்று தான் அனுதினமும் வணங்கும் ராஜராஜேஸ்வரியை அம்மா மனதுக்குள் வேண்டிக்கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் நன்றாகவே கேட்டது.

ஜிக்கன் சாதாரண உயரத்தில் சாதாரண உடல்வாகில் சுருட்டைமுடியோடு பெரிய மீசை வைத்திருந்தான். ரொம்ப சங்கோஜத்தில் என் அக்கா கொண்டு வந்து கொடுத்த காஃபியை உடல் நெளிய வாங்கிக்கொண்டு பாதி எச்சில் பண்ணியும் பின் என் அம்மாவின் முகபாவம் சரியில்லாததுகண்டு டம்ளரைத் தூக்கியும் குடித்தான். ” நாளக்கித்தானே வேலயில சேரணும்? இல்ல இன்னிக்கே போணுமா? நாளெல்லாம் பாத்தாச்சோல்லியோ? ” என்று அடுக்கடுக்காய்க் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போனாள் அம்மா. கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அம்மாவுக்கே பதில் நன்றாகத் தெரியும். மாமா போன வாரமே போட்டிருந்த லெட்டரில் எல்லாவற்றையும் விளக்கமாக எழுதியிருந்தார். ஆனால் என்ன, லெட்டர் இங்கிலீஷில் இருந்ததால் கடித விவரத்திற்கு அப்பாவையும் இங்கிலீஷ் தெரிந்த என் பெரியண்ணனையும் நம்பவேண்டியிருந்தது. அம்மா பக்கத்திலிருக்கும்போது நான் சத்தமாக இங்கிலீஷ் பாடங்களைப் படிப்பதாலும் பக்கத்திலிருந்த ஆங்கிலோ இந்திய பசங்களோடு விளையாடுவதாலும் சந்தேகத்துக்கு என்னையும் ஒருதடவைப் படிக்கச் சொல்லி அர்த்தம் கேட்டுக்கொண்டிருந்தாள். “மற்றவற்றையெல்லாம் ஜிக்கன் நேரிலேயே சொல்வான் ” என்று மாமா எழுதியிருந்ததற்கு அர்த்தம் கண்டுபிடிக்கத்தான் ஜிக்கனிடம் கேள்விகள்கேட்டு இப்படி அம்மா படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள். அப்பாவோ ஜிக்கனிடம், ” எல்லா செர்டிஃபிகேட்ஸையும் எடுத்துண்டு வந்திருக்கியா? அட்டெஸ்டெட் காப்பீஸெல்லாம் இருக்கோல்லியோ ? “என்று கேட்டுவிட்டு கிருஷ்ணா கஃபேயைப் பார்க்கப் போய்விட்டார். ஜிக்கன் குளித்துவிட்டு டிஃபனை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்ததுபோலத் தெரிந்தது எனக்கு. எங்கள் வீட்டில் என்றைக்குமே காலையில் டிஃபன் என்பதே கிடையாது. ஆவணி அவிட்டத்தன்று மட்டும் காலையில் இட்லியும் அப்பமும் உண்டு. அதுவும் பூணல் போட்டுக்கோண்டுவர லேட்டாகும் என்பதால். நான் ஒருவன் மட்டுமே ஜிக்கனை அவன் வந்ததிலிருந்து பின்னால் கைகளைக்கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டே இருந்ததில், ” நீதானே ரமணி? வர்றியா வெளில போய்ட்டு வரலாமா? ” என்று கூப்பிட்டதில், ” ஓ எஸ் ” என்று கிளம்பிவிட்டேன்.

வெளியில் வந்து கொஞ்ச தூரம் நடந்ததுமே ஜிக்கன் என்னிடம் ” இங்க வாடகை சைக்கிள் கிடைக்குமா ? ” என்று கேட்டான். ” ஓ கிடைக்குமே ” என்று நான் அவனை பக்கத்திலிருந்த இப்றாஹிம் பிரியாணி கடை தாண்டி சந்தைக்குப் போகும் வழியில் இருந்த நடராஜ் சைக்கிள் கடைக்குக் கூட்டிச் சென்றேன். ” ஒனக்கெல்லாம் சைக்கிள் தருவானா? ? என்று ஜிக்கன் கேட்டுமுடிக்கு முன்னரே நடராஜ் என்னைப் பார்த்து , ” என்ன ஐயரே! சைக்கிள் வேணுமா? யாரு இவரு? ” என்றான். நான் உடனே அவனுக்குப் பதில் சொல்லாமல் அங்கிருந்ததிலேயே கொஞ்சம் புதிதாய் இருந்த சைக்கிள் அருகில் சென்று இரண்டு வீல்களிலும் காற்று இருக்கிறதா என்றும் பெடலை ஒரு அழுத்து அழுத்தி ப்ரேக்கைப் பிடித்து சரியாகப் பிடிக்கிறதா என்றும் ” என்னவோ சைக்கிளயே வெலக்கி வாங்கப்போறமாதிரி செக் பண்றதப் பாரு ” என்று நடராஜ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பெல்லையும் அடித்துப் பார்த்தேன். ” எழுதிக்க நடராஜ். டூ அவர்ல வந்துடுவேன் ” என்று சைக்கிள் ஸ்டாண்டை எடுத்தபோது சைக்கிள் சீட் என்னைவிட அரை அடி உயரமாய் இருந்ததைப் பார்த்து நடராஜனோடு சேர்ந்து ஜிக்கனும் சிரித்தான். பின் சைக்கிளை என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்ட ஜிக்கன் என்னை முன்னால் இருந்த பாரில் உட்காரவைத்து ஓட்டிக்கொண்டே, ” இங்க நல்ல ஓட்டல் எங்க இருக்கு ? ” என்று கேட்கும்பொழுதே அப்பா எப்போதும் சாப்பிடும் கிருஷ்ணா கஃபேயை நாங்கள் தாண்டிவிட்டோம். நானும் சைக்கிளில் போகும் ஆசையில் மெயின் ரோட் பக்கம் சைக்கிளை ஓடச் சொல்லி அருணா பால் டிப்போ, ரயில்வே ஆஸ்பத்திரி கேண்டீன், ஆர்மரி கேட் என்கிற ஒர்க் ஷாப்பின் பிரதான நுழைவாயில் எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தினுள் பத்திரமாக எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் காந்தி சிலை எல்லாம் தாண்டி லக்ஷ்மி காஃபி ஒர்க்ஸ் பக்கத்திலிருந்த ஓட்டலுக்கு வழிகாட்ட அதன் உள்ளே போனபோது நாங்கள் எங்களின் தூரத்துச் சொந்தமான ராமமூர்த்தி மாமாவின் பெரிய பையனும் பெண்ணும் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

ராமமூர்த்தி மாமா ஒர்க் ஷாப்பில் ஒர்க்ஸ் மேனேஜராக இருந்தார். அப்பாகூட அவர் மூலமாகத்தான் ஜிக்கனுக்கு வேலை வாங்கிக்கொடுத்திருப்பதாக அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். ராமமூர்த்தி மாமாவின் கடைசிப் பையன் கிருஷ்ணன் மாத்திரம்தான் எங்களுடன் சகஜமாகப் பேசுவான். இந்தப் பெரியண்ணாவும் அக்காவும் என்னுடன் அதிகமாகப் பேசமாட்டர்கள். ஜிக்கனைப் பார்த்ததும் ” ஹெல்லோ! ஹௌ ஆர் யூ ? ” என்று ஆரம்பித்து ரொம்ப இங்கிலீஷிலேயே பேசிக்கொண்டார்கள். இப்படி ஒரு வேலைக்கு ஜிக்கன் வந்திருக்கக் கூடாது என்றும் , வயதானாலேயே அம்மா அப்பாக்களுக்கெல்லாம் மூளை மழுங்கி விடுவது பிள்ளைகளின் துரதிர்ஷ்டம்தான் என்றும் ராமமூர்த்தி மாமாவும் அந்தப் பெண் கீதாவிற்கு அவள் எம். ஏ முடிக்குமுன்னரே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டதையும் இன்னும் பத்து நாட்களில் பாம்பேயிலிருந்து ரொம்ப சின்ன வயதிலேயே பெரிய உத்யோகத்திலிருக்கும் ஒருவன் பெண் பார்க்க வருவதாயிருப்பதையும் சொல்லி படிப்பு முடிவதற்குள் அப்படி என்ன அவசரம் என்றும் அந்த அண்ணா விசனப்பட்டுக் கொண்டிருந்ததை அந்த அக்காவின் கண்கள் வேறு எங்கோ தொலைதூரத்தில் நிலைகுத்தி இருந்தாலும் முகம் வெகு நிச்சயமாக அதே அளவில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ” சரி பார்ப்போம்! அப்பறமா ஆத்துக்கு வா ” என்று அவர்கள் கிளம்பும்வரை ஆர்டர் செய்து வந்திருந்த தோசையை ஜிக்கன் அண்ணா சாப்பிடாததால் நானும் சாப்பிடாமல் காத்திருந்தேன். ஜிக்கன் அண்ணாவிற்கு இப்போது பசிபோய்விட்டது போலிருந்தது. திரும்பி வரும்போது ஜிக்கன் அண்னா சைக்கிளை தேவையில்லாமல் வேகமாக ஓட்டுவதாக எனக்குப் பட்டது. முன் பாரில் ஜிக்கனின் வெப்ப மூச்சு என் உச்சந்தலையைப் பொசுக்க நான் மிகவும் அசௌகர்யமாக உட்கார்ந்திருந்தேன்.

ஜிக்கன் அண்ணா வேலைக்குச் சேர்ந்த மூன்று நாட்களில் எங்கள் வீட்டிலிருந்து கிளம்பி ராமமூர்த்தி மாமா வீட்டில் கொஞ்ச நாள் தங்கியிருக்கக் கிளம்பிவிட்டான். அதற்கு அடுத்த வாரம் ராமமூர்த்தி மாமாவின் மனைவி ஜானகி மாமி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். ” இந்த ஞாயித்துக் கிழமை பாம்பேலேந்து நம்ம கீதாவை பொண்ணு பாக்க வரா! நீயும் அவரைக் கூட்டிண்டு காலம்பரயே அங்க வந்துடு. உங்காத்துக்காரர்கிட்ட இவர் ஆஃபிஸ்ல பாத்து சொல்லிடறேன்னு சொல்லிட்டார். எங்க டயம் இருக்கு இவருக்கு. எப்பப் பாத்தாலும் ஆஃபிஸ் ஆஃபிஸ்னு அதையே கட்டிண்டு அழறார். வெளியில ஆத்துலன்னு எல்லாத்தையும் பொம்மனாட்டிதான் கவனிச்சுக்க வேண்டிருக்கு. என்ன பண்றதுன்னே புரியல. நீங்கள்ளாம் இருந்துதான் கீதா கல்யாணம் வரைக்கும் பாத்துக்கணும் ” என்று கௌரவமாகஆரம்பித்து ” பஜ்ஜி சொஜ்ஜிக்கெல்லாம் என்ன சாமான் வாங்கி வைக்கட்டும் . அதைத்தவிர கீர் மாதிரி ஏதாவது பண்ணலாமா ? வர்றவா பாம்பேகாராளாச்சே! மாடர்னா ஏதாவது செய்யணுமே ” என்று செல்லமாக அலுத்துக்கொண்டே அம்மாவை நைசாக சமைக்கக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். அந்த ஞாயிற்றுக் கிழமைக்குள் ஜிக்கன் அண்ணா ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டுப் போனான். அவன் முகம் வாட்டமாயிருந்தது. ” என்ன ஜிக்கா! உடம்பு கிடம்பு சரியில்லையா? ” என்று அம்மா கேட்டபோது ” அதெல்லாம் ஒண்ணுமில்ல! வேல கொஞ்சம் கஷ்டம். அதான் டயர்டா இருக்கு ” என்று சொன்னது பொய் என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது. அம்மா ஏதோ ராமமூத்தி மாமா வீட்டைப் பற்றி ” டவுன் லோட் ” பண்ண ஆரம்பித்து, பக்கத்தில் நான் இருப்பதைப் பார்த்து, ” போடா! பெரியவா பேசிண்டு இருக்கும்போது என்ன வாய் பாத்துண்டு ” என்று விரட்டிவிட்டாள். ஜிக்கன் அண்ணா திரும்பிப் போகும்போது என்னைப் பார்த்துத் தளர்வாகக் கையசைத்தது என்னவோ போலிருந்தது.

அந்த ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே அம்மாவும் துணைக்கு என் பெரியக்காவும் ராமமூர்த்தி மாமா வீட்டிற்குப் போய்விட்டார்கள். மதியம் ஒரு மணிவாக்கில் அம்மா ஜாரிணி எடுத்துக்கொண்டு வரச் சொன்னதாய் ஜிக்கன் அண்ணா எங்கள் வீட்டிற்கு வந்தபோது ” வா போகலாம் ” என்று என்னையும் அழைத்துப் போனான். முன் பக்க பாரில் உட்கார்ந்தபோது அவனிடமிருந்து சிகரெட் வாடை அடித்தது. ராமமூர்த்தி மாமா வீட்டினுள் நுழையும்போதே நெய்வாசனை மூக்கைத் துளைத்ததால் ஜிக்கனின் சிகரெட் வாடை வெளியே தெரியவில்லை. நான் உள்ளே ஜாரிணியைக் கொடுக்கச் சென்றபோது என்னைப் பார்த்து அம்மா முறைத்ததை அந்த கீதா அக்கா பார்த்துவிட்டதைக் கண்டுவிட்ட அம்மா அவளின் ஸ்ப்லிட் செகண்ட் ஸ்பெஷாலிட்டியில் குரல் மாற்றம்கொண்டுவந்து ” நீ எங்கடா இங்க வந்தே ? அக்கா கல்யாணத்துக்கு இப்போலேந்தே வேலை செய்ய வந்துட்டான் பாரு இவன் ” என்று சிரித்துக்கொண்டே சொன்னதை பாலசந்தர் பார்த்திருந்தால் நிச்சயம் ஏதோ ஒரு படத்தில் சுஜாதாவிற்குப் பதிலாக அம்மாவிற்கு சான்ஸ் கொடுத்திருப்பார். கிச்சனைவிட்டு வெளியே வந்தபோது ராமமூர்த்தி மாமா ஹாலில் ஹிண்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். மயில் கண் கரை வேஷ்டி பளபளக்க முழுக்கை சட்டை போட்டுக்கொண்டு அவர் உட்கார்ந்திருந்தது அவரையே ஒரு மாப்பிள்ளையாகக் காட்டிக்கொண்டிருந்தது. கரகரவென்று ரைஸ் மில் அரைப்பதைப்போல ஒரு குரல் அவருக்கு. பேசினாலே அதிகாரத்தைக் கொட்டும் குரல். எப்போதாவது சிரிக்க நேர்ந்தால்கூட அரை செகண்டிற்குமேல் சிரிக்கமாட்டார். பேசாத சமயங்களில் எப்போதும் ஹிண்டு படித்துக்கொண்டே இருப்பார். அவர் படிப்பதை எழுதியவன் கூட அதை எழுதுவதற்கு அவர் படிக்கும் நேரத்தில் பாதியைக்கூட நிச்சயம் எடுத்துக்கொண்டிருக்கமாட்டான். இரண்டு மூன்று முறை அவர் எழுதிய கடிதம் லெட்டர்ஸ் டு எடிட்டரில் வந்திருந்தபோது அவர் மனைவி பொன்மலை முழுக்க அவள் நவராத்திரி சமயத்தில் கொலு பார்க்கச் சென்றபோது எடுத்துச் சென்று அவர் புகழை முதலிலும் கடவுள் புகழைப் பின்னாடியும் பாடிக்கொண்டிருந்தாள். இப்போது பெண் பார்க்க வருபவர்களிடமும் அதைக் காட்டினாலும் காட்டலாம். ஆனால், இந்த அலையன்ஸை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிற ஜானகி மாமியின் தூரத்துச் சொந்தமான ஷோபனா மாமியின் ஆர்ப்பாட்டங்களுக்கு நடுவே இந்த லெட்டர் டு எடிடர்ஸ் பீத்தல்களெல்லாம் எடுபடுமா என்று தெரியவில்லை.

ஷோபனா மாமியின் காஞ்சீபுரப்பட்டில் பட்டு கொஞ்சமாகவும் ஜரிகை ரகளையாகவும் இறைந்துகிடக்க அவளே ஜரிகை உருண்டு வருவதுபோல நடமாடிக்கொண்டிருந்தாள். இந்த வரன் கிடைக்க கீதா கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்றும் இது அவர்களின் பூர்வ ஜன்ம புண்ணியத்தின் பலன் தான் என்றும் எப்படியோ தான் இந்த சம்பந்தம் அமைந்துவிட ” அணில் ” மாதிரி உதவியாயிருப்பதையும் அவள் மருகிமருகிப் பேசுவதை ஒரு அளவுக்கு மேல் பொறுக்காத அவள் கணவர், ” சரி சரி! நீ இப்படியே பேசிண்டிருந்தா வரவாள்கிட்ட பேச ஒண்ணுமே இல்லாமப் போய்டும். கொஞ்சம் ரிசெர்வ் பண்ணி வெச்சுக்கோ! டயம் ஆய்டுத்து! ” என்று அவரும் ஹிண்டுவிலிருந்து தலையை எடுத்துச் சொல்லவேண்டியதாய்ப் போயிற்று.

கீதா அக்காவிற்கு என் அக்கா அழகாக அலங்காரம் பண்ணிவிட்டிருந்தாள். மயில் கழுத்துக் கலரில் கட்டியிருந்த புடவையில் கீதா அக்காவைப் பார்க்கும் எந்த இளைஞனும் ” பொண்ணு புடிச்சிருக்கா ” என்று கேட்டால் தலையை மேலும் கீழும்தான் ஆட்டமுடியும். கீதா அக்கா வந்து உட்கார என் அக்கா ஹாலில் போட்டிருந்த கோலத்தின் நடுவில் ஒரு மயில் சிறகு விரித்து ஆடத் தலைப்பட்டுக்கொண்டிருந்தது. அந்தப் பெரிய ஹாலின் இரு புறங்களிலும் சோஃபா இடத்தை அடைத்திருக்க வலது மூலையில் பொம்மைகளுக்கு நடுவிலும் பரிசுக்கேடயங்களுக்கு இடையிலும் ‘ அக்காய்’ ப்ளேயரும் க்ராமஃபோனும் சங்கீத ஆணைக்காகக் காத்திருந்தன. என் வயதொத்த அந்த வீட்டு இளையவன் ” அவாள்ளாம் வந்துட்டா ” என்று ஓடிவந்து இரைக்க இரைக்க அவர்களின் வரவை அறிவித்தபோது டிரைய்ன் வரும்போது ஒட்டிக்கொள்ளும் ரயில்வே ஸ்டேஷனின் பரபரப்பு அந்த வீட்டிற்குள் நிறைந்தது. ராமமூர்த்தி மாமா ஏதோ மனசில்லாமல் ஹிண்டு பேப்பரை மடித்துவைத்துவிட்டு ஹெட் க்வார்டர்ஸிலிருந்து வரும் மேலதிகாரியை வரவேற்கும் பாவத்தில் ஷோபனா மாமியின் வீட்டுக்காரரோடு வாசலுக்கு வந்தார். ஷோபனா மாமியும், ஜானகி மாமியும்தான் மிகவும் பரபரப்பாக இருந்தார்கள். இரண்டு அம்பாசடர்களிலிருந்து எட்டுபேர் இறங்க ” வாங்கோ வாங்கோ ” என்று மாமிக்கள் உச்சஸ்தாயியில் வரவேற்க மாமாக்கள் ” ஆல்வேஸ் ஆஃபிசர் ” த்வனியில் ” வெல்கம் ” என்று வலது கரம் நீட்டினார்கள். வந்திருந்த மூன்று பெண்களில் இரண்டு பேரை மாமிகள் என்று சொல்லமுடியாது. பாப் வைத்துக்கொண்டு சுவற்றிற்குப் பட்டிபார்த்ததுபோல் பவுடர் அப்பிக்கொண்டு உதட்டுச் சாயங்கள் புடவைக் கலரோடு போட்டிபோட்டுக்கொண்டிருந்தன. ஒருவர் மாத்திரம் அமைதியாக சாதாரண பட்டுப்புடவை கட்டிக்கொண்டு எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மாதிரி தெளிவாய் இருந்தார். ஆண்களிலும் மூன்று பேர் சஃபாரியில் திமிறிக்கொண்டிருந்த தொப்பையை அடக்கச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஒருவர் சாதாரணமாக வேஷ்டியுடனும் சட்டைப் பாக்கெட்டில் கொஞ்சம் பேப்பர்கள் பிதுங்கி நிற்க இதோ கிளம்பப் போகிறேன் என்ற ராக்கெட் போல ஒரு பேனாவும் துருத்திக்கொண்டு நின்றது. மாப்பிள்ளைப் பையன் வீட்டிற்குள் வந்தபின்னரும் வெகு நேரம் கூலிங்க் க்ளாசைக் கழற்றாது இருந்தான். எல்லோரும் சோஃபாவிலும் அங்கிருந்த சேர்களிலும் உட்கார்ந்த பின் யாருமே பேசாது ஒரு பேரமைதி அங்கு நிலவியது. சற்று நேரத்தில் காம்பௌண்டுக்கு வெளியே அம்பாசடர் வண்டியின் ட்ரைவர் ஏதோ சத்தம் போட்டுக்கொண்டிருந்ததைக்கேட்டு அதுவரை எங்கேயோ இருந்த ஜிக்கன் அண்ணா வெளியே சென்று ஐந்து ரூபாய்க்காகச் சண்டை போட்டுக்கொண்டிருந்த ஒரு சஃபாரி மாமாவை விலக்கிவிட்டு அவரை வீட்டிற்குள் அழைத்துவந்தான். வந்தவர், இங்கிலீஷிலேயே மதறாசி ஆட்டோக் காரர்களின் பொல்லாத்தனம் பற்றி லெக்சர் கொடுத்துக்கொண்டிருந்ததை நிறுத்த ” பொண்ணை வரச் சொல்லுங்கோ ” என்றார் சாதா வேஷ்டிக்காரர்.

கீதா அக்கா ஹாலுக்குள் வரும்போது முன்னெச்செரிக்கையாக என் அக்கா கூட வராதிருக்குமாறு பார்த்துக்கொண்டாள் ஜானகி மாமி. கீதா அக்கா வந்து அந்த மயில் கோலத்தின் நடுவே எல்லோருக்கும் பொதுவாக ஒரு நமஸ்காரத்தைப் பண்ணிவிட்டு அடுத்து என்ன செய்வது என்பதுபோலப் பார்த்தபோது, ” உக்காந்துக்கோம்மா ” என்று அவளருகே வந்து அக்காவைப் பிடித்து அழைத்தாள் அந்த எம்.எஸ் மாமி. ‘ இல்ல நான் இப்படியே உக்காந்துக்கறேன் ” என்று தரையில் உட்கார்ந்தவளுடன் எம்.எஸ் மாமியும் உட்கார்ந்துவிட ” என்னதான் படிச்சிருந்தாலும் நம்மாத்துக் கொழந்தைகள் ஸிம்பிள்தான் ” என்று சொல்லி தானும் தரையில் உட்கார்ந்துவிட பாப் மாமிகள் மாத்திரம் கால்மேல் கால் போட்டுக்கொண்டு சஃபாரி மாமாக்களோடு ஸோஃபாவிலேயே தங்கிவிட்டார்கள். அம்மா எல்லோருக்கும் டிஃபன் கொண்டு வந்தாள். மடித்துப் போட்டிருந்த ஹிண்டுவையே பார்த்துக்கொண்டிருந்த ராமமூர்த்தி மாமாவை ஜானகி மாமி பக்கத்தில் வந்து ஏதோ இடித்துவிட்டுச் செல்ல, ராமமுர்த்தி மாமா சஃபாரி ஆட்களோடு கொஞ்ச நேரம் இங்கிலீஷில் பேசிவிட்டு மாப்பிள்ளைப் பையனிடம் எத்தனை நாட்கள் லீவ் , அவன் வேலை செய்யும் கம்பெனியில் எத்தனை பேர் சம்பள விகிதங்கள், லேபர் ப்ராப்ளம்ஸ் என்றெல்லாம் கேட்டுவிட்டு அவனுக்கு ஃபாரின் சான்ஸ் உண்டா என்றும் கேட்டு அதற்கு அவன் இன்னும் இரண்டு மாதங்களில் ஜெர்மனிக்குப் போகப்போவதாகச் சொன்னபோது ஜானகி மாமியைப் பார்த்தார். ஜானகி மாமி அவளின் தூரத்துச் சொந்தமான பக்கத்திலிருக்கும் ஷோபனா மாமியைப் பார்க்க எல்லோர் கண்களிலும் உல்லாசப் பறவைகள் படம் ஓடியது. ஷோபனா மாமி ” ஸோ ! கல்யாணத் தேதியை அதுக்குத் தகுந்த மாதிரி குறிக்கணும் ” என்று எல்லோருக்கும் இந்த அலையன்ஸில் சம்மதம்தான் என்கிற பாணியில் அறிவித்தாள். இதற்கு மேலும் காத்திருக்க முடியாது என்பதுபோல டிஃபனைக் கொண்டு வரச் சொன்னாள் ஷோபனா மாமி.

பஜ்ஜி , கேசரியோடு போண்ட வடை என்று தன் போக்கிற்கு அம்மா எதெதையோ செய்து வைத்திருக்க ” என்னத்துக்கு இவ்வளவெல்லாம் . இதெல்லாம் சாப்பிட்டா சுகர் எகிறிடும்” என்று தங்களுக்கிருக்கும் ஸ்டேடஸைச் சொல்லும் வியாதிகளைப் பறைசாற்றிக் கொண்டார்கள் சஃபாரிக்களும் லிப் ஸ்டிக்குகளும். எல்லாம் சாப்பிட்ட பிறகு ” எல்லாரையும் கலந்துண்டு உங்களுக்கு ஃபோன் பண்றோம் ” என்று சொல்லிச் சென்றார்கள் பாம்பேக்காரர்கள். ஆனால் என்ன காரணத்தாலோ அவர்கள் ஃபோன் பண்னவே இல்லை. கீதா அக்காவும் அவள் நினைத்தபடி எம்.ஏ முடித்துவிட்டு மேலும் படித்து டாக்டரேட் வாங்கிவிட்டாள். ஹோலி க்ராஸ் கல்லூரியில் லெக்சரராக இருந்து பின் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியையாக இருந்து ஓய்வும் பெற்றுவிட்டாள். கல்யாணமே செய்துகொள்ளவில்லை. நடுவில் ஒருமுறை ஜெர்மனியும் போய்வந்தாள். ஜிக்கன் அந்தப் பெண்பார்த்த படலத்திற்குப் பின் ராமமூர்த்தி மாமா வீட்டிலிருந்து விடைபெற்றுத் தனியாக வீடெடுத்துத் தங்கி தன் வீட்டிற்கு எதிர்த்தாற்போலிருந்த ரீட்டா என்கிற பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு ஜான் அலெக்ஸாண்டராகி அந்தப் பெண்ணும் சீக்கிரம் இறந்துவிட குழந்தைகளைத் தானே வளர்த்து ஆளாக்கிவிட்டான்.

ராமமூர்த்தி மாமா ரிடயர் ஆனபோது அவர் க்வார்ட்டர்சைக் காலிசெய்தபோது அங்கு போயிருந்த எனக்கு அக்காய் ப்ளேயரை எடுத்துவைக்கும்போது கீழேவிழுந்த கடிதத்தின் பின் அனுப்புனர் விலாசம் பாம்பே என்றிருக்க கடிதத்தை யாரும் பார்க்காதவாறு பாக்கெட்டில் திணித்துக்கொண்டு வந்துவிட்டேன். அந்த எம். எஸ் மாமிதான் கீதாவிற்குக் கடிதம் எழுதியிருந்தார். தன் பையன் அவ்வளவு யோக்கியமானவனில்லை என்றும் உன் குணத்திற்கும் அழகிற்கும் நல்ல வாழ்க்கையே அமைய வேண்டும் என்றும், நீ நன்றாகப் படித்து நல்ல உத்யோகத்திற்குப் போனபின்பே கல்யாணம் செய்துகொள்வது நலம் என்றும் பெண்கள் யாரையும் பொருளாதாரம் சார்ந்து நிற்கவே கூடாது என்றும் தன் குடும்பம் சொந்தக்காரர்களின் தொந்தரவு தாங்காது உங்களுக்குக் கொடுத்த அசௌகர்யத்துக்கு மன்னிப்புக் கேட்டும் அவர் நடுங்கும் கரங்களால் எழுதியிருந்த கடிதத்தைப் படித்தபோது ஒரு தூய்மையான அறையில் ஏற்றிவைத்த நடுங்கும் ஊதுபத்தியின் வாசம் நாசிக்குள் நுழைந்து ஏற்படுத்தும் அமைதியைத் தந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *